*******
இந்த தலைப்பில் ஒரு பதிவு எழுத ரொம்ப நாளாகவே எண்ணம். இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது. என் மனைவி மற்றும் அக்கா வேலைக்கு செல்பவர்கள். மேலும் நெருங்கிய உறவுகளில் ஹவுஸ் வைப், பார்ட் டைம் வேலை பார்ப்பவர்கள் என பல வித பெண்களையும் கவனித்துள்ளேன். இப்படி கவனித்ததன் தொகுப்பே இக்கட்டுரை.
*******************************************
முதலில் ஒரு கணவன், மனைவி, குழந்தை என்ற சிறு குடும்பத்தில் அதே தலைப்புகளில் மூவரும் எப்படி பாதிக்க படுகிறார்கள் என பார்த்து விடலாம்.
கணவன்
இருவர் வேலை பார்ப்பதால் குடும்பத்துக்கு பண வரவு அதிகரிக்கிறது. சொந்த வீடு, கார் என ஒரு வசதியான வாழ்க்கை வாழ முடிகிறது.
நிறைய ஆண்களுக்கு "நம் வேலை என்றாவது போய் விட்டால்?" என்ற பயம் உண்டு. இந்நிலையில் மனைவி வேலை பார்ப்பது சற்று தைரியம் தருகிறது. வேலை போனால் கூட சில மாதம் எப்படி குடும்பம் நடத்துவது என்ற கவலை வேண்டாம் என்று !
வீட்டு வேலை அதிகரிக்கிறது. கடந்த ஜெனரேஷன் வரை சமையல் போன்றவை பெண்கள் விஷயம் என நினைத்த ஆண்கள் இன்று வீட்டு வேலை அவசியம் செய்ய வேண்டி உள்ளது. இந்த விஷயத்தில் வீட்டுக்கு வீடு பெரிதும் மாறுபடுகிறது. ஒரு பக்கம் சமையல், வீட்டு வேலை, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருதல் போன்றவை பெண்கள் செய்ய வேண்டியது, அவர்கள் வேலைக்கு போனால் என்ன, போகாட்டால் என்ன என்ற ரீதியில் இருக்கும் ஆண்களும் உள்ளனர். (நல்ல வேலை இவர்கள் குறைவான சதவீதம் என நினைக்கிறேன்). காலை நேரத்தில் முழு சமையலும் தானே முடித்து (மனைவி குழந்தையை கிளப்பும் வேலை மட்டும் செய்வார்) மனைவிக்கு டிபன் பாக்ஸ்யில் போட்டு தந்து பின் அலுவலகம் செல்லும் ஆண்களும் உள்ளனர் (இவர்களும் மிக குறைவே). கணவன் ஓரளவு வீட்டு வேலையை பங்கிட்டாலும், பெரும்பாலான முக்கிய வேலை பெண்கள் தான் செய்கிற குடும்பங்கள் தான் நிறைய உள்ளன. (எங்கள் குடும்பம் உள்ளிட்ட பெரும்பாலான வீட்டில் இந்த கதை தான்).
முன்பு இருந்தது போல் ஆண்கள் பெண்கள் மீது அதிகாரம் (dominate) செய்ய முடிவதில்லை. பொருளாதார சுதந்திரம் வந்த பின், பெண்களை சமமாக நடத்துவது இயல்பான ஒன்றாக ஆகி வருகிறது (இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வில்லை என்பது வேறு விஷயம்..)
மொத்தத்தில் கணவனை பொறுத்த வரை வீட்டு வேலை ஓரளவு அதிகரிப்பது தவிர பெரிய பாதிப்பு இல்லை.
குழந்தை(கள்)
சென்ற தலை முறை குழந்தைகள் பார்க்காத விளையாட்டு பொருட்கள், உடை போன்றவை அவர்களுக்கு கிடைக்கின்றன. அவர்கள் பெரிதும் தவற விடுவது தாயின் அரவணைப்பு தான். “ஒன்று அம்மா வேலைக்கு போகிறார். வீட்டுக்கு வந்தால் அடுப்படி” , வளர்ந்த குழந்தை எனில், “ இருக்கும் கொஞ்ச நேரம் பள்ளி பாடம் பற்றி பேசுகிறார்” . நமது தலை முறையில் தாயிடம் கிடைத்த அன்பும், அரவணைப்பும் இந்த தலை முறை குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை! இது ஒரு வருத்தமான விஷயம் தான்.
அந்த குடும்பத்துடன் யாராவது ஒரு தாத்தா, பாட்டி இருந்தால் தாயிடம் கிடைக்காத அன்பும் கவனமும் தாத்தா, பாட்டியிடமிருந்து ஓரளவு கிடைக்கிறது.
