Wednesday, January 18, 2012

மௌன குரு / இளையராஜா இசை நிகழ்ச்சி-விமர்சனம்

மௌன குரு

இணைய உலகில் படம் வெளி வந்து சில வாரங்களுக்கு பின் எழுதும் விமர்சனங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இருந்தும் ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்வில் அந்த உணர்வை பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்பதிவு....

திறமைகள் எங்கெங்கு தான் ஒளிந்திருக்கின்றன ! வருட கடைசியில் சிறந்த படங்கள் பட்டியல் நான் ப்ளாகில் எழுதும் நேரம் தான் இந்த படம் வெளியானது. ஆயினும் அலட்சியமாக இப்படத்தை பார்க்காமலே, கணக்கில் எடுத்து கொள்ளாமல் விட்டேன். பார்த்திருந்தால், சென்ற வருட சிறந்த படங்கள் பட்டியலில் இணைத்திருப்பேன்.

படத்தின் கதை மிக எளிதாக சொல்லி விட முடியாது. இருந்தும் சுருக்கமாக சில வரிகளில்...

சந்தர்ப்ப வசத்தில் ஒரு மோசமான போலிஸ் கும்பலிடம் மாட்டுகிறான் ஹீரோவான கல்லூரி மாணவன். பெரும் பணத்தை கொள்ளை அடித்து விட்டு, அதை மறைக்க கொலை மேல் கொலை செய்து கொண்டிருக்கிறது அந்த போலிஸ் கூட்டம். ஹீரோவை " மன நிலை சரியில்லாதவன்" என பட்டம் கட்டி ஆஸ்பத்திரி அனுப்பி விடுகிறது. அதிலிருந்து மீண்டு, உண்மையை எப்படி வெளி கொண்டு வருகிறான் ஹீரோ என்பதே கதை.

இந்த படம் முழுக்க முழுக்க சாந்த குமார் என்கிற இயக்குனரின் படம். அவரை பாராட்ட பல காரணங்கள் உண்டு. சிலவற்றை மட்டும் இங்கே தந்துள்ளேன்.

1. படத்தில் தேவையில்லை என்கிற வகையில் சிறு சம்பவமும் இல்லை. எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகளே. சொல்ல போனால் ஓரிரு சம்பவங்களை கவனிக்காமல் விட்டால், அடுத்தடுத்து வரும் காட்சிகள் புரியாமல் போகும் அபாயமும் உண்டு. மிக Complicated-ஆன சம்பவங்கள் + திரைக்கதை. ஆனால் மிக கவனமாக, அழகாக எடுத்து சென்றுள்ளார் இயக்குனர். சென்ற வருட தமிழ் படங்களில் சிறந்த திரைக்கதைக்கு இவருக்கு விருது தந்தாலும் தவறு இல்லை !

2. படம் துவங்கும் போதே ஹீரோ குறித்த ஒரு சிறு காட்சி காட்டுகிறார் இயக்குனர். வீட்டுக்குள் வந்து விட்ட பாம்பை ஹீரோ எடுத்து கொண்டு வெளியே காடு மாதிரி இருக்கும் இடத்தில சென்று விட்டு விட்டு வருகிறார். அந்த பாம்புக்கு மட்டுமின்றி, அதனால் மற்றவர்களுக்கும் தொந்தரவு வர கூடாது என நினைக்கிறான் என்பதை எவ்வளவு அழகாக establish செய்து விட்டார் !

3. படத்தில் ரெண்டரை பாடல்களே. முதல் பாடல் டைட்டில் போடும் போது வந்து விடுகிறது. மீதம் ஒண்ணரை பாடலும் படத்தின் பின்னணியில் தான் ஒலிக்கிறது. அதாவது படத்தில் யாரும் பாட்டு பாடவில்லை. இதுவே படத்தை நிஜத்துக்கு மிக அருகில் கொண்டு சென்று விடுகிறது.

4. வெவ்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம்- ஹீரோ, வில்லன்,
உமா ரியாஸ் பாத்திரம், பாதர் பாத்திரம், அவர் மகன், இன்னும் சில போலிஸ்கள் அனைவரும் ஒவ்வொரு தனித்தன்மையுடன் இருக்கிறார்கள்.

