Saturday, January 22, 2011

ஆடுகளம்..மறக்க முடியாத பாத்திரங்கள்

இணையத்தில் ஒரு வாரம் கழித்து விமர்சனம் எழுதுவது இடைவேளைக்கு பின் சினிமாவுக்கு போவது போல. இருந்தும் ஒரு நல்ல படம் பார்த்ததை பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்த பதிவு...

ஆடுகளம்.. கதை போன்ற விஷயங்களுக்குள் நுழைய போவதில்லை. நிறைய வாசித்து உங்களுக்கு மனப்பாடமே ஆகியிருக்கும்..அற்புதமான கேரக்டர்கள் பற்றி மட்டும்..

பெரிதும் அசத்திய கேரகடர்.. தனுஷ் தான். இந்த கேரகடர் எவ்வளவு அற்புதமாய் தனுஷுக்கு பொருந்துகிறது!! ஒவ்வொரு காட்சியிலும் அந்த கேரக்டரை தனுஷுக்குவிளக்கி சொல்லிய    வெற்றி மாறன் தான் இதற்கு பெரிய காரணமாய் இருந்திருக்க வேண்டும்.

படத்தில் பெரிதும் சிரித்தது தனுஷ் " ஐ யாம் லவ் யூ " (I am Love you) என்று தப்சியிடம் சொல்லும் காட்சி. தப்சி வீட்டில் சாப்பிட்டு முடித்து விட்டு கை கழுவும் போது " பிரியாணி பண்ணிருக்கலாம்" என்றும் வேறு ஏதேதோ பேசியவாறும் இருக்கும் தனுஷ் திடீரென " ஐ யாம் லவ் யூ " என்பதுடன் அந்த காட்சி முடிந்து விடும். அடுத்த காட்சியில் அதற்கு தப்சி பெரிய குரலில் அழுகிற மாதிரி காட்டுவார்கள். தப்சி பாட்டுக்கு அழுது கொண்டிருக்க நானோ, " ஐ யாம் லவ் யூ " வில் வெளி வராமால் சிரித்து கொண்டே இருந்தேன்..

போலவே தனுஷும் அவர் நண்பரும் " கம் டு  ஹோம்" (Come to home) என்பதற்கு அர்த்தம் புரியாமல் அடிக்கும் லூட்டி..
 
தனுஷ் " யாத்தே யாத்தே" பாட்டிலும், " ஒத்த சொல்லால" பாட்டிலும் போடும் ஆட்டம்.. அடடா அட்டகாசம்.! இதற்கும் மறுபடி வெற்றி மாறனை தான் பாராட்ட வேண்டி உள்ளது. வழக்கமான தமிழ் சினிமாவில் டான்ஸ் என்றால் பத்து பேர் ஆடினாலும் அனைவரும் ஒரே மாதிரி steps ஆடுவார்கள். ஆனால் இந்த இரு பாட்டுக்கும் தனுஷ் ஆடுவது சினிமா டான்ஸ் அல்ல. நம் தெருக்களில் செல்லும் கல்யாண அல்லது மரண ஊர்வலத்தில் ஆடும் இளைஞன் எப்படி ஆடுவானோ அது போல் தான் இருந்தது அந்த நடனம். குறிப்பாய் " ஒத்த சொல்லால" பாட்டு முழுவதும் கைலியுடன் போடும் ஆட்டம்.. கைலி அணிந்த  காலத்திற்கு என்னை கொண்டு சென்றது.(இப்போல்லாம்  எங்கே  கைலி? எல்லாம் ஷார்ட்ஸ் ஆகி போனது)

அம்மா மிக வருத்தமாய் ஏதேதோ புலம்ப, " ஆத்து ஆத்துன்னு ஆத்தாதம்மா; ரீல் அந்துர போகுது"  என சொல்லும் தனுஷ்.. இன்றைக்கும் பெற்றோர் புலம்பும் போது கிண்டல் செய்யும் இளைஞர்களை தான் கண் முன் கொண்டு வருகிறார்.

