Wednesday, December 26, 2012

2012-ல் இந்திய அரசியல்: டாப் 10 சம்பவங்கள் !

வேங்கட சீனிவாசன் - கையளவு மண் என்கிற தனது ப்ளாகில் அரசியல், சுற்றுப்புறம், நதிகள் உள்ளிட்ட பல்வேறு  சமூக  விஷயங்களை  பற்றி எழுதி வருபவர்.   வீடுதிரும்பலுக்காக இந்திய அரசியல் கடந்த ஓராண்டில் சந்தித்த சம்பவங்களை திரும்பி பார்க்கிறார் நண்பர் வேங்கட சீனிவாசன் !
***********
2012-இல் இந்திய அரசியல் : வேங்கட சீனிவாசன்



*********
2012….

சென்ற ஆண்டில் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களை அலங்கரித்த முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் பார்ப்போம்...

1. குடியரசுத் தலைவராக திரு.பிரணாப் முகர்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட குடியரசுத் துணைத் தலைவர் (மாநிலங்கள் அவையின் தலைவரும் இவரே) திரு.ஹமித் அன்சாரி மீண்டும் அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்;

2. ஏழு மாநிலங்களில் (பிப்ரவரியில் 5 மாநிலங்களிலும் டிசம்பரில் இரண்டிலும்) சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டில் காங்கிரஸும் இரண்டில் பாஜக-வும் வென்றன. ஒரு மாநிலத்தில் இரண்டும் சம அளவு உறுப்பினர்களும் ஒரு மாநிலத்தில் இரண்டுக்கும் மூன்றாவது நான்காவது இடமும், ஒரு மாநிலத்தில் மாநில கட்சியும் வெற்றி பெற்றன.

3. த்ரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் த்ரிவேதி கட்சித் தலைமையின் விருப்பத்திற்கு மாறான இரயில்வே நிதிநிலையறிக்கையை வெளியிட்டதால் கட்சியால் பதவியிலிருந்து இறக்கப்பட்டார்.

4. ஒரிஸாவில் பிஜு ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினரும் சுக்மா மாவட்ட ஆட்சியாளரும் மாவோயிஸ்டுகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

5. 2ஜி விவகாரத்தில் 122 உரிமங்கள் உச்ச நீதிமன்றத்தால் மறுக்கப்பட முதலில் அதை எதிர்த்து மனு செய்த மத்திய அரசு பின்னர் அந்த மனுவைத் திரும்பப் பெற்றது. மறு ஏலத்தில் ஊழலில் கணிக்கப்பட்ட அளவு ஏலத்தொகை கிடைக்கவில்லை.

6. அஸ்ஸாமில் மத/இனக்கலவரங்கள் வெடித்து பல குடும்பங்கள் வீடு, உடமைகளை இழந்தன. நாட்டின் பிற பாகங்களில் வசித்து வந்த வடகிழக்கு பகுதி மக்களுக்கு எதிராக வதந்திகளால் பரவ பதட்டமடைய நேரிட்டது.

7. ஐநா-வில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீரல்களை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.

8. மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.

9. (பிறந்த தேதி விவகாரத்தில்) அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை தரைப்படைத் தளபதி திரும்பப் பெற்றார்.

10. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டு அதன் காரணமாக கூட்டணியிலிருந்து த்ரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியது. ஆனாலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ஒன்றுக்கொன்று எதிர்நிலை எடுக்கும் முலாயம் சிங்-இன் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸுக்கு உதவின.
******************
இவற்றைத் தவிர தெலுங்கானா, கூடங்குளம் அணுமின் உலை எதிர்ப்பு, கேரளக்கடலில் இத்தாலியக் கப்பல் மாலுமிகளால் இரு மீனவர்கள் கொல்லப்பட்டது, மம்தா பானர்ஜி ஊடகங்களையும் எதிர்கருத்துக்களை கையாண்ட விதமும், ஏர்-இந்திய விமானிகளின் வேலை நிறுத்தமும், கிங்-பிஷர் நிறுவணத்தின் நிதி நிலைமையும், ராகுல் காந்தி கட்சிப் பொறுப்பை ஏற்பது (அல்லது பொறுப்பேற்பதில் காட்டும் தயக்கம் என்று கூற வேண்டுமோ?), ’டைம்’ பத்திரிகை பிரதமரின் கையாளாகாதத்தனத்தை விமர்சித்தமையும் முக்கியச் செய்திகளாக இடம் பெற்றன.

