Thursday, January 10, 2013

மளிகை கடைக்காரர் வாழ்க்கை -பேட்டி

ங்கள் வீட்டின் அருகே மளிகை கடை வைத்துள்ள அவரை தினமும் சந்திக்கிறேன். தன் மனைவியோடு சேர்ந்தே கடையை பார்த்து கொள்வார். எங்கள் வீட்டுக்கு மினரல் வாட்டர் கொண்டு வருவதில் தொடங்கி, மளிகை, காய்கறி என பலவும் நாங்கள் வாங்கும் கடை. இவரது குட்டி பையன் ரோஹித் எனக்கு ரொம்ப செல்லம். நான் வாங்க -போங்க " என்று கூப்பிட, அவன் " டேய் போடா " ரேஞ்சுக்கு என்னை உரிமையாய் அழைப்பான்.

எப்போதும் அதிகம் பேசாத அவரை இம்முறை இணையத்தில் வெளியாகும் பேட்டி என்று சொல்லி பேசவைத்தேன். அவர் பேசியதிலிருந்து :

சாத்தூர் அருகே இருக்க சுப்ரமணியபுரம் தான் எங்க ஊரு (அட சசிகுமார் நடிச்ச ஹிட் படத்து பேரு!) எங்க தாத்தா விவசாயம் செஞ்சார். அப்பா மிலிட்டரியில் கொஞ்ச வருஷம் வேலை பார்த்துட்டு,  எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போதே மிலிடரியில் இருந்து திரும்ப வந்துட்டார்.

மிலிட்டரி அனுபவம் இருந்ததாலே BSNL மாதிரி பல கம்பனியில் அப்பாவுக்கு வேலை தர்றேன்னாங்க. அவர் போகலை. விவசாயம் தான் பார்ப்பேன்னு இருந்துட்டார்

எங்க வீட்டிலே நான் தான் மூத்த பையன். பத்தாவது வரைக்கும் படிச்சேன். எனக்கு ரெண்டு தம்பிங்க. ரெண்டு பேரும் பார்மசி கோர்ஸ் படிச்சுட்டு அதே லைனில் வேலை பாக்கிறாங்க

         

1991-ல் பத்தாவது முடிச்சுட்டு கொஞ்ச நாள் வேற வேற மளிகை கடையில் வேலை பார்த்தேன். ஒவ்வொரு கடையை விட்டு நிக்க ஒவ்வொரு காரணம். ஒருத்தனுக்கு ஜாதகம் சரியில்லைன்னா ஒரே இடத்தில வேலையில் நிக்க முடியாது. அது அடுத்தடுத்த வேலைக்கு அவனை தள்ளிடும். அது அவன் கையில் இல்லை

மூணு நாலு வருஷம் அப்பாவுக்கு உதவியா விவசாயம் பண்ணேன். நடவு நடுவது, அறுவடை பண்றது எல்லாத்துக்கும் ஆள் இருக்கும் மேற்பார்வை பாக்கிறது தான் நம்ம வேலை.

எங்க ஊர் சிவகாசி பக்கம் இல்லியா? கிராமத்தில் கூட நிறைய பேர் தீப்பெட்டி தயார் செய்வாங்க. நானும் அப்படி ஒரு தீப்பெட்டி கம்பனியில் வேலை பார்த்தேன். இன்னொரு பக்கம் அப்பாவுக்கு விவசாயத்திலும் உதவினேன்

2000-த்துக்கு மேலே ஊரில மழையே இல்லை ஒவ்வொரு வருஷமும் விவசாயத்தில நஷ்டம் தான். இனிமே விவசாயத்தை நம்பி பலன் இல்லைன்னு புரிஞ்சிடுச்சு.

