Tuesday, February 26, 2013

தொல்லை காட்சி-ரபி பெர்னாட் - மொக்க பார்ட்டி-கலைஞரின் இளைஞன்

பிளாஷ்பேக்: ரபி பெர்னாட் நேர்காணல்கள்

ரபி பெர்னாட் சன் டிவியில் நேர்காணல் துவங்கிய போது பெரும் வரவேற்பை பெற்றது. பரந்த அரசியல் அறிவும், பிரபலங்களை அழைத்து வந்து சர்ச்சைக்குரிய கேள்வியை அவர் பொறுமையாய் கேட்கும் விதமும் அற்புதமாக இருக்கும். பல அரசியல் வாதிகளுக்கு கோபம் வருமளவு விவாதம் வலுத்ததும் உண்டு



அதே ரபி பெர்னாட் - அதே நேர்காணலை இன்றும் ஜெயா டிவி யில் செய்கிறார் ஆனால் பெரும்பாலானோர் பார்க்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இப்போது நடுநிலைமை என்பது சிறிதும் இன்றி முழுக்க முழுக்க அ. தி.மு. க சார்பாக சென்று விட்டது தான்.

ரபி பெர்னாடுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக அரசியல் வாழ்வில் ஏறுமுகம் என்றாலும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரின் இந்த இன்னிங்க்ஸ் அவ்வளவு பிரகாசிக்க வில்லை.

மொக்க பார்ட்டி

சன் மியூசிக்கில் வரும் நிகழ்ச்சி மொக்க பார்ட்டி. போனில் அழைக்கும் நபரை மொக்கை போடா சொல்லி , Compere -ம் சேர்ந்து மொக்கை போடுகிறார். சினிமா நிகழ்ச்சியில் இருந்து ஒரு டயலாக் எடுத்து போட்டும் போனில் பேசுபவரை களாய்க்கிறார்கள் . எல்லாம் சரி தான். சில நேரம் கிண்டல் எல்லையை மீறி விடுகிறது. சமீபத்தில் ஒருவரை களாய்க்கும் போது " டேய் லூசுக்கு பிறந்த லூசு பயலே " என்ற சினிமா டயலாக்கின் ஆடியோ வடிவம் போட்டு கிண்டலடித்தனர். போனில் பேசுபவரை கிண்டலடிப்பது வரை சரி. அவர் அப்பாவையும் சேர்த்து " லூசுக்கு பிறந்த லூசு பயலே " என்று கிண்டலடிப்பது சரியா? என்னமோ போங்க !

சூப்பர் சிங்கர்

அதென்னவோ தெரியலை.. டிவி யில் தொடர்ந்து அல்லது அதிகம் பார்க்கும் நிகழ்ச்சி இதுவாகவே இருக்கிறது. வார நாட்களில் வீட்டுக்கு வருகிற நேரத்துக்கு இதை தான் பார்க்க முடிகிறது என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

பாடுவோர் செலெக்ட் ஆவார்களா இல்லையா என நாமும் ஒரு ஜட்ஜ் மாதிரி அவர்களின் முதல் 2 வரி கேட்டு விட்டு சொல்லுவது ஒரு விளையாட்டு மாதிரி இருக்கிறது. பெரும்பாலும் நாம் சரியே கணித்தாலும், சில நேரம் நம் கணிப்பு பொய்யாகும் போது நம் கோபம் ஜட்ஜ் மீது திரும்புகிறது

நிற்க. சில மிக வித்தியாச பாடகர்களை இதில் அவ்வப்போது காண முடிகிறது. முழுக்க பெண் குரலில் மட்டுமே பாடும் நபர், வாத்திய கருவிகளை வாயாலே முழுமையாய் வாசிப்பவர் என மனிதர்களுக்கும் தான் எத்தனை திறமைகள் !

கிரிக்கெட் கார்னர்

மீண்டும் சென்னையில் ஒரு கிரிகெட் மேட்ச். சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது ரேடியோவில் தமிழ் காமண்டரி சொல்வது வழக்கம். டிவி யில் கிரிகெட் மேட்ச் ஆன் செய்து விட்டு, TV சவுண்டை மியூட் செய்து, ரேடியோவில் தமிழ் காமண்டரி ஆன் செய்து விடுவோம். தமிழில் காமண்டரி கேட்டவாறு, டிவி யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ஆனந்தம் இருக்கே.. அடடா ! சொர்க்கம் !

