Thursday, December 1, 2011

Children of Heaven:மறக்க முடியாத படம்

உலக திரைப்படம், உலக திரைப்படம் என்கிறார்களே.. நிஜமாகவே ஒரு உலக திரைப்படம் இது !

காலில் அணியும் ஷூ. அதற்கு நாம் என்ன விதமான முக்கியத்துவம் தருகிறோம்? எங்கு போனாலும் வெளியில் விடுகிறோம். பிறர் மீது ஷூ இடித்தால் சாரி சொல்கிறோம். மிக குறைந்த மதிப்பு தானே ஷூவிற்கு? ஆனால் ஒரு ஜோடி ஷூவை வைத்து ஒரு முழு நீள சினிமா எடுக்க முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் Children of Heaven என்கிற இரானிய பட இயக்குனர் மஜீத் .

கதை 

அலியும் சாராவும் அண்ணன் தங்கை. தங்கையின் கிழிந்த ஷூவை தைக்க எடுத்து செல்லும் அலி, அதை, ஒரு காய்கறி கடை வெளியே வைத்து தொலைத்து விடுகிறான். எங்கு தேடியும் ஷூ கிடைக்க வில்லை. உடல்நிலை சரியில்லாத அம்மா. கோபக்கார அப்பா. 5 மாதமாய் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் குடும்பம். இந்நிலையில் எப்படி ஷூ தொலைந்ததை சொல்லி புது ஷூ கேட்பது என அலி தன் தங்கையை அம்மா அப்பாவிடம் இந்த விஷயம் சொல்லாதே என்று கூறி விடுகிறான்.

சாராவிற்கு காலை பள்ளி. அவள் அலியின் ஷூவை அணிந்து பள்ளி சென்றுவிட்டு, திரும்ப வந்த பின், மதியம் பள்ளி செல்லும் அலி அதே ஷூவை அணிந்து செல்வதென்று முடிவு செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் ஷூவை தர ஓடி வருகிறாள் சாரா. அதை அணிந்து கொண்டு தன் பள்ளிக்கு ஓடுகிறான் அலி. தினம் தாமதமாக வருவதால் தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான். ஆனால் அவன் நன்றாக படிப்பவன் என்பதால் வகுப்பு ஆசிரியர் அவன் தாமதமாக வந்தாலும் திட்டுவதில்லை. சாரா தன் பள்ளியில் தன் ஷூவை வேறு ஒரு பெண் அணிந்திருப்பதை கவனிக்கிறாள் . அவளது வீட்டுக்கு அலியும் சாராவும் சென்று பார்க்கிறார்கள். அவர்கள் தங்களை விட மிக ஏழ்மையில் இருப்பதை பார்த்து ஷூவை கேட்காமல் திரும்புகிறார்கள்.

ஒரு பக்கம் தாமதமாக போவதால் திட்டும் தலைமை ஆசிரியர் மறுபுறம் ஷூ லூசா இருக்கு என் ஷூ வேண்டும் என கேட்கும் தங்கை சாரா. அவளுக்கு புது ஷூ வந்தால் தான் இந்த பிரச்சனை சரியாகும் என உணர்கிறான் அலி.

அந்த ஊரில் ஒரு மிக பெரிய ஓட்ட பந்தயம் நடக்கிறது. அதில் மூன்றாம் பரிசுக்கு ஒரு ஜோடி ஷூ பரிசு என்பது தெரிந்து போட்டியில் கலந்து கொள்கிறான்.

நூற்று கணக்கான சிறுவர்கள் ஓட, எவ்வளவோ பார்த்து பார்த்து மூன்றாம் இடம் தான் வர வேண்டும் என ஓடினாலும் கடைசி நிமிட பரபரப்பில் எந்த இடம் வந்தோம் என்றே தெரியாமல் அலி கேட்கிறான் " சார் நான் மூணாம் இடம் வந்துட்டேன் இல்ல?" "இல்லடா நீ தான் முதல் இடம்" என்று அவன் ஆசிரியர் சொல்ல, அலி கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. பரிசு மீது விருப்பம் இன்றி அந்த ஷூவையே பார்த்த படி நிற்கிறான் அலி. படத்தின் முடிவில் அலியின் தந்தை கடையில் இரு புது ஜோடி ஷூ (அலிக்கும் சேர்த்து !) வாங்கி வருவதாக காண்பிக்க, கால் முழுதும் காயமான அலியின் கால்களை அவன் வளர்க்கும் மீன்கள் கவ்வுவதுடன் படம் நிறைவடைகிறது.
**
படத்தில் நம் மனதை அதிகம் கவர்வது அலியாக வரும் சிறுவன் தான். குடும்பம் இருக்கும் நிலையை உணர்ந்ததால் சின்ன வயதிலேயே பெரியவனுக்கு உரிய பார்வையும், நடவடிக்கையும் அவனுக்கு வந்து விடுகிறது. பெரியவர்கள் கவலைக்குள்ளும், உலகுக்குள்ளும் அவன் இளம் வயதிலேயே தள்ளப்படுகிறான். அவன் பார்வையிலேயே பரிதாபமும் இயலாமையும் தெரிந்து விடுகிறது. தான் ஷூ தொலைத்ததை சொல்லாதே என்று தனது நல்ல பென்சிலை தங்கைக்கு தருகிறான். பின் தன் ஆசிரியர் பரிசளித்த நல்ல பேனாவையும் தங்கைக்கே தருகிறான். இறுதி காட்சியில் அவன் ஓடும் போது என்ன ஒரு இயல்பான நடிப்பு. குறிப்பாக ஓட்ட பந்தயத்தில் அந்த கடைசி lap- அதில் இருக்கும் வலி, கிட்ட தட்ட சக்தி முழுதும் இல்லாமல் ஓடும் முக, உடல் பாவம் அருமையாக காட்டுகிறான். முதல் இடம் பெற்ற பின் போட்டோ எடுப்பவர் இவனை போட்டோ பிடிக்க, அவன் அழுது கொண்டிருப்பது .. மனதை நெகிழ்த்தும்.

