Sunday, March 3, 2013

Barfi படமும், தி. ஜானகி ராமனின் மரப்பசுவும்

பார்பி படத்துக்கும், மரப்பசு நாவலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? இரண்டும் கடந்த ஒரு வாரத்தில் நான் பார்த்த படம் + வாசித்த நாவல். அவ்வளவு தான் !
****
பார்பி -மிக வித்யாசமான கதை களன்.

வயதான ஹீரோ (பார்பி) இறக்கும் தருவாயில் இருப்பது தெரிய வர, அவரை காண இலியானா செல்வதில் துவங்குகிறது படம். தொடர்ந்து சின்ன சின்ன பிளாஷ் பேக்குகளில் கதை நகர்கிறது.

வாய் பேச முடியாத பார்பி - தன் ஊனத்தை பெரிதாய் எண்ணாமல் மிக மகிழ்ச்சியாய் வாழ்பவன். அவன் இருக்கும் அதே ஊருக்கு வருகிறாள் இலியானா என்கிற பணக்கார பெண். நிச்சய தார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் ஆக உள்ளவள். வழக்கமான சினிமா ஹீரோ செய்வது போல், திருமணம் நிச்சயமான அவள் மேல் காதல் கொள்கிறான் பார்பி. ஆனால்  அவளது பெற்றோர் அவனை அவமானப்படுத்தி அனுப்பி விடுகின்றனர்

                 

அதன் பின் அடுத்த ஹீரோயின் பிரியங்கா சோப்ரா - அறிமுகம் ; பிரியங்கா சற்று மன நலம் குன்றியவர். பெரும் பணக்காரர். பிரியங்கா - பார்பி காதல் - பின் இருவரும் ஊரை விட்டு ஓடி போக, இறுதியில் பணக்கார தந்தை அவர்களை கண்டுபிடித்தாரா இருவரும் இணைந்தனரா என்பதை படத்தில் கண்டு ரசியுங்கள் !

பார்பியாக - ரன்பீர் கபூர் . இன்னும் 2, 3 படம் பார்த்தால் - அமீர் கானுக்கு அடுத்து ரன்பீர் கபூர்  ரசிகனாகி விடுவேன். அட்டகாசமான, இயல்பான நடிப்பு.

ஆனால் அந்த பாத்திரம் தான் சற்று அதிகப்படி டிராமாவாக இருந்தது. சாலைகளில் சும்மாவே டான்ஸ் ஆடுவதும், குஷியாய் இருந்தால் பஸ் மீது ஏறி ஓடுவதும் சினிமா ஹீரோக்கள் மட்டும் தான் செய்ய முடியும்

படத்தின் சர்ப்ரைஸ் - பிரியங்கா மற்றும் இலியானா தான்.

பிரியங்கா சோப்ரா - வாட் எ பெர்பார்மன்ஸ் ! பார்பி பாத்திரத்தில் இருந்த அளவு டிராமா இவர் பாத்திரத்தில் இல்லை. ரொம்ப ரொம்ப ரசிக்கும்படி இருந்தது அவர் நடிப்பு. பார்பியிடம் சென்று " ஒன் பாத் ரூம் போகணும்; டிரெஸ்ஸை கழட்டு " என காலை அகற்றி வைத்து கொண்டு நிற்கும் காட்சியிலெல்லாம் மனசு என்னவோ போல் ஆகி விடுகிறது.சற்றும் குறை சொல்ல முடியாதபடி, பெரிதும் ரசிக்கும் விதமாய் இருந்தது இவர் பங்கு.

இலியானா- வாவ் ! சூப்பர் அழகு ! நண்பனில் பார்த்ததை விட  சற்று பூசிய மாதிரி இருப்பதால் பெரிதும் ரசிக்க முடிகிறது. திருமணம் ஆனபின்னும் பார்பியை மறக்க முடியாமல் தடுமாறும் அந்த பாத்திரம் இயல்பாய் ஈர்த்து விடுகிறது.

