Friday, July 19, 2013

மனதை உலுக்கிய ஹிந்தி சினிமா :The Attacks of 26/11

The Attacks of 26/11 - ராம் கோபால் வர்மா இயக்கத்தில், மும்பையில் நிகழ்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த படம். அண்மையில் தான் காண முடிந்தது.



நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்த கதை தான். சபிக்கப்பட்ட 26 நவம்பர் 2008 மும்பைக்குள் நுழைந்த 10 தீவிரவாதிகள் - பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த, 3 நாள் போராட்டத்துக்கு பிறகு 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, கசாப் மட்டும் பிடிபடுகிறார். கசாப் தூக்கிலிடப்படுவதுடன் படம் நிறைகிறது.

மும்பை கமிஷனராக இருந்த ராகேஷ் ( நானா படேகர் ) - ஒரு என்கொயரி கமிட்டி முன்பு பேசும் விதத்தில் படம்  நகர்கிறது.

முழுக்க, முழுக்க நமக்கு தெரிந்த நிகழ்வுகள் எனினும் பார்க்கும்போது மனதில் ஒரு நடுக்கத்துடனே பார்த்தேன். Terrific !

படம் வெளி வரும் முன்பே இயக்குனர் -ராம் கோபால் வர்மா " மும்பையில் தீவிரவாதிகள் வந்து தாக்கிய பின் நடந்தது என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அது எப்படி திட்டமிடப்பட்டது என பலருக்கும் தெரியாது இப்படம் அதனை பற்றி பேசும். மேலும், இது 3 நாள் நடக்கும் கதை அல்ல - இரவு 9 மணி முதல் கசாப் பிடிபடும் நள்ளிரவு 1 மணி வரை நடக்கும் கதை மட்டுமே" என்று கூறியிருந்தார்.

ஆயினும் தாஜ் ஹோட்டல் அட்டாக் மற்றும் அங்கு இருந்தோர் 2 நாள் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது விரிவாய் சொல்லாமல் போனது நிச்சயம் ஏமாற்றம் அளிக்கிறது. இன்றைக்கும் மும்பை அட்டாக் என்று நினைத்தால் தாஜ் ஹோட்டல் குறித்த நினைவுகள் தான் மனதின் மேல் வரும். இப்படமோ தாஜ் ஹோட்டல் உள்ளே தீவிர வாதிகள் நுழைவதை மட்டும் சில நிமிடங்கள் காட்டி  - விட்டு விடுவது வருத்தமே !



ஒரு படகின் மூலம் கடல் வழியே நுழையும் தீவிரவாதிகள் - தங்கள் படகு ரிப்பேர் என்று சொல்லி - உதவி வேண்டும் என்று கேட்டு, உதவுவோரையே கொன்று விட்டு மும்பைக்குள் நுழையும் போதே நமக்கு வயிற்றை பிசைய ஆரம்பித்து விடுகிறது

முதல் துப்பாக்கி சூடு மும்பையின் புகழ் பெற்ற - லியோபால்ட் கபேவில் நடந்தது. பெரும் கூட்டத்தை நோக்கி அவர்கள் சுடுவதும், அநேகமாய் அங்கிருக்கும் பெரும்பாலான மக்கள் இறப்பதும் சில்லிட வைக்கிறது.
(அந்த காட்சியில் லியோபால்ட் ஹோட்டல் நிஜ ஓனரே நடித்துள்ளார் !) காட்சியின் முடிவில் காயம் பட்டோரை சாலையில் உள்ள பல்வேறு வாகனங்களில் ஏற்றி செல்வது - மும்பையின் தைரியமான முகத்தை காட்டுகிறது. 
File:LeopoldCafe2 gobeirne.jpg
                                                                                           நிஜ லியோபால்ட் கபே
தாஜ் ஹோட்டலில் பின் புற கிட்சன் வழியே நுழைந்து லாபியில் அனைவரையும் சுட்டு கொல்லும் போது ஒரு குழந்தை எங்கோ அழுது கொண்டிருக்க - எந்த ரீ ரிகார்டிங்கும் இன்றி அந்த குழந்தை அழு குரல் மட்டும் ஒலித்து கொண்டே இருப்பதும், ஒரு குண்டுவெடிப்புக்கு பின் அது அடங்கி விடுவதும் .....பல இடங்களில் கோர காட்சிகளை நேரே காட்டாமல் சென்று விடுகிறார் இயக்குனர்.