தனுஷுக்கு அடுத்து என்னை பெரிதும் கவர்ந்த  & சிரிக்க வைத்த கேரக்டர் படத்தில் அரை நிமிடம் கூட வரவில்லை. அது வில்லன் ரத்னவேலு மனைவி பாத்திரம்.  வில்லன் ரத்னவேலு அம்மா உடம்பு முடியாமல் இறக்க போகும் நிலையில் உள்ளதாக படம் முழுக்க காட்டுவார்கள் (கடைசி வரை அவர் இறக்கலை.. ) ஒரு காட்சியில் உடம்பு முடியாத அந்த பாட்டியை வீட்டுக்கு வந்து டாக்டர் ஒருவர் பார்ப்பார். பார்த்து முடித்து விட்டு பேசி கொண்டிருக்கும் போது வில்லன் மனைவி அவரிடம் ஆர்வத்துடன் கேட்பார்.. " சொந்த காரங்களுக்கு சொல்லி  விட்டுறலாமா  டாக்டரூ??" இந்த படத்தில் அவர் வந்த ஒரே காட்சியும், பேசிய ஒரே வசனமும் அவ்வளவு தான்.. ஆனால் ரொம்ப நாளானுலும் மறக்க முடியாத கேரக்டர். மாமியார் இறக்க போகிறார் என முந்தானையை பிடித்தவாறே அழுகிற பாணியில் உள்ளவர் " சொந்த காரங்களுக்கு சொல்லி விட்டுறலாமா டாக்டரூ??" என ஆர்வத்துடன் கேட்பது அந்த கேரக்டரை பற்றி அழகாய் சொல்லி விடுகிறது.

அடுத்து சேவல் சண்டையின் உச்சத்தின் போது அழுகிற சிறுவன் முகம்.. எவ்வளவு தத்ரூபம்!! தனுஷ் சேவல் தோற்று விடுமோ என்கிற பதட்டம் அவன் அழுகை மூலம் பார்ப்பவர்களை எளிதாக அடைய வைத்திருந்தார் இயக்குனர்.


பேட்டை காரன் பாத்திரம்.. மிக அற்புதமான படைப்பு. உளவியல் ரீதியில் நம்மை யோசிக்க வைக்கும் படி பாத்திரம் இருந்தாலும் அவர் பேசும் ஒவ்வொரு முறையும் ராதா ரவியின் குரல் என்பது நமக்கு உறுத்துகிறது. ராதா ரவி போல் நன்கு பாபுலர் ஆகாதவரையாவது பேச வைத்திருக்கலாம். எனக்கு தெரிந்து இயக்குனர் சறுக்கிய இடங்களுள் இது ஒன்று. மேலும் செயபாலன் பார்ப்பதற்கு வெயில் படத்தில் பசுபதி மற்றும்  பரத்திற்கு தந்தையாக வந்தவர் போலவே இருந்தார். முன் பக்க முடி குறைவு, வெள்ளை மீசை, கிருதா, பருமன், சட்டை, வேஷ்டி என அனைத்துமே வெயில் படத்து தந்தை போலவே இருந்தது..

தப்சி பாத்திரம் மற்றொரு சறுக்கல். சிறு சிறு பாத்திரங்கள் கூட பார்த்து பார்த்து செய்த இயக்குனர் ஹீரோயினுக்கு ன் அப்படி ஒரு கேரிகேச்சர் போல் பாத்திரம் வைக்கணும் என புரியலை. அந்த கேரக்டரே  தேவையில்லை என்று  சொல்ல வில்லை. அந்த கேரக்டர் இல்லா விடில் படம் டாக்குமென்டரி போல் ஆவதற்கான ஆபத்துகள் அதிகம். அந்த பாத்திரத்தில் Depth & detailing இருந்திருக்கலாம்.

கிஷோர் குறுகிய காலத்தில் தமிழில் ஒரு அற்புதமான நடிகராய் உருவெடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் மச்சம் வைத்தால் அடையாளம் தெரியாமல் போவது போல் காட்டுவார்கள். இந்த படத்தில் கிஷோர் வித்யாசமான தலை முடி வைத்ததால் நமக்கு கிஷோர் என்றே மனதில் பதிய வில்லை. கிஷோர் தாண்டி அந்த கேரக்டர் பதிகிறது. நிறைய shades உள்ள கேரக்டர். இதற்கு கிஷோர் மிக சிறந்த தேர்வு..

தனுஷின் நண்பனாக வருகிற ஊளை.. நடு பல்லில் உள்ள ஓட்டை தெரிகிற மாதிரி சிரிக்கிற அந்த வெள்ளந்தி சிரிப்பும் பாத்திரமும் கச்சிதம்.

அயூப் பாத்திரம் கூட சிறிது என்றாலும் மிக அழகான கேரக்டர். " ரெண்டு கிளாஸ் தண்ணி வாங்கி குடுத்துட்டு இப்படி கேக்குறீயே; அவர் சோறு எவ்ளோ நாள் சாப்பிட்டுருக்கோம்" என செண்டிமண்டலாய் பேசுபவர்... இறந்த பின்னும் , கதையில் ரொம்ப நேரம் அவரை பற்றி பேசவும் நினைக்கவும் (சேவல் சண்டை) வைக்கிறார்கள்.

