வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமா? குடும்ப நலமா?- ஆதிமனிதன்
//இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது.//
//இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது.//
வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஒரு கட்டத்தில் இந்தியா திரும்ப பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது தான் எனக்கு தெரிந்து யாரும் எதிர் வாதம் செய்ய முடியாத முக்கிய காரணம். அது நெருங்கிய குடும்ப உறவுகளின் மறைவு மற்றும் துக்கங்களில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை.
சிங்கப்பூர், துபாய் ஒரு இரண்டு மூன்று மணி நேர விமான பயணம். அதிகபட்சமாக லண்டனிலிருந்து அவசரத்துக்கு இந்தியா திரும்ப வேண்டுமாயின் பத்து பன்னிரண்டு மணிநேரம் தான். ஆனால், இரண்டு கண்டங்களை தாண்டி அமெரிக்காவிலிருந்து வருவதென்றால். அது தான் அங்கு வாழும் இந்தியர்களுக்கு என்றுமே ஒரு சவாலான விஷயம்.
தாய் தந்தையர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பின் ஓரளவு நாம் நிம்மதியாக தூங்க முடியும். இல்லையென்றால் அது அனல் மேல் பூனை வாழ்க்கை தான். சமீபத்தில் அமெரிக்காவில் வாழும் பதிவுலக நண்பர் ஒருவரை சரியாக மணியை கணக்கு பார்க்காமல் இரவு ஒன்பது மணி என்று நினைத்துக்கொண்டு அழைத்து விட்டேன் (நான் கலிபோர்னியாவில் இருந்த நினைப்பில் அவ்வாறு அழைத்து விட்டேன். ஆனால் அவரோ நியூ யார்க்கில் உள்ளார். அப்போது அவருக்கு இரவு நடு சாமம்). நண்பர் பதறி அடித்துக்கொண்டு பேசினார். அப்போது தான் எனக்கு அவருடைய டைம் ஜோன் உரைத்தது. உடனே மன்னிப்பு கேட்டுக்கொண்டு நாளை பேசுகிறேன் என்று வைத்து விட்டேன்.
அடுத்த நாள் நண்பரிடம் பேசியது அவரின் வார்த்தைகளில்.
"தப்பா எடுத்துக்காதீங்க ஆதி. நைட் பன்னிரண்டு மணிக்கு இந்தியா நம்பரை பார்த்தவுடன் பதறி விட்டேன். ஊரில் அம்மா அப்பா இருவரும் தனியாக உள்ளார்கள். அந்த நேரத்தில் அழைப்பு வந்ததும் என்னமோ ஏதோ என்று பதறி விட்டேன்".
இது தான் அங்கு பல குடும்பங்களில் நடக்கிறது ! சில நேரங்களில் அவசரத்துக்கு மணி பார்க்காமல் ஏதாவது சின்ன விசயத்திற்கு இந்தியாவிலிருந்து நடு சாமத்தில் எங்களை அழைத்து விடுவார்கள். அங்கு நமக்கு பி.பி எகிறி விடும். தனிப்பட்ட முறையில் அமெரிக்காவில் நான் இருந்த கால கட்டத்தில் என்னுடைய நெருங்கிய உறவுகள் பலர் தவறி விட்டார்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு என்ன செய்ய முடியும்? அடுத்த பிளைட் பிடித்து இங்கு வந்தால் கூட நான் ஊர் போய் சேர்வதற்கு மூன்று நாட்கள் ஆகிவிடும். அங்கேயே ஓரிரு நாள் உட்கார்ந்து அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
துக்கம், இறப்பு மட்டுமல்ல. திருமணம் போன்ற சந்தோசமான நேரங்களில் கூட ஒரு சிலரால் அனுபவிக்க முடியாமல் போவதுண்டு. ஒரு கல்யாணம் காட்சி என்றால் அங்கிருந்து ஒரு வாழ்த்து தான் பெரும்பாலான வெளி நாட்டு வாழ் இந்தியர்களால் சொல்ல முடிகிறது. மிக நெருங்கிய உறவுகள் திருமணம் மட்டும் நன்றாக திட்டமிட்டால் கலந்து கொள்ள முடியும். அதுவும் அவரவர் குடும்ப பொருளாதாரத்தை பொறுத்து தான். என் நெருங்கிய நண்பர் ஒருவர் தன் சொந்த தம்பி திருமணத்திற்கு செல்லவில்லை. கேட்டதற்கு, அதற்க்கு குறைந்தது ஒரு வாரம் லீவு போட வேண்டும். எல்லா செலவுகளையும் சேர்த்தால் குறைந்தது ஒரு லட்சம் ஆகும் நான் மட்டும் போய் வர. அதை பணமாக தந்தால் தம்பி திருமணத்தை இன்னும் சிறப்பாக நடத்த முடியும். அதனால் நான் போக வில்லை. கல்யாண சி.டி பார்த்துக்கொண்டால் போதும் என்றார்.
