Monday, January 16, 2012

ஜல்லிகட்டு தேவையா - கிராமத்து பொங்கல் நினைவுகள்


தஞ்சை மாவட்டத்தில் பிறந்து தற்போது சென்னையில் வாழ்பவன் என்கிற முறையில் பொங்கல் குறித்தான ஒரு பார்வை இது : 

தஞ்சையும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் பொங்கல் பண்டிகையின் போது தான் வயல்களில் அறுவடை முடியும் காலம்...!! அதனால் கிராமத்தில் இருப்போரிடம் அப்போது தான் பண புழக்கம் ஓரளவு இருக்கும். கிராமங்களில் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் !

முதல் பண்டிகை போகி !! சரியாக போகியன்று தான் பொங்கல் பொருட்கள் வாங்க கிராமத்தில் இறுதி பலரும் அருகில் உள்ள சிறு நகரத்துக்கு வருவார்கள். அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள்.

போகி தினத்தில் தெருவில் இருக்கும் குப்பைகளை சேர்த்து எரிய விடும் வழக்கம் உண்டு என்றாலும் இந்த விஷயத்தில் சென்னை தான் ரொம்ப மோசம் ! அன்று முழுதும் வெளியில் வர முடியாத அளவு சென்னை புகை மண்டலமாக இருக்கும். டையர் போன்ற எரிக்க கூடாத விஷயங்களையும் எரித்து நாசம் செய்வோரும் உள்ளனர் என்பது வருததுக்க்குரிய விஷயம்.

போகிக்கு அடுத்த நாளான பொங்கலுக்கு வருவோம்.

2012- பொங்கலுக்கு எங்கள் வீட்டில் மனைவியும் பெண்ணும் வரைந்த கோலம் 

 கிராமத்தில் கொண்டாடப்படும் பொங்கல் தான் மிக அற்புதமாக இருக்கும். தை பொங்கல் என்பது சூரியனுக்கான விழா அல்லவா? கிராமத்து தெருக்களின் நடுவே பானை + அடுப்பு வைத்து பொங்கல் செய்வார்கள். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பொங்கல் பானை வைத்து வழிபடுவது அருமையாக இருக்கும். ஒரு முறை என் நண்பன் கருணாநிதி (பெயர் தான் கருணாநிதி ! ஆனால் இவன் பக்கா ADMK ) ஊரான காவராபட்டுக்கு சென்ற போது இப்படி தெருவின் நடுவே பொங்கல் வைப்பதை பார்த்து ரசிக்க முடிந்தது. அந்த ஊரில் பல வீட்டிலும் வீட்டுக்கே வெளியே, தெருவில் கயிற்று கட்டில் போட்டு தான் இரவில் தூங்கவே செய்கிறார்கள் !! ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

பொங்கலின் போது மூன்று நாளும் எங்க ஊர் நீடாமங்கலத்தில் அம்சவல்லி & காவேரி தியேட்டரில் மூணு ஷோ சினிமா நடக்கும். (வழக்கமா மாலை மற்றும் இரவு காட்சி மட்டுமே நடக்கும்!) மக்கள் கரும்பு, பொங்கல் மற்றும் வாழை பழங்களுடன் தியேட்டர் சென்று படம் பார்ப்பார்கள். படம் முடிந்ததும் கரும்பு சக்கை தியேட்டர் முழுதும் கொட்டி கிடக்கும். இதை சுத்தம் செய்து அடுத்த காட்சி ஆரம்பிக்க தாமதமாகும். போன வருட பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படங்கள் பொங்கலுக்கு தான் எங்க தியேட்டருக்கு வரும். ஆனாலும் பண்டிகைகளில் தியேட்டரில் மிக அதிக கூட்டம் வருவதன்னவோ பொங்கலின் போது தான் !!

