Saturday, February 23, 2013

சென்னை -ஈக்குவிட்டாஸ் நிறுவனம் வெற்றி கதை

நிகழ்ச்சி ஒன்றில் ஈக்குவிட்டாஸ் நிறுவன அதிபர் திரு. வாசுதேவன் அவர்கள் பேசிய தகவல்களை நேற்றைய முதல் பதிவில் இங்கு  பகிர்ந்திருந்தேன். அதன் தொடர்ச்சி இன்று வெளியாகிறது

*****
ந்திரா ஒரு காலத்தில் மைக்ரோ பைனான்சில் கொடி கட்டி பறந்தது. மிக அதிக கடன்கள் அங்கு தான் வழங்கப்பட்டன முக்கிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் அனைத்தும் இங்கும் தான் மைக்ரோ பைனான்ஸ் தொழிலை துவக்கின. நாட்டின் மொத்த மைக்ரோ பைனான்ஸ் தொழிலில் மூன்றில் ஒரு பங்கு இங்கு தான் நடந்தது.

ஏராள நிறுவனங்கள் ஏகப்பட்ட லோன்கள். ஒரு பலூன் ஊதி ஊதி மிக பெரிய அளவில் செல்லும்போது அது வெடிப்பதை தடுக்க முடியாது. அப்படி தான் இங்கும் நிகழ்ந்தது

அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆந்திராவில் தற்கொலை அதிகம் நடக்கும். மழை பொய்த்தது அல்லது அதிகமாகி விவசாயம் கெட்டது என இத்தகைய மரணங்கள் நிகழும். ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த போது மட்டும் அவர் இறந்தது தாளாமல் 350 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிவானது. அதில் ஒருவர் கூட அவர் உறவினர் இல்லை ! அரசியல் வாதி இறந்தால் உறவினர்களால் தாங்கி கொள்ள முடிகிறது. மற்றவர்களால் தாங்கி கொள்ள முடியலை.

திடீரென ஒரு காலத்தில் ஆந்திராவில் தற்கொலைகள் நிறைய நிகழ்ந்தன. அவற்றிற்கு காரணம் கடன் தொல்லை தான் என்று செய்தி கிளம்பியது

உடனே அரசு மைக்ரோ பைனான்ஸ் தொழிலை ஆந்திராவில் முழுதாய் முடக்கி விட்டது. பின் அரசின் இந்த நடவடிக்கை தவறென மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வழக்கு தொடர, மிக சமீபத்தில் ஹைதராபாத் உயர் நீதி மன்றம் " அரசின் நடவடிக்கை தவறு என்றும். அப்படி தடை செய்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றும் தீர்பளித்துள்ளது

திரு. வாசுதேவன், ஈக்குவிட்டாஸ் எம். டி 
நாங்கள் ஈக்குவிட்டாஸ் நிறுவனம் துவங்கும் போது மார்கெட் முழுதும் ரிசர்ச் செய்தோம். அப்போது எங்களுக்கு ஒரு விஷயம் புரிந்தது. மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்கள் மக்களிடம் மிக அதிக வட்டி வசூலித்து கொண்டிருந்தன. ஏழை மக்களுக்கு யாரும் கடன் கொடுக்க தயாராய் இல்லை. அவர்களுக்கு பணம் கடனாய் கிடைப்பதே பெரிய விஷயம். அதனால் மூணு பைசா வட்டி, நாலு பைசா வட்டி என்று கடன் வாங்கி கொண்டிருந்தனர். கணக்கு பண்ணி பார்த்தால், குறைந்தது 35 % வட்டியும் அதிக பட்சம் 55 % வட்டியும் நிறுவனங்கள் வசூலித்து வந்தன. ஆனால் இவ்வளவு வட்டி வாங்குகிறோம் என வெளிப்படியாய் நிறுவனங்கள் சொல்லவில்லை

நாங்கள் நிறுவனம் துவங்கும் போது இப்படி அதிக வட்டி வசூலிப்பதும் தவறு; எவ்வளவு வட்டி வசூலிக்கிறோம் என சொல்லாமல் மூடி மறைப்பதும் தவறு என முடிவெடுத்தோம். எங்கள் வெளிப்படையான அணுகுமுறையை காட்டும் விதத்தில் தான் ஈக்குவிட்டாஸ் என நிறுவனத்துக்கு பெயர் சூட்டினோம். ஈக்குவிட்டாஸ் என்கிற லட்டின் மொழி சொல்லுக்கு அர்த்தம் நேர்மை மற்றும் வெளிப்படையான அணுகுமுறை ( Fair and Transparent ) என்று அர்த்தம்

இந்த தொழிலை வைத்து மிக அதிக சம்பாத்தியம் ஈட்ட வேண்டிய அவசிய எனக்கில்லை. சொல்ல போனால் அந்த நேரம் எனக்கு ஒரு வேலை தேவையாய் இருந்தது. அவ்வளவு தான்.