ஒன்றை மட்டும் இந்த பதிவின் மூலம் தெரிய படுத்திக்கொள்ள விரும்புகிறேன். வெளி நாடுகளில் போய் வாழ்பவர்களை பற்றி பலருக்கும் பல வித கருத்துக்கள் இருக்கும். அதில் ஒன்று மட்டும் நிச்சயம். வேலை நிமித்தம் வெளி நாடு செல்லும் பெரும்பாலானோர் தான் மட்டும் சுகமாக வாழ வேண்டும் என நினைத்து அங்கு போவதில்லை அல்லது இருப்பதில்லை. சென்ற பதிவில் மனோ சாமிநாதன் அம்மா அவர்களின் பின்னூட்டம் இப்படி தான் இருந்தது...
//மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபுக்குடியரசில் 35 வருடங்கள் வாசம். ஆரம்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க, அதன் பின் மற்றவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க, பிறகு நம்மை நிலை நிறுத்திக்கொள்ள, அதன் பின், அன்பின் நிர்ப்பந்தங்களுக்காக என்று இத்தனை வருடங்கள் கடந்து வந்தாயிற்று. //
இந்தியா திரும்புவது என முடிவு செய்த பின் என் சிறியவளிடம் தெரிவித்த போது முடியவே முடியாது என்றாள். குழந்தைகளுக்கு முதல் பிரச்சனை இங்குள்ள பள்ளிகளும், பாட புத்தகங்களும், படிப்பு முறையும் தான். நான் அவளிடம் கேட்டது இது தான். உனக்கு உன் அம்மா அப்பா கூட இருக்க வேண்டுமா இல்லையா? இல்லை நீ மட்டும் தனியாக இங்கு இருந்து கொள்கிறாயா என்று ! அதற்கு அவள் "இல்லை, நீங்க ரெண்டு பேரும் எப்பவும் என் கூட தான் இருக்கணும்" என்றாள். அதற்கு நான், "பாத்தியா, உனக்கு மட்டும் உன் அப்பா அம்மா கூட இருக்கணும். எங்களுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா? எங்க அப்பா அம்மா அங்கு தனியா தானே இருக்காங்க. அவங்க கூட இருக்கணும்னு எங்களுக்கும் ஆசையா இருக்காதா?" அவளுக்கு முழுதும் புரிந்ததா என எனக்கு தெரியாது. அது தான் தற்போது என் மன நிலையும்.
எனக்கு தெரிந்து பலரின் வெளி நாட்டு வாழ்க்கை இப்படிதான் அமைகிறது. அது மட்டுமல்ல. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அது போல் தான் எங்கள் நிலைமை. இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது. ஒரு பக்கம் நம்மை பெற்ற பெற்றோர். மறு பக்கம் மனைவி குழந்தைகள் அவர்களின் எதிர்காலம். இரண்டுக்கும் நடுவில் மதில் மேல் பூனையாக இன்று பலர் தத்தளிப்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
அதில் தற்போதைக்கு ஒரு பக்கம் நான் குதித்து விட்டேன். இருந்தாலும் மனது அடுத்தப்பக்கத்தை எட்டி எட்டி பார்கிறது. கொஞ்ச நாள்/வருடங்கள் கழித்து எம்பி குதித்து மறு பக்கம் தாவ கூட முயற்சிக்கும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தற்போதைக்கு குதித்த இடத்தில் சந்தோசமாக இருக்க இந்த குரங்கு மனசு முயற்சித்து பழகி கொண்டு இருக்கிறது !