ஆனால் பாதி குடும்பங்கள் தான் தாத்தா, பாட்டியை தங்கள் வீட்டிலேயோ அல்லது அவர்கள் வீட்டுக்கு அருகிலோ வசிக்கின்றனர். பலர் கிரீச் , வீட்டோடு வேலை ஆள் என்று சமாளிக்கன்றனர்.
குழந்தைகள் இவை எல்லாவற்றுக்கும் பழகி விடுகின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம் !!அவர்களுக்கு அம்மா வேலைக்கு போவதால் கிடைக்கும் சுகங்களும் வேண்டும், இன்னொரு பக்கம் அம்மா வீட்டோடு இருந்தால் நல்லது என்றும் பலர் நினைக்கின்றனர்.
மனைவி
மிக முக்கியமான நபர். இவரை மட்டும் பிளஸ் மைனஸ் என அலசுவோம்
பிளஸ்
அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் . (ஆனால் பல நேரம் அதனை அவர்களால் முழுதாய் அனுபவிக்க முடிகிறதா என்பது ஒரு கேள்வி குறி தான்.)
அவர்கள் படித்த படிப்பு வீணாகாமல் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
பாதி வாழ்வில் கணவன் இறந்தாலோ அல்லது மண முறிவு ஏற்பட்டாலோ சுயமாய் வாழ முடிகிறது.
வேலைக்கு போகும் பெண்கள் சற்று மூச்சு விடவும், நிம்மதியாய் மனம் விட்டு சிரிக்கவும் முடிவது அலுவலகத்தில் தான். வீட்டில் அதற்கு நேரம் இல்லை.
படித்து விட்டு வீட்டில் சும்மா இருப்பதால் சிலருக்கு வரும் மன அழுத்ததிலிருந்து தப்பிக்கிறார்கள்
மைனஸ்
முக்கிய மைனஸ்.. பெண்கள் வேலை பார்ப்பதால் அவர்கள் வேலை பளு மிக மிக மிக அதிகம் ஆகிறது. பெண் என்பதால் பெரிய சலுகை அலுவலகத்தில் கிடைப்பதில்லை. (அதிக பட்சம் அலுவலகம் முடிந்து ஓரளவு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பலாம்; இதுவும் சில கம்பனிகளில் நடப்பதில்லை). வீட்டில் கணவன் நினைத்தால் வேலை செய்வான்; இல்லா விட்டால் டிவி பார்ப்பான்; பேப்பர் படிப்பான்; மிக தாமதமாக எழுந்து நேரே கிளம்பி செல்வான். ஆனால் பெண் மட்டும் ஒவ்வொரு நாளும் விதி விலக்கே இல்லாமல் சீக்கிரம் எழுந்து அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மிக பெரிய உடல் மற்றும் மன சுமையை தருகிறது.
பொதுவாகவே பெண்களுக்கு மூட்டு வலி போன்றவை நாற்பது வயதுக்கு மேல் வந்து விடுகிறது. அவர்களுக்கு கால்சியம் குறை பாடு மிக எளிதாய் வரும். இதனால் எலும்பு தேய்வு, பல பாகங்கள் வலி நிறைய பேருக்கு வருகிறது. அதீத வேலையால் சீக்கிரம் பல நோய்கள் வருவது ஒரு பெரிய பிரச்சனை
நான் கவனித்த வரை வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்பவரை பார்த்து " இவரை போல் நாம் போக முடியலையே!" என ஏங்குகின்றனர். வேலைக்கு போகும் பெண்களில் சிலர் வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்து இவர்கள் போல் நாம் இருக்க முடியலையே என நினைக்கின்றனர்.
****** *****************
என்னை பொறுத்த வரை, வீட்டில் யாரேனும் பெரியவர்கள் இருந்தால் பெண்கள் வேலைக்கு செல்வது எளிது. பெரியவர்கள் கூட இருப்பது, இன்றைய நிலையில் பல காரணங்களால் கஷ்டமான ஒன்றாக உள்ளது. ( சில நேரம் வயதானவர்களுக்கும் சேர்த்து வேலை செய்வதால், வேலைக்கு செல்லும் பெண்ணின் வேலை இன்னும் அதிகரிக்கிறது!)
பெரியவர்கள் உடன் முடியாத நிலையில் பெண்கள் முழு நேர வேலையாக இல்லாமல் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மணி நேரங்கள் செய்ய கூடிய வேலை செய்வது பல விதங்களில் பயன் தரும். பெண்கள் வேலைக்கு செல்வதால் கிடைக்கும் பெரும்பாலான பலன்கள் கிடைத்து விடும். மேலும் அவர்களுக்கு சற்று ஓய்வும் குழந்தைகளை பார்த்து கொள்ளவும் முடியும்.