நானா படேகர் கமிஷனில் பேசுவதை தவிர படத்தின் பெரும் பகுதியில் வசனமே இல்லை. அதற்கான தேவையும் இல்லை.

இறுதி பகுதியில் கசாப் - தாங்கள் கொன்றதன் காரணத்தை மூளை சலவை செய்யப்பட்டவனாய் பேசும் நீண்ட வசனமும் அதற்கு பதிலடி தரும் விதத்தில் நானா படேகர் - அவனது கூட்டாளிகள் பிணத்தை காட்டி - " பாரு நீ இறந்த பின் உடலில் இருந்து வாசனை வரும் என்றார்களே - வருகிறதா என பாரு " என சொல்வதும் அர்த்தமுள்ள வசனம் நிறைந்த  காட்சிகள் .



நானா படேகர் இந்த பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தது எவ்வளவு சரியான முடிவு ! அவர் பேசும் வசனங்களாகட்டும், முக பாவமாகட்டும் ஒவ்வொரு இந்தியனின் வலியையும் பிரதிபலித்து கொண்டே இருக்கிறது ! Outstanding !

ஒவ்வொரு காட்சியிலும் வரும் மனிதர்களில் சிலரேனும் பிழைத்து விட மாட்டார்களா என்று நம்மை எண்ண வைப்பதும், அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கி சூடும் முழுதும் தொடர்கிறது

தாஜ் ஹோட்டல் தாக்குதலும் மீட்பும், தியாகமும் பற்றி தனியாக ஒரு படமே எடுக்க முடியும் என்ற நிலையில் அந்த பகுதியை அதிகம் தொட வில்லை என்பதை  தவிர இப்படத்தில் வேறு எந்த குறையும் இல்லை.

படம் நம்மை உறைய வைக்க இரண்டே காரணங்கள் தான். ஒன்று : இது நம் மண்ணில் நடந்த நிஜ சம்பவம். இரண்டாவது : என்றேனும் ஒரு நாள் நமக்கும் இது நடக்கலாம். அந்த அபாயம் ஒவ்வொருவர் மனதிலும் எங்கோ ஒரு மூலையில் இருக்கவே செய்கிறது

இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் இப்படத்தை அவசியம் காணுங்கள் !

**********

5 comments:

  1. //படம் நம்மை உறைய வைக்க இரண்டே காரணங்கள் தான். ஒன்று : இது நம் மண்ணில் நடந்த நிஜ சம்பவம். இரண்டாவது : என்றேனும் ஒரு நாள் நமக்கும் இது நடக்கலாம். அந்த அபாயம் ஒவ்வொருவர் மனதிலும் எங்கோ ஒரு மூலையில் இருக்கவே செய்கிறது//

    மிகவும் உண்மை. இன்னிக்கும் மும்பை வி.டி ஸ்டேஷனுக்குப் போகும்போது அங்கே நடந்த துப்பாக்குச்சூடு ஞாபகம் வந்து முதுகு சில்லிட்டுப்போகுது.

    பார்க்க விரும்பிய படம். ஆனால் பார்க்குமளவுக்கு மனதில் தெம்பில்லை.

    சம்பவத்தன்று தாஜ் ஹோட்டலுக்கு ஈடாக இன்னும் நிறைய இடங்களில் அசம்பாவிதம் நடந்தது. ஆனால் மீடியா தாஜை மட்டுமே அதிகம் முன்னிலைப்படுத்தியது. அதனாலதான் தாஜில் அதிகம் சேதம் போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  2. ம்ம்ம் ரைட்டு

    ReplyDelete
  3. //என்றேனும் ஒரு நாள் நமக்கும் இது நடக்கலாம். அந்த அபாயம் ஒவ்வொருவர் மனதிலும் எங்கோ ஒரு மூலையில் இருக்கவே செய்கிறது// TRUE....

    ReplyDelete
  4. ஒரு குரூரம் ஆனால் நாள் ஆகிவிட்டது .கொஞ்சம் மனதை தேற்றி கொண்டு பார்க்கலாம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...