டூரிஸ்ட் விசாவில துபாய் போனேன் அங்கே ஏதாவது வேலை கிடைக்குமா அப்படியே பெர்மனன்ட் ஆகிடலாம்னு பார்த்தேன். ஆனா நமக்கு எலெக்டிரிகல் வேலை மாதிரி டெக்னிக்கல் விஷயம் தெரியாதே. எதோ வெல்டிங் வேலைன்னா செய்யலாம்.

அப்ப கார்கில் போர் நடந்ததாலே இந்தியா, பாகிஸ்தான் ரெண்டு நாட்டு ஆளுக்கும் பெர்மனன்ட் விசா குடுக்க கூடாதுன்னுட்டங்க அதுனால ஊருக்கு திரும்ப வந்துட்டேன்.

எங்கம்மாவும் சின்ன வயசுலேந்தே வேலை பார்த்தாங்க. அவங்க ஒரு கவர்ன்மென்ட் ஹாஸ்டலில வார்டனா இருந்தாங்க. சொல்லப் போனா அவங்க சம்பாத்தியம் வச்சு தான் குடும்பே ஓடிச்சு. அப்போவோட விவசாயத்தை வச்சு குடும்பம் நடத்துறது கஷ்டம்.

அம்மா தான் மெட்ராசில் போயி கடை போடுன்னு சொன்னாங்க. நெசப்பாக்கத்தில் ஒரு சொந்தக்காரர் டீ கடை வச்சிருந்தார் . அவர் கூட வந்து தங்கிட்டு எங்கே கடை போடலாம்னு தேடினேன். அவரு வேளச்சேரியில் தங்கியிருந்தார். அதுக்கு பக்கத்தில் இருந்ததால் மடிப்பாக்கத்தில் சுத்தி சுத்தி வந்து, இந்த இடத்தை பிடிச்சேன். ஒரு லட்ச ரூபா முதல் போட்டு கடையை ஆரம்பிச்சோம். முழுக்க முழுக்க அம்மா கொடுத்த பணம் தான்.

துவக்கத்திலே வேலைக்கு உதவிக்கு ஊரிலிருந்து கூட்டி வந்த ஒரு சின்ன பையன் இருந்தான். அவனும் கொஞ்ச நாளில் போய்ட்டான். இப்போல்லாம் வேலைக்கு ஊரிலிருந்து ஆள் கிடைப்பதே இல்லை. முன்னாடி ஏழாவது, எட்டாவது வரைக்கும் மட்டும் படிச்சவங்க நிறைய பேர் ஊர் பக்கம் இருப்பாங்க. இப்ப எல்லாரும் டிகிரியாவது படிச்சிடுறாங்க அப்புறம் எப்படி மளிகை கடையில் வேலை பார்ப்பாங்க ?

உதவிக்கு வேற ஆள் இல்லாதது தான் எனக்கு பெரிய கஷ்டம். காலையில் எல்லா வீட்டுக்கும் பால் பாக்கெட் போடணும்; வாட்டர் கேன் சப்ளை பண்ணனும். ஆள் இருந்தா அவங்க கிட்டே அனுப்பிட்டு நாம கடையை பார்த்துக்கலாம்.

காலையில் பால் பாக்கெட் போட்டுட்டு தான் கடை திறப்பேன். தண்ணி கேன் பல பேரு கேட்டு போன் செய்வாங்க. மனைவி வீட்டு வேலை முடிச்சுட்டு கடைக்கு வரும்போது தான் நான் வீடுகளுக்கு போயி தண்ணி கேன் ஊற்ற முடியும். அவங்க இருக்கும்போதே எல்லா வெளி வேலையும் முடிச்சுக்கணும். காய்கறி போயி வாங்கிட்டு வரணும். பெரும்பாலான பொருள்கள் கடைக்கே கொண்டு வந்து சப்ளை பண்ணிடுறாங்க. ஆனா சில பொருள்கள் நாங்க போயி தான் வாங்கணும்.

காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலையை ஆரம்பிச்சா நைட்டு பத்து மணிக்கு கடை மூடுற வரை விடாம வேலை இருக்கும். மதியம் ரெண்டு மணி நேரம் கடை மூடுவேன் அப்பவும் வீட்டில் படுக்க முடியாது. பையனை ஸ்கூலில் போய் கூட்டி வர்ற வேலை இருக்கும். அவன் வந்தா அப்புறம் எங்கே தூங்குறது ?

எங்க தொழிலில் அனேகமா நஷ்டம் வராது. நஷ்டம் வர ஒரே காரணம் தான். பொருள் கடனுக்கு குடுத்து அவங்க பணம் திரும்ப தராமல் போனா மட்டும் தான் நஷ்டம் வரும் . அப்படி யாரும் பணம் தராம போனா எங்களை அது ரொம்ப பாதிக்கும் வீடுகளை பொறுத்த வரை பிரச்சனை இல்லை. எப்படியும் குடுத்துடுவாங்க. ஆங்காங்கே வீடு கட்ட வர்ற ஆட்கள் " இங்கே தான் கட்டிட வேலை செய்றோம்"னு கடன் வாங்குவாங்க; திடீர்னு காணாம போயிடுவாங்க. அங்கே வேலை செய்ற சாதாரண ஆளுங்களை விடுங்க; ஒரு மேஸ்திரி என்னை பாடா படுத்திட்டார் ஐயாயிரத்துக்கு மேலே பொருள் வாங்கி பணமே தரலை. நாலு வருஷம் ஆச்சு கேட்டு கேட்டு பார்த்தேன். " அதெல்லாம் நான் குடுத்துட்டேனே"ன்னுட்டார். வெறுத்து போயி விட்டுட்டேன்

வாங்குற பொருள் 52 ரூபா வந்தா எல்லாரும் நூறு ரூபா குடுத்துட்டு, ரெண்டு ரூபா அப்புறம் தரேன்; மீதம் அம்பது ரூபா தாங்கன்னு வாங்கிட்டு போவாங்க. இப்படி 1 ரூபா, 2 ரூபா தராம விட்டாலே எங்களுக்கு தினம் நூறு ரூபாயாவது போயிடும்.

சில்லறை பிரச்சனை எங்களுக்கு பெரும் பிரச்சனையா இருக்கு. பொதுவா சில்லறை காசு  கிடைப்பதே பெரிய கஷ்டமா இருக்கு

பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வருவது பற்றியும், இந்த துறையில் வெளிநாடுகள் முதலீடு செய்ய அனுமதி தருவது பற்றியும் தயக்கத்தோடு கேட்க, அவர் பொரிந்து தள்ளி விட்டார். " மடிப்பாக்கத்தில் ஒரு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் இருக்கு.ஒரு நாளைக்கு பல லட்சம் வியாபாரம் அவங்களுக்கு நடக்குது அதெல்லாம் என்னை மாதிரி வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய வியாபாரம் தானே? அந்த கடை இல்லாட்டி எங்களை மாதிரி கடையில் தானே நீங்க வாங்குவீங்க ?

ரிலையன்சுக்கு என்ன அவங்க .. எத்தனையோ தொழில் பண்றாங்க. நாங்கல்லாம் முன்னேறாம சம்பாதிக்கிறதை வச்சு சாப்பிட்டு கிட்டு அப்படியே இருக்க காரணம் இது மாதிரி சூப்பர் மார்கெட் தான். இந்த துறையில் அந்நிய முதலீடு வந்தா நாங்க கடையை அப்படியே மூடிட்டு போக மாட்டோம் ஆனா இப்ப இருக்க மாதிரியே சின்ன ஆளுங்களாவே இருப்போம் ; இப்போ ஆயிரம் ரூபா தினம் கிடைக்குது அப்போ அது 500- ன்னு குறையலாம்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் மனைவி அவரை ரிலீவ் செய்ய வருகிறார். எங்கள் பேச்சு தொடர்ந்தது

