Wednesday, December 7, 2011

ஒஸ்தி-யின் ஒரிஜினல் -டபாங் (ஹிந்தி ) விமர்சனம்



சமீபத்தில் சல்மான் கான் நடித்த டபாங்க் பார்த்தேன். இதுவே தமிழில் சிம்பு நடித்து "ஒஸ்தி" யாக வர போகிறது ! டபாங்க் படம் அருவா புகழ் இயக்குனர் ஹரி இயக்கத்தில் அச்சு அசல் மசாலா தமிழ் படம் பார்த்த மாதிரியே இருந்தது. திரைக்கதை, வசனம், சண்டை காட்சிகள் என அனைத்தும் அப்படியே ஒஸ்தியில் உபயோகிப்பார்கள் என்பது சர்வ நிச்சயம்.

கதை

ஹீரோ சிறுவனாக உள்ளதிலிருந்து படம் துவங்குகிறது. சல்மானின் தந்தை இறந்த பின், தாய் மறுமணம் செய்து கொள்கிறார். புது தந்தை மற்றும் தம்பியை சிறுவன் சல்மான் மனம் ஏற்று கொள்ள வில்லை. அவர்களை முழுவதுமாய் வெறுக்கிறான். சல்மான் வளர்ந்து போலிஸ் ஆக, தம்பியோ வெட்டியாய் ஊர் சுற்றுகிறார். லோகல் அரசியல் வாதி சல்மான் தாயாரை கொல்ல (அவர் தான் கொன்றார் என கிளை மாக்சில் தான் தெரிகிறது), ஹீரோ எப்படி பழி வாங்கினார், தந்தை மற்றும் தம்பியுடன் எப்படி இணைந்தார் என்பதே மீதி கதை. இதனிடையே அண்ணன்-தம்பி இருவருக்கும் தனித்தனி காதல் டிராக், கொள்ளையனிடம் கொள்ளை அடிக்கும் சல்மான், அவரிடம் இருந்து பணத்தை லவட்டும் அவர் தம்பி.. என கிளை கதைகள் ..

பொதுவாய் இந்தி படங்கள் சற்று பெரிய படங்களாய், அதிக நேரம் ஓடுவதாய் இருக்கும். இந்த படமோ சின்ன படம். ரெண்டு மணி நேரத்திற்கு மிக சில நிமிடங்கள் மட்டுமே கூடுதல் !

வித்யாசமாக எதுவும் இல்லா விட்டாலும் மசாலா படம் என்பதால் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்றது. செம கலக்ஷன் ! 42 கோடியில் தயாரிக்க பட்டு, 213 கோடி சம்பாதித்ததாக விக்கிபீடியா சொல்கிறது. Best Popular Film Providing Wholesome Entertainment என்கிற கேட்டகரியில் தேசிய விருது கூட கிடைத்தது ! தவிர பிலிம் பேர் விருதுகளில் எக்கச்சக்கமாய் விருதுகளை அள்ளியது !

சல்மான் நல்லதும் கெட்டதும் கலந்த போலிஸ் பாத்திரம்.. இத்தகைய பாத்திரங்கள் சீயான் விக்ரம் நடிச்சு சாமியிலேயே நாம் பார்த்துட்டோம். கூலிங் க்ளாசை சட்டை காலரின் பின்னே மாட்டி கொள்கிறார் (ஸ்டெயில்!) சண்டை, டான்ஸ் என ஹீரோ என்னென்ன செய்யணுமோ செவ்வனே செய்கிறார் !

ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக இப்படத்தில் அறிமுகம் ஆனார். முதல் படம் என்கிற விதத்தில், நல்ல நடிப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

டிம்பிள் கபாடியா தான் அம்மா ! பாபியில் பார்த்த டிம்பிளா இது ! ம்ம் காலத்தின் கோலம் !

