Friday, February 22, 2013

மகளிர் சுய உதவி குழு: என்ன தான் நடக்குது ?

நான் உறுப்பினராக இருக்கும் ஒரு குழுவில், பிசினஸ் உலகின் வெற்றியாளர்களை அழைத்து, அவர்களின் வெற்றி பாதையை/ அனுபவத்தை பகிர சொல்வார்கள். சமீபத்தில் சென்னையை தலைமையிடமாக் கொண்ட ஈக்குவிட்டாஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் திரு. வாசுதேவன் இதில் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேச்சில் மகளிர் சுய உதவி குழுக்கள் எப்படி செயல்படுகின்றன, மைக்ரோ பினான்ஸ் என்ற துறைபற்றி விரிவான தகவல் , அவர் சார்ந்த ஈக்குவிட்டாஸ் நிறுவனத்தின் வெற்றி பாதை அனைத்தும் அறிய முடிந்தது.



 சில தகவல்கள் உங்களுக்கும் பயன் தரும் என்பதால் பகிர்கிறேன். பெரிய பதிவாக உள்ளதால் 2 பகுதிகளாக வெளிவரும்.

இனி : திரு.வாசுதேவன் அவர்கள் பேசியதில் இருந்து:
***************
பொதுவாய் வெற்றி கதையை இளைஞர்களிடம் தான் பகிர்வது வழக்கம். இங்கு உள்ள பலரும் என்னை விட அனுபவத்திலும் வயதிலும் பெரியவர்கள் ! இங்கு பேச சற்று பயமாய் தான் இருக்கிறது.

நான் அடிப்படையில் சட்டமும் வக்கீல் படிப்பும் படித்தவன். சோழமண்டலம் என்கிற நிறுவனத்தில் 15 ஆண்டுக்கும் மேல் வேலை பார்த்து வந்தேன். நான் அங்கு President ஆக இருந்தபோது அந்த நிறுவனம் இன்னொரு பெரிய வெளிநாட்டு நிறுவனத்துடன் ஜாயிண்ட் வென்ச்சர் அக்ரிமெண்ட் போட்டது. புதிதாக வந்த ஜாயிண்ட் வென்ச்சர் பார்ட்னர் என்னையும் சேர்த்து பெரிய பொறுப்பில் இருக்கும் சிலரை மாற்றி விட்டு வேறு ஆட்களை நியமிக்க வேண்டும் என்றது. ஜாயிண்ட் வென்ச்சர் வரும்போது பொதுவாக பல இடங்களில் இப்படி நடப்பது வழக்கம். ஆக எனக்கு வேலை போய் விட்டது !  அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை.

பம்பாயில் ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. குடும்பத்துடன் ஷிப்ட் ஆனோம். 2 வருடங்கள் தான் அங்கிருந்தேன். அந்த சூழல் என்  பெண்ணுக்கு ஒத்து கொள்ள வில்லை. உடலளவில் மிக கஷ்டப்பட்டாள் . மருத்துவர்கள் இந்த ஊர் pollution அவளுக்கு ஒத்து கொள்ள வில்லை; சென்னை சென்று விடுங்கள் என்று கூறி விட்டனர்.

சென்னையில் எனது அனுபவத்துக்கு ஏற்ற வேலை கிடைப்பதில் சிரமம் இருந்தது. சோழமண்டலத்தில் எனக்கு கீழ் வேலை பார்த்தோர் - பெரிய நிலையில் பல வங்கிகளில் இருக்க, எனக்கு அவர்களுக்கு கீழ் வேலை செய்ய கூடிய வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அப்படி பணிபுரிய எனக்கு உடன்பாடே இல்லை.

ஈக்குவிட்டாஸ் நிறுவன தலைவர் திரு. வாசுதேவன் 
                                  
அப்போது பெங்களூரில் ஒரு NGO நிறுவனத்தை சார்ந்தவர் " உங்களுக்கு வங்கி பின்னணி இருக்கிறதே; நீங்கள் ஏன் மைக்ரோ பைனான்ஸ் பிசினஸ் ஆரம்பிக்க கூடாது? " என்று கேட்டார். அவரிடம் "நான் சம்பளம் வாங்கும் ஒரு வேலை ஆளாக தான் இருக்கிறேன். தனியே தொழில் துவங்க, விருப்பமும், முனைப்பும் என்னிடம் இல்லை " என்றேன். ஆனால் அவர்கள் இந்த தொழிலுக்கு தேவையான அனைத்து பயிற்சியும் தருவதாக கூறினார்கள்

மைக்ரோ பினான்ஸ் துறை பற்றி சற்று சொல்ல வேண்டும்.

