Friday, November 18, 2011

விலைவாசி உயர்வு: அன்பில்லாத அம்மா

நண்பர் சந்தான ராமன் இந்த பதிவை நமக்கனுப்பி பிரசுரிக்க முடியுமா என்று கேட்டுள்ளார். வீடு திரும்பலில் தேவா,  சந்தான ராமன் வரிசையில் இன்னும் சில நண்பர்கள் எழுத உள்ளனர். ஆட்டோ அனுப்புவதானால் நண்பர் சந்தான ராமனுக்கு அனுப்பலாம். மீ தி பாவம் ! 

விலைவாசி உயர்வு: அன்பில்லாத அம்மா

தி.மு. க அரசு செயல்படாத அரசு என சட்டமன்ற தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டு போட்டோம். பின் பஞ்சாயத்து தேர்தலிலும் அம்மா கட்சிக்கு ஓட்டு போட்டு அந்த மை கையிலிருந்து அழிவதற்குள் விலை வாசி உயர்வு என இப்படி ஒரு அதிர்ச்சி !

அம்மாவின் ஆட்சியை சற்று அலசுவோம்.

வந்த புதிதில் நிறைய இலவசம் அறிவித்தார்கள். நில அபகரிப்பு என நிறைய பெருந்தலைகள் அரஸ்ட் ஆகின. சரி அரசாங்கம் சுறுசுறுப்பாக நடக்கிறது என மகிழ்ந்தோம், அப்புறம் தான் சொதப்பல்கள் துவங்கின !

சமச்சீர் கல்வி

இது முதல் கோணல். தி.மு.க அரசு செய்தது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வியை மாற்ற எண்ணியது அரசு !கருணாநிதி, கனிமொழி உள்ளிட்டோரின் "அரிய பாடங்கள்" இருந்தது தவறு தான். அவற்றை மட்டும் நீக்கி விட்டு மற்றவை அப்படியே தொடர செய்திருக்கலாம். முதலில் ஹை கோர்ட்டிலும், பின் சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசு திட்டு வாங்கிய பின் தான் வேறு வழியின்றி சமச்சீர் கல்விக்கு ஒத்து கொண்டது. இதற்குள் கிட்டத்தட்ட ரெண்டு மாதங்கள் முடிந்து விட்டன. இதன் பலனை இந்த வருடம் முழுதும் மாணவர்கள் அனுபவிக்கிறார்கள். தொடர்ந்து மிக வேகமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. சனி. ஞாயிறு பள்ளிகள் வைக்கபடுகிறது. புது activity-கள் எதுவும் பள்ளிகளில் இல்லை. பாடம் முடித்தாக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோள். இன்னும் சில பள்ளிகள் சமச்சீர் பாடம் நடத்தாமல் மெட்ரிகுலஷன் பாடம் நடத்துகிறது .. இதை அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

அண்ணா நூலக இட மாற்றம்

தமிழக அரசின் மிக பெரிய முட்டாள் தனம் எது என போட்டி வைத்தால் இது முதலிடம் கூட வரலாம்! கருணாநிதி அரசு கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்துக்காக நூலகம் ஆஸ்பத்திரி ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஹை கோர்ட் தடை தந்துள்ள பின்னும் இன்னும் தன் நிலையை மாற்றி கொள்ள வில்லை. நூலகத்துக்காக வடிவமைக்கப்பட்ட கட்டிடம் எப்படி மருத்துவ மனைக்கு ஒத்து வரும்? ஒரு நூலகம் மூடப்படும் போது ஒரு சிறை சாலை திறக்கபடுகிறது என்பார்கள். சாதாரண மனிதர்கள் தங்கள் புத்தகங்களை எடுத்து சென்று கூட ஏ. சி யில் அமர்ந்து வாசிக்கலாம். லட்சக்கணக்கான புத்தகங்கள்.. அனைத்தும் வீணாகும் நிலை. இதற்கு எழுத்தாளர் சமூகம் முழுதும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

சென்ற முறை ஆட்சியில் இருந்த போது அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களை பகைத்து கொண்டார் அம்மா. அவர் ஆட்சியை இழக்க அவர்களும் முக்கிய காரணமாய் இருந்தனர்.

நூலக இட மாற்றத்தில் அவர் உறுதியாய் இருந்தால் எழுத்தாளர்கள் அனைவரையும் பகைத்து கொள்கிறார் என்பதை அவர் உணர வேண்டும். மீதமுள்ள காலத்தில் அவர்கள் இந்த அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பார்கள்.  "அனைவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நூலக இட மாற்றம் ரத்து" என அவர் அறிவித்தால் அனைவரின் நன்மதிப்பை மீண்டும் பெற வாய்ப்பு உள்ளது

நிற்க. இந்த இட மாற்றம் முழுக்கவே அம்மா மீது நடக்கும் வழக்கு பற்றி யாரும் யோசிக்காமல், மற்றும் பேசாமல் வேறு விஷயம் பற்றி பேச வைக்க தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது !

மோசமான சாலைகள்

மழையில் சென்னை பாதிக்கபடுவது வருடா வருடம் நடப்பது தான். ஒரு மழையில் சென்னை நாசமான பின் அடுத்த பல வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை. அரசு இயந்திரம் சுத்தமாக இயங்க வில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தினம் வீடு தேடி ஓட்டு கேட்க வந்த ஆட்களை தெருவிலேயே காணும் !

அமைச்சர்கள் மாற்றம்

இது அம்மா ஆட்சியில் வழக்கமான ஒன்று தான் என்றாலும், சில கேள்விகள் மிஞ்சுகிறது:

1. எப்படி ஓரிரு மாதங்களிலேயே அவர்கள் திறமை அற்றவர்கள் என தெரிந்தது?

2. ஒரு துறையில் இருந்து அதில் சரியில்லை என இன்னொரு துறைக்கு மாற்றுகிறீர்களே.. இங்கு சரியே செயல்படாதவர் அங்கு நன்கு செயல்படுவார் என என்ன நிச்சயம்? "திறமை அறியும் சோதனை " நடத்தப்பட்டா துறை மாற்றம் நடக்கிறது?

3 .எதனால் அமைச்சர்கள் மாற்றபடுகிறார்கள் என்ற காரணம் எப்போதும் மக்களுக்கு சொல்லாதது ஏன்?

4.ஏன் உங்கள் ஆட்சியில் மட்டும் எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பது மக்கள் யாருக்கும் தெரிவதில்லை?

5. பதவி நீக்கம் செய்யப்பட அமைச்சர் மீண்டும் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து அமைச்சர் ஆகிறாரே. அப்போது அமைச்சர் பதவிக்கான அனைத்தும் அவர் கற்று தேர்ந்து விடுகிறாரா?

விலை வாசி உயர்வு

மேலே சொன்ன அனைத்திற்கும் சிகரம் வைத்த மாதிரி இப்போது விலை வாசி உயர்வு நிகழ்ந்துள்ளது.

ஏழைகளை .. கொஞ்சம் கொஞ்சமா ஏன் சாகிறீர்கள் ! மொத்தமாக ஒன்றாக சாகுங்கள் என பால், மின்சாரம், பேருந்து கட்டணம் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்து கட்டணம் கிட்டத்தட்ட 90 % வரை உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்கிறது என்றாலும் இந்த அளவு ஒரே நேரத்தில் உயர்த்துவது எப்படி சரியாக இருக்கும்? இனி ஆம்னி உரிமையாளர்களும் கட்டணம் உயர்த்துவார்கள். மிக கடுமையான விலை ஏற்றம் இது ! ஏழை மற்றும் லோயர் மிடில் கிளாஸ் மக்கள் தான் மிக அதிகமாய் பேருந்தை உபயோகம் செய்கிறார்கள். அவர்கள் மோசமாக பாதிக்க படுவார்கள்.

மின் கட்டணம் சென்ற ஆட்சியிலும் பல முறை ஏற்ற பட்டது தான். மறுபடி 40% வரை ஏன் கட்டணம் உயர்த்த வேண்டும்? சிறு கம்பனி நடத்துவோரை இது மிக பாதிக்கும். இதனை எப்படி அவர்கள் accomodate செய்வார்கள் என்பது நிச்சயம் தெரிய வில்லை. நிறைய சிறு கம்பனிகள் மூடும் நிலையும் வந்தால் ஆச்சரியபடுவதற்கில்லை.

