Friday, March 16, 2012

கல்விமுறை குறித்து தோனி படம் எழுப்பும் கேள்விகள்

தோனி படம் பார்த்தவுடனே எழுத நினைத்த விஷயம் இது.

உங்களுக்கு தெரியும் என்றாலும் மிக சுருக்கமாக கதை என்ன என பார்த்து விடலாம் (படம் பார்த்தவர்கள் அடுத்த பாராவை தாண்டி விடலாம்)

மனைவியை இழந்த பிரகாஷ்ராஜ், தனியாளாக தன் மகள் மற்றும் மகனை வளர்க்கிறார் . மகனுக்கு படிப்பில் சிறிதும் ஆர்வமில்லை. கிரிக்கெட் கிரிக்கெட் என்று அலைகிறான். பள்ளியில் படிக்க சொல்லி நிறைய பிரஷர். டியூஷன் அனுப்பியும் பலன் இல்லை. படிக்காமல் எதிர்த்து பேசுகிறான் என பிரகாஷ்ராஜ்  மகனை  அடிக்க, கீழே விழுந்து அடிபட்டு கோமா நிலைக்கு செல்கிறான். அவனை மீட்க போராடுகிறார் பிரகாஷ்ராஜ். ஒரு வழியாய் அவன் மீண்டு, கிரிக்கெட்டில் பெரிய ஆளாகிறான் என்று படம் முடிகிறது.

" உன் மனது என்ன சொல்கிறதோ அதை செய்" என்கிற கருத்தை சொல்லும் படங்களே ஓரிரு மாதத்தில் அடுத்தடுத்து மூன்று வந்து விட்டன. மயக்கம் என்ன, நண்பன் மற்றும் தோனி.

முதலில் நல்ல விஷயங்களை பார்த்து விடுவோம். 

பள்ளிகள் தரும் பிரஷர், ஆசிரியர்கள் செய்யும் அக்கிரமங்கள் இவை நிச்சயம் உண்மை தான். ஒவ்வொரு பள்ளியும் தேர்வு சதவீதம் வைத்தே தன்னை நிலை நிறுத்தி கொள்கிறது . அநேகமாய் பல பள்ளிகளில் வருட இறுதியில் நடக்கும் ஆண்டு விழாவின் போது மட்டுமே டான்ஸ், கராத்தே போன்ற சில Extra curricular activities அனுமதிக்கிறார்கள்.  Extra curricular activities தேவை எனில் பெரும்பாலும் வெளியில் தான் அனுப்ப வேண்டும். இன்றைக்கு ஆண், பெண் இருவரும் வேலைக்கு செல்லும் நிலையில் அதற்கென்று அழைத்து சென்று விட்டு, திரும்ப கூட்டி வர நேரமி இருப்பதில்லை. பள்ளிகளிலேயே அவை இருந்தால் தான் மாணவர்கள் கற்க எளிதாய் இருக்கும்.

மேனேஜ்மன்ட் தரும் பிரஷரை தான் ஆசிரியர்கள் மாணவர் மேல் செலுத்துகின்றனர் ! தங்கள் கோபம், அழுத்தம் அனைத்தும் மாணவர் மேல்  ஆசிரியர்கள் காண்பிக்கின்றனர். தன்னை விட சிறிய ஆட்களிடம் வீரத்தை காட்டுவதில் என்ன பெரிய விஷயம் இருக்க முடியும்?

இன்னும் மோசமான ஒரு விஷயம்: அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில் படிக்கிறார்கள். இவர்கள் எப்போதுமே "தங்கள் சக ஆசிரியையின் குழந்தை" என்பதால் ஸ்பெஷல் டிரீட்மென்ட் கிடைக்கிறது. அவர்கள் தான் வகுப்பு தலைவர் அல்லது தலைவி. லீடர் இல்லா விட்டாலும் கூட அவர்களுக்கு பள்ளி ரூல்களில் எப்போதும் விலக்கு உண்டு. கிட்டத்தட்ட தாதா போல வலம் வரும் "டீச்சர் குழந்தைகள்" இன்னமும் இருக்கிறார்கள். இதை நீங்கள் நம்பாவிடில் உங்கள் குழந்தையிடம் பேசி பாருங்கள்.... தெரியும் !

