Friday, February 18, 2011

சீனு சார்

என் சிறு வயது நண்பன் நந்து.  பாலகுமாரனை பார்க்க என்னுடன் வந்தவன் என்றால் உங்களுக்கு எளிதாக புரியும் !  இவனது தந்தை சீனு சார் எனக்கு ஆறு, ஏழு, எட்டு மூன்று வருடமும் வகுப்புகள் எடுத்தார். எனது all time favourite teacher-களுள் இவர் முக்கியமானவர்.

சீனு சார் வகுப்பு என்றால் பசங்களுக்கு ரொம்ப குஷி.. அனேகமாக பசங்களை அடிக்கவே மாட்டார். நான் படித்த மூன்று வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததால்  அடி வாங்கிய ஞாபகம்...

ரொம்ப ஜாலியாக பாடம் எடுப்பார். அவருக்கு மிக பிடித்த பாடம் ஆங்கிலம். ரொம்ப நன்றாக,  எளிமையாக எடுப்பார். கிராமத்திலிருந்து படித்த பல சிறுவர்களுக்கு ஆங்கிலம் ஒரு கடினமான பாடமாயிருக்கும். ஆனால் சீனு சார் எடுத்தால், அந்த பாடம் சுவாரஸ்யமாகி விடும். 

வாரத்தில் குறைந்தது ஒரு நாள் வகுப்பு ஏதும் எடுக்க மாட்டார். எதாவது எழுதிக்கொண்டு, திருத்திக்கொண்டு இருப்பார். எங்களுக்கோ பாடம் நடத்தாமல் அரட்டை அடிக்க விடுவதில் செம குஷி...

ந்துவை பார்க்க சார் வீட்டுக்கு நான் அடிக்கடி போவேன். முதலில் போக ஆரம்பித்த காலத்தில் சீனு சாரின் தந்தை கோபால் ராவ் வாசல் அருகிலேயே இருப்பார். இவரும் ஒரு புகழ் பெற்ற தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கோபால் ராவ் தாத்தா என்னையும் நந்துவின்  மற்ற நண்பர்களையும் பார்த்தாலே திட்டுவார். (மிக வயதானதன் விளைவு...) நாங்கள் அவர் பேசுவதை கண்டு கொள்ளாத மாதிரியும், ஆனால் சற்று பயந்தும் தான் போய் வருவோம். கோபால் ராவ் தாத்தா எனக்கு "பூனை குட்டி" என பட்ட பெயர் வைத்திருந்தார்.அவருக்கு பயந்து சத்தமே இல்லாமல் பூனை குட்டி போல் நான் வந்து போவேனாம்...!!

மாணவர்கள் பல நேரம் பேனாவிற்கு இங்க் போடாமல் வந்து விடுகிறார்கள் என்பதால் சீனு சார்  பள்ளியில் இங்க் விநியோகம் செய்தார்.

ஒவ்வொரு கிளாஸ்-க்கும் ஒரு இங்க் லீடர் இருப்பான். மேலும் ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய இங்க் லீடரும் உண்டு. பெரிய இங்க் லீடர் எல்லா வகுப்புக்கும் சென்று, யாருக்கு தேவையோ அவர்களுக்கு இங்க் போட்டு விட்டு, ஒவ்வொரு வகுப்பு இங்க் லீடரிடம் பணம் வசூலித்து வருவான். நான் மூன்று வருடமும் என் வகுப்பிற்கான இங்க் லீடர் ஆக இருந்தேன். கடைசி வருடம் நான்தான் பெரிய இங்க் லீடர் ! இது எனக்கு அப்போது பெருமையான பதவியாக இருந்தது !! சாரின் பையன், மற்றொரு வகுப்பில் இருந்தும் என்னை தான் பெரிய இங்க் லீடர் - ஆக்கினார் என ரொம்ப பெருமை. ( ஆனால் சார், தன் பையனிடம் விட்டால், வசூல் ஆன பணம் முழுக்க தன்னிடம் தராமல் பள்ளிக்கு வெளியில் விற்கிற கடலை மிட்டாய் வாங்கியே தின்னுடுவான் என்பதால் தான், என்னிடம் விட்டார் என்று பின்பு தான் தெரிந்தது)

நண்பன் நந்து

நான் பெரிய இங்க் லீடராக இருந்த போது இவ்வாறு நினைத்தேன்: "இந்த சீனு சார் பிழைக்க தெரியாதவரா இருக்கார்!  பசங்க இங்க் போட்டுட்டு காசு குடுக்காட்டி பேசாம விட்டுடறார்; நிறைய பேர் காசு கொடுக்காம சாரை ஏமாத்துறாங்க" .