ஏழ்மையிலும் நன்கு படிப்பவன், குடும்ப கஷ்டம் உணர்ந்தவன், தங்கை மேல் பாசம் கொண்டவன் என மிக நல்ல பாத்திர படைப்பு. ஒரு காட்சியில் மசூதியில் ஏராளமான ஷூக்களையும் அங்கு அப்பாவிற்கு உதவும் அலியையும் காண்பிக்கிறார்கள். அவன் நினைத்தால் நிச்சயம் இன்னொரு ஷூவை திருடி இருக்கலாம் என சொல்லாமல் சொல்லும் காட்சி இது. போலவே இந்த நிலையிலும் ஷூ யாரிடம் போனதோ அவர்கள் நம்மை விட பரிதாபமானவர்கள் என விட்டு கொடுக்கும் காட்சியில் அலி, சாரா இருவருமே நம் மனதில் உயர்ந்து விடுகிறார்கள்.

சாரா.. அடடா என்ன அழகு ! முதல் ஷாட்டில் வெள்ளந்தியாய் அவள் சிரிப்பதிலேயே மனதை பறி கொடுத்து விடுகிறோம். சிறுமி ஆனாலும் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதால் இவள் தான் வீட்டு வேலை நிறைய செய்கிறாள் என காட்டுவது சமூகத்தில் பெண்கள் தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என இருப்பதை உணர்த்துகிறது. அண்ணனின் லூசான ஷூவை போட்டு கொண்டு அவள் நடக்கும் போது மிக பரிதாபமாக இருக்கிறது. கடை தெருவில் ஷூ கடையை பார்த்து கொண்டே நிற்பதாகட்டும் பள்ளி ப்ரேயரில் கூட பிற பெண்களின் கால்களையே பார்த்து கொண்டு நிற்பதாகட்டும், அண்ணனிடம் கோபித்து கொண்டு பேசாமல் திரும்பி கொள்வதாகட்டும் சாரா நடிப்பில் அசத்தி விடுகிறாள். இறுதி காட்சியில் முதலிடம் பெற்று விட்டதால், ஷூ கிடைக்க வில்லையே என மனம் நொந்து குற்ற உணர்வுடன் அண்ணன் வர, அவன் முகத்தை பார்த்தே அவன் பரிசு வெல்ல வில்லை என புரிந்து கொண்டு ஏதும் கேட்காமல் செல்லும் சாரா.. நீண்ட நாள் நினைவில் இருப்பாள்.

படத்தின் அரிதான காட்சிகளில் ஒன்று அலியும் சாராவும் ஷூவை சோப் போட்டு கழுவும் காட்சி. சிறுவர்களுக்கே உரித்தான விளையாட்டு தனத்துடன் நுரையுடன் விளையாடுவதாக இந்த காட்சி இருக்கும்.

இயக்குனர் மஜீத்
படத்தில் இந்த இரு பாத்திரங்கள் தான் முழுக்க முழுக்க ஆட்சி செய்கின்றன. இத்தகைய அற்புத படத்தை தந்த இயக்குனர் மஜீதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இரான் நகர தெருக்கள் மிக இயல்பாக படத்தில் வருகின்றன. குறிப்பாக தெருக்களின் நடுவே ஓடும் கால்வாய்கள், அதில் ஓடும் சாக்கடை தண்ணீர். முதலில் இருந்தே இந்த கால்வாயை கவனித்து வந்தேன். ஒரு முறை சாரா அணிந்திருக்கும் லூசான ஷூ கழன்று அந்த கால்வாயில் விழுந்து விட, தண்ணீரில் ஷூவை பார்த்தவாறே அவள் ஓடும் போது நாமும் கூட ஓடுகிறோம்.