வெளிநாட்டில் வேலை செய்வது பகட்டாக இருந்தாலும் அடிமைகள் என்று என் நண்பன் சிங்கப்பூரில் சொன்னது உரைக்கிறது
ReplyDeleteநன்றி கோவை நேரம்.
Delete//...அடிமைகள்...//
அப்படி நான் எங்கும் கூறவில்லை. ஒரு வேலை வெளி நாட்டில் இருப்பவர்கள் உள்ளூர் பாசத்திற்கு அடிமை என்று எடுத்துக்கொள்ளலாம்.
நல்ல அலசல்....
ReplyDeleteவெளி நாட்டினை விடுங்கள், உள் நாட்டிலேயே தில்லி போன்ற இடத்தில் இருந்து கொண்டு பல விழாக்களையும் துக்க சம்பவங்களையும் தவிர்க்க வேண்டி விடுகிறது பல சமயத்தில்...
த.ம. 2
உண்மை. நன்றி வெங்கட்.
Deleteவெளி நாட்டில் வாழ்பவர்களின் மன நிலையை
ReplyDeleteசுருக்கமாக ஆயினும் மிகத் தெளிவாக
மிகச் சரியாக படிப்பவர்கள் உணரும் வண்ணம்
பதிவிட்டது மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி.
Deleteநமது முன்னோர்கள் வாழ்க்கையை பிரம்மச்சரியம்,க்ரஹஸ்தம், வானப்ரஸ்தம்,சன்யாசம் என்று பிரித்து மனப்பக்குவம் ஏற்படுத்தி உள்ளனர்.
ReplyDeleteஅமெரிக்காவிலும் அவர்கள் வாழும் முறை சாகும் வரை தன சக்தியை நம்பியே.90 வயதில் கார் ஓட்டி செல்லும் முதியர்.ஒரு கை இல்லாமல் ஒரு முதிய பெண் சாமான்களை எடுத்து காரில் வைத்தபொழுது உதவச்சென்ற என் மகனைத் தடுத்துவிட்டார்.அது அவர்கள் தன்னம்பிக்கை. நான் 58 வயதில் வயதில் ஒய்வு பெற்றதும் தளர்ந்துவிட்டேன்.அங்கு சென்றதும் இளமையை உணர்ந்தேன். என் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.
நம் சனாதன தர்மம் வாழ்க்கைத் தத்துவங்களைக் காட்டுகிறது. தசரதர் மூப்படைந்ததும் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்தார்.
நாம் வயதானாலும் 52 வயது மகனை குழந்தையாய் தான் பார்க்கிறோம். நாம் நமது கலாச்சாரத்தை ஆழ்ந்து படித்தால் பிரிவு ஒன்றும் பெரிதல்ல.
தாயின் கருவில் இருக்கும் காலம் தாய் நாடு.பின் நாம் வெளிநாடுதான். இயற்கை நீதி ஆகையால் தான் நம் சகோதர மதம் இஸ்லாம் இறப்பில் சிரிக்கிறது. பிறப்பில் அழுகை.வாழ்க்கையின் எதிர் நீச்சல். இதுதான் உலகம்.
//அங்கு சென்றதும் இளமையை உணர்ந்தேன்.//
Deleteஎன் அம்மா அங்கு வந்திருந்த போது இதையே தான் கூறினார்.
//ஏன் என்றால் எங்கள் வீட்டின் அண்டைவீட்டுக்கரர் என் அப்பா சிறுவயதில் இறந்துவிட்டார் என்றார், அப்பாவின் வயது 74.//
என் தந்தை (74 வயதில்) மறைந்த செய்தி கேட்டு இதையே தான் என் அமெரிக்க நண்பரும் கூறினார். So sad. He is young.
நன்றி ஐயா.
muthalil suya nalam piraku kudumpa nalam.
ReplyDeleteMaybe!
Deleteதமிழ்நாட்டு எல்லையைத் தாண்டியாச்சுன்னா வெளிநாடென்ன வெளிமாநிலமென்ன?.. எல்லாம் ஒண்ணுதான். அனுபவத்திலிருந்து சொல்றேன் :-)
ReplyDeleteஅப்படிங்களா? அதுவும் சரிதான். இருந்தாலும் முக்கிய நிகழ்வுகளுக்கு நினைத்தால் வந்து விடலாம் (இங்கிருந்தால்). ஆனால் அங்கு நம்மை மீறிய பல சங்கடங்கள் உள்ளது.
Deleteநடுச்சாமத்தில் தொலைபேசி மணி அடிச்சால் உடனே நெஞ்சு பதைபதைச்சு வயிறு கலங்கிடும். எடுத்து பேசுவதற்குள்ளே இதெல்லாம் நொடியில் நடக்கும்.
ReplyDeleteஇருதலைக்கொள்ளி எறும்பு போல்தான் வெளிநாட்டு வாழ்க்கை. திரும்பிப்போய் பெற்றோரைக் கூட வச்சுக்கலாமுன்னா சில பெற்றோர்கள் அவர்களுக்குப் பழகிய கிராம வாழ்க்கையை விட்டு நம்மகூட நகரத்துக்கு வர விரும்புவதில்லை. கிராமத்துலே போய் அவுங்க கூட இருந்தால்..... நமக்கு வேலை? வேலை இல்லைன்னா இதுவரை பெற்றோருக்குக் கொடுத்த நல்ல வாழ்க்கையை எப்படித் தொடருவது? மேலும் பிள்ளைகள் படிப்புக்கு வழி?
பிரச்சனைகள் ஏராளமா இருக்குதுங்க.
கடைசியில் உள்நாட்டுலேயே அவுங்க ஒரு பக்கம் நாமொரு பக்கமுன்னு இருக்க வேண்டிய நிலை:(
//கடைசியில் உள்நாட்டுலேயே அவுங்க ஒரு பக்கம் நாமொரு பக்கமுன்னு இருக்க வேண்டிய நிலை:(//
Deleteஉண்மை அம்மா. தங்கள் வருகைக்கு நன்றி.
Excellent article sir..Other point bring by our relatives are "They got so much.. they are living luxurious life. They dont care about anything.". Your article showed the expression of inner mind of people like us. Wish you good luck to write more & more..
ReplyDeleteThank you sir. Sure I will.
Deleteஉங்கள் பதிவு மிக சரியான உண்மையை அலசுகிறது......பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சிறப்பான அலசல்....!
ReplyDeleteநன்றி மனோ.
Deleteவெளிநாட்டில் வாழ்பவர்களின் ஒவ்வொருவருடைய மனநிலையும் இப்படிதான் இருக்கும். அருமையாக எடுத்து சொல்லிருக்கிங்க.. நன்றி நண்பரே!
ReplyDeleteநன்றி ஆகாஷ்.
Deleteஉண்மைதான் மோகன்.... சென்ற முறை எனது கூட வேலை செய்பவரது மகளுக்கு விபத்து, அவர் அமெரிக்காவில்..... இந்தியா சென்று சேரும் வரை அவரது கண்களில் கண்ணீரும், தவிப்பும். அதை இந்த பதிவினில் உணர முடிந்தது......தொடருங்கள் !
ReplyDeleteஉண்மை தான் சுரேஷ். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் 20 மணி நேர தனிமை பயணம், அதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை இந்த உலகில்.
Deleteஅயித்தானின் அண்ணன் மருமகன் சொல்லும் டயலாக். நான் என் கல்யாணத்துக்கு மட்டும்தான் இந்தியா வந்தேன். அதற்கப்புறம் கல்யாணமே பார்த்ததில்லை!!! 15 வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை. உடல்நிலை சரியில்லாத தனது தாயாரை பார்த்துக்கொள்ளும் பொருட்டு மனைவியையும் குழந்தைகளையும் ஒருவருடத்திற்கு மட்டும் இந்தியா அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தார். அக்டோபரில் இந்தியா வந்தனர்.
ReplyDeleteஇதோ போன திங்கள்கிழமை இங்கே இருக்க முடியாமல் திரும்ப போய்விட்டார்கள். உடல்நிலை சரியில்லாதவரை பார்த்துக்கொள்ள வந்துவிட்டு குழந்தைகள் இருவருக்கும் பொல்யூஷனால் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. பள்ளியில் ஆசிரியர்கள் நடந்து கொள்வதைப்பார்த்து பிள்ளைகள் இருவரும் பயந்து போய்விட்டார்கள்.