முக்கிய 10 நிகழ்வுகளில் சில குறித்து இன்னும் சற்று விரிவாக பேசுவோம்

சுதந்திர இந்தியா-வின் மக்களாட்சி என்கிற தேரை இழுத்துச் செல்லும் அரசுக் குதிரையின் கடிவாளமாக விளங்கும் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்தத் தேர்தல் தான் முதல் முக்கிய நிகழ்வு. கடிவாளத்தின் பிடி என்னவோ பிரதமரிடம் தான் இருக்கிறது.

[அந்த பிரதமர் என்கிற இயந்திர மனிதரைக் கட்டுப் படுத்தும் ரிமோட் தற்போது யாரிடம் இருக்கிறது? என்று கேள்விக் கேட்கக் கூடாது]

குடியரசுத் தலைவராக திரு. பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறுத் தலைவரகளின் பெயர்கள் யூகமாக வெளியிடப்பட்டுக் கொண்டே வர அதிலும் குறிப்பாக ஐ.மு.முன்னணிக்கு அப்போது ஆதரவளித்து வந்த த்ரிணாமுல் காங்கிரஸ் முன்னால் குடியரசுத் தலைவர் கலாமின் பெயரைப் பரிந்துரைக்க முயல, நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த காங்கிரஸ் ஒரே நாளில் முகர்ஜியின் பெயரை சிபாரிசு செய்து சுதாரித்துக் கொண்டது. அதற்கு, முன்னரே மற்றொரு ஆதரவுக் கட்சியான தேசியவாத காங்கிரஸின் சங்மா (தே.கா. அவரை வெளியேற்றிவிட்டது தனிகதை) தன்னை முன்னிலைப் படுத்தி எதிர் கூட்டணியின் (தே.ஜ. கூட்டணி) பிஜு ஜனதாதளம், அதிமுக ஆகியவற்றின் ஆதரவுடன் நிற்க அக்கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜக-விற்கு என்ன முடிவெடுப்பது என்பதே புரியாத நிலையில், காங்கிரஸின் அறிவிப்புக்குப் பின்னர் கலாம் தான் போட்டி-யிட விரும்பாததை அறிவித்த நிலையில் வேறு வழியின்றி சங்மா-வை ஆதரித்தது.

கட்சி அடிப்படையில் முகர்ஜி ஆதரவாளர்கள் அதிகம் இருந்தாலும், இந்திரா ஆட்சியில் கட்சி மாறிப் போட்ட ஓட்டுகளில் திரு. சஞ்சீவ ரெட்டிக்கு வெற்றி கிட்டியது போல் தனக்கும் கிடைக்குமோ என்ற சங்மா-வின் எண்ணம் நிறைவேறவில்லை. முகர்ஜி-யே பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆரம்பத்தில் அடிபட்ட பெயர்களில் முக்கியமான குடியரசுத் துணைத் தலைவர் திரு.அன்சாரி மீண்டும் அப்பதவிக்கு இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த ஆண்டு இந்தியாவின் ஏழு மாநிலங்களில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. முதல் பாதியில் (பிப்ரவரி-மார்ச் மாதம்) கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்திரபிரதேசம், உத்ராகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் பிற்பாதியில் (டிசம்பர்) குஜராத், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மணிப்பூர், ஹிமாசல மாநிலங்களில் காங்கிரஸும், கோவா, குஜராத் ஆகியவற்றில் பாஜக-வும், உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியும், பஞ்சாபில் அகாலிதளமும் வெற்றி பெற்றன. உத்ராஞ்சலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

