Thursday, October 25, 2012

பேட்டி: பசுமை விடியல் : தினம் 1 மரம் சாத்தியமா என்ன?

திவுலகில் நிஜமாகவே நல்ல விஷயங்கள் என்று ஏதும் நடக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இத்தகைய சந்தேகங்களுக்கு விடை தரும் விதத்தில் ஆங்காங்கு சில மிக நல்ல முயற்சிகள்/ செயல்கள் நடக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்று பசுமை விடியல் !   



மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு இவர்கள் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். தினம் ஓர் மரம் நடுதல், இலவச மரக்கன்று நடுதல் மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வுக்காக ஏராள களப்பணிகள் செய்து வரும் இந்த குழுவில் பலரும் வலைப்பதிவர்கள் என்பது மகிழ்வான விஷயம்.

இதன் நிர்வாகிகளிடம் வீடுதிரும்பலுக்காக எடுத்த பேட்டி இதோ. சில எடக்கு மடக்கான, கோபப்படுத்தும் கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் தந்த பசுமை விடியல் நிர்வாகிகளுக்கு நன்றி !

***********
பசுமை விடியல் துவக்கும் எண்ணம் எப்போது வந்தது? இதனை துவக்க ஏதும் காரணம் உண்டா?

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு சிறிய பங்களிப்பையாவது கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மலர்ந்தது பசுமைவிடியல்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் என்பதை குறிக்கவே Environmental And Social Transition Trust (EAST) என எங்கள் தொண்டு நிறுவனத்துக்கு பெயரிட்டோம். EAST முறைப்படி அரசாங்க பதிவு பெற்றது. தகுந்த நேரம் அமைந்ததும் அந்த நிறுவனத்தின் கீழ் பசுமைவிடியல் என்ற இயக்கத்தை ஜனவரி மாதம், 2012 தொடங்கினோம்.

இந்த இயக்கத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்?

ஈஸ்ட் டிரஸ்ட் நிறுவனர் திரு.ஜோதிராஜ்
பசுமைவிடியல் சேர்மன் திருமதி.கௌசல்யா
ப்ராஜெக்ட் டைரக்டர் திரு.ISR.செல்வகுமார்
ப்ராஜெக்ட் ஹெட் திரு.பிரபு கிருஷ்ணா
ப்ராஜெக்ட் எக்ஸ்சிகியுடிவ் திரு.சூர்யபிரகாஷ்

இங்கே இந்த பதவி என்பது நிறுவனத்தின் நிர்வாக வசதிக்காக...மற்றபடி இது தன்னார்வலர்களின் டீம் ஒர்க். நால்வரில் ஒருவரின் சம்மதம் இல்லையென்றாலும் பசுமைவிடியலில் எந்த ஒன்றும் செயல்படாது.

பசுமைவிடியலின் இணையதளத்தை திரு இசக்கிசுப்பையா MLA துவக்கி  வைக்கிறார்.
பசுமை விடியலின் முதல் மரக்கன்றாக செண்பக மரத்தை நட்ட - உலக சாதனை சிறுமி  விசாலினி கையில் உள்ளது லாப்டாப்  
தவிர இப்பொழுது தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் தங்களை பசுமைவிடியலுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். 1000 மேற்பட்ட நபர்கள் முகபுத்தகம் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினம் ஒரு மரம் திட்டத்தில் பங்குபெறும் அத்தனை பேருமே பசுமைவிடியலின் அங்கத்தினர்களே !

இதுவரை எவ்வளவு மரக்கன்று நட்டுள்ளீர்கள்? எந்த இடங்களில் அதிகம் நடுகிறீர்கள்?

எங்கள் நோக்கம் மரம் நட வேண்டும், மரம் நடுவதை ஊக்குவிக்க வேண்டும் ! கணக்குக்காக நாங்கள் மரம் நடுவதில்லை.

இடம் பொறுத்தவரை எங்களுக்கு எல்லைகள் கிடையாது, உலகம் முழுதும் இதை பரப்ப விருப்பம், தற்பொழுது காஞ்சிபுரம் , மற்றும் திருநெல்வேலி நண்பர்கள் இதனை மிக அருமையாக எடுத்து செல்லும் விதம் நாங்கள் மற்ற இடங்களை சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை எங்களுக்கு உணர்த்துகிறது.

மரக்கன்று நடுவது பெரிதில்லை. அதற்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். மாடுகள் போன்றவை சாப்பிடாமல் காப்பாற்ற வேண்டும். அதற்கு என்ன விதமான நடவடிக்கை எடுக்கிறீர்கள்?