ஊருக்கு செல்லும் முன் எங்களை சந்திக்க ஹைதை வந்திருந்தார்கள். சனிக்கிழமை காலை வந்தார்கள். மாலையே பெரியவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் ட்ரிப்ஸ் ஏத்தும் சூழல். இரவு மருத்துவமனை வாசம்!! அந்தக்குழந்தைக்கு,” I don't want to get sick. so i will not come to India" என்று சொல்லிவிட்டான். :(( என்ன சொல்ல முடியும்??!!!!
நன்றி புதுகை தென்றல்.
Delete/பள்ளியில் ஆசிரியர்கள் நடந்து கொள்வதைப்பார்த்து பிள்ளைகள் இருவரும் பயந்து போய்விட்டார்கள்//
வேறு எல்லாவற்றையும் நாம் சமாளித்துக்கொள்ளலாம். ஆனால் இந்த கொடுமை தான் மிக பெரியது.
// I don't want to get sick. so i will not come to India" என்று சொல்லிவிட்டான்.//
So sad:(
4 வருடங்களுக்கு முன்பு வரை இந்தியா நம்பர் என்றால் எங்களுக்கு கலக்கம் தான். தம்பி சிங்கையில் நான் இலங்கையில். அம்மா அப்பா மட்டும் புதுகையில். இப்பவும் தம்பிக்கு அந்த டென்ஷன் இருந்து கொண்டேதான் இருக்கிறது. :(
ReplyDeleteஅங்கே இருப்பவர்கள் நம் இந்திய டைமிங்கை கரெக்டா நினைவில் வைத்து இருப்பர். இங்கே இருந்து எப்பவோ ஃபோன் செய்வதால் நேரங்கெட்ட நேரத்தில் கூப்பிட்டு”திகில்” செய்வதே நம்ம வேலை.சுறுசுறுப்பா வச்சுக்குறோமோ!!1பாதி வளர்ந்த ஒரு செடியினை டபக்குன்னு எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கும் நிலைமை தான்.
ReplyDelete//பாதி வளர்ந்த ஒரு செடியினை டபக்குன்னு எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கும் நிலைமை தான்.//
DeleteI like it :)
அருமையான பதிவு மோகன் சார்.
ReplyDeleteஉண்மையில் நம் பிரட்சனைகள் இந்தியாவில் இருப்பவர்களுக்குப் புரிவதில்லை.
அவர்கள் நாம் என்னவோ தேவலோகத்தில் தேவர்களாக வாழ்கிறோம் என்றே நினைக்கிறார்கள்.
நாம் விடுமுறைக்கு இந்தியாவிற்குச் சென்றால்... சே... அங்கே எல்லாவற்றையும் விட்டுவிட்டு
இந்தியாவிலேயே இருந்து விடலாமா என்று தான் நமக்குத் தோன்றும்.
ஆனால் அடுத்தவர் நலனுக்காக நம் சுயநலத்தை இழந்து வாழுகிறோம்
என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
என்னதான் இருந்தாலும் பார்ப்பவர் கண்களுக்கு
இக்கரைக்கு
அக்கரை பச்சை தான்.
நன்றி வீடு திரும்பல்.
நன்றி செல்வம்.
Delete//என்னதான் இருந்தாலும் பார்ப்பவர் கண்களுக்கு இக்கரைக்கு அக்கரை பச்சை தான்.//
உண்மை.
நடுச்சாமத்தில் தொலைபேசி மணி//
ReplyDeleteஉண்மை...பல முறை அனுபவித்தது...
பிள்ளைகள் சற்று வளர்ந்த பின் நாடு திரும்புவது அவர்களுக்கு சுய நல பெற்றோர் செய்யும் பச்சைத்துரோகம்...
//உண்மை...பல முறை அனுபவித்தது...//
DeleteYou too...
//பிள்ளைகள் சற்று வளர்ந்த பின் நாடு திரும்புவது அவர்களுக்கு சுய நல பெற்றோர் செய்யும் பச்சைத்துரோகம்..//
அதே போல் நம் பெற்றோரை வயதான காலத்தில் அவர்களுக்கு பிள்ளைகளான நாம் தனியே விடுவது நம் சுய நலம் இல்லையா?
வாதத்திற்காக எழுதவில்லை. அது தான் என் தனிப்பட்ட கருத்து.