**
பெண்கள் வேலைக்கு செல்வதை தவிக்கவே முடியாத இன்றைய சூழலில், ஆண்கள் அவர்களின் வேலைகளில் முடிந்தவற்றை தாங்கள் எடுத்து உதவுவது இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்க முடியும்! இது பற்றிய புரிதலும் இதனை நோக்கிய ஆண்களின் செயல்களும் இன்றைய அவசிய தேவை !!
சில விஷயங்களில் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன். குழந்தைகள் என வரும்போது அவர்கள் பள்ளி செல்லும் வரையாவது ப்ரேக் எடுக்க வேண்டுமென்பது என் எண்ணம். குழந்தைக்கு தாயின் அரவணைப்பு கிடைப்பதோடு நமக்கும் வீண் ஏக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம். இதுவும் ஒரு வகையான கமிட்மெண்ட் தானே:)
ReplyDeleteஇப்படிக்கு
கொஞ்ச காலத்திற்கு ப்ரேக்கில் இருக்கும் பெண்கள் சங்க உறுப்பினர்:)
//நான் கவனித்த வரை வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்பரை பார்த்து " இவரை போல் நாம் போக முடியலையே!" என ஏங்குகின்றனர். வேலைக்கு போகும் பெண்களில் சிலர் வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்து இவர்கள் போல் நாம் இருக்க முடியலையே என நினைக்கின்றனர்.//
ReplyDeleteVery True.
//முதலாவது முடியாத நிலையில் பெண்கள் முழு நேர வேலையாக இல்லாமல் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மணி நேரங்கள் செய்ய கூடிய வேலை செய்வது பல விதங்களில் பயன் தரும். //
இந்தியாவில் இதுபோன்ற வசதிகள் இன்னும் அவ்வளவாக உருவாகவில்லை. மேலை நாடுகளில் பெண்களுக்கு பார்ட் டைம் ஜாப் ஒரு வரபிரசாதம்.
சகோதரி வித்யாவின் வழியே எங்கள் வீட்டிலும். பட் ப்ரேக் நீண்டுகொண்டே போகிறது:(
நல்ல அலசல்... நல்லா சொல்லி இருக்கீங்க மோகன் சார். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான அலசல்ங்க மோகன். நானும் இப்பதான் ப்ரேக்ல இருந்து விடுபட்டுருக்கேன்.
ReplyDeleteபொருளாதார சுதந்திரம் வந்த பின், பெண்களை சமமாக நடத்துவது இயல்பான ஒன்றாக ஆகி வருகிறது//
ReplyDeleteஇதில் நான் மாறுபடுகிறேன், நாகரிக வளர்ச்சியாக இதைப் பார்க்கிறேன். (எண்கள் வீட்டில் முடிவுகள் எடுப்பது எனது மனைவி,
ஆனால் அவர் வேலைக்குப் போகும் பெண்ணல்ல, இன்னும் சொல்லப் போனால் ஆரம்பக் கல்வியை முடிக்க வாய்ப்புக் கிடைக்காதவர்)
எங்கள் வீட்டு நிர்வாகம் மற்றவர்கள் வியப்படையும் வகையில் உள்ளது. அதற்கு காரணம் எனது மனைவிக்கு, நானும் எனது மகனும் கொடுக்கும் ஒத்துழைப்புதான்.
இதில் மாறுபடுபவர்கள் தயவு செய்து என்னையும், எனது குடும்பத்தையும் இழுத்து கமென்ட் எழுத வேண்டாம்.
ஏதோ ஓர் அப்பாவி எதையோ எழுதிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிடும்படி அன்புடனும், மன்றாடியும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
Part time jobs, இந்த கால கட்டத்தில் முக்கியமான ஒன்று.
ReplyDelete////ஆண்கள் அவர்களின் வேலைகளில் முடிந்தவற்றை தாங்கள் எடுத்து உதவுவது தான் இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்க முடியும்! இது பற்றிய புரிதலும் இதனை நோக்கிய ஆண்களின் செயல்களும் இன்றைய அவசிய தேவை !!//////
................. உண்மை. தமிழ் நாட்டில், அப்படி இருந்தால் ஏளனமாக பார்க்கும் பார்வை மாறி வருவதாக நினைக்கிறேன். அவசியம் முழுதும் மாறவேண்டும்.
/ வித்யா said... குழந்தைகள் என வரும்போது அவர்கள் பள்ளி செல்லும் வரையாவது ப்ரேக் எடுக்க வேண்டுமென்பது என் எண்ணம்.//
ReplyDeleteநானும்... இப்பக்கூட மறுபடி சின்னவனுக்காக பிரேக் எடுக்கலாமாங்கிற எண்ணம் அவ்வப்போது தலைதூக்கும்.
