Friday, February 25, 2011

வானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்

தற்கொலை தகவல்கள் .. ஏன்?

தமிழ் செய்தி தாள்களில் தினம் தென்படும் விஷயம் தற்கொலை செய்திகள். எதற்கு இதனை அவசியம் வெளியிடுகிறார்கள் என புரியவில்லை. எங்கோ சென்று தற்கொலை செய்து கொண்ட யாரென்றே தெரியாத ஒரு நபர் பற்றி, அவர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி வெளியிடுகிறார்கள் என்றாலாவது அதில் அர்த்தம் உள்ளது. ஊரில் நடக்கும் தற்கொலைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது சில தவறான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கும்.. சற்று வீக்கான மன நிலையில் உள்ளோருக்கு இத்தகைய செய்திகள் மனதின் ஓரத்தில் போய் பதிந்து தொந்தரவு தரும் என்பதோடு, சில நேரம் அவர்களையும் அத்தகைய தவறான முடிவுக்கு யோசிக்க வைக்கும். கொலை போன்ற செய்திகளாவது அவற்றை பார்த்து நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும் என்ற விதத்தில் ஓகே. ஆனால் இத்தகைய தற்கொலை செய்திகளை பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். (நாம் செய்வதை செய்து விடுவோம். அப்புறம் அவர்கள் இஷ்டம்)

மலேசியா வாசுதேவன் மறக்க முடியாத பாடல்கள்

சமீபத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன் பல அற்புத பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியவற்றில் எனக்கு மிக பிடித்த மூன்று பாடல்கள்:

கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
அள்ளித்தந்த பூமி (நண்டு)
வா வா வசந்தமே (புது கவிதை)

இதில் "அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா?" பாடல் ரொம்பவே ஸ்பெஷல்.

சரணத்தில்,

சேவை செய்த காற்றே பேசாயோ? ஷேமங்கள் லாபங்கள் யாதோ?
பள்ளி சென்ற கால பாதைகளே.. பாலங்கள் மாடங்கள் ..ஆஹா.
புரண்டு ஓடும் நதி மகள்.... இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும்.

எஸ்.பி. பி & ஜேசுதாஸ் கோலோச்சிய காலத்தில் மலேஷியா வாசுதேவன் நிறைய சாதித்தது பெரிய விஷயம் தான். நடிகராகவும் பல படங்களில் கலக்கியிருப்பார். We will miss you Malaysia Sir !

அய்யாசாமி

ஒரு முறை அய்யாசாமி மனைவி சமையல் முழுக்க முடிச்சிட்டு " தோசை மட்டும் எல்லாருக்கும்  ஊற்றி, பேக் பண்ணிடுங்க"ன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. மனைவி, குழந்தை, தனக்கு என எல்லாருக்கும் நல்லா தோசை ஊத்தி முடிச்சிட்டுதான் அய்யாசாமி கிளம்பினார். சாயங்காலம் வந்து பார்த்தா, அடுப்பு "சிம்மில்" ஆப் செய்யாமலே இருக்கு. நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ஹவுஸ் பாஸ் செம ரெய்டு விட்ட பிறகு "கல் மேலே இருந்ததால், அடுப்பு ஆப் செய்யாதது தெரியலே" என பம்மினார். இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.

கவனித்த விஷயம்

எங்கள் வீட்டுக்கருகே உள்ள ஒரு ஹோட்டலில் குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு கருவிகள் வெளியில் வைத்துள்ளனர். மேலும் அபூர்வ சகோதரர்கள் கமல் போல உயரம் குறைந்த ஒரு மனிதர் எப்போதும் ஒரு பபூன் உடை அணிந்து நின்று கொண்டு குழந்தைகளை பார்த்து சிரிக்கிறார். அடிக்கடி இங்கு செல்லும் போது நான் கவனித்தது குழந்தைகள் இல்லா விடில், இவர் பெண்களை மட்டும் தான் பார்த்து சிரிக்கிறார். ஆண்களை அதிகம் கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறை இவரை பார்த்து நான் சிரித்தும், பேச முயன்றும் முடியாமல் போக சற்று கஷ்டமாய் இருந்தது. அப்புறம் தான் நினைத்து கொண்டேன்: இவரும் ஒரு ஆண் தானே,. இங்கு தான் பெண்களை பார்க்கவும் சிரிக்கவும் அவருக்கு முடிகிறது!! சில உணர்வுகள் அனைவருக்கும் பொது!