இந்தத் தேர்தல்களில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டவை குஜராத் மற்றும் உத்திரபிரதேசத் தேர்தல்கள் தான். குஜராத்தில் மோதி தொடர்ந்து வெல்வதைத் தொடர்ந்து 2014-இல் மத்திய பொதுத் தேர்தலில் மத்திய அரசை நேக்கி நகர முயற்சிப்பது தான் இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம். ஆனால், காங்கிரஸோ கடந்த 4½ ஆண்டுகளில் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தாமல் கடைசி நேரத்தில் மத்திய தலைமையின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையிலேயே இருக்கிறது (கிட்டத்தட்ட தமிழக காங்கிரஸின் நிலைதான். ஆனால், தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. குஜராத்தில் அது இல்லாததால் மோதிக்கு எதிரான வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைப்பதால் ஓரளவு இருப்பைக் காட்டிக் கொள்ள முடிகிறது).

கடந்த ஆறு மாதங்களாக ஊடகங்களாலும் மத்திய காங்கிரஸ் தலைமையாலும் மோதிக்கு எதிராகக் கூறப்படும் எந்தக் குற்றச்சாட்டையும் மாநில காங்கிரஸ் சுட்டிக் காட்டவில்லை என்பதிலிருந்தே அந்த மாநில கட்சி நடக்கும் விதம் புரிபடும். எனவே, தேர்தலுக்கு முன்னரே மோதியின் வெற்றி உறுதியாகிவிட்டது. சோனியாவும், ராகுலும் ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்தது அவர்களின் கையறு நிலையைக் காட்டிவிட்டது. ஆனால், இந்த வெற்றி மோதியின் பிரதமர் கனவை நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. காரணம், முதலில் பாஜகவிலேயே அவரை முன்னிறுத்த ஒத்த கருத்து இல்லை; அடுத்து, சங்பரிவாரம் அவரை இன்னமும் முழுமையாக ஏற்கவில்லை; மூன்றாவதாக, கூட்டணிகள் (அதிமுக, அகாலிதளம், சிவசேனா தவிர பெரும்பாலானவை, முக்கியமாக ஜனதாதளம்) அவரை ஏற்பதில் காட்டும் தயக்கம் ஆகியவையே. இவையனைத்தையும் விட முக்கிய காரணமாக ஒன்றைக் கூற வேண்டுமானால் அது சமீப காலமாக பாஜக கண்டு வரும் சரிவும் அக்கட்சியின் உட்கட்சிப் பூசல்களும் தான்.

கட்கரி, எதியூரப்பா விஷயத்தில் பாஜக-வின் ஊழல் எதிர்ப்பும் கட்சிக் கட்டுப்பாடும் ஆட்டம் கண்டு அது காங்கிரஸின் நகலாகவேத் தோற்றம் காணுகிறது. காங்கிரஸிலாவது நேரு குடும்பம் என்ற பசை கட்சியை இணைக்க இருக்கிறது. பாஜக-வில் சங்பரிவாரம் (குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்) தான் அந்த வேலையைச் செய்து வருகிறது. ஆனால் சங்பரிவாரத்தின் நடவடிக்கைகளே கட்சியை மக்களிடமிருந்து தள்ளி வைக்கிறதோ என்ற எண்ணம் அவர்களிடம் எழுந்துள்ளதால் எந்தப் பக்கம் செல்வது என்று புரியாமல் இருக்கின்றனர்.