//அதில் தற்போதைக்கு ஒரு பக்கம் நான் குதித்து விட்டேன். இருந்தாலும் மனது அடுத்தப்பக்கத்தை எட்டி எட்டி பார்கிறது. கொஞ்ச நாள்/வருடங்கள் கழித்து எம்பி குதித்து மறு பக்கம் தாவ கூட முயற்சிக்கும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தற்போதைக்கு குதித்த இடத்தில் சந்தோசமாக இருக்க இந்த குரங்கு மனசு முயற்சித்து பழகி கொண்டு இருக்கிறது !//
ReplyDeleteஎத்தனை யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்! குழந்தைகள் சீக்கிரம் பழகி விடுவார்கள். அவர்களின் வயதும் அடுத்தடுத்து வருபவை அவர்களை சீக்கிரம் வசீகரித்து விடுவதாலும் அவர்கள் சுலபமாக அவர்கள் வாழ்க்கையில் படிந்து போக பழகி விடுவார்கள். நமக்குத்தான் ஒரு அந்நிய உணர்வு இருக்கும் இது நம் தாய் மண்ணாக இருந்த போதிலும். வெளி நாட்டு வாழ் இந்தியர்களின் வாழ்க்கை ஒரு திரிசங்கு சொர்க்கம். அவர்களுக்கு வெளி நாடும் சொந்தமில்லை. தாய் நாடும் தைரியம் தருவதில்லை.
நானும் வெளி நாட்டு வாழ்க்கையின் லாப நஷ்டங்கள் பற்றி ஆரம்பத்தில் புலம்பி இருக்கிறேன். நேரமிருந்தால் படித்துப்பார்க்கவும்.
http://www.muthusidharal.blogspot.com/2010/07/blog-post.html
//நமக்குத்தான் ஒரு அந்நிய உணர்வு இருக்கும் இது நம் தாய் மண்ணாக இருந்த போதிலும்//
Deleteஇதை அவ்வப்போது நான் உணர்கிறேன். விரைவில் சரியாகி விடும் என நம்புகிறேன்.
//அவர்களுக்கு வெளி நாடும் சொந்தமில்லை. தாய் நாடும் தைரியம் தருவதில்லை. //
Rightly said Madame.
//http://www.muthusidharal.blogspot.com/2010/07/blog-post.html//
நிச்சயம் படித்து பார்கிறேன். பகிர்தலுக்கு நன்றி.
தொடருங்கள் ஆதி...
ReplyDeleteதாய் நாட்டுக்குத் திரும்பிய உங்களது புதிய அத்தியாயத்திற்கு எனது வாழ்த்துக்கள்...
உங்கள் சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாய் இந்த தொடர் வருவதால் சில மறுமொழிகள் தனி மனித சாடலாய் போய் விடுமோ என்ற பயத்துடனே பல முறை பதில் எழுதாமல் விட்டதுண்டு...
தொடர வாழ்த்துக்கள்...
//உங்கள் சொந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாய் இந்த தொடர் வருவதால் //
Deleteசொந்த அனுபவமாக இருந்தாலும் இங்கு கருத்து தெரிவித்து இருக்கும் பலருடைய மனநிலையை பார்க்கும் போது அது பெரும்பாலானோரின் கருத்து தான் என்பதில் எனக்கு ஐயமில்லை(Please don't take offensive).
//சில மறுமொழிகள் தனி மனித சாடலாய் போய் விடுமோ என்ற பயத்துடனே பல முறை பதில் எழுதாமல் விட்டதுண்டு...//
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ரெவெரி. அடுத்தவர் மனம் புண் படா வண்ணம் தனி மனித தாக்குதல் இன்றி உங்கள் கருத்து எதுவாகினும் தாரளமாக நீங்கள் எழுதலாம். It's a free world.
உண்மைதான்! சொந்தங்களையும் நட்பையும் பிரிந்து சுகமான வாழ்க்கைக்காக கஷ்டபடும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிலை மிகவும் பரிதாப்த்துக்குரியது! நன்றி!
ReplyDelete//சுகமான வாழ்க்கைக்காக கஷ்டபடும் //
DeleteI like it :)
நல்ல அலசல்.
ReplyDeleteஇனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
ReplyDeleteThank you and same to you. On vacation for the remaining days?
