Sunday, November 25, 2012

இங்க்லீஷ் விங்க்லீஷ் தவற விடக்கூடாத ஒரு படம்

ங்க்லீஷ் விங்க்லீஷ் படம் வெளிவந்து சில மாதங்கள் கழித்து தான் பார்த்தேன். படம் பார்க்கும் முன் தனி விமர்சனம் எழுதும் எண்ணம் சுத்தமாய் இல்லை. அதிகபட்சம் வானவில்லில் நான்கு வரி எழுதலாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் பார்த்து முடித்ததும் இது நான்கு வரியில் எழுதக்கூடிய படமல்ல என்பது தெளிவாய் புரிந்து போனது.


கதை

கணவர், குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வசிக்கும் இந்திய பெண் - சஷியாக ஸ்ரீதேவி. பகுதி நேர வேலையாக லட்டு தயாரித்து வியாபாரம் செய்கிறார். கணவர், குழந்தைகள் உள்ளிட்டோர் அவரை சமைக்கவும், வீட்டு வேலை செய்யவுமே ஏற்றவர் எனக்கருதி, தங்களை அறியாமல் பல விதத்தில் காயப்படுத்துகின்றனர்.

அக்கா மகள் திருமணத்துக்கு உதவ தனியாக அமெரிக்கா செல்கிறார் ஸ்ரீதேவி. அங்கு அனைவரும் வேலைக்கு சென்ற பின் தனியே இருப்பது போர் அடிக்க ஆங்கில வகுப்புக்கு செல்ல துவங்குகிறார். திருமணத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா வரும் ஸ்ரீதேவியின் குடும்பம் அவளிடம் நடந்துள்ள மாறுதல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.,

***
பிரபலமான நடிகர்கள் ஒரு பாத்திரத்தில் நடிப்பதில் மிக பெரிய பிரச்சனை: நாம் அவர்களை அந்த பிரபலமாக தான் பார்ப்போம். கமல் ஒரு பாத்திரத்தில் நடித்தால், நமக்கு கமல் என்பது நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கும். அதை தாண்டி அந்த பாத்திரத்தை நம் மனதில் பதிய வைப்பது பெரிய விஷயம்.

இப்படத்தில் போக போக நாம் ஸ்ரீதேவியை மறந்து விட்டு சஷியை ரசிக்க துவங்கி விடுகிறோம்.

பட துவக்கத்தில், க்ளோஸ் அப்பில் ஸ்ரீதேவியின் மூக்கு மிக உறுத்துகிறது. " சே ! ஸ்ரீதேவி ஏன் தான் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கெடுத்து கொண்டாரோ " என்ற வருத்தம் கொஞ்ச நேரம் எட்டி பார்த்தவாறே உள்ளது.

ஹீரோ ஓரியண்ட்டட் படங்களில் கூட, நான்கு சண்டைகள், பாடல்கள், ஹீரோயினின் கிளாமர், நகைச்சுவை என பல விஷயங்கள் இருக்கும். இந்த படம் முழுக்க முழுக்க ஸ்ரீதேவி என்கிற தனி மனுஷியை மட்டுமே நம்பி சுழல்கிறது. அட்டகாசம் !

ஸ்ரீதேவியை தவிர இன்னொருவரை இந்த பாத்திரத்தில் நினைத்தே பார்க்க முடியவில்லை. என்னா performance!

- பள்ளியில் ஆசிரியருடன் பேசும்போது காட்டும் மரியாதை, தயக்கம்...
- ஆட்டோவில் பெண் கோபப்படுகையில் கண் கலங்குவது, சில நொடிகளில் அவளை பார்த்து சரியாவது
- ஆங்கிலம் சற்று கற்று கொண்டதும் நடக்கிற கம்பீர நடை
- கணவர் அலட்சியப்படுத்தும் போது கூனி குறுகும் முக பாவங்கள்
- ஆங்கிலம் கற்கும் மாணவர்களுடன் காட்டும் மகிழ்வான ஒட்டுதல்
- க்ளைமாக்சில் பேசும் அமைதியான, அழகான பேச்சு ..

