Saturday, November 12, 2011

வாங்க முன்னேறி பார்க்கலாம் : நட்பு - நெட்வொர்க்கிங்

முன்பு வாங்க முன்னேறி பார்க்கலாம் என்கிற தொடர் ப்ளாகில் எழுதி வந்தேன். அதற்கு என்ன ஆயிற்று என சில நண்பர்கள் விசாரிக்கிறார்கள். (யாருன்னுல்லாம் கேட்க கூடாது. ரைட்டா ?)

ப்ளாகில் தான் அது தொடர வில்லையே ஒழிய அதன் பின் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் எழுதி, அவை பிரசுரம் ஆகாமல் பத்திரமாக என்னிடமே உள்ளது. வாங்க முன்னேறி பார்க்கலாம் நேரடியாக புத்தகமாக வெளியிட ஐடியா. வெளியிடாமல் உள்ளதில் ஒரு பகுதி இதோ உங்கள் பார்வைக்கு ..
**
மெரிக்காவில் சாப்ட்வேர் துறையில், மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் இந்தியர்கள், வார நாட்களில் பகல் நேரத்தில் அலுவலகம் செல்லாமல் கூட கோல்ப் ஆட செல்வார்கள்.. ஏன் தெரியுமா? யோசியுங்கள்.. விடை பின்னர்...

**
பெப்சி நிறுவனத்தின் தலைவரான இந்திரா நூயி தன் வெற்றிக்கான முக்கிய காரணமாக சொல்வது எதை தெரியுமா? நெட்வொர்க்கிங் !!  தமிழில் சொல்ல வேண்டுமானால், தனது துறையை சார்ந்த பலரை தெரிந்து வைத்திருப்பதும், நண்பர்களாய் கொள்வதும்.. 
This is Bloggers Network !!
 முன்னேற வேண்டும் என்பது தனி மனிதனின் எண்ணம்/ ஆசை,  ஆயினும், ஒவ்வொரு கட்டத்திலும் அவன் முன்னேற, பல்வேறு மனிதர்களின் உதவியும் அவசியம் தேவைப்படுகிறது. 

ஒரு உதாரணம் எடுத்து கொள்வோம். ஒரு நிறுவனத்தில் தற்சமயம் வேலை பார்க்கும் ஒருவர் சுயமாக தொழில் தொடங்குவதை தன் லட்சியமாக கொண்டுள்ளார். இதற்கு இவர் என்னென்னெவெல்லாம் செய்ய வேண்டும்? முதலில் நிறுவனத்திற்கான நிதி (Capital) திரட்ட வேண்டும். இதற்கு தன்னிடமுள்ள பணம் தவிர நண்பர்கள் மற்றும் உறவினர்களை நாடலாம். அல்லது வங்கிகள், தனியார் நிறுவனங்களை அணுகலாம். அடுத்து நிறுவனத்திற்கு தேவையான அனுமதி (License) பெறுதல், உபகரணங்கள் வாங்குதல், இடம் முடிவு செய்தல், ஊழியர்களை தேர்ந்தெடுத்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் அது சம்பந்தப்பட்ட நபர்களின் வழிகாட்டலும் உதவியும் தேவைப்படுகிறது. 

இவை அனைத்திற்கும், அந்த நபர் துவக்கத்திலிருந்தே இது சம்பந்தப்பட்ட நபர்களுடன் நட்பை வளர்த்திட வேண்டும். மேலும் நிறுவனம் தொடங்கிய பின்னும் அதனை வெற்றிகரமாய் நடத்திட பல்வேறு மனிதர்களின் உறவு தேவைப்படவே செய்கிறது. 

 கவிஞர் வைரமுத்து சொல்லுவார்: "உன்னை விட பெரிய மனிதரை சந்திக்க வேண்டுமெனில் அதிகாலையிலேயே அவர் இல்லம் சென்று விடு; சற்று தாமதமாக சென்றால், அவர் தன்னை விட பெரிய மனிதரை காண சென்றிருப்பார்". 

இப்போதெல்லாம் இதில் ஒரு சிறிய மாற்றம். இன்றைக்கு யாரும் யாரையும் வீட்டுக்கு தேடி சென்று பார்ப்பது இல்லை ! மொபைல்
மற்றும் இணையமுமே இன்று பாதி வேலையை எளிதில் முடிக்க உதவுகிறது.

முன்பெல்லாம் ஒவ்வொரு மனிதருக்கும் நெருங்கிய நண்பர்கள் என்றால் "நான்கைந்து பேர்" என்றிருந்தது. இன்று ஒவ்வொருவருக்கும் ஏறக்குறைய நூறு நண்பர்கள் உள்ளனர். ( பேஸ்புக் நண்பர்கள் எண்ணிக்கையை வைத்து இதை சொல்லவில்லை.  பள்ளி காலத்து நண்பர்கள், கல்லூரியில் உடன் படித்தவர்கள், வெவ்வேறு நிறுவனங்களில் நாம் பணி புரிந்த போது, உடன் பணியாற்றியவர்கள், நம் நண்பர்கள் மூலம் நமக்கு நட்பானவர்கள்.. இப்படி தொடர்ந்து தொடர்பில் இருக்கும் நண்பர்கள்...)

