Wednesday, March 27, 2013

திருவண்ணாமலை கிரிவலம் - அறியாத தகவல்கள் - நேரடி அனுபவம்

திருவண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய கேள்விபட்டுள்ளேன். பலர் இதற்கென்று முன்னரே திட்டமிட்டு செல்வார்கள். எனக்கு நிகழ்ந்தது மிக எதேச்சையான ட்ரிப். வழக்கறிஞர் நண்பன் பிரேம் ஒரு ஞாயிறு மாலை வேறு சில விஷயங்களுக்காக போன் செய்து பேசியபோது, திருவண்ணாமலை கிளம்பிக்கிட்டே இருக்கேன்  நீயும் வர்றியா? என்று கேட்க, " சரி வர்ரேன்" என்றேன். போன் பேசி அடுத்த முப்பதாவது நிமிடம் அவனது காரில் நாங்கள் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தோம்.

இனி கிரிவல அனுபவங்கள் :

பவுர்ணமி முழுதுமே நடக்கலாம் எனினும் இரவில் நடப்பது ரொம்ப விசேஷம். நாங்கள் மாலை ஆறரைக்கு சென்னையில் கிளம்பினோம். சாப்பிட்ட உடன் நடப்பது சிரமம் என திண்டிவனத்தில் இரவு சாப்பாடு முடித்து விட்டு அடுத்த ஒண்ணரை மணி நேரம் பயணம் செய்து திருவண்ணாமலை அடைந்தோம்.

திருவண்ணாமலை ....

கார் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் செல்ல முடியாத படி ஜனத்திரள் வந்து விடுகிறது. ஆனால் நாம் நடக்க துவங்கும் கிரி வல பாதை இன்னும் 1 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. இந்த தூரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் 10 ரூபா வாங்கி கொண்டு நம்மை அழைத்து போகிறது

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று 13 கிலோ மீட்டரை நடந்தே சுற்றி வருகிறார்கள். வழியில் உள்ள கடவுளை வணங்குகிறார்கள். இந்த வரி தான் இதற்கு முன் அறிந்தது. நேரில் பார்க்கும் போது ஏராள வித்தியாச அனுபவங்கள் !

இங்கு கடவுள், மலை மேலேயே / மலை உருவிலேயே இருப்பதாக நம்புகிறார்கள். இந்த கடவுளை வணங்கும் விதம் அதனை சுற்றி வருவது தான். இது தான் கிரிவலம்.

கிரிவலம் செல்லும்போது அமைதியாகவும், அரட்டை அடிக்காமலும், வேகமாய் நடக்காமல் மெதுவாக மந்திரங்கள் சொல்லியபடி செல்லவேண்டும் என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலானோர் இங்கு நடக்கும் போது செருப்பு அணிவதில்லை (வெகு சிலர் அணிகிறார்கள். யாரும் தடுப்பதில்லை)

பஞ்ச பூதங்களில் வாயு, நீர் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட ஒரு இடத்தை சிறப்பாக கருதுவார்கள். அப்படி நெருப்புக்கு உரிய தளம் திருவண்ணாமலை.

பவுர்ணமி அன்று சித்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்றும் அன்று அங்குள்ள மூலிகை மனத்தை நுகர இரவு நேரத்தில் நடப்பது தான் நல்லது என்றும் கூறுகிறார்கள்

திருவண்ணாமலையில் உள்ள பெரிய சிவன் கோவிலில் இருந்து நம் நடை பயணம் துவங்குகிறது. ஆனால் கிரிவலம் வரும் மக்களில் 10 % கூட கோவில் உள்ளே செல்வதில்லையாம். வெளியில் இருந்து வணங்கி விட்டு நடக்க துவங்கி விடுகிறார்கள். நாங்கள் நடக்க துவங்கிய இரவு 11. 30 க்கு வெளியிலேயே அவ்வளவு தள்ளு முள்ளு.