இதுவரை நாங்கள் நட்ட, நட்டு கொண்டிருக்கும் கன்றுகள் ஏதாவது ஒரு வழியில் எங்கள் உறுப்பினர்களின் பார்வைக்கு கீழ் வருவதால் எங்களுக்கு மேற்கண்ட பிரச்சனைகள் வரவில்லை, ஆனால் வருங்காலங்களில் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் அடுத்து நடைபெற போகும் பசுமைவிடியலின் இரண்டாம் குழும சந்திப்பில் இதற்கான திட்ட முன்னெடுப்பை மேற்கொள்ள உள்ளோம்.

தினம் ஒரு மரக்கன்று என்பது நடைமுறையில் சாத்தியமாகிறதா? என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள்?

மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் சாத்தியமில்லை. எதிர்கொள்ளும் பிரச்சனையும் இதுதான். ஒரு மரம் தானே நடுவோம் என்று ஆர்வத்துடன் ஏராளமான நண்பர்கள் முன் வரவேண்டும்.

இத்திட்டத்தில் இணைய என்ன செய்யவேண்டும் ?

ஒரு மரக்கன்றை நட்டு புகைப்படம் எடுத்து நட்டவர், ஊர், மரக்கன்று பெயர்களை குறிப்பிட்டு tree@pasumaividiyal.org என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். புகைப்படம் பசுமைவிடியல் முகநூலில் வெளியிடப்படும்.

சென்னை போன்ற இடங்களில் வீட்டில் மரம் நட இடம் மிக குறைவு. செடி உள்ளிட்ட விஷயங்களை வளர்க்க இயக்கத்தில் நீங்கள் ஊக்குவிப்பதில்லையா?

நேரில் சந்திக்கும் பலரிடமும் மொட்டைமாடியில் தோட்டம் போடுவது, இருக்கும் சிறு இடத்தில் காய்கறி , மூலிகைச்செடிகள், கீரை வகைகள் போன்றவற்றை பயிரிடுவதை வலியுறுத்தி வருகிறோம், எங்கள் தளங்களில் இதை குறித்த செய்திகளை எழுதியும், தொடர்ந்து அதிக அளவில் செயல்படுத்தவும் இருக்கிறோம் .

தெருவில் மரம் நட வேண்டுமெனில் அதனை பாதுகாக்க தேவைப்படும் இரும்பு வலை தான் மிக முக்கியம். அப்போது தான் மாடு சாப்பிடாமல் இருக்கும். அதன் விலை அதிகமாக உள்ளது. இதற்கு ஸ்பான்சர் கிடைப்பார்களா?

தெரியவில்லை, எங்களை பொருத்தவரை நாங்கள் பணஉதவி கேட்டது இல்லை. ஸ்பான்சர் என்று யாரும் இதுவரை எங்களுக்கு இல்லை. அவ்வாறு இரும்பு வலைகளை தருவதற்கு ஸ்பான்சர் கிடைத்தால் நல்லது. தெருக்களிலும், பெரிய ரோடுகளிலும் தயக்கமின்றி நிறைய மரங்களை நடலாம்.

இனி வரும் காலத்தில் பொருட்செலவை பொறுத்து சொந்தமாக Tree Guard கொடுக்க ஏற்பாடு செய்யலாமா என ஆலோசிக்கிறோம்.

உங்கள் இயக்கம் மூலம் காஞ்சிபுரத்தில் நடந்து வரும் நல்விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்

நல்ல எண்ணத்தோடு ஒரு விதை விதைத்தால், நீரூற்றா விட்டாலும் விருட்சமாக வளரும் என்பதை காஞ்சிபுரத்தில் நடந்த முதல் மீட்டிங் நிருபித்துவிட்டது . அருள் என்ற மனிதன் எங்களுக்கு கிடைத்த சொத்து என்றே சொல்வோம்.

கெவின்கேர் நிறுவனத்தில் வேலை செய்யும் MBA படித்த இந்த இளைஞர் தன் ஊரில் பல மரக்கன்றுகளை நட்டு, தினமும் காலையில் வண்டியில் தண்ணீர் கொண்டு சென்று எல்லா மரத்திற்கு ஊற்றிய பின்னரே வேலைக்கு செல்கிறார். இதை ஒரு கடமையாக ஆத்மதிருப்தியுடன் செய்து வருகிறார். தற்போது காஞ்சிபுரத்தில் பசுமைவிடியலின் சார்பில் நடக்கும் அத்தனை நல்லதுக்கும் முக்கிய காரணமாக இவர் இருக்கிறார்.

