Friday, April 13, 2012

மறக்க முடியாத திருச்சூர் : கேரள பயணம்



கொச்சின் மற்றும் திருவனந்த புரத்துக்கு அடுத்து கேரளாவின் மிக பெரிய ஊர் திருச்சூர்.
திருச்சூரில் வெளியூர் செல்லும் பேருந்துகள் உள்ள பஸ் ஸ்டாண்ட் ரயில்வே நிலையத்துக்கு நேர் எதிரே உள்ளது. (இப்படி ரயில் நிலையமும் முக்கிய பேருந்து நிலையமும் அருகருகே அமைவது அரிது தான்..இல்லையா? ) உள்ளூர் பேருந்துகளுக்கென தனியே மற்றொரு பஸ் ஸ்டாண்ட் உள்ளது.

திருச்சூர் பொதுவாகவே நிறைய கிறித்துவர்கள் வாழும் ஊராக இருக்கிறது. திருச்சூரில் நிறைய சர்ச்சுகள் உண்டு.

 
தினம் காலை பத்து மணி போல் தான் கடைகள் திறக்கின்றன. இரவு ஏழு, எட்டு மணிகெல்லாம் பூட்ட துவங்கி விடுகின்றனர். ஞாயிறு இன்னும் மோசம் ! முழு நாளும் திறப்பதில்லை. முக்கிய மார்கெட் போன்ற இடங்களில் ஞாயிறு மாலை வந்து கடை திறக்கிறார்கள் ! கேரளத்தவர் நன்கு ஓய்வு எடுக்கவும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நன்கு பார்த்து கொள்ளவும் செய்கிறார்கள்.

திருச்சூர் கல்விக்கு மிக புகழ் பெற்ற ஊராக இருக்கிறது. "கேரளாவின் எஜூகேஷனல் காபிட்டல்" என்று திருச்சூரை சொல்கிறார்கள். ஏகப்பட்ட கல்வி கூடங்கள் ! ஒவ்வொன்றும் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளி என்றும், அனைவரும் A + வாங்கி தேர்வு பெற்ற பள்ளி என்றும் விளம்பரம் செய்கின்றனர். இவ்விஷயத்தில் தமிழகத்தை ஒத்துள்ளது கேரளம்.


                

நான் தங்கிய லாட்ஜ் அருகில் ஒரு டீ கடை இருந்தது. அங்கு அவ்வப்போது சென்று டீ அருந்தி வந்தேன். அங்கு இட்லி கடையும் கூடவே ஒரு தொலை காட்சியும் கூட உண்டு. ஞாயிறு இரவு "டீலா நோ டீலா" நிகழ்ச்சி மலையாளத்தில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி தமிழில் ரிஷி என்ற நடிகர் செய்து, கொஞ்ச நாளில் ஊத்தி மூடி விட்டனர். ஆனால் பல மாதம் ஆகியும் மலையாளத்தில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஓடுவது ஏன் என்பது அன்று தெரிந்தது. விளையாடுபவர் ஜெயிப்பதை தான் ஜெயிப்பது மாதிரி கடையில் உள்ள அனைவரும் நினைக்கின்றனர். ஒவ்வொரு பெட்டி திறக்கும் போதும் இவர்கள் டென்ஷன் ஆகிறார்கள். அஞ்சு லட்சம் போச்சே; மூணு லட்சம் போச்சே என்று அடித்து கொள்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சி பார்த்தது வித்தியாச அனுபவம்!

மலையாள எழுத்துகள் தெலுகு எழுத்து போல் தான் நமக்கு தெரிகிறது. இரண்டுமே ஜிலேபியை திருப்பி போட்ட மாதிரி தான் உள்ளன
மலையாளம், தமிழர் கற்கவும், பேசவும் மிக எளிதாய் முடியும் என்பது இங்கு தங்கிய ஓரிரு நாட்களில் தெரிந்தது. உதாரணமாய் நீங்கள் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டுமெனில், யாரிடமாவது "பஸ் ஸ்டாண்ட் எவ்விட?" என்று கேட்டால், அவர் வழி சொல்வார். மலையாளத்தில் அவர் பதில் சொன்னாலும் அது நமக்கு நிச்சயம் புரியும் (பின்னே சின்ன வயசிலிருந்து எம்புட்டு மலையாள படம் பாத்துருக்கோம் ! தப்பா நினைக்காதீங்க. மம்மூட்டி, மோகன்லால் படத்தை சொன்னேன் J.

