Wednesday, December 19, 2012

கும்கி விமர்சனம் - ராஜசுந்தரராஜன்

வீடுதிரும்பல் வாசகர்களுக்கு ஒரே படத்துக்கு இரு விமர்சனம் வாசிக்கும் வாய்ப்பு இனி அடிக்கடி கிடைக்கவுள்ளது. கும்கி குறித்து யாம் எழுதிய இந்த விமர்சனத்தையடுத்து திரு. ராஜசுந்தரராஜன் அவர்களின் விமர்சனம் இதோ:

" வானவில்" மாலை வரும் ...... நன்றி !

காவல் மறம் அல்லது ஆனைப் பார்ப்பான் காதல் -   ராஜசுந்தரராஜன்
-----------------------------------------------------------------------------------------------

அண்ணன் தங்கச்சி அன்புசெய்யலாம்; காமுகிக்கலாமோ? கல்யாணம்? ஆசிரிய மாணவ உறவும் அப்படித்தான். அப்படியே ஆம் தெய்வ பக்தச் சமன்பாடும். வரலாற்றில் ஆனால் விதிவிலக்குகள் நேரக் கூடும். சிற்சில இன்னும் தொடரவும் செய்யும். மாமன், மருமகளைக் காமுகிப்பதும் கல்யாணம் கொள்வதும் உண்டுதானே? (ஏதாவது சினிமாக் கதையை வம்புக்கு நினைக்க வேண்டா!) தமிழர்களிடமும் தெலுங்கர்களிடமும் இன்றைக்கும் உள்ளதொரு வழக்கத்தைச் சொல்கிறேன். வீணன் நானே என் அக்கா மகளை மணந்தவன்தானே?



நடுவிருந்தில், ரசம் என்று கழுதை மூத்திரத்தை விளம்பிச் சாப்பிட்டாற்போல இருந்தது, “நீதானே என் பொன்வசந்தம்” இடைவேளை. “கும்கி” இடைவேளையோ, தம்பி ராமையாவின் சலசலப்பு காரணம், நல்ல சாப்பாட்டில் கல்கிடந்து கெடுத்தாற் போல ஓர் உறுத்தல்! தியேட்டர் முற்றத்தில், மஞ்சள் முழுக்கைச் சட்டை ஒருவர் புகைவலித்துக் கொண்டே தொலைவிளித்து, “ஊஹூம், தெலுங்குக்கு இது ஒத்துவராது...” என்று யாருக்கோ தகவல் கொடுத்துக்கொண்டு இருந்தார். அருகில் அரைக்கைச் சட்டை இளைஞர்கள் இருவர். மஞ்சட் சட்டை, காதும் கையும் ஃபோனுமாய் என் திக்கம் திரும்பி, “நல்ல படந்தான், ஆனா ஹீரோ புதுசு இல்லையா, டயலாக் டெலிவரி சரியா வரலை; தம்பி ராமையாவை வெச்சு ஓவர்லாப் செஞ்சிருக்காரு (இயக்குநரைக் குறிப்பிடுகிறார்)...”

யோசித்துப் பார்த்தேன். ‘நடிகர் திலகம் பேரனுக்கு டயலாக் டெலிவரி சரியா வரலையாமாம்!’ அது ஓரளவுக்கு உண்மையும் ஆகலாம், ஆனால் உண்மையான காரணம் தயாரிப்புச் செலவு என்றே எனக்குத் தோன்றியது. ஊர்க்காட்டுக்குள் வந்து கொம்பன் யானை அழிவுத் தாண்டவமாடுவதை தொடக்கத்திலேயே காண்பித்தாகி விட்டது; அந்த விளைவின் அச்சம் உச்சக்கட்டம் வரைக்கும் நீண்டு நிற்க வேண்டாமா? என்றால், அதுபோல் இன்னும் இரண்டு பிரமாண்டக் காட்சிகளை இடைவைக்க வேண்டும். தமிழ்ப்பட இயக்குநர் பாவம் பணத்துக்கு எங்கே போவார்? மேஜிக் காட்டுகிறவன் இடைவிடாமல் பேசி நம் கண்ணடைப்பது போல, தம்பி ராமையாவின் வளவாளா வாயால் நம்மைக் கட்டிப்போட முயன்றிருக்கிறார். (என்ன ஆச்சு எனக்கு, ரசிகனாய் இல்லாமல் சினிமாக்காரர்களைப் போலப் பேசுகிறேன்!)

வெல்லுதல் சாத்தியமில்லை என்னும் அளவுக்குப் பகைப்புலத்தினை ஒரு கொம்பன் யானையாய்க் காட்டிவிட்டு, அதை விரட்டியடிக்கும் ‘கும்கி’ என்று பொய் சொல்லி, நாயகன் ஒரு திருவிழா யானையைக் கொண்டுவருதல் சிறந்ததொரு சினிமாச் சிக்கல்தான். ஆனால் நாயகனின் யானை சரியான பயந்தாங்குளி என்பதை, “திருவிழா வெடிச் சத்தத்துக்கே மிரண்டு ஓடுன யானைதானே இது?” என்று தம்பி ராமையாவின் வசனம் வழியாகத்தான் சொல்லவேண்டி இருக்கிறது. பதிலாக, ஒரு 'திருவிழாக்கூட்டம்-யானைமிரளுதல்' காட்சியை வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!

