Tuesday, February 28, 2012

4 பதிவர்களுக்கு விருது + பிடித்த 7 விஷயங்கள்

பதிவர் கோவை2தில்லி அவர்கள் "Versatile Blogger" விருதை அளித்துள்ளார். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் மேடம் ! இவ்விருது பெறுபவர்கள் தங்களுக்கு பிடித்த ஏழு விஷயங்களை குறிப்பிடுவதோடு, ,மேலும் ஐந்து பேருக்கு விருதை பகிர வேண்டும் என்பது இத்தொடர் பதிவை துவக்கியவர் (" யாருப்பா அது?") நிர்ணயித்த விதி.

முதலில் பிடித்த ஏழு விஷயங்களை பார்ப்போமா?

1 . சிறு குழந்தைகளுடன் விளையாடுதல், அவர்களுடன் நேரம் செலவழித்தல்

நண்பர்களின் குழந்தைகள்.. போட்டோவில் ஒவ்வொருவரும் செய்யும் லூட்டியை பாருங்கள் ! 

எங்கள் வீட்டில் கடைசி குழந்தையாக பிறந்ததால், சிறு வயதில் நிறைய கொஞ்சியும், சற்று வளர்ந்த பின், அனைவரிடமும் ஏகமாய் அடியும் வாங்கி வளர்ந்தவன். ஆனால் நான் அன்பு காட்டவும், அடிக்கவும் (!!) ஒரு தம்பி அல்லது தங்கை இல்லாத ஏக்கம் சின்ன வயதில் நிறைய உண்டு. இதனால் சிறு குழந்தைகளை பார்ப்பது, பேசுவது அப்போதிருந்தே துவங்கியது.

வளர்ந்த பின், வாழ்வின் சுமைகள் பல சேர சேர, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிக சிறந்த Stress relief-ஆக உள்ளது. அக்கம் பக்கத்திலும், நண்பர் இல்லம் சென்றாலும், பயணங்கள், சூப்பர் மார்கெட் என எங்கு போனாலும் குழந்தைகளை பார்த்தால் மிக ரசிப்பேன்.

ஏதேனும் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, அருகில் யார் கையிலாவது இருக்கும் சிறு குழந்தையின் கால் நம் மீது படும். குழந்தையை வைத்திருப்பவர் நம்மிடம் "சாரி" கேட்பார்கள். " பரவாயில்லைங்க" என வாய் சொன்னாலும், மறைந்த நண்பன் லட்சுமணனின் கவிதையை மனம் சொல்லும்

பேருந்து பயணத்தில்
முன் பின் தெரியாத
யாரோ ஒருவரின்
தோளில் இருக்கும்
குழந்தையின் கால்கள்
என் மீது படும் படி
ஆசீர்வதிக்க படுவேனாக !

2. கிரிக்கெட்

என் வாழ்க்கை பாதையை மாற்றி போட்டதில் கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்குண்டு. + 2 படிக்கும் போது கிரிக்கெட் பார்த்தே சீரழிந்தேன். இஞ்சினியர் ஆகாமல் போனதுக்கு கிரிக்கெட் வெறி ஒரு காரணம். ஆயினும் " ஆள் இஸ் வெல்". எனக்கு பிடித்த துறைக்கு தான் பிற்பாடு வந்தேன்.

கிரிக்கெட்டுக்காக டிவி முன் மிக அதிக நேரம் செலவிடுவது இப்போது இல்லை. ஆயினும் எந்த மேட்சையும் தொடர்ந்து பாலோ செய்யும் வழக்கும் உண்டு. நான் வேலை செய்யும் நிறுவனம் முழுதுமே ( CEO முதல்) கிரிக்கெட் பிரியர்கள் தான். கிரிக்கெட் பற்றி அலுவலகத்தில் பேசுவது மிக சாதாரணமான ஒன்று. இந்தியா நன்கு ஆடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. (அது அரிதாக தான் நடக்கிறது)

