Tuesday, February 5, 2013

ஜோசியக்காரர்கள் வாழ்க்கை அறியாத தகவல்கள்

ல நேரங்களில் சாதாரண மனிதர்கள் பேட்டி திட்டமிடாமல் இயல்பாய் நடந்து விடுகிறது. தஞ்சை சென்றபோது அப்பா ஒரு வேலை தந்து அனுப்பியிருந்தார். அதற்காக பைக்கில் சென்றவன் தஞ்சை பெரிய கோவில் வெளியே வரிசையாக கிளி ஜோசியக்காரர்கள் அமர்ந்திருப்பதை பார்த்தேன். எங்கள் வீட்டு கிளிகள் நினைவுக்கு வர, அந்த நினைவோடே கடந்து செல்லும்போது ஒரு கிளியை பார்த்ததும் நின்று விட்டேன்.

வழக்கத்தை விட சற்றே பெரிய ஆண் கிளி அது. ஜோசியக்காரர்களின் கூண்டுக்கு உள்தான் பெரும்பாலும் கிளிகள் இருக்கும். ஆனால் இந்த கிளி ஜம்மென்று கூண்டின் வெளியே மிக அழகாய் அமர்ந்திருந்தது. வண்டியை நிறுத்தி விட்டு கிளி ஜோசியக்காரர்களிடம் பேச ஆரம்பித்தேன். எங்கள் பேச்சு பெரும்பகுதி நாங்கள் கிளி வளர்ப்பதை பற்றியும் அதற்கு என்ன உணவு தரணும், எப்படி பாதுகாக்கணும் என்றே சுழன்றது. அவை அனைத்தையும் தவிர்த்து விட்டு அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்து பேசிய விஷயங்கள் மட்டும் பகிர்கிறேன்.


"எப்படி இந்த கிளி மேலே பறக்காமல் உட்கார்ந்திருக்கு?"

" இந்த கிளி எங்களோட 22 வருஷமா இருக்குதுங்க. எங்கப்பா இதே கிளி வச்சு ஜோசியம் பார்த்தார். இப்போ நான் வச்சிருக்கேன். இது பறந்து போகாது. நீங்க பிடிக்கிறீங்களா?" என்று என் கையில் தர அது அழகாய் நம் கையில் ஏறி கையில் உள்ள மோதிரத்தை கடித்து பார்த்தது.

" இந்த கிளி மேலே பல பேர் ஆசைப்படுவாங்க சார். கேரளாவில் இருந்து வந்தவங்க 10,000 ரூபாய் தர்றேன்னு சொல்லி இதை கேட்டாங்க. நம்ம குடும்ப மனுஷன் மாதிரி சார் இது. இதை விக்க முடியுமா சொல்லுங்க"

நான் பேசுவதை பார்த்து அவருக்கு இரண்டு பக்கமும் இருக்கும் இன்னும் சில ஜோசியக்காரர்கள் வந்து பேசினர். அனைவரும் சொந்தக்காரர்கள் ! பெரிய கோவில் வெளியே உள்ள பிளாட் பாரத்தில் அடுத்தடுத்து அமர்ந்து ஜோசியம் பார்க்கிறார்கள் இவர்கள்.

ஒருவருக்கு ஜோசியம் பார்க்க ஆள் சென்றால் அடுத்தவர் வருந்துவதோ, அவரை அழைப்பதோ இல்லை. " அவர் எனக்கு மாமா. இது சித்தப்பா பையன் " என்று ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

அவர்களில் மிக மூத்தவரான வேலு என்பவர் பேச ஆரம்பித்தார். " நாங்க வள்ளுவர் ஜாதி. எங்க ஜாதி மக்கள் தான் இந்த தொழில் செய்வாங்க. நான் நாப்பது வருஷமா இதே தொழில் பண்றேன். நாங்க கிளி ஜோசியம் மட்டுமில்லாம, கை ரேகை, கோடங்கி, ஜாதகம் எல்லாம் பார்ப்போம்"

" அதென்ன கோடங்கி ? "

" குறி சொல்றது சார். இரவு நேரத்திலே வந்து குறி சொல்லுவோம். மறுபடி காலையில் வந்து குறி சொல்லுவோம். காலையில் வரும்போது தான் காசு கேட்போம். சில பேர் தருவாங்க. சிலர் போயிட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க"

" நீங்க சொல்றது பலிக்குமா? மக்கள் நம்புறாங்களா?"