இதற்கு என் வழியில் ஒரு தீர்வு கண்டேன். சார் வீட்டுக்கு நான் தான் சென்று இங்க் எடுத்து வருவேன். அப்போது காலி இங்க் பாட்டில்களில் தண்ணீர் பிடித்து சென்று, வீட்டில் உள்ள பெரிய இங்க் பாட்டிலில் கலந்து விடுவேன். இங்க் உடன் தண்ணீர் கலந்தால் பாதிபேர் பணம் தரா விட்டால் கூட சீனு சாருக்கு நஷ்டம் வராது என நினைத்தேன். இப்படி சாருக்கு தெரியாமல் இங்கில் தண்ணீர் கலந்து விற்றது ரொம்ப நாள் மனதை உறுத்தி கொண்டே இருந்தது. பல வருடங்கள் கழித்து வேலைக்கெல்லாம் சென்றபின் நான் இதனை அவரிடம் கூற, வழக்கமாய் சொல்லும் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி, சிரித்தவாறே செல்லமாய் திட்டினார்.

சீனு சாருக்கு வகுப்பில் நான் தான் எப்பவும் செல்ல பிள்ளை. என் அண்ணன்கள் இருவரும் முன்னர் அவரிடம் படித்ததால், அவர்கள் பெயரில் எதாவது ஒன்றை சொல்லி தான் என்னை கூப்பிடுவார். எனது சரியான பெயரில் ஒரே ஒரு முறை கூட கூப்பிட்ட வரலாறே கிடையாது.

அவர் என்ன சொன்னாலும் உடனே நான் செய்து விடுவேன். இது எதோ சோப் போட வேண்டும் என்பதால் அல்ல, அவர் மேல் உள்ள அதிகப்படியான அன்பினால்தான் என அவருக்கு தெரியும். ஒரு முறை வகுப்பில் ரொம்ப குஷி மூடில் , "கோவிந்தா (என் அண்ணன் பெயர்).. இப்படி வந்து உட்கார்" என சேரில் அமர்ந்தவாறே, தனது மடியை காட்டினார். சற்றும் யோசிக்காமல் நான் சென்று அவர் மடியில் உட்கார்ந்து விட்டேன்.வகுப்பில் எல்லோரும் சிரித்த பின் தான் வெட்கமாகி ஓடி வந்தேன். அப்புறம் தான் நான் என்ன செய்கிறேன் என பார்க்கவே அவர் இப்படி சொன்னார் என புரிந்தது.

வரது பையன் நந்துவும் நானும் வெவ்வேறு வகுப்பில் படித்தோம். மூன்று வகுப்பிற்கும் சேர்த்து ஒவ்வொரு பாட தேர்வு பேப்பரையும் ஒரே சார் திருத்துவார். இவர் திருத்தும் போது எங்க ரெண்டு பேருக்கும் அந்த பேப்பரில் மட்டும் ஒரே மார்க் தான் போடுவார். இருவரையும் அருகருகில் நிற்க வைத்து கொண்டே எங்களின் பேப்பரை திருத்துவார். ஒரே மார்க் போட்டு விட்டு, "OK தானே? பிரச்சனை இல்லையே" என கேட்பார். சரி சரி என இருவரும் தலை ஆட்டுவோம்.

எங்கள் ஊரில் பிராமணர்கள் கணிசமாக உண்டு. அதில் சிலர் வீட்டு வாசல் தாண்டி கூட உள்ளே போக முடியாது. ஆனால் என்னை போன்று நன்கு பழக்கமானவர்கள்  சீனு சார்   வீட்டு அடுப்படி வரை செல்வோம். அதிகம் பழகாத கிராமத்து ஏழை மாணவர்களும் கூட சகஜமாக இவர் வீட்டினுள் வந்து போவார்கள். சீனு சார் மாணவர்களை நடத்தும் விதத்தில்   எந்த  வித்யாசமும்  பார்த்தது  இல்லை  (துரதிஷ்ட  வசமாய்  நிறைய  ஆசிரியர்கள்  அப்படி இல்லை)

