Wednesday, November 9, 2011

எஸ். ராமகிருஷ்ணன் சந்திப்பு- 2-ம் பாகம் - படங்களுடன்

முதல் பாகம் இங்கே 


விகடனில் எழுத துவங்கிய பின் தான் நீங்கள் நிறைய பேரால் அறியப்பட்டீர்கள் இல்லையா?

நான் பல வருடங்களுக்கு முன்பு விகடனில் மாணவ நிருபர் ஆக தேர்வு செய்யப்பட்டவன். ஆனால் அந்த காலத்தில் விகடனில் அதிகம் எழுத வில்லை. எழுத தோன்ற வில்லை. எதுவாய் இருந்தாலும் என் உள் உணர்வு சொல்ல வேண்டும். அப்போது தான் செய்வேன். செய்ய வேண்டும் என்பதற்காக எதையும் செய்வதில்லை.

ஒவ்வொருவருக்குமே இந்த உள்ளுணர்வு எப்போதும் சரியான படி வழி நடத்துகிறது. ஆனால் பலரும் அதன் பேச்சை கேட்காமலே கடந்து போய் விடுகிறோம்

ரொம்ப காலம் கழித்து என்னை நானே எழுத்தாளன் ஆக உறுதி செய்து கொண்ட பிறகு விகடனில் இருந்து எழுத சொல்லி கேட்டார்கள். அதன் பின் எழுத ஆரம்பித்த பிறகு நிறைய பேரை நான் சென்று சேர்ந்தேன்.

விகடனில் எழுதுவதற்கும் பிற சிறு பத்திரிக்கைகளில் எழுதுவதற்கும் நிச்சயம் நிறைய வித்தியாசம் உண்டு. விகடனில் அனைவருக்கும் நடந்த அனுபவங்களையே எழுதுவேன். "அடடா இப்படி நமக்கும் நடந்ததே !" என வாசிப்பவர் உணர வேண்டும். சிறு பத்திரிக்கைகள் வாசிப்பவர்கள் இன்னும் நிறைய யோசிப்பவர்கள். சில விஷயங்களை பூடகமாக சொன்னால் கூட அவர்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடியும்.

இப்படி சிறு பத்திரிக்கைக்கும், வெகு ஜன பத்திரிக்கைக்கும் எழுத்து சற்று மாறுபடவே செய்கிறது.
எஸ். ரா வுடன் தேவா
ப்ளாக் வாசிக்கிறீர்களா? ..

நான் ப்ளாக் அதிகம் வாசிப்பதில்லை. எழுதுவோரில் குறைந்தது பத்து சதவீதமேனும் மிக நன்றாக எழுதுகிறார்கள். அவை அனைத்தும் படிக்க நிறைய நேரம் செலவாகும். யாரேனும் குறிப்பிடத்தக்க லிங்க் அனுப்பினால் வாசிப்பேன். இணையம் பக்கம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே செல்வது என வைத்திருக்கிறேன். இந்த நேரமும் கூட உலகம் முழுதும் உள்ள எழுத்தாளர் சங்கம் (யாஹூ குருப் போல) உள்ளிட்ட விஷயங்களில் செலவாகி விடுகிறது.

உலக எழுத்தாளர்களுடன் இப்படி உரையாடுவது மிக பயனுள்ளதாக உள்ளது. மற்ற நாடுகள் பற்றி அறிய முடிகிறது. அவர்களில் யார் இந்தியா வந்தாலும் சந்திக்கிறோம். நாங்கள் சென்றால் அவர்களை பார்க்கிறோம். உலக எழுத்தாளர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் இணையத்திற்கு வரவழைத்து அந்த நேரத்தில் வாசகர்களை வேண்டிய கேள்விகள் கேட்கலாம் என சொல்லும் யோசனை அவர்களுக்கு உள்ளது. இப்படி அனைத்து நாட்டு எழுத்தாளர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில பேச கிடைப்பது ரொம்ப அபூர்வம். அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

 சினிமாவில் வசனம் திரைக்கதை இவற்றில் ஈடு படுகிறீர்களே . இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளதா?

உள்ளது. ஆனால் அந்த எண்ணம் இன்னும் தீவிரமாக வில்லை. அது குறித்து சில வாய்ப்புகள் கூட எட்டி பார்த்தது. ஆனால் என்னிடம் உள்ள பழக்கம் தான் இதிலும் தொடர்ந்தது. எனக்கு தீவிரமாய் செய்ய தோன்றாமல் வாய்ப்பு வருகிறது என்பதற்காக அதனை செய்ய விரும்ப வில்லை. அப்படி செய்தால் அது சிறப்பாக இருக்காது. இன்னும் சில ஆண்டுகளில் எனக்கே படம் இயக்க வேண்டும் என்கிற எண்ணம் தீவிரமானால் நான் படம் இயக்கலாம்.