பார்ட் டைம் ஜாப் கிடைத்தால் வரம்தான்.
நல்ல கட்டுரை; பெண் பொருளாதாரச் சுதந்திரம் - பல குடும்பங்களில் சம்பாதிக்காத, படிக்காத பெண்கள் திறமையாக நிர்வாகம் செய்வதைப் பார்த்திருக்கிறேன், என் பாட்டி காலத்திலேயே!!
ஆண்கள் வீட்டு வேலை செய்ய முன்வருவதுதான் தற்கால மாற்றம்.
குட் போஸ்ட் மோகன் சார்.. :)
ReplyDelete//நான் கவனித்த வரை வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்பரை பார்த்து " இவரை போல் நாம் போக முடியலையே!" என ஏங்குகின்றனர். வேலைக்கு போகும் பெண்களில் சிலர் வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்து இவர்கள் போல் நாம் இருக்க முடியலையே என நினைக்கின்றனர்.//
ReplyDeleteஇக்கரைக்கு அக்கரை பச்சை
நல்லதொரு பதிவு மோகன்குமார்
//வித்யா said... இப்படிக்கு
ReplyDeleteகொஞ்ச காலத்திற்கு ப்ரேக்கில் இருக்கும் பெண்கள் சங்க உறுப்பினர்:)
அப்படியா? ரொம்ப நல்ல விஷயங்க இது. எல்லாருக்கும் இது முடிவதில்லை. கமெண்டுக்கு நன்றி
*************
ஆதி மனிதன் said...
//இந்தியாவில் இதுபோன்ற வசதிகள் இன்னும் அவ்வளவாக உருவாகவில்லை//
இங்கும் இருக்கு ஆதி மனிதன். எனக்கு தெரிந்தே பலர் செய்கின்றனர். வெளி நாடு அளவு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்..
*************
நன்றி பிரவீன் நீண்ட நாள் கழித்த தங்கள் வருகைக்கு
*************
சின்ன அம்மணி: அப்படிங்களா? சந்தோசம்!
அமைதி அப்பா தங்களின் கமெண்டும் அதில் உள்ள எச்சரிக்கை உணர்வும் ரசித்தேன். நீங்கள் சொல்வது உண்மை தான். பெண்கள் வேலைக்கு செல்லா விட்டாலும் வீட்டில் பல முக்கிய முடிவுகள் சரியான முறையில் எடுக்கிறார்கள். வருகைக்கு நன்றி.
ReplyDelete**********
சித்ரா: நன்றி நீங்கள் சொல்வது சரியே !!
**********
நன்றி ஹுஸைனம்மா. .. வருகைக்கும் கருத்துக்கும்.
**********
மணி: நன்றி வேலை பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்தால் வீட்டு வேலையும் செய்யணும். Be prepared!!
**********
நன்றி வரதராஜலு சார்
//வேலைக்கு போகும் பெண்கள் சற்று மூச்சு விடவும், நிம்மதியாய் மனம் விட்டு சிரிக்கவும் முடிவது அலுவலகத்தில் தான்.//
ReplyDeleteஇது ஆண்களுக்கும் பொருந்தும்னே நினைக்கிறேன்:))
நல்ல பதிவு.
ஈகோங்கற ஒரு விஷயம் இல்லன்னா, எந்த பிரச்னையும் இல்ல. நான் ஆம்பள, இந்த வேலையெல்லாம் நான் செய்யணுமான்னு தோணுதே, அதுதான் பெண்களோட Stressக்கும், குடும்பத்தின் பிரச்னைக்கும் பிள்ளையார் சுழி!
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல பதிவுங்க மோகன் ஜி..
ReplyDeleteகுழந்தைகள்தான் முக்கியம் என்பதாக உள்ள வித்யா அவர்களின் கருத்துடன் நான் உடன் படுகிறேன்.
--
@அமைதிஅப்பா: விடுங்க..:))
Thevaigali poruthu velaikku pogalam. Padicha padippu veenagamal,padippu enna perishable item-a?padippai ella vizhayathilum apply pannalame.than sambathiyathai thane selavu seyyum varai then pengal sudanthiramanavargal. matrathellam kothadimaithan.munna direct adimaigal(Purushan adhikaram kodi katti parakkum).Ippa indirect adimaigal.Purushan adangina madhiri nadippan.avlathan!
ReplyDeleteநல்ல அலசல்!