இப்படி எந்த இடம் போகணும் என்றாலும் இடம் பெயர் + எவ்விட சேர்த்து, கேட்டு தான் வாழ்கையை ஓட்டினேன்.


பஸ்ஸில் செல்லும் போது கேட்ட பாடல் ஒன்று :

"நீலவான ஓடையில் நீந்திடும்ட சந்திரிகே

நான் ரசித்த கவிதைகள் நிண்ட விழியில் கண்டிட்டேன்
வராதே வந்த என் தேவி "

என்ன ....பாட்டு எங்கோ கேட்ட மாதிரி இருக்கா?

நீலவான ஓடையில் நீந்திடும் ஓர் வெண்ணிலா..

நான் ரசித்த பாடல்கள் உன் விழியில் காண்கிறேன்
வராது வந்த என் தேவி "

மீண்டும் அந்த மலையாள பாடலை படித்து பாருங்கள். தமிழர்கள் மலையாளம் கற்று கொள்வது எவ்வளவு எளிது என புரியும் !


****************
பதிவர் KRP செந்தில் போட்டோ கேரளா முழுதும் இருந்தது ஏன் என்று புரிய வில்லை. என்ன விழிக்கிறீர்கள்? இந்த KRP தான் சேகுவரோ படத்தை தன் profile படமாக வைத்துள்ளாரே !

 அதனால் கேரளா முழுதும் DYFI காரர்கள் சேகுவரா படம் ஒட்டியுள்ளதை பார்த்தால் KRP நினைவு வருகிறது ! (படத்தை சீக்கிரம் மாத்துங்க சாரே !)

கேரளாவில் கிரிக்கெட் மிக பிரபலமாக இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நிறைய ஒப்பன் ஸ்பேஸ் இருப்பதால் ஆங்காங்கு கிரிக்கெட் ஆடும் சிறுவர்களை பார்க்க முடிந்தது.

கேரளா முழுதுமே பெரும்பாலும் தனி வீடுகள் தான். அரிதாக திருச்சூரில் ஆங்காங்கு சில apartment-களும் உள்ளது !


அரவான் படம் திருச்சூரில் ஓடி கொண்டிருந்தது. அதன் விளம்பர வாசகங்கள் “பரத் மற்றும் அஞ்சலி நடித்த அரவான்” என்றது ! பரத் அந்த படத்தில் பிணமாதானே கொஞ்ச நேரம் நடிச்சார் ! பரத் அங்கு சற்று பிரபலம் போலும். அதான் "பரத் நடித்த" என்கிற விளம்பரம்!

ஐஸ்வர்யா ராயை அவர்களுக்கு மிக பிடிக்கும் போலும் . பல கடை போர்டுகளிலும் விளம்பரங்களிலும் ஐஸ்வர்யா ராயை காண முடிந்தது.

ஒரு சின்ன சோகம்: நம் ஊரில் எல்லா கடையிலும் மலையாள செய்தித்தாள் கிடைக்கும் அல்லவா? ஆனால் அங்கு தமிழ் செய்தித்தாள் எந்த கடையிலும் பார்க்க முடியலை !

பேருந்து மிக அருகருகே மக்கள் சௌகரியத்துக்கு ஏற்ப நிற்கிறது. அநேகமாய் தத்தம் வீட்டின் வாசலில் இருந்தே பேருந்து ஏறிக்கொள்வார்கள் போலும்.
ஆங்காங்கு இருக்கும் மிக சிறு பாலங்கள் பற்றி விரிவாக தகவல் (நீள, அகலம் எவ்வளவு மீட்டர், etc ) பெரிய போர்டில் பாலத்துக்கு முன்னால் வைத்துள்ளனர்.

