Friday, June 22, 2012

சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நாவல் கட்டுரை சிறுகதை என பல்வேறு வடிவங்களில் சுஜாதா எழுதி இருந்தாலும், அவரது மிக சிறந்த எழுத்துக்கள் வெளிப்படுவது சிறுகதையில்  தான் என பலரும் கருதுவது உண்டு. 

சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று ஸ்ரீரங்கத்து தேவதைகள். ஒவ்வொரு முறையும் புன்னகையும், நம் இளமை காலத்தையும் கண் முன் வர வைக்கும் அற்புத சிறுகதை தொகுப்பு இது. 

ொத்தம் 14 சிறுகதைகள். அதற்குள் தான் எத்தனை மனிதர்கள் உயிரோடு வலம் வருகிறார்கள் !   

நம் சிறுவயதில ஊரில் தொடர்ந்து பார்த்த ஏதாவது ஒரு பைத்தியத்தை  இன்று வரை நம் நினைவு இடுக்குகளில் விடாது வைத்திருக்கிறோம் தானே? அப்படி ஒரு பைத்தியத்தின் கதை தான் முதல் கதையான கடவுளுக்கு ஒரு கடிதம். கோவிந்து என்கிற மனிதர் தினம் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதி போஸ்ட் செய்கிறார். மன நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு திருமணம் செய்யலாம் என பேச, (" சாந்தி முகூர்த்தம் ஆனால் எல்லாம் சரியா போயிடும்") நல்ல வேளையாக அப்படி நடக்க வில்லை. கதையின்  இறுதியில் கோவிந்துவின் தம்பியும் அதே மாதிரி ஆகி போனதாகவும், அவர் அம்மா இருவருக்காகவும் வேண்டி கொண்டு தினம் கோவிலில் விளக்கு போடுவதாகவும் முடிக்கிற  போது மனது  கனத்து போகிறது. 

இன்னொரு பைத்தியத்தின் கதை குண்டு ரமணி. இது தன் குழந்தையை மரணத்திடம் கொடுத்த ஒரு பெண், புத்தி பேதலித்து திரிவதை சொல்கிறது. ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வந்து அமர்ந்து கொண்டு சாப்பாடு கொடுக்க சொல்லி வற்புறுத்துவதும், அப்படி தராவிடில் அந்த வீட்டு வாசிலிலேயே படுத்து தூங்குவதும்... இது மாதிரி பைத்தியங்களை நிச்சயம் நாம் பார்த்திருப்போம் !

சிறு வயதின் இன்னோர் வித்தியாச அனுபவம் சொல்லும் கதை "பாம்பு". சுஜாதா வீட்டில் பாம்பு வந்து விட, அவர் தங்கையை சைட் அடிக்கும் சுஜாதாவின் நண்பர் ஹீரோ மாதிரி பாம்பு பிடிக்க பார்க்கிறார். கடைசியில் பாம்பை பிடிப்பது அவர் தங்கை தான். "அது என்ன பாவம் பண்ணுச்சு விட்டுடலாம்" என அவள் சொன்னாலும் அந்த பாம்பு அடித்து கொல்லப்படுகிறது. "என் தங்கையை நான் நன்கு உணர அது ஒரு சந்தர்ப்பம்" என்கிறார் சுஜாதா. 

நம் சிறு வயதில் ஏதாவது ஒரு நண்பன் நம்மை மிக டாமினேட் செய்து கொண்டிருந்திருப்பான். பெஞ்சில் உட்காருவது முதல், விளையாட்டு  வரை இப்படி சுஜாதாவை மிக டாமினேட் செய்த ஒருவரை பற்றிய கதையை சுவாரஸ்யமாய் சொல்லி விட்டு.. இன்று அவன் "வேலை கேட்டு என் அறையின் வாசலில் அமர்ந்திருக்கிறான். வேலை கொடுக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள் என முடிக்கிறார் சுஜாதா !