ReplyDeleteநல்ல அலசல்ங்க.நானும் பிரேக்லதாங்க இருக்கிறேன். திரும்ப வேலைக்கு போகனும்னா, குழந்தைக்களை கவனிக்க முடியாதோன்னு இருக்குது. இப்ப ரெண்டாவது பொண்ணுக்கும் 4 வயசு ஆயிட்டதால, கொஞ்ச நாள் வேலைக்கு போய் பாக்கலாமான்னு இருக்குது. எங்க வீட்லயும் பொருளாதார சுதந்திரம் எல்லாம் நல்லாதான் இருக்கு. படிச்ச படிப்பு வீணா போக வேண்டாமேன்னு இருக்குது மற்றும் நீங்க சொன்ன de - risking factor ஒரு முக்கிய காரணம்.
ReplyDeleteநன்றாக் அலசி ஆய்ந்து இருக்கிறீர்கள். அவசியம் தேவையான் பதிவு நன்றி உங்களுக்கு.
ReplyDelete//இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வில்லை என்பது வேறு விஷயம்..) //
ReplyDeleteசுதந்திரம் என்பதின் அளவுகோல் என்ன??? வேலைக்குப் போவதால்பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கிறதா?? நானும் ஒரு காலத்தில் வேலைக்குப் போனவள் தான். முதல் குழந்தை பிறந்ததுமே வேலையை விடவேண்டியதாயிற்று. கணவருக்கும் வெளிமாநிலங்களுக்கு மாற்றல் ஆகும் ராணுவக் கணக்குத் துறை வேலை.
வித்யா ப்ரேக் எடுத்துக்கொண்டிருக்கிறார் அவரோடது ஐடி வேலையாய் இருக்கலாம். நான் அரசு வேலை என்பதால் ஐந்து வருடங்களில் திரும்பக் கூப்பிட்டார்கள். போகமுடியலை. ஆனாலும் வேறு விதங்களில் குடும்பத் தேவைக்கு சமாளித்திருக்கிறேன். என்றாலும் வேலைக்குப் போகவில்லையே என்ற வருத்தம் எழவில்லை.பொருளாதாரத்தால் கிடைக்கும் வசதிகளுக்கு அடிமையாகும் மனம் இல்லை என்பதே நிஜம். இது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டே இருக்கும். என்னோட கருத்து மட்டுமே இது.
நிறைய எழுதலாம், பதிவாகிவிடும், நிறுத்திக்கிறேன். :D
ReplyDeleteகாலையில கமெண்ட் போடும்போதே நெனச்சேன்... கண்டிப்பா தயார்படுத்திக்கிறேன் மோகன்.. (வேற வழியே இல்லையா..) :)
ReplyDeleteரைட்டு...
ReplyDelete//மோகன் குமார் said...
ReplyDeleteமணி: நன்றி வேலை பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்தால் வீட்டு வேலையும் செய்யணும். Be prepared!!//
ஏன், வேலைக்குப் போகாத பெண்ணுன்னா, வீட்டு வேலைகளில் ஆண் உதவி செய்யக்கூடாதா?
நல்ல அலசல்.
ReplyDeleteஅவரவர் குடும்பத்தேவை பொறுத்து செல்லலாம் குடும்பத்தினரும்கணவரும் அனுசரணையாக இருக்க வேண்டும்
ReplyDelete//ஹுஸைனம்மா said...
ReplyDelete//மோகன் குமார் said...
மணி: நன்றி வேலை பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்தால் வீட்டு வேலையும் செய்யணும். Be prepared!!//
ஏன், வேலைக்குப் போகாத பெண்ணுன்னா, வீட்டு வேலைகளில் ஆண் உதவி செய்யக்கூடாதா?
//
ஹுசைனம்மா, இது கேள்வி :)
//குழந்தைகள் இவை எல்லாவற்றுக்கும் பழகி விடுகின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம் !!//
ReplyDeleteபழகி விடுகிறார்கள் என்பதை விட பலர் தவறான வழியில் கூட சென்று விடுகின்றனர். வித்யா சொன்னது போல் ஒரு பிரேக் வேணும்னு தோனுது.
@ ஹுஸைனம்மா & சின்ன அம்மிணி
ReplyDeleteடியர் சிஸ்டர்ஸ்..
வேலைக்குப் போகாத பொண்ணுன்னா, ஆண்கள் வீட்டு வேலைகள் செய்தால் அது உதவி..
வேலைக்குப் போகும் என்றால் ஆண்களும் வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்வது நல்லது (தவிர்க்க முடியாததும் கூட)...
இதைத் தான் சொல்லவருகிறார் எனது (நமது) வக்கீல் திரு.மோகன்.. :)
//ஹுஸைனம்மா said...
ReplyDeleteஏன், வேலைக்குப் போகாத பெண்ணுன்னா, வீட்டு வேலைகளில் ஆண் உதவி செய்யக்கூடாதா?//
ஜூப்பரு,
அண்ணே, உங்க பதிலுக்காக வெயிட்டிங்...