சுற்றி வரும் பாதை முழுதும் 12 லட்சம் செலவில் சோடியம் விளக்குகள் போட்டு தந்தது நடிகர் ரஜினி காந்த் ! சொல்லப்போனால் அவர் அருணாசலம் என்று இந்த ஸ்தல பெயரில் படம் நடித்த பின் இந்த இடம் மிக பிரபலமானதாகவும், அதன் பின் கூட்டம் இன்னும் அதிகமானதாகவும் சொல்கிறார்கள்

நடப்பவர்களில் பாதிக்கு பாதி பெண்களாக உள்ளனர் இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எதோ சபரிமலை மாதிரி ஆண்கள் தான் அதிகம் செல்வார்கள் என மனதில் கற்பனை செய்திருந்தேன்.

நாம் நடக்கும் 13 கிலோ மீட்டர் முழுதும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், , எம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய 9 லிங்கங்கள் உள்ளன. சிலர் மட்டுமே அந்த லிங்கம் ஒவ்வொன்றும் பார்த்து வருகின்றனர் நாங்கள் நேரே நடை ராஜா தான். (பல முறை சென்ற நண்பனும் கூட ஒரு முறையும் எல்லா லிங்கமும் பார்த்ததில்லை என்றான்; மலையை சுற்றி நடப்பது தான் முக்கியமாம் )

13 கிலோ மீட்டர் முழுதும் இரு புறமும் கடைகள் தான். வியாபாரம் அமோகம் ! குறிப்பாய் ஏராளமான சாப்பாட்டு கடைகள். அதிலும் சிறு இட்லி கடைகள் தான் நிறைய ! விடிய விடிய இட்லி சுட்டு தர, மக்கள் பொறுமையாய் காத்திருந்து சாப்பிடுகிறார்கள். பழங்கள், காபி , திருநெல்வேலி அல்வா என சாப்பாட்டு விஷயங்கள் அநேகம்

சாப்பாட்டு கடை தவிர்த்து அதிகம் இருப்பது பெண்கள் சமாசாரங்கள். ஹேர்பின், கிளிப் துவங்கி அடுப்படிக்கு தேவையான சாரணி வரை எக்கச்சக்க கடைகள். பெண்கள் ஆன்மீகத்தின் இடையே சுவாரஸ்யமாய் இவற்றை பர்ச்சேஸ் செய்கிறார்கள்

நடப்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எடுத்து கொள்கிறார்கள். மொபைலில் ஏதேனும் சுலோகம் வைத்து கொண்டு, அதை கேட்டபடி தனியாய் நடப்பவர்கள்; கைக்குழந்தையுடன் நள்ளிரவில் நடந்து செல்லும் குடும்பங்கள், ஒரு குழுவாய், இசை உபகரணங்களுடன் பஜனை செய்தபடி செல்லும் மக்கள், நடக்கிற தூரம் தெரிய கூடாது என ஓடி பிடித்து விளையாடிய படி செல்லும் இளைஞர் கூட்டம், இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி செல்லும் நம்மை மாதிரி ஆட்கள்.....

இவர்களை விட நம்மை பெரிது ஆச்சரியப்படுத்துவோர் குளித்து விட்டு ஈர துணியுடன் வெறும் வேஷ்டியுடன் சிவமந்திரம் சொன்ன படி தனியே நடந்து போகும் சிலர் தான். (நமக்கு சட்டை, காதுக்கு ஸ்கார்ப் போட்டு கொண்டு நடக்கும் போதே குளிருது; ஈரத்துடன் சட்டை போடாமல் நடந்து போகும் சிலரை பார்த்தால் ஆச்சரியமாய் இருந்தது )

கிரிவலத்துக்கு மிக அதிக கூட்டம் கார்த்திகை தீபத்தின் போது தான் ! திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றிய பின் தான் தமிழகம் எங்கும் வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். அப்படி புகழ் பெற்ற கார்த்திகை தீபம் காண கூட்டம் மொய்த்து விடுமாம். 13 கிலோ மீட்டருக்கும் ஜன திரள் இருக்க, கூட்டம் மெதுவாக ஊறுமாம்.

அடுத்து சித்திரா பவுர்ணமி அன்று பல இடங்களில் வசிக்கும் சித்தர்களும் இங்கு மீட் செய்வார்கள் என்று சொல்கிறார்கள் ( பொதுவாகவே இங்கு சித்தர்கள் நிறைய வசிக்கிறார்கள் என்று கேள்வி..சித்தர்கள் போல ஆக்டிங் தரும் பலரையும் நாங்கள் கண்டோம் )

ஆங்காங்கு 5 ரூபா கட்டின கழிப்பிடம் இருக்கிறது. ஆனால் ஒன் பாத் ரூம் என்றால் ஆண்கள் ஆங்காங்கு நடக்கும் வழியிலேயே ஒதுங்கி  முடிக்கிறார்கள். 5 ரூபா வாங்குவதாலோ என்னவோ, அவ்வளவு கூட்டத்துக்கும் கழிப்பிடம் ஓரளவு சுத்தமாய் இருந்தது (ஒரு வேளை நாங்கள் சென்ற இடம் மட்டும் நல்லா இருந்ததா தெரியலை) 

கண் தெரியாதோர் சிறு வேன் வைத்து கொண்டு அதில் சாமி பாட்டு பாடுகிறார்கள். வெளியே ஒரு சிலர் நின்று உண்டியலில் தானம் கேட்கிறார்கள்.

குறைந்தது 50 கிளி ஜோசியக்காரர்களையாவது கண்டேன். ஒவ்வொருவரிடமும் யாராவது அந்த நள்ளிரவில் ( இரவு 2 மணி !!) ஜோசியம் பார்த்து கொண்டிருந்தனர். பவுர்ணமி அன்று ஜோசியம் பார்ப்பது விசேஷமாம் !
நடப்பதில் பெரும்பகுதி பஸ் ரூட் தான். கிரிவலம் அன்று மட்டும் அந்த பாதையில் பஸ் போகாமல் டைவர்ட் செய்து விடுகிறார்களாம் ! நடுவில் திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டையும் கடக்கிறோம். நடுவில் 1 கிலோ மீட்டருக்கு பஸ்சும் நாம் நடக்கும் பாதையில் செல்கிறது. பஸ் ரூட் என்பதால் ரோடு செம நீட்டாக உள்ளது. திருப்பதி மலைக்கு நடந்தே செல்வது போன்ற ஒரு அனுபவம் தான். ஆனால் அது மலை; இது சம தளம். அது தான் முக்கிய வித்யாசம்.

அங்கு மக்கள் நடக்கிற விதத்தை சொல்கிறேன்: நம் வரிசையிலேயே 5 முதல் 10 பேராவது வருவார்கள். நமக்கு சற்று முன்னர் தள்ளி ஓரடி இடைவெளியில் இன்னும் 10 பேர் சென்று கொண்டிருப்பார்கள். போலவே பின்னால் ஓரடி தள்ளி 10 பேர் வந்து கொண்டிருப்பார்கள். இப்படி சாரை சாரையாய் எறும்பு போல மக்கள் கூட்டம் செல்கிறது !

ரோடுக்கு இருபுறமும் நடைபாதை இருந்தாலும், அதில் நடந்தால் நடைபாதை சற்று ஷேக் ஆகிறது. டைல்ஸ் சரியே போடலை போலும். அதற்கு நடு ரோடில் நடப்பதே நல்லது என்று நடக்க துவங்குகிறோம் ; நடைபாதை மேல் நடப்பது மிக சிலரே !

ஆன்மிகம், பிரார்த்தனை என மக்கள் வருவதாலோ என்னவோ, பிச்சைகாரர்கள், சாமியார்கள் என பலரும் நடைபாதை முழுதும் அமர்ந்துள்ளனர். பவுர்ணமி ஒரு நாள் கலக்ஷன் வச்சு ஓரிரு வாரம் ஓட்டிடலாம் என நினைக்கிறேன்

ரமண மகிரிஷி ஆசிரமம் , மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், புரொபஷனல் கூரியர் நிறுவனத்தினர் என வழியில் பல்வேறு அமைப்புகளும் அன்னதானம் செய்கின்றன. நள்ளிரவு 2 மணிக்கு மக்கள் பெரும் கூட்டமாக கியூவில் பொறுமையாய் காத்திருந்து சாப்பாடு வாங்கி உண்ணுகின்றனர். இவர்கள் இரவு சாப்பாடு சாப்பிடவே இல்லையா? அல்லது அப்போது ஒரு ரவுண்ட் முடித்து விட்டு ரொம்ப நேரம் விழித்திருப்பதால் இன்னொரு ரவுண்ட் சாப்பிடுகிறார்களா என்றெல்லாம் கேள்வி மனதில் ஓடியது