பேருந்தில் செல்லும் போது சுவாரஸ்யமான பல விஷயங்கள் பார்க்க முடிகிறது,



சந்தின் கடைசியில், வரப்பில், வீட்டின் வாசலில் இப்படி எங்கெங்கு நின்றாலும், அவ்வழியே எப்போதோ செல்லும் பேருந்து மக்களுக்கு, கை ஆட்டி டாட்டா காட்டி விட்டு விளையாட்டை தொடரும் குழந்தைகள்....

அம்மாவுடன் சர்ச் செல்லும் அழகிய பெண்கள். எந்த சர்ச் பார்த்தாலும் சிலுவை போட்டு கொள்ளும் அவர்களின் அம்மாக்கள்

சைக்கிளில் ஹாயாக சுற்றி வரும் பதின்ம வயது பெண்கள்...

இப்படி கேரளாவில் ரசிக்க நிறையவே உண்டு.

நில்லுங்கள்.நில்லுங்கள். உங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என புரிகிறது. அதே டவுட்டை Mrs . அய்யாசாமியும் கேட்க தான் செய்தார்.


" என்ன பொண்ணுங்களை உத்து பாக்குறது ! இப்படியெல்லாம் உத்து பாக்க படாது !"

"என்னம்மா பண்றது? எழுத்தாளன் (???) ஆகியாச்சே ! எல்லாத்தையும் பார்த்தால் தான் நல்லா எழுத முடியும்" (நல்ல சொல்றீங்கையா டீடைய்லு)

**************
திருச்சூரில் நடக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் காரணமாய் இதனை கேரளாவின் " கல்சுரல் காபிடல் " என்கிறார்கள் ! பல வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் திருச்சூரில் இருப்பதால் இதனை பேங்கிங் காபிடல் " என்றும் கூட சொல்கிறார்கள்.
அனைத்து இடமும் சுற்றி முடித்த களைப்பில் ஹோட்டல் Lounge-ல்
**************
விலங்கனூர் என்ற இடத்தில் விலங்குகளை கிட்டத்தில் பார்க்கலாம் என்றனர். இதற்காக சற்று அலைந்தேன். கடைசியில் பேச்சி டேம் மேல் தான் அந்த இடம் உள்ளது என்றும், வன துறை அதிகாரிகள் அனுமதி (தெரிந்தவர் யாரேனும்) இருந்தால் தான் பார்க்க முடியும் என்றும் தெரிந்தது.

அய்யாசாமி கார்னர்



அய்யாசாமி பேருந்தில் ஒரு பக்கம் உட்கார்ந்தார். கண்டக்டர் வந்து இங்கே உட்கார கூடாது. பெண்கள் அமரும் இடம் என்றார். அதற்கு எதிர்புறம் போய் அமர்ந்தார். இதுவும் அவர்கள் உட்காரும் இடம் தான் என்றார் கண்டக்டர் ! இரண்டு புறமும் அவர்களுக்கு தானா? என்ன ஒரு பெண்ணாதிக்கம் உள்ள ஊர் என அய்யாசாமி பொங்கி எழுமுன் கண்டக்டர், பின் புறம் போய் அமருங்கள் என்றார். அப்புறம் தான் புரிந்தது.. நம்ம ஊரில் ஒரு புறம் பெண் மறுபுறம் ஆண் என அமருவோம். அங்கோ முன் புறம் முழுதும் பெண்களும் பின் புறம் முழுக்க ஆண்களும் அமர்கின்றனர். (அட நம்ம மாநிலம் அதில் பரவாயில்லைப்பா. எதிர் எதிர் பக்கம் இரு பாலரும் உட்காருவதால் நல்லா பொழுது போகும் இல்லையா? ஹிஹி)
***********
வல்லமை ஏப்ரல் 10,  இதழில் வெளியான கட்டுரை 
**************

கேரள பயணக்கட்டுரை பிற பகுதிகள் வாசிக்க லிங்க் இதோ:

முதல்பகுதி : கேரள பயணகட்டுரை: டிரைலர்+எப்படி நடத்தினர் என்னை?