ஒரு காலத்தில் அம்சவல்லி, காவேரி, சரவணபவன் என மூன்று தியேட்டர் இருந்த எங்க ஊரில் இப்போது ஒரு தியேட்டரும் இல்லை!

தை பொங்கலுக்கு மறு நாள் மாட்டு பொங்கல் !

மாட்டு பொங்கல் என்றால் என்னவென்று தெரிய வேண்டுமெனில் நீங்கள் நிச்சயம் கிராமத்துக்கு தான் செல்ல வேண்டும். அவரவர் வீட்டில் இருக்கும் மாட்டுக்கு குளிப்பாட்டி, பொட்டு வைத்து அலங்காரங்கள் செய்வார்கள். கொம்பில் வர்ணம் பூசுவார்கள். மாட்டின் உடலில் கலர் காகிதத்தில் செய்த அலங்காரங்கள் அலங்கரிக்கும். அன்றைக்கும் பொங்கல் தான் செய்வார்கள். கோமாதாவுக்கு நன்றி சொல்லி செய்யும் பொங்கல் இது.

ஜல்லி கட்டு நடக்கும் நேரமும் கூட இது தான். ஜல்லி கட்டு தேவை/ தேவையில்லை என இரு வேறு கருத்து உண்டு. நான் நிச்சயம் ஜல்லி கட்டு தேவையில்லை என நினைப்பவன். மாடுகளை துன்புறுத்துகிறோம் என்பது ஒரு முக்கிய காரணம். அதை விட பெரிய காரணம் உண்டு.

என் அக்கா கிராமத்து மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். அவர் இருக்கும் கிராமத்தில் வருடா வருடம் ஜல்லி கட்டு நடக்கும். சரியாக ஜல்லி கட்டு போட்டி நடக்கும் நேரம், வெவ்வேறு நேரத்தில் டியூட்டி பார்க்கும் அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் மருத்துவ மனையில் இருந்தாக வேண்டும். குத்து பட்ட நிலையில் மனிதர்கள் வந்த வண்ணம் இருக்க, வரிசையாக தையல் போட்டு போட்டு ஓய்ந்து போவார்கள். நிலைமை மோசம் என்றால் பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போக சொல்வார்கள். இந்த ஆஸ்பத்திரியில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு அல்லது மூன்று பேராவது ஜல்லி கட்டில் உயிர் இழக்கிறார்கள். அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகும்? ஒவ்வொரு வருடமும் கை, கால் என உறுப்புகள் இழப்பவரும் உள்ளனர். ஜல்லி கட்டு வேண்டாம் என நினைக்க முக்கிய காரணம் இது தான்.

கன்னி பொங்கல் அல்லது காணும் பொங்கல், இந்த வரிசையில் கடைசி பண்டிகை தினம் ! இந்த நாளன்று நம் தெருவிலும், பக்கத்துக்கு தெருக்களிலும் உள்ள பலரும் ஒன்றாக சேர்ந்து மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் கிடைத்த வாகனங்களில் கூட்டமாக அருகில் உள்ள மூணாம் தலைப்பு என்னும் இடத்துக்கு செல்வார்கள். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிக்னிக் ஸ்பாட் அது தான் . மூன்று ஆறுகள் ஒன்றாய் கூடுமிடம்... சின்ன அணை போல இருக்கும் ... சுற்றி நிறைய மரங்களும், காலி இடமும் இருக்கும்.

புளி சாதம், தயிர் சாதம் என கட்டு சோறு கட்டி காலையே சென்று, நாள் முழுதும் அங்கு விளையாடி விட்டு வருவார்கள். சில வருடங்கள் முன்பு ஒரு காணும் பொங்கலன்று அக்கா, அண்ணன் குழந்தைகளுடன் அந்த இடம் சென்றேன். இப்போது முன்பு போல் அதிக கூட்டமில்லை. நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது.