முதலில் ஹுசைனம்மா, அதி பிரதாபன், மணிகண்டன் ஆகியோருக்கான பதில்:
ReplyDeleteஹுசைனம்மா: மணிகண்டன் தெரிந்த நண்பர். பேச்சிலர். எனவே அவரை அப்படி கலாய்தேன். மற்ற படி வேலைக்கு போகா விட்டால் ஆண்கள் உதவ கூடாது என்றில்லை. மணிகண்டன் சொன்னது போல் பெண்கள் வேலைக்கு போனால், ஆண்கள் கட்டாயம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் எழுத பட்டது தான் இந்த பதிவு.
என் வாழ்கையை எடுத்து கொண்டால் தற்போது வீட்டு வேலைகளில் கிட்டத்தட்ட 40 சதவீதமாவது செய்கிறேன். (முக்கியமாக மற்ற வீட்டு வேலைகள் செய்வதை தவிர்த்து, பெண்ணின் படிப்பு on a daily basis பெரும்பாலும் நான் பார்க்கிறேன்; சமையலுக்கு ஆகும் நேரத்தை விட இதற்கு அதிக நேரம் அமர வேண்டி உள்ளது!!) 60% work ஹவுஸ் பாஸ் தான் பார்க்கிறார்.
இதுவே என் ஹவுஸ் பாஸ் வேலைக்கு செல்லா விடில், நான் முழுக்க டிமிக்கி தர மாட்டேன். கிட்ட தட்ட 20% வேலை தான் செய்வேன் என நினைக்கிறேன். காரணம், வீட்டில் இருக்கும் நேரத்திற்குள், அனைத்து வேலையும் முடிக்க வேண்டும் என்பதால் இருவரும் பகிர்ந்து செய்கிறோம். அவர் வேலைக்கு செல்லா விட்டால், வீட்டில் இருக்கும் நேரத்தில் பெரும்பாலான வேலை முடித்து விடுவார். இல்லையா? அவரால் முடியாத வேலைகள் மட்டுமே அப்போது நான் செய்வேன் .
என் அண்ணன் வீடு செல்லும் போது கூட அண்ணிக்கு வீட்டு வேலையில் இப்போதும் உதவுவேன். அவர்கள் ஹவுஸ் wife தான்.
பெற்றோர் அருகில் இன்றி, வேலைக்கு செல்லும் பெண்கள் சுமக்கும் பாரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த பதிவு சொல்ல விரும்புவது அதை தான்.
என் பதில் உங்கள் அனைவருக்கும் திருப்தி தருமா என அறியேன். But I have been honest in reply. Thanks
//இது ஆண்களுக்கும் பொருந்தும்னே நினைக்கிறேன்:))
ReplyDeleteஇல்லை ரகு. ஆண்கள் வீட்டிலும் பல விதத்தில் ரிலாக்ஸ் செய்து கொள்கிறோம். சற்று நேரம் பேப்பர் படிக்கிறோம். டிவி பார்த்து சிர்க்கிறோம். Working பெண்கள் அப்படி அல்ல. அவர்களுக்கு வீட்டில் மூச்சு விட நேரம் கிடைப்பதே கஷ்டம். Lot of working woman are deprived of even proper sleep. தங்கள் கமெண்டுக்கு நன்றி ரகு.
*****
சுவாமி: நீங்கள் எழுதிய உண்மை சுடுகிறது
*****
நன்றி TVR சார், ஷங்கர் & அன்புடன் அருணா !!
தெய்வ சுகந்தி: தங்கள் பெயர் வித்யாசமாக உள்ளது; முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDelete*********
நிலா மதி: மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!
*********
கீதா மேடம். நீங்கள் எவ்வளவு அனுபவசாலி!! உங்கள் அனுபவங்களை நான் பெரிதும் மதிக்கிறேன் ! நன்றி !
வணக்கம் மோகன், உங்களின் கட்டுரை இன்றைய சமூக நிலைஅய எடுத்துமுன்வைக்கிறது. நன்று.
ReplyDeleteஎன்னை பொருத்தவரை நான் என் பால்ய காலங்களில் அதிகம் மிஸ் செய்தது என் பெற்றோரைத்தான், எந்த சூழ்நிலையிலும் என் குழந்தைகளுக்கு அது நடக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். சாப்பாட்டுக்கு கஸ்டப்பட்டாலும் சந்தோஷமா இருக்க எனக்கு தெரியும், அதையே என் சந்ததிகளுக்கும் சொல்லிதர விரும்புகிறேன்.
அவசியம் கணவன் மனைவியில் யாரவது ஒருவர் வீட்டில் இருப்பதே நலம், உதாரணம் என் மனைவி (எதிர்காலம்) படித்தவள் வேலைக்கு போஒகப்ப் பிரியப்படுகிறாள் எனில் நான் வேலைக்கு போக மாட்டேன்.