2-ம் பகுதி: கேரளாவில் பார்த்த புது மம்மூட்டி படம்: கேரள தியேட்டர்கள் எப்படி?

மூன்றாம் பகுதி: ஒரு டேமும் இரு கோயில்களும்


நான்கு:20 ஆவது மாடியில் அற்புத சர்ச் டவர்
**************

அடுத்த நிறைவு பகுதியில்:


அழகிய பூங்கா -படங்கள் மற்றும் வீடியோவுடன்

உணவு மற்றும் ஷாப்பிங் ஸ்பெஷல்

சிறிய மலை - படங்கள் மற்றும் வீடியோவுடன்

சிறுவர்கள் செய்த உதவி

தங்கிய ஹோட்டல் விவரங்கள்
*******
தமிழ் மணம் சூடான இடுகையில் இந்த இடுகை...

வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகைகள்
சூடான இடுகைகள்

14 comments:

  1. Anonymous1:26:00 PM

    சின்ன தளபதி பரத் 'லஜ்ஜாவதியே' பாடல் மூலம் கேரள மக்களை கட்டி போட்டு உள்ளார் போல.

    ReplyDelete
  2. செம்மன்னூர் ஜுவல்லரி கடையைப்பற்றி எழுதலைன்னா திருசூர் பயணம் முழுமை அடையாது கேட்டோ:-)))))

    ReplyDelete
  3. // (இப்படி ரயில் நிலையமும் முக்கிய பேருந்து நிலையமும் அருகருகே அமைவது அரிது தான்..இல்லையா? ) //

    Same -- in
    1) Vadodara (Baroda in GJ)),
    2) Surat (GJ),
    3) Bangalore (KAR),
    4) VijayaWada (AP)

    ReplyDelete
  4. சேட்டா..வளர நண்ணி...

    ReplyDelete
  5. // ! சிவகுமார் ! said...
    சின்ன தளபதி பரத் 'லஜ்ஜாவதியே' பாடல் மூலம் கேரள மக்களை கட்டி போட்டு உள்ளார் போல.//

    *********

    அட ஆமாமுள்ள ! நன்றி சிவா

    ReplyDelete
  6. துளசி கோபால் said...
    செம்மன்னூர் ஜுவல்லரி கடையைப்பற்றி எழுதலைன்னா திருசூர் பயணம் முழுமை அடையாது கேட்டோ:-)))))

    ***

    டீச்சர், என் கூட வீட்டம்மா வரலை. சத்தமா சொல்லாதீங்க. ஏன் அங்கே ஏதும் வாங்கலைன்னு வாங்கி கட்டிக்கணும் :))

    ReplyDelete
  7. மாதவா: ரயில் நிலையம் குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. கோவை நேரம் said...
    சேட்டா..வளர நண்ணி...

    **

    நன்றி கோவை நேரம் ! உங்களுக்கும் பயண கட்டுரை பிடிக்குமாச்சே !

    ReplyDelete
  9. அருமையான பதிவு.
    நீங்கள் சொல்லும் விதம் நேர்த்தி.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. பயணக் கட்டுரை மிக அருமை மோகன்....

    எஞ்சாய்! :)

    ReplyDelete
  11. முக நூலில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  12. நன்றி வெங்கட்

    ReplyDelete
  13. திருச்சூர் பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    கோவையிலும் முன்புறம் முழுவதும் பெண்கள். பின்புறம் தான் ஆண்கள். ஆண்கள் முன்னாடி பக்கம் இறங்கக்கூட அனுமதி கிடையாது. இதற்காக சண்டையெல்லாம் போட்டிருக்கோம் தெரியுமா....:)

    ReplyDelete
  14. நன்றி கோவை2தில்லி மேடம்

    //இதற்காக சண்டையெல்லாம் போட்டிருக்கோம் தெரியுமா....:)

    ஆண்கள் பின் பக்கம் தான் உட்காரணும் என சண்டை போட்டீர்களா? !!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...