ட்டாம் வகுப்பிற்கு பிறகு நான் மன்னார்குடி சென்று முதன் முறையாக ஆங்கில மீடியத்தில் படித்தேன். பத்தாவதில் 367  மார்க்குகள்  வாங்கினேன். இது மிக குறைவு என என் பெரிய அண்ணன் ஒரு வாரம் பார்க்கும் போதெல்லாம் அடிப்பதும், அவமானப்படுதுவதுமாக இருந்தார். ஒரு நாள் எங்கள் கடையில் வைத்து மார்க் குறைவு என என்னை கண்ட படி திட்டிக்கொண்டு இருந்தார். இதை கடைக்கு கீழே சைடில் நின்று கேட்டவாறே இருந்த சீனு சார், உடனே மேலே வந்து எனது அண்ணனை left and right வாங்கி விட்டார். "எட்டாவது வரை தமிழ் மீடியமில் படித்தவன் திடீரென இங்கிலிஸ் மீடியமில் படிச்சு இந்த அளவு வாங்கியேதே பெருசு. அவனை போய் ஏன் திட்டுறே?" என அண்ணனுக்கு டோஸ்  விட்டார். அதன் பின்தான் அண்ணன் என்னை திட்டுவதை குறைத்தார்.

என் திருமணத்துக்கு வெளி நாட்டில் இருந்ததால் நந்துவால்  வர முடியவில்லை. இதை போன் பண்ணி அம்மா, அப்பாவிடம் புலம்பி தீர்த்து விட்டான். சீனு சாரும், அம்மாவும் வந்திருந்து நெடு நேரம் இருந்து அனைவரையும் வரவேற்று உபசரித்தார்கள். அன்றைக்கு மண்டபத்தில் அங்கும் இங்கும் ஓடியபடி இருந்த சாரை பார்த்த போது நெகிழ்வாக  இருந்தது. எங்கள் ஊர் மக்கள் சீனு சார் ஏன் இவனுக்காக இவ்வளவு  மெனக்கெடுகிறார் என நினைத்திருக்க கூடும்.

கிட்டத்தட்ட 65-67 வயது வரை ரொம்ப ஆக்டிவ் ஆக இருந்த சீனு சார் கடைசி இரு ஆண்டுகளில் உடல் நலம் குன்றி விட்டார். அவர் வீட்டுக்கு எப்போது போனாலும் நின்றவாறே எதாவது வேலை செய்து கொண்டே தான் இருப்பார். அவர் சும்மா இருந்து பார்க்கவே முடியாது. அப்படிப்பட்டவரை படுக்கையில் பார்க்க கஷ்டமாக இருந்தது. புகை பழக்கம் மற்றும் டூ வீலரில் அதிகம் பயணம் செய்தது அவரது வயதான காலத்தில் படுத்தி விட்டது.

தன் கடைசி காலத்தில் அவரது விருப்பப்படி நீடாமங்கலம் வந்து, கொஞ்ச காலம் இருந்து விட்டு தன் சொந்த மண்ணில் மறைந்தார். அவர் இறந்த போது நான் ஏதோ ஒரு வேலையாக வெளியூரில் இருந்ததால் கலந்து கொள்ள முடிய வில்லை.  நந்து அடுத்த பத்து நாளும்  ஸ்ரீரங்கத்தில் தங்கி அவருக்கு காரியங்கள் செய்து கொண்டிருந்தான்.

ஒரு ஞாயிறு சென்னையிலிருந்து அவனை பார்க்க ஸ்ரீரங்கம் சென்றேன். அன்று தான் அவருக்கு பத்தாம் நாள் காரியம் என்பதே தெரியாமல், ஆனால் சரியான நாளன்று சென்று விட்டேன். அவன் அம்மா " சாருக்கு பிடிச்ச ஸ்டூடன்ட் சரியா பத்தாம் நாள் வந்துட்டே பார்" என்றும் சாரை பற்றியும் சொல்லியவாறே இருந்தார்.