" நாங்க சொல்றதுக்கு முக்கியம் சைக்கலாஜி ( !!! ) தான் சார். முகத்தை பார்த்தே ஓரளவு புரிஞ்சிக்குவோம். கை ரேகை பாக்க தெரியும். நம்புறாங்களான்னு கேக்குறீங்க. எங்க கிட்டே வந்தவங்க மறுபடி திரும்ப வர்றாங்களே. நம்புறதாலே தான் வர்றாங்க. சில பேர் " நீ சொன்ன படி நடந்துச்சு" என சொல்லி வேட்டி, துணி மணி வாங்கி தந்துட்டு போறாங்க. ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது நம்மை தேடி வர்றாங்க. சரியாகிடும் கவலைப்படாதே; இந்த கோவிலுக்கு போய் சாமி கும்பிடுன்னு சொல்றோம். பிரச்சனை சரியான உடனே நம்மை நன்றியோட நினைச்சிக்குறாங்க"

இதற்குள் ஒருவர் ஜோசியம் பார்க்க வருகிறார். தரையில்  அமர்ந்து ஜோசியம் கேட்க, கிளி வெளியே வந்தது. ஒவ்வொரு சீட்டாய் எடுத்து எடுத்து போட்டது. கடைசி சீட்டு வரை எடுத்து போட்டு விட்டு ஒன்றுமே தராமல் உள்ளே போய் விட்டது !! அவர் தந்த பத்து ரூபாயை திரும்ப தந்து " பக்கத்துக்கு ஆளிடம் பார்த்துக்குங்க " என்று அனுப்புகிறார்.

வெவ்வேறு கிளிகள் இவருக்கு சீட்டு எடுத்து தரலை !

நமது ஜோசியர் வேலுவிடம் வந்து அமர்கிறார் அவர்.  பெயரை கேட்டு விட்டு " ரவி என்கிற பேருக்கு சீட்டு எடுத்து குடு. அவர் கிரகம் எப்படி? ஜாதகம் எப்படி? அவர் நினைச்சது நடக்குமா? கஷ்டமெல்லாம் நீங்குமா பாத்து சொல்லு" என்று சொல்லி கொண்டே இருக்க, ஒவ்வொரு சீட்டாய் எடுத்து போட்டது. இந்த கிளியும் ஒரு சீட்டும் எடுத்து தராமல் உள்ளே போய் விட்டது !!

அந்த மனிதரின் முகம் இருண்டு விட்டது. வேலு அவரிடம் " உனக்கு கொஞ்சம் நேரம் சரியில்லை. ஒன்னும் பயப்படாதே. பிள்ளையார் கோவிலில் போய் தினம் கும்பிடு ; சரியாகும்" என சொல்லி விட்டு அவர் பணத்தை திரும்ப தந்து அனுப்புகிறார்.

" அவருக்கு எதோ பிரச்சனை போல; கிளிகளுக்கு சத்திய வாக்கு வாங்கிருக்கோம்; அது தப்பா சொல்லாது. பாருங்க ரெண்டு கிளியும் சீட்டு எடுத்து தரலை " என்கிறார்

"புது கிளிங்களுக்கு எப்படி இதெல்லாம் பழக்குவீங்க?"