கேஸ் அடுப்பில் பொங்கல்வைத்து, சாப்பிட்டு முடித்ததும் சாலமன் பாப்பையா பட்டி மன்றமும், டிவியில் போடும் புது படமும் பார்க்கும் நகர வாசிகள் ஒரு முறையாவது பொங்கல் விடுமுறையில் கிராமங்கள் பக்கம் சென்று வரலாம். நம் பாரம்பரியம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பதை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பு !!

34 comments:

  1. உண்மைதான். ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியில் மாடுகள் படும் கஷ்டம் சொல்லில் அடங்காது. மனிதர்களுக்கும் குடல் சரிதல் போன்றவை நடக்குதே!

    என் சிறுவயது நாட்களில், என் (மருத்துவர்) அம்மாவும்,ஜல்லிக்கட்டு சமையம் மருத்துவமனையிலேயே இருப்பார். தைய்யல் போட்டு மாளாது:(

    விளைநிலத்தை எல்லாம் ப்ளாட் போட்டு வித்தாச்சு. கொஞ்சம்நஞ்சம் இருக்கும் நிலத்துக்கும், விளைச்சலில் வேலை செய்ய யாரும் கிடைப்பதில்லை. பொங்கலும் குக்கர்லே பொங்குது. இதுலே ஜல்லிக்கட்டு மட்டும் எதுக்காம்?

    ReplyDelete
  2. நீங்கள் எழுதியுள்ள அனைத்தையும் சிறு வயதில், பாட்டி ஊரில், அனுபவித்து இருக்கிறேன். தனியார் தொலைக்காட்சி வந்ததிலிருந்து, பாட்டி கூட அவ்வாறெல்லாம் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. அதனால் எந்த பண்டிகைக்கும் ஊருக்கு செல்வதேயில்லை. உறவுகள் எல்லோருக்கும் டிவியில் ஒரு கண்..நம் மீது ஒரு கண்...நண்பர்கள் கூட, விடிய விடிய டிவி பார்த்துவிட்டு," பொங்கல் கொஞ்சம் பிசி யாகிட்டேன்..அதான் போன் எடுக்க முடியல" என்கிறார்கள். நம் வாழ்வில், passivity, ஆக்கிரமித்து வருவதை, ஜனரஞ்சகமாக தொகுத்து உள்ளீர்கள்.
    டெல்லியில், அவர்கள் வழக்கப்படி, லோடி திருவிழா ஆடல் பாடலுடன் கண்டு களித்தேன். பொங்கலன்று தமிழ் நண்பர் ஒருவரின் இல்லம் சென்று, பொங்கல் பொங்கி- நண்பர்கள் பேசி மகிழ்ந்து, சில ஆரோக்கியமான செயல்களுக்கு(சமுதாய) அடித்தளம் போட்டோம்.ஒரு வேளை, இங்கு டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் கிடையாதா?...இல்லை எனக்கு மட்டும் நண்பர்கள் இப்படி நிகழ்கிறார்களா..? தெரியவில்லை.

    ReplyDelete
  3. காலம் மாறும்போது நாம் பண்டிகைகளை கொண்டாடும் முறையும் மாறித்தான் போகிறது. பிரக்டிக்கலாக இதை ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை. இன்னும் 20௦ வருடங்கள் கழித்து இப்படித்தான் பொங்கல் கொண்டாடினோம் என்று சொன்னால் 'அப்படியா' எனதான் ரியாக்ஷன் வரும் என்றே தோன்றுகிறது.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையை எப்படி தயார் செய்கிறார்கள் என்பது பற்றி எதிலோ படித்திருக்கிறேன். அதிலிருந்து எனக்கும் ஜல்லிக்கட்டு பிடிப்பதில்லை.

    ReplyDelete
  4. பொங்கல் பற்றிய ஓர் தெளிவான பகிர்வு..