தற்போது இணையத்தின் வளர்ச்சியால் இ மெயில் மூலம் ஒரே மெயிலில் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு தகவலை கூறி விட முடிகிறது. லின்குட் இன்,  பேஸ்புக் இவற்றின் மூலமும் புது புது நட்புகள் பெறுவதும் அவற்றை வளர்ப்பதும் முடிகிறது. எனினும் இவற்றை நாம் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதும் முக்கியம். பெரும்பாலானோர் இணையத்தை "ஜோக்" அடிக்கவும், வீடியோக்களை பகிரவும் மட்டுமே பயன் படுத்துகிறார்கள். ஆனால் இணையத்தை தங்கள் இலக்கை அடைய சரியாக பயன் படுத்துவோரும் இருக்கவே செய்கிறார்கள். 

ஒரு அரசாங்க அலுவலத்தில் பெரிய அதிகாரியை சந்திக்க அடிக்கடி நீங்கள் செல்கிறீர்கள் என்றால் அந்த அதிகாரியிடம் மட்டுமல்ல அங்குள்ள கிளார்க், பியூன் என அனைவரிடமும் நட்பை வளர்ப்பது அவசியம். நீங்கள் நட்பாயிருந்தால் பியூன்கூட உங்களுக்கு பயனுள்ள தகவலை கூறக்கூடும்.
அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு செல்கையில் நம் வேலை மட்டுமே குறி என்றில்லாமல் அனைவரையும் பார்த்து நட்புடன் புன்னகைப்பதும், பேசுவதும் பல விதத்திலும் பயனளிக்கும். 
**
நம் நண்பர்களுக்கு மட்டுமல்ல, நம்மை விட பெரிய மனிதர்களுக்கு "புத்தாண்டு வாழ்த்து"சொல்வதை நாம் எல்லாருமே செய்கிறோம். ஆயினும் அவர்களின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு அதற்கு வாழ்த்து சொல்லுங்கள். புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்வோர் நூறு பேர் எனில் பிறந்த நாளில் வாழ்த்துவோர் நான்கைந்து பேர் தான் இருப்பர். 

தொடர்புகளை வளர்ப்பது "நம் முன்னேற்றத்திற்க்காக" என்ற சுய நலத்துடன் மட்டுமே இருக்க கூடாது. நம் துறை சார்ந்த அறிவை வளர்க்கவும், நமக்கு தெரிந்த வேறு யாருக்கோ உதவி கேட்டும் கூட நாம் அவர்களை நாடக்கூடும். குறிப்பாய் நம் துறை சார்ந்த அறிவை வளர்க்க புது புது நட்புகள் நிச்சயம் உதவுகிறது. சட்டம் சார்ந்த அனைத்து புது தகவல்களையும் எனக்கு உடனுக்குடன் மெயில் மூலம் சொல்லும் நண்பர்கள் அனைவரும், இதுவரை நான் நேரில் பார்த்திராத, இணையம் மூலம் நட்பானவர்களே. 

நம் துறை சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே க்ருப் மெயில் உருவாக்கி, அவர்களுக்கு புது புது தகவல்களை பரிமாறி வரலாம். தினம் தினம் மெயில் அனுப்பி போரடிக்காமல் வாரம் ஓரிருமுறை முக்கிய தகவல்களை மட்டும் இவ்வாறு அனுப்புவது நலம். 

துவக்கத்தில் கேட்ட கோல்ப் பற்றிய கேள்விக்கான விடை:

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களின் MD மற்றும் CEOக்கள் பகலில் கோல்ப் ஆடுவார்கள். (ஆம் ! பகலில்!!) இவர்கள் அறிமுகமும் அதன் மூலம் கம்பனிக்கு ஆர்டரும் கிடைக்குமிடம் கோல்ப் மைதானம் தான். இதனால் தான் தங்கள் பாசுக்கு தெரிந்தே பல மார்கெடிங் மேனஜர்கள் பகலில் கோல்ப் ஆட செல்கிறார்கள் ! Networking !!

நான் வேலை பார்த்த நிறுவனமொன்றில், ஒவ்வொரு துறையின் தலைவரும் (Head of the Department) மாதம் ஒரு முறை, தன் துறை சார்ந்த வேறு ஒரு நிறுவனத்தில் பணி புரியும் நபருடன் (Peer in the same profession) ஓட்டலில் உணவருந்தலாம். இதற்கான செலவை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். இத்தகைய சந்திப்பினால் புது தகவல்கள் கிடைக்கும், ஊழியரின் அறிவு வளரும், இது நிறுவன வளர்ச்சிக்கு உதவும் என்பதால் இந்த ஏற்பாடு. அங்கிருந்த போது எனக்கு வந்த  இப்பழக்கம் அங்கிருந்து விலகிய பின்னும் தொடர்கிறது. மாதம் ஒரு முறை துறை சார்ந்த ஒரு நபரை ஓட்டலிலோ அவர் அலுவலகத்திலோ சந்திப்பதை இன்றும் தொடர்கிறேன். இது பல்வேறு விதங்களில் பயனளிக்கிறது. 