சிறு வயது முதல் என் பெண்ணுக்கு ஒவ்வொரு வருடமும் அருகில் அமர்வது யார்? யார் யார் நண்பர்கள் போன்ற தகவல் அனைத்தும் எனக்கு தெரிவதால் இதை சொல்கிறேன். (இது தெரிந்தால் கூட குழந்தைகள் விஷயத்தில் நாம் நேரிடையாக தலையிட கூடாது. அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்)

அடுத்து, பல முறை நான் நினைக்கும் ஒரு விஷயத்தை பிரகாஷ்ராஜ் படத்தில் கேட்டுள்ளார். வரலாற்று ஆசிரியைக்கு அந்த பாடம் மட்டும் தான் நன்கு தெரியும். அதே போல் தான் அறிவியல் ஆசிரியருக்கும். ஆனால் அவர்களை விட பல வயது குறைந்த குழந்தைகள் மட்டும் அனைத்து பாடத்திலும் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என நாம் நினைப்பது என்ன நியாயம்?

படம் குறித்து இரு நல்ல விஷயங்கள்:

பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் புதுசு மாதிரியே தெரியலை. மிக இயல்பாய், தெளிவாய் குழப்பமின்றி கொண்டு போயிருந்தார். 

படத்தின் ஹீரோயின் ராதிகா ஆப்தே சைலன்ட் பியூட்டி !

படம் நம் கல்வி முறை குறித்து நிச்சயம் நம் சிந்தனையை படம் தூண்டி விடுகிறது.

இருந்தாலும், இருந்தாலும் ....இன்னொரு பக்கத்தை சொல்லி தான் ஆகணும். 
இன்றைய Competitive உலகில் படிப்பு என்பது தேவை தான். வகுப்பில் முதல் மாணவன் ஆகாவிடினும் ஓரளவு நல்ல மதிப்பெண் அல்லது குறைந்தது தேர்ச்சி அடையவாவது செய்ய வேண்டியது முக்கியம் தானே? பெற்றோருக்கு குறைந்த பட்சம் தேர்ச்சி அடைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தவறா?

நமக்கு சிரமமான ஒன்றிலிருந்து எப்போதும் தப்பி செல்லவே மனம் நினைக்கும். படிப்பு என்பது பலருக்கும் கசப்பான ஒன்று தான். If you give an option, students will like not to study but to play or watch TV only !!

இந்த படத்தின் சிறுவனுடைய முதல் பாகம் எனக்கும் பொருந்தும். பள்ளியில் படிக்கும் போது நான் நன்றாக பந்து வீசுவேன். ஒரு காலத்தில் கிரிக்கெட் கிரிக்கெட் என்று அலைந்து வாழ்க்கையை தொலைக்க வேண்டியவன். பின் சினிமாவில் சேருவேன் என சொல்லி திரிந்தேன் (ஆக மொத்தம் படிப்பிலிருந்து தப்பனும்; அவ்வளவு தான்) என் குடும்பத்தினர் அப்போது என்னிடம்  ஒரு டீல் பேசினார்கள் " தம்பி சினிமாவிற்கு தானே போகணும்? தாராளமா போ. இப்போதைக்கு படிச்சிடு. அப்புறம் படிக்க முடியாது. படிச்சு முடிச்சிட்டு நீயே சூஸ் பண்ணிக்கோ. படிப்பு சார்ந்த வேலை வேணுமா, அல்லது சினிமா வேணுமா" என ! 

பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது :)) 

படிக்க ஆரம்பிச்சவன் பல வருஷம் நிறுத்தாம படிச்சு ஒரு வழியா மேலே வந்துட்டேன்.சினிமா துறை பற்றியெல்லாம் நினைத்தா பகிர் -ங்குது. கிரேட் எஸ்கேப் என நினைத்து கொள்கிறேன்

என்னை அன்று படிக்க விடாமல் விட்டிருந்தால், சினிமாவில் போய் எதோ ஒன்றாகியிருப்பேன். ஆனால் நான் என் குடும்பத்தாரை கேட்டிருக்க கூடும் :' நான் தான் அறியாத வயசில ஏதோ படிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். நீங்க தலையில் தட்டி படிக்க சொல்லிருக்கலாம் இல்ல?"

சினிமா துறையை விடவும் மிக கடினமான துறை கிரிக்கெட்! அங்கு டிஸ்டிரிக்ட் லெவலில் ஆடவே பரிந்துரைகள் தான் அதிகம் செல்லுபடியாகும். நல்ல திறமை இருந்து, மேலே வருவோரை விட, திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்போர் எவ்வளவோ பேர்.