இறுதியாய்: இந்த பாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர் வெற்றி மாறன். அசத்தி இருக்கிறார் மனிதர்.  பாடல்களை தனியே வைக்காமல் கதையுடன் நகர்த்தி செல்வது, பேட்டை காரன் பற்றி அனைத்தும்  வெளிப்படையாய் சொல்லாமல் பார்வையாளர்களை யோசித்து புரிந்து கொள்ள வைப்பது என பல விஷயங்களுக்காக பாராட்டலாம். இப்படி ஓர் வித்யாசமான கதை களம் தந்தமைக்கு தான் முக்கியமாய் பாராட்ட வேண்டும். இடைவேளைக்கு முன் உள்ள அந்த சேவல் சண்டை & அதை சுற்றி அமைக்கப்பட்ட காட்சிகள்  அட்டகாசம்.  இடைவேளைக்கு பின் சேவல் சண்டை இல்லையே என நம்மை ஏங்க வைத்தது இயக்குனரின் வெற்றி. புது இயக்குனர்களில் நிறைய நம்பிக்கை தரும்  விதத்தில்  உள்ளார். வாழ்த்துகள் வெற்றி மாறன். உங்ககிட்டேயிருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.

23 comments:

  1. விமரிசனம் சுவையாக இருந்தது.

    ReplyDelete
  2. விமரிசனம் சுவையாக இருந்தது.

    ReplyDelete
  3. பாத்திரப் படைப்புகளை முன்னிறுத்தி அலசியிருக்கும் விமர்சனம் நன்று.

    //இணையத்தில் ஒரு வாரம் கழித்து விமர்சனம் எழுதுவது இடைவேளைக்கு பின் சினிமாவுக்கு போவது போல.//

    :))!

    // இருந்தும் ஒரு நல்ல படம் பார்த்ததை பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்த பதிவு...//

    நல்ல விஷயங்களைப் பதிய தாமதம் என்பது தடையாக இருக்க வேண்டியதில்லை:)!

    ReplyDelete
  4. "come to home" அத்தண்டி கெட்ட வார்த்தையா மாப்ள என தனுஷ் ஃபீல் பண்ணும்போது சூப்பராக இருக்கும்.

    ReplyDelete
  5. கதாபாத்திரங்களை பற்றிய நல்லதொரு விமர்சனம்.

    ReplyDelete
  6. நான் இந்தப் படம் இதுவரை பார்க்கவில்லை.... வசனத்தையும் கேட்க வில்லை.
    நீங்கள் சொல்லியது "ஐ ஆம் லவ் யு".
    இது தவறான ஆங்கில வாக்கியம் ஆகும். இந்த வசனம் சினிமாவில் உண்மையில் இருப்பின் (காமெடி டிராக்கில் இருந்தாலும்..), பைத்தியக் காரத் தனமாக இருக்கிறது. அடுத்தவன் பாஷைய நாம கொலை செய்யலாமா ? இதே தமிழ அடுத்த மொழிப் படத்துல தப்பா பேசினா நமக்கு கடுப்பு வருதா இல்லியா ?

    நல்ல வேளை.. நா சினிமா விமர்சனம் எழுறது இல்லை..(எவன் படிப்பாங்குறது வேற விஷயம்.. அவ்வ்வ்வவ்வ்வ்வ்)

    ReplyDelete
  7. //இதே தமிழ அடுத்த மொழிப் படத்துல தப்பா பேசினா நமக்கு கடுப்பு வருதா இல்லியா ?
    //

    தமிழ் படங்களிலேயே தவறாக பேசினால் கோபப் படுவதில்லை.

    ==========================

    அந்த வசனத்தில் மொழியைப் பார்ப்பதைவிட அங்கு கொப்பளித்துவரும் உணர்வுகளைப் பாருங்கள் தல

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்...ஆடுகளம் ஒரு வித்யாசமான, எதார்த்தமான படம்...
    கமர்சியல் படங்களைப் பார்த்து சலித்துப் போனவர்களுக்கு இது ஒரு சர்பிரைஸ்..

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  10. நன்றி ஜனா சார்; தமிழ் மணம் & தமிழிஷில் இணைப்பதற்கு முன் வாசித்து விட்டீர்கள் (இணைக்க மறந்து, பின் இணைத்தேன்)
    ***
    நன்றி ராமலட்சுமி. முடிஞ்சா படம் பாருங்க
    **
    ஆம் நன்றி வித்யா; "மீட் மீ அட் ஹோம்" என எழுதியிருந்தேன். நீங்க எழுதியது பார்த்துட்டு தான் " கம் டு மை ஹோம்" என மாற்றினேன்.
    **
    கோவை2தில்லி : நன்றி மேடம்
    **