முதன் முதலில் பங்களாதேஷில் உள்ள முகம்மது யூசுப் என்பவர் தான் இதனை அறிமுகம் செய்தார். ஒரு முறை பங்களாதேஷில் பெரும் புயல் அடித்து ஏழைகள் கஷ்டப்படும் போது யூசுப் அங்கிருந்த ஏழைகளுக்கு பணம் தந்தார். அவர் அதனை அவர்களுக்கு இலவச உதவி என நினைத்து தான் தந்தார். ஆனால் சில காலத்துக்கு பின் அவர் தந்த பணம் முழுதும் அந்த கிராம மக்கள் திரும்ப தந்து விட்டனர். பின் இதனை அவர் சிறிய அளவில் துவங்கி - மிக பெரிய நிலைக்கு கொண்டு சென்றார்

2006-ஆம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மைக்ரோ பினான்ஸ் என்ற துறையில் பணியாற்றி, ஒரு புது பிசினஸ் மாடலை அறிமுகம் செய்தவர் என்ற வகையிலும், இத்துறையில் பணியாற்றி நோபல் பரிசு பெற்றுள்ளார் என்றும் மைக்ரோ பினான்ஸ் துறை மிக பிரபலம் ஆக துவங்கியது

இந்த துறை எல்லா தட்டு மக்களையும் எளிதில் ஈர்க்கிறது. காரணம் ரொம்ப சிம்பிள் : ஏழை மக்களுக்கு உதவுகிறோம் என்ற கோஷம் தான் இதில் அட்ராக்ஷன். வெளிநாட்டில் இருக்கும் ஒரு கோடீஸ்வரர் இங்கு வந்து ஏழைகளுக்கு உதவுகிறார் என்றாலும் அது கவர் ஸ்டோரியில் வரும். மக்களிடம் அதிக வட்டி வாங்கி சுரண்டுகிறார்கள் என்றாலும் அது பத்திரிக்கையில் வரும்.

வாசிப்பவர்களும் இது பற்றி நல்ல விதமாய் எழுதினால் நெகிழ்கிறார்கள். தவறாய் எழுதினால் "ஏழைகளை சுரண்டி பிழைக்கிறாங்க பாரு " என கோபப்படுகிறார்கள். நல்ல எமோஷனல் அப்பீல் உள்ள துறை இது

மைக்ரோ பினான்ஸ் தற்போது 2 விதமாக உள்ளது

முதலில் : மகளிர் சுய உதவி குழுக்கள். இவை அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஏரியாவில் இருக்கும் பெண்கள் அனைவரும் சேர்ந்து ஒரு குழுவை அமைக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் மாதம் 10 அல்லது 20 ரூபாய் போடுகிறார்கள். இந்த பணம் ஓரளவு சேர்ந்ததும் குழுவில் உள்ள ஒருவருக்கு ஏதேனும் சிறு தொழில் தொடங்க 5,000 அல்லது 10,000 போல கடன் தருகிறார்கள். இதனை வட்டி பணத்துடன் அவர்கள் திரும்ப தர வேண்டும்.

வீட்டிலேயே சிறு பெட்டி கடை வைப்பது, தையல் தொடங்குவது, சில கலை பொருட்கள் தயாரித்து விற்பது போன்ற தொழில் செய்ய மட்டுமே கடன் தரப்படும். வீட்டில் நடக்கும் கல்யாணம், ஆஸ்பத்திரி செலவுகளுக்கு தரக்கூடாது



மகளிர் சுய உதவி குழுக்கள் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. பெண்கள் சிறு தொழில் தொடங்கவும், பலருடன் பழகி மிக தைரியம் பெறவும், ஏரியாவில் உள்ள பொது பிரச்சனைகளில் சேர்ந்து குரல் கொடுக்கவும் இது உதவுகிறது

கடந்த முனிசிபல் தேர்தலில் தேர்வான பெண்களில் 37 % மகளிர் சுய உதவி குழுவில் இருப்போரே .

இந்த முறையில் முக்கியமாய் 3 பிரச்சனை உள்ளது. சுய உதவி குழு நடத்துவது அரசாங்கம். அது நடத்தும் எந்த விஷயத்திலும் இருக்கும் அனைத்து பிரச்சனைகள், தாமதங்கள் இங்கும் இருக்கும்.

அடுத்து பொருட்கள் தயார் செய்ய பணமும், டிரைனிங்கும் தருகிறார்களே ஒழிய,  தயார் செய்யப்பட்ட பொருளை விற்க பெண்கள் மிக கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தயார் செய்யும் பல பொருட்கள் விற்க முடியாமலே இருக்கும் நிலைதான் உள்ளது.   