என முழுக்க முழுக்க இது ஒரு ஸ்ரீதேவி படம் ! Comeback-ன்னா இப்படி தான் இருக்க வேண்டும். பிச்சு உதறிட்டார். அடுத்தடுத்து இவரை ஹீரோவின் அம்மா போன்ற பாத்திரத்தில் வீணடிக்காமல் இந்தி திரை உலகம் நல்ல பாத்திரங்கள் வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த பாராட்டு இயக்குனர் கௌரி ஷிண்டேவுக்கு (ஒளிப்பதிவாளர் பால்கியின் மனைவி). எனக்கு அவரிடம் மிக பிடித்த விஷயம் ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளது தான் ! ஏழு வயது பையன் -ஏழு வயது பையன் செய்யும் வேலை தான் செய்கிறான். பன்னிரண்டு வயது பெண்ணின் மனநிலை -அவளது செயல்களை அப்படியே பிரதிபலிக்கிறார். ஸ்ரீதேவி கணவர் பாத்திரம் தான் போக போக சற்று நெகடிவ் ஷேட் அதிகமாகி, நாம் சற்று வெறுக்கிற அளவில் போகிறது என்றாலும், அந்த பாத்திரம் என்னையும் சேர்த்து ஒவ்வொரு ஆணின் பிரதிபலிப்பே.

அஜீத், ஸ்ரீதேவியுடன் இயக்குனர் கௌரி 

அஜித் வரும் காட்சிகளும் அழகாக உள்ளன. தல - தலயாகவே வந்து போகிறார். அமெரிக்காவில் இறங்கியதும் இம்மிக்ரேஷனில் " ஏன் அமெரிக்கா வந்தீர்கள்" கேட்க அஜீத் சொல்லும் பதில் : "ம்ம் உங்க எக்கானமியை சரி செய்ய வந்தேன்"

படத்தில் மிக மிக ரசிக்கும் பகுதி: ஸ்ரீதேவியின் ஆங்கில வகுப்பு காட்சிகள் தான்.

ஆங்கில வகுப்புக்கு தட்டு தடுமாறி வழி விசாரித்து வந்து சேரும் ஸ்ரீதேவி, முதல் நாள் வகுப்பில் அமரும் போது மற்றவர்கள் பேசும் உடைந்த ஆங்கிலத்தை கேட்டு மிக மகிழ்ச்சியாவது அழகு. அந்த நான்கு வாரத்தில் வெவ்வேறு பின்னணியிலிருந்து வரும் அவர்கள் அன்போடு பழகுவதும், வகுப்பு தோழர்கள் போல் கூத்தடிப்பதும் கவிதை போல காட்டியுள்ளார்.


இட்லிக்காக ஏங்கும் ராமமூர்த்தி, வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து பாத்திரங்களும் சுவாரஸ்யம்.

ஸ்ரீதேவி க்ளைமாக்சில் ஆங்கிலத்தில் பேச துவங்கும் போது, ஆங்கிலம் கற்று தந்த ஆசிரியரின் டென்ஷனை காட்டுவதும், முதலில் அவர் எழுந்து கை தட்டி விட்டு, " நீ பேசியதில் சில தவறு இருந்தது. " என சிறு கேப் விட்டு " ஆனால் நீ Distinction-ல் பாஸ் செய்து விட்டாய் " என முடிப்பது டைரக்டர் டச்.

ஸ்ரீதேவியை ஒரு தலையாய் காதலிக்கும் அந்த நபரின் பாத்திரம் சினிமாவிற்கு சற்று ரொமான்ஸ் தேவையென்பதால் சேர்க்கப்பட்டதாக தோன்றுகிறது . (நிஜத்தில் இத்தகைய காதல்கள் வராது என்று அர்த்தம் இல்லை)

மிக முக்கிய விஷயத்துக்கு வருவோம்

இந்த படம் சொல்ல வரும் விஷயம் : ஆங்கிலம் கற்பதன் அவசியத்தை அல்ல. ஒவ்வொரு குடும்பமும், குடும்ப தலைவியை எப்படி நடத்துகிறது என்பதை தான்.

யோசித்து பாருங்கள்: உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்? குடும்ப தலைவி என்று யாரை சொல்கிறோமோ அவர் தானே !