மாநிலங்களின் தேர்தலில் குஜராத்திற்கு அடுத்த நிலையில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது உத்திரபிரதேச தேர்தல் தான். காரணம், காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தினரால் ஒரு குடும்பத்தினருக்காக ஒரு குடும்பத்தின் மூலம் நடத்தப் பட்டதுஎன்பது தான். தேர்தல் பிரசாரத்தில் அக்குடும்பத்தின் நண்டு சிண்டுகள் கூட மேடையேற்றப்பட்டன. ஆனாலும், காங்கிரஸால் ஏற்கனவே இருந்த இடங்களைக் கூடத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைதான் ஏற்பட்டது. ஒரு வருடத்திற்கும் மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுலால் கூட கட்சியின் தோல்வியை தடுக்க முடியவில்லை. முலாயம் சிங் தனிப்பெரும் முன்னிலை பெற்றுத் தன் மகனை முதல்வராகவும் ஆக்கியது தான் நடந்தது.

இந்தத் தேர்தல்களைப் பொறுத்தவரை இவை முறைப்படி நடத்தப்பட்டு உரிய நேரத்தில் சரியான முறையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றங்கள் இயல்பாகவும் நேர்மையான முறையிலும் வெளியிடப்பட்ட விதம் இந்திய மக்களுக்கு ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை மேலும் வளர்க்கும் விதத்தில் இருந்தது என்றே கூறவேண்டும். தேர்தல்கள் பொதுவாக நேர்மையான முறையில் பாரபட்சமில்லாமல் முறைகேடுகள் இன்றியே நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தை இவ்விஷயத்தில் பாராட்ட வேண்டும்.

அடுத்த முக்கிய நிகழ்வு,ஆண்டு துவங்கும் முன்னரே அரசுக்கு எதிராகத் தரைப்படைத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தில் (பிறந்த தின சர்ச்சையில்) வழக்குத் தொடுத்திருந்தார். இது அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான பிணக்காக மாறிவிடும் அச்சம் தொடர்ந்தது. ஆனால், பிப்ரவரி மத்தியில் சிங் தன் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த அண்டை நாடுகளின் ஜனநாயகம் பெரும்பாலும் அரசுக்கும் ராணுவத்திற்குமானப் பிணக்குகளினாலேயே அதிகம் பாதிப்படைந்தன என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது இதன் முக்கியத்துவம் புரிபடும்.

ஊழல்களைப் பொறுத்தவரை இதுவரை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பெரிய ஊழலை நாம் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். 85-90களில் போபர்ஸ், 90-95களில் பங்குச் சந்தை (ஹர்ஷத் மேத்தா) ஊழல், 95-2000-இல் முத்திரைத் தாள் ஊழல், 2000-2005இல் 2ஜி ஒளிக்கற்றை 2005-10இல் நிலக்கரி ஊழல் ஆகியவை. ஆனால், இவை எதிலும் எந்த அரசியல்வாதியும் இதுவரைத் தண்டிக்கப் படவில்லை என்பது தான் நிலைமை. அரசியல்வாதிகள் தண்டிக்கப்படும் வரை இது போன்ற ஊழல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நீதிமன்றங்கள் தண்டிக்காவிட்டாலும் மக்களாவது இவர்களைத் தொடர்ந்து தண்டிக்க வேண்டும்

என்னதான் ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டாலும் இந்திய ஜனநாயகம் இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை என்று பெரும்பாலான ஊடகங்கள் விமர்சிக்கின்றன. குறிப்பாக, மத்தியில் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சியில் (கடந்த இரு தசாப்தங்களாக) மாநிலக் கட்சிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து வருவதாக வட மாநில ஊடகங்கள் கருதுகின்றன. ஆனால், மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி என்ற (திராவிட கட்சிகளின் ஆரம்ப கால கோஷமாக இருந்தாலும்) நிலைதான் சரியென்று தோன்றுகிறது. வலுவான மத்திய அரசு இருந்த போது அது சிறு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பெரிய மாநிலங்களில் தங்கள் வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏற்ற முடிவுகளையே எடுத்துவந்துள்ளன/வருகின்றன. உதாரணமாக, காவிரி, மீனவர்கள் கொல்லப்படுவது, அணுமின் உலை விவகாரங்களில் மத்திய அரசுகள் எடுத்துவரும் நிலையைக் கூறலாம். சில மாநிலக் கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மத்திய அரசை மிரட்டுவதைக் கொண்டு இந்தக் கூட்டாட்சி முறையே தவறென்று கூற முடியாது. இதற்கு மக்கள் சரியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் தீர்வாக இருக்க முடியும்.