நந்து சாருக்கு செய்யும் காரியங்களில் என்னையும் உடன் இருத்தி கொண்டான்.  சொந்த காரர்களில் யாரோ, நான் பிராமணன் இல்லை என்பதை முணுமுணுக்க நந்து கண்டு கொள்ளவே இல்லை. எல்லாம் முடிந்து அனைவரும் சட்டை போடாமல் பூணுலுடன் அமர்ந்து சாப்பிட உட்கார, நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட ரொம்பவும்  தயங்கினேன். அப்போதும் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர வைத்தான் நந்து. சாப்பாடு பரிமாற வந்தவர் பூணுல் இல்லாததால் என்னை சற்று வித்யாசமாய் பார்த்தார்.  " நாலு கழுதை வயசாயிடுச்சு. எப்ப தான் பூணுல் போட போறே ? எப்ப கல்யாணம் பண்ண போறே?" என்று நந்து என்னை பார்த்து கமன்ட் அடிக்க, தேவையான பதில் கிடைத்து விட்டதால் எனக்கும் சேர்த்து  உணவு பரிமாறினார் அவர்!! 

அன்றைக்கு நந்து எனக்கு சீனு சார் மாதிரி தான் தெரிந்தான். 

29 comments:

 1. //நான் என்ன செய்கிறேன் என பார்க்கவே//

  குரு சொல் தட்டாத மாணாக்கன்:))!

  நெகிழ்வான பதிவு.

  //நந்து எனக்கு சீனு சார் மாதிரி தான் தெரிந்தான்//

  வாழ்க உங்கள் நட்பு!

  ReplyDelete
 2. நெகிழ்வான பகிர்வு. நட்பின் இலக்கணம்!

  ReplyDelete
 3. உங்கள் நட்பு வாழ்க! 'அந்தணன் என்போன் அறவழியோன்' தானே, உங்கள் நண்பர் சரிதான்!

  ReplyDelete
 4. அழகான நட்பு. போலவே பதிவும்.

  ReplyDelete
 5. பழைய பதிவைப் படிக்கவில்லை, இப்போது முழுதும் படித்து, நெகிழ்ந்தேன்! இந்த பதிவு சரியான குரு வணக்கம்!

  ReplyDelete
 6. நல்ல ஆசிரியர் கிடைப்பது கூட ஒரு வரம்தான்.
  எனது ஆசிரியர்களையும் நினைவுக்கு கொண்டு வர வைத்த பதிவு. நன்றி.

  ReplyDelete
 7. நந்து சாருக்கு செய்யும் காரியங்களில் என்னையும் உடன் இருத்தி கொண்டான். சொந்த காரர்களில் யாரோ, நான் பிராமணன் இல்லை என்பதை முணுமுணுக்க நந்து கண்டு கொள்ளவே இல்லை. எல்லாம் முடிந்து அனைவரும் சட்டை போடாமல் பூணுலுடன் அமர்ந்து சாப்பிட உட்கார, நான் அவர்களுடன் சேர்ந்து சாப்பிட ரொம்பவும் தயங்கினேன். அப்போதும் பிடித்து இழுத்து பக்கத்தில் அமர வைத்தான் நந்து. சாப்பாடு பரிமாற வந்தவர் பூணுல் இல்லாததால் என்னை சற்று வித்யாசமாய் பார்த்தார்.


  .....நெகிழ்வான பதிவுதான்... ஆனால், இன்னும் இந்த அளவுக்கு ஜாதி மேன்மை பார்க்கிறார்களே என்று வேதனையாகவும் இருக்கிறது.

  ReplyDelete
 8. Mail from Nandhu:

  Dear AMK

  It is a great honour to my father. You are his all time favourate student.My father has earned people and he has given less importance to money. I have spoken to my sisters arthi, renuka & amma and told about this article. They all read and no way to express our feelings. Thanks word will put full stop for this so I dont want to say thanks

  Regards
  Nandhu

  ReplyDelete
 9. மிகவும் நெகிழ்வான பதிவு..
  அந்த மாதிரி நல்லோர்கள் (ஆசான்) இருந்ததால்தான் அந்நாளில் மழை பொழிந்தது..

  //Thanks word will put full stop for this so I dont want to say thanks//

  @ நந்து சார்.. இருந்தாலும் இப்படி சொல்லிட்டு கடைசியில் புல் ஸ்டாப் வெக்காம 'தாங்க்ஸ்' மட்டும் போட்டுட்டீங்க.. (சும்மா தமாசுக்குத்தான்.)