" புதுசா ஒரு கிளி வாங்குனா அடுத்த ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ தொழிலே பாக்க முடியாது. முழுக்க முழுக்க கிளி கூட தான் இருக்கணும். ஒரு பிறந்த குழந்தை எப்படி ஒண்ணு ரெண்டு மாசம் கழிச்சு அம்மா முகத்தை தெரிஞ்சுக்குது. அப்படி தான் இதுவும். முதல் ரெண்டு மாசம் அம்மா கூடவே இருக்க மாதிரி நாமும் கூடவே இருக்கணும். நம்ம கிட்டே நம்பிக்கை வந்ததும் அப்புறம் மெதுவா ஜோசியத்துக்கு பழக்குவோம். எல்லாம் கத்து குடுத்துட்டு சத்திய வாக்கு வாங்கிப்போம். அப்புறம் தான் தொழிலுக்கு கூட்டி வருவோம் "

உங்க பசங்க எல்லாம் இந்த தொழில் தான் பண்றாங்களா?

இல்லை. இப்போ பண்ற ஆட்களோட இந்த தொழில் முடிஞ்சு போயிடும். இனிமே இந்த தொழில் இருக்காது. யாரும் புதுசா கத்துக்க மாட்டாங்க. எங்க பசங்க எல்லாம் வேற வேற தொழிலுக்கு போயிட்டாங்க.

அதோ இருக்கார் பாருங்க (பெரிய கிளி வைத்திருந்தவரை காட்டி) அவரோட பொண்ணு ப்ளஸ் டூவில் ஆயிரத்து அம்பதுக்கு மேலே எடுத்தது. நாங்க எஸ். சி கம்மியூநிட்டி. இந்த மார்க்குக்கு நல்ல படிப்பு படிக்க வைக்கலாம். என்ன படிப்பு படிக்க வைக்கிறதுன்னு தெரியலை. நர்சிங் போய் கேட்டா இந்த வருஷம் முடிஞ்சிடுச்சு. இந்த மார்க்குக்கு நிச்சயம் கிடைச்சிருக்கும். ஏன் முதலில் வரலைன்னாங்க. அடுத்த வருஷம் நர்சிங் சேர்க்கணும்னு வச்சிருக்கோம். இப்போ எதோ கம்பியூட்டர் கோர்ஸ் போறேன்னு போகுது"

இவ்வளவு மதிப்பெண்ணுக்கு எளிதாக பீ. ஈ அண்ணா யூநிவர்சிட்டியில் கிடைக்குமே என்றால், அந்த பெண் படித்த குரூப் எது என்று அவர்களுக்கு சொல்ல தெரிய வில்லை. " நர்சிங் தான் படிப்பேன்னு சொல்லுது சார். நல்லா படிக்கிற பொண்ணு. வெளியூர் போகணும்னா நாங்க காலையில மூணு மணிக்கு எழுந்து கிளம்புவோம். அப்ப எங்களோட சேர்ந்து எழுந்துட்டு படிக்கும். படிக்கறதில் ரொம்ப ஆசை சார் அதுக்கு "

மீண்டும் கிளிகள் பற்றி பேச்சு திரும்புகிறது

" கிளிகள் பேசும்னு சொல்றாங்களே இதுங்க பேசுமா?"

"ஓ பேசுமே. இப்போ பாருங்க" என்று கூறி விட்டு, "மோகன்குமார் என்கிற பேருக்கு சீட்டு எடுத்து குடு" என்று சொல்ல, வெளியே வந்து கொஞ்சம் சீட்டை எடுத்து போட்டு விட்டு ஒரு சீட்டு எடுத்து தருகிறது.

மோகன்குமாருக்கு எடுத்து தந்த சீட்டு  !

கிளி எடுத்து தந்த சீட்டை விட்டு விட்டு, வேறொரு சீட்டை காட்டி " இதை அவருக்கு படிக்கலாமா?"

" ஊஹும் " என தலையை இடதும் வலதுமாய் ஆட்டுகிறது.

இன்னொரு சீட்டை எடுத்து " இதை படிக்கலாமா?" என காட்ட, மீண்டும் இடதும் வலதுமாய் இல்லையென தலையாட்டல்...