சன் டிவி மற்றும் ரஞ்சிதா புகழ் நித்யானந்தாவுக்கும் பெரும் இடம் அங்கிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு அன்னதானம் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஒரு டிவி வைக்கப்பட்டு அதில் நித்யானந்தா சொற்பொழிவு ஆத்தி கொண்டிருந்தார்

பல சிறு ஊர்களை தாண்டி வருகிறோம். அதில் அடி அண்ணாமலை என்கிற ஊர் வந்தால் கிட்டத்தட்ட மலைக்கு கீழே வந்து விட்டோம் என்றாகிறது. அதன் பின் ஓரிரு கிலோ மீட்டர் நடையில் நம் பயணம் முடிவடைகிறது.

நடக்கும் போதே அவ்வப்போது மலையை பார்த்து கொண்டே தான் நடக்கிறோம். சிவன் அந்த மலை வடிவில் இருக்கிறார் என்பதால் அந்த மலையை சுற்றி வருவது தான் ஐதீகம். . இறங்கி முடித்த பின் ஓரிடத்தில் மலையை நோக்கி வணங்கி விட்டு சூடம் ஏற்றி காட்டிய பின் நம் கிரிவலம் முடிவுக்கு வருகிறது

சென்னை டு திண்டிவனம் வரை சாலை அருமை. திண்டிவனம் துவங்கி திருவண்ணாமலை வரை தற்போது சாலை மிக மிக மோசமாய் உள்ளது.

காரில் சென்றால், சென்னை டு திருவண்ணாமலை பயணம் 4 மணி நேரம், நடக்க 4 மணி நேரம்; திரும்ப 4 மணி நேரம் என 12 மணி நேரத்தில் கிரிவலம் முடித்து வீடு திரும்பி விடலாம்.

அதிகாலை மூன்று மணி அளவில் நாங்கள் கிரிவலம் முடிக்க, சிலர் அப்போது தான் நடக்க துவங்கியிருந்தனர் !

இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இன்றைக்கும்  கூட திருவண்ணாமலையில் கிரிவல நாள் தான் !

ஓம் நமச்சிவாயா !
********



25 comments:

  1. கும்பல் பிடிக்காதவர்கள் சாதாரண நாட்களில் கூட கிரிவலம் செய்வார்கள். நான் இரு முறை செய்திருக்கிறேன் - ஒரு முறை சைக்கிளில், இன்னுமொரு முறை அலுவலக வாகனத்தில்! :)

    கிரிவலம் திருவண்ணாமலை மட்டுமல்லாது திருச்சி தாயுமானவர் சுவாமி கோவிலிலும், வடக்கே பிருந்தாவனிலும் மிகவும் விசேஷம். இன்னும் சில இடங்களிலும் கூட உண்டு.

    ReplyDelete
  2. Anonymous9:56:00 AM

    அதுவே தலம் அருணாசலம் தலம் யாவினும் அதிகம்!
    அது பூமியின் இதயம் அறி! அதுவே சிவன் இதயப்
    பதியாம் ஒரு மருமத் தலம்! பதியாம் அவன் அதிலே
    வதிவான், ஒரு ஒளி மலையா(ய்) நிதம் அருணாசலம் எனவே!
    (அருணாச்சல மகாத்மியம்: 1)

    பொருள்: எல்லாத் தலங்களையும்விட அதிக மகிமை வாய்ந்ததான அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையே திருத்தலமாகும். அது பூமியின் இதயத்தைப் போன்றது என்பதை அறிவாயாக. சிவனின் இதயத்திலே ஒரு மருமத்தலமும் ஆகும். அவன் அத்தலத்தில் அருணாசலம் என்ற பெயரோடு ஓர் ஒளி பொருந்திய மலையாக உறையும் இறைவனுமாக இருக்கிறான்.

    (தமிழில் கவிதையாக்கம்: பகவான் ஸ்ரீ ரமணர்)

    இவ்வாறு அருணாச்சல மகாத்மியம் போற்றிப் புகழும் அந்த அற்புதத் தலத்திலே, தானே ஒரு நெருப்பு மலையாக சிவன் நின்றிருக்கிறான்.