காஞ்சிபுரம் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டபோது ISR. செல்வகுமார் & பிரபுகிருஷ்ணா

அருளை தொடர்ந்து பாலகிருஷ்ணன் சார், செந்தில், கிருஷ்ணகுமார் என்று இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்போது எங்களுடன் இணைந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். இதில் திரு. பாலகிருஷ்ணன் சென்னையை சேர்ந்தவர், ஆர்வத்தின் காரணமாக வார இறுதிநாட்களில் காஞ்சிபுரம் சென்று களப்பணிகளை கவனித்து வருகிறார். மூன்று கிராமத்தில் (ஒரு மாத காலத்திற்குள்) எங்கள் பணிகள் நடந்துவருகின்றன. இதன் எண்ணிக்கை நாளை மேலும் அதிகரிக்கலாம்.

பள்ளி, கல்லூரி போன்ற இடங்களில் காலி இடம் அதிகமாக இருக்கும். அங்கு மரம் நடுவது எளிது. அவர்களை அணுகுகிறீர்களா? எப்படி வரவேற்கிறார்கள்?

அணுகும் போது இதுவரை சாதகமான பதில்கள் தான் கிடைத்துள்ளன. காஞ்சிபுரத்தில் இரண்டு பள்ளிகளில் நட்ட மரக் கன்றுகளை நண்பர்கள் சென்று கவனித்து வருகிறார்கள். இதர பள்ளி, கல்லூரிகளையும் தொடர்பு கொண்டு வருகிறோம்.

அடுத்ததாக காஞ்சிபுரத்தில் சில பள்ளிகளில் சுற்றுச்சூழல் குறித்த ஒரு கட்டுரை போட்டி ஒன்றை பசுமைவிடியல் நடத்த இருக்கிறது. அதன் ஆரம்ப கட்ட வேலைகளை தற்போது துவங்கி இருக்கிறோம் என்பதை இங்கே தெரிவிப்பதில் மகிழ்கிறோம்

உள்ளூர் அல்லது வெளியூர் விருந்தினர் வீட்டுக்கு செல்லும் போது அங்கு இடம் இருந்தால் சுவீட் வாங்கும் போது கூடவே ஒரு மரக்கன்றும் வாங்கி நட சொல்லி உங்கள் இயக்கம் ஊக்குவிக்கலாமே..? அவர்கள் அதனை பார்க்கும் போதெல்லாம் நம்மை நினைத்து கொள்வார்களே ?

இதனை இதுவரை எங்களுக்குள் பேச்சளவில் சொல்லிவந்தோம்.இனி மற்றவர்களிடம் கொண்டு செல்ல முயலுகிறோம். தங்களின் ஆலோசனைக்கு நன்றிகள்.

மரம் நடுவது மட்டும் தான் பசுமைவிடியலின் பணியா அல்லது வேறு ஏதும் இருக்கிறதா?

கண்டிப்பாக மரம் நடுவது மட்டும் அல்ல. குப்பைகளை அகற்றுவது, மறுசுழற்சி போன்ற திட கழிவு மேலாண்மை திட்டத்தை கிராமங்களில் செயல்படுத்த விரும்புகிறோம். அங்குள்ள மக்களின் கருத்துக்களையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளையும் சேகரித்து வருகிறோம். அனைத்தும் சாதகமானதும் செயலில் முழுவீச்சில் இறங்கவேண்டும்.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் கேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இதற்காக ஒரு பேரணி ஒன்றையும் நடத்தினோம்.

குடியிருப்பு பகுதிகளில் சீமை கருவேலமரம் அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு வேலைகள் ஒரு புறம் நடக்க இருக்கிறது.
திருநெல்வேலியில் ஒரு திருமண விழாவில் பசுமைவிடியல் 1000 மரக்கன்றுகளை வழங்கியது. திரு.பிரபு கிருஷ்ணா ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு.ரத்னவேல் அவர்களுக்கு மரக்கன்றை வழங்குகிறார்.

மக்களிடையே இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பது தொடர்பான பணிகளை செய்ய ஆயுத்தம் செய்துகொண்டிருக்கிறோம்.

இயன்றவரை இயற்கையோடு தொடர்புடைய அத்தனை பணிகளிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் நோக்கம்.

முக்கியமான ஒரு கேள்வி 'நாங்கள் மரம் நடுகிறோம் சரி அதை உங்களுக்கு ஏன் அனுப்பவேண்டும்? விளம்பரம் தேடுவதை போல் இருக்கிறதே...?'