சுஜாதா பாட்டி வீட்டில் வளர்ந்ததால், கதைகளில் பாட்டிக்கு முக்கிய இடம் இருக்கிறது. தனிமையில் சுஜாதாவை திட்டுபவராக, மற்றவர் முன்  எப்போதும் விட்டுத் தராதவராக இருக்கிறார் பாட்டி. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை  திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாய் உள்ளது. 

போகப்போக ரங்கு கடை, ஸ்ரீரங்கத்து தெருக்கள் எல்லாமே நமக்கு பழக்க பட்ட இடமாகி விடுகிறது. கே. வி, ரங்குடு, அம்பி ஆகிய பாத்திரங்கள் (நண்பர்கள்) பல கதைகளில் வருகிறார்கள். அனைத்து சிறுவயது விளையாட்டுகளிலும்  சுஜாதா ஒப்புக்கு சப்பாணியாக இருக்கிறார். (எல்லா எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தானோ?)   

உள்ளூர் கிரிக்கெட் மேட்ச்கள் எப்போதும் சுவாரஸ்யம் தான். சுஜாதா தஞ்சை டீமுடன் ஆடி ஜெயித்த அனுபவத்தை மிக சுவாரஸ்யமாய் சொல்கிறார். தங்களுக்கு  சாதகமான அம்பயர் வைத்து கொள்வதும், அவர்  எல்.பி .டபிள்யூ வுக்கு அவுட் கொடுக்காததும் எல்லாருக்கும் நடந்திருக்கும் ! இந்த மேட்ச் முடிந்து அதன் செய்தி சில வரிகளில் பத்திரிகையில் வந்த  போது கிடைத்த சந்தோசம் அதன் பின் எத்தனையோ முறை பத்திரிக்கையில் தன் பெயர் வந்த போதும் கிடைத்ததில்லை என்கிறார் சுஜாதா !

கிராமத்து டிராமாவில் சுஜாதா (சாமரம் வீசும் ) பெண் வேடம் போட்டதை ஏறக்குறைய கண்ணீருடன் நம்மிடம் சொன்னாலும், நமக்கு சிரிப்பு பிய்த்து கொண்டு போகிறது. நாடகம் பார்ப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ஒரு கறவை மாடு பரிசு என்று சொல்லி விட்டு, நாடக அரங்கத்தில் கட்டப்பட்டிருந்த மாடு ஒரு மாதிரி நெர்வசாக சுற்றி வந்து சாணி போட்டு கொண்டிருந்தது என்பது டிப்பிக்கல்  சுஜாதா ! 
ஒவ்வொரு கதையும் வாசித்து விட்டு சற்று இடை வெளி விட்டு தான் அடுத்த கதை வாசிக்க வேண்டியிருக்கிறது

தமிழில் வெளிவந்த மிக சிறந்த சிறுகதை தொகுப்புகளுள் ஒன்றான இந்த புத்தகத்தை வாசிக்க தவறாதீர்கள் !
********
கிழக்கு பதிப்பக வெளியீடான தமிழ் பேப்பரில் ஜூன் 19 வெளியான விமர்சனம்.

30 comments:

  1. Anonymous11:18:00 AM

    ஸ்ரீரங்கத்துக் கதைகள் மொத்தம் – 34 ஒரு Super Set.
    ஸ்ரீரங்கத்து தேவதைகள் 14 தான் – இது ஒரு Sub Set.

    ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்‘ விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. இதில் உள்ள 14 கதைகளும் முதலில் வெளி வந்தது ‘சாவி’, ‘குங்குமம்’ மற்றும் ‘கலைமகள்’ பத்திரிகைகளில்.

