Wednesday, February 27, 2013

ஹரிதாஸ் - வணிகவீதிக் கலாதரர்கள் - ராஜ சுந்தர்ராஜன்

வணிகவீதிக் கலாதரர்கள் - ராஜ சுந்தரராஜன்

“வாங்க, ஸார், வைரமுத்து ஸார்!”

பின்னால் திரும்பிப் பார்த்தேன்: ஒருவரையும் காணோம்.

“உங்களெத்தேன், ஸார், நீங்கதானே வைரமுத்து?” என்றான் அவன். அவன் பெயர் பாக்கியராஜ். மதுரைப்பக்கத்து ஆள். விடலை. ஆற்காடு சாலையில், வளசரவாக்கம் போரூருக்கு இடையில், ‘வசந்த் & கோ’வை ஒட்டியுள்ள ஒரு ‘டீ கம் டிஃபன் கடை’யில் இட்லி மாஸ்டர்.

“ஏம்ப்பா!?”

“வைரமுத்துதானே ஸார், பாறையில பூவு; பனியில சூடு ன்னு எழுதுவாரு?”

“அதுக்கு நான் என்ன பண்ணுனேன், என்னெ ஏன் கலாய்க்கிறே?”

அவன் நேரடியா என்கிட்டப் பதில் சொல்லவில்லை. அந்த நேரத்துக்கு அங்கே வந்து அவனுகளுக்கு கூடமாட சில்லறை வேலைகள் செய்கிற ஒரு வேன் டிரைவர் உண்டு, அவரிடம் சொல்லுவான்: “ஸாரு கவிஞர்ங்கிறதெ அன்னிக்கே கண்டுபிடிச்சுட்டேன்ல: ஒத்த விரலால இட்லியெக் குத்தி, என்னப்பா, இட்லிக்குள்ள கல்லு ங்கிறாரு!”

சிரித்தேன்தான். கவிதை என்றால் என்ன என்று அவனுக்குள் உருவாகி நிற்கிற புரிதலை எண்ணி நெடுநேரம் சிரித்துக்கொண்டு இருந்தேன். அவனது நக்கலை நான் எளிதாக எடுத்துக் கொண்டதில் அவனும் பல்லாக நின்றான். ஆனால், உண்மையில், அந்த நேரத்துக்கு நான் அதை எளிதாக ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை: “அதுக்காக, என்னெ வைரமுத்து ன்னு சொல்லியிருக்க வேண்டாம்!”

“ஏன், ஸார், வைரமுத்துவுக்கு என்ன ஸார் கொறைச்சல்?”

“சரி, அதெ விடு. இட்லி எடுத்து வையி!”

இட்லியைச் சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்குப் போனேன். ஜெயமோகன் பெயர் போஸ்ட்டரிலும் இல்லை; திரையில் ஓடிய எழுத்துகளிலும் இல்லை. ஆனால் “ஹரிதாஸ்” படத்தின் கதை தன்னுடையது என்று அவர் தன் வலைத்தளத்தில் எழுதி வாசித்ததாக ஞாபகம். அவர் பெயருக்காகத்தான் சினிமாவுக்குப் போனேன். இயக்குநர் குமரவேலன் ஏற்கெனவே ஒரு திருட்டுக் கதைக்கு, இலக்கியவாதி எஸ்.ரா.வுக்குப் பணமும் பேரும் கொடுத்தவராம். இந்த முறை என்னத்துக்கு வம்பு என்று யோசித்து, ஜெயமோகனுக்குப் பணத்தை மட்டும் கொடுத்துத் தீர்த்துக்கொண்டார் போலும். ஆனால் படத்தின் main-plot (தந்தை-மகன் உறவு உணர்வுப் பாடுகள்) ஜெயமோகனின் அனுபவத்தில் இருந்து புனையப்பட்டது என்பதை யூகித்துவிட முடியும். (அவரே கூட தனது வலைத்தளத்தில் அரசுப்பள்ளியும் தன் மகனும் பற்றி ஓர் எழுத்தோவியம் எழுதி இருக்கிறார்.)