ஒவ்வொரு மனிதனும் மரம் நடுவதின் அவசியத்தை உணரும் போது நாங்கள் வேலையற்றவராகி விடுகிறோம். எங்களுக்கும் அதுதான் வேண்டும் !!

ஆனால் இங்கு அந்த விழிப்புணர்வு இன்னும் இல்லை என்பதே உண்மை. ஒருவர் மரம் நடுகிறார் அதை எங்களுக்கு அனுப்புகிறார்...இதன் மூலம் அவர் தான் செய்த நற்பணியை எண்ணி மகிழ்கிறார்...நான் பசுமையை காக்க முயற்சிக்கிறேன் என்று தன்னை தானே என்கரேஜ் செய்து கொள்கிறார்... பிறரையும் ஊக்கப்படுத்துகிறார். அவர்களும் இதை பின்பற்றலாம்...!

நடுவது ஒரு மரம் ஆனால் மரம் நடுவதன் அவசியம் பலர் மனதில் விதைக்கப்படுகிறது.

ஒரு மரம் மட்டும் நட்டு பல மரங்கள் நட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் விளம்பரம். ஒரு மரத்தை நட்டு பல மரங்களை நடவைக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது எப்படி விளம்பரம் ஆகும்...?

சக பதிவர் நண்பர்களிடமிருந்து இந்த இயக்கத்துக்கு என்ன விதமான உதவியை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

எல்லோரையும் மரம் நடச் சொல்லுங்கள் :-)

பசுமை விடியலின்

முகநூல் முகவரி - https://www.facebook.com/PasumaiVidiyal
இணைய தளம் - pasumaividiyal.org

****
நிற்க. பசுமை விடியல் இயக்கத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட நான், எங்கள் சென்னை வீட்டில் மரம் நட இடம் இல்லாததால், தஞ்சை சென்றபோது அண்ணன் வீட்டில் மரம் ஒன்று நட்டு விட்டு வந்தேன்.



நண்பர்களே, நீங்களும் உங்கள் பங்கிற்கு உங்கள் வீட்டிலோ, நண்பர்கள் அல்லது உறவினர் வீட்டிலோ ஒரு மரம் நடவும். இந்த தகவல் மற்றும் படத்தை பசுமை விடியலுக்கு அனுப்பவும். நன்றி !

33 comments:

  1. மரம் நடும் அளவிற்கு வசதியில்லை... வேணுமெனில் செடி நடுகிறேன்:)

    ReplyDelete
  2. மிகவும் சிறப்பான பகிர்வு...

    சாவதற்குள் ஒரு மரத்தையாவது நட வேண்டும் என்கிற எண்ணம் முதலில் வர வேண்டும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  3. இன்ட்லி ஓட்டுப்பட்டையையும் எடுத்து விடவும்... உங்கள் தளம் திறக்க நேரம் ஆகிறது... இதை நண்பர்களிடமும் தெரிவிக்கவும்...

    நன்றி...

    ReplyDelete
  4. வணக்கம்.
    நல்ல பகிர்வு...ஆமா மரம்னு சொல்லிட்டு செடி நடறீங்க...

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. பசுமை விடியல் இயக்கத்தின் முயற்சிகள் வெற்றி பெறட்டும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies

    1. வெங்கட்: நன்றி

      Delete
  6. சிறந்த பகிர்வு பாராட்டுக்கள். எங்கள் வீட்டில் அழகிய தோட்டமே உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சசிகலா? எங்களையெல்லாம் உங்க தோட்டத்துக்கு கூப்பிட மாட்டேன்குறீங்க!

      Delete
  7. மரம் நடுவதன் அவசியம் பலர் மனதில் விதைக்கப்படுகிறது.

    பசுமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி

      Delete
  8. கோவை நேரம்: அதுவும் மரக்கன்று தான். தேக்கு மரக்கன்று

    ReplyDelete
  9. மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் அனைவரும் அறிந்த ஒன்று. விரிவான தகவல் தந்த உங்களுக்கும் அருமையான சேவை செய்து வரும் பசுமை விடியலுக்கும் என் வணக்கங்கள் மற்றும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாலகணேஷ்: நன்றி

      Delete
  10. மரம் நடு விழா நடத்துகிறார்கள் சிறப்பு தான் ஒரு குறிப்பிட்ட காலம் வரையாவது நீர் விட்டு வளர்க்கும் கவனம் அவசியமே. இல்லவிட்டால் எல்லாம் வேஸ்டாகிடுமே.

    ReplyDelete
    Replies
    1. கலாகுமரன் : ஆம் அந்த எச்சரிக்கை அவர்களிடம் இருப்பதாகவே உணர்கிறேன்

      Delete
  11. பசுமை விடியல் மிகவும் சிறந்த பணி. வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு பாராட்டுகள்.