ஒரு எல் .ஐ. சி ஏஜன்ட் பாலிசி போடுங்கன்னு சொன்னார். அதை நம்பி ரெண்டு பாலிசி போட்டுட்டேன் மாசம் மூவாயிரம் ரூபா அதில கட்ட வேண்டியது வந்துடுச்சு. அது எனக்கு கழுத்தை பிடிச்சு நெருக்குது ரொம்ப கஷ்டமா இருக்கு. அது இல்லாட்டி ஓரளவு ஈசியா இருக்கும்

" உங்க மகனை என்ன பண்ணலாம்னு இருக்கீங்க. பிசினசிலேயே இருப்பாரா? " என்றதும் அவரை முந்தி கொண்டு அவர் மனைவி சொன்னார்

" பிசினசா ? அது மட்டும் வேண்டவே வேண்டாம். நாங்க பட்ட கஷ்டம் போதும் அவன் ஏதாவது படிச்சு நல்ல வேலைக்கு போகணும்.

இந்த காய்கறி இருக்கு பாருங்க. எல்லாரும் எடுத்துட்டு மிச்சம் இருக்கிறது தான் எங்க வீட்டு சமையலுக்கு எடுத்துப்போம் ஒரு நாளும் நல்ல காய் கிடைக்காது முத்தினது, பழசானது தான் எங்க வீட்டுக்கு "

மனைவி வந்ததால் அவர் பிற வீடுகளுக்கு சென்று தண்ணீர் கேன் போட கிளம்பினார். கடைசியாய் அவர் பெயரை கேட்க, " கடை பேருதான் எல்லாருக்கும் தெரியும். என் பேர் யாருக்கும் தெரியாது. ரங்கசாமி" என்று கூறிவிட்டு கிளம்பினார்.

ஆறு வருடமாய் பழகுபவரின் பெயர் இன்றைக்கு தான் தெரிய வருகிறது. இத்தனை நாள் அவர் கடை பெயரையே அவர் பெயராக நினைத்து வந்துள்ளேன் ! இப்படி நாம் தினம் பழகுவோரில் இன்னும் எத்தனை பேரின் பெயர் நமக்கு தெரியாமலே இருக்கிறது என்ற எண்ணத்துடன் வீட்டை நோக்கி நடந்தேன்.
***

46 comments:

  1. // மிச்சம் இருக்கிறது தான் எங்க வீட்டு சமையலுக்கு எடுத்துப்போம் ஒரு நாளும் நல்ல காய் கிடைக்காது முத்தினது, பழசானது தான் எங்க வீட்டுக்கு //

    எங்க ஊர்ல, நெசவாளியை பத்தி சொல்லுவாங்க, "இடுப்புல வெறும் நூல் துண்டு....நெய்யறது பட்டு சேல"

    இது போன்ற பேட்டிகளில், பினிஷிங் சூப்பரா இருக்கு மோகன். காமெடி இல்லை, சீரியஸ்.

    ReplyDelete
    Replies
    1. சில நேரம் மட்டும் தான் அப்படி அமையுது ரகு; நன்றி

      Delete
  2. அதனாலத்தான் நான் யாரிடம் பழகினாலும்.. பெயர் கேட்டுவிடுவேன்.. நல்லா இருக்கு பேட்டி. தொடருங்கள் மோகன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீவிஜி

      Delete
  3. ஆஹா..!அருமை தொடருங்கள் தொடருகின்றோம்...!(சிரிக்கப்படாது சீரியஸ்)

    ReplyDelete
    Replies

    1. சரிங்கண்ணா ! நன்றி

      Delete
  4. இது நல்லா இருக்கே. இனிமேல யாரைச்சந்த்தித்தாலும் அவங்க பெயரை முதல்ல கேட்டுத்தெரிஞ்சுக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூந்தளிர் நன்றி