மேலும் புது நட்புகளை அடைய நிறைய மீட்டிங்குகளுக்கு (Seminar, Conference, etc) செல்வதும், அப்போது சந்திக்கும் நபர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வதும் கூட மிகுந்த பயன் தரும்.  
**
உதவுவது ஒரு வழி பாதையன்று. நண்பர்களிடம் நாம் மட்டுமே உதவி கேட்கவேண்டும் என்றில்லை. அவர்களும் கூட தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டியவருக்கோ உங்களிடம் உதவிகள் கேட்க கூடும்.

அடுத்த முறை ஏதேனும் மீட்டிங் செல்லும் போது உங்கள் அருகிலிருப்பவரிடம் நீங்களே அறிமுகம் செய்து கொண்டு கை குலுக்குங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு அந்த கையும் கூட ஓர் நாள் உதவ கூடும் !! 
***
வாங்க முன்னேறி பார்க்கலாம் முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

15 comments:

  1. அருமையான கருத்துகள்... புத்தகமாக வெளிவர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. sir, Good post i will try to do what u say.

    ReplyDelete
  3. அருமையான கருத்துக்கள்.புத்தகத்தை விரைவில் எதிர் பார்க்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. புத்தகம் சீக்கிரம் வெளிவர வாழ்த்துக்கள்


    நம்ம தளத்தில்:
    ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!

    ReplyDelete
  5. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். புத்தகம் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தும் போது.. நமக்கு காரியம் ஆகிறதோ இல்லையோ..நமக்குள் இருக்கும் பல்வேறு அழுக்குகளையும்,தயக்கங்களையும் களைய முடிகிறது. நாம் மெருகேறினால் எதிலும் வெற்றி நமக்கு தானே. மெருகேருவதே வெற்றி தானே. நான் உதவியவர்கள் நிறைய பேர் எனக்கு நன்றி கூட தெரிவித்ததில்லை. ஆனால் தேவைக்கு அதிகமாகவே அன்பும் நன்றியும் உள்ள அற்புத மனிதர்கள் எப்போதும் என்னை சூழ்ந்தே இருக்கின்றனர். we cannot pay back anything. we can only pay it forward..என்பதே என் அனுபவமாய் இருந்து வந்துள்ளது. உங்களின் இந்த தொடர் புத்தகமாய் வெளிவர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நம்மை விட பெரிய மனிதர்களுக்கு "புத்தாண்டு வாழ்த்து"சொல்வதை நாம் எல்லாருமே செய்கிறோம். ஆயினும் அவர்களின் பிறந்த நாளை தெரிந்து கொண்டு அதற்கு வாழ்த்து சொல்லுங்கள். புத்தாண்டிற்கு வாழ்த்து சொல்வோர் நூறு பேர் எனில் பிறந்த நாளில் வாழ்த்துவோர் நான்கைந்து பேர் தான் இருப்பர்

    உங்க பர்த் டே என்னிக்கு?

    விரைவில் புத்தகமாய் வெளிவர என் நல்வாழ்த்துகளும்.

    ReplyDelete
  8. நன்றி அன்புமணி
    **
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து பாலகிருஷ்ணன்
    **
    நன்றி ராம்வி
    **
    தமிழ் வாசி பிரகாஷ்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  9. ராமலட்சுமி : நன்றி
    **
    மாதவி மேடம்: மகிழ்ச்சி நன்றி
    **
    டாக்டர் வடிவுக்கரசி: நீங்கள் சொல்வது உண்மையே. தொடர்ந்து பதிவுகளை வாசித்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி
    **
    நன்றி ரிஷபன் சார். என் பிறந்த நாள் ஆகஸ்ட் 12. நான் பெரிய ஆள் இல்லை சார். உங்கள் நண்பன்

    ReplyDelete
  10. உங்கள் பதிவு பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_13.html

    ReplyDelete
  11. கோபி. நிறையவே புகழ்ந்து எழுதிருக்கீங்க. கூச்சமா இருக்கு

    ReplyDelete
  12. நல்ல கருத்துகள்... விரைவில் புத்தகமாய் வெளிவர வாழ்த்துகள்....

    ReplyDelete
  13. உங்களின் இந்த தொடர் புத்தகமாய் வெளிவர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. சிந்தனை தூண்டும் வழிகாட்டலான இடுகை. வாழ்த்துக்கள்.
    வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன். நன்றி :)

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_22.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...