சட்ட சொல் : ப்ரோபேட் (Probate)

ஒருவர் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். அந்த உயில் படி அவரது சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் "ப்ரோபேட்" எனப்படும். அப்படியானால் உயில் மட்டும் எழுதினால் போதாதா என்றால் போதாது. அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திகொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும்.

ரசிக்கும் விஷயம் நீர் வீழ்ச்சி

நீர் வீழ்ச்சியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதில் குளிப்பது அதை விட பெரிய மகிழ்ச்சி. நண்பர்கள் , குடும்பம் என யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும். நீர் வீழ்ச்சியில் பல வேறு ஸ்டைல்களில் குளிக்கலாம். உட்கார்ந்து, படுத்து, உள்ளே போய் கல்லில் சாய்ந்தவாறு (கிட்ட தட்ட தூங்குவது மாதிரி) என பல விதமாய் குளித்து, உடன் வந்தவர்கள் நான் எங்கே என தேடி பிடித்து இழுத்து போகும் வரை வெளியே வர மாட்டேன். சிவப்பான கண்களுடன் குளித்து முடித்து வந்ததும் நல்லா பசிக்கும் பாருங்க.புல் கட்டு கட்டலாம். சாப்பிட்டு முடித்ததும் " அடுத்து எப்ப குளிக்க போகலாம்" என்று ஆரம்பித்து விடுவேன்.. ம்ம் இதை எழுதும் போதே மறுபடி குற்றாலம் போகணும் போல இருக்கு..

21 comments:

  1. //பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன்.//

    நல்ல விசயம் எழுதுங்கள்...

    இதைப்பற்றி பதிவிலும் பதியுங்கள்...

    ReplyDelete
  2. //தற்கொலை தகவல்கள் .. ஏன்?//

    அதே போல் கள்ளக் காதல் - கொலைகளையும் சேர்த்து எழுதிப்போடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.

    ஐயா(அம்மா?) சங்கவி. ரெண்டு நாளா me the first போடலாம்னு பார்த்தா நீங்க முந்தி கொள்கிறீர்களே?

    முதலில் 0 கமெண்ட்ஸ் என்று காண்பிக்கிறது. உள்ளே சென்றால் ஏற்கனவே கமென்ட் உள்ளது. blogspot இல் bug என்று ஒரு பதிவு போடவேண்டும் போலிருக்கு.

    ReplyDelete
  3. இந்த மாதிரி செய்திகள் போடுவதற்கென்று ஏதனும் சென்சார் இருக்கிறதா.


    //இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.//
    :)

    ReplyDelete
  4. கதம்ப மாலையாக, அருமையாக வந்து உள்ளது.
    பி.கு. நியூஸ் என்றாலே ஏனோ நெகடிவ் செய்திகள் தான் முதலிடம் கொடுக்கப்பட்டு வாசிக்கிறார்கள்.

    ReplyDelete
  5. வானவில் அழகு!

    ReplyDelete
  6. // நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ......இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி. //

    ஐயா சாமி.. கேஸ் என்னா விலை விக்குது மறந்திட்டீங்களா ?

    ReplyDelete
  7. நல்ல தொகுப்பு.

    கோடை ஆரம்பிக்கையில் அருவியை நினைவு படுத்தி விட்டீர்களே!