      Delete
  5. அரசியல்வாதிங்ககிட்ட இருந்தும், அந்நிய வர்தகத்திடம் இருந்தும், மாற்றங்களை தேடும் மனிதகங்ககிட்ட இருந்தும் நாம நம்மல காப்பாத்திக்கனும்ன்னா, நாமும் மாற்றங்களை பத்தி கொஞ்சம் யோசிக்கனும். Realiance-ச தேடி மக்கள் ஏன் ஓடுராங்க? 1. எல்லா பொருளும் ஒரே இடத்துல கிடைக்கும் 2. எந்தபொருளையும் தொட்டு தரம் பார்த்து எடுக்கலாம் 3.Fresh-சா இருக்கும். இந்த அடிப்படையை செயல்படுத்தறதைபத்தி நாமும் கொஞ்சம் யோசிக்கலாம். வேற மாற்றங்கள் எதாவது செய்யலாம். மாற்றங்களை தடுக்கமுடியாது, அதுக்கேத்தபடி நாம மாறிக்கலாம் இல்லையேல் மறித்துப்போவோம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. சிறுவர்த்தகர்களின் நாடித்துடிப்பை அறிவிக்கும் நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் மார்கெட் தேவையா என்பது நீயா நானாவில் விவாதிக்கும் அளவு பெரிய விஷயம். இங்கு அவர் பக்க கருத்தை மட்டுமே பதிவு செய்துள்ளேன் நன்றி பிரபு

      Delete
  6. //இப்படி 1 ரூபா, 2 ரூபா தராம விட்டாலே எங்களுக்கு தினம் நூறு ரூபாயாவது போயிடும்.//


    பெரிய மால்களுக்கு போனால் 55 பைசவை அடுத்த ரூபாய்க்கு round off செய்து வாங்கும் போது நாம் சும்மா வந்து விடுகிறோம். இந்த மாதிரி சிறு வியாபாரிகளிடம் நாம் கணக்கு பார்க்கிறோம். வருத்தமான விஷயம்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ராம்வி. இவர் சொன்ன பிறகு அட்லீஸ்ட் நான் இவ்விஷயத்தில் மாறியுள்ளேன்

      Delete
  7. ஒரு சின்ன விஷயம் பதிவில் எழுத விட்டுட்டேன்:

    இந்த பேட்டி எடுத்து ஓரிரு மாதம் ஆகுது. இதற்கு முன் நானும் 52 ரூபா வந்தால் நூறு ரூபாய் தந்து விட்டு மீதம் 50 ரூபா வாங்கி போகிற ஆள் தான். இப்போதெல்லாம் அது மாதிரி நேரத்தில் 2 ருபாய் தந்துவிட்டு தான் மீதம் 50 வாங்குகிறேன். அல்லது 48 ரூபா தந்தாலும் பேசாமல் வாங்கி போகிறேன்.. இவரிடம் மட்டுமல்ல.. எல்லா வியாபாரிகளிடமும் !

    ReplyDelete
  8. யதார்த்தமான நடைல பேட்டி எடுக்கர்துலையும் சரி அதை பதிவா போடர்துலையும் சரி உங்களை மிஞ்ச ஆளே கிடையாது சார்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் அதிகமாவே பாராட்டிட்டீங்க :)

      மகிழ்ச்சி தக்குடு நன்றி

      Delete
  9. மளிகைக் கடை வியாபார அனுபவம் எனக்கு உண்டு என்பதால் அந்த மனிதரின் வாசகங்களை என்னால் முழுமையாய் புரிந்து கொள்ள முடிகிறது

    ReplyDelete
    Replies
    1. அட நீங்களும் மளிகை வியாபாரத்தில் இருந்திருக்கீங்களா சீனு ? !