  ReplyDelete
 10. வாழ்த்துகள்

  ReplyDelete
 11. ஒரு ஆசிரியனின் மகனாக மிகவும் ரசித்த பதிவு.
  //
  சாப்பாடு பரிமாற வந்தவர் பூணுல் இல்லாததால் என்னை சற்று வித்யாசமாய் பார்த்தார். " நாலு கழுதை வயசாயிடுச்சு. எப்ப தான் பூணுல் போட போறே ? எப்ப கல்யாணம் பண்ண போறே?" என்று நந்து என்னை பார்த்து கமன்ட் அடிக்க, தேவையான பதில் கிடைத்து விட்டதால் எனக்கும் சேர்த்து உணவு பரிமாறினார் அவர்!! //
  நந்து மற்றொரு சமூக மாற்றத்துத்துக்கு சாவியாக இருக்கட்டும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை அவர் சார்ந்தவர்களிடம் விதைக்கட்டும்

  ReplyDelete
 12. அன்பின் மோகன்
  உங்க பாலகுமாரன் இடுகையையும் இவ்விடுகையையும் இப்பத்தான் படிச்சேன். அருமையா எழுதறீங்க, வாழ்த்துக்கள்.

  இந்த இடுகையை படித்தாவது பிராமணர்களில் பலர் ஜாதியை விட நட்பை அதிகம் மதிக்கிறார்கள் என்பதை பதிவுலகம் உணருமா??

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 13. உங்க நட்புக்கும், உங்க ஆசிரியருக்கும் நல்லதொரு வணக்கப் பதிவு! என் சிறு வயது ஆசிரியர்களை நினைவுபடுத்தியது. நன்றி!

  ஜாதிக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்துத் தூக்கி குப்பையில் போடணும் - எல்லாரும்.

  ReplyDelete
 14. என்னாச்சு திடீர்னு உங்களுக்கு? எழுத்து அடி பின்றீங்க..மிக அழகாக முடிக்கப்பட்ட பதிவு.
  நான் தஞ்சை KHS ல படிக்கறச்சே சிவசூரியன்னு தமிழய்யா..அவ்ளோ புடிக்கும் அவர. அவருக்காகவே தமிழ் படிச்சேன்..அவர் ஞாபகம் வந்துது..

  ReplyDelete
 15. குருவைப் பற்றி உயர்வான பதிவு

  ReplyDelete
 16. @பாஸ்டன் அண்ணாச்சி

  //இந்த இடுகையை படித்தாவது பிராமணர்களில் பலர் ஜாதியை விட நட்பை அதிகம் மதிக்கிறார்கள் என்பதை பதிவுலகம் உணருமா?? //

  கஷ்டம்

  ReplyDelete
 17. குரு பக்தியையும் நட்பின் மேன்மையையும் ஒருங்கே சொன்ன பதிவு...

  ReplyDelete
 18. எல்லோரும் சொல்வதுபோல் இதுவும் சிறப்பான பதிவுதான்.

  திரு நந்து சார் எங்கு, என்ன மாதிரி வேலையில் உள்ளார் என்பது குறித்து தெரிவித்தால் இன்னும் நன்றாக இருக்கும். அவரைப் பற்றி தாங்கள் எழுதியதிலிருந்து அவர் ஒரு ஹீரோவாக எனக்குப்படுகிறார்.

  இந்தமாதிரி நண்பர்களைப் பெற்ற தாங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

  ReplyDelete
 19. நன்றி ராம லட்சுமி
  **
  வெங்கட்: நன்றி
  **
  மாதவி, "அந்தணன் என்போன் அறவழியோன்' தானே" சரியாக சொன்னீர்கள்.
  **
  வித்யா: மகிழ்ச்சி, நன்றி
  **
  பெயர் சொல்ல: நன்றி
  **
  இளங்கோ said // எனது ஆசிரியர்களையும் நினைவுக்கு கொண்டு வர வைத்த பதிவு. நன்றி//.