    அய்யா சாமி வெளியில் செல்லும் போது அடுப்பின் அடியில் இருக்கும் சிலிண்டரை மூடுவதை எப்போதும் வழக்கமாகக் கொண்டு விட்டால் பிரச்சனை வராது:)!

    ReplyDelete
  8. பல்சுவை.....
    அருமை மக்கா...

    ReplyDelete
  9. சித்ரா சொல்வதைப் போல தான் நெகடிவ் செய்திகள் தான் அதிகம் விற்கின்றன.

    ReplyDelete
  10. தற்கொலைகள் எல்லாமே சொல்லில் வடிக்க முடியா துன்பங்கள் நடுவே உணர்ச்சிகளின் விளிம்பில் நின்று மயங்கும்போது ஏற்படுவது. ஆனால் இது பொதுவான கருத்துதான். இப்போதெல்லாம் தற்கொலைகள் உப்பு பொறாத காரணங்களுக்க்கெல்லாம் ஏற்படுவது அதிர்ச்சிகளை அளிக்கின்றன‌. உங்கள் கருத்து அதனால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
    மலேஷியா வாசுதேவனின் பாடல்களை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க இயலாது. அவருடைய‌
    'பூங்காறு திரும்புமா' பாடல் சிவாஜி கணேசனுக்கே ஒரு கம்பீரம் கொடுத்தது.
    தோசைகள் சுட்டதும் கல்லை இறக்குவது பெண்களுக்குக்கூட நல்ல யோசனை. இந்த தப்பை நிறைய பெண்கள்கூட செய்கிறார்கள்!!

    ReplyDelete
  11. எல்லா பத்திரிக்கைகளுக்கும் மிக முக்கியமான விஷயம் வியாபாரம்தான் . சமூக அக்கறை லாபம் கொடுக்காதல்லவா...

    மலேஷியா வாசுதேவன் என்றவுடன் சட்டென்று ‘முதல் மரியாதை’தான் நினைவுக்கு வருகிறது. எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள்

    சமீபத்தில் குமுதத்திலோ, விகடனிலோ மிகவும் மனம் நொந்து அவர் அளித்திருந்த பேட்டியை வாசிக்க நேர்ந்தது. லைம்லைட்டில் இருக்கும்வரைதான் எவருக்கும் மரியாதை போல :(


    முதல் முறை உங்களிடம் அலைபேசியபோது சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் உங்களுடையது.

    ////உயரம் குறைந்த ஒரு மனிதர்//

    இதை சுலபமாக ஒரு வார்த்தையில் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் உங்கள் வார்த்தை பிரயோகம் உங்கள் மீதுள்ள மதிப்பை இன்னும் அதிகரிக்கச்செய்கிறது.

    ReplyDelete
  12. அம்மாவுக்கு சமையலில் உதவி செய்யும்போது, கடைசி தோசையை திருப்பி போட்டவுடன் கேஸை நிறுத்திவிடுவேன். இருக்கும் சூட்டிலேயே தோசை நன்றாக வரும். ஒரு சில எக்ஸ்ட்ரா நொடிகள் காத்திருக்கவேண்டும், அவ்வளவுதான்.

    ReplyDelete
  13. //யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும்//

    same blood here....!

    ReplyDelete
  14. நன்றி சங்கவி.
    **
    ஆதி மனிதன்: நமக்கு வர்ற கமண்டுகளே கம்மி தான். ஏதோ ஏகப்பட்டது வர்ற மாதிரி முதல் ஆளா வர முடியலைன்னு சொல்றீங்களே நண்பா :)) ஆனாலும் உங்க அன்பு பிடிச்சிருக்கு
    **
    நன்றி இளங்கோ
    **
    சித்ரா: நன்றி
    *
    மாதவி : நன்றிங்கோ