அப்போது மீண்டும் வாய்ப்பு வருமா என நீங்கள் கேட்கலாம். வரும். வர வைக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் வாழ்க்கையில் வாய்ப்பு எப்போதும் ஒரு முறை தான் வரும், அதனை தவற விட்டு விட்டால் அவ்வளவு தான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாய்ப்புகள் ஒரு cycle-ல் மீண்டும் மீண்டும் வரும். காத்திருக்க வேண்டும். சில நேரம் வாய்ப்பு வருகிறது என்பதை நாம் உணராமல் கூட போய் விடுவோம். அது போலன்றி விழிப்புடன் கவனித்தால் மறுபடி வாய்ப்பு வருவது தெரியும்

முதல் வரிசை முழுதும் அவர் எழுதிய புத்தகங்கள் அடுத்த வரிசையில் உலக படங்கள் டீவீடி 
 எழுதுவதற்கு அடிப்படையில் என்ன தேவை என நினைக்கிறீர்கள்?


உங்களுக்கு தெரியாத, நீங்கள் இது வரை சந்திக்காத புது மனிதர்களை சந்தியுங்கள். அப்போது தான் உங்கள் அறிவும் உலகமும் விரிவடையும். அவர்கள் உங்கள் தொழில் சார்ந்தவர்களாக இருக்க கூடாது. முற்றிலும் புதியவர்களாக பயணத்தில் சந்திப்பவர்கள் போல் இருக்க வேண்டும். இப்படி புது மனிதர்கள் ஐந்து பேரையாவது மாதா மாதம் சந்தித்தால், வாழ்வில் நிறைய விஷயங்கள் தெரிய வரும். உங்கள் Perception விரிவடையும்.

ஆனால் உண்மையில் நம்மில் பலர் என்ன செய்கிறோம்? நம் துறையை சேர்ந்த பலரை நமக்கு முக நூலிலும் மற்ற விதமாகவும் நண்பர்களாக்கி கொள்கிறோம். அவர்களில் யாராவது நமக்கு தேவை படும் போது உதவுவார்கள் என நினைக்கிறோம். அவர்களும் இப்படியே தான் நினைக்கிறார்கள்.

உண்மையில் வாழ்க்கையில் ஐந்து பேர் தான் உங்கள் நெருக்கதிற்குரியவர்களாக இருக்க முடியும் என மனவியல் அறிஞர்கள் கூறி உள்ளனர். இந்த ஐந்து பேருடன் நீங்கள் நல்ல உறவும், நெருக்கமும் maintain செய்தால் அதுவே போதுமானது.


அறையில் காந்தி, பாரதி படங்கள் 
மிக நெருங்கிய உறவு என்பது நீண்ட நாள் பழகியதால் மட்டுமே வரும். புதிதாய் தெரிந்தவர்களுடன் சில விஷயங்கள் பேசினாலும் நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள், நமது நெடு நாள் நண்பர்களாக தான் இருப்பார்கள். அவர்கள் உங்களை பல்வேறு சூழ் நிலைகளில் பார்த்திருப்பார்கள். நீங்கள் நல்ல நிலையிலும், பிரச்சனை வரும் போதும் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கும். அத்தனையும் தாண்டி நிலைக்கும் நட்பே சிறந்தது.

மிடில் கிளாஸ் மனம் தான் வாங்கிய பொருள்கள் அனைத்தையும் முழுமையாக பயன்படுத்த (Utility ) நினைக்கிறது. பணக்காரர்கள் அப்படியல்ல. அவர்கள் செலவு செய்வதற்காகவே (Status ) பொருட்களை வாங்குகிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இல்லத்தில் நீச்சல் குளம் உள்ளது. ஆனால் அதை அவர் பயன் படுத்துவதில்லை. ஏன் என்று கேட்டால், "என் வீட்டில் நீச்சல் குளம் உள்ளது என எல்லாருக்கும் தெரிய வேண்டும், அதற்காக தான் உள்ளது. அதில் நான் குளிக்கணும் என அவசியமில்லை" என்கிறார். போலவே அவர் ஐந்து கார் வைத்திருக்கிறார். அதில் ஒன்றில் தான் அவர் போகிறார். குறிப்பிட்ட விலை உயர்ந்த காரை எடுப்பதே இல்லை. அதை எங்கு எடுத்து போக வேண்டுமென அவருக்கு தெரியும் !

முன்பெல்லாம் ஒரு நல்ல வேலை, வீடு, கார் இன்னும் பிற வசதிகள் என வாழ்க்கையில் செட்டில் ஆக குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் ஆனது. ஆனால் இன்று 5 ஆண்டுகளில் வீடு, கார் என அனைத்தையும் ஒருவர் பெற்று விடுகிறார். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதன் பிறகு என்ன செய்வதென அவருக்கு புரிய வில்லை. " ஏதோ வேலைக்கு போயிட்டு வர்றேன். வாழ்க்கையில் ஒன்னும் பிடிப்பு இல்லையே " என்கிறார்கள். செய்யும் வேலை வாழ்க்கை முழுக்க சுவாரஸ்யம் தருவதாக அவர்களுக்கு இல்லை. இங்கு தான் இலக்கியம் அவனுக்கு தேவை படுகிறது. அவனுக்கு சற்று ஆறுதலாகவும் தெளிவையும் தர இலக்கியம் உதவினால் அதுவே அவனுக்கு பெரிய உதவி

ஒவ்வொரு மனிதனின் வலி, அவன் தோல்வி அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பது தான் என் எழுத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் இது தான் தேவை என நான் நினைக்கிறேன்

****
நவம்பர் மாதத்தில் ஒரு வாரம் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் பற்றி தான் பேச உள்ளதாகவும், முடிந்தால் இதனை ஒவ்வோர் ஆண்டும் மற்றவர்களை பேச சொல்லி தொடரும் எண்ணம் உள்ளதாகவும் சொன்னார்.