அம்மாவும் ஐயாவும்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் ( Gazette) வெளியிட்டது தனது முக்கிய சாதனை என அம்மா எழுதி வைத்து கொண்டு ஜெயா டிவி யில் படிக்க, மறுபுறம் ஐயாவோ கலைஞர் டிவி யில் "இதற்கு காரணம் நாங்க தான்" என்றார். தஞ்சாவூரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கு. அதை கண்டு கொள்ளாமல், இதை தனது சாதனை என்று சொல்லி கொண்டிருக்கும் அரசியல் வாதிகளை என்னவென்று சொல்வது ! கர்நாடகா காரர்கள் உச்ச நீதி மன்றம் சொல்வதையும் சரி, மத்திய அரசு பேசுவதையும் பெரிதாய் எடுத்து கொள்வதும் இல்லை. தண்ணீர் திறந்து விடுவதுமில்லை. இந்த விஷயத்தில் அங்குள்ள அரசியல் வாதிகள் கட்டும் ஒற்றுமையை நம் தமிழக அரசியல் வாதிகள் காட்டினாலாவது பிரச்சனை நிஜமாய் தீர சற்று வாய்ப்புண்டு

சுஜாதாட்ஸ் 10 - காணொளி

நமது தல சுஜாதா இளைஞர்கள் செய்ய வேண்டிய 10 விஷயம் என்று எழுத்தில் எழுதியதை நிச்சயம் ஏற்கனவே படித்திருப்பீர்கள். அதனை அப்படியே ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார் இயக்குனர் கரு. பழனியப்பன். கேட்டு பாருங்கள். தலைவர் சொன்னது இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது !



கலைஞரின் இளைஞன்

வருகிற மார்ச் 1 ஆம் தேதி - இளைஞர் தினத்தை முன்னிட்டு - கலைஞர் டிவியில் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் - கதை, திரைக்கதை, வசனம் எழுதி பா. விஜய் நடித்த இளைஞன் படம் உலக தொலைகாட்சிகளில் முதன் முறையாக வெளியிடுகிறார்களாம். அரை மணிக்கொரு முறை கூவி கூவி பார்க்க சொல்லி அழைக்கிறார்கள். இந்த விளமபரம் வரும் ஒவ்வொரு பொழுதும் மனது ஒவ்வொரு விதமாய் யோசிக்கிறது. "பேசாமல் அன்று மாலை குடும்பத்தோடு வெளியே போயிடலாமா " என்று ஒரு முறை தோன்றுகிறது. ஹிந்தி அல்லது மலையாளத்தின் நல்ல பட DVD வாங்கி வந்து அதே நேரத்தில் போட்டு விடலாம்; அப்போது தான் அந்த சானல் பக்கமே 3 மணி நேரம் போகமால் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அரிதாக: " அப்படி என்ன தான் இருக்கு ? தைரியமா படத்தையும் வசனத்தையும் பார்த்து, மனம் விட்டு சிரிச்சா தான் என்ன?" என்ற விபரீத உணர்வும் கூட அவ்வப்போது வரவே செய்கிறது !
****
வல்லமை இணைய இதழில் வெளியானது
****


16 comments:

  1. சுஜாதாவின் பத்துக்கட்டளைகள்…

    1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல.
    கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

    2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

    3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

    4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

    5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

    6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

    7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

    8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச்சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

    9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

    10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

    இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்றது . முயற்சி செய்வோம். நன்றி

      Delete
    2. முழுமையாய் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி மகேந்திர குமார்

      வாங்க ஞானம் சேகர்; நன்றி

      Delete
  2. // அப்போது தான் அந்த சானல் பக்கமே 3 மணி நேரம் போகமால் இருக்கலாம் என்று தோன்றுகிறது. //

    A facility named 'child lock' / 'skip' for any 'channel' available in all TVs these days, including Govt. given "FREE TV"

    ReplyDelete
  3. கலகலப்பான தொகுப்பு.
    சுஜாதாவின் 10 கட்டளைகளை இங்கு நினைவூட்டிய மகேந்திர குமாருக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நிஜாமுதீன் நன்றி

      Delete
  4. மின் வெட்டு அதிகம் என்பதால் நிகழ்ச்சிகளை அறிந்தேன்...

    சொர்க்கம் என்னவென்று தெரிந்து கொண்டேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  5. ரபி பெர்னாட் நிகழ்ச்சிகள் இப்பொழுது சுவாரசியமாக இல்லைதான்.

    சுஜாதா அவர்களின் 10 கட்டளைகள் அருமை.

    //தைரியமா படத்தையும் வசனத்தையும் பார்த்து, மனம் விட்டு சிரிச்சா தான் என்ன?" என்ற விபரீத உணர்வும் கூட அவ்வப்போது வரவே செய்கிறது !//

    ஹா.ஹா.....

    சுவாரசியமான அலசல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராம்வி நன்றி

      Delete
  6. ரபி பெர்னாட் பற்றியது நூற்றுக்கு நூறு நிஜம்! இளைஞன் விளம்பரத் தொல்லை தாங்க முடியவில்லைதான்! சுவாரஸ்யமான தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ்; மகிழ்ச்சி நன்றி

      Delete
  7. சுஜா தாட்ஸ் - காணொளி - பகிர்ந்ததற்கு ஒரு தாங்க்ஸ்! :)

    ReplyDelete
  8. // அப்படி என்ன தான் இருக்கு ? தைரியமா படத்தையும் வசனத்தையும் பார்த்து, மனம் விட்டு சிரிச்சா தான் என்ன?" என்ற விபரீத உணர்வும் கூட அவ்வப்போது வரவே செய்கிறது !
    ****//

    நீங்கள் மிகவும் தைரியசாலி பாஸ்

    ReplyDelete
    Replies
    1. பிரேம்: நன்றி :)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...