ஒரு காட்சியில் பார்பி- பிரியங்கா வாழ்க்கையில் இணைவதே இலியானா கையில் தான் இருக்கும். இவருக்கோ பார்பி மீது இன்னும் காதல் - பிரியங்கா மீது மெல்லிய பொறாமை  ! இலியானா என்ன செய்ய போகிறார் என நம் மனது பதை பதைக்கும் விதமாய் செய்த இயக்குனர் - அசத்தி விடுகிறார்

**
பார்பி ஒரு அற்புத அனுபவம்- எந்த சந்தேகமும் இல்லை. 30 கோடியில் எடுத்து 180 கோடி வசூல் செய்த சூப்பர் ஹிட் படம். உண்மை தான். ஆனால் 2012-ல் வந்த சிறந்த இந்திய படமாக அது ஆஸ்கார் செல்லும் அளவு சிறந்த படமா என்றால் சற்று சந்தேகமாய் தான் உள்ளது

பார்பி - அவசியம் ஒரு முறை பாருங்கள் !
*********
தி. ஜானகி ராமனின் மரப்பசு 

றைந்த எழுத்தாளர் தி. ஜானகிராமனின் பல்வேறு படைப்புகள் தமிழில் முக்கியமானவையாக கருதப்படுகிறது. அம்மா வந்தாள், மோக முள், மரப்பசு ஆகியவை பிரபலமான அவர் நாவல்கள். இவ்வரிசையில் மரப்பசு பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

கதை 

அம்மணி என்கிற பெண்ணின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. அவளது சிறு வயது முதல் 40 வயது வரை கதை செல்கிறது.

பெரியம்மாவின் வீட்டில் வளரும் அம்மணி பதின்பருவத்திலிருந்தே முற்போக்கு சிந்தனை கொண்டவள். கடவுள் நம்பிக்கை, திருமணம் போன்ற சடங்கில் விருப்பமின்மை என வித்யாசமானவளாக இருக்கிறாள்

ஊரில் இருக்கும் பிரபல சங்கீத வித்வான் கோபாலி (இவருக்கு அம்மணியை விட பெரிய பெண் உண்டு), அம்மணிக்கு தனி வீடு பார்த்து திருமணம் செய்யாமல் வைத்து கொள்கிறார். அம்மணியை பார்க்க பல ஆண்கள் வந்து போகிறார்கள். சிலருடன் தன் விருப்பத்துக்கும், சிலரிடம் பணத்துக்காகவும் உறவு வைத்து கொள்கிறாள். இவர்களில் சிலர் அம்மணியை மிக வியந்து " உன்னை போல் சிறந்த பெண் பார்த்ததே இல்லை; என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ? " என்கிறார்கள்.

பச்சையப்பன் என்கிற வேலைக்காரன் அம்மணி வீட்டின் பின்புறமே இருக்கிறான் (எனக்கு தெரிந்து அம்மணி உறவு வைத்து கொள்ளாத ஒரே ஆள் இவன் தான்)

இவனது மனைவி - மரகதம்- அம்மணிக்கு நேர் எதிர் பாத்திரம். ஏழை என்றாலும் கூட மிக அழகியான இவள், முதலாளி கோபாலி தகாத உறவுக்கு அழைக்கும் போது மறுத்து அவர்கள் வீட்டை விட்டே கணவனுடன் வெளியேறி விடுகிறாள்.

நாற்பது வயதான பின் அம்மணி தன் இளமை முழுதும் இழந்து நிற்கிறாள். தன் மிச்ச காலத்தை எப்படி வாழ அவள் முடிவு செய்கிறாள் என்பதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.
*********
தி. ஜா வின் நாவல்கள் பலவற்றிலும் முறையற்ற உறவுகள் ஆங்காங்கு வந்த வண்ணம் இருக்கும்; ஆனால் முழுக்க முழுக்க அதுவே ஒரு கதையின் அடி நாதமாக இருப்பது இந்த நாவலில் மட்டும் தான் என நினைக்கிறேன்.

ஓரிடத்தில் ப்ரூஸ் என்பவன் அம்மணியிடம் சொல்கிறான் " நீ முன்னூறு பேரோடு படுத்து கொண்டிருக்கலாம். மூவாயிரம் பேரை முத்தமிட்டிருக்கலாம். ஆனால் நீ தூய்மையான மனுஷி !"

கேட்க மிக ஆபாசமான ஒரு கதை என்ற உணர்வை தந்தாலும், கதையில் தான் அப்படி இருக்கிறதே ஒழிய எழுத்தில் சிறிது கூட அது துருத்தாமல் இயல்பாய் ஓடுகிறது நாவல் !