காரும் சொந்தவீடும் எனக்கு comfort feel கொடுப்பதில்லை. வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் கணவனோ, மனைவியோ, குழந்தைகளோ இல்லை பெரியவர்களோ, அவர்களுக்கு குடும்பத்தில் நிலவும் இணக்கமான சூழ் நிலையே comfort feel கொடுக்கும் என்று நினைக்கிறேன்.
என் கருத்து இதுதான், இன்னைக்கு குழந்தை வளர்ப்பைக்காட்டிலும் சிரமமான விஷயம் எதுவுமில்லை.
குழந்தைகளுக்கு சம்பாதித்து சேர்த்து வைப்பதைக்காடிலும் சம்பாதிக்கும் வழியை காட்டிவிடுதலே பெரிது.
இது என் தனிப்பட்ட கருத்து, உடன்பாடு இல்லாதவர்கள் மன்னிக்கவும். :-)
செல்வ நாயகி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDelete****
தேனம்மை மேடம்; சுருக்கமாக சரியாக சொன்னீர்கள். நன்றி !
****
சின்ன அம்மணி: ஏன் இந்த கொலை வெறி? :)) நன்றி மீள் வருகைக்கு.
****
புலி கேசி: நன்றி நீங்கள் சொல்வதும் சில இடங்களில் நடக்கிறது. பல பெற்றோர் அவர்களால் முடிந்த வரை safeguard செய்கின்றனர். What to do?
****
அதி பிரதாபன்: உங்களுக்கு ஹவுஸ் பாஸ் ஆக போறவங்க வேலைக்கு போறாங்களா??
வசதி அதிகமோ, குறைவோ... கண்டிப்பா வேலைக்குப் போகனுமென்பது எனது எண்ணம். பெண் சும்மா வீட்டுக்குள் உட்கார்ந்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.
ReplyDeleteஅருமையான எல்லோருக்கும் தேவையான பதிவு .
ReplyDeleteகண்டிப்பாக வேலைக்கு போகும் பெண்களுக்கு ஆண்கள் உதவனும்,
அதே சமையத்தில் வீட்டில் உள்ள பெண்களுக்கும் உதவலாம்,
ஏனென்றால் வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் உள்ள பெண்களுக்கு தான் அதிக வேலைப்பளு.
//மோகன் குமார் said...
ReplyDeleteமுதலில் ஹுசைனம்மா, அதி பிரதாபன், மணிகண்டன் ஆகியோருக்கான பதில்:
...........
என் பதில் உங்கள் அனைவருக்கும் திருப்தி தருமா என அறியேன். But I have been honest in reply. Thanks//
உங்கள் பதிவில் நடுநிலைமையானக் கருத்துக்களே இருந்தன; அதனால்தான் நீங்கள் மணிகண்டனைக் கலாய்க்கிறீர்களோ என்ற சந்தேகம் வந்ததாலேயே ஒரு கேள்வியுடன் நிறுத்தினேன். ;-))
மனைவிக்கு உதவும் கணவனாக நீங்கள் இருப்பது மகிழ்ச்சி. நீங்கள் சொன்னதுபோலவே நான் வீட்டில் இருந்த காலங்களைவிட இப்போ அதிகமாகவே என்னவர் வீட்டுப் பொறுப்புகள் ஏற்றுக் கொள்கிறார்.
//அதி பிரதாபன் said...
ReplyDeleteவசதி அதிகமோ, குறைவோ... கண்டிப்பா வேலைக்குப் போகனுமென்பது எனது எண்ணம். பெண் சும்மா வீட்டுக்குள் உட்கார்ந்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.//
வேலைக்குப் போகாத பெண் வீட்டில் சும்மாதான் இருப்பாரா பிரதாபன்? உபயோகமாகப் பொழுதைப் போக்க அலுவலக வேலைக்குத்தான் போகவேண்டுமென்றில்லை. :-)))
//வேலைக்குப் போகாத பெண் வீட்டில் சும்மாதான் இருப்பாரா பிரதாபன்? உபயோகமாகப் பொழுதைப் போக்க அலுவலக வேலைக்குத்தான் போகவேண்டுமென்றில்லை//
ReplyDeleteஅப்புறம் என்ன செய்யலாமென நினைக்கிறீர்கள்?