      Delete
  10. நான் தென் தமிழகம் சேர்ந்தவள். என் உறவினரில் முக்கால்வாசிப்பேர் சென்னையிலும் கோவையிலும் மளிகைக்கடை நடத்துபவர்கள்தான்.கடுமையாக உழைப்பார்கள். சொந்த ஊரில் சொத்து சேர்ப்பதும் தங்கநகைகள் வாங்குவதும்தான் அவர்களது சேமிப்பு. 120 பவுன் நகையுடன் திருமணமாகி சென்னையில் வசிக்கும் என் மாமா மகள் மிகச் சாதாரணமாக கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்வாள்.மளிகைக்கடை நடத்துபவர்களில் ஒருசிலரைத்தவிர யாருமே நஷ்டபட்டதே இல்லை.முக்கியமான ஒரு விஷயம்... அவர்களது உழைப்பு அத்தனையும் காசாகிறது வரி எதுவும் கட்ட தேவையில்லை. ஆனாலும் அவர்கள் அனைவருமே தங்கள் வாரிசுகள் படித்து சுகமான வேலையில் சேரவேண்டுமென்றே விரும்புகின்றனர். காரணம் ஓய்வில்லா உழைப்பின் அயர்ச்சிதான்.

    "இந்த காய்கறி இருக்கு பாருங்க. எல்லாரும் எடுத்துட்டு மிச்சம் இருக்கிறது தான் எங்க வீட்டு சமையலுக்கு எடுத்துப்போம் ஒரு நாளும் நல்ல காய் கிடைக்காது முத்தினது, பழசானது தான் எங்க வீட்டுக்கு "இதற்கு காரணம் பைசா பைசாவாக சேமிப்பதால் வீணாக்க மனம் வருவதில்லை .

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு மிக மிக நன்றி உமா மேடம்

      Delete

  11. பொழுதுபோக்குகள் என்று நேரம் செலவிட முடியாது இவர் போன்ற வியாபாரிகளால். நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்.மருந்து கடை வைத்திருந்த என் அப்பாவும் கூட சில வருடங்கள் முன் எங்கள் கடை முழுதாய் மூடப்படும் வரை டிவி, சினிமா எதுவும் பார்க்க மாட்டார்

      Delete
  12. Good one. What is the shop's name?

    ReplyDelete
    Replies
    1. சரவணா புரொவிஷன் ஸ்டோர் .!!

      Delete
  13. //இல்லை.முக்கியமான ஒரு விஷயம்... அவர்களது உழைப்பு அத்தனையும் காசாகிறது வரி எதுவும் கட்ட தேவையில்லை. //

    இது ரொம்ப தப்பு. பெரும்பாலும் இந்த கடைகளில் நாம் பொருளுக்கு கொடுக்கும் வரி (vat, service tax) எதுவுமே அரசாங்கத்தை அடைவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் சேவை வரி நம்மிடம் வசூலிக்கிற மாதிரி தெரியலை. மிக சிறிய கடைகளான இவர்களுக்கு எந்த வரி பற்றியும் போதிய ஞானம் கிடையாது. அரசாங்கமும் இவர்களை பெரிதும் கண்காணிப்பதில்லை என நினைக்கிறேன்

      Delete
    2. I think in recent years they were asked to pay a fixed amount of Rs 15000(not sure) as tax for the entire year and they dont need to pay anything else. Some one can confirm...

      Delete
    3. Income tax inspector of the area s supposed to check these small shops, their account books and their IT returns. They do once a year. When they do, these pettry traders 'take care' of them. Not filing IT return is a crimimal offence. It is a joke to read here that the shop keeper Rangan is not aware of IT returns. He is lying.

      Delete
  14. பேட்டி நல்லாயிருக்கு.வரி கட்ட வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. கட்டனும் தான். குறிப்பா விற்பனை வரி மற்றும், இன்கம் டாக்ஸ்

      Delete
  15. அந்நிய முதலீடுவந்தால் இவர்கள் பாடு ரொம்ப கஷ்டம்.. எனக்கு தெரிந்து ரிலையன்ஸ், ஸ்பென்சர்ஸ் போன்ற சூப்பர் மார்கெட்களை விட இந்தமாதிரி மளிகை கடைகளில் எல்லா பொருளுமே ஓரிரு ரூபாய் குறைவு தான்..
    நன்றி சார்..