பால் விலை ஒரு லிட்டருக்கு குறைந்தது ஆறு ரூபாய் முதல் ஒன்பது ருபாய் வரை உயர்ந்துள்ளது. பணக்காரர்களுக்கு இது பெரிய பாதிப்பாக இல்லாது இருக்கலாம். பணக்காரர்கள் தவிர பிறருக்கு இது மிக பாதிக்கும் ஒன்று தான்.

இப்படி முக்கிய பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் விலை உயர்ந்தால், மற்றவையும் விலை உயரவே செய்யும் ! வேறு வழி இல்லை.

அம்மா ஆட்சியை பல முறை பார்த்தவன் என்ற முறையில் அடுத்து என்ன செய்வார் என நிச்சயம் தெரியும். ஏற்றிய அனைத்திலும் மிக கொஞ்சமாக விலை குறைப்பார். உதாரணமாய் ஒன்பது ரூபாய் ஏற்றிய பாலை ஒரு ரூபாய் குறைத்து எட்டு ரூபாய் ஏற்றம் என ஆக்குவார். கையிலிருந்து எவ்வளவு பணம் வெளியேறுகிறது என்று அனைவருக்கும் தெரியாதா என்ன? ஒரு ரூபாய் குறைந்தால் உடனே சரி விலை வாசி குறைந்து விட்டது என திருப்தி அடைய மக்கள் என்ன இளிச்சவாயர்களா?

இவ்வளவு குறைகள் இருந்தாலும் ஒன்றை சொல்லி தான் ஆக வேண்டும். 87 வயது முதியவர் தானும் செயல்படாமல், தன்னை போலவே அரசும் செயல்படாமல் பல ஆண்டுகள் வைத்திருந்தார். அதற்கு இந்த ஆட்சி பரவாயில்லை என்று தான் ஆட்சி மாற்றம் செய்தோம். செயல் படாத
அரசே பரவாயில்லை என்று எங்களை எண்ண வைத்து விடாதீர்கள்.

உங்கள் தவறுகளை விரைவாக புரிந்து கொண்டு, ஏற்று கொண்டு, உடனே மாற்றி கொள்ளுங்கள். இத்தனை பேர் தவறு என்றுசொன்னாலும் தன் பிடிவாதத்திலேயே நிற்காதீர்கள் ! இந்த ஒரு விஷயம் மட்டும் நீங்கள் சரி செய்தால் அடுத்த தேர்தலிலும் நீங்கள் வெல்லலாம். இல்லையேல் மக்களின் சாபம், கோபம் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தெரிய வரும் !

11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வாங்க ஆன் லைன் டேட்டா வொர்க் சார் ! வழக்கமான பதிவுகளை விட, இந்த பதிவை மிக அதிகம் பேர் வாசித்தாலும், ஆட்டோவிற்கு பயந்தோ என்னவோ, நிறைய பேர் கமென்ட் போடாம எஸ்கேப் ஆகிடுறாங்க. உங்களுக்கு அந்த கவலை இல்லை. ஏன்னா நீங்க என்ன பதிவு பத்தியா போடுறீங்க ? :))

    கமென்ட் கணக்கை துவக்கியதுக்கு நன்றி

    ReplyDelete
  3. அரசுதுறை நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது என்றாலும்,ஒரேஅடியாக இவ்வளவு தூரம் 90%அளவுக்கு பஸ்கட்டண,இதர உயர்வுகளை அம்மா சாமர்த்தியமாக செய்கிறார் என்றே தெரிகிறது.இன்னும் நான்கு வருடங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தாமல் இப்போதே முடிந்த அளவுக்கு ஏற்றி வைத்து விட்டால் அடுத்த சட்ட சபை தேர்தலுக்குள் இந்த விடயங்கள் சூடு ஆறிவிடும் அல்லது வேறு விடயங்களில் திசைதிருப்பி விடலாம் என்ற உத்தியோடு மறதி நோய் கொண்ட மக்கள் மீது ”நம்பிக்கை”வைத்து எடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  4. // அதற்கு இந்த ஆட்சி பரவாயில்லை என்று தான் ஆட்சி மாற்றம் செய்தோம். செயல் படாத
    அரசே பரவாயில்லை என்று எங்களை எண்ண வைத்து விடாதீர்கள். //

    முஸ்கி : நானும் உங்களைப் போன்ற நடுத்தர பணவசதி படிச்ச ஆள்தான். எந்த கட்சியையும் சாராத ஆள்.

