Sunday, September 23, 2012

என் விகடனில் எங்க ஊர் நீடாமங்கலம் !

ன் விகடனில் எங்கள் ஊர் பற்றி வந்திருப்பதாக நண்பன் தேவா லிங்க் அனுப்பியதும் சென்று பார்த்து மிக, மிக மகிழ்ந்தேன். ஒளிப்பதிவாளர் கோபிநாத் பற்றி ஏற்கனவே இங்கு ஒரு பதிவில் சொல்லியிருக்கேன்.


பொதுவாய் எந்த பதிவும் காப்பி பேஸ்ட் செய்யாதவன் இந்த முறை விகடனுக்கு நன்றி போட்டு விட்டு அப்படியே போட காரணம், பதிவு எங்கள் ஊரை பற்றியது. நண்பர்களில் பலரும் நீடாமங்கலம் வந்து, எங்கள் வீட்டில் தங்கி, கடையில் என்னோடு அமர்ந்து அரட்டை அடித்தவர்கள். அவர்களில் நிறைய பேர் வீடுதிரும்பல் வாசிக்கிறார்கள். கீழே உள்ள படங்களில் உள்ள கமன்ட் மட்டுமே நான் போட்டது !
*********

காவிரியு்ம் அம்சவள்ளியும் என் முக்கியமான தோழிகள்!''

தமிழ்த் திரை உலகில் கமர்ஷியல் சினிமாக்களின் 'கில்லி’ ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத், தன்னுடைய சொந்த ஊரான நீடாமங்கலம் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.''இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு புண்ணிய பூமி நீடாமங்கலம். ஏனெனில், வடக்கே வெண்ணாறு, தெற்கே கோரையாறு, மேற்கே பாமணியாறு என ஊரின் மூன்று பக்கமும் மூன்று அழகான ஆற்றங்கரைகள் அமைந்து இருக்கும். அந்த மூன்று ஆறுகளும் பிரியும் இடம் 'மூணார் தலைப்பு’ என வழங்கப்பட்டது. சங்க காலத்தில் இந்த ஊர் 'நீடூர்’ என்றும் 'நீராடும் மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. 'நீராடும் மங்கலம்’ என்பதே காலப்போக்கில் மருவி 'நீடாமங்கலம்’ என நிலைத்துவிட்டது.

இது ஒரு புண்ணியஸ்தலமும்கூட. இங்கே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலும் சந்தான ராமசாமி கோயிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. கி.பி 18-ம் நூற்றாண்டில் தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டபோது, அரசன் சிம்கானின் மனைவி யமுனாம்பாளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவள் இங்கேவந்து சந்தான ராமசாமி கோயில் குளத்தில் குளித்துப் புண்ணியம் அடைந்து, குழந்தை வரம் பெற்றாள். அன்று முதல் சந்தான ராமசாமி கோயில் குழந்தை இல்லாதவர்களின் குறைதீர்க்கும் கோயிலாக இருந்துவருகிறது. அப்போதைய காலகட்டத்தில் நீடாமங்கலத்துக்கு 'யமுனாம்பாள்புரம்’ என்றும் ஒரு பெயர் இருந்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் கோபிநாத் வீடு. இதே தெருவில் 15 வீடு தள்ளி எங்க வீடு

நீடாமங்கலத்தில் எங்கள் குடும்பம் பாரம்பரியப் பெருமையைக்கொண்டது. பரம்பரை பரம்பரையாக நாங்கள் மளிகைக் கடை நடத்திவருபவர்கள். 'எஸ்.கே.வி.ஜி.எஸ். அண்ட் சன்ஸ் மளிகை’ என்றால் நீடாமங்கலத்துக்காரர்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அந்த மளிகைக் கடையை என் தம்பி நடத்திவருகிறார். அது மட்டும் இல்லாமல், பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து நெல் சாகுபடிச் செய்த குடும்பம் எங்களுடையது.எனது அண்ணன்கள், அக்கா, ஒளிப்பதிவாளர் கோபிநாத் படித்த LVS பள்ளி