    ReplyDelete
  5. நீங்கள் கூறுவது அனைத்தும் சரி ஜல்லிகட்டு விசயம் தவிர....எங்க ஊர்ல ஜல்லிகட்டு நடப்பதில்லை!ஆனால் ஒரு விசயம் கபடி போட்டி நடக்கும் அதில் நிறைய நபர்கள் விளையாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதை நேரடியாக கண்டிருக்கிறேன்...அதற்காக கபடியை தடை செய்துவிடலாமா?

    ReplyDelete
  6. பொங்கல் முச்சூடும் டிவி பெட்டியில் தான் இருந்தேன் என்று நூறு வருடம் கழித்து சொன்னால், விழுந்து,விழுந்து சிரிப்பார்கள்..அப்போது எது வந்து நம் இனிய பொழுதுகளை சாப்பிடுமோ?


    இனிய பொங்கல் வாழ்த்துக்களுடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  7. கிராமத்து பொங்கல் வர்ணனை அருமை.

    //கேஸ் அடுப்பில் பொங்கல்வைத்து, சாப்பிட்டு முடித்ததும் சாலமன் பாப்பையா பட்டி மன்றமும், டிவியில் போடும் புது படமும் பார்க்கும் நகர வாசிகள் ஒரு முறையாவது பொங்கல் விடுமுறையில் கிராமங்கள் பக்கம் சென்று வரலாம். நம் பாரம்பரியம் இன்னும் கொஞ்சம் மிச்சமிருப்பதை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பு !!//

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் மகள்களை மாட்டுப் பொங்கல் அன்று எங்கள் கிராமத்திற்கு அழைத்து சென்று காட்டினேன். அவர்கள் மிகுத்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    //ஒரு காலத்தில் அம்சவல்லி, காவேரி, சரவணபவன் என மூன்று தியேட்டர் இருந்த எங்க ஊரில் இப்போது ஒரு தியேட்டரும் இல்லை!//

    அப்படியா? நீடாமங்கலம் நுழையும் இடத்தில் ஒரு பக்கா தியேட்டர் இருந்ததே அதையும் மூடி விட்டார்களா?

    ReplyDelete
  8. // அதென்னவோ ஏழைகள் தீபாவளி ஆகட்டும், பொங்கல் ஆகட்டும் முதல் நாள் தான் துணி மற்றும் முக்கிய பொருட்கள் வாங்குகிறார்கள். //

    அதற்க்கு காரணம், அவர்களுக்கு மாத சம்பளமோ, அரசு போனசோ முன்னமே கிடைக்காது. முதலாளிகள் பண்டிகைக்கு முதல் நாள் தரும் பணத்தில் தான் எல்லாம் வாங்க வேண்டும். முதலாளியும் அதற்க்கு முன் பணத்தை தர மாட்டார். பணத்தை பெற்றுக்கொண்ட பின் அடுத்த நாள் வேலைக்கு வராமல் போக வாய்ப்புண்டு. அதனால் தான் அவர்களும் முன்னமே பணத்தை தருவதில்லை.

    ReplyDelete
  9. // நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது. //

    Me too, feel the same
    :-(

    ReplyDelete
  10. \\தெருவில் கயிற்று கட்டில் போட்டு தான் இரவில் தூங்கவே செய்கிறார்கள் !! ரொம்ப ஆச்சரியமா இருந்தது.\\

    இன்றும் எங்கள் சொந்த ஊரில் அப்படித்தான் நிறைய பேர் தூங்குறாங்க. என் பெரியப்பா உட்பட.

    ReplyDelete
  11. நீங்க நீடாமங்கலமா அண்ணே..?
    நான் பட்டுக்கோட்டைகாரன் தான்...

    // நிலைமை மோசம் என்றால் பெரிய ஆஸ்பத்திரி கொண்டு போக சொல்வார்கள்.//
    அந்த பெரிய ஆஸ்பத்திரி ல தான் இப்போ வேலை பாத்துட்டு இருக்கேன் அண்ணே...
    இன்னும் ஏதும் அசம்பாவிதம்லாம் நடக்கல போல...