இப்படி நாங்கள் பேசி கொண்டிருந்ததில் இரண்டு மணி நேரம் போனதே தெரிய வில்லை. நடுவில் அற்புதமான காபி குடுத்த அவர் மனைவி நாங்கள் கிளம்பி விடுவோம் என நினைத்தோ என்னவோ, " பையனை கிளாசில் இருந்து கூட்டி வருகிறேன் " என எங்களிடம் சொல்லி சென்றார். அவர் சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்த போதும் எங்கள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.

எஸ். ராவிடம் புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொன்னோம். அது வரை கைலியில் அமர்ந்து பேசியவர் உள்ளே சென்று சட்டை, பேன்ட் போட்டு வந்தார். அவர் உதவியாளர் எங்கள் மூவரையும் சேர்த்து புகை படம் எடுத்தார். நாங்கள் கொண்டு சென்ற புத்தகங்கள் இரண்டை அவரிடம் தர, பார்த்து விட்டு "இரண்டும் நல்ல புத்தகங்கள்; ஏற்கனவே வாசித்துள்ளேன்" என பெற்று கொண்டார். எங்கள் இருவருக்கும் ஆளுக்கு ஒரு புத்தகம் தன் கையெழுத்துடன் தந்தார். "மிக்க அன்புடன்" என புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார். மெயிலிலும் அப்படி தான் எழுதுகிறார். அவை வெறும் வார்த்தைகள் அல்ல, உண்மையான எஸ். ரா வும் அப்படி தான் என புரிந்தது.

நிச்சயம் மீண்டும் சந்திப்போம் என்று கூறி விட்டு கிளம்பினோம். "முன் பின் தெரியாத நபர்கள் என்னை காண வந்தால் நான் கூட இரண்டு மணி நேரம் செலவழிக்க மாட்டேன். இத்தனை பெரிய மனிதர் எவ்வளவோ வேலைக்கு நடுவே நம்முடன் இவ்வளவு நேரம் செலவிட்டது பெரிய விஷயம் தேவா" என்றேன் நான். தேவா புன்னகைத்தான்.                                                           (முற்றும்) 

10 comments:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மாறுபட்ட ஒரு சந்திப்பு... நாங்களும் உங்களுடனேயே சந்தித்தது போன்ற உணர்வு...

    பகிர்ந்த உங்களுக்கு நன்றி மோகன்...

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு மோகன் குமார். நன்றி.

    ReplyDelete
  4. நன்றி :

    ரத்னவேல் ஐயா
    கேபிள்
    வெங்கட் நாகராஜ்
    ராமலட்சுமி

    ReplyDelete
  5. Anonymous1:23:00 PM

    நட்பு குறித்து அவர் சொன்ன விதம் நன்றாக இருந்தது. பேட்டிக்கு நன்றி..தங்களுக்கும், தேவாவுக்கும்!!

    ReplyDelete
  6. எஸ்.ரா. உடனான பேட்டி சுவாரசியம்.
    எளிமை பெரியவர்களுக்கு அழகு என்பதை நிரூபிக்கிறது

    ReplyDelete
  7. அற்புதம்! உங்கள் எழுத்தும்--அவர் பேச்சும். அவர் கூறியவை அனைத்தும் வார்த்தைக்கு வார்த்தை உண்மை.. அவரின் இன்றைய வாழ்வு அவர் வளர்ந்த சுதந்திரமான சூழலையே எடுத்துக்காட்டுகிறது.

    ReplyDelete
  8. நன்றி சிவகுமார்
    **
    ரிஷபன் சார்: "எளிமையே அழகு" சரியாக சொன்னீர்கள். நன்றி
    **
    நன்றி டாக்டர் வடிவுக்கரசி எஸ். ரா குறித்து நீங்கள் சொல்வது உண்மையே !

    ReplyDelete
  9. ஒவ்வொரு மனிதனின் வலி, அவன் தோல்வி அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பது தான் என் எழுத்தில் உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் இது தான் தேவை என நான் நினைக்கிறேன்
    . சில நேரம் வாய்ப்பு வருகிறது என்பதை நாம் உணராமல் கூட போய் விடுவோம். அது போலன்றி விழிப்புடன் கவனித்தால் மறுபடி வாய்ப்பு வருவது தெரியும்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...