    மரம், செடிகளை வளர்ப்போம் இயற்கையைப் பேணுவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி நன்றி

      Delete
  12. பசுமை விடியல் பாராட்டுக்குரியது.
    நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. முரளி சார்: உங்கள் வீட்டில் தான் அடுத்து மரம் நடுகிறோம்

      Delete
  13. மரம் நடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். அது சரியான விதத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து ஒரு நிறைவு ஏற்படுகிறது.

    முகநூலில் வெளியிடப்படும் புகைப்படங்களை பார்த்து சௌதி அரேபியாவில் வசிக்கும் சில நண்பர்கள் நாங்களும் இதில் ஈடுபடுகிறோம் என்று நேற்று ஒரு மரத்தை நட்டு புகைப்படம் அனுப்பி இருக்கிறார்கள். இன்னும் தொடர்ந்து மரம் நட்டு பராமரித்து வளர்க்க போகிறோம் என்று உற்சாகமாக அவர்கள் தெரிவித்த போது புகைப்படங்கள் அவர்களிடம் பேசியதை உணருகிறோம்.

    அருள், பாலகிருஷ்ணன் சார் உட்பட பலரை இத்திட்டம் தான் எங்களுடன் இணைத்தது, அவர்களின் மூலம் தான் காஞ்சிபுரத்தில் ஒவ்வொரு ஞாயிறன்றும் களப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இப்படி பட்ட ஆர்வமுள்ளவர்களை இத்திட்டம் தேடி கண்டுப்பிடித்து கொடுப்பது தான் எங்களுக்கு மகிழ்ச்சியே !! 'தினம் ஒரு மரம்' திட்டம் சாத்தியம் என்பதையே இது காட்டுகிறது என்பதை தவிர நான் வேறு என்ன சொல்ல...?! :-)

    மோகன்குமார் சார்,

    உங்கள் வேலைகளுக்கு மத்தியில், கேள்விகளை கேட்டு பிடிவாதமாய் பதில்களை வாங்கி வெளியிட்டும் விட்டீர்கள்! எங்களை மேலும் சரிபடுத்திக்கொள்ள இந்த கேள்விகள் நிச்சயமாக உதவும் ! இந்த சந்தர்ப்பத்தை கொடுத்த உங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பில் நன்றிகள்.

    மற்றும் இங்கே வந்து பின்னூட்டம் மூலம் கருத்துகள், வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


    ReplyDelete
  14. Anonymous10:24:00 PM

    நல்ல முயற்சி...மரமோ...செடியோ (நன்றி புது மாப்ள)
    ...தோப்போ...எதுவாயினும்...


    பாராட்டுக்கள்...
    திரு.ஜோதிராஜ் , திருமதி.கௌசல்யா ,திரு.ISR.செல்வகுமார், திரு.பிரபு கிருஷ்ணா
    ,திரு.சூர்யபிரகாஷ்

    மோகன் உங்களுக்கும் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. பசுமை விடியல் குறித்த இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அண்ணா.

    மரம் நடுபவர்கள் நட்டவர் பெயர், ஊர், மரக்கன்றின் பெயரோடு அந்த படத்தை அனுப்ப வேண்டிய முகவரி tree@pasumaividiyal.org

    பிரபு கிருஷ்ணா
    பசுமை விடியல்.

    ReplyDelete
  16. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்,

    நாங்களும் நடலாம்தான் பிரான்சில் மரம் நட்டால் உள்ளே போட்டுடுவாங்களே அவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  17. மிகவும் பாராட்டப் படவேண்டிய செயல். மரம் (கன்று) நடுகிறேனோ இல்லையோ இருக்கும் மரத்தை அனாவசியமாக வெட்டுபவர்களை எப்போதுமே எதிர்ப்பேன்!

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. போன மாதம் என் தம்பியும் நானும் சேர்ந்து எங்கள் வீட்டிலும்,தெரு ஓரத்திலும் 10 மரங்கள் நட்டு முள் வேலி அமைத்தோம்.

    ReplyDelete
  20. மகிழ்ச்சி. நன்றி திரு மோகன் குமார்.
    நாங்களும் இருக்கிறோம் உங்கள் பதிவில். அந்த விசாலினி கூட்டத்திற்கும் சென்றிருந்தோம்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. நல்ல விஷயம். பசுமை விடியலுக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  22. பசுமை விடியல் குழுவினருக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  23. நல்ல முயற்சி பாராட்டுகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...