    ReplyDelete
  3. நான் அங்கே தான் எஞ்சனரிங் படிச்சேன்.நாலு வருசத்துல ஒரு 6,7 தடவை கிரிவலம் போயிருப்பேன். முதல் தடவை மட்டும் நண்பர்களோட ஓர் அனுபவத்துக்காகப் போனேன்.அதுக்கப்புறம் போனதெல்லாம் ஊர்ல இருந்து யாராவது வந்தா,அவங்க கம்பெனிக்கு.. (அப்பவே கடவுள் நம்பிக்கையில்லை)

    ஒரு பிள்ளையார் கோவில் உண்டே கிரிவலப் பாதையில. உள்ள போயிட்டு .ஒரு சின்ன இடுக்கு வழியா வெளியே வரணும். ஃபேமஸ் ஆச்சே அது.மிஸ் பண்ணிட்டிங்களா?!

    "கற்றது தமிழ்" உனக்காகத்தானே பாட்டு ஞாபகம் வர்லையா? ;) அங்க எடுத்தது தான்

    என் ரூம் மேட் 4 வருசமும் ஒரு மாசம் கூட கிரிவலம் மிஸ் பண்ணதில்ல. பவுர்ணமி அன்னிக்கு எதாவது லீவ்ல ஊருக்குப் போய்ருந்தாக் கூட கிரிவலத்துக்கு வந்துட்டுப் போவான் (12 மணி நேரப் பயணம்).இப்போ கொஞ்ச நாள் முன்ன ஃபேஸ்புக்ல ஒரு தெரியாத புதுப் பெயர்ல ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட்.. போய்ப் பார்த்தா இவன் தான்.க்ரிஸ்டியனா கன்வர்ட் ஆயிட்டான்

    ReplyDelete
    Replies
    1. adharku peyar idukku pillayar. Kuzhandai illadha pengal andha idukku vazhiyaga chendru vandhal kuzhandai peru undaagum enbadhu Idhigam

      Delete
  4. நண்பர்கள் அழைத்தார்கள் என்று நானும் தான் கிரிவலம் பொய் வந்தேன்?

    ReplyDelete
  5. இன்னுமா ஆத்தி கொண்டிருக்கிறார்... கொடுமை...

    ஓம் ஓம் நமச்சிவாயா...

    ReplyDelete
    Replies
    1. Athhaanae 9am attendence aala kanomnu paathaen..

      Delete
  6. திருவண்ணாமலையில் பூமிக்கு கீழ ஒவ்வொரு அடிக்கு ஒரு லிங்கம் புதைக்கப்பட்டுள்ளதா ஒரு நம்பிக்கை. அதனாலயே முன்னலாம் திருவண்ணாமலை ஊருக்குள்ள மன்னர்களே வந்தாலும் செருப்பு அணிவதில்லையாம். இப்போ இருக்குற காலகட்டத்துல அது முடியாததால் அட்லீஸ்ட் கிரிவலத்து போதாவது செருப்பு அணியாமல் இருக்கனும்ன்னு பெரியவங்க சொல்றாங்க அண்ணா!

    ReplyDelete
  7. கூரியர் நிறுவனத்தினர் என வழியில் பல்வேறு அமைப்புகளும் அன்னதானம் செய்கின்றன.

    //

    இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு இஸ்லாமியர் # தகவலுக்காக

    ReplyDelete
  8. அருணகிரி நாதர் ஒரு மன்னனின் பறிபோன கண்பார்வையை திரும்ப கொண்டு வருவதாக ஒரு போலி சாமியாரிடம் சவால் விட்டு, திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் தன் உடலை விட்டு கிளி உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து கிளியாக மாறி விண்ணுலகம் சென்று மலர் கொண்டு வந்து, மன்னரின் பார்வையை திருப்பி தந்ததோடு அந்நாட்டு மக்களின் பி?ணியெல்லாம் அப்பூவால் நீக்கி தன் உடல் சேர மீண்டும் கோபுரத்துக்கு பறக்கின்றார்.