இந்த காட்சியை முடித்த விதத்தில் நிச்சயம் ஒரு செய்தி உள்ளது. ஷூ ஒரு இடத்தில போய் மாட்டி கொள்ள அழுதவாறு நிற்கிறாள் சாரா. அப்போது ஒரு வயதானவர் வந்து என்ன விஷயம் என கேட்டு பெரிய குச்சி மூலம் அந்த ஷூவை எடுக்கிறார். நிறைய விஷயம் புரிய வைக்கும் காட்சி இது. ஷூ அப்படி மாட்டி கொண்டது சாரா என்கிற சிறு குழந்தைக்கு பெரிய பிரச்சனை. ஆனால் அவளை விட பெரியவர் அதை எளிதாய் ஒரு நிமிடத்தில் சரி செய்து விடுகிறார். நமது பிரச்சனைகள் சிலவற்றுக்கும் கூட இது பொருந்தும் ! சொல்லப் போனால், ஷூ தொலைத்ததை பெற்றோரிடம் சொல்லி இருந்தால், அவர்கள் எப்படியோ அந்த பிரச்னையை ஒரு சில நாட்களில் சரி செய்திருப்பார்கள். அந்த சிறுவர்கள் செய்த தவறு அதை சொல்லாதது தான். ஆனால் அவர்களுக்கு அவ்வயதில் இருக்கும் பயமும், பொய் சொல்வதும் இயல்பான ஒன்றே.

1997-ல் வெளி வந்த இந்த படம் ஒரு மில்லியன் டாலருக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்து, ஆர்ட் பிலிம் வசூலில் சிறக்காது என்ற கூற்றை உடைத்தது. ஆஸ்கருக்கு நியமனம் செய்யபட்டாலும் ஆஸ்கர் பரிசு கிடைக்க வில்லை. ஆனால் பல்வேறு நாடுகளில் நடந்த சினிமா விழாக்களில் ஏராளமான பரிசுகள் பெற்றது. தலை சிறந்த குழந்தைகள் படத்துக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது இப்படம் !

இந்த படம் பார்த்த அன்று என் கனவில், சாலை நடுவே கால்வாய் ஓடும் இரான் நகர தெருக்களில் செருப்பின்றி நடந்தேன். படம் தந்த பாதிப்பு !! உங்களை இந்த படம் வேறு விதமாய் நிச்சயம் பாதிக்கும். அவசியம் பாருங்கள் இந்த சொர்க்கத்தின் குழந்தைகளை !

உயிரோசை நவம்பர் 28 இதழில் வெளியானது 

17 comments:

  1. நான் பார்த்து மிக ரசித்த குழந்தைகளுக்கான படங்களில் இதுவும் ஒன்று.அந்த இரு குழந்தைகளை சுற்றியே படம் எடுக்கப்பட்டிருக்கும்.

    அற்புதமான படம்.
    உங்க விமர்சனம் அருமை.

    ReplyDelete
  2. நமது பிரச்சனைகள் சிலவற்றுக்கும் கூட இது பொருந்தும் ! சொல்லப் போனால், ஷூ தொலைத்ததை பெற்றோரிடம் சொல்லி இருந்தால், அவர்கள் எப்படியோ அந்த பிரச்னையை ஒரு சில நாட்களில் சரி செய்திருப்பார்கள். அந்த சிறுவர்கள் செய்த தவறு அதை சொல்லாதது தான். ஆனால் அவர்களுக்கு அவ்வயதில் இருக்கும் பயமும், பொய் சொல்வதும் இயல்பான ஒன்றே.

    waw.. will see today!

    ReplyDelete
  3. Excellent Movie... Very good review. Watched this movie many times.

    ReplyDelete
  4. அருமையான படம் விமர்சனமும் கூட.

    ReplyDelete
  5. மிகவும் பிடித்த திரைப்படம். அந்த கடைசி காட்சி ரொம்பவே நெகிழ்வு. முக்கியமாக, கதை நாயகர்களின் நடிப்பும் தேர்வும் அற்புதம். நல்ல விமர்சனம். மீண்டும் ஒரு முறை படம் பார்த்த திருப்தி .

    ReplyDelete
  6. பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது பகிர்வு.

    ReplyDelete
  7. நல்ல பகிர்வு... பார்க்கத்தூண்டும் விமர்சனம்...

    ReplyDelete
  8. அருமையான படம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. விமர்சனத்திற்கு நன்றி சார்!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  9. அருமையான ஒரு படத்துக்கு அற்புதமான ஒரு விமர்சனம்.

    பகிர்வுக்கு நன்றி.

    எழுத்து உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  10. அருமையான படவிமர்சனம்.
    எனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள் மோகன் குமார்.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. // அவன் முகத்தை பார்த்தே அவன் பரிசு வெல்ல வில்லை என புரிந்து கொண்டு ஏதும் கேட்காமல் செல்லும் சாரா.. நீண்ட நாள் நினைவில் இருப்பாள். //

    எனக்கும் படத்துல ரொம்ப புடிச்ச காட்சிங்க...
    மஜித்தின் படங்கள்ல அந்த தங்கமீன் ஒரு காட்சிலையாவது வந்துடுது பாத்தீங்களா :-))

    ReplyDelete
  13. நானும் இந்த படத்தை பார்த்து இரசித்திருக்கிறேன் அருமையான படம் உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  14. 7 varudamaaha en manathaivittuneengatha padam.. oru payisiyin pothu aasiriyarkalukku kanpiththen paathiyil power cut .. kathai solliye ahavendumena adampidiththu kettuvittu ponaarkal ithe oru tamil cinimaavukku kaththiruppathu kaanal..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...