கிரிக்கெட்டை மட்டுமே நம்பி வாழ்க்கையை தொலைப்பது நிச்சயம் சரியான ஒன்றாய் இருக்காது. பிளான் - B என்ற ஒன்று அவசியம் தேவை.

சினிமாவில் வேண்டுமானால் கோமா போன சிறுவன் திரும்பி வந்து கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வாழ்க்கையில் வெல்லலாம். நிஜத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தூரத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக சிறுவர்கள் தோனி படம் பார்த்து  கெட்டு போக மாட்டார்கள் என உறுதியாய் நம்புகிறேன். அது படம் என்கிற அளவில் புரிந்து கொண்டு மறந்து விடும் மெச்சுரிட்டி அவர்களிடம் உண்டு என்றே தோன்றுகிறது.

22 comments:

  1. அழகான விமர்ச்சனம்....

    ReplyDelete
  2. அடிப்படை கல்வி முறை..அதை வைத்தே வேலை என்ற இரட்டை மாட்டு வண்டியில்...இரண்டாவது விஷயம் வாழ்கை..அதுவும் சந்தோசம் கலந்து இருக்க வேண்டும்..எப்படி சாத்தியம்!

    ReplyDelete
  3. எல்லோரும் தோணி ஆகி விட முடியாது. ஆனால், (நினைத்தால்/முயற்சித்தால்) எல்லோரும் நன்றாக படித்து பெரிய ஆளாக வாய்ப்புண்டு. ஏனென்றால் கிரிக்கெட்டில் 11 மட்டும் தானே விளையாட முடியும்!

    ReplyDelete
  4. *ஏனென்றால் கிரிக்கெட்டில் 11 பேர் மட்டும் தானே விளையாட முடியும்!

    ReplyDelete
  5. Just to mention how difficult it is to get into the Tamil Nadu cricket team, just have a look at the following list of players who have made it to the Indian Team from Tamil Nadu :

    Venkatraghavan
    T.E.Srinivasan
    T.A.Sekhar
    Krishnamachari Srikkanth
    Sadagopan Ramesh
    W.V.Raman
    Badrinath
    Ravichandran Ashwin
    Murali Vijay
    Murali Karthik
    Laxmipathy Balaji
    Abhinav Mukund

    One look at above list, it is easy to guess what is common among all the above players.

    regards,

    ReplyDelete
  6. அழகான விமர்சனம்....

    ReplyDelete
  7. மிக நன்று. பள்ளிகளைப் பற்றி நீங்கள் பகிர்ந்த கருத்துகளும் கவனிக்கப்பட வேண்டியவை.

    /நிஜத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தூரத்தை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். /

    உண்மை. பெரியவர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் எல்லாக் குழந்தைகளிடமும் அந்த மெச்சூரிடியை எதிர்ப்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இந்தப் படத்தை குழந்தைகளுடன் பார்ப்பதையே தவிர்த்திடல் நலம்!

    ReplyDelete
  8. ரொம்ப ரொம்ப நல்ல பதிவுங்க. நான் சொன்னதைவிட தெளிவா, அழுத்தமா, அழகாச் சொல்லிருக்கீங்க.

    ஒவ்வொரு வரிக்கும் கருத்து எழுத ஆசை; நேரம்தான் இல்லை.

    இங்கேயும் என் மகன்களின் பள்ளியோடு ஒருசில விஷயங்களில் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறேன். இங்கே கல்வித் துறை பெற்றோர்களுக்கு ஆதரவு. இருந்தாலும், இந்திய மேனேஜ்மெண்ட், ஆசிரியர்கள் என்பதால் என் பெரிய மகன் அதன் விளைவைச் சந்திக்க வேண்டிதான் இருக்கிறது.

    //" உன் மனது என்ன சொல்கிறதோ அதை செய்" என்கிற கருத்தை சொல்லும்//

    அதாவது சுயநலமே பெரிது என்று போதிக்கிறார்கள்!!

    ReplyDelete
  9. தோனி படத்தின் செய்தி 'சிக்சர் அடிக்கலாம்' என்பதல்ல; கனவுகளை கசக்கிப் போட்டால் 'சிக்சர் அடிக்க முடியாமலே போய்விடும்' என்பதே என நினைக்கிறேன். தமிழ் சினிமா சிகரெட் தூக்கிப் பிடிப்பதைத் தாண்டி வெளியே வந்திருப்பது ஆறுதலாய் இருக்கிறது.

