Saturday, December 15, 2012

நீதானே என் பொன் வசந்தம்

மிழ் இலக்கியம், சினிமா ஆகியவற்றில் ஆழ்ந்த வாசிப்பும், தமிழில்அற்புத மொழி வளமும் கொண்டவர் திரு. ராஜசுந்தர் ராஜன். புது பட விமர்சனங்களை தனது முக நூலிலும், கூகிள் பிளஸ்சிலும் அவர் பகிரும் போது அதை ரசிக்கவும், பாராட்டவும் செய்வோர் ஏராளம் !

ப்ளாக் வாசிக்கும் மக்கள் தனி பிரிவனர் என்பதால் உங்களுக்கும் சேர விரும்பி, அவரது விமரசனங்கள் அவ்வப்போது வீடுதிரும்பலில் வெளியாகும். அவரது நீதானே என் பொன் வசந்தம் விமர்சனம் - இதோ உங்களுக்காக !

நிற்க. ராஜ சுந்தர்ராஜன் அவர்கள் விமர்சனம் எழுதும் படங்கள் , தான் பிறகு பார்த்தாலும் தனியே விமர்சனம் எழுதவேன் என்கிறார் அய்யாசாமி :)

பொன்வசந்த அந்திப் புலம்பல் - ராஜசுந்தர் ராஜன்
---------------------------------------------------------------------------------------

கார்திகை ஈரம் மாரிகழி வருகை உணர்ந்து வறள வெறிக்கிறது. மஞ்சு முயங்கிய குன்றுகள் வெறும் குறிஞ்சிப் புகைச்சலாய் நினைவு நெரிக்கிறது. தன்னை ‘வல்’ என வைது ஆனால் ஒரு கூட்டம் இளசுகள் தொடரப் போகும் ஒரு பெட்டையைத் தொலைய நோக்கி, வயோதிகம் பெருமூச்சில் மறுகுகிறது.

“விண்ணைத் தாண்டி வருவாயா?” வெளியான அன்று எந்த ஓர் அரங்கிலும் எனக்கு டிக்கெட் கிட்டவில்லை. அதற்காக வெறுமனே வீடுதிரும்ப முடியுமா? ‘காசினோ’ தியேட்டரில், புதுமுகங்கள் தெரிந்த ஒரு போஸ்டரை, “ஏமாய சேஸாவே” என்று எழுத்துக் கூட்டி வாசித்து, ‘சரி, இன்றையக் கணக்குக்கு ஒரு தெலுங்குப் படமாவது பார்த்து ஓய்வோம்’ என்று நுழைந்தேன்.

‘மேலுதடு சற்றே எக்கரிட்டு, தேனடைக் குடம் எனத் திரளத் தோன்றும் யாரடா இவள்!’ என என் சிறுமூளைத் தண்டிறக்கம் கள்ளருந்த, உன் சேலைமேனி அசைவுகளில் முகமெய்ப்பாடுகளில் தத்தளித்து அப்படத்தின் மறுகரை வீசப் பட்டேன், சிறுபெண்ணே!

மறுகிழமை ‘ஏவிஎம்’ தியேட்டரில் டிக்கெட் கிடைத்து, “விண்ணைத்தாண்டி வருவாயா?” பார்த்தபோதுதான், ‘அடடே! இதைத்தான் தெலுங்கில் அன்று பார்த்தோமா? ஆனால்...!!!’ அன்றும் ஒரு காட்சியில் தோன்றி என் நினைவு சோதித்தாய். அன்றே சோதித்து அறிந்து கொண்டேன், “சமந்தா” உனது பெயர் என்று.


தமிழிலும் நாயகியாய், ஓடாத ஒரு படத்தில் ஏதோ வந்து போனாய் போலும். நல்லவேளை, நான் பார்க்க ஒருங்கும் முன்னே அது ஓடிவிட்டது. “நான் ஈ”யில், என்னா க்யூட்! என்னா க்யூட்!

இண்டி இடித்து முண்டி மூச்சுப்பிடித்து டிக்கெட் வாங்கும் அனுபவம் சென்னையிலும் உண்டு என்று அறிவாயோ? கண்ணாடியைக் கழற்றி பைக் பாக்ஸுக்குள் போட்டுவிட்டு ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு முண்டி மோதி ஒரு டிக்கெட் எடுத்து, இடித்துத் தள்ளி வெளிப்பட்ட போது என் இளமையையும் மீட்டு இருந்தேன். கண்ணாடியைத் திரும்ப எடுத்து மாட்டிக்கொண்டு, ‘தேவி கருமாரி’ தியேட்டரில் “நீதானே என் பொன்வசந்தம்” என்று உன் முன் அமர்ந்தேன்.

அய்யோ! நீ எங்கே! உரித்த கோழி அன்ன முகத்தில் உனக்கு நாயகனாய்ப் பாவனை பண்ணுகிற அந்த ஜீவா எங்கே! (அவர் காதுகளில் ஒரு ஜோடிக் கடுக்கன் மாட்டிவிட ஏன் மறந்தார்கள்?) நீயும் உன் தோழிகளாய் நடிப்பவர்களும் கலக்கினீர்கள்! சந்தானம் உதிர்க்கிற ஓரொரு வார்த்தைக்கும் இரட்டை அர்த்தம் பிடிக்கிற அந்தக் காட்சி, வெண்ணிற ஆடை மூர்த்தியின் கொச்சைத்தனத்தில் இருந்து விலகிக் கிளர்த்துகிற ஒன்று! பள்ளி மாணவியாய் மலர்ந்து வரும் பகுதியில், உன் நடிப்பு அபாரம்! அந்தக் கட்டத்தில் ஜீவாவும் ஓரளவுக்கு உனக்கு ஈடுகொடுத்து இருக்கிறார்.



திரைமொழி என்று ஒன்று இருப்பதின் தேவை பற்றி அவ்வப்போது எழுதுகிறேன். கௌதம் வாசுதேவ் மேனனின் காதில் அதை யாரோ போட்டுவிட்டார்கள் போலும். இடைவேளைக் கட்டத்தின் மொட்டைமாடிக் காட்சி: எக்ஸ்ட்ரா லாங் ஷாட். விலகி நிற்கிறீர்களாமாம். கட்டிங் ஒட்டிங் இல்லை; ஒற்றை ஒரு ஷாட். அக் காட்சியின் அபத்தம் எங்களுக்கும் புரிய வேண்டுமாமாம். எரிச்சல் வரவேண்டுமாமாம்: வளவளா வழக்கடி:(((

அத்தோடு முடிந்தது, அழகிய பெண்ணே! ஒருமுறை உதடுமுத்த - அதுவும் ஜீவாவின் மனைவி ஏதாவது சொல்லிவிடப் போகிறாரே என்று அஞ்சினாற் போல - புறந்தலை காட்டுகிற ஒரு காட்சிக்கு ஏன் இவ்ளோ நீள வசனம்? காட்சி அமைக்க வழி தெரியாமல் நல்லநல்ல பாடல்களை எல்லாம் ஏன் பிச்சுப்பிச்சு விதர வேண்டும்? இளையராஜா தனது குறுக்கீட்டுக் குரலால் ரசிகர்களின் ஊளை வாங்கி ஓரிடத்தில் இழிவுபடுவதும் நேர்கிறது.

அறிமுகப் படுத்திய ஆசான் ஆயிற்றே என்று - கண்ணீர் உலுப்புகிற சில காட்சிகளும் உண்டு - உன் பங்கினைச் சிறப்பாகச் செய்திருக்கிறாய் பெண்ணே! ஆனால் கௌதம் ஒரே ஒரு கதைதான் வைத்திருக்கிறார். அது என்னைப்போல் வயது கூடியவர்களும் உன்னைப்போல் இளசுகளை வாயொழுகுகிற கணக்குக்கு ஒரு கதை. அவரைப்போல் காதோரம் நரைகூடிய ஆட்களையும் குற்றம் சொல்வதற்கு இல்லை. ரஜினி, கமல் சாட்சியாக, என்னைப்போல் ரசிகர்களும் காதல்கதை பார்க்க இருக்கிறோம்தானே?
****
கும்கி விமர்சனம் : இங்கு

12 comments:

  1. நல்ல விமர்சனம்

    ReplyDelete
    Replies

    1. கண்ணதாசன் சார் நன்றி

      Delete
  2. ஊத்திடுச்சா?

    ReplyDelete
    Replies
    1. அப்டி தான் நினைக்கிறேன். இயக்குனர் கெளதம் நெகடிவ் ரிப்போர்ட் கேள்விப்பட்டு, சமாளித்து ஒரு அறிக்கை விட்டிருக்கார் !

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. டிவியில பில்ட் அப் பண்ணும்போதே தெரிஞ்சுபோச்சு.

    ReplyDelete
    Replies

    1. வாங்க முரளி நன்றி

      Delete
  6. போங்கய்யா நீங்களும் ஒங்க ராஜாவும்
    http://www.sekkaali.blogspot.com/2012/09/blog-post.html

    ReplyDelete
  7. நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!

    மென்மையான காதல் கதைகளை முன்வைத்து ஆபாசமில்லாமல் மிகச்சிறந்த காவியமாக திரைப்படங்கள் அமைய முடியும் என்பதற்கு 'தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே' இந்தி படத்திற்கு அடுத்ததாக வந்துள்ள மிகச்சிறந்த திரைப்படம் 'நீதானே என் பொன்வசந்தம்' என்று கருதுகிறேன். ஒரு அழகான காட்சிக் கவிதையாக, நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சிலையை வடிப்பது போன்று திரையில் செதுக்கப்பட்ட கலைவடிவம் என்று கூட இப்படத்தைச் சொல்லலாம்.

    மேலும் காண்க:
    http://arulgreen.blogspot.com/2012/12/Neethaane-En-Ponvasantham.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...