அநேகமாய் ஹிந்தியில் தாரே ஜமீன் பர், மை நேம் இஸ் கான் போன்ற
நல்ல படங்கள் தான் தேர்ந்தெடுத்து பார்ப்போம்.இப்படி ஒரு மசாலா படம் பார்த்தது.. வித்யாசமாக இருந்தது. இதே மாதிரி கெட்ட போலிஸ் கதைகள் நாம் ஏற்கனவே நிறைய பார்த்ததால், தமிழில் எந்த அளவு ஹிட்டாகும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

சல்மான் நடித்த ரோலில் சிம்பு நடிப்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. மற்ற ரோல்களை பொறுத்தவரை, ஹீரோயினாக ரிச்சா (மயக்கம் என்ன?) தம்பி ரோலில் ஜித்தன் ரமேஷ், அவர் ஜோடியாக சரண்யா மோகன் ஆகியோர் நடிக்க, இந்தி வில்லன் சோனு அதே பாத்திரத்தை தமிழிலும் செய்து ஹீரோவிடம் அடி வாங்கி பறந்து பறந்து கீழே விழ போகிறார்.

டிரைலர் பார்த்த வரை ஒரிஜினலுக்கு மிக உண்மையாக தான் எடுத்துள்ளது தெரிகிறது. ஹிந்தி காரர்கள் உடை உடுத்துவது நம்மை விட சற்று வித்தியாச படும். ஆனால் தமிழில் ஹீரோயின் உடைகளில் கூட ஹிந்தி போலவே இருக்கணுமா என்ன?

இயக்குனர் தரணிக்கு இது இன்னொரு "தூளா" அல்லது "குருவியா" என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும் !

டிஸ்கி: படம் பார்த்து போதே இந்த பதிவு எழுதப்பட்டு  Draft-ல் தூங்கி கொண்டிருந்தது. நாளை ஒஸ்தி படம் ரிலீஸ் என்பதால் இதற்கு மேல் தாமதம் வேண்டாம் என இன்று பதிவு வெளியிடப்பட்டு விட்டது !

10 comments:

  1. நல்ல விமர்சனம்....

    ReplyDelete
  2. விமர்சனம் அருமை.அதே மாதிரி ஓஸ்தி விமர்சனத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    அதுசரி ஒஸ்தி க்கு என்ன அர்த்தம்?

    ReplyDelete
  3. ஒஸ்தியான விமர்சனம்தான்

    ReplyDelete
  4. டபாங் பார்த்துட்டு சல்மான் இடத்தில் சிம்புவ வச்சுப் பார்க்க கஷ்டமா இருக்கு. சல்மான் பாடிக்கு சங்கிலில கட்டி சுழட்டி அடிக்கறதெல்லாம் ஓக்கே. பொசுக்குன்னு இருக்க சிம்புவும் அதெல்லாம் பண்றது யப்ப்பே....

    டபாங்ல பாட்டும் நல்லாருக்கும். தேரே மஸ்த், முன்னி பத்னாம் ரெண்டும் என் ஃபேவரைட்

    ReplyDelete
  5. ச‌ல்மானின் மேன்லின‌ஸ், பாடி லேங்குவேஜ் போலீஸ் க‌தாபாத்திர‌த்திற்கு மிக‌ப்பொருத்தமாய் இருந்த‌து.

    சோனாக்ஷி சின்ஹா ப‌ற்றி ஒரே ஒரு வ‌ரி ம‌ட்டும் எழுதிய‌தை ச‌ற்று மென்மையாக‌ க‌ண்டிக்கிறேன். இப்போதைக்கு இருக்கும் ஹிந்தி ந‌டிகைக‌ளில், அழ‌கிய‌ இந்திய‌ முக‌ம் சோனாக்ஷிதான் :)

    சிம்பு....இவ‌ர் ந‌டிச்சு நான் ர‌சிச்சு பார்த்த‌ ஒரே ப‌ட‌ம் வி.தா.வ‌.தான். க்யூட் பொண்டாட்டி பாட‌ல் ந‌ல்லாருக்கு. ஆனா அதுக்காக‌ இவ‌ர் த‌ரும் ஓவ‌ர் பில்ட‌ப்பை எல்லாம் பொறுத்துக்கொண்டு ப‌ட‌த்தை பார்க்கும் எண்ண‌ம் இல்லை. நீங்க‌ பார்த்துட்டு எழுதுங்க‌ ;))

    ReplyDelete
  6. டிஸ்கி பிரமாதம்!