நீடாமங்கலம் எல்.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில்தான் நான் என்னுடைய ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அப்போது நான் மிகவும் சேட்டைக்காரனாக இருப்பேன். ஆசிரியர்களிடம் அடிவாங்காத நாளே இல்லை. நானே குச்சி ஒடித்துக் கொண்டுவந்து கொடுத்து அடி வாங்குவேன். அந்தப் பள்ளியில் அடிபட்டுக் கற்றுக்கொண்ட நேரந்தவறாமை, சுய ஒழுக்கம் போன்ற பல நல்ல பழக்கங்களை இன்றும் என் வாழ்வில் கடைப்பிடித்துவருகிறேன். என் பள்ளியையும் ஆசிரியர்கள் ராஜகோபால், பழனிவேல் போன்றவர்களையும் என்னால் என்றுமே மறக்கமுடியாது.

பெரியார் சிலையும் எங்க மண்ணின் மக்களும்

ஆறாவது படிக்கும்போது அடிக்கடி தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். அப்பாவுக்குத் தெரியாமல்தான் செல்வேன். ஆனால், 'நடுத்தம்பி படம் பார்க்க வந்திருக்கு’ என அப்பாவிடம் யாராவது தகவல் சொல்லிவிடுவார்கள். படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வீட்டில் இருந்து ஆட்கள் வந்து என்னைக் கூட்டிப்போய்விடுவார்கள். போனதும் பெல்டாலேயே பின்னி எடுப்பார் என் அப்பா. ஆனாலும் மறுநாள் எப்படியாவது அந்தப் படத்தை பார்த்துவிடுவேன். அந்தவகையில் நான் படம் பார்த்த எங்கள் ஊர் தியேட்டர்களான காவிரியும் அம்சவள்ளியும் எனக்கு முக்கியமான தோழிகள். நான் ஒளிப்பதிவு செய்த முதல் படமான 'தில்’ ஒரு மாதம் காவிரி திரையரங்கில் ஓடியது. நாம் படம் பார்த்து வளர்ந்த திரையரங்கில் நாம் எடுத்தத் திரைப்படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். ஆனால், அது முடியாமலே போய்விட்டது. நாளடைவில் அந்தத் திரையரங்கு மூடப்பட்டுவிட்டதில் எனக்கு நிறையவே வருத்தம் உண்டு.  

பத்தாவது படிக்கும்போதே என் வாழ்க்கை சினிமாதான், அதிலும் குறிப்பாக ஒளிப்பதிவுத் துறைதான் என்பதை முடிவு செய்துவிட்டதால் அதன்பிறகு நான் சரியாகப் படிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் பார்டரில் பாஸ் செய்துவிட்டு தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேரத் தயாரானேன். ஆனால், என்னை வலுக்கட்டாயமாக திருச்சி ஜோசப் கல்லூரியில் சேர்த்தனர். அதன்பிறகு மீண்டும் இன்ஸ்டிட்யூட்டில் சேர, ஆரம்பக்கட்டத் தேர்வுகள் முடித்து மறுநாள் சேர்க்கைக்காகத் தயாரான நிலையில் அம்மாவிடம் இருந்து போன் வந்தது, அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என. உடனே ஊருக்குக் கிளம்பி வந்தவன்தான்... ஐந்து ஆண்டுகள் தீவிரமாக விவசாயம் பார்த்துக்கொண்டே அப்பாவையும் கவனித்துக்கொண்டேன். அதன்பிறகு நேரடியாகவே சினிமாவில் நுழைந்தேன்
எங்க ஊரில் டிராபிக் ஜாம் ! ஆட்டோ எல்லாம் எங்க ஊரில் ஓடுது பாருங்க  !

என் பால்ய கால நண்பர்களில் குமரன், மோகன், நடராஜா, சிவநேசன், குபேந்திரன் இவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள். அதேபோல், கவிஞர் ரவிசுப்ரமணியத்தை அடிக்கடி கும்பகோணத்துக்குச் சென்று சந்தித்து இலக்கியம் பற்றி பேசிவருவேன். என் இலக்கிய ஆர்வத்தைச் செம்மைப்படுத்தியவர் அவர். அவரோடு சேர்ந்து இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வேன். பொதுவாகவே, மிகவும் கண்டிப்பான என் அப்பா இது போன்ற விஷயங்களுக்கு எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்.