    போலி சாமியாரால் தன் உடல் எரிக்கப்பட்டதை தெரிந்து மன்னருக்கும் நாட்டு மக்களுக்கும் கிளி ரூபத்திலேயே உண்மையை உணர வைத்து இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதாக் ஒரு வரலாறும் உண்டு. அதனாலயே, கோவில் கோபுரத்தில் ஒன்றின் பெயர் “கிளி கோபுரம்” வந்ததாகவும் கேள்வி

    ReplyDelete
  9. கிரி வலம் பற்றிய சுவாரசியமான பகிர்வு நாங்களும் கூடவே வந்ததுபோல இருந்துச்சி. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. நான் இதுவரை கிரிவலம் போனதில்லை. ஏனோ, அதிக கூட்டம் எப்போதும் எனக்கு அலர்ஜியாகவே இருக்கிறது.

    ReplyDelete
  11. அட்டகாசம் அண்ணா. கிரிவலம் பற்றிய சுவாரசியமான பகிர்வு நாங்களும் கூடவே வந்ததுபோல இருந்தது. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. எங்கள் ஊர் திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தை பற்றி பதிவு எழுதியதற்கு நன்றி..
    உங்களுக்கு சில விளக்கங்கள்.
    1.. கிரிவலம் வரும் வழியில் பங்காரு அடிகளார் அன்னதானம் போடுவதாக கூறினிர்கள் உண்மை என்ன வென்றால்.. அது ஓரு சக்தி பீடம்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் தண்டராம்பட்டு திருவண்ணாமலை போன்ற வட்டங்களில் இருக்கும் வழிபாட்டு மன்றங்களுக்கு தலைமை பீடம் அது.. இதில் செங்கம் தண்டராம்பட்டு வட்ட பக்தர்கள் வருடம் ஒரு முறை இருமுடி செலுத்தும்போது இந்த பீடத்தில் இருக்கும் நிர்வாகியின் அனுமதி கடிதம் தேவை.. இதனால் அந்த நிரவாகி வலுக்கட்டாயமாக ஒவ்வொரு பக்தரிடமும் 10 ரூபாய் பெளர்ணமி அன்னதானத்துக்கு வாங்கி அதை பங்காரு அடிகளார் பேரில் அன்னதானம் செய்கிறார்கள்.. இதில் பல பித்தலாட்டம் வேற
    உண்மையான நல்லெண்ணம் கொண்டவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஏதாவது ஒரு மாதம் மட்டும் 20000 செலவு செய்து அன்னதானம் செய்வார்கள்..
    நீங்கள் அடுத்த முறை செல்லும் அந்த கோவிலில் நல்லா கவனிக்கவும்.. செவ்வாடை அணிந்த பெண்கள் அன்னதானம் வழங்கினால் அது அவர்களின் சொந்த பணத்தில் போடுகிறவர்களாக இருப்பார்கள்...
    இன்னும் உண்மை இருக்கின்றன ஆனால் எனக்கு நேரமிண்மையால் முடித்து கொள்கிறேன்

    ReplyDelete
  13. 1986 ம் வருடம் திருவண்ணாமலை கிளைக்கு ஆடிட் செய்வதற்கான பணியில் சென்றபொழுது அந்த கிரிவலம் மாலையில் துவங்கி
    இரவு முடித்தேன். பிறகு கோவிலுக்கும் சென்றேன். அங்கு இருக்கும் ரமண ஆசிரமத்திற்கும் சென்றேன்.

    அப்பொழுதெல்லாம் இந்த அளவுக்கு கூட்டம் இல்லை. ஆனாலும் ஆங்காங்கே நீர் மோர் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு
    இருந்தது. எத்தனை லிங்கங்கள் பார்த்தேன் என்று நினைவு இல்லை.

    இனி எப்பொழுதாவது போக இயலுமா என்று தெரியவில்லை.

    இன்று உங்கள் பதிவினைப் படித்ததில் கிரிவலம் சென்று வந்த உணர்வு வந்தது என்னவோ உண்மை.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  14. சொல்ல, எழுத மறந்து போனேன்.

    திருவண்ணாமலை கிரிவலம் செல்ல இயலாதவர்களுக்காக, ஒரு லைவ் திருவண்ணாமலை தர்சன் எனது வலையில் இருக்கிறது.
    இந்த மலை நேரடி ஒலிபரப்பு ஒவ்வொரு 45 வினாடிகளும் ரிஃப்ரெஷ் ஆகிறது.