    ReplyDelete
  7. அப்படியே நம்ம ஓஸ்தி சேவாக் பற்றி ஒரு பதிவும் போட்டிடுங்க. சச்சின் பற்றிய பதிவை தூக்கி பரணில் போட்டுட்டு (அவர் இப்போதைக்கு 100வது 100 அடிக்கப்போவதில்லை) சேவாக்கைப் பற்றி ஒரு தூக்கு தூக்கிவிடுங்க. இதுக்கு பேரா ரூத்தரதாண்டவம், இன்னமும் மிச்ச 3.3 ஓவரும் நின்றிருந்தால் 250 தாண்டியிருப்பார்.

    ReplyDelete
  8. // ஹீரோ சிறுவனாக உள்ளதிலிருந்து படம் துவங்குகிறது. சல்மானின் தந்தை இறந்த பின், தாய் மறுமணம் செய்து கொள்கிறார். புது தந்தை மற்றும் தம்பியை சிறுவன் சல்மான் மனம் ஏற்று கொள்ள வில்லை. அவர்களை முழுவதுமாய் வெறுக்கிறான். சல்மான் வளர்ந்து போலிஸ் ஆக, தம்பியோ வெட்டியாய் ஊர் சுற்றுகிறார். லோகல் அரசியல் வாதி சல்மான் தாயாரை கொல்ல (அவர் தான் கொன்றார் என கிளை மாக்சில் தான் தெரிகிறது), ஹீரோ எப்படி பழி வாங்கினார், தந்தை மற்றும் தம்பியுடன் எப்படி இணைந்தார் என்பதே மீதி கதை. இதனிடையே //

    நன்றி..

    மழைக்குக் கூட அந்த தியேட்டர் பக்கம் போகக் கூடாது..

    ReplyDelete
  9. கோவை டு தில்லி மேடம் : நன்றி
    **
    ராம்வி: ஒஸ்தின்னா "சூப்பர்" ன்னு சொல்லுவோம் இல்லையா அது மாதிரி. எல்லாவற்றையும் விட ஒஸ்தி என்றால், இருப்பதில் சிறந்தது என்கிற மாதிரி அர்த்தம்.
    **
    ரிஷபன் சார்: நன்றி
    **
    வித்யா: படம் ரிலீஸ் ஆகி பலரும் இப்போ சிம்புவை ஸ்டூடன்ட் மாதிரி இருக்கார்; போலிஸ் மாதிரி இல்லைன்னு எழுதிட்டு இருக்காங்க :))

    ReplyDelete
  10. ரகு: சோனாக்ஷி?? நான் அவ்ளோ தூரம் டீப்பா கவனிக்கலை நண்பரே. :)) சிம்பு பில்ட் அப் ..ம்ம் என்னத்தை சொல்றது?
    **
    அப்பா துரை: நன்றிங்க. சரியான நேரத்தில் தான் வெளியிட்டோம். ஐநூறு பேருக்கு மேலே படிச்சிட்டங்க இல்லே?
    **
    வாசகன்: கொஞ்ச நாளா ஆணி அதிகம். முன்பு எழுதி பரணில் உள்ளவை வெளியாகி கொண்டிருக்கின்றன. சேவாக் ரெட்டை சதம் ரசித்தேன். பதிவு எழுத முடியலை ! நன்றி !!
    **
    மாதவன் : ரைட்டு :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...