    ReplyDelete
  15. மாதவன்: ஹி ஹி. நன்றி (சில நேரம் மு.....ன்பு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் கூட இப்போ பகிரப்படுது. இது அவ்வகையில் ஒன்று)
    **
    ராமலட்சுமி: அய்யாசாமிக்கு தாங்கள் தந்த அட்வைசுக்கு நன்றி. ஊருக்கு போகும் போது ரைட்டு. தினம் வெளியில் போகும் போதும் செய்ய முடியுமா? தெரியலேயே!
    **
    நன்றி நாஞ்சில் மனோ
    **
    வித்யா: நன்றி
    **
    தங்கள் விரிவான பின்னோட்டம் மிக மகிழ்ச்சி தந்தது மனோ சாமிநாதன் மேடம்

    ReplyDelete
  16. ரகு: ஆம் அந்த வார்த்தை வேண்டுமென்றே தவிர்த்தது தான். இந்த அளவு கவனித்து பாராட்டும் போது மிக ஆச்சரியமாக உள்ளது. நன்றி
    ம்ம். நீங்களும் தோசை ஊற்ற கத்துக்குரீன்களா? சீக்கிரம் ரெடி ஆகுறீங்க..ரைட்டு !
    **
    மிக்க நன்றி மதி. மகிழ்ச்சி

    ReplyDelete
  17. நீங்கள் அக்கறையுடன் சிந்திக்கிறீர்கள்.

    ஜோராக வெந்நீர் வைப்பதெப்படி?
    அழகாக நகம் வெட்டுவதெப்படி?
    இன்றைய செய்திச் சேனல்களைப்பற்றிய விமரிசனம்!

    போன்ற வலைப்பதிவர்களுக்கு நடுவே சமூக அக்கறையோடு நீங்கள் எழுதிய இந்தக்கருத்துக்கள் பாராட்டுக்குரியதே.

    ReplyDelete
  18. காலையிலிருந்து மாலைவரை அடுப்பு எரிந்ததா? ஆஆஆஆ!! அசம்பாவிதம் நடைபெறாதது ம்கிழ்ச்சி என்றாலும், கேஸ் விற்கும் விலையில்...

    அப்புறம் இந்தத் தோசைக்கல்லால் அடுப்பு ஆஃப் செய்யப்படாமல் போவது எனக்கும் மறதியில் நடந்திருக்கிறது. அடுப்பு/தோசைக்கல் சூட்டில் எதையாவது சூடு பண்ண வைக்கும் பழக்கத்தால் அடுப்பை விட்டு கல்லை இறக்குவதில்லை.

    ஆனால், வீட்டை விட்டுப் போகும்போது முதல் வேலை கேஸ் சிலிண்டர் மூடுவதுதான். அதைச் செய்வது எப்பவும் நல்லது.

    தற்கொலை, கள்ளக்காதல் & கொலைகள் - உங்கள் எண்ணம் வரவேற்புக்குரியது.

    ReplyDelete
  19. ஹுஸைனம்மா சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். வெளியில் செல்லும் போது மட்டுமின்றி இரவு படுக்கும் முன்னரும் சிலிண்டரைப் மூடுவது பழக்கமாகவே ஆகி விட்டுள்ளது. ஓரிரு நாள் தொடர்ந்து செய்தால் பழகி விடும்:)!

    ReplyDelete
  20. நண்டு படப் பாடல் நானும் மிக விரும்பிக் கேட்பேன் மலேசியா வாசுதேவன் பாடலில் எனக்கு பிடித்தது, ஆண்பாவம் படத்தில் குயிலே,குயிலேவும், ஒருவர் வாழும் ஆலயம் மலையோரம் மயிலேவும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

    ReplyDelete
  21. //இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும். //
    சுழன்று ஓடும் ஆற்று நீர்... அப்பப்பா... கும்பகோணம் போகும் பாதையில் ஒரு மாதிரி.. மன்னார்குடி போகும் பாதையில் ஒரு மாதிரி.. சரியா சொன்னீங்க.. ;-))))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...