காரக்டர்களுக்கான detailing பிரமாதம் ! உதாரணமாக கல்லூரி Principal -ன் மகன் ஏன் கெட்டவன் ஆனான் எனபதற்கு கூட தெளிவான லாஜிக் சொல்கிறார்கள்.

5. உமா ரியாஸ் பாத்திரம் மட்டும் Fargo என்கிற ஆங்கில படத்திலிருந்து உருவப்பட்டுள்ளது தெரிகிறது. ஆனால் படத்தின் கதை Fargo கதையல்ல. நிச்சயம் இந்த பெண் போலிஸ் காரக்டரும் சரி உமா ரியாஸ் நடிப்பும் சரி அசத்துகிறது.

6. ஹீரோ அருள்நிதியின் தந்தை தான் தயாரிப்பாளர். ஹீரோவின் சொந்த படம் என்பதால் அதீத பில்ட் அப் இன்றி, சொல்ல போனால் இறுதி அரை மணி தவிர மற்ற காட்சிகளில் ஹீரோ செமையாய் அடி வாங்குகிறார்.
அருள்நிதிக்கு அந்த பாத்திரம் இயல்பாக பொருந்துகிறது. மேலும் அவர் இன்னும் அதிக பிரபலம் ஆகாததால் அருள்நிதி நினைவுக்கு வராமல், அந்த பாத்திரமே நினைவுக்கு வருகிறது ஒரு ப்ளஸ்.

7. கதை நிச்சயம் டிராமா வகையை சேர்ந்தது தான். நிஜத்தில் இப்படி நடக்குமா என சொல்ல முடியாது. ஆனால் நிஜம் போல நம்ப வைத்தது தான் சாமர்த்தியம். உதாரணமாய் கார் ஆக்சிடன்ட் ஆகி
போலிஸ் கையில் பணம் கிடைக்கும் சீன். கொஞ்சம் careless ஆக எடுத்தாலும் நாடகம் போல் ஆகியிருக்கும். ஆனால் ரொம்ப இயல்பாக எடுத்திருப்பார் அந்த காட்சியை !

8. திருமணமான அண்ணன்- தம்பி இடையே உள்ள இடைவெளி ஆகட்டும் போலிஸ் இடையே உள்ள அரசியலாகட்டும் மிக துல்லியமாக காட்டியுள்ளார் இயக்குனர்.

படத்தின் குறைகள் என எனக்கு தெரிவது இரண்டு விஷயம் தான். அந்த அம்மா பாத்திரம் எப்போதும் தன மகனை (ஹீரோ) குறை சொல்லி கொண்டே இருக்கும். உண்மையில் அம்மாக்கள் எந்த மகன் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆகலையோ அவன் மீது தான் பரிதாபப்படவும், அவர்களை தான் சப்போர்ட் செய்யவும் செய்வார்கள். இங்கு அதற்கு நேர் எதிராக காண்பித்துள்ளார்.

மற்றொரு விஷயம்: அந்த மருத்துவ மனை ! மருத்துவர்களில் சிலர் காசுக்காக சிசேரியன் செய்யும் ஆட்களாக இருப்பது உண்மை தான். ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையை தெரிந்தே அழிக்க மாட்டார்கள். ஒரு மருத்துவர் தான் அப்படி என்றால், அங்கிருக்கும் பணி ஆட்கள் கூட " நிரந்திர எதிரி" மீது பாய்வது போல் பாய மாட்டார்கள்.

படத்தை நல்ல வேளையாக பாசிடிவ் ஆக முடித்தார். கடைசியில் சேது போல் முடியுமோ என்கிற பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

சினிமா என்பது கூட்டு முயற்சி; அனைவரும் சேர்ந்தால் தான் நல்ல படம் கொடுக்க முடியும் என்பார்கள். அந்த கூற்றை மாற்றி இந்த படம் வெல்ல காரணம் கதாசிரியரும் இயக்குனருமான சாந்தகுமார் தான் என உறுதியாக கூறலாம். ஒரு இயக்குனர் தான் சொல்ல வரும் விஷயத்தில் தெளிவாக இருந்தால், கூடவே தயாரிப்பாளர் தரப்பில் தலையீடு இல்லாமல் இருந்தால் ஒரு நல்ல படம் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது மௌன குரு.