3. பாடல்கள்
பாட்டு கேட்டு கொண்டே வேலை செய்வது பழக்கமாகி விட்டது. இதனை எழுதும் போது கூட கணினியில் " பிறை தேடும் இரவிலே" ஒலித்து கொண்டிருக்கிறது. கல்லூரியில் படிக்கிற காலம் முதல் பாட்டு கேட்டு கொண்டே தான் படிப்பேன். ( கல்லூரியில் தொடர்ந்து முதல் ரேங்க் !) அலுவலகமோ/ வீடோ, கணினியில் இருக்கும் போது அல்லது வீட்டு வேலை செய்யும் போது மெலிதாய் பாட்டு ஒலிக்கும். மிக நீண்ட காலம் இளைய ராஜா ரசிகன். இப்போது A.R ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் இருவரையும் கூட மிக பிடிக்கிறது . எந்த பாடல் யார் பாடியது, யார் எழுதியது என சந்தேகம் அல்லது சண்டை வந்தால், நண்பர்கள் எனக்கு தொலை பேசுவது முன்பெல்லாம் வழக்கம். இணையத்திலேயே அந்த பதில்கள் கிடைத்து விடும் என்றாலும் " வா பொன்மயிலே ' பாட்டு என்ன படம்டா?" என்கிற கேள்வியுடன் போன் செய்யும் நண்பர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

4. ப்ளாக்
இதை சொல்லாம இருக்க முடியாது. புது பெண்டாட்டி மோகம் மாதிரி இருக்கு. எப்போ சரியாகும்னு தெரியலை. கூடிய சீக்கிரம் சரியாகி, இந்த லிஸ்டை விட்டு போனாலும் ஆச்சரிய பட முடியாது !

5. பயணம்

குற்றாலத்தில் நண்பர்களுடன்
வெவ்வேறு ஊர்களுக்கு செல்வது மிக பிடித்தமான விஷயம். ப்ளாக் எழுதும் முன்பே இது உண்டு எனினும், பயண அனுபவங்களை இங்கே பகிர்வது மேலும் சுவாரஸ்யம் தருகிறது. ப்ளாகில் எழுவதால் ஒவ்வொரு விஷயமும் என்ன என்று ஆர்வமாய் விசாரிக்கிறேன். இப்போதெல்லாம் பயண கட்டுரை என்னுடன் சேர்ந்து ஹவுஸ் பாசும் எழுதுகிறார் என்று தான் சொல்ல வேண்டும். காஞ்சிபுரம் கட்டுரையில் நிறைய குறித்து வைத்து கொண்டு சொன்னது அவர் தான் !

தென் இந்தியா தான் நிறைய சுத்திருக்கேன். இந்தியாவிலேயே சுத்த வேண்டிய ஊர் நிறைய இருக்கு. சுத்துவேன் !

6. நண்பர்கள்

எல்லாருக்கும் தான் நண்பர்கள் பிடிக்கும் இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ?

ஏற்காட்டில் 2008- சந்திப்பில் வழக்கறிஞர் நண்பர்கள்
 எனக்கு உடன் பிறந்தோர் அவர்கள் குழந்தைகள் தவிர மற்ற சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி. இதனை ஈடுகட்டும் விதமாய் சிறு வயது முதல் நண்பர்களே இருந்து வருகிறார்கள். என் மனைவி அடிக்கடி சொல்லுவார்: " உங்களுக்கு -Friends மட்டும் இருந்தா போதும். சொந்த காரங்களே வேண்டாம்; நம்ம வீட்டு விசேஷதுக்காவது அவங்க வர வேண்டாமா ? "

இந்த விஷயத்தில் மேடம் என்ன தான் சொன்னாலும் " என் பிரண்டை போல யாரு மச்சான்" என்பதே நம்ம பாலிசி ஆக உள்ளது.

7. நல்ல செயல்கள்

அடையார் விழி இழந்தோர் பள்ளியில் விழா
அன்ன தானம், ஏழை குழந்தைகள் படிப்பிற்கு பரிசுகள்,  அவர்கள் Career குறித்து முடிவெடுக்கவும் உதவுவது, அரசு பள்ளிக்கு உதவி, விழி இழந்தோர் பள்ளியில் வருடாந்திர போட்டிகள் என நல்ல செயல்களில் ஈடுபடுவது தான் என்னை நானே மதிக்க உதவுகிறது. (எங்கள் நற் செயல்கள் குறித்து அறிய அந்தந்த வார்த்தைகளை க்ளிக் செய்தால், அந்தந்த பதிவுக்கு இட்டு செல்லும்!) இத்தகைய செயல்களில் கிடைக்கும் மகிழ்ச்சியும் , திருப்தியும் "நாம் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது" என்கிற உணர்வை தருகிறது.

*********
Versatile Blogger விருதை யாருக்கு பகிர்ந்தளிக்கலாம்? ஏற்கனவே நான் ரொம்ப லேட். பலருக்கும் இவ்விருது கிடைத்து விட்டது என்றே நினைக்கிறேன்.

நன்றாக பதிவுகள் எழுதும், எப்போதும் என்னை ஆதரிக்கும் அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாகராஜ், ராம லட்சுமி, ஹுசைனம்மா, வித்யா, ராம்வி, ஆதி மனிதன், ரிஷபன், ரத்னவேல் நடராஜன் போன்றோருக்கு இவ்விருது பெற அனைத்து தகுதி இருந்தும் இம்முறை அவர்களுக்கு தர வில்லை. வேண்டியவர் என்பதால் விருது தந்ததாய் யாரும் சொல்ல கூடாது பாருங்கள் ! இதுவரை ஒரு முறையும் நான் சந்தித்திராத, போனிலோ, மெயிலிலோ பேசியிராத பதிவர்களுக்கு தான் இம்முறை தர நினைத்தேன். நண்பர்கள் தவறாய் எண்ண வேண்டாம் !

வீடுதிரும்பல் மூலம் Versatile Blogger விருது பெறுவோர்:

                           

1. கோகுல் 

ஜனரஞ்சகமாக எழுதுபவர். நமக்கு வானவில் போல இவருக்கு
பல சரக்கு கடை. "தானே" புயல் நேரத்தில் கடலூர் மக்களுக்கு உதவும் முயற்சிகள் எடுத்தது இவர் சமூக அக்கறையை காட்டியது .

2. கெக்கே பிக்குணி 

"கெக்கே பிக்கே என பேசுவேன் நான் " என பெயர் காரணம் சொல்லும் இவர் ஒரு பெண் பதிவர். 2006 முதல் எழுதி வந்தாலும் வருடத்துக்கு பத்து, பன்னிரண்டு பதிவுகள் தான் எழுதுகிறார். தன் தந்தை குறித்த இவரது பதிவு நெகிழ வைக்கிறது !

3. கோவை நேரம் 

மருதமலை, தஞ்சை, அண்ணா நகர் டவர் என அவ்வப்போது சுவாரஸ்ய இடங்கள் குறித்து பகிர்கிறார். சமீபமாய் பின்னூட்டங்களில் தென்பட்டாலும் தற்போது பதிவுகள் அதிகம் எழுத வில்லை. இவ்விருது அவரை தொடர்ந்து எழுத ஊக்கவிக்கும் என நம்புகிறேன்.

4. நித்திலம் - சிப்பிக்குள் முத்து  

ஆன்மிகம், வரலாறு என பல்வேறு தளங்களில் இயங்கும் பெண்மணி. வல்லமை மின்னிதழின் எடிட்டர்களில் ஒருவர். சமீபத்தில் இவர் எழுதிய சித்தார்த்தா பள்ளி மாணவர்கள் குறித்த கட்டுரை வாசித்து பாருங்கள்.

****
நண்பர்களே நீங்களும் இவர்களை வாழ்த்தலாம். விருது பெற்றோர் பிற பதிவர்களுக்கும் விருதை பகிர்ந்து கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

45 comments:

  1. உங்களுக்கு பிடித்த விஷயங்களை மிக அழகாக தொகுத்து கொடுத்துள்ளீங்க மோகன்.

    //அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாகராஜ், ராம லட்சுமி, ஹுசைனம்மா, வித்யா, ராம்வி, ஆதி மனிதன், ரிஷபன் போன்றோருக்கு இவ்விருது பெற அனைத்து தகுதி இருந்தும் இம்முறை அவர்களுக்கு தர வில்லை. வேண்டியவர் என்பதால் விருது தந்ததாய் யாரும் சொல்ல கூடாது பாருங்கள் !//

    கவலை படாதீங்க.ஏற்கனவே நான் விருது வாங்கியாச்சு.

    ReplyDelete
  2. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //+ 2 படிக்கும் போது கிரிக்கெட் பார்த்தே சீரழிந்தேன். //

    சேம் ப்ளட் :))

    //சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி//

    அகெய்ன் சேம் ப்ளட் :))

    உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் மோகன் :)

    ReplyDelete
  4. விருதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்....

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அன்பின் திரு மோகன் குமார்,

    தங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி. மிக ஊக்கமளிக்கிறது தங்கள் விருது. பதிவர் கோவை2தில்லி அவர்களுக்கும் நன்றி. இது ஒரு நல்ல முயற்சி.. ஆம், என்னைப்பற்றி நானே யோசிக்க வேண்டிய தருணம் அளித்துள்ளீர்கள். எனக்குப் பிடித்த 7 விசயம்... இவ்வளவு நாட்கள் இப்படிச் சிந்திக்காமலே கடத்தியிருக்கிறேன்... விருதைப் பகிரச் செய்யும் மனப்பக்குவம், நம் நட்பு வட்டத்தைப் பெரிதாக்கும் முயற்சி.. ஆகா நல்ல சிந்தனை அல்லவா.. அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பர்களே. என்னையும் இந்த ஜோதியில் ஐக்கியமாகச் செய்த அன்பு நண்பர் மோகன் குமாருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்

    பவள சங்கரி.

    ReplyDelete
  6. பிடித்த ஏழினையும் படங்களுடன் பகிர்ந்திருப்பது அருமை. குழந்தைகள் கலக்குகிறார்கள்:)!

    விருது பெற்றிருக்கும் ஐவருக்கும் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. புதிய தளங்களையும் வித்தியாசமான பதிவர்களையும் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி.

    ReplyDelete
  8. பிடித்த ஏழு விஷயங்களை அருமையாக, விரிவாக அளித்தது நன்றாக இருக்கிறது மோகன்....

    பிளாக்கர் கமெண்ட் பக்கம் திடீரென மாறி இருக்கிறது பல நண்பர்களின் பக்கங்களில் - உங்களது உட்பட....

    நீங்கள் எழுதும் பதில் என்ன என தெரிந்து கொள்ள மறுபடியும் வரவேண்டும் போல...:)

    ReplyDelete
  9. >>எனக்கு உடன் பிறந்தோர் அவர்கள் குழந்தைகள் தவிர மற்ற சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி

    இதற்கு என்ன காரணம் என்றால்...
    You can choose your friends but not your relatives...

    ஆனால் நல்லது கெட்டதுக்கு உறவினர்கள் அவசியம் தேவை... குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை :-)

    Versatile Blogger-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. விருதிற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. விருதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் போன்ற பதிவுலக அனுபவசாலிகளிடமிருந்து இது போன்ற அங்கீகாரங்கள் ஒரு உற்சாக உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.பிளாக் எழுத வந்ததுக்கபறம் நீங்க சொல்லுற மாதிரி போற வர்ற இடத்திலெல்லாம் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்து விட்டது.

    ReplyDelete
  12. நித்திலம்,சமுத்ரா போன்றவர்கள் எனக்கு புதியவர்கள் அவர்களுக்கும் இணைந்து விருது பெரும் கோவை நேரம்,கெக்கே பிக்குணி அவர்களுக்கும் வாழ்த்துகள்.
    நேரமிருக்கும் போது நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  13. Neengal virudhu petratharkum, ungalidamirundhu virudhu vaangiyavarkalukkum vaazhthukkal

    ReplyDelete
  14. விருது பெற்ற உங்களுக்கும் அதை தற்போது பெற்றுக்கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    //நன்றாக பதிவுகள் எழுதும், எப்போதும் என்னை ஆதரிக்கும் அமைதி அப்பா, ரகு, வெங்கட் நாகராஜ், ராம லட்சுமி, ஹுசைனம்மா, வித்யா, ராம்வி, ஆதி மனிதன், ரிஷபன், ரத்னவேல் நடராஜன் போன்றோருக்கு இவ்விருது பெற அனைத்து தகுதி இருந்தும் இம்முறை அவர்களுக்கு தர வில்லை//

    இது என்னவோ வஞ்சப் புகழ்ச்சி அணி போல் தெரிகிறது எனக்கு.

    ReplyDelete
  15. நீங்கள் இந்த விருதைப்பெற்றமைக்கும், பெற்றதை வித்தியாசமாகப் பகிர நினைத்தமைக்கும் வாழ்த்துகள்!

    நீங்க உங்க பதிவுகளை நெஞ்சிலிருந்து எழுதுகிறீர்கள். எனவே, இந்த விருதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

    எனக்கு என் ப்ரைவசி முக்கியம் என்பதால் பல விஷயங்களை மாற்றி எழுதுகிறேன், அப்போ அந்த டச் போயிடுது என்பதாலும் நான் எழுதுவது குறைந்திருக்கலாம். சொன்னாப்ல, விரைவில் பிடித்த விஷயங்களை எழுதுகிறேன். மீண்டும் நன்றி!

    ReplyDelete
  16. விருது பெற்ற அனைவருக்கும் என் இனிய பாராட்டுகள்.

    உங்களுக்குப் புதுப்பொண்டாட்டி மோகம். எனக்கோ பழைய புருஷன் மோகம். எட்டாவது வருசம்:-)))

    மோகம் தீர்ந்தால்...... கவலைப்படுவேன்........

    ReplyDelete
  17. பேருந்து பயணத்தில்
    முன் பின் தெரியாத
    யாரோ ஒருவரின்
    தோளில் இருக்கும்
    குழந்தையின் கால்கள்
    என் மீது படும் படி
    ஆசீர்வதிக்க படுவேனாக !

    அருமையாக சிறப்பான கவிதை மனம் மகிழ்விக்கிறது...

    ReplyDelete
  18. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  19. //+ 2 படிக்கும் போது கிரிக்கெட் பார்த்தே சீரழிந்தேன். //

    ஹூம்... இந்த நண்பன், தோனி, படமெல்லாம் அப்பவே வந்திருந்தா, தமிழ்நாட்டுக்கு இன்னொரு ”ஸ்ரீகாந்த்” கிடைச்சிருந்திருப்பார், இல்லியா? :-)))))

    //வேண்டியவர் என்பதால் விருது தந்ததாய் யாரும் சொல்ல கூடாது பாருங்கள் !//
    அப்ப இப்ப நீங்க விருது கொடுத்திருக்கவங்கல்லாம் வேண்டாதவய்ங்களா? (நாங்களும் பத்தவெப்போம்ல!! ) ;-))))))))

    //சொந்தக்காரர்கள் என்றால் அலர்ஜி//
    நல்ல நட்புகள் அமைந்த அதிர்ஷ்டத்தால் இப்படிச் சொல்கீறீர்கள். எதுவானாலும், உறவுகளும் பரஸ்பரம் மதிக்கப்படவேண்டியவையே. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.

