Saturday, February 9, 2013

சனீஸ்வரரை கண்டு பயப்படுவது ஏன்? திருகொள்ளி காடு.- ஒரு பயணம்

னீஸ்வரர் கோவில் என்றால் பலரும் நினைப்பது திருநள்ளாரு மட்டும் தான். ஆனால் அவருக்கு திருத்துறை பூண்டி அருகே இன்னொரு அற்புதமான கோவிலும் உண்டு என்பது பலருக்கும் தெரியாது.


மன்னார்குடி டு திருத்துறை பூண்டிக்கு நடுவே உள்ள சிறிய ஊர் கோட்டூர். இதிலிருந்து ஏழு கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கும் மிக சிறிய கிராமம் . திருகொள்ளி காடு. இங்கிருக்கும் பொங்கு சனீஸ்வரர் தான் நாம் பார்க்கவுள்ள கடவுள்.

மன்னையிலிருந்து கோட்டூர் செல்லும் பஸ்ஸில் உடன் வந்த பெரியவர், எங்கு செல்கிறேன் என கேட்டு விட்டு , திருகொள்ளி காடு பற்றியும், சனீஸ்வரர் பற்றியும் பல விஷயங்கள்/ கதைகள் பகிர்ந்து கொண்டார் அவற்றில் சிலவற்றை முதலில் பார்ப்போம் :
**********
லகில் மொத்தம் ஒன்பது நவக்கிரகங்கள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுளின் தளபதிகள். சனீஸ்வர பகவான் சிவ பெருமானின் தளபதி. சிவன் தான் சனீஸ்வரருக்கு முதலாளி மாதிரி. அதனால் தான் இந்த கோவில் உட்பட பல சனீஸ்வரர் கோவில்களில் சிவ பெருமான் முக்கிய கடவுளாகவும், சனீஸ்வரர் ஒரு ஓரமாகவும் இருப்பர்.

திருநள்ளாரை பொறுத்த வரை நளன் - தமயந்தி கதை கேள்விபட்டிருக்கிரீர்கள் அல்லவா? அந்த நள ராஜா மனைவி, மக்களை பிரிந்து கஷ்டப்பட்ட போது திருநள்ளாரில் குளத்தில் குளித்து சனி பகவானை மனமுருகி வேண்டினார் " நீ நல்லவன் தான். நிறையவே துயரம் அனுபவித்து விட்டாய்" என சனீஸ்வரர் மனமிரங்கி, பின் நளன் மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்தார் என்பது வரலாறு.

சனீஸ்வரர் பாரபட்சம் பார்க்க மாட்டார்.தேர்ந்த நீதிபதி போல நல்லவை, கேட்டவை பார்த்து தீர்ப்பு தருவார். யார் தவறு செய்தாலும் தண்டித்து விடுவார். அவரிடம் மாட்டி கொண்டு விழித்தவர்களில் அரசர்களும், ஏன் சில கடவுளும் கூட உண்டு. சிவன், பிள்ளையார், ஆஞ்சநேயர் பக்தர்களை அவர் அதிகம் தீங்கு செய்ய மாட்டார் என்பது ஒரு நம்பிக்கை .

கடவுளை வணங்காத நாத்தீகர்கள் கூட நவக்கிரகங்களுக்கும், குறிப்பாய் சனீஸ்வரனுக்கும் நம்புவர்/ பயப்படுவர். ஒருவனது ஜாதகத்தில் சனி உச்சத்தில் இருந்தால் ஆயுள் அதிகம். முன்னாள் முதல்வர் கலைஞருக்கு அப்படி சனி உச்சத்தில் இருப்பதால் தான் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்