வரும் ஆண்டுகளிலாவது இந்த முதிர்ச்சியை நாம் அடைய வேண்டும்…!

வேங்கட சீனிவாசன்
***
அண்மை பதிவு: வானவில்: சச்சின்-ஷாலினி- MAX  கடை அக்கிரமம் !

15 comments:

  1. //ஒரு தேசத்தின் அரசியலை ஒரு ஆண்டின் நிகழ்வுகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதே நேரம், ஒவ்வொரு நிகழ்விலும் சில அரசியலும், குறைந்த பட்சம் சில மாற்றங்கள் நிகழ்வதும் அது அந்த தேசத்தின் அரசியல் போக்கை மாற்றுவதும் உண்டு. //

    இதுக்கு ஏதாவது பொழிப்புரை இருக்கா? :-(

    ஆரம்பத்துலே தெரிச்சிட்டு கமெண்ட் செக்‌ஷனுக்கு வந்துட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. லக்கி,

      ”ஒரு தேசத்தின் அரசியலை ஒரு ஆண்டின் நிகழ்வுகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதே நேரம், ஒவ்வொரு நிகழ்விலும் சில அரசியலும் - குறைந்த பட்சம் சில அரசியல் சங்கேதங்களும் - அவற்றால் அரசியலில் சில மாற்றங்கள் நிகழ்வதும் அது அந்த தேசத்தின் அரசியல் போக்கை மாற்றுவதும் உண்டு.”

      இதுதான் நான் எழுதியது. தகவல் பரிமாற்றத்தில் சில வார்த்தைகள் விடுபட்டுவிட்டன என்று நினைக்கிறேன். ’முதல் கோணல் முற்றும் கோணல்’ என்று எண்ணிவிட்டீர்கள் போலிருக்கிறது.

      மன்னிக்கவும்.

      Delete
  2. Anonymous5:56:00 PM

    ஹி ஹி, லக்கி எனக்கு கூட சேம் பிளட்.

    ReplyDelete
  3. யுவா: முழுக்க படிங்க சாரே ! நிச்சயம் நிறைய விஷயம் எழுதிருக்கார்

    அவரு அனுப்பியதை எடுத்து படிக்கிறேன். நான் தான் எடிட் பண்ணும் போது ஏதாவது தப்பு ஆச்சோன்னு டவுட்டா இருக்கு !

    ReplyDelete
  4. நல்ல தகவல்கள் ,அருமை இவ்வளவையும் ஒன்று திரட்டி கொடுக்கும் உங்களின் நண்பரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுகளுக்கு நன்றிகள்!

      Delete
  5. //ஆனால், இந்த வெற்றி மோதியின் பிரதமர் கனவை நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. காரணம், முதலில் பாஜகவிலேயே அவரை முன்னிறுத்த ஒத்த கருத்து இல்லை;//

    அப்படி பார்த்தால் பரவலாக ஆதரவு பெற்ற Prime Minister candidate என்று வேறு யாரும் இல்லை. பாஜகவினரை விடுங்கள். வட இந்திய நியூஸ் மீடியாவே மோடியை Prime Minister candidateஆக மாற்றிவிடும்.

    ReplyDelete
    Replies
    1. காங்கிரஸைப் பொறுத்தவரையில் பிரதமர் யார் என்பது முக்கியமில்லை. ரிமோட் தான் மேடத்திடம் இருக்கிறதே!