    ஸ்ரீரங்கத்துக் கதைகள் உயிர்மை வெளியீடு. சுஜாதா எழுதிய சிறுகதைகளில் ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு எழுதிய 34 சிறுகதைகளின் தொகுப்பு. 1983-ல் சாவி இதழில் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்‘ என்ற தலைப்பில் எழுதிய கதைகளும் அதே தலைப்பில் 2003-ல் ஆனந்த விகடனில் எழுதிய கதைகளும் ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்ட பிற கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

    ReplyDelete
  2. Anonymous11:20:00 AM

    ஸ்ரீரங்கத்து-தேவதைகள்-கதையா-?-கற்பனையா?

    http://balhanuman.wordpress.com/2010/05/12/

    ReplyDelete
  3. Anonymous11:26:00 AM

    பெண் வேஷம்:

    http://www.youtube.com/watch?v=J6bsJjU1qa0

    ReplyDelete
  4. ஒருசில பொதுவான இளமைக்கால அனுபவங்களே நம்மை இந்தத் தொகுப்பை ரசிக்க வைக்கும். சுஜாதாவின் சிறந்த புத்தகங்களில் ஒன்று.மத்யமர் கதைகள் வாசித்திருக்கிறீர்களோ....!

    ReplyDelete
  5. //ஒருசில பொதுவான இளமைக்கால அனுபவங்களே நம்மை இந்தத் தொகுப்பை ரசிக்க வைக்கும். //

    அது மட்டுமல்ல வாத்யாரின் எழுத்து பாணி நம்மை அந்த கதையில் ஒரு பாத்திரமாக அல்லது ஒரு நோக்கராக/பார்வையாளனாக வைத்திருக்கும் என்பதும் ஒரு காரணம்.

    80-களில் தொடராகப் படித்திருந்தாலும், பின்னர் புத்தகத்தை ஒரு சேர படித்திருந்தாலும், சில நாவல்களைப் போலல்லாமல், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தம் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  6. நல்ல சிறுகதைகள்.சுஜாதாவின் மத்தியமர் கதைகளும் நன்றாகயிருக்கும்.ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் இன்னொருமுறை அவசியம் படிக்க வேண்டும் என இருந்தேன்,
    தாங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.நன்றி வணக்கம்.

    ReplyDelete
  7. வெளிவந்த காலத்திலேயே வாசித்திருக்கிறேன். மீண்டும் தொகுப்பாக வாசிக்கும் ஆவலைத் தருகிறது பகிர்வு.

    ReplyDelete
  8. தன் வீட்டில் வேலை செய்த பெண்மணியின் சம்பள பணத்தை திருடிய கதையை சுஜாதா மறைக்காமல் பகிர்ந்தது நெகிழ்வாய் உள்ளது. //

    பாட்டியின் மரண தருவாயில் இந்த உண்மையை பாட்டியிடம் சொல்லி இருக்கிறார் சுஜாதா, அதுக்கு பாட்டி எனக்கு தெரியும் என்று சொன்னார்களாம், நெகிழ்ச்சி....!!!

    ReplyDelete
  9. Anonymous5:50:00 PM

    அத்தனை கதைகளும் பல தலைமுறைகளுக்கும் பொருந்தும் மோகன்...எதையோ நோக்கி எப்பவுமே ஓடிக்கொண்டிருக்கும் இந்த தலைமுறைக்கு...
    தொடருங்கள்...

    ReplyDelete
  10. நான் படித்த முதல் சுஜாதா கதை “மாமா விஜயம்”. 70-களின் ஆரம்ப ஆண்டு ஒன்றில் என்று நினைவு. கதை முழுதும் குலுங்கக் குலங்கச் சிரிக்க வைக்கும் மாமா, கடைசியில் ஊர் திரும்பியவர் திரும்பி வரவே இல்லை என்று முடித்திருப்பார். நான் மிக ரசித்தது “ஒரு சிக்கலில்லாத காதல் கதை”.

    ReplyDelete
  11. ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்து ரசிக்காத வாத்தியார் ரசிகர் உண்டோ....

    ஒவ்வொரு கதையும் அருமையாக இருக்கும். ஒவ்வொன்றும் முடித்திருக்கும் விதமும் வாவ் சொல்ல வைக்கும்...

    மீண்டும் படிக்க வேண்டும்..... எத்தனை முறை வேண்டுமெனிலும் இந்தப் புத்தகத்தினைப் படிக்கலாம்....

    ReplyDelete
  12. ஸ்ரீரங்கத்து தேவதைகள் படித்து ரசிக்காத வாத்தியார் ரசிகர் உண்டோ....