    ReplyDelete
    Replies
    1. I don't think this is a correct statement. The charges are more in these small shops. also they at times "hide" the freebies that come with some items. eg-tooth brush which comes as a free offer won't be offered to the customer.

      Delete
    2. //ரிலையன்ஸ், ஸ்பென்சர்ஸ் போன்ற சூப்பர் மார்கெட்களை விட இந்தமாதிரி மளிகை கடைகளில் எல்லா பொருளுமே ஓரிரு ரூபாய் குறைவு தான்.. //


      சரியா சொன்னீங்க ! நன்றி

      Delete
    3. Instead of endorsing Samira's, u wd have endorsed the Unknown's. Coz these shop keepers r notorious in getting small profits exploiting the ignorance of the customers. They charge more than the MRP printed. The companies already allow margins in profit. These petty traders get more than that. On the other hand, the big retailers or departmental stores charge less than the MRP printed. Further, they give wide publicity to the freebies attached to the sale items.

      Another dirty things about these pettry traders is their hygiene. They don't preserve their sale items safely. It is a heap and dirty. They have a small store area adjoining and it wd be better for u to go and find how it is kept. Every trader's first motive is profit. Agreed. But these fellows' first and last motive is profit at any cost or event. They abuse their workers, mostly the workers are child labor. These child labor r brought from villages from poor families and these traders in cities keep them bonded to them.

      You have attempted to glorify these petty traders whereas they should have been nailed for their many acts, which I have listed some above.

      Delete
  16. இப்படித்தான் எல்லா தொழிலிலும் இருப்பவர்கள் தனக்கு அப்புறம் தங்கள் வாரிசுகளை அதே தொழிலில் ஈடுபடுத்த யோசிக்கிறார்கள்(சினிமா,அரசியல் தவிர). தொழிற்கொள்கையின் பாதிப்புகள்....

    ReplyDelete
    Replies
    1. என் மகளை நான் செய்யும் தொழிலில் தான் ஈடுபடுத்த நினைக்கிறேன்:)) அவளுக்கும் இப்போதைக்கு அதில் தான் ஆர்வம் ! பார்க்கலாம் !

      Delete
  17. நெகிழ்ச்சியான பேட்டி.

    அன்புடன்
    அமர்க்களம் கருத்துக்களம்
    www.amarkkalam.net

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமர்க்களம் தொழிற்களம்

      Delete
  18. இப்போல்லாம் வேலைக்கு ஊரிலிருந்து ஆள் கிடைப்பதே இல்லை. முன்னாடி ஏழாவது, எட்டாவது வரைக்கும் மட்டும் படிச்சவங்க நிறைய பேர் ஊர் பக்கம் இருப்பாங்க. இப்ப எல்லாரும் டிகிரியாவது படிச்சிடுறாங்க
    நல்ல மாற்றம். அருமையான பதிவு.
    நன்றி திரு மோகன் குமார்.

    ReplyDelete
    Replies

    1. நன்றி ஐயா மகிழ்ச்சி

      Delete
    2. There s an irony in Rathnavel Natarajan's which has escaped your attention. Perhaps he also has not meant it.

      It is that for the welfare of these petty traders, there must be a population which should not go to school.

      Delete
  19. பேட்டி ரொம்ப நல்லா வந்திருக்கு.

    யானை நடந்து போகும்போது அதன் காலடியில் நசுங்கும் எறும்புகளாய் சிறு வியாபாரிகள். கஷ்டமாத்தான் இருக்கு .

    ReplyDelete
  20. http://www.artveedu.com/2012/11/2011-to-2012.html

    ReplyDelete
  21. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...