ஆக, main-plot ஒரிஜினல்தான்; ஆனால் sub-plot (கள்ளன்/ பொலீஸ்/ என்கவுன்டர்) déjà vu. என்றாலும் இதில் கள்ளன் பொலீஸ் கதை அவ்வளவுக்கு நம்மைப் படுத்தவில்லை. தமிழர்கள் வாழ்க்கையில் நாடகம் இருந்ததில்லை. இருந்ததோ பாமரருக்கான கூத்துக் கலை. தமிழ் அரசர்களும் நாடகத்தை ஊக்குவித்தார்கள் இல்லை போலும். இலக்கியத்திலும் நாடகம் இல்லை. இந்த வறுமை காரணமோ என்னவோ, இற்றைத் தமிழர்கள் நாடகத்தின் மீது ஆவலாதி எடுத்து அலைகிறார்கள். இந்த ஆவலாதிகளுக்குத் தீனி போடவே இந்தக் கள்ளன் பொலீஸ் கதைகள் எல்லாம்.

காவலர் குடியிருப்பில் ஒரு குண்டம்மா போடும் ஆட்டம் தவிர படத்தில் குறை என்று கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் இல்லை. அப்பழுக்கற்ற முயற்சி. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமும் கூட. ஆனால் குறைய அரங்குகளில்தான் வெளியாகி இருக்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை.

திரும்புவழியில், இட்லி மாஸ்டர் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது: “வைரமுத்துவுக்கு என்ன ஸார் குறைச்சல்?”

காசுக்காக என்றாலும், அதற்குள்ளும், தம்மால் இயன்ற தரம் கொண்டுவர முயல்பவர்களும் இருக்கிறார்கள்.

9 comments:

  1. //காசுக்காக என்றாலும், அதற்குள்ளும், தம்மால் இயன்ற தரம் கொண்டுவர முயல்பவர்களும் இருக்கிறார்கள்.//

    அருமை.

    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  2. சென்று பார்க்கலாம் என்கிறீர்கள்.... நல்லது....

    ReplyDelete
  3. பார்க்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete
  4. நல்ல படம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. பார்த்திடுவோம். நன்றி.

    ReplyDelete
  6. “வைரமுத்துதானே ஸார், பாறையில பூவு; பனியில சூடு ன்னு எழுதுவாரு?”

    Hi Mohan, what is wrong in this ??? if you have time, pls. give more details on this, trying to understand about this line.

    ReplyDelete
  7. Nothing wrong in that. An uneducated person in Tamil Nadu, working as an idly master, could appreciate poetics! Hope you can pick-up the subtext too, Mr.Vadivelan!

    ReplyDelete
  8. Anonymous6:38:00 AM

    அருமை. நிறைய எழுதுங்கள் சார்...

    ஹரிதாஸ் படம் பற்றி ஜெயமோகன்...

    வரவிருக்கும் ஹரிதாஸ் படத்துக்காக நான் எழுதியிருக்கிறேனா என்று பல கேள்விகள். அவை பெரும்பாலும் இதழாளர்கள், திரையுலகுடன் தொடர்புடையவர்களின் வினாக்கள்.

    ஆம். அந்தப்படத்தின் கரு இயக்குநருடையது. நான் முதல் கதை- திரைக்கதை வடிவை எழுதினேன். என் வரையில் மிக நுணுக்கமான, உணர்ச்சிகரமான படம். பிறகு இயக்குநருடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. ஆகவே நான் விலகிவிட்டேன்.

    கேள்விப்பட்டவரையில் என் திரைக்கதையின் பெரும்பகுதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக அறிந்தேன். பணம் தரப்பட்டுவிட்டமையால் அது அந்நிறுவனத்துக்குத்தான் சொந்தம். அப்படியென்றால் ஒரு நல்லபடமாக அமையக்கூடும்

    ReplyDelete
  9. We are expecting reviews from your point of view with your style. you could refer others also but this is not inline with your style and concept of movie also.
    Balhanuman forwarded a useful information about Jeyamohan contribution. any how its my suggestion.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...