    ReplyDelete
  20. திரு. சமுத்ராவிற்கு தந்த Versatile Blogger விருதை எடுத்து விட்டேன். இது பற்றி அவர் கேவலமாக எழுதியமையால்.

    http://www.samudrasukhi.com/2012/02/56.html

    அவர் ப்ளாகில் நான் இட்ட பின்னூட்டம் இது:

    //உங்கள் ப்ளாக்குக்கு தவறாது வந்து பின்னூட்டம் இடுகிறார் என்றால் அவருக்கு விருது கொடுத்து விடுவதா?//

    நான் விருது கொடுத்த ஐந்து பேரும் அநேகமாய் எனக்கு பின்னூட்டமே இடாதவர்கள். எனக்கு பின்னூட்டம் இட்டவரை ஊக்குவிக்கும் பொருட்டோ, புதிதாய் பின்னூட்டம் போட ஆள் பிடிக்கும் பொருட்டோ நான் இதை வழங்க வில்லை. நிஜமாகவே நன்கு எழுதுபவர் என்று நினைதோருக்கு தான் வழங்கினேன். ..உங்களுக்கும் சேர்த்து.

    உங்களுக்கு ஒரு காபி தருகிறேன். நீங்கள் அதை வேண்டாம் என்று சொல்லி என் முகத்தில் ஊற்றுகிறீர்கள். நல்லது உங்களின் திமிர் புரிகிறது.

    எனில் என் ப்ளாகில் வந்து, பின்னூட்டத்தில் நீங்கள் " Thank You " சொன்னது ஏனோ? உங்களுக்கு நான் மெயிலில் சொன்னதால் என்று சொன்னால் அது பம்மாத்து. நீங்கள் எனக்கு பின்னூட்டமே இடாத போது, என் ப்ளாகை படிக்கிறீர்களா என்றும் தெரியாத நிலையில், உங்களுக்கு விருது தந்ததை நான் சொன்னால் தானே உங்களுக்கு தெரியும். அதனால் மட்டுமே மெயிலில் தெரிய படுத்தினேன்.

    நன்றாக எழுதுவது மட்டும் முக்கியம் இல்லை. நல்ல மனிதராகவும் இருப்பது அவசியம். திமிரும், பிறரை எடுத்தெறிந்து பேசுவதும் எந்த பலனும் தராது.

    இத்தகைய மனிதருக்கு அந்த விருது கொடுத்தது தவறு தான். எடுத்து விடுகிறேன்.

    ReplyDelete
  21. அருமையான பதிவு. நிறைய விஷயங்களில் உங்களது கருத்துக்கள் ஒத்துப் போகின்றன. படிப்பு தவிர - நான் உயர்நிலைப்பள்ளியுடன் சரி.
    உங்கள் எழுத்து நடை, பயணம் செய்பவர்களுக்கு கொடுக்கும் குறிப்புகள் மிகவும் அருமை. திருமதி துளசி கோபால் அவர்களின் பதிவில் இது மாதிரி தான் இருக்கும்.
    என்னை குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி.
    மனப்பூர்வ வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
  22. RAMVI said...

    // உங்களுக்கு பிடித்த விஷயங்களை மிக அழகாக தொகுத்து கொடுத்துள்ளீங்க மோகன்.//

    நன்றி ராம்வி. நீங்கள் சொன்னது மகிழ்ச்சி தருகிறது
    ***
    //கவலை படாதீங்க.ஏற்கனவே நான் விருது வாங்கியாச்சு.//

    பார்த்தேன் வாழ்த்துகள் !

    ReplyDelete
  23. ர‌கு said...

    //சொந்த காரர்கள் என்றால் அலர்ஜி//
    அகெய்ன் சேம் ப்ளட் :))

    **
    ரகு: சொந்த காரர்கள் எப்படி இருந்தாலும், அவர்களையும் மதித்து, பழகணும் என பால ஹனுமா ன் & ஹுசைனம்மா சொல்லிருக்காங்க பாருங்க. அது நம்ம ரெண்டு பேருக்கும் பொருந்தும் !