பிறகும், வனபர்வப் பாஞ்சாலி ஏனத்தின் கீரை ஒட்டுதலை எடுத்து கிருஷ்ணன் துர்வாசக் கூட்டத்தின் பசி தீர்த்தது போல, உள்ளதைக் கொண்டு இயக்குநர் நம்மைத் திருப்திப் படுத்தி இருக்கிறார் என்றே சொல்லுவேன்.

பெண்ணுக்குக் காவல் ஒரு குடும்பத்தில் அவள் அண்ணன்தானே? என்றால் ஊர்காக்க வரும் நாயகன் அவ்வூர்ப் பெண்ணான நாயகிக்கு யார்? எங்கள் ஊர் அய்யனார் கோவில், ‘குலச்சாமி அண்ணன் கோவில்’ என்றே சொல்லப்படுகிறது. (ஆனால் படத்தின் முடிபை மாற்றப் போகிறார்களாம்: மருத்துவர் அய்யா ஆட்களால் அடிவாங்காமல் ஓய மாட்டார்கள் போல!)

“The Magnificent Seven” என்றொரு படம் வந்தது. அது “The Seven Samurai” என்னும் குரோஸவா படத்தின் ஹோலிவுட் தழுவல்.
                     

ஒரு நாட்டுப்புறக் கிராமத்தின் விளைச்சலை ஓரோர் ஆண்டும் கொள்ளையடித்துச் செல்கிறது ஒரு கள்வர் கூட்டம். விடுபட, அக் கிராம மக்கள் காவல்மறவர் படை ஒன்றைப் பணி அமர்த்துகிறார்கள். மறவர்களில் ஒருவனுக்கு அவ்வூர்ப் பெண் ஒருத்திபால் காதல் உருவாகிறது. கள்வர்கள் கொல்லப் படுகிறார்கள். அதற்கு அப்புறம், ஹோலிவுட் படத்தில் காதல் கைகூடுகிறது. ஜப்பானியப் படத்தில் காதல் மறுக்கப் படுகிறது.

“கும்கி” படத்தில் அது என்னாகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க!

இதற்கு மேலும் ஒன்று சொல்ல ஆசை. தமிழ்த் திரை உலகம் ஒரு வணிகச் சந்தை. அதில், நகல் எடுத்தல் என்பதும் அது இது இயல்பாகக் காண்பிக்கப் படவில்லை என்பதும் பெரும் குற்றம் என்று நான் கருதவில்லை. ஒரு புள்ளி, தான் வழக்கமாகப் போகும் ஒரு பொருட்பெண்டிடம் பிரச்சனையைத் திறந்து பேசினார்: “இது உனக்கே நியாயமாப் படுதா? அவன் என் பையன்...” அவரைச் சட்டென்று வெட்டி அவள் சொல்லுவாள்: “‘அப்பன் வருவான் அவன்பின் மகன்வருவான்; தப்பென்று நீஅவரைத் தள்ளாதே’ன்னு எங்க ஆத்தா பாடி வெச்சுட்டுப் போயிருக்கா. அதுதான் எங்களுக்கு நியாயம்.”
- ராஜசுந்தரராஜன்

8 comments:

  1. வித்தியாசமான முறையில் இலக்கிய நடையில் அமைந்துள்ளது விமர்சனம்

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்.....

    தொடரட்டும் விமர்சனங்கள்....

    ReplyDelete
  3. அருமை... தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
  4. ஒரே இலக்கிய மயமா இருக்கு.. நல்ல இருக்கு இந்த பாணி..
    இருந்தாலும் எனக்கு கொஞ்சம் புரியல சார்.. நன்றி பகிர்விற்கு!!!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. விமர்சனமே புரியவில்லையே.படம் அப்படியோ.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. எந்த யானையாய் இருந்தாலும் பட்டாசை கொளுத்திப் போட்டால் மிரண்டுதான் போகும். அதே சமயம், புதிதாக சிக்கும் யானைகளை வழிக்குக் கொண்டு வரவும், இந்தப் படத்தில் காட்டுவதுபோல அடாவடி செய்யும் யானைகளை சரியாக டீல் செய்யவும் பழக்கப் பட்ட 'கும்கி' யானைகளைப் பயன்படுத்துவது வழக்கமாக நடக்கும் ஒன்று தான். கும்கி யானை அந்த யானையுடன் சண்டையிட்டு ஜெயிக்கிறது என்று அர்த்தமில்லை, மனிதன் நினைப்பதை இன்னொரு யானையிடம் அவற்றின் மொழியில் தெரிவித்து தாஜா செய்யும் வேலையைத்தான் கும்கி யானைகள் செய்கின்றன. முரண்டு பிடிக்கும் யானைகள் மனிதனின் கட்டுப் பாட்டுக்குள் வந்த பின்னர் அவையே கும்கி யானை வேலையைக் கூட செய்யலாம் யார் கண்டது!!

    ஐயா, நீங்க எழுதுற தமிழ் நல்லாத்தான் இருக்கு, இருந்தாலும் எங்களை மாதிரி தமிழ் சுமாராத் தெரிஞ்சவங்களுக்குப் புரியும்படியா எழுதுனீங்கன்னா நல்லாயிருக்கும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...