அது எடுத்த சீட்டை காட்டி " இது எனக்கு பொருந்துமா?" " ஊஹும்"

அது எடுத்து தந்த சீட்டை காட்டி " இதை மோகன் குமாருக்கு படிக்கலாமா?"

" ஆம் " என்று தலையாட்டுது. சரி உள்ளே போ என்றதும் சமர்த்தாய் போய் விட்டது !

நமக்கு வந்த சீட்டை பார்த்தால் வெங்கடாசலபதி மற்றும் பிள்ளையார் இருந்தது.

" நீங்க ரொம்ப ஸ்ட்ராங் சார். உங்களை அசைக்கவே முடியாது. உங்க மனைவி ஒரு மகராசி சார். " என்று சொல்லிவிட்டு மனைவி மற்றும் குழந்தை பற்றி இன்னும் கொஞ்சம் பேசுகிறார். சிரித்தவாறே நான் கேட்டு கொண்டிருக்க, நம்ப வில்லையோ என அந்த சீட்டை உள்ளே வைத்து விட்டு, நீங்கள் ஒரு சீட்டு எடுங்க என்றார். எடுத்தால் மீண்டும் வெங்கடாசலபதி படமே வந்தது !

" பாத்தீங்களா? " என பெருமிதமாய் பார்த்தார்.

அங்கிருந்த நான்கைந்து கிளி ஜோசிய காரர்களுக்கும் டீ வாங்கி வர சொன்னேன். அவர்கள் அருகில் சும்மா இருந்த ஒருவர் சென்று வாங்கி வந்தார். " அவர் என்ன செய்றார். இங்கே சும்மாவே இருக்காரே?" என்று கேட்டால் " அவர் பேய் ஒட்டுறவரு; கோவில்லையும் வீட்டுக்கே போயும் பேய் ஓட்டிட்டு வருவாரு" என்று கூறி அதிர வைத்தனர்.

எங்கள் வீட்டு கிளிகள் சாப்பாடு, அவை சேருவது (Mating) பற்றியும் சில சந்தேகங்கள் கேட்ட பிறகு அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

இனி தஞ்சை பெரிய கோவில் பக்கம் செல்லும்போதெல்லாம் அவர்களிடமும், அந்த கிளிகளிடமும் பேசிவிட்டே செல்வேன் என தோன்றுகிறது.
****
அதீதம் இதழில் வெளியானது 
****
அண்மை பதிவு :


24 comments:

  1. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

    பேட்டிக்கு பேட்டியும் கிடைச்சது, அஜு-நாட்டி வளர்ப்பில் சில உதவிகளும்....

    எப்படி இருக்காங்க ரெண்டு பேரும்? அவங்கள பத்தி எழுதி ரொம்ப நாள் ஆச்சு போல இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ஆம் வெங்கட் :)

      Will write shortly

      Delete
  2. தஞ்சை பெரிய கோவில் வாசலில் நானும் பல ஜோசியக்காரர்களை கவனித்துள்ளேன்... நல்ல பதிவு, கொல்லிமலையில் சென்று இதற்கென்று தனி வகுப்புகள் எடுத்து வருவார்களாம்...

    பல நேரங்களில் பல இடங்களில் கிளி ஜோசியக்காரர்களிடம் எல்லாருக்கும் வரும் அதே சந்தேகங்களைக் கேட்டுள்ளேன், வேண்டுமானால் இன்னொரு தடவ சீட்டு எடுக்கவான்னு கேப்பாங்க... அவங்க தொழில் அது அதனால மல்லு கட்டினது இல்ல....

    //நீங்க ரொம்ப ஸ்ட்ராங் சார். உங்களை அசைக்கவே முடியாது.// பாத்து சாரே.....ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அனுபவம் சொன்னமைக்கு நன்றி சீனு

      Delete
  3. கிளிக்கு உங்களைப்பற்றி உண்மை தெரிந்து போச்சே...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார் :))

      Delete
  4. சுவாரசியமான பதிவு. அவர்களுடைய குழந்தைகளை படிக்க வைப்பதாகச் சொல்லியிருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம்.

    // நம்ம குடும்ப மனுஷன் மாதிரி சார் இது. இதை விக்க முடியுமா சொல்லுங்க"//

    நெகிழ வைத்தது.

    உங்க கிளிகளைப்பார்த்து ரொம்ப நாளாச்சே? எப்படி இருக்கிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. கிளிகள் பற்றி கேட்டமைக்கு நன்றி ராம்வி. இன்றைய வானவில்லில் எழுதுறேன்

      Delete
  5. கிளி ஜோசியக்காரர்கள் பற்றி நான் அறியாத பல தகவல்கள். பதிவுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ சார்

      Delete
  6. ஆஹா இன்னிக்கு கிளியா??? உங்களோட பேட்டிகள் எல்லாமே படிக்கர்துக்கு ரொம்ப சுவாரசியமா இருக்கு சார்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தக்குடு. நலமா? மகிழ்ச்சி நன்றி

      Delete
  7. கிளி ஜோசியக்காரரின் பேட்டி சுவாரஸ்யமாக இருந்தது! உங்கள் வீட்டு கிளிகளை பற்றியும் எழுதுங்கள்! நன்றி

    ReplyDelete
  8. எங்கள் வீட்டில் ஜோதிடம், கிளி ஜோசியம் இதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது. பார்த்ததும் இல்லை.

    அவர்கள் வாழ்க்கை பற்றி பல தகவல்கள் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  9. Anonymous7:27:00 PM

    செல்லக் கிளிகள் அழகு கொஞ்சுகிறது.
    பதிவு சுவாரஸ்யமாக இருந்தது.
    நானும் பீச்சிற்கு செல்லும் போது
    அதன் அழகைக் காணவே கிளி ஜோசியம் பார்ப்பேன்.
    உங்கள் வீட்டுக் கிளிகள் பெயர் என்னவோ ?
    மீனா[க்ஷி] - சுந்தர் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரவாணி; எங்க வீட்டு கிளிகள் பேர் அஜூ (பையன்) & நாட்டி (பெண்)

      Delete
  10. // நம்ம குடும்ப மனுஷன் மாதிரி சார் இது. இதை விக்க முடியுமா சொல்லுங்க"//


    சிங்கப்பூர் விமான நிலையத்தில் நானும் ஆச்சரியத்துடன் ஒரு கிளி ஜோசியக்காரருடன் பேசிக்கொண்டிருதேன் ...
    தன் குடும்பத்தைப்பற்றிப்பெருமையாகச்சொன்னார் அந்த இலங்கைத்தமிழர் ..

    அவரைப்பற்றி விசாரித்துப் பேசியதற்கு மகிழ்ந்துபோனார் ..

    ReplyDelete
    Replies
    1. ராஜராஜேஸ்வரி: உங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

      Delete
  11. அருமை திரு மோகன் குமார்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நானும் வெளியூரில் கிளி ஜோசியம் ஆட்களைப் பார்த்தால் அவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பார்ப்பேன். வீட்டில் கிளி இருந்ததால் பாசம் வந்து விட்டது.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. முகநூளில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா

      Delete
  12. very informative interview

    ReplyDelete
    Replies
    1. வாங்க சேது நன்றி

      Delete
  13. ஜோசியக்காரரின் வாழ்க்கை பேட்டி.... வித்தியாசமான பேட்டி தான்.

    அஜூ நாட்டி தகவல்களை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  14. சுவாரஸ்யம் உங்களின் பேட்டிகள் அனைத்தும்.. சைக்கலாஜி என்று சொல்லி மூன்று ஆச்சிரியக்குறிகள் போட்டிருக்கின்றீர்களே.. அங்கதான் நிற்கிறீங்க மோகன். :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...