சென்னை காரனான யாருக்கும் குடும்பம் நடத்த 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் இருந்தால் அதுவே போதும். அதற்கு மேல் சம்பாதிக்கும் பணம் முழுதும் சென்னை காரர்கள் சேமிக்க தான் செய்வார்கள். எனவே எனக்கு இத்தொழிலை வைத்து மாபெரும் பணக்காரன் ஆகும் கனவு இல்லை.

பல நண்பர்கள் முதலீடு போட்டனர். அத்தோடு மற்றும் எனது பணத்தையும் சேர்த்து 10 கோடியில் நிறுவனம் துவங்கினேன். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் துவங்க பல அரசு லைசன்ஸ்கள் வாங்க வேண்டும். எங்களுக்கு முன்னாள் ஒரு நிறுவனம் அத்தகைய உரிமைகளை 47 நாட்களில் வாங்கியிருந்தது. அது தான் சாதனையாக இருந்தது. அதை விட 1 நாள் குறைவாக நாங்கள் லைசன்ஸ் பெற வேண்டும் என உழைத்தோம். ஆனால் எங்களுக்கு லைசன்ஸ் வர 55 நாள் ஆகிவிட்டது. " சரி 47 நாளில் வேண்டும் என உழைத்ததால் தான் 55 நாளில் கிடைத்தது " என சமாதானம் செய்து கொண்டோம்.

மைக்ரோ பினான்ஸ் நிறுவனங்கள் சிறு தொழில் புரிவோருக்கு வட்டிக்கு கடன் தருகிறார்கள். இது தான் முக்கிய தொழில். எங்களுக்கு முன்னால் நிறுவனம் துவன்கியோர் எல்லாம் ஏழைகளுக்கு கடன் தரும் தொழில்கள் பெரிதாய் போகாது என சின்ன முதலீட்டில் சிறிய அளவில் துவக்கினர் நாங்கள் துவங்கிய போது மைக்ரோ பைனான்ஸ் துறை ஓரளவு விரிவடைந்திருந்தது. அதனால் துவங்கிய போதே நிச்சயம் பெரிய அளவில் செல்வோம் என்று தைரியமாய் செயல்பட்டோம்.

நாங்கள் தரும் கடன் சதவீதம் 25.5 % க்கு மேல் போக கூடாது என நிர்ணயம் செய்து கொண்டோம். பின்னாளில் ரிசர்வ் வங்கி - மைக்ரோ பைனான்சு நிறுவனங்களுக்கு அதிக பட்ச வட்டி யை நிர்ணயம் செய்த போது நாங்கள் குறித்த வட்டி அளவை ஒட்டி 26 % என்று அறிவித்தது

போலவே எந்த ஒரு Investor -க்கும் 5 % க்கு மேல் பங்குகள் ( Shares ) வழங்க வில்லை. நானும் இந்த நிறுவனத்தில் 4 % பங்கு தான் வைத்துள்ளேன்.

துவக்கத்தில் நிறுவனத்தில் உள்ள செலவுகள் மிக அதிகம். அதனை கடன் பெறுவோரிடம் இருந்து சம்பாதிக்க நினைத்தால் அதிக வட்டி வசூலிக்க வேண்டி வரும். ஆனால் நாங்கள் துவக்க செலவு முழுக்க எங்களுடையது; அதனை கடன் பெறுவோரிடம் இருந்து பெற நினைக்க கூடாது என்று உறுதியாக முடிவெடுத்தோம்.

இந்த துறையில் 40 % முதல் 50 % வரை லாபம் வர வாய்ப்புண்டு. நாங்கள் 20 % லாபம் போதும் என்று வரையறை வைத்து கொண்டோம்.

10 கோடியில் துவங்கிய எங்கள் நிறுவனத்தின் காப்பிடல் இப்போது 450 கோடி.

எங்கள் லாபத்தில் 5 %, கடன் உதவி பெரும் குடும்பங்களுக்கு உதவ பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு ஊர்களில் 300 இலவச மருத்துவ முகாம் நடத்துகிறோம்.



திருச்சி, சிவகாசி உள்ளிட்ட 5 ஊர்களில் நாங்கள் பள்ளிகள் துவங்கியுள்ளோம். ஒவ்வொரு பள்ளிக்கும் துவக்க செலவு 5 கோடி. இந்த பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளிகள் லாபம் ஈட்ட குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என்பது எங்கள் கணக்கு. அது வரை நிறுவனத்தில் இருந்து தான் பள்ளிகளுக்கு பணம் தர வேண்டியிருக்கும்

பள்ளிகள் ஆரம்பத்தில் LKG முதல் ஐந்தாவது வரை ஆங்கில மீடியத்தில் துவக்கப்பட்டு பின் 6, 7 என ஒவ்வொரு வகுப்பாக அடுத்தடுத்த வருடம் சேர்க்கிறோம்

பள்ளிகள் இல்லாத இடங்களில் 50 டியூஷன் சென்டர்கள் வைத்துள்ளோம்.