வேறு விதமாய் சொல்லணும் என்றால் - எவ்வளவு கடன் தரப்பட்டது என்பதை தான் Target & வெற்றி சதவீதம் -ஆக வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பொருட்கள் எவ்வளவு விற்றது என்று கணக்கு பார்ப்பதே இல்லை.

இன்னொரு பிரச்சனை : பொறுப்பில் இருக்கும் பெண்கள் தலைவிகள் ஆன பின், அவர்களில் சிலரும் மாறி போய் விடுகிறார்கள். லஞ்சம் தந்தால் தான் பணம் ரிலீஸ் செய்வது போன்ற விஷயங்கள் வர துவங்கி விடுகின்றன.

********
அவர் பேசியதன் இறுதி பகுதி  நாளை வெளிவரும் !
********
நாளைய பதிவில் :

மைக்ரோ பைனான்ஸ் துறையில் என்ன நடக்கிறது?

ஒன்றும் தெரியாத ஏழைகளுக்கு மிக அதிக வட்டியில் கடன் தந்து, அவர்களை exploit   செய்கிறதா  மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள்?

ஈக்குவிட்டாஸ் நிறுவனம் வெற்றி பெற்றது எப்படி?

ஆந்திராவில் கடன் வாங்கியோர் தொடர் தற்கொலைகளால் நிலை குலைந்த மைக்ரோ பைனான்ஸ் துறை

18 comments:

  1. மூன்று பிரச்சனைகளும் மிகப்பெரிய பிரச்சனைகள்... முக்கியமாக இரண்டாவது...

    பலரும் அறிய G +

    ReplyDelete
    Replies
    1. கூகிள் பிளஸ் சில் பகிர்ந்தமைக்கு நன்றி தனபாலன்

      Delete
  2. Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்

      Delete
  3. Replies
    1. வாங்க தமிழ் செல்வி நன்றி

      Delete
  4. மிகவும் சிறப்பான தகவல் பதிவு. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம்வி மகிழ்ச்சி

      Delete
  5. // இன்னொரு பிரச்சனை : பொறுப்பில் இருக்கும் பெண்கள் தலைவிகள் ஆன பின், அவர்களில் சிலரும் மாறி போய் விடுகிறார்கள். லஞ்சம் தந்தால் தான் பணம் ரிலீஸ் செய்வது போன்ற விஷயங்கள் வர துவங்கி விடுகின்றன. //
    என் தாயார் அனுபவப்பட்டிருக்கிறார் . நல்ல பகிர்வு ...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அனுபவமும் சொன்னமைக்கு நன்றி ஜீவன் சுப்பு

      Delete
  6. எங்கள் ஊரில் நிறைய பேர் மகளிர் சுயஉதவி குழுவில் இருக்கிறார்கள்.. தெரிந்த உறவினர் இதேபோன்றொரு உதவிக்குழுவின் உதவியோடு புதிய வீடுகூட கட்டி இருக்கிறார். அதற்க்கு மாதம் மாதம் ஒரு சிறு தொகை செலுத்துகிறார்கள்..
    **********
    ரொம்ப கவலைக்குரிய விஷயம் இது: தொழில் தொடங்கி அதில் லாபம் இல்லாமல் போவது! அதற்கும் ஏதேனும் அரசு ஒரு ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நன்றி சமீரா

      Delete
  7. நிறைய விஷயம் தெரிஞ்சுக்க முடிஞ்சது! ஆனா மகளீர் சுய உதவிக் குழுக்கள் இப்ப பணம் கடன் வாங்கி சொந்த செலவுக்குத்தான் பயன்படுத்தறாங்க! எங்க ஊருல இப்படித்தான் நடக்குது! தொழில் எதுவும் செய்வது இல்லை!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சுரேஷ் ? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  8. அருமை.
    மகளிர் குழு ப்ற்றிய அருமையான பதிவு.
    என்னுடைய கருத்து குழு உறுப்பினர்களை அரசியல் கூட்டம் காண்பிக்க பயன்படுத்துகிறார்கள்.
    நன்றி.

    ReplyDelete
  9. ஈசி எடிட்டோரியல் : நன்றி

    ReplyDelete
  10. //அடுத்து பொருட்கள் தயார் செய்ய பணமும், டிரைனிங்கும் தருகிறார்களே ஒழிய, தயார் செய்யப்பட்ட பொருளை விற்க பெண்கள் மிக கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் தயார் செய்யும் பல பொருட்கள் விற்க முடியாமலே இருக்கும் நிலைதான் உள்ளது.//

    உண்மைதான் அதனாலதான் எல்லோரும் சுய உதவி குழுவில் கடன் என்ற பெயரில் பணத்தை மட்டும் ரோட்டேட் செய்றாங்க நல்ல பகிர்வு (நான் பதிவுலகத்திற்கு புதிது )

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...