ராவணன் ஒரு முறை நவக்கிரகங்களுடன் விளையாடியதாய் ஒரு கதை உண்டு. ஒரு மனிதன் பிறக்கும் போது நவக்கிரகங்களும் எங்கு உள்ளதோ அதன் அடிப்படையில் தான் அவன் வாழ்க்கை இருக்கும் என்பது நம்பிக்கை. ராவணன் மகன் இந்திரஜித் பிறக்கும் போது தனது தவ வலிமையால், அனைத்து நவகிரகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஒவ்வொன்றையும் சரியான கட்டத்தில் நிறுத்தி விட்டான் ராவணன். அவன் நிறுத்தியபடி இந்திரஜித் பிறந்திருந்தால் அவன் ஜாதகம் அற்புதமாக அமைந்து, உலகின் மிகப்புகழ் பெற்ற வீரனாக, யாராலும் தோற்கடிக்கப்பட முடியாதவன் ஆகியிருப்பான். ஆனால் நம் சனீஸ்வரருக்கு தான் இத்தகைய வேலைகள் பிடிக்காதே ! சரியாக இந்திரஜித் பிறக்கும் போது சனீஸ்வரர் மட்டும் தன் ஒரு காலை தூக்கி அடுத்த கட்டத்தில் வைத்து விட்டார் இதனால் இஞ்சிரஜித் ஜாதகம் மாறி போய் விட்டது

திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரர் சற்று சோதித்து, பின் பலன் தருவார். திருகொள்ளி காட்டில் இருக்கும் இவரோ, சாந்த சொரூபி. சனீஸ்வரனுக்குள் இப்படி ஒரு சாந்த முகமும் இருக்கிறது ! இவர் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார். பொங்கு சனீஸ்வரர் என்பது இவர் பெயர் இவரை வணங்கினால் நல்ல குணங்களும், நல்ல விஷயங்களும் ஒருவர் வாழ்வில் பொங்கி வரும் ! அதனால் தான் அப்பெயர் !
********
நிற்க கோட்டூர் வந்து விட்டோம். இங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம். பேருந்து வசதி அதிகம் இல்லை. ஆட்டோ மூலம் தான் அநேகமாய் செல்ல வேண்டும். செல்லும்போது இருபுறம் பசுமையான வயல்வெளிகள், வாய்க்காலில் உள்ள தண்ணீர், இறங்கி குளிக்க நம்மை அழைக்குது (மாற்றி கொள்ள உடை இல்லை; இல்லா விட்டால் ஒரு குளியல் போட்டிருக்கலாம்)

செல்லும் வழியில் இருள்நீக்கி என்றொரு கிராமம். அதென்ன இருள்நீக்கி என்றால் " அரிச்சந்திரன் கஷ்டப்பட்ட காலத்தில், இங்கு வந்த பின் தான் அவன் வாழ்க்கையில் இருள் நீங்கியது என்றும் அதனால் இவ்வூர் இருள்நீக்கி எனப்படுகிறது என்றும் கூறினார்கள்.

காஞ்சி - மடாதிபதி ஜெயந்திரர் பிறந்த ஊர் இருள்நீக்கி. அவரது வீடு இப்போது வேத பாட சாலையாக உள்ளது.

ஜெயந்திரர் பிறந்து வளர்ந்த வீடு 

அதற்கு நேர் எதிரே ஒரு இலவச மருத்துவ மனை காஞ்சி மடமே நடத்துகிறது. மன்னை யிலிருந்து ஒரு மருத்துவர் தினம் வந்து பார்த்து ஊசி போட்டு மருந்துகள் தருகிறாராம். மருந்துக்கு மட்டும் பணம் வாங்குவார்கள் என்றும் அதுவும் இருபது ரூபாய்க்கு மேல் போகாது என்றும் கூறினர்.


கோட்டூரிலிருந்து திருகொள்ளிகாடு அடைய  20 நிமிடம் ஆகிவிடுகிறது. வார நாட்களில் 12 மணிக்கு பூட்டி 4 மணிக்கு மேல் தான் திறப்பார்கள் . சனிக்கிழமைகளில் மதியம் பூட்டுவது இல்லை. கோவிலில் தினம் 50 பேருக்கு அன்னதானம் செய்கிறார்கள். பெரும்பாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ( 1 மணிக்கு வந்து விட்டு நாலு மணி வரை கோவில் திறக்க காத்திருப்போர்) மற்றும் கோவில் வெளியில் அமர்ந்திருக்கும் முதியோர் தான் சாப்பிடுகிறார்கள். அந்த சிறு ஊரில் சாப்பிட வேறு நல்ல உணவகம் ஏதும் இல்லை

முக்கிய கடவுளாக சிவன் இருக்கிறார் அவரை வணங்கி விட்டு பின் எள் விளக்கு போடுவது அனைவரின் வழக்கம். சிலர் 1 அல்லது 3 என வசதிக்கேற்ப செய்வர். பலரும் 9 விளக்கு ஏற்றுகிறார்கள்.