எங்கள் நிறுவனத்தில் கடன் வாங்கியோர் வசதிக்காக சென்னையை சுற்றிலும் 20 மளிகை கடைகள் துவங்கி உள்ளோம். அவற்றில் மாதம் ஆயிரம் ரூபாய் வரை கடனில் பொருள்கள் வாங்கி கொள்ளலாம். 30 நாளுக்குள் அதற்கான பணம் தந்து விட்டால் வட்டி கட்ட தேவையில்லை.

ஈகுவிட்டஸ் நிறுவன தளத்தில் இருந்து அவர்கள் நிறுவனம் செய்யும் செயல்கள் குறித்த வீடியோவை இங்கு பகிர்கிறேன் பாருங்கள்



கடன் தந்து வட்டி பெறுவது தான் முக்கிய தொழில். இதில் கடன் வாங்கி, அதனை திரும்ப தராதவர்கள் மிக மிக குறைவு. எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல மைக்ரோ பைனான்ஸ் துறை முழுதுமே 99 % முதல் 99.5 % வரை கடன் தந்த பணம் திரும்ப வந்து விடுகிறது. பெரும் தொழில் செய்வோரிடம் தான் " வாரா கடன் " எல்லாம் நடக்கிறது. சிறு தொழில் புரிவோர் தங்கள் கடனை சரியே அடைத்து விடுகிறார்கள்.எங்கள் நிறுவனத்தில் மட்டுமல்ல எல்லா நிறுவனங்களிலும். எனவே மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு கடன் பணம் திரும்ப வரா விட்டால் என்ன செய்வது என்ற கவலை இல்லவே இல்லை.

2010 -ல் ஆந்திராவில் மைக்ரோ பைனான்ஸ் துறையில் பிரச்சனை வந்த பின் ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்தியா முழுக்க உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு 10 கட்டளைகள் பிறப்பித்தது. ஆனால் அவர்கள் சொன்ன 10 விஷயங்களும் நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருந்தோம். எதுவுமே எங்களுக்கு புதிதில்லை. எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பார்த்து சில நேரம் ரிசர்வ் வங்கி எங்களிடம் கலந்து பேசி, இந்த துறைக்கான சில முடிவுகளை அறிவித்ததும் உண்டு.

எங்கள் நிறுவனத்தில் இந்தியா முழுதும் தற்போது 2300 ஊழியர்கள் 270 ஊர்களில் வேலை செய்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் கடைசி ஊழியர் வரை எங்கள் நிறுவனத்தில் பங்கு தாரரே (Shareholder). நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர்கள் மனைவி, குழந்தைகள் தவிர பெற்றோருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்குகிறோம்.

கடன் தர யாரேனும் லஞ்சம் கேட்டாலோ, வேறு சட்ட மீறல் நடந்தாலோ எங்களுக்கு தொலை பேசியில் அழைக்க இலவச எண் அனைத்து இடங்களிலும் குறித்து வைத்துள்ளோம்.

எங்கள் வேலையை நாங்கள் மிக மகிழ்ச்சியாக அனுபவித்து செய்கிறோம். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது

நன்றி !
***
நிகழ்ச்சி முடிந்த பின் பலரும் சுவாரஸ்யமான கேள்விகளை அவரிடம் கேட்டனர் அவரும் வெளிப்படையாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்
***
சேவை செய்யும் தொழிலையே லாபகரமாக மன நிறைவுடன் செய்யும் வாசுதேவன் பாராட்டுக்குரியவரே !
***

முதல் பகுதி இங்கு 

மகளிர் சுய உதவி குழுவில் என்ன நடக்கிறது? ஈக்குவிட்டஸ் தலைவர் பேச்சு 
***

6 comments:

  1. Fair and Transparent என்றும் தொடர்ந்தால் சந்தோசம்... திரு. வாசுதேவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. Anonymous5:40:00 AM

    மிக அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  4. மிகவும் பொதுப்படையாக இருக்கிறது. எந்தெந்தத் தொழிலுக்கு எவ்வளவு வரை கடன் கொடுக்கிறார்கள், அந்தக் கடனை வாங்கியவர்கள் அதை எப்படி உபயோகிக்கிறார்கள், அவர்கள் கடனைத் திருப்பித்தர என்ன லாபம் வருகிறது போன்ற விபரங்கள் இருந்தால் இந்த மைக்ரோ பைனான்ஸ்ஸின் செயல்பாடுகள் மற்ற பைனான்ஸின் செயல்பாடுகளிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

    இதைப்பற்றி மேல் விபரங்கள் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete
  5. வெற்றிபெற்ற மனிதரின் சாதனை பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. சிறப்பான தகவல் பதிவு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...