    எனது இந்த வலையிலும் தொடர்பு தந்திருக்கிறேன்.
    www.pureaanmeekam.blogspot.com

    நேரடியாக பார்க்க விரும்புவோர் இந்த யூ.ஆர்.எல். ஐ கிளிக் செய்யவும்.

    http://www.arunachala-live.com/

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  15. Anonymous10:29:00 PM

    திருவண்ணாமலையைப் பற்றி இளையராஜா…

    எஸ்.கந்தசாமி, திருச்செந்தூர்.
    ? திருவண்ணாமலையைப் பற்றி ?

    ! திருவண்ணாமலை வெறும் மலை இல்லைய்யா. அதுதான் சிவபெருமானே. பகவான் ரமணரே. ரமணர் ஆத்மா தேக நீக்கம் ஏற்பட்டபோது ஒளி வடிவாகி அந்த மலையில் கலந்து விட்டார். அதனால் வெறும் கல்லாலும் மண்ணாலும் ஆனதல்ல. சிவபெருமானே மலை வடிவாகியிருக்கிறார் என்றுதான் அர்த்தம். பிரம்மா, விஷ்ணு இருவரின் வேண்டுகோளுக்கிணங்க தன்னை குறுக்கிக்கொண்டு மலையாக மாறி பூமியில் எழுந்தருளியிருக்கிறார். அந்த மலையில் பகவான் ரமணரே ஜோதியாகக் கலந்து விட்டார். அதனால் நாம் பார்ப்பது ரமணரே, சிவபெருமானே அன்றி மலை அல்ல.

    ReplyDelete
  16. ஓம் நமசிவாயா

    ReplyDelete
  17. Anonymous6:18:00 AM

    பகவான் ரமணரும் கிரிவலத்தை மிக உயர்வாகக் கூறியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் பகவான் ரமணரே தனியாகவும், பல சாதுக்களுடனும் கிரிவலம் வந்திருக்கிறார்.

    ”இதை வெறும் மலை என்று நினைக்காதீர்கள், இதுவே அருணாசலம், இதுவே லிங்கம், இதுவே எல்லாம். நெருப்பை நாம் அறிந்து தொட்டாலும், அறியாமல் தொட்டாலும் அது சுடுவது நிச்சயம் போல, இந்த மலையை நாம் பக்தியுடன் வலம் வந்தாலும் சரி, அல்லது பக்தி இல்லா விட்டாலும் சரி, பலன் உண்டாவது நிச்சயம். வேக வேகமாக கிரிவலம் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, நிறுத்தி, நிதானமாக, பக்தியுடன், பாராயணம் செய்து கொண்டு செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    மேலும் அவர், ”இந்த மலை வெளியே பார்ப்பதற்கு அசைவற்றதாய் இருக்கிறது. ஆனால் உள்ளே பற்பல யோகியர்களும், சித்தர்களும், தேவர்களும் சதா சர்வ காலமும் அருணாசலரை வணங்கித் தொழுதுகொண்டிருக்கின்றனர். மலைக்கு உள்ளே பற்பல குகைகளும், அருவிகளும் உள்ளன. அருணாசலேஸ்வரரே அருணாசல யோகியாய் இம்மலையின் வடப்புறத்தே ஒரு ஆலமரத்தின் கீழ் எழுந்தருளி தியானம் செய்து கொண்டிருக்கிறார்” – என்றும் பகவான் குறிப்பிட்டிருக்கிறார்.

    அதுவே தலம் அருணாசலம் தலம்யாவிலும் அதிகம்
    அது பூமியின் இதயம் அறி அதுவே சிவன் இதயப்
    பதியாம் ஒரு மருமத்தலம் பதியாம் அவன் அதிலே
    வதிவான் ஒளி மலையாநிதம் அருணாசலம் எனவே

    - பகவான் ரமணர்

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  19. Interesting. But try to go alone as a devotee of Lord Shiva.

    An eye of a tourist to a pilgrim centre is an insult to God !!

    If u go as a devotee, ur experience will be far different.

    ReplyDelete
  20. திருவண்ணாமலை தர்சித்திருக்கின்றேன். கிரி வலம் சென்றதில்லை.

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  21. இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் இன்றைக்கும் கூட திருவண்ணாமலையில் கிரிவல நாள் தான் ! // ஆமாம்... அப்படியே ஷாக் ஆகிட்டேன்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...