வாழ்த்துகள் சாந்த குமார் ! தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வரவாக இருக்கிறீர்கள். உங்கள் அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறோம்!
*******************************************

ஜெயா டிவியில் இளையராஜா இசை நிகழ்ச்சி ரெண்டு நாள் மட்டும் பார்த்தேன். (இதற்கென அரை நாள் லீவு வேறு போட்டாச்சு). மிக மிக அருமையாய் இருந்தது. சில சுவாரஸ்யங்கள் மட்டும் உங்களுடன் பகிர்கிறேன்:

** பல பாடகர்கள் பாட்டில் எப்படி இருக்குமோ அதே போல் பாடினர். நமக்கு நன்கு பழக்கமான பாட்டை வேறு விதமாய் பாடும் போது சற்று ஏமாற்றமாய் இருக்கும். கடைசியில் சற்று improvise செய்தால் பரவாயில்லை. பல இடங்களில் மாற்றி பாடினால் நம்மால் அதை ரசிக்க முடியாது! நல்லவேளை அது நடக்கலை

**பருவமே பாடல் எப்படி இசை வடிவமாக்கினர் என இளையராஜா சொன்னது interesting ! அந்த பாடல் முழுதும் ஓடி கொண்டே இருக்கும் சத்தம் வரும். அதற்கு பல விதத்திலும் முயன்று கடைசியில் மடியில் ரெண்டு கையாளும் மாறி மாறி தட்டி, மைக் முன் அதை ரிக்கார்ட் செய்ததாக சொன்னார். நிகழ்ச்சியிலும் ஒருவர் அப்படியே செய்து இசை வரவைத்தார்.


**போலவே இன்னொரு மழை பாடலுக்கு ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து அதனை சத்தபடுத்தி மழை பெய்யும் சத்தம் வர வைத்தனர்.

** சூப்பர் சிங்கரில் வந்த பலர் ஆர்கெஸ்ட்ராவில் " லாலா " என ஹம்மிங் பாடினர்.

** ஜானகி மற்றும் சுசீலா பாடிய பல பாடல்கள் சித்ரா பாடினார். அடடா அருமை !! அந்த அருமையான பாடல்களை சித்ரா பாடினால் எப்படி இருக்கும் என நாம் அனுபவிக்க முடிந்தது.

** கண்ணதாசன் குறித்த சில நெகிழ்வான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார் ராஜா. தொகுத்து வழங்கிய பிரகாஷ் ராஜ் அனாவசியமாக பேசாமல் நறுக்கென்று பேசினார்.

** நிகழ்ச்சியில் பாட தேர்ந்தெடுத்த பல பாடல்கள் ஆல் டைம் ஹிட்ஸ் / பெஸ்ட் ! இறுதி பாடல் வரை ஒவ்வொரு பாட்டுக்கும் மிக உற்சாகமாக கை தட்டி பெரிதும் ரசித்தனர் கூடியிருந்த மக்கள்.

** பெரிதும் பாராட்ட வேண்டியது வெவ்வேறு வாத்தியம் வாசித்த குழுவினரை தான் !! அப்படியே பாட்டை கேட்கும் பீலிங் வர வைத்தனர். இறுதியில் அவர்களை குறிப்பிட்டு ராஜா பாராட்டியது நெகிழ்ச்சியாக இருந்தது.

மொத்தத்தில் ராஜா ரசிகர்கள் மிக மிக என்ஜாய் செய்யும் விதத்தில் இருந்தது நிகழ்ச்சி.

ஒரு வேளை நீங்கள் பார்க்க தவறியிருந்தால் ஜெயா டிவியில் மறு ஒளிபரப்பு செய்வார்கள். அப்போது அவசியம் பாருங்கள் !
************
சமீபத்திய இடுகை


நண்பன் நிச்சய வெற்றி- விமர்சனம் 

16 comments:

  1. பட விமர்சனம் அருமை.இளையராஜா நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை மறு ஒளிபரப்பில் கட்டாயாம பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  2. இளையராஜா நிகழ்ச்சி நானும் பார்த்தேன். சூப்பர்

    ReplyDelete
  3. Anonymous12:14:00 PM

    இளையராஜா நிகழ்ச்சியை மிஸ் செய்து விட்டேன் :(

    ReplyDelete
  4. மவுன குரு. தமிழில் வித்தியாசமான முயற்சி. பல காரக்டர்கள், முடிச்சுக்கள் இருந்தும் அழகாக இயக்குனர் எடுத்து சென்று இருந்தார். விரிவான விமர்சனம். எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என தெரியவில்லை?