    ReplyDelete
  11. மாதவன்: காமெடி எனும் போது லாஜிக் பார்க்க கூடாது; லாஜிக் பார்த்தா சிரிக்கவே முடியாது நன்றி
    **
    வீராங்கன்: மிக்க நன்றி
    **
    சமுத்ரா : முதல் வருகையோ? நன்றி
    **
    நன்றி சித்ரா
    **

    ReplyDelete
  12. வணக்கம் தல, எனக்கும் கொஞ்சம் அவசரப்பட்டு பதிவு போட்டுட்டோமோன்னு தொணுற அளவுக்கு படத்துல ஏராளமான விஷயங்கள் இருக்கு... ஒவ்வொரு கதாப்பத்திரங்களும் அவற்றில் இயல்புநிலையிலிருந்து மீளாமலேயே படம் நெடுக வருகிறது, திருப்தியாக இருக்கிறது. இன்னும் நிறைய இருக்கு படத்துல, சொல்லிகிட்டே இருக்கலாம். வெற்றியின் அடுத்தபடைப்பிற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  13. ராதாரவியின் பின்னணிக்குரலும்,கிஷோருக்கு சமுத்திரக்கனியின் குரலும், நெருடலாக உள்ளது .

    ReplyDelete
  14. நான் அதிகம் சினிமா பார்ப்பதில்லை. இருந்த போதும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சொல்வதிலிருந்து 'ஆடுகளம்' நல்ல படம் என்பது புரிகிறது. அதனால்தான், நீங்களும் விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்.கதையைத் தொடமால் விமர்சனம்.பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. Anonymous5:11:00 PM

    படத்தைப் பற்றிய உங்க விமர்சனம் அழகு அண்ணே! படம் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு :)

    ReplyDelete
  16. ஆடுகளம் .. அசத்தல் களம் ...

    ReplyDelete
  17. "தனுஷின் நண்பனாக வருகிற ஊளை.. நடு பல்லில் உள்ள ஓட்டை தெரிகிற மாதிரி சிரிக்கிற அந்த வெள்ளந்தி சிரிப்பும் பாத்திரமும் கச்சிதம்."

    ' ஊளை'யாக நடித்தவர் பெயர் முருகதாஸ் இவர் இதற்கு முன் விஜய்யுடன் கில்லியில் 'ஆதிவாசியாக (அப் படத்தில் தலை முடி அதிகமாக வைத்திருப்பார்) கபடி விளையாடும் நண்பராக நடித்து இருப்பார். இது மட்டும் இன்றி பல படங்களிலும் நடித்துள்ளார் ஆனால் இந்த ஆடுகளத்தில்தான் அவருக்கு படம் முழுதும் வருவது போல் காட்சி அமைந்துள்ளது.

    பி.கு இவர் எனது நண்பர் :-)

    நன்றி மோகன் சார்.

    ReplyDelete
  18. முதலில் ட்ரைலர் பார்த்தபோது படம் படு வயலன்ட் ஆக இருக்குமோ என பார்க்கவில்லை.

    தற்போது உங்கள் விமர்சனம் படித்த பிறகு அவசியம் படத்தை பார்க்கவேண்டும் என தோன்றுகிறது. நன்றி.

    ReplyDelete
  19. அருமை அருமை...வித்தியாசமான விசயங்களை பதிவு செய்து இருக்கீக சார்.நன்றி.

    ReplyDelete
  20. நல்ல படத்துக்கு நல்லவிமர்சனம் எழுதிய நல்ல உள்ளத்துக்கு நன்றி.வசூலில் இந்தப்படத்துக்கு தமிழ்மக்கள் மூன்றாவது இடம்தான் கொடுத்திருக்கிறார்கள்.இது வருத்தத்திற்க்குறிய செய்தி.

    ReplyDelete
  21. முரளி: ஆமாம் படத்துல ஏராளமான விஷயங்கள் இருக்கு. நன்றி
    **
    மைதீன்: கிஷோருக்கு பின்னணி குரல் என்பது நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிந்தது !! நன்றி
    **
    நன்றி அமைதி அப்பா.
    **
    பாலாஜி சரவணா : நன்றி
    **
    அட KRP செந்தில்.. வாங்க நன்றி
    **

    ReplyDelete
  22. புதுவை சிவா. மகிழ்ச்சி. தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க (கில்லியில் வந்தவரா இவர்! நிச்சயமா நீங்க சொல்லாட்டி தெரிஞ்சிருக்காது) நன்றி
    **
    ஆதி மனிதன், அவசியம் பாருங்க
    **
    நன்றி மரா
    **
    உலக சினிமா ரசிகன். அப்படியா? மூன்றாம் இடமா? ஆச்சரியமா இருக்கு. நன்றி

    ReplyDelete
  23. Neenga Pugalndu solliyirukkum ella visayathukkum National award kidachirukku ..........

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...