    என்னைப் பொறுத்தவரை இது ஒரு குருட்டுத்தனமான வீரம்தான் அண்ணே..
    சென்ற ஆண்டு ஆறு இளைஞர்கள் எங்கள் மருத்துவமனையில் மட்டும் இறந்தார்கள்...குறைந்தது பதினைந்து பேருக்காவது பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது...
    நிச்சயம் தேவை இல்லாத ஒரு அசட்டு வீரம்...உயிரை பறிக்கும் பாரம்பரியம் வேண்டாதது...

    ReplyDelete
  12. @veedu
    //விளையாட்டில் பாதிக்கப்பட்டுள்ளதை நேரடியாக கண்டிருக்கிறேன்...அதற்காக கபடியை தடை செய்துவிடலாமா?//

    தசைபிடிப்பு எலும்புமுறிவு என்பதற்கும் உயிரிழப்பு என்பதற்கும் வெகுதூர வித்தியாசம் உண்டு நண்பரே...

    ReplyDelete
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் மோகன்.....

    இந்த முறை பொங்கல் அன்று வீட்டிலேயே இல்லை - Bandhavgarh என்ற ஊரிலே இருந்தேன்.... :(

    நம் ஊரில், கிராமங்களில் நடக்கும் பொங்கல் விழாவில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை...

    ReplyDelete
  14. hi i am mano from kumbakonam but working at Afghan, athu oru kana kaalam aagividumo endra kavalai thaan manathil oongi olikirathu

    ReplyDelete
  15. நிச்சயம் ஒரு முறையாவது பொங்கல் விழா அனுபவிக்க வேண்டும் நீங்கள் சொன்னபடி. ஜல்லிக்கட்டு நேரில் பார்த்ததே இல்லை.
    மூணு தியேடர் இருந்த ஊரில் ஒரு தியேடரும் இல்லை - ஊரில் டிவி வளர்ச்சியா? அல்லது வேறு ஏதாவது காரணமா?
    நீடாமங்கலம் எதற்கு பேமஸ்?

    ReplyDelete
  16. பொங்கல் பற்றிய நல்லதொரு பகிர்வு.

    டயர்கள் போன்றவற்றை எரிப்பதும், ஜல்லிக்கட்டு நடத்துவதும் தேவையற்றது....என்று மாறுமோ.. :(

    கோலம் அழகா இருக்கு..

    ReplyDelete
  17. ஜல்லிக்கட்டு பற்றிய தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக நன்றி துளசி டீச்சர்

    ReplyDelete
  18. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி டாக்டர் வடிவுக்கரசி

    ReplyDelete
  19. நன்றி ரகு. ஜல்லிக்கட்டு காளை எப்படி தயார் செய்கிறார்களாம். நீங்கள் சொன்னதை நான் வாசித்ததில்லை

    ReplyDelete
  20. Riyas said...

    பொங்கல் பற்றிய ஓர் தெளிவான பகிர்வு..

    **
    மிக்க நன்றி ரியாஸ்

    ReplyDelete
  21. வீடு: கருத்துக்கு நன்றி நண்பா. கபடி நான் கூட பல ஆண்டுகள் ஆடி உள்ளேன். எந்த முறையும் அடிபட்டதில்லை. என்னோடு விளையாடிய சிலருக்கு அடிபட்டாலும் அது பெரும்பாலும் சுளுக்கு போன்று சிறிய பிரச்சனை தான். ஆனால் ஒவ்வொரு ஜல்லிகட்டிலும் நிறைய காயமும், உயிர் சேதமும் நடக்கிறது!

    ReplyDelete
  22. தங்கள் வித்யாசமான சிந்தனைக்கு நன்றி ஆர்.ஆர்.ஆர் சார்

    ReplyDelete
  23. ஆதி மனிதன்: அது சரவண பவா தியேட்டர். அதையும் மூடி விட்டனர்.