இங்கு தலையணை என்பது ஒரு குறியீட்டுக்கு தான் ! பல விஷயங்களுக்கும் இது பொருந்தும். ஸ்பெஷல் டிஷ் தயாராகும் போது அது அநேகமாய் காலியான பின், கடைசியில் மிக கொஞ்சமாய் அதை உண்பதில் துவங்கி, இன்னும் எத்தனையோ விஷயம் சொல்ல முடியும். (இந்த துயர்களை மறக்கத்தான் பெண்கள் நகைகளும், புடவையும் நிறைய வாங்குகிறார்களா என கேட்கிறார் அய்யாசாமி :)) )

ஒவ்வொரு குடும்ப தலைவியாலும் எந்த விஷயத்திலும் நமக்கு சமமாக வரமுடியும் என்பதை காட்ட, இப்பட இயக்குனர் எடுத்து கொண்ட ஒரு விஷயம் ஆங்கிலம். அவ்வளவு தான் ! ஆங்கிலம் பேசுவதில் தான் நான்கு வாரத்தில் ஒரு மாறுதலை காட்ட முடியும். சினிமாவிற்கும் ஆங்கிலம் பேசுவதில் உள்ள சிரமம் சுவாரஸ்யமாக இருக்கும். மற்றபடி பெண்களை நாம் எப்படி நடத்துகிறோம், அவர்கள் உணர்வுகளை எப்படி மதிக்கிறோம் என்பதை பற்றிய ஒரு பார்வையே இப்படம்.

இத்தகைய படம் பார்ப்பதால் யாரும் ஒரே நாளில் மாறி விடபோவதில்லை. எனினும் படம் பார்க்கும் ஆண்களில் எங்கோ யாரோ சற்று சிந்திக்க ஆரம்பித்தால் அதுவே ஒரு வெற்றி தானே !

படத்தின் கமர்ஷியல் வெற்றி பற்றிய தகவலுடன் இப்பதிவை முடிப்போம். 15 கோடிகளில் தயாரான இப்படம் 85 கோடிகளை வசூலித்து தந்துள்ளது. நல்ல படத்தை மக்கள் என்றும் கொண்டாடவார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் !

இங்க்லீஷ் விங்க்லீஷ் - ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் அவசியம் பார்க்க வேண்டிய படம் ! தவற விடாதீர்கள் !

26 comments:

  1. நல்ல விமர்சனம்... நன்றி...

    ReplyDelete
  2. //உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்?// இங்கே தொட்டுவிட்டீர்கள், மோகன்! படத்தைத் தேடிப்பிடித்து பார்த்துவிடத் தோன்றுகிறது.

    ReplyDelete
  3. ஆமாம் அண்ணா உண்மை தான். அருமையான விமர்சனம்

    ReplyDelete
  4. 15 கோடிகளில் தயாரான இப்படம் 85 கோடிகளை வசூலித்து தந்துள்ளது. நல்ல படத்தை மக்கள் என்றும் கொண்டாடவார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம் !

    ஆம் மோகன் சார் நல்ல படம் கண்டிப்பாக மக்கள் வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்

    தாமதமாய் தந்தாலும் அருமையான படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. //உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்// இதை விட சுலபமாக யாராலும் சொல்லமுடியாது! மிகவும் ரசித்த ஒரு விமர்சனம் & நிதர்சனமும் கூட....

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம் இந்தப்படம் நன்றாக இருக்கின்றது என்பது என் காதில் தொடர்ந்து விழுந்துகொண்டிருக்கின்றது..எப்படியும் பார்த்துவிடுகின்றேன்

    ReplyDelete
  7. \\ கமல் ஒரு பாத்திரத்தில் நடித்தால், நமக்கு கமல் என்பது நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கும்.\\ இதை நான் 100% மறுக்கிறேன். கமல் சிவாஜி இருவரும் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்தால், அதில் கமலையோ சிவாஜியையோ பார்க்க முடியாது, அந்த பாத்திரத்தை மட்டும்தான் பார்க்க முடியும். அதற்க்கு நேர் மாறாக எம்ஜியார், ரஜினி இருவரும் நடித்தால் பாத்திரம் தெரியாது, எம்ஜியார் ரஜினி மட்டும்தான் தெரிவார்கள். இது ஊரறிந்த உண்மை.

    \\பட துவக்கத்தில், க்ளோஸ் அப்பில் ஸ்ரீதேவியின் மூக்கு மிக உறுத்துகிறது.\\ எனக்கும் மைக்கேல் ஜாக்சன் ஞாபகம் அடிக்கடி வந்தது!!

    ReplyDelete
  8. நீண்ட நாட்கள் கழித்து விமர்சித்தாலும், இன்னொரு முறை படம் பார்த்த திருப்தி...

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம். பார்க்கிறேன் மோகன்.

    ReplyDelete
  10. ஸ்ரீதேவி உடுத்தி வரும் அழகழகான புடவைகளைப் பற்றியும் சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  11. ஏற்கெனவே விமர்சனங்கள் படித்திருந்தாலும் ஒரு பெண்ணாக ஆண்களின் பார்வை எப்படி படத்தை அணுகுகிறது என்பதற்காகவே படித்தேன். இயக்குனரின் நோக்கம் நிறைவேறியுள்ளதாகவே கருதுகிறேன் வாய்ப்பு கொடுத்தால் பெண்களும் சாதிப்பர் எனப் புரிய வைத்த இயக்குனருக்கும் அதை அதே கருத்தில் விமர்சனம் செய்த உங்களுக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  12. நல்லதொரு பட பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  13. விமர்சனம் சூப்பர்.

    படம் கொஞ்சம் பார்த்தேன் ஸ்ரீதேவி எக்ஸ்பிரஷன்ஸ் அருமை....

    இன்னைக்கி மீதியைப் பார்க்கனும் :-)))

    ReplyDelete
  14. சிறப்பான விமர்சனம். நானும் படத்தைப் பார்க்காமல் முழுமையாக உணர முடியாது.

    ReplyDelete
  15. காந்தி செத்துட்டாரா???????????

    ReplyDelete

  16. இங்க்லீஷ் விங்க்லீஷ் - ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் அவசியம் பார்க்க வேண்டிய படம் ! தவற விடாதீர்கள் !//////////////////

    கூலி வேலை பார்த்து உழைக்கும் மக்களே....
    அனைவரும் பாருங்கள்....மற்றும்...அனைத்து சொத்துக்கு வழி இல்லாத பெண்கள்,,ஆண்கள்
    அனைவரும் அவசியம் பார்த்துவிடுங்கள்....

    ReplyDelete
  17. படம் பிடித்தாலும் ஸ்ரீதேவி மூக்கு ஆபரேசன் பண்ணிய உங்கள் வருத்தம் புரிகிறது நண்பரே
    நானும் படம் பார்க்க என்னை தூண்டியமைக்கு நிச்சயம் தியேட்டரில் போய் படம் பார்க்கிறேன்

    ReplyDelete
  18. வீட்டில் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். போக நேரம் தான் கிடைக்கவில்லை. முயற்சிப்போம்.

    ReplyDelete
  19. thanks mohanji, yenna ............ vaalatti pakkurar neenga pathil solla matenkirinka.

    ReplyDelete
  20. Mohan Kumar - What you told is not at all applicable to women folk who are brought up in metros or in towns even though they are not good in communicating in english.

    ReplyDelete
  21. நண்பர்களே உங்கள் கருத்துக்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி; 20 பின்னூட்டம் என்பதால் தனித்தனியே பதில் சொல்லலை மன்னியுங்கள் !

    நன்றிகள் மீண்டும் !

    ReplyDelete
  22. உங்கள் வீட்டில் இருக்கும் தலையணைகளில், மோசமான தலையணையை வைத்து தினம் தூங்குவது யார்? குடும்ப தலைவி என்று யாரை சொல்கிறோமோ அவர் தானே ! - மறுக்க முடியாத உண்மை சார்!!

    அழகான ஒரு விமர்சனம்..எனக்கு ஸ்ரீதேவி ரொம்ப பிடிக்கும்..அவரின் மறுப்ரவேசதிற்காக பார்க்க நினைத்த படம் இது..இப்போது உங்களின் அலசலில் அவரின் நடிப்பை காண ஆவல் வருகிறது..
    மிக்க நன்றி!!

    ReplyDelete
  23. ஸ்ரீயின் நடிப்பிற்குக் கேக்கவா வேணும். அசத்தியிருப்பார்.