    இளையராஜா நிகழ்ச்சியை நெட்டில் தேடி பார்க்க வேண்டும். இளையராஜாவின் இசை நிகழ்சிகள் தனி சிறப்பு வாய்ந்தது. அவரின் இசை அறிவுக்கு முன் ரசிகர்கள் முதல் பாடகர்கள், பாடலாசிரியர்கள் வரை அனைவரும் இசைக்கு கட்டுண்ட பாம்பு போல் ஆகி விடுவார்கள். ஒரு முறையேனும் அருகில் உட்கார்ந்து அவரின் இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்பது என் ஆசை, கனவு. ஆமா? டிக்கெட் எவ்வளவு இருக்கும் என தெரியுமா உங்களுக்கு?

    ReplyDelete
  5. பட விமர்சனம் நன்றாக உள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கிறேன்.

    இளையராஜா நிகழ்ச்சி நேற்றும் முந்தைய நாளும் தான் பார்த்தேன். அதுவும் முதல் நாள் கூட சிறிது நேரம் தான். மறுபடியும் ஒளிபரப்பினால் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. RAMVI said...

    பட விமர்சனம் அருமை.இளையராஜா நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை மறு ஒளிபரப்பில் கட்டாயாம பார்த்துவிடுகிறேன்
    **
    நன்றி ராம்வி பாருங்கள்

    ReplyDelete
  7. புதுகைத் தென்றல் said...

    இளையராஜா நிகழ்ச்சி நானும் பார்த்தேன். சூப்பர்
    **
    நன்றி புதுகை தென்றல் மேடம்

    ReplyDelete
  8. சிவகுமார் ! said...

    இளையராஜா நிகழ்ச்சியை மிஸ் செய்து விட்டேன் :(

    ***
    நிச்சயம் மறுபடி போடுவார்கள் சிவா. அப்போது பாருங்கள்

    ReplyDelete
  9. ஆதி மனிதன் said...

    விரிவான விமர்சனம். எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என தெரியவில்லை?
    ***********
    மௌன குரு முக்கால் மணி நேரத்தில் எழுதி விட்டேன். பின் இளைய ராஜா குறித்தும் சேர்த்தேன். அதற்கு அரை மணிக்கும் குறைவாக தான் ஆனது

    நிகழ்ச்சி டிக்கட் விலை தெரிய வில்லை. நிச்சயம் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் கிடைத்திருக்கும்

    ReplyDelete
  10. நன்றி கோவை2தில்லி மேடம்

    ReplyDelete
  11. இளையராஜா நிகழ்ச்சியை இன்ரநேட்டில் பார்கலாம்
    tamilkey.com

    ReplyDelete
  12. வாழ்த்துகள் சாந்த குமார் ! தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய வரவாக இருக்கிறீர்கள். உங்கள் அடுத்த படைப்புக்கு காத்திருக்கிறோம்!

    விருமாண்டிக்குப் பிறகு மிகவும் ரசித்த ஆச்சரியப்பட்ட படம் இது. மிக மிக அருமை.

    ReplyDelete
  13. மெளனகுரு - வார இறுதியில் பார்க்கலாம்னு இருக்கேன். அதுவரை தியேட்டரில் இருக்கணும்.

    ReplyDelete
  14. VJ said...

    இளையராஜா நிகழ்ச்சியை இன்ரநேட்டில் பார்கலாம்
    tamilkey.com
    ***********
    தகவலுக்கு நன்றி VJ
    ****

    ReplyDelete
  15. //ஜோதிஜி said

    விருமாண்டிக்குப் பிறகு மிகவும் ரசித்த ஆச்சரியப்பட்ட படம் இது. மிக மிக அருமை. //

    *******

    நன்றி ஜோதிஜி நலமா இருக்கீங்களா?

    **

    ReplyDelete
  16. ர‌கு said...

    மெளனகுரு - வார இறுதியில் பார்க்கலாம்னு இருக்கேன். அதுவரை தியேட்டரில் இருக்கணும்.

    **
    ரகு: ஓடும். பாருங்க நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...