      ஆனால், பாஜாகவிற்குத் தான் இருதலைக் கொள்ளி நிலை. மோடியை ஏற்கவும் முடியாது (ஆர் எஸ் எஸ் ஆதரிக்காததால்) பகைக்கவும் முடியாது (குஜாராத் வாக்குகள் தேவை).

      நீங்கள் சொன்னது போல் மீடியாக்களே அவரைப் பிரதமர் வேட்பாளராக்கும் சாத்தியம் இருக்கிறது.

      கருத்துக்களுக்கு நன்றிகள்

      Delete
  6. //சில மாநிலக் கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக மத்திய அரசை மிரட்டுவதைக் கொண்டு இந்தக் கூட்டாட்சி முறையே தவறென்று கூற முடியாது. இதற்கு மக்கள் சரியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் தீர்வாக இருக்க முடியும். //

    மிகவும் சரி.

    ReplyDelete
    Replies
    1. நன்ற்கள் அமைதி அப்பா!

      Delete
  7. //சென்ற ஆண்டில் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களை அலங்கரித்த முக்கிய அரசியல் நிகழ்வுகளைப் பார்ப்போம்...//

    நல்ல தொகுப்பு...

    தொகுத்த பத்து நிகழ்வுகளில் என்னை பொருத்தவரையில் ஒன்றே ஒன்று தான் நல்ல/பாராட்டதக்க நிகழ்வு. அது...

    //8. மும்பை தீவிரவாதத் தாக்குதல்களில் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.//

    அடுத்ததாக பல நெருக்குதல்களுக்கு பின் இந்திய அரசு எடுத்த இந்த முடிவு...

    //7. ஐநா-வில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீரல்களை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. //

    மற்றபடி மோசமான நிகழ்வுகளை வரிசை படுத்தினால் அது நல்லா இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. //நல்ல தொகுப்பு...//
      பாராட்டிற்கு நன்றிகள்!

      முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்துள்ளேன்.

      நல்ல நிகழ்வு அல்லாத நிகழ்வு என்பவை நாம் இருக்கும் பக்கத்தைப் பொருத்தது என்று எண்ணுகிறேன். தேர்தல் நிகழ்வுகளைப் பொருத்தவரை முடிவுகள் எப்படி இருந்தாலும் மக்களுக்கு மக்களாட்சியில் இருக்கும் நம்பிக்கையைக் காக்கும் விதத்தில் அது நடைபெற்றதையே முக்கியமாகக் கருதுகிறேன்.

      /அடுத்ததாக பல நெருக்குதல்களுக்கு பின் இந்திய அரசு எடுத்த இந்த முடிவு...//
      ஆம். போர்க் குற்றங்கள் நிகழும் பொழுது கண்மூடி இருந்துவிட்டு பிறகு கொடுத்த நெருக்குதலால் ’கொம்பை விட்டு வாலைப் பிடிப்பது’ போன்ற முடிவுதான். அதனால் தான் மத்தியில் கூட்டாட்சி என்பது நன்மை தரும் என்று எண்ண வைக்கிறது.

      தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்

      Delete
  8. //இதற்கு மக்கள் சரியானத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பது தான் தீர்வாக இருக்க முடியும்.// - அதான் அடிகடி மாத்தி யோசிகறேன்னு சொதபராகளே!!
    விரிவான ஒரு அலசல்!!
    நன்றி திரு வெங்கட்

    ReplyDelete
  9. Please do look into this issue which went unnoticed for 4 years. This is more brutal than Delhi gang rape. Please make awareness about this issue and help the poor girl in getting the proper justice.

    http://www.theweekendleader.com/Causes/1470/naked-injustice.html


    ReplyDelete
  10. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

    நன்மக்களே!
    வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
    நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
    இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

    பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
    மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
    காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
    இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
    மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
    புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

    மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
    நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
    இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
    வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
    காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
    மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

    -இந்தியன் குரல்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...