இந்த ரயில்வே ஸ்டேஷனில் எங்கள் நண்பர் குழு செய்த வாலுத்தனங்கள் கொஞ்ச நஞ்சமா? 

நீடாமங்கலத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் ரயில்வே ஸ்டேஷன். சுற்றி இருக்கும் தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற முக்கிய ஊர்களுக்கு இதுதான் மையப் புள்ளி. இங்கு இருந்து அந்த ஊர்களுக்கு எளிதாக ரயிலிலோ, பேருந்திலோ சென்றுவிடலாம்.

என்னைப் பொறுத்தவரை நீடாமங்கலம் ஒரு ராசியான ஊர். இங்கு இருந்து புறப்பட்டவர்கள் யாருமே சோடை போனது இல்லை. இசைக் கலைஞர்கள் 'தவில்’ மீனாட்சி சுந்தரம், நீலகண்ட சாஸ்திரிகள், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி இப்படி எல்லோருமே நீடாமங்கலம் தந்த பரிசுகள். அந்த வகையில் எனக்கும் நீடாமங்கலத்துக்கும் உறவு இருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் பெருமைதான்!''

- உ.அருண்குமார்

படங்கள்: கே.குணசீலன்
***********
நன்றி : என் விகடன் -திருச்சி பதிப்பு
************
தொடர்புடைய பதிவு :


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

28 comments:

 1. என் சித்தி பவானி டீச்சர் வேலைப் பார்த்த பள்ளி இலக்குமி விலாஸ நடுநிலைப் பள்ளி.

  ReplyDelete
 2. \\உ.அருண்குமார்\\ அப்ப அது உங்க ஊர் இல்லையா மோகன்...........!!

  ReplyDelete
 3. தாஸ்: விகடனில் அதை எழுதிய நிருபர் பெயர் உ. அருண்குமார். அதை அப்படியே போட்டிருக்கேன். எங்க ஊர் நீடாமங்கலம் தான் !

  ReplyDelete
 4. நீடாமங்கலம் பற்றிய செய்திகள் அருமை.

  ReplyDelete
 5. நானும் முன்னரே விகடன் இணையதளத்தில் படித்தேன் அண்ணே .. நன்றி

  ReplyDelete
 6. உங்கள் ஊரைப்பற்ரி நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி மோகன்குமார்.

  ReplyDelete
 7. தனது ஊர் பற்றி எங்கேனும் கட்டுரை வந்தால் ரொம்பவே சந்தோஷமா இருக்கும் :-)

  கட்டுரை வாசித்தேன். அருமை!

  நன்றி சகோ

  ReplyDelete
 8. அருமை.
  நன்றி.

  ReplyDelete
 9. //நானே குச்சி ஒடித்துக் கொண்டுவந்து கொடுத்து அடி வாங்குவேன்.
  சொன்னவரின் நகைச்சுவை உணர்வை ரசித்தேன்.

  படங்கள் அருமை.
  ஒரு முறை நீடாமங்கலம் போய் வந்துறணும்.

  ReplyDelete
 10. ஊர் நினைவுகளில் திளைப்பது எல்லோருக்கும் பிடித்தமானது. தொடர்புடைய பதிவும் வாசித்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. நாம் பிறந்த ஊரும் ஒடி விளையாடிய இடங்களும் எப்போதும் மறக்க முடியாதவைகளாகும். உங்களுடன் நாங்களும் நீடாமங்கலம் போய் வந்தது போலிருந்தது. நன்றி.

  ReplyDelete
 12. சொந்த ஊர்ப்பாசம்! நல்ல பகிர்வு. கோபிநாத் சொல்லியிருக்கும் நண்பர்கள் பட்டியலில் இருக்கும் