Thursday, March 14, 2013

தோழர் ஜீவா - ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில் !

தோழர் ஜீவா - ஏறினால் ரயில்... இறங்கினால் ஜெயில் !- ஆதி மனிதன் 

மிழகத்தில் கம்யூனிசத்தை வளர்த்தவர் தோழர் ஜீவா என்கிற ஜீவானந்தம். இந்த தலைமுறையில் எத்தனை பேருக்கு தோழர் ஜீவாவை பற்றி தெரிந்திருக்கும் என எனக்கு தெரியவில்லை. தமிழகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் உறுப்பினர் திரு ஜீவா என்றால் அவருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உள்ள தொடர்ப்பை சாதாரணமானவர்கள் கூட அறிந்து கொள்ளலாம்.


அப்படிப்பட்ட ஒரு விடுதலை போராட்ட வீரர். அகில இந்திய காங்கிரசின் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர், தமிழகத்தில் தீண்டாமையை ஒழிக்க அரும்பாடு பட்ட ஒரு பெரும் தலைவரின் குடும்பத்தோடு எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் அதை விட நான் பெருமை பட்டுக்கொள்ள வேறு ஒன்றும் இல்லை. கடந்த வாரத்தில் தோழர் ஜீவாவின் மகன் திரு. மணி குமார் அவர்களை தோழர் ஜீவா அவர்கள் வாழ்த்த வீட்டில் என் அம்மாவுடன் சந்தித்து அளாவியது எனக்கு கிடைத்த பெரும் பேராகும்.

பூதபாண்டி என்கிற ஊரில் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த திரு. ஜீவா அவர்கள், தனது குடும்ப பின்னணி காரணமாக சிறு வயதிலேயே இலக்கியம், தெய்வ பக்தி பாடல்கள், கலை என பலவும் கற்று தேர்ந்திருந்தார். தீண்டாமைக்கு எதிராக தனது சிறு வயதிலேயே குரல் கொடுக்க துவங்கிய தோழர் ஜீவா, தனது 'தலித்' நண்பர்களை மேல்ஜாதியினர் வசிக்கும் தெருக்களுக்கும், பொது இடங்களுக்கும்  அழைத்து சென்றதில் தனது வீட்டிலேயே அவருக்கு எதிர்ப்பு வலுக்க தொடங்கியது.  அதுவே ஒரு கட்டத்தில் அவர் தனது வீட்டை விட்டு வெளியேற ஒரு காரணமாகி போனது.

பின்னாளில் காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் வழியில் கதராடை அணிய தொடங்கி தனது இறுதி நாட்கள் வரை கதராடையை மட்டுமே அணிந்து வந்தார். வைக்கம், சுசீந்தரம் என்று பல ஊர்களில் தலித்துகள் ஊர் மற்றும் கோவிலுக்குள் செல்ல நடைபெற்ற போராட்டங்களில் பங்கு கொண்டவர் சிறுவாயல் என்ற ஊரில் ஒரு ஆசிரமத்தை பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருந்த போது அங்கு வருகை தந்த காந்திஜியை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. ஆனால், அதுவே அவர் பின்னாளில் காந்தியை விட்டு விலகும் சூழ்நிலையையும் ஏற்படுத்தி விட்டது. தீண்டாமையை விரட்டுவதில் காந்தி முனைப்புடன் இருந்தாலும் 'வருணாசிரம தருமம்' கடைபிடிக்க பட வேண்டும் என்ற காந்தியின் கருத்து அவரை காந்தியை விட்டு விலக வைத்தது.

CPI யில் அவர் சேர்ந்த பிறகு தோழர் P. ராமமூர்த்தியுடன் சேர்ந்து தமிழகம் முழுதும் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உறுபினர்களை சேர்ப்பதிலும், ஊர் ஊராக சென்று தொழிலாளர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலாளர்களை கம்யூனிச இயக்கத்தில் இணைப்பதை தன் பெரும் பணியாக கொண்டிருந்தார்.

சிறந்த பேச்சாளரான ஜீவா, தனது அனல் பறக்கும் பேச்சால் தொழிலாளர் நலன் மேம்பட பல தொழிலாளர் போராட்டங்களுக்கு வித்தாக அமைந்துள்ளார். ஒரு ஊருக்கு ஜீவா பேச சென்றால் அங்கு அடுத்த நாளே ஒரு தொழிலாளர் போராட்டம் ஆரம்பித்து விடும். இதனாலேயே அவர் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி பல முறை சிறை செல்ல நேரிட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பல தடவை சிறைக்கு சென்று வந்த தோழர் ஜீவாவை இப்படி சொல்வார்கள். ஜீவா 'ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்' என்று. அது மட்டுமன்று ஒரு குறிப்பிட்ட காலம் சென்னையில் நுழைய ஜீவாவிற்கு பிரிட்டிஷ் அரசு தடையே விதித்திருந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் தேர்தலில் வியாசர்பாடியில் போட்டியிட்ட திரு. ஜீவா அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னாளில் ஜீவாவை கொவுரவிக்கும் பொருட்டு வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கு 'ஜீவா வியாசர்பாடி' என்று பெயர் இட்டனர்.

