Tuesday, December 25, 2012

உலகின் அழகிய சர்ச் வீடியோ + பஞ்சவடி ஆஞ்சநேயர்: ஒரு பார்வை

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் !

***********
கிறிஸ்துமஸ் தினத்தன்று மிக அழகிய சர்ச் ஒன்றையும், பாண்டிச்சேரியின் முக்கிய சில கோவில்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

சேகர்ட் ஹார்ட் சர்ச்

சாதாரண எதிர்பார்ப்போடு தான் சேகர்ட் ஹார்ட் சர்ச் உள்ளே நுழைந்தோம். ஆனால் உள்ளே சென்று அதிசயித்து போனோம்.



பிரன்ச்சு கலையில் உள்ள மிக அழகிய சர்ச் இது. தலைக்கு மேல் நிமிர்ந்து பார்த்தால் உத்தரத்தில் கூட அற்புதமான கலை நுணுக்கங்கள் மிளிர்கிறது.



பீம்கள் போல இருக்கும் பெரிய தூண்களிலும் பல்வேறு வேலைப்பாடுகள். ஏசுநாதரின் அழகிய படம், அந்த இடத்தின் தூய்மை என பல விஷயங்கள் மனதை கொள்ளை அடிக்கிறது.

இந்த நான்கு நிமிட வீடியோ அவசியம் காணுங்கள்:



எங்களுடன் பஸ்ஸில் வந்திருந்த பலரும் ஹாவென வாய் பிளந்து வியந்து, வியந்து பேசிக்கொண்டிருந்தோம்.

சர்ச்சுக்கு ஒரு புறம் சிறிய தெரு செல்கிறது. குறுகலான அந்த தெருவும், அதன் அமைப்பும் நமக்கு மிக வித்யாசமாய் படுகிறது.

அருகருகே இரு குட்டி தெருக்கள் - ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்கள்- பார்க்க காமெடியாய் இருக்கிறது



இங்கு கூண்டு கிளிகள் பல வளர்க்கிறார்கள். என்ன செண்டிமெண்ட் என தெரியவில்லை.
*************
பஞ்சவடி ஆஞ்சநேயர்

பாண்டிச்சேரியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். ஐந்து முகங்களை கொண்டவராக 36 அடி உயரத்தில் பிரமாண்டமாக நிற்கிறார் ஆஞ்சநேயர்.

ராமேஸ்வரத்தில் வானர சேனைகள் சேர்ந்து பாலம் கட்டியபோது அங்கே ராமர் பாதம் பதித்த ஒரு கல்லை எடுத்து வந்து இங்கு வைத்திருக்கிறார்கள். 15 கிலோ எடை கொண்ட இந்த கல் சன்னதி முன்னே உள்ளே நீரில் போடப்பட்டிருக்க அவ்வளவு எடைக்கும் அது மிதக்கிறது !

36 அடி உயர ஆஞ்சேநேயரிடம் ரசிக்க ஏராள விஷயங்கள் இருக்கு. அந்த உயரத்துக்கும், அகலத்துக்கும் அவர்கள் கட்டியுள்ள பட்டு முதலில் ஈர்க்கிறது. காலடியில் நின்று அர்ச்சனை செய்கிறார் ஒருவர். துளசியை பத்து அடிக்கும் மேல் தூக்கி, தூக்கி போடுவதே பார்க்க வித்யாசமாக இருக்கிறது. அப்படி தூக்கி போடும் துளசி மிக சரியாக பல நேரங்களில் அவர் காலடியில் சென்று விழுகிறது (எல்லாமே பயிற்சி தானே !)

ஒரு அழகான தாத்தா - பேரனை இங்கு சந்தித்தேன். சாமி கும்பிட்டு விட்டு துளசி அனைவரும் எடுத்து கொள்ள, பேரன் துளசி எடுத்து உடனே சாப்பிட முற்பட்டான். தாத்தா " நம்ம தோட்டத்தில் எவ்வளவோ மண்டி கிடக்கு; அங்கே சாப்பிடுறானா பாரு; இங்கே வந்து சாப்பிடுறான் " என சொல்ல, 5 வயசு பேரன் " தாத்தா .. சாமி துளசி தான் தாத்தா சாப்பிடனும். வீட்டு துளசியையா சாப்பிடுவாங்க ? " என்று சிரிக்க, பக்கத்திலிருந்த பையனின் அம்மாவுக்கோ பெருமை தாங்கலை. " ஏன் மாமா - அவன் கிட்டே எப்பவும் பேசி பேசி வாங்கி கட்டிக்கிறீங்க ? " என்றதும், சிரித்தவாறே போகிறார் தாத்தா. அந்த மூவரின் அன்னியோன்னியமும் கோயில் முழுதும் சுற்றி வரும் போது பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்... அவ்வளவு அழகாய் இருந்தது !

ஐந்து முக ஆஞ்சனேயரில் நரசிம்ஹர், வராகர், ஹையகிரிவர் என ஒவ்வொரு பக்கம் ஒவ்வொருவர்- பின் பக்கம் இருக்கும் முகம் பிரகாரம் சுற்றி வரும்போது பார்க்கிற மாதிரி சரியாக அந்த இடத்தில் ஒரு ஜன்னல் வைத்துள்ளனர்.

பிரகாரத்தில் ராமர் பாதம் போல் இரு பாதங்களின் உருவங்கள் வைத்துள்ளனர். அதன் மேல் மக்கள் காசுகளை வைத்து வணங்குகிறார்கள். சற்று தள்ளி நிற்கும் வேஷ்டி & சட்டை அணிந்த கோயிலின் சிப்பந்தி ஒருவர் அப்படி வைத்து செல்லும் காசுகளை எடுத்து பத்திரபடுத்துகிறார்

கோயிலை பார்க்கும் போதே நமக்கு உடன் நினைவில் வருவது நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் தான். அப்படியே அதே போல உயரம்.. பிரகாரம் மற்றும் சுற்றியுள்ள எல்லா விஷயங்களும் அப்படியே நங்கநல்லூரை உரித்து வைத்துள்ளது. எப்படி என விசாரித்தால் ரமணி என்கிற கட்டிட நிபுணர் தான் இரு கோயில்களையும் கட்டினார் என்றும் அதனால் தான் இரண்டும் ஒரே மாதிரி இருப்பதாக சொல்கிறார்கள். அவரே கும்பகோணத்திலும் இதே பாணி ஆஞ்சநேயர் கோவில் ஒன்று கட்டியுள்ளாராம்.

நாங்கள் சென்ற சனிக்கிழமை மாலை அவ்வளவு கூட்டம் இல்லை. நங்கநல்லூர் கோவில் என்றால் சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் கியூவில் நிற்கணும். இங்கு நேராய் சென்று பார்க்க முடிகிறது. ஆஞ்சநேயரின் மூல நட்சத்திரம் அன்று பால் அபிஷேகம் நடக்கும் என்றும் அன்று தான் மிக அதிக கூட்டம் வரும் என்றும் கூறுகிறார்கள்.

கோவிலை நிர்வகிப்பது ஒரு தனியார் ட்ரஸ்ட். அவர்கள் ஒவ்வொரு ஞாயிறு காலை மூன்று மணி நேரம் இங்கு இலவச மருத்துவம் / சிகிச்சை தருகிறார்கள். இதனை சுற்று வட்டத்தில் உள்ள ஏழைகள் நன்கு பயன்படுத்துவதாய் கூறினார்கள்.

கோயிலில் எந்நேரமும் இலவச பிரசாதம் தருகிறார்கள். புளி சாதம், சர்க்கரை பொங்கல் என ஏதேனும் ஒன்று.. வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டால் பாதி வயிறாவது நிரம்பி விடுகிறது. பஸ்ஸில் வந்த பலரும் இந்த அன்னதானத்துக்கு தங்களால் முடிந்த நன்கொடை செய்து விட்டு மன நிறைவுடன் கிளம்பினோம்,

மணக்குள விநாயகர்

பாண்டிச்சேரியின் மிக புகழ் பெற்ற கோயில் என்றால் அது மணக்குள விநாயகர் கோவில் தான் என்று நினைக்கிறேன். காரணம் நான் பார்த்த வரை பாண்டியில் மிக அதிக கூட்டம் இருந்தது இந்த கோவிலில் தான்.

குளம் மற்றும் மணல் அருகே இருப்பதால் பக்தர்களால் மணக்குள விநாயகர் என்று சொல்லப்பட்டு பின் தே பெயரை நிலைத்ததாக தெரிகிறது. பிரெஞ்சுக்காரர்கள் இங்கு வந்து ஆட்சி செய்யும் முன்பே இக்கோவில் இருந்ததாகவும், அவர்கள் ஒரு காலத்தில் இக்கோவிலை இடிக்க முயன்று தோற்றதாகவும் கோவிலின் இணைய தளம் கூறுகிறது !

மிக அதிகமான கூட்டம்.பெரிய வரிசை. நான் தள்ளி நின்று வணங்கி விட்டு தீபாராதனை பார்த்து விட்டு திருநீருடன் விடைபெற்று விட்டேன். கொதிக்க, கொதிக்க அற்புதமான சர்க்கரை பொங்கல். சான்சே இல்லை ! ரசித்து சாப்பிட்டேன்.

கடவுள் நம்பிக்கை உள்ளோர் பாண்டி சென்றால் அவசியம் செல்ல வேண்டிய கோவில் இது ! கோவில் வெளியில் உள்ள லட்சுமி என்கிற யானை மிக புகழ் பெற்றது. இது பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.(ஆஹா ! ரைட்டு !)

பாண்டி பீச்சுக்கு மிக மிக அருகில், நடக்கிற தூரத்தில் தான் மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இதற்கு ஒரு தெரு தாண்டி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் செல்கிறது. அவற்றில் இறங்கி, நடந்து ஓரிரு நிமிடத்தில் கோவிலை அடையலாம்

பாண்டியின் இதர கோவில்கள்

பாண்டிச்சேரியின் ஏராளமான கோவில்களில் நான் சென்ற மற்றொரு கோவில் இந்த வன்னிய பெருமாள்.




மிக பழமை வாய்ந்த இக்கோவிலில் ஹயக்ரிவர் விக்ரஹம் தற்போது தான் வந்துள்ளதாகவும், விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும் என்றும் சொன்னார்

முக்கிய சாலையொன்றில் சிறிது தூரத்தில் வேதபுரீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. இரண்டுமே ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்க கூடிய கோவில்கள்.

பாண்டிச்சேரிக்கு "குடிமகன்கள்" அதிகம் வருவது ஒரு புறம் இருக்க -  வயதானவர்கள், ஆன்மீக நாட்டமுள்ளவர்கள் வரவும், இங்கேயே தங்கி விடவும் இத்தகைய கோயில்களும், அரபிந்தோ ஆசிரமும் ஒரு முக்கிய காரணம் எனலாம் .

அரபிந்தோ ஆசிரமம் மற்றும் ஆரோவில் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.
****
தொடர்புடைய பதிவுகள் :

பாண்டிச்சேரி பீச் ஒரு ஜாலி ரவுண்ட் அப்

தமிழக மின்வெட்டுக்கு பாண்டி ஆட்டோ காரர் சொன்ன தீர்வு


14 comments:

  1. சர்ச் கோவில் பற்றிய தகவல் அருமை.நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் கட்ட காரணமாக இருந்தவர்தான் பஞ்சவடி கோவிலும் உருவாக காரணமாக இருந்தவர் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி TN முரளி சார்

      Delete
  2. பயணப் பதிவு ஆன்மீகப் பதிவாகி விட்டதா? கிறிஸ்துமஸ் அன்று 'சர்ச்' பற்றிய பதிவு பொருத்தம்.

    ReplyDelete
    Replies
    1. //கிறிஸ்துமஸ் அன்று 'சர்ச்' பற்றிய பதிவு பொருத்தம்.//
      கவனிச்சு சொன்ன உங்களுக்கு நன்றி நன்றி நன்றி !!

      Delete
  3. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன் ! வாழ்த்துகள் !

      Delete
  4. Replies
    1. விக்கி: மிக மகிழ்ச்சி :)

      Delete
  5. அந்த மூவரின் அன்னியோன்னியமும் கோயில் முழுதும் சுற்றி வரும் போது பார்த்து ரசித்து கொண்டிருந்தேன்... அவ்வளவு அழகாய் இருந்தது ! ---ரசனையான காட்சி ...

    மணக்குள விநாயகர் - மூலவரின் அருகில் வற்றாத நீரூற்று இருக்கிறது .. கேட்டால் அர்ச்சகர் அந்த நீரை பிரசாதமாகத் த்ருவார் ...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? தகவலுக்கு மிக நன்றி இராஜராஜேஸ்வரி

      Delete
  6. ரசித்தேன். எப்போது பார்க்க முடியுமோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்; நிச்சயம் பார்க்கலாம். Pondichery பக்கம் தானே சார்?

      Delete
  7. அருமை! எனக்கு சர்ச் பார்க்க நேரமில்லை:( உங்கள் பதிவில் பார்த்து மகிழ்ந்தேன்.

    நங்க நல்லூர் நேயுடு இவரை விட ரெண்டடி உசரம் கூடுதல் என்பது கூடுதல் தகவல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். இன்னொரு முறை பாண்டி சென்றால் அவசியம் சர்ச் பாருங்க

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...