  மகிழ்ச்சி நன்றி
  **
  சித்ரா: நன்றி

  ReplyDelete
 20. மாதவன்: அட நந்துவை ஏம்பா கலாய்க்கிறே ! விட்டுடு!
  **
  நன்றி பழமை பேசி
  **
  குடுகுடுப்பை said...
  ஒரு ஆசிரியனின் மகனாக மிகவும் ரசித்த பதிவு.  நன்றி குடுகுடுப்பை

  **

  ஸ்ரீராம்: மிக மகிழ்ச்சி நன்றி  இப்பதிவு பிராமின் நான் பிராமின் பற்றிய பிரச்சனையை சற்று எழுப்புவது மனதுக்கு சற்று சங்கடமாக உள்ளது. சீனு சார் & நந்து என்ற இரு நல்ல மனிதர்களை பற்றிய நெகிழ்வான உணர்வுகளுக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. மற்ற விஷயங்களுக்குள் சென்று அவர்களை காயப்படுத்த வேண்டாம் என எனக்கு தோன்றுகிறது
  **

  ReplyDelete
 21. //கெக்கே பிக்குணி said...
  என் சிறு வயது ஆசிரியர்களை நினைவுபடுத்தியது. நன்றி!//

  நன்றி கெக்கே பிக்குணி
  **
  எல்: கே: நன்றி

  **
  நடராஜ்: ரொம்ப மகிழ்வாக உள்ளது உங்கள் பாராட்டு. இப்பதிவும், முடிந்த விதமும் எனக்கும் மனதுக்கு நெருக்கமாக இருந்தது .
  **
  நன்றி ஸ்ரீ ராம்
  **
  அமைதி அப்பா: மகிழ்ச்சி நன்றி நந்து வெளி நாட்டில் பணி புரிகிறான். இஞ்சினியராக உள்ளவன் தற்போது ஒரு நிறுவனத்தை அவனே நிர்வகிக்கிறான்.

  ReplyDelete
 22. அருமை மோகன்.

  சில விசயங்களில் நான் என்னை உங்களில் பார்க்கிறேன்.

  உங்கள் கட்டுரை நெகிழ வைத்தது என்றால், நந்துவின் பதில் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

  இது போலவே எழுதுங்கள். நமக்கு வேறு விசயங்கள் வேண்டாம்.

  ReplyDelete
 23. Lucky to have such a good teacher!பூங்கொத்து!

  ReplyDelete
 24. சீனு சார் மாதிரி ஆட்கள் ரொம்ப கம்மிதான்.நெகிழ்வாய் இருந்தது இந்த பதிவு.

  ReplyDelete
 25. உலக நாதன்: நன்றி
  **
  அன்புடன் அருணா: பூங்கொத்து!! நன்றி மேடம்
  **
  அமுதா கிருஷ்ணா said...
  சீனு சார் மாதிரி ஆட்கள் ரொம்ப கம்மிதான்.

  உண்மை தான். சரியா சொன்னீங்க. நன்றி

  ReplyDelete
 26. Interesting portrait of a very humble and gentleman. Shows the friendship and student's affection towards his teacher. The good citizen is brought by a good teacher. This is a classic example. It shows as well the teacher's son (Nandu) is getting better from the students of his father. hats off to SEENU sir and the kids.

  ReplyDelete
 27. நல்ல பதிவு.
  சீனு சார் மாதிரி நல்ல ஆசிரியர்கள் எங்கள் காலத்திலும் இருந்தார்கள்.
  அப்பாவுக்கு ஏற்ற பையனாக திரு.நந்து இருப்பது மிக நெகிழ்வு.

  இந்த நட்பு நீடு வாழ வேண்டும்.

  ReplyDelete
 28. சீனு சாரின் பெண் ஆர்த்தி எழுதியது:

  Hai Anna, i am Aarthi Raghu. We are fine. Hope this mail will see you good health and cheer.

  I have seen your Seenu Sir's memories. After seeing that, i
  began to cry. I couldn't control myself. I am very happy that you remembered my father(your seenu sir) till now. Nowadays who can remember like this? I am very
  proud that i was born to him, and he had a student like you.May God and your sir bless you. convey my regards to Chitra Anni. Thank you.

  Yours Affly,

  Mrs.Aarthi

  ReplyDelete
 29. @NataRaj...
  I'm so happy to see that you are a student of "SivaSuriyan" Sir.
  I studied at KHS too. He was my 7th grade Tamil Teacher.We love him.
  I still remember the way he teaches and never sits in the teacher's chair. We should write a post about him!

  BTW, Thanks for this nice Post Mohankumar!

  Regards
  Rumy.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...