நாவல் எழுதப்பட்டது - கணையாழியில் 1970- களின் துவக்கத்தில் ! இப்போது கூட ஜீரணிக்க சிரமமாக இருக்கும் ஒரு விஷயத்தை நாற்பது ஆண்டுக்கு முன் எழுதியிருக்கிரார் தி. ஜா.
*****
அம்மணிக்கு யாரை கண்டாலும் தொடவேண்டும் என்று ஆசை. தி. ஜாவின் வரிகளில் அம்மணி பேசுவதை வாசியுங்கள் :

"பல்லாயிரக்கணக்கானவர்களை தொட்டிருக்கிறேன். பள்ளிக்கூட பையன்கள்- பெண்கள் -உறவுக்காரர்கள்- கல்லூரி மாணவர்கள்- மாணவிகள்- ஆசிரியர்கள், டாக்சி டிரைவர்கள் என நீள பொய் கொண்டேயிருக்கும்

யாரையாவது அறிமுகப்படுத்தினால் அவர்கள் கையை கூப்பினாள் ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கும். என்ன கை கூப்பல்? கையை பிடித்து குலுக்கினால் என்ன? தோளை தொட்டு புஜத்தை பற்றி பேசினால் என்ன?

யாரை பார்த்தாலும் தொடாத வரையில் சரியா பார்க்காதது போல இருக்கு எனக்கு. நான் எல்லாரையும் தானே தொடறேன். தொடப்போறேன்"

"விரதமா எதாவது இத்தனை பேரை தொடணும்னு ?"
" விரதம்னு இல்லை; எல்லாரையும் இந்த உலகத்தில் பிறந்த அத்தனை போரையும் ஒரு தடவை தொட்டுடனும் . கையை குலுக்கிடணும்"
*********
அம்மணி ஆசை வைப்பதும், அன்பு கொள்வதும் அநேகமாய் ஆண்களிடம் தான். ஆனால் அவள் பெரும் அன்பு வைக்கும் ஒரே பெண்ணாக மரகதத்தை படைக்கிறார். அவளது வீட்டு வேலை செய்யும் பெண்மணி மரகதம் என்றாலும் அவளை எல்லோரிடமும் " என் தோழி " என்றே சொல்கிறாள் அம்மணி. மரகதம் பாத்திரம் அம்மணி பாத்திரத்துக்கு நேர் எதிராக படைத்தது " பெண்கள் அனைவரும் அம்மணி போல் அல்ல " என்று சொல்லவும், அம்மணி ஒரு வித்யாசமான பிறவி என்று சொல்லவும் தான் என தோன்றுகிறது.

கோபாலி, விச்வம், பட்டாபி, ப்ரூஸ் என்று பல்வேறு ஆண்களுடனான அவளது நட்பு மற்றும் உறவில் தான் நாவல் முழுவதும் நகர்கிறது.

தி. ஜா வின் நுணுக்கமான பார்வை மற்றும் விவரிக்கும் திறன் அசத்துகிறது.

சரி .. நிறைவான விஷயத்துக்கு வருவோம்.

நாவலின் அடிநாதமான விஷயம் (பல பேருடன் உறவு) எனக்கு பெரிய அளவில் உடன்பாடில்லை. இதன் மூலம் தி. ஜா என்ன சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை. ஒருவருக்கு இன்னொருவரை பிடிக்கிறது என்றால் அதன் அடுத்த படியாக "உறவு" வைத்து கொள்கிறார்கள் என்றா? இதை முழுவதும் ஜீரணிக்கும் அளவு பரந்த மனது எனக்கில்லை. தி. ஜா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் இத்தகைய நிலையை அனுமதித்திருப்பார் என்றும் தோன்றவில்லை.

இந்நாவலை வாழும் காலத்தை தாண்டி எழுதிய ஒரு தைரியமான நாவலாக தான் பார்க்கிறேன். அந்த விதத்தில் மரப்பசு ஒரு வித்யாசமான நாவல் தான் !

17 comments:

  1. Anonymous12:58:00 PM

    Barfi - ஆஸ்கர் அளவிற்கு ஒர்த் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சிவகுமார்; பார்பி ஆஸ்கர் அனுப்பியதற்கு பின்னே வேறு ஏதாவது பாலிடிக்ஸ் இருக்கும் போல

      Delete
  2. தலைப்பை பார்த்ததும் இரண்டுக்கும் ஏதோ தொடர்பு இருக்கோ என்று நினைதேன்.

    மிக சிறப்பாக இரண்டிற்கும் விமர்சனம் எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகிழ்ச்சி ராம்வி

      Delete
  3. Barfi - பல காட்சிகள் நிறைய ஆங்கில படங்களை பார்த்து காப்பி அடிக்கப்பட்டதால், விமர்சகர்களிடமும், ப்ளாகர்களிடமும் செமையாக வாங்கி கட்டிக்கொண்ட படம். ஆனாலும் சூப்பர் டூப்பர் ஹிட்!

    ஷாரூக்கிற்கு அடுத்து, ரன்பீரை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. 'கான்' நடிகர்களுக்கு அடுத்து ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக ரன்பீர்தான் வருவார் என்பது என் எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  4. i like your blogs

    how can i sent the comments

    i dont know

    srinivasan

    ReplyDelete
    Replies
    1. சார் மிக மகிழ்ச்சி; இதோ இப்ப கமண்ட் போட்டுட்டீங்களே. அவ்ளோ தான் சார் ! ஆங்கிலத்தில் கூட கமண்ட் போடலாம் தப்பில்லை

      தமிழில் டைப் அடிக்க கூகிளின் இந்த லிங்கை பயன்படுத்தலாம்

      http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

      Delete
  5. Ajab Prem Ki Ghazab Kahani - ரன்பீர் நடித்த ரொமாண்டிக் காமெடி படம். லாஜிக் எல்லாம் பார்க்காமல் சிரித்து மகிழலாம்.

    இன்னொரு விஷயம் சொன்னா கண்டிப்பா பார்ப்பீங்க.....ஹீரோயின்...Katrina Kaif :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆஹா ஆஹா கரும்பு தின்ன கூலியா? தலைவி வாழ்க ! பாத்துடுவோம் :)

      Delete
  6. சினிமாவிற்கு பின்னூட்டங்கள். கதைக்கு ஏதுமில்லை !!

    நான் வாசித்துப் பல காலமாகி விட்டதால் சொல்ல ஏதுமில்லை. படத்தைப் பற்றி வாசிக்காது ‘தவ்வி’ வந்து விட்டேன்!!

    ReplyDelete
  7. என் விகடனில் தங்களது வலைப்பக்கம் பார்க்க நேர்ந்தது.வாழ்த்துக்கள்.

    பர்ஃபி ஒரு அழகான காதல் படம்.ஆனா நிறையபேருக்கு அதை பாக்க பொறுமை இல்ல .

    ReplyDelete
  8. அருமையான பதிவு. அருமையான விமர்சனம். நன்றி திரு மோகன் குமார். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. திஜா அதிகம் படித்ததில்லை.
    மரப்பசு பற்றி சமீபத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். வாங்கிப் படிக்கலாம் என்று இருந்தேன். நீங்கள் கொடுத்திருக்கும் கதைக் குறிப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  11. "நளபாகம்" கதையில் கதை மாந்தரின் தகாத உறவிற்கு அருகே சென்றாலும், ஜோசியரின் கூற்றை ஒரு நக்கலோடு விமர்சிக்கும் நாவலாகவே நான் கருதுகிறேன், நளபாகம் படித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  12. ஜானகிராமனின் சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள். உங்களுக்குப் பிடிக்கும். மற்றும்படிக்கு மரப்பசு விடயத்தில் உங்கள் கொள்கையே என் கொள்கையும்.

    ReplyDelete
  13. ஜானனகிராமனுக்கு இப்போதைய குடும்ப கட்டமைப்பில் நம்பிக்கையே இல்லையோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. ஆனால் இன்னும் கொஞ்ச (நூறு) வருஷங்களில் குடும்பம் என்ற அமைப்பு மறைந்து போய் பழைய "யார் வேண்டுமானாலும்..எப்படி வேண்டுமானாலும்" என்ற வாழ்வமைப்பு வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. இது நல்லதுக்கா அல்லது அல்லாததுக்கா என்று தெரியவில்லை.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...