இவர் இப்படி என்றால் இவரின் துணைவியார் திருமதி. பத்மாவதி ஜீவானந்தம் அந்த காலத்தில் தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் வரும் 'சேவை இல்லம்' என்ற ஆதரவற்ற பெண்களுக்கான சிறப்பு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக தஞ்சையில் பொறுப்பேற்றிருந்தார். ஓரிரு ஆசிரியர்களையும் ஐம்பது அறுபது மாணவிகளையும்(ஆதரவற்ற பெண்களையும்) மட்டுமே கொண்டிருந்த பள்ளிக்கு மேலும் ஆசிரியர்களை நேர்காணல் செய்த போதுதான் அப்போதே ஆசிரியர் பயிற்சி முடித்திருந்த என என் அம்மாவும் அப்பள்ளிக்கு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து இருந்தார். பத்து பதினைந்து பேர் கலந்து கொண்ட அந்த நேர்முக தேர்வில் என் அம்மாவை தேர்ந்தெடுத்தது தொடங்கி இன்று வரை திரு. ஜீவா அவர்களின் குடும்பத்துடனான நட்பு, தொடர்பு நீடிக்கிறது. 

தனக்கு கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் சேவை இல்லத்தில் பயின்ற ஆதரவற்ற பெண்களை தன் குடும்ப உறுப்பினர்களை போலவே நடத்துவாராம். அன்றைய காலகட்டத்தில் சேவை இல்லத்திற்கு அரசின் நிதி சிறிது காலம் கிடைக்காமல் போக தானே ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் வீடுகளுக்கு சென்று நிலைமையை எடுத்து சொல்லி ஒரு ஆறு மாத காலத்திற்கு அரசின் உதவி பணமே இல்லாமலும், இல்லத்தை இழுத்து மூடாமலும் அங்கு தங்கி இருந்த அனைத்து மாணவிகளுக்கும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

திரு. ஜீவா - பத்மாவதி அம்மையாரின் அவர்களின் திருமணம் நடைபெற்ற விதத்தை படித்தாலாவது இன்றைய அரசியல்வாதிகள் திருந்துவார்களா என தெரியவில்லை. அது...

அடுத்தவராம்.

வீடு திரும்பலில் வெளியான நண்பர் ஆதியின் முந்தைய பதிவுகள் சில..




9 comments:

  1. ஜீவா கேள்வி பட்டு இருக்கேன் படித்தது இல்லை இப்போது தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்கர கட்டி.

      Delete
  2. என்னது திருந்துவார்களா...?

    அவரின் சிறப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஒரு நப்பாசை தான். நன்றி தனபாலன்.

      Delete
  3. ரெம்ப ரெம்ப சந்தோசம் ...! எனக்கு மிகவும் பிடித்த , என் ஆதர்ச நாயகன் ஜீவாவை பற்றிய ஒரு பதிவு ....அவரின் பால் உள்ள ஈர்ப்பின் காரணமாகவே, அவரிடமிருந்து "ஜீவனை" என் பெயருடன் இணைத்துக்கொண்டேன் .

    சமீப காலங்களில் சேகுவாரோவை டீ சர்ட்டில் பிரிண்ட் செய்து அணிந்து கொள்ளும் பழக்கம் இளம் சமுதாயத்திடம் அதிகரித்து வருகிறது . ஜீவாவையும் , பகத்சிங்கையும் ஏன் பிரிண்ட் செய்து போடகூடாது ? சேகுவாரோவுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல இவர்கள் .

    ReplyDelete
    Replies
    1. //ஜீவாவையும் , பகத்சிங்கையும் ஏன் பிரிண்ட் செய்து போடகூடாது ? சேகுவாரோவுக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல இவர்கள் .//

      அக்கரை தானே எப்போதும் பச்சையாக தெரியும். இருந்தாலும் சீக்கிரம் இவர்களையும் நம்மவர்கள் போற்ற தொடங்குவார்கள் என நம்புகிறேன்.

      தாங்கள் ஜீவாவின் மீது வைத்துள்ள மதிப்பை கண்டும் எனக்கும் மிக மிக சந்தோசம். நன்றி ஜீவன்சுப்பு.

      Delete
  4. Anonymous11:31:00 AM

    ஜீவா பற்றி வாசித்திருந்த போதும், சில தகவல்கள் புதுமையே, தமிழகம் தந்த சிறந்த தலைவர்களில் ஒருவர், இப்போ ஜீவாவின் ஒரு சதவீதம் கூட யாருக்கும் உண்டோ அறியேன் ( நல்லகண்ணு, மோகன் நீங்கலாக ) அத்தைகைய குடும்பத்தோடு நட்பை பெறுவது பாக்கியமே, :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி இக்பால். இன்னும் நிறைய தகவல்கள் உண்டு. எல்லாம் என் தந்தையும், தாயும் சிறு வயது முதல் சொல்லி வந்தது/வளர்த்தது.

      Delete
  5. ஜீவா போன்றவர்களைப் பற்றி இன்றைய மாணவர் சமுதாயத்துக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூறவேண்டும். நல்ல பதிவு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...