    ReplyDelete
  24. நல்லதொரு விமர்சனம். படத்தை பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  25. மோகன்,

    சுரேஷ்கண்ணன் வலைதளத்தில் நீங்கள் கொடுத்த லிங்க் மூலமாக வந்தேன்.(இனி அடிக்கடி வருவேன் ;-) )

    மிக சரியான, நேர்மையான, அளவான, அலட்டளற்ற, விமரிசனம்.. வாழ்த்துக்கள்.

    படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்..ஒவ்வொரு ஃபிரேமும் refreshing
    இவ்வருடம் சிறந்த நடிகைக்கான தேசீய விருது வழங்கும் குழுவிற்கு வேலையே இல்லை....ஸ்ரீதேவி!

    கணவன் அலட்சியப்படுத்தும் போது 30%சோகம்,30%விரக்தி 40%இயலாமை...

    மகள் அலட்சியப்படுத்தும் போது 30%கோபம,50%சோகம்,20%இயலாமை..

    சிவாஜி கணேசனுக்கே முடியக்கூடிய ஒன்று!

    உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று ஸ்ரீதேவி?

    அதுவும் ஒரு அலட்டலும் இல்லாமல் !!

    இதையெல்லாம் ப்பூ,ப்பூ ஆக்குகிறது அந்த பிரெஞ்சு மாணவருடன் உங்களுக்கு ஏற்படும் நட்பு..
    அது track மாறுவது பெண்களுக்கே (அதுவும் இந்தியப்பெண்களுக்கே) உரித்தான intuition மூலம் நீங்கள் உணர்ந்தாலும், அடிவாங்கி, அடி வாங்கி, உதாசீனப்பட்டு, பட்டு, நொந்து கிடக்கும் ஆழ் மனது, உங்களையும் மீறி அதை வரவேற்கிறது என்பதை நீங்கள் மிக மெலிதாகக் காண்பித்திருக்கும் விதம், இந்தியப்படங்களில் கண்டிராத ஒன்று.

    அதுவும் அந்த மாணவன் (தற்செயலாக)அணைக்கும்,(கத்தி மேல் நடப்பது)போன்ற காட்சி...WOW!!You simply rock, M'am..

    இந்தப்படம் Mrs.பால்கியும் Mrs.போனிகபூரும் இணைந்து
    இந்திய கணவன்மார்களுக்கு விடுத்திருக்கும்
    ஒரு நல்ல செய்தி cum எச்சரிக்கை.

    மிகவும் நன்றி,மோகன்!

    ReplyDelete
  26. சமீபத்துல வந்திருக்கிற இங்கிலிஷ் விங்கிலிஷ் இன்னுமொரு குப்பை. பொம்பளைன்னா எப்படி இருக்கணும்னு புரிய வைக்கிறதுக்காக ஒரு பொம்பளை எப்படி இருக்கக் கூடாதுன்னு படம் எடுத்து வச்சிருக்கார் டைரக்டர். பொம்பளைன்னா புருஷனுக்கு அடிபணிஞ்சு, அவர் சொல்ற வேலைகளைச் செஞ்சு கொடுத்துட்டு வீட்டோட அடங்கியிருக்க வேண்டாமோ? இவா அமெரிக்கா போறாராம். இங்கிலிஷ் கத்துக்குறாராம். நாலுபேர் இருக்குற சபையில புருஷனையும் மீறி எழுந்து இங்கிலிஷ்ல பேசுவாராம். நல்லாயிருக்குன்னு எல்லோரும் சொன்னதால படத்துக்குப் போனேன்.. படத்துல பாதியிலேயே பொண்டாட்டியையும் இழுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டேன்..அப்றம் டவுன்லோட் செஞ்சுதான் மீதிப் படத்தைப் பார்த்தேன்.

    ஸ்ரீதேவியைப் போய் ஹீரோயினாப் போட்டிருக்கார். அவருக்கு நடிக்கவே தெரியலை. மூன்றாம் பிறைலருந்து பார்த்துட்டே வர்ற முகம்..நல்ல நடிப்புன்னா முகத்துல ரியாக்ஷன் காட்டவேண்டாமோ? அது சுத்தமா இல்ல. எப்பவும் சேலையில வந்து ஒரு ப்ரெஞ்சுக்காரனைக் கவர்றா. அபச்சாரம். ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா, இன்னொருத்தனை நெனச்சுப் பார்க்குறது எம்மாம் பெரிய தப்பு. எனக்கு கோபம் கோபமா வந்தது. அஜித்குமார் வேற இடையில வந்துபோறார். நல்ல சிவப்பான அஜித், தாடியெல்லாம் நரைச்சு வயசானவராத் தெரியுறார்..கொஞ்சம் டை அடிச்சா என்னவாம்? படத்தோட பட்ஜெட்ல அதுக்கு என்ன பெரிய செலவா வரப் போறது?

    தமிழ்ல இன்னுமொரு தெரிஞ்ச முகம்னா அது ப்ரியா ஆனந்த். இந்தப் பொண்ணப் போய் இன்னுமொரு கதாநாயகியாப் போட்டதுக்கு பேசாம வேறொரு தமிழ் நடிகையைப் போட்டிருக்கலாம். ஏன் வெளிநாட்டுல இருக்குற இந்தியப் பொண்ணுன்னா கறுப்பாவே இருப்பாளா? எப்ப இந்த குறுகிய மனப்பான்மை மாறும்? தமன்னாவை இந்தக் கேரக்டர்ல நடிக்க வச்சு, அவரோட காதலனா ஒரு ஹீரோவப் போட்டிருந்தா படத்துல நல்லதா நாலு டூயட் பாட்டு சேர்த்திருக்கலாம், 3 சண்டைக்காட்சி சேர்த்திருக்கலாம். டைரக்டருக்கு படம் எடுக்கவே தெரியல.

    கதை எனக்குப் பிடிக்கவேயில்ல. என்னோட பாட்டியை எடுத்துக்குங்க. 17 வயசுல புருஷனைப் பறிகொடுத்துட்டு தலையை மழிச்சுட்டு விதவையா நின்னவ..அதுக்கப்புறம் 89 வயசுல சாகுற வரைக்கும் இன்னுமொரு ஆம்பளையை நெனச்சுக் கூடப் பார்க்கல. என் மனைவி நான் சொன்னதை மீறி எதுவுமே செய்யப் பயப்படுவா. சாப்பாடு, துணிமணி ஏன் பார்க்குற சானல், திரைப்படம் கூட என்னோட சாய்ஸ்தான். புருஷன்னா அப்படி இருக்கணும்...பொண்டாட்டின்னா இப்படி இருக்கணும்..அதையெல்லாம் படமா எடுத்துக் காட்டுங்கோ..நான் என்ன வேணாம்னா சொல்றேன்..வேணும்னா ஃப்ரீயா நடிச்சுக் கூட கொடுக்குறேன்.. அதெல்லாம் விட்டுட்டு புருஷனைப் பிரிஞ்ச 3 மாசத்துலேயே பொண்டாட்டி புருஷனுக்குத் தெரியாம படிக்கப் போறதும், என்ன குலமோ கோத்திரமோன்னு கூடத் தெரியாத ஒருத்தன் கொடுத்த தண்ணியையும், காப்பியையும் வாங்கிக் குடிக்கிறதும்.. சுத்தமா எனக்குப் பிடிக்கவேயில்ல.

    இதுக்கு முன்னாடியும் இப்படி ஒரு படம் வந்தது.. 'மித்ரு மை ஃபிரண்டு'ன்னு பெயர். நடிகை ரேவதி, சோபனாவ வச்சு எடுத்திருந்தார்..அதுலயும் இப்படித்தான்..பொண்டாட்டி கம்ப்யூட்டர் கத்துக்குறா.. புருஷனையே யாரோன்னு நெனச்சு சாட்டுல லவ் பண்றா.. என்ன ஒரு குப்பைக் கதை? ரேவதியை நேர்ல சந்திச்சப்பக் கேட்டேன்.. ஒண்ணுமே சொல்லாம புன்னகைச்சுட்டுப் போயிட்டார். சில நடிகைகளுக்கு இப்படித்தான்..நடிக்கவும் வராது..பேசவும் வராது..

    இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் முழுக்க ஓட்டை.. யாரும் பார்க்கப் போயிடாதீங்க.. கலாச்சாரச் சீரழிவுகளுக்கு இடம் கொடுக்காதீங்க..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...