    ஒவ்வொரு கதையும் அருமையாக இருக்கும். ஒவ்வொன்றும் முடித்திருக்கும் விதமும் வாவ் சொல்ல வைக்கும்...

    மீண்டும் படிக்க வேண்டும்..... எத்தனை முறை வேண்டுமெனிலும் இந்தப் புத்தகத்தினைப் படிக்கலாம்....

    ReplyDelete
  13. அந்த ஆத்மாவை பற்றி இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பதே அவரின எழுத்து ஆழத்தின் மகிமை .அவரை பற்றி மீண்டும் மீண்டும் நினைக்க வைக்கும் உங்கள் பதிவுக்கு நன்றி .இன்னும் அவரை பற்றி விமர்சனங்கள் கடைவிரித்துக்கொண்டு இருந்தாலும் அவரின காலம் அந்த எழுத்து அப்போதய எழுத்துக்களின் நிலை எவ்வளவு முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள் என்பதை உங்கள் பதிவு எச்சரிக்கை செய்யட்டும் .

    ReplyDelete
  14. ஸ்ரீரங்கத்து தேவதைகள் பற்றி பல தகவல்கள் சொன்னமைக்கு நன்றி பால ஹனுமான்.

    ReplyDelete
  15. வெங்கட ஸ்ரீநிவாசன் said...
    சில நாவல்களைப் போலல்லாமல், மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தம் என்பதில் ஐயமில்லை.

    ****

    உண்மை நன்றி

    ReplyDelete
  16. ஸ்ரீராம்: நன்றி ; மத்யமர் வாசித்துள்ளேன். அதில் என் கடிதமும் வந்துள்ளது

    ReplyDelete
  17. நன்றி விமலன்

    ReplyDelete
  18. நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  19. மனோ: சரியாய் சொன்னீர்கள் நன்றி

    ReplyDelete
  20. உண்மை ரெவரி: நன்றி

    ReplyDelete
  21. இன்னமுதம்: முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  22. திண்டுக்கல் தனபாலன் நன்றி சார்

    ReplyDelete
  23. வெங்கட் நாகராஜ் : உண்மை நன்றி

    ReplyDelete
  24. அத்தனை கதைகளும் அருமை. என்னிடம் இரண்டு ஸ்ரீரங்கத்து தேவதைகள் இருக்கின்றன,
    அவரைப் பார்க்கப் போகும்போது மனைவியிடம் சொல்லி மூன்று புத்தகங்களுக்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பெரிய மனிதர்.

    அவரது முதல் குழந்தையை இழந்த விவரம் எதிலேயோ எழுதி (கடைசிப்பக்கங்கள்)?இருப்பார். கண்ணீர் வந்துவிடும்.

    ReplyDelete
  25. //மத்யமர் வாசித்துள்ளேன். அதில் என் கடிதமும் வந்துள்ளது//

    ஆம், சமீபத்தில் அந்தப் புத்தகத்தை மறுவாசிப்பு செய்த போது நீடாமங்கலம் ஆ. மோகன் குமார் என்ற வாசகர் கடிதம் (மகனுக்கு லஞ்சம் வாங்க தந்தை அறிவுரை சொல்லும் கதை - அறிவுரைதான் தலைப்பு!) பார்த்து நானே நீங்கள்தானா அது என்று கேட்க நினைத்து மறந்து போனேன்!

    ReplyDelete
  26. இந்தக் கதைகளை தனித் தனியாக
    படித்திருக்கிறேன்
    தொகுப்பாக படிக்கும் ஆவல்
    தங்கள் பதிவைப் படித்ததும் வந்தது
    அருமையான விமர்சனம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  27. சுஜாதா என்றாலே கணேஷ் வசந்த் மட்டுமல்ல ஸ்ரீரங்கத்து தேவதைகள் கூட தான். சுஜாதா - தி மாஸ்டர் இன் தமிழ் இலக்கியம். ஹி இஸ் கிரேட்

    ReplyDelete
  28. என்னிடமும் இருக்கு! இதோ..... இன்னொருக்கா வாசிக்க வச்சுட்டீங்க.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...