கோவிலின் சுவற்றில் சனீஸ்வரர் பெருமை மற்றும் கோவிலின் வரலாறு இருக்கிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜேஸ்வரர் கட்டிய கோவில் இது. கோபம் கொள்ளாமல் அருள் பாலிக்கும் கடவுள் என்றும், திருநள்ளாரை விட விசேஷமான கோவில் என்றும் எழுதப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் நல்லது மட்டுமே இருந்தால் சுவையே இருக்காது; கெட்டவையும் இருந்தால் தான் வாழ்க்கை சரியே இருக்கும் என்பதால் தான் சனி பகவான் துன்பங்கள் தருகிறார் என்றும், மனமுருகி வேண்டினால் அவர் கோபம் பொதுவாய் குறையும் என்றும் எழுதப்பட்டுள்ளது.

Photo Courtesy: Temple website: http://www.pongusaneeswarar.org/

சனீஸ்வரருக்கு அன்னதானம் பிடித்த விஷயம் என்பதால் இங்கும் திருநள்ளாரிலும் ஏழைகள் பலர் கோவில் வெளியே இருப்பர். அவர்களுக்கு பழம் அல்லது பிஸ்கட் போல முடிந்த உதவி பலரும் செய்கிறார்கள். 

சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வணங்கி விட்டு கிளம்பினோம். சிலருக்கு ஏழரை சனி சற்று உக்கிரமாய் இருக்கும் போது மாதம் ஒரு முறை இங்கு அவர்கள் நட்சத்திரத்தின் போது அர்ச்சனை செய்வது விசேஷம் என்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் நேராக வர முடியாதவர்கள் 300 ரூபாய் கோவில் அலுவலகத்தில் கட்டி விட்டால் குறிப்பிட்ட நட்சத்திரம் அன்று அர்ச்சனை செய்து திருநீறு உள்ளிட்ட பிரசாதம் நமக்கு தபாலில் தவறாமல் ஒரு வருடம் அனுப்புகிறார்கள். எங்கள் பெண்ணுக்கு ஏழரை சனி துவங்கும் நேரம் முதல் முறை நேரே சென்று வணங்கி விட்டுபின் ஒரு வருடம் இப்படி அர்ச்சனை செய்து பிரசாதம் வந்தது  !

தஞ்சை அல்லது மன்னை பக்கம் சென்றால் ஒரு முறை திருகொள்ளி காடு.சென்று வாருங்கள். !
***
அண்மை பதிவு  


15 comments:

  1. ஒரு தேர்ந்த ஆன்மிகப் பயணக் கட்டுரை! நீங்கள் புகைப்படங்களை எடுப்பது மொபைலா அல்லது கேமராவா?

    ReplyDelete
    Replies
    1. இத்தகைய படங்கள் மொபைலில் தான் எடுக்கிறேன். தொலை தூர/ நெடு நாள் பயணங்களில் மட்டுமே காமிரா நன்றி நண்பரே

      Delete
  2. அண்ணா அற்புதம். நேரில் சென்றது போல உணர்வு. ந்ன்றீ

    ReplyDelete
    Replies
    1. அன்பு: உங்கள் ஊருக்கு பக்கம் இருக்கும் கோவில் ஆயிற்றே இது ; நீ சென்றிருப்பாய் என்றே நினைக்கிறேன்

      Delete
  3. நல்ல கட்டுரை, அவசியம் தரிசிக்க வேண்டிய கோயில், இந்தமுறை விடுமுறையில் முடிந்தால் செல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி கும்மாச்சி. அவசியம் செல்லுங்கள்

      Delete
  4. திருகொள்ளிக் காடு ஆலய தர்சனம் கிடைத்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் மகிழ்ச்சியும் மாதேவி

      Delete
  5. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ்

      Delete
  6. நல்ல தகவல் பதிவு, நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஞானம் சேகர் நன்றி

      Delete
  7. நல்ல கட்டுரை. பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நன்றி

      Delete
  8. சிறப்பான கட்டுரை..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...