Deleteநல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteஆனாலும் வெளி நாட்டு வாழ்க்கையை அனைவரும் விரும்பத்தான் செய்கிறார்கள்.
ReplyDeleteஉண்மை தான் மேகா.
Deleteமேலை நாட்டவர்களும் புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள்.அவர்களுக்கு விரும்பிய போது தமது தாயகம் திரும்பிக் கொள்ளும் சூழல்களில் அந்த அந்த நாடுகள் இருக்கின்றன.இந்திய சூழலோ கன்னித்தீவு சிந்துபாத் கதை மாதிரிதான்.வெளிநாட்டு வாழ்க்கை ஒன்வே மாதிரி.திரும்ப நினைத்தாலும் போக முடியாது.
ReplyDeleteஒரு தேசம் வளர்வதற்கும்,மாறுவதற்குமான காலமாக சுமார் 25,50 வ்ருடங்கள் என கொள்ளலாம்.கணினி,தொழில்நுட்பம்,முந்தைய பொருளாதாரத்திலிருந்து சிறு மாற்றம் தவிர இந்திய வளர்ச்சி ஆமை வேகம்தான்.வாய்ப்புக்களுக்கு மறுபடியும் 20.30 வயதிலிருந்து துவங்கி ஓட வேண்டும்.காலம் இடம் கொடுக்காது.
இருக்குற இந்திய வேலை வாய்ப்பு பிரச்சினைகளையெல்லாம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குறைக்கிறார்கள் என்று சந்தோசப்படுங்க.
ஆமா!வெளிநாட்டுல இருக்குறவங்கதான் ஒரு நல்ல,கெட்ட காரியத்துக்கு வர முடிவதில்லை.உள்ளூருக்குள்ளேயே இருந்து கொண்டு தமிழ் உறவு முறுக்கல்கள்,ஈகோக்களை எந்த லிஸ்டில் சேர்த்துவீங்க?
//இருக்குற இந்திய வேலை வாய்ப்பு பிரச்சினைகளையெல்லாம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் குறைக்கிறார்கள் என்று சந்தோசப்படுங்க.//
Deleteநிச்சயமாக. நினைத்து பாருங்கள். வெளி நாடுகளில் இருந்து அனைவரும் ஒரே நாளில் இந்தியா திரும்பி வந்தால் என்ன ஆகுமென்று?
//உள்ளூருக்குள்ளேயே இருந்து கொண்டு தமிழ் உறவு முறுக்கல்கள்,ஈகோக்களை எந்த லிஸ்டில் சேர்த்துவீங்க?//
அதெல்லாம் அப்படி தான் முறுகிக்குவோம். அப்புறம் சேர்ந்துக்குவோம்.
நன்றி நடராஜன்.
நம்மூர் கோவை நேரம்!முன்பெல்லாம் ஜப்பானை பாரு!சிங்கப்பூரை பாருன்னு மைக் பேச்சை கேட்கும் போது ஆ!ன்னு பொளந்த வாயில் மெரினா காத்து போறதே தெரியாது.இப்ப ஒப்பிட்டால் கட்டமைப்பிலும்,சட்ட முறைகளிலும் சிங்கப்பூருக்கும்,அரேபிய நாடுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ReplyDeleteஒண்ணு செய்யலாம்!எல்லா இந்தியர்களுக்கும் வெளிநாட்டுக்கு அடிமை விசான்னு ஒண்ணு ஏற்படுத்தி விரும்பினா வெளிநாட்டுல பழகுங்க!பிடிக்கலைன்னா இந்திய நாட்டுல பழகுங்கன்னு ஒரு வாய்ப்பு கொடுத்துப்பாருங்க:)
வெளிநாட்டு வாழ்வின் இந்த ஒரு விஷயம் எல்லாருக்குமே பாரப்ட்சமின்றிப் பொருந்திப் போகும். பெற்றோருக்கு வயதாகும் காலத்தில், பிள்ளைகள் டீனேஜில் நிற்பார்கள். இருதலைக்கொள்ளியாய் நாம்.
ReplyDelete//இருதலைக்கொள்ளியாய் நாம்.//
Deleteஎன்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி.
நல்ல பதிவு
ReplyDeleteநன்றி மொய்தீன்.
Delete