//காரும் சொந்தவீடும் எனக்கு comfort feel கொடுப்பதில்லை. வெளியிலிருந்து வீட்டிற்குள் வரும் கணவனோ, மனைவியோ, குழந்தைகளோ இல்லை பெரியவர்களோ, அவர்களுக்கு குடும்பத்தில் நிலவும் இணக்கமான சூழ் நிலையே comfort feel கொடுக்கும் என்று நினைக்கிறேன்.//
ReplyDeleteஇதைத் தான் சொல்ல நினைத்தேன், ஆனால் இன்றைய தலைமுறை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகத்தில் எழுதவில்லை. மற்றபடி என்னுடைய பின்னூட்டத்திற்கு உங்கள் பதில் எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது. என்றாலும் பரவாயில்லை. பெண்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் வேலைக்குச் சென்றாலும் சரி, வீடு என்பது கணவன், மனைவி இருவராலும் இழுக்க வேண்டிய ஒன்றே. இருவருக்கும் அனைத்திலும் சமபங்கு உண்டு. இது புரிந்துகொண்ட குடும்பம் நல்ல சந்தோஷமான குடும்பமாக இருக்கும். ஒரு லட்சம் சம்பளத்திற்காகப் பெற்றெடுத்த குழந்தையை ஒரு வயது நிறைவதற்குள் டே கேரில் விடும் பெண்களையும் பார்க்கிறேன். :(((((((((((((( அப்படிப் பார்க்கும்போது வித்யா, ஹுசைனம்மா, இன்னும் இதை ஆதரிக்கும் மற்றப் பெண்கள் சரியான முடிவைத் தான் எடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.
நல்ல பதிவு. சென்னை போன்ற பெரு நகரங்களில், ஒருவர் மட்டுமே வேலைக்குச் சென்று குடும்பம் நடத்துவது மிக கடினமான ஒன்றாகவே உள்ளது. அதே சமயம், வீட்டிலும் எல்லா வேலைகளையும் பார்த்துவிட்டு, வேலைக்கும் செல்லும் பெண்களின் நிலைமை ரொம்ப கஷ்டம்தான்.
ReplyDeleteபெண்கள் குழதைகளையும் பெரியவர்களையும் பார்த்துக்கொண்டு, வீட்டிலேயே இருப்பதுதான் குடும்பத்தில் அதிக மகிழ்வைத் தரும் என்பது என் எண்ணம்.
நல்ல அலசலும் ஆலோசனைகளும். ப்ரேக் அவசியமான ஒன்றே. தேவைக்காக மட்டுமேயன்றி திறமையுள்ளவர்கள் ஆத்மதிருபதிக்காகவும் வேலைக்குச் செல்வது அதிகரித்து வந்துள்ளது கடந்த சில காலமாக. நல்ல பதிவு.
ReplyDeleteமுரளி: மிக்க நன்றி உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. என் பெண் அம்மா- அப்பா இருவரும் வேலை பார்ப்பதால் நீங்கள் நினைப்பது போல் எண்ண கூடும்!!
ReplyDelete**********
அதி பிரதாபன்: இந்த டாபிக்கில் அனைவருக்கும் தனிதனி கருத்து உள்ளது, அவரவர் சூழல் பொறுத்தே நடக்க முடியும் என தெரிகிறது. We cannot generalise things in this matter.
**********
ஜலீலா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
**********
ஹுசைனம்மா: தங்கள் தொடர் கருத்துகளுக்கு நன்றி
கீதா மேடம். தாங்கள் முதலில் எழுதிய கருத்தை உங்கள் கோணத்திலிருந்து நான் உடன் படுகிறேன். அதில் உங்கள் வாழ்க்கையும் வழியும் தெரிந்தது. இதனால் தான் உங்கள் அனுபவத்தை நான் மதிக்கிறேன் என எழுதினேன். அதற்கு முன் ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டதால் விரிவாய் உங்களுக்கு பதில் சொல்ல வில்லை. மன்னிக்க.
ReplyDelete********
உழவன்: மிக்க நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்
********
நன்றி ராம லக்ஷ்மி
நல்ல அலசல் மோகன் ,பின்னூட்டங்களும் நல்லா இருக்கு..
ReplyDeleteகாலை நேரத்தில் முழு சமையலும் தானே முடித்து (மனைவி குழந்தையை கிளப்பும் வேலை மட்டும் செய்வார்) மனைவிக்கு டிபன் பாக்ஸ்யில் போட்டு தந்து பின் அலுவலகம் செல்லும் ஆண்களும் உள்ளனர் //
ReplyDeleteஹிஹிஹி.... கனவுலகத்துல இருந்து வெளிய வாங்க மோகன்.
நமது தலை முறையில் தாயிடம் கிடைத்த அன்பும், அரவணைப்பும் இந்த தலை முறை குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை! //
இதே அன்பையும் அரவணைப்பையும் குழந்தைகள் தந்தையிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்கள். இருவரும் வேலையையும் மேனேஜ் செய்து குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.
ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க மோகன். அழகா முடிச்சிருக்கீங்க. நடையில் மிகுந்த மாற்றம். ரொம்ப நல்லாருக்கு.