    ReplyDelete
  10. நல்லதொரு விமர்சனம்.

    இன்றைய நிலையில் குழந்தைகளை நல்ல வழியில் கொண்டு செல்வதே பெரிய விஷயம் தான்.....

    கல்விமுறையிலும் மாற்றங்கள் நிறைய வர வேண்டும்.

    ReplyDelete
  11. சங்கவி said...
    அழகான விமர்ச்சனம்....

    *****
    நன்றி சங்கவி !

    ReplyDelete
  12. விக்கியுலகம் said...

    அடிப்படை கல்வி முறை..அதை வைத்தே வேலை என்ற இரட்டை மாட்டு வண்டியில்...இரண்டாவது விஷயம் வாழ்கை..அதுவும் சந்தோசம் கலந்து இருக்க வேண்டும்..எப்படி சாத்தியம்!

    ***
    தங்கள் கருத்துக்கு நன்றி விக்கி

    ReplyDelete
  13. ஆதி மனிதன் said...

    எல்லோரும் தோணி ஆகி விட முடியாது. ஆனால், (நினைத்தால்/முயற்சித்தால்) எல்லோரும் நன்றாக படித்து பெரிய ஆளாக வாய்ப்புண்டு. ஏனென்றால் கிரிக்கெட்டில் 11 பேர் மட்டும் தானே விளையாட முடியும்!

    ********
    மிக சரியாக சொன்னீர்கள் ஆதி மனிதன் நன்றி

    ReplyDelete
  14. KVN : தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  15. ரிஷபன் said...

    அழகான விமர்சனம்....

    ******
    நன்றி ரிஷபன் சார்

    ReplyDelete
  16. ராமலக்ஷ்மி said...

    எல்லாக் குழந்தைகளிடமும் அந்த மெச்சூரிடியை எதிர்ப்பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இந்தப் படத்தை குழந்தைகளுடன் பார்ப்பதையே தவிர்த்திடல் நலம்!

    *****
    அவ்வளவு தூரம் சொல்லனுமா என தெரியலை. தங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  17. ஹுசைனம்மா: நன்றி உங்கள் பதிவு பார்த்து விட்டு தான் சரி நம்மளும் எழுதிடுவோம் என ஆரம்பிதேன் அதுவரை தனியா எழுதுறதா, வானவில்லில் எழுதுவதா என குழப்பம் இருந்தது நன்றி !!

    ReplyDelete
  18. அப்பாதுரை said...

    தோனி படத்தின் செய்தி 'சிக்சர் அடிக்கலாம்' என்பதல்ல; கனவுகளை கசக்கிப் போட்டால் 'சிக்சர் அடிக்க முடியாமலே போய்விடும்' என்பதே என நினைக்கிறேன். தமிழ் சினிமா சிகரெட் தூக்கிப் பிடிப்பதைத் தாண்டி வெளியே வந்திருப்பது ஆறுதலாய் இருக்கிறது

    **********
    நீங்கள் சொல்வதை ஒப்பு கொள்ள தான் வேண்டும் அப்பா துரை

    ReplyDelete
  19. கோவை2தில்லி said...

    இன்றைய நிலையில் குழந்தைகளை நல்ல வழியில் கொண்டு செல்வதே பெரிய விஷயம் தான்.....

    கல்விமுறையிலும் மாற்றங்கள் நிறைய வர வேண்டும்.

    **********
    உண்மை தான் நன்றி மேடம்

    ReplyDelete
  20. //பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் புதுசு மாதிரியே தெரியலை.//

    பிரகாஷ் ராஜ் இயக்கிய முதல் தமிழ் படம் என விளம்பரங்களில் பார்த்தேன், இதற்க்கு முதல் பிரகாஷ் ராஜ் ஏதாவது பிற மொழிப் படங்கள் இயக்கியுள்ளாரா?

    ReplyDelete
  21. வாசகன்: பிரகாஷ் ராஜ் "அபியும் நானும்" படத்தை கன்னடத்தில் இயக்கினார். அது தான் முதல் இயக்கம். அதன் பின் இயக்கிய படமே இது !

    ReplyDelete
  22. நல்ல விமர்சனம்.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...