    ReplyDelete
  24. கோவை2தில்லி said...


    விருதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்....
    **

    இப்படி ஒரு வாய்ப்பு தந்தற்கு நான் தான் நன்றி சொல்லணும். சில புதிய மனிதர்களையும், அவர்களின் வித்தியாச முகங்களையும் இந்த பதிவு எனக்கு அறிமுகம் செய்தது, நன்றி !

    ReplyDelete
  25. நித்திலம் மேடம்,

    தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் பல நேரம் தங்களுக்கு பிடித்தது என்ன என்று கூட யோசிக்காமல் குடும்பத்துக்காக வாழ்கிறார்கள்.

    அவசியம் இந்த பதிவை உங்கள் ப்ளாகில் தொடருங்கள் !

    ReplyDelete
  26. ராமலக்ஷ்மி said...

    பிடித்த ஏழினையும் படங்களுடன் பகிர்ந்திருப்பது அருமை. குழந்தைகள் கலக்குகிறார்கள்:)!

    **

    Professional photographer இடமிருந்து இப்படி பாராட்டு கிடைத்தது சந்தோசம் தருகிறது

    ReplyDelete
  27. ஒரு வாசகன் said...

    புதிய தளங்களையும் வித்தியாசமான பதிவர்களையும் அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி.

    **
    நன்றி வாசகன். இந்தியா ஜெயிச்சது உங்களுக்கு நிறய ஜாலி ஆகிருக்கும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  28. வெங்கட் நாகராஜ் said...


    பிளாக்கர் கமெண்ட் பக்கம் திடீரென மாறி இருக்கிறது பல நண்பர்களின் பக்கங்களில் - உங்களது உட்பட.... நீங்கள் எழுதும் பதில் என்ன என தெரிந்து கொள்ள மறுபடியும் வரவேண்டும் போல...:)

    **

    ரெண்டு முறை வந்தா நமக்கு ஹாப்பி தானே ? :))

    ReplyDelete
  29. பாலஹனுமான் & ஹுசைனம்மா: சொந்த காரர்கள் பற்றி நீங்கள் சொன்னதை நிச்சயம் மனதில் நிறுத்தி கொண்டு, சிறிது சிறிதாக மாற முயற்சிக்கிறேன். Thank you very much for the timely advise !

    ReplyDelete
  30. வித்யா said...

    விருதிற்கு வாழ்த்துகள்...

    **
    நன்றிங்கோ !

    ReplyDelete
  31. கோகுல் said...


    விருதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.உங்கள் போன்ற பதிவுலக அனுபவசாலிகளிடமிருந்து இது போன்ற அங்கீகாரங்கள் ஒரு உற்சாக உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.பிளாக் எழுத வந்ததுக்கபறம் நீங்க சொல்லுற மாதிரி போற வர்ற இடத்திலெல்லாம் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வந்து விட்டது.

    **
    மிக சரியாக சொன்னீர்கள் கோகுல். மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  32. மாதவி: நன்றி மேடம்

    ReplyDelete
  33. ஆதி மனிதன் said...

    //இது என்னவோ வஞ்சப் புகழ்ச்சி அணி போல் தெரிகிறது எனக்கு.//
    ****
    ஆதி: ஏஏஏஏஏன் ??? நல்லா தானே போய் கிட்டு இருக்கு :))

    ReplyDelete
  34. துளசி கோபால் said...


    உங்களுக்குப் புதுப்பொண்டாட்டி மோகம். எனக்கோ பழைய புருஷன் மோகம். எட்டாவது வருசம்:-)))
    மோகம் தீர்ந்தால்...... கவலைப்படுவேன்........

    **

    ஹா ஹா டீச்சர் உங்க கமன்ட் மிக ரசித்தேன் !

    ReplyDelete
  35. ராஜ ராஜேஸ்வரி Madam : நண்பன் இலட்சுமணன் கவிதையை பாராட்டியது மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி !

    ReplyDelete
  36. Anuja Kekkepikkuni said...

    //நீங்க உங்க பதிவுகளை நெஞ்சிலிருந்து எழுதுகிறீர்கள். எனவே, இந்த விருதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி//

    ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களின் இந்த வரிகளை வாசிக்கையில் .

    //எனக்கு என் ப்ரைவசி முக்கியம் என்பதால் பல விஷயங்களை மாற்றி எழுதுகிறேன், அப்போ அந்த டச் போயிடுது என்பதாலும் நான் எழுதுவது குறைந்திருக்கலாம். சொன்னாப்ல, விரைவில் பிடித்த விஷயங்களை எழுதுகிறேன். மீண்டும் நன்றி!//

    இந்த பதிவு எனக்கு பலரையும் பற்றி புரிந்து கொள்ள உதவி செய்துள்ளது நன்றி மேடம் !

    ReplyDelete
  37. ரத்னவேல் ஐயா : தங்கள் வார்த்தைகள் மிக மகிழ்ச்சி தருகிறது நன்றி !

    ReplyDelete
  38. வாழ்த்துக்கள்.
    சுவையானப் பதிவு. ஏற்காடு நண்பர்கள் இப்படிச் சிரிக்கக் காரணம் என்ன? படத்தைப் பார்த்தும் ஏனோ என் முகத்திலும் இளிப்பு. சந்தோசம் தொற்று நோய் தெரியும், இப்படியா?
    கெ.பி நிறைய பரிமாணங்கள் கொண்ட பதிவர். அறிமுகங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  39. ஒவ்வொரு முறை அண்னன் லட்சுமணன் பெயரை படிக்கும்போதும் கண்கள் பனிக்கவே செய்கின்றன....

    …இன்னும் நிழலாடுகிற்து அவர் முகம் அன்பின் வாயிலக.....

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்..

    குழந்தைங்க புகைப்படம் ஜூப்பரா இருக்கு..

    ReplyDelete
  42. அப்பாதுரை said...
    சுவையானப் பதிவு. ஏற்காடு நண்பர்கள் இப்படிச் சிரிக்கக் காரணம் என்ன?

    **
    உங்களை இந்த படம் மகிழ்வித்தது அறிந்து மிக மகிழ்ச்சி அப்பாதுரை.

    நண்பர்கள் யாராவது ஒருவரை கிண்டல் செய்து தான் சிரித்திருப்பார்கள். நான்கு வருடம் ஆனதால் மறந்து விட்டது. எனக்கு மட்டுமல்லாது நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக பிடித்த படம் இது. போட்டோவுக்காக எடுக்காமல், அனைவரும் இயல்பாய் சிரித்து கொண்டிருக்கும் போது எடுத்தது என்பதால்.

    இந்த படத்தை குறிப்பிட்டு நீங்கள் சொன்னது நிஜமாகவே ரொம்ப மகிழ்ச்சி !

    ReplyDelete
  43. maraikkattan said...

    ஒவ்வொரு முறை அண்னன் லட்சுமணன் பெயரை படிக்கும்போதும் கண்கள் பனிக்கவே செய்கின்றன.... …இன்னும் நிழலாடுகிற்து அவர் முகம் அன்பின் வாயிலக.....

    **
    ஆம். லட்சுமணன் போன்ற ஒருவரை பார்ப்பது மிக கடினம்.

    நண்பரே நீங்கள் யார்? லட்சுமணனை உங்களுக்கு எப்படி தெரியும்? முடிந்தால் எனது மெயில் ஐ.டி க்கு (snehamohankumar@yahoo.co.in) பதில் எழுதுங்கள்

    ReplyDelete
  44. அமைதிச்சாரல் said...

    குழந்தைங்க புகைப்படம் ஜூப்பரா இருக்கு..

    **
    மகிழ்ச்சி. நன்றி மேடம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...