    ReplyDelete
  24. Madhavan Srinivasagopalan said...


    // நமது நல்ல பழக்க வழக்கங்களில் சிலவற்றை நாம் இழந்து வருகிறோமோ என சற்று வருத்தமாக இருந்தது. //

    Me too, feel the same
    :-(

    ******
    கருத்துக்கு நன்றி மாதவா

    ReplyDelete
  25. வித்யா said

    இன்றும் எங்கள் சொந்த ஊரில் அப்படித்தான் நிறைய பேர் தூங்குறாங்க. என் பெரியப்பா உட்பட.
    *******
    அப்படியா? நன்றி வித்யா

    ReplyDelete
  26. டாக்டர் மயிலன்: நீங்களும் நம்ம ஊர் பக்கமா? மகிழ்ச்சி

    ReplyDelete
  27. கருத்துக்கு மிக நன்றி வெங்கட் நாகராஜ்

    ReplyDelete
  28. மிக நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  29. mano said...

    hi i am mano from kumbakonam but working at Afghan, athu oru kana kaalam aagividumo endra kavalai thaan manathil oongi olikirathu

    ******
    முதல் வருகைக்கும், கருத்துக்கும், ப்ளாகை தொடர்வதற்கும் நன்றி மனோ

    ReplyDelete
  30. அப்பா துரை :

    //மூணு தியேடர் இருந்த ஊரில் ஒரு தியேடரும் இல்லை - ஊரில் டிவி வளர்ச்சியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? நீடாமங்கலம் எதற்கு பேமஸ்?//

    டிவியும் (சீரியல்) ஒரு காரணம். அங்கெல்லாம் லோக்கல் கேபிளிலேயே புது படம் போடுவார்கள். மேலும் மக்கள் DVD-ல் புது படம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

    நீடாமங்கலம் விவசாயத்துக்கு தான் பேமஸ். ஊரில் மூன்று ஆறு ஓடுவதால் விவசாயம் நன்கு நடக்கும். ஆற்று (உயிர்) மீன்கள் குறைந்த விலையில் கிடைக்கும். நாய் கடிக்கு மருந்து கொடுக்கும் ஊர் (வறுமையின் நிறம் சிகப்பில் ஹீரோ தன் ஊர் நீடாமங்கலம் என சொல்ல, தேங்காய் சீனிவாசன் " நாய் கடிக்கு மருந்து கொடுக்கும் ஊர் தானே?" என்பார்) குரு ஸ்தலமான ஆலங்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது நீடாமங்கலம். எங்கள் ஊரிலிருந்து தமிழகத்தின் எந்த ஊருக்கும் நேரே செல்ல பஸ் உள்ளது. சென்னை போன்ற ஊர்களுக்கு ரயில் வசதியும் எங்கள் ஊரில் உண்டு. ஒரு இஞ்சினியரிங் கல்லூரி உள்ளது.

    எங்க ஊர் பற்றி கேட்டதுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  31. கோவை2தில்லி said...

    கோலம் அழகா இருக்கு..

    **

    மிக்க நன்றி. என் பெண்ணிடம் சொன்னால் மகிழ்வாள்

    ReplyDelete
  32. சார் ஃபார் லேட் கமிங்.

    ஜல்லிக்கட்டு - சேம் ப்ளட்!! கபடி போன்ற விளையாட்டுகளில் மோதுவது சமபலமுள்ள ஒரே இனத்தவர்கள்!! (அதேசமயம் WWF போன்ற வன்முறைசார்ந்த விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும்.)

    ReplyDelete
  33. ”கோலங்கள்” - மிக அழகு.

    ReplyDelete
  34. கோலம் வெகு அழகு... என சொல்ல வந்தால் முந்தைய கமெண்டும் அதுவே:)!

    பொங்கல் நினைவுகள் அருமை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...