    போன ஆட்சியில எதைச் செய்யணுமோ அதச் செய்யல.. கஜானா காலி. உழைப்பை மறந்து வீணாகத் திரிய இலவசங்கள்.. . இப்படி ரொம்வ வருஷமா செய்யாததுனால இப்ப நிதி பற்றாக் குறையினால இப்படி எல்லாத்தையும் (!) ஏத்த வேண்டி இருக்கு.

    ஒரு விஷயம்.. இப்பக் கூட மக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி.. இலவசங்கள் வேணாம்.. நியாயமான விலையில அத்தியாவசியப் பொருட்கள் / பயணம் இதெல்லா கிடைக்கும்னு செஞ்சா, அரசு நிதி நிலமைய சரி செய்யலாமோ என்னவோ.

    இலவசம் வாழ்க்கைக்கு நல்லதல்ல என்பதே உண்மை.

    ReplyDelete
  5. இவ்வளவு தைரியமா பதிவிடுகிற அளவுக்கு அம்மா ஆட்சி இருப்பதே ஆச்சரியம் தான். மற்றபடி நண்பர் மாதவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.

    ReplyDelete
  6. ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறும்பொழுதும் அப்படி இப்படின்னு ஆந்திராவில் விலை ஏறிக்கிட்டுதான் இருக்கு. (மத்தியில் ஆளும் காங்கிரஸ்தான் இங்கயும்) என்னுடைய இன்றைய பதிவில் ஆந்திரா நிலவரம் பற்றியும் போட்டிருக்கேன். நேரம் கிடைக்கும் பொழுது பாருங்க.

    ReplyDelete
  7. ஆட்டோ அனுப்பற லெவலுக்கு இந்தப் பதிவில் என்னதான் இருக்குன்னு தேடிக்கிட்டே இருக்கேன் சார்

    ReplyDelete
  8. செழியன்: சரியா சொன்னீங்க நன்றி
    **
    மாதவன்: உண்மை
    **
    டாக்டர் வடிவுக்கரசி: நன்றி
    **
    புதுகை தென்றல் அப்படியா: வாசிக்கிறேன்
    **
    யுவ கிருஷ்ணா : நீங்க இப்படி சொல்றீங்க. மேலே வடிவுக்கரசி இவ்ளோ தைரியமா பதிவு போட அனுமதிக்கும் அளவு அம்மா ஆட்சி இருக்கான்னு கேக்குறாங்க :))

    ReplyDelete
  9. என்ன ஒரு ஒற்றுமை. தங்களின் "விலைவாசி உயர்வு: அன்பில்லாத அம்மா" என்ற பதிவிலும் என்னுடைய "ஜெ: கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்" பதிவிலும் (ஜெயின்) ஒரே படத்தை போட்டு இருக்கிறோம்.

    http://aathimanithan.blogspot.com/2011/11/blog-post_139.html

    ReplyDelete
  10. ஆதி மனிதன்: ஆம் வாசித்தேன் படம் இருவரும் ஒன்றையே தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் தான். உங்கள் இடுகை தமிழ் மணம் சூடான இடுகையில் இருக்கு ! வாழ்த்துகள் !

    ReplyDelete
  11. மோஹன்குமார்,

    ஆட்டோ அளவுக்கு காரமில்லை,ஆனாலும் கடந்தக்கால வரலாறு பயம்முறுத்த தான் செய்யும்! வரலாறு முக்கியம்.

    மொஹம்மது பின் துக்ளக் போல தான் இங்கே எல்லாம்.(கூட இருப்பது மொட்டை துக்ளக் ஆச்சே)

    அப்ப்புறம் அந்த ஜெ படம் கூகிளில் எனக்கும் அதான் கிடைத்தது , நாம கவலைப்படாம அம்மா கவலைப்படுறாப்போல படம் இருக்குனு போடவில்லை.

    அடுத்து விலைவாசி உயர்வை சமாளிப்பது எப்படினு போடப்போறேன் தயாரா இருங்க!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...