Saturday, September 22, 2012

மாவு மில்காரர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

மாவு மில் என்றதும் முதலில் எங்கள் ஊரான நீடாமங்கலம் நினைவுக்கு வரும். நீடாமங்கலத்தில் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ளது பெரியார் மாவு மில். அதனை நடத்தியது ஒரு திராவிடர் கழக பிரமுகர். அந்த மாவு மில், எங்கள் ஊர் கடைத்தெருவின் முக்கிய இடத்தில் இருக்கும். கடையின் வெளியே சுவரில் " கடவுள் இல்லை இல்லவே இல்லை" உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். கடவுள் இல்லை என்பதோடு கடவுளை திட்டியும் அங்கு எழுதப்பட்டிருக்கிறதை எண்ணி சிறு வயதில் ரொம்ப வருஷம் மனதுக்குள் வியந்ததுண்டு.

மாவு மில் ஓனர் எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவருடனும் நன்கு பழுகுபவராக இருந்தார். கடவுளை வணங்காதோர் மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா என்று ஆச்சரியம் + கேள்விகளும் கூட அந்த இளமை காலத்தில் !

இவரை சிறு வயதில் பார்த்து பார்த்து மனதில் பதிந்ததாலோ என்னவோ மாவு மில் காரர்கள் நமக்கு இயல்பாகவே நெருக்கமாகி விடுகிறார்கள்.

மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு மாவு மில்காரருக்கு காலில் விபத்தாகி காலுக்குள் பிளேட் வைத்தனர். அது சரியாக வைக்காமல் மிக பெரும் பிரச்சனை ஆகி மீண்டும் ஆப்பரேஷன் செய்ய வேண்டிய சூழல். எங்கள் பழைய அலுவலக நண்பர்கள் மூலம் ஆப்பரேஷனுக்கு பணம் பெற்று தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவரும் பையனின் விடுமுறையில் தான் ஆப்பரேஷன் செய்ய வேண்டும்; அப்போது உங்களை தொடர்பு கொள்கிறேன் என்று கூறியிருந்தார். சமீபத்தில் பார்த்தபோது அவருக்கு ஆப்பரேஷன் ஆகி விட்டிருந்தது. " உங்களை எதுக்கு தொந்தரவு பண்றது என கேட்கலை சார்" என்றார் தயக்கத்தோடு !

இந்த பேட்டி எடுத்தது அவரிடம் அல்ல. (அவரிடம் பேசினால் தவறாய் செய்த ஆப்பரேஷன் பற்றி நிறையவே நாங்கள் பேசுவது போகும் என்பதால்) இந்த பேட்டி இன்னொரு மாவு மில் காரரிடம் !
**********
உங்கள் பேர், ஊர் பற்றி சொல்ல முடியுமா? எத்தனை வருஷமா இந்த தொழில் செய்றீங்க?

என் பேர் ஜெயராமன். சொந்த ஊரு மதுரை பக்கம். நான் ஒரு விவசாயி தான். இப்போல்லாம் விவசாயம் லாபமா செய்ய முடியாது. கைக்காசு தான் வீணாகும்.

ஆறு வருஷமா இந்த மில் வேலையில் இருக்கேன். நாலு வருஷம் ஒரு மில்லில் வேலை பார்த்தேன். அப்புறம் இந்த மில் நடத்திய ஒருத்தர் முடியாம விட்டுட்டு கிளம்பினார். அவரிடம் இருந்து நான் வாங்கி இப்போ ரெண்டு வருஷமா வச்சிருக்கேன்.


இதுக்கு முன்னாடி விவசாயின்னு சொல்றீங்க. இந்த தொழிலுக்கு முன் அனுபவம் வேண்டாமா?

இது ரொம்ப எளிமையான வேலை தான். பெருசா முன் அனுபவம் தேவை இல்லை. நான் நாலு வருஷம் ஒரு இடத்தில வேலை பார்த்தேன் இல்லையா? அங்கே எல்லா விஷயமும் கத்து கிட்டேன்

உங்க குடும்பத்தை பத்தி ....

எங்க அப்பா ஒரு விவசாயி. எங்க பரம்பரையில் இப்படி வந்தது நான் தான் முதல் ஆள். எனக்கு ஒரே பையன். ஒன்பதாவது வரை தான் படிச்சான். இப்போ அவனையும் இதே மில் வேலைக்கு பழக்கிக்கிட்டு இருக்கேன். ஊரில் தான் இருந்தான். இப்போ தான் இங்கே வர வச்சிருக்கேன். மில்லில் இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் நம்ம வீடு.

கடை எப்ப திறந்து எப்ப மூடுவீங்க? என்னிக்கு லீவு?

கடை காலை ஏழு மணிக்கு திறப்பேன். மாலை ஏழு வரைக்கும் திறந்திருப்பேன். ஆறு மணிக்கு மேலே கூட்டம் கம்மியா தான் இருக்கும். ஆறரை வரை ஆள் இல்லைன்னா பூட்டிட்டு கிளம்பிடுவேன்

ஏழு நாளும் கடை இருக்கும். சொந்த தொழிலில் எப்படி லீவு போட முடியும்? உடம்பு முடியலைன்னு திறக்காம இருந்தா உண்டு. பண்டிகை நாள்னா மக்கள் வர மாட்டாங்கன்னு திறக்க மாட்டேன்.

மாவு அறைக்கும் போது எழும் நெடி நிறைய பேருக்கு ஒத்துக்காது இல்லை?

ஆமா. நீங்க கூட எப்பவும் மாவு அறைக்க வரும்போது பாத்திரத்தை கொடுத்துட்டு எதிர் கடையில் போய் நின்னுக்குவீங்க. அறைச்சு முடிச்சு சைகையில் கூப்பிட்டா தான் வருவீங்க. அது மாதிரி சில பேருக்கு இந்த நெடி ஒத்துக்காது.

ஆனா சில பேருக்கு இந்த நெடி ஒண்ணும் செய்யாது நானெல்லாம் பல வருஷமா இருக்கேனே ! என்னை எதுவும் செய்வதில்லை

இப்படி ஒரு நெடியில் தொடர்ந்து நிற்பது எதுவும் கெடுதல் பண்ணுமா?ஆஸ்துமா மாதிரி வியாதி எதுவும் வருமா?

என்ன இப்புடி கேக்குறீங்க ! ஒவ்வொருத்தர் எவ்வளவு நல்லதெல்லாம் அரைக்குறாங்க ! மிளகாய், மஞ்சள் , நல்ல வேர் மாதிரி பலதும் அரைக்கிறாங்க. அது எல்லாமே சுவாசிக்கிறது ரொம்ப நல்லது. இது ஒத்துகிச்சுன்னா எந்த கெடுதலும் அப்புறம் பண்ணாது. சொல்ல போனா எங்களுக்கு எந்த வியாதியும் சாமானியத்தில் வராது !

என்னென்ன மிஷின் இருக்கு? அரைப்பதில் என்ன முக்கிய விஷயம் இருக்கு?

நம்ம கிட்டே மூணு மிஷின் இருக்கு. ஒன்று மிளகாய், சீயக்காய் மாதிரி விஷயங்கள் அரைப்பது; இன்னொன்னு அரிசி அரைப்பது. மூணாவது கோதுமை அரைப்பது.

எத்தனை முறை அரைக்கிறது என்பது நாம வச்சிருக்க மெஷினையும், அதன் பேசையும் (Base ) பொறுத்தது. உதாரணமா கோதுமை போடுறீங்கன்னா என்னோட மெஷின் எல்லாம் மூணு தடவை அரைச்சா போதும். நைசா மைதா மாவு மாதிரி வந்துடும்.

மெஷின் ரிப்பேர் ஆகுமா? எப்படி மெயிண்டயின் பண்ணனும்?

மெஷினுக்கு தினம் ஆயில் போடணும். அங்கே பாருங்க ஆயில் போட்டுருக்கேன் !

அதுக்கு மீறி அப்பப்போ ரிப்பேர் ஆகும். அதை ரிப்பேர் செய்ய ஆளுங்க இருக்காங்க. போன் செஞ்சா எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ வந்துடுவாங்க. வியாபாரம் பாதிக்க கூடாது இல்லை? ஒரு தடவை ரிப்பேர் ஆனா குறைஞ்சது முந்நூறு ரூபா செலவு வைக்கும்

கரண்ட் பில் எல்லாம் எப்புடி ஆகுது?

அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? முன்னாடி மூவாயிரம் பில் ஆச்சு. இப்போ ஐயாயிரம் பில் ஆகுது. ரொம்ப ஏத்திட்டாங்க.

நடுவிலே கரண்ட் பிரச்சனை இருக்கும் போது ஈ.பி காரங்க ரொம்ப கெடுபிடி பண்ணாங்க. செவ்வாய் கிழமை கண்டிப்பா மெஷின் ஓட்ட கூடாது. சாயந்தரம் ஆறு மணிக்கு மேலே மெஷின் ஓட கூடாது அப்படி எல்லாம் கெடுபிடி இருந்தது. இப்போ அதெல்லாம் இல்லை. செவ்வாய் கிழமையும் கடை திறக்கிறோம்

கரண்ட் பில் ஏறிடுச்சே. அப்போ நீங்களே அரைக்குற கூலி ஏத்திடுவீங்களா?

இல்லை. கூலி நாங்களா ஏத்த முடியாது. எங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்கு. அது சொல்ற கூலி தான் நாங்க வாங்கணும். அதுக்கு கூடவோ குறையவோ எந்த கடையிலும் வாங்க மாட்டாங்க. சங்கம் வருஷத்துக்கு ஒரு முறை தான் கூலி ஏத்துனா ஏத்தும். எல்லா வருஷமும் ஏத்தும்னும் சொல்ல முடியாது. இப்போ கோதுமை ஒரு கிலோ அஞ்சு ரூபான்னா, அதை ஆறு ரூபான்னு ஆக்கும். அவங்க சொன்னா தான் நாங்க ஏத்த முடியும்

இப்போல்லாம் பில்சுபுரி அது இதுன்னு ரெடி மேட் மாவு வந்துடுதே. இன்னமும் மக்கள் மாவு மில்லில் அதிகம் அரைக்குறாங்களா?

நீங்களே ரெண்டு வருஷமா நம்ம கடைக்கு வர்றீங்க இல்ல ? ஏன் வர்றீங்க? கடையில விக்குற கோதுமை மாவுல்லாம் கலப்படம் சார். நீங்களே வாங்கி அரைச்சுக்குற மாதிரி வராது. அப்புறம் ஏழைங்க ரேஷன் கடையில் கோதுமை வாங்குது. அதுங்களும் அரைச்சு தானே சாப்பிடணும்?

இப்படி ஒரு மாவு மிஷின் வைக்க எவ்ளோ முதலீடு தேவைப்படும்?

மெஷின் வாங்க, கடையை மாத்தி விட எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லட்சத்துக்கு மேலே முதல் போட்டேன். இப்போ வட்டி கட்டவே முழி பிதுங்குது. ஏன்டா இந்த தொழிலுக்கு வந்தோம்னு இருக்கு. வட்டி கட்டி, வீட்டு செலவும் பாத்தா கையில் ஒண்ணும் மிஞ்சலை

**
சிறிது நேரம் எங்களுக்குள் அமைதி. உங்களை ஒரு படம் எடுத்துக்கலாமா என கேட்டு விட்டு படம் எடுக்க, " எதுக்கு எடுக்குறீங்க? 'என கேட்டு தெரிந்து கொண்டார். " எதோ பேங்குக்கு சொல்லி லோன் குடுக்க சொன்னாலும் நல்லாருக்கும். நீங்க இதை எழுதுறதில் எனக்கு என்ன பிரயோஜனம் ?" என்று அவர் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்ட வரிகள் இதை எழுதும் போதும் மனதை அறுக்கிறது !

*****
அதீதம் செப்டம்பர் 14, 2012 இதழில் வெளியான கட்டுரை

26 comments:

  1. தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. சுயதொழிலுக்கு வங்கியில் கடனுதவி கிடைக்குமே.... !

    ReplyDelete
  2. \\"மெஷின் வாங்க, கடையை மாத்தி விட எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லட்சத்துக்கு மேலே முதல் போட்டேன். இப்போ வட்டி கட்டவே முழி பிதுங்குது."//

    ஏழை என்றாலே பணத்துக்கு கஷ்டம் தான்........

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. நெகிழ வைத்த பதிவு...

    மானியத்துடன் கூடிய லோன் அதிகம் கிடைக்குமே... ஐந்து வருடங்கள் கூடி கட்டலாமே...

    முயற்சித்து பாருங்களேன்...

    ReplyDelete
  4. பல களங்களில் வாழும் வித்தியாசமான வாழக்கை முறைகளை நீங்கள் சொல்லும் விதம் அருமை. மனதைத் தொட்டது.

    ReplyDelete
  5. வெகுஜன இதழ்கள் செய்யத் தவறிய பணிகளை தொடர்ச்சியாக செய்கிறீர்கள் மோகன். வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. அண்ணே, பேட்டி குடுத்தவரின் சொல்வழக்கு மாறாமல் அப்படியே எழுதியிருக்கிறது அருமை.

    இந்த மாதிரி மனசில் பட்டதை வெள்ளந்தியாகச் சொல்லும் மனிதர்களின் பேட்டியைத் தொடருங்கள்.
    மேலே யுவ சொன்ன மாதிரி வெகுஜன பத்திரிக்கைகள் இதுமாதிரியான செய்திகள்+பேட்டிகள் போடாதது வருத்தமே...

    (ஒரு வேளை மக்களும் கஷ்டப்படுறவங்க பேட்டியைக் படிக்க விரும்பலையோ????)

    ReplyDelete
  7. நெகிழ்ச்சியான பதிவு. இதுபோன்ற பேட்டிகளை நீங்கள் பத்திரிகைக்கும் அனுப்பலாம் ..

    ReplyDelete
  8. நல்ல பதிவு சார்.. நீங்க பேட்டி காண்பதில் ரபிபெர்நாட் மிஞ்சிட்டிங்க..
    ஏழ்மை இல்லாத இடமே இல்லை (கடவுள் போல)...

    ReplyDelete
  9. உண்மைதான் சார் தனித்தொழில் இப்போது எல்லாம் அதிக சிக்கல்! நல்ல பேட்டி !

    ReplyDelete
  10. மாவு மில்காரர் பேட்டி அருமையாக இருந்தது, நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின் பிரச்சினைகளை பற்றி நாம் யோசிப்பதில்லை.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  11. பேட்டியின் இறுதியில் அவர் கூறிய வார்த்தைகள் நெகிழ வைத்தது .

    ReplyDelete
  12. நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  13. பிரியா: நன்றிங்க

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. தொழிற்களம்: மிக நன்றி. சில வங்கிகளில் முயற்சித்து கிடைக்காமல் தான் சொல்கிறார் அவர். இதற்கு தேவையான பின்புல பேப்பர்கள் அவரிடம் இருகாது என்று நினைக்கிறேன்

    ReplyDelete

  16. நன்றி பாலகணேஷ்

    ReplyDelete
  17. லக்கி: உங்கள் வார்த்தைகள் மகிழ்ச்சி தந்தது நன்றி

    ReplyDelete

  18. ஜெய் : நான் சிறுவனாய் இருந்த போது விகடனில் இது போன்று கான்செப்ட் பேட்டிகள் வந்தது. இன்னும் நினைவிருக்கு அது தான் இதை எழுத துவக்கமே

    ReplyDelete

  19. ஷைலஜா: நன்றி நீங்களும் கிளி போட்டோ profile-ல் வச்சிருக்கீங்க !!

    ReplyDelete
  20. நன்றி சமீரா

    ReplyDelete
  21. நன்றி தனிமரம்

    ReplyDelete
  22. அசீம் பாஷா: நன்றி

    ReplyDelete

  23. உண்மை தான் ஏஞ்சலின் நன்றி

    ReplyDelete
  24. Good interview..

    Your interview section is good.. and innovative. (to publish in blogs)

    btw.. I heard from my brother once, that better not to ask "எப்ப மூடுவீங்க?". That could cud be asked in other ways like..(1) Yeppo kadai kattuveenga..? (just sentimental touch)

    ReplyDelete
  25. பல தகவல்களை (உண்மைகளை) அறிந்து கொள்ள முடிந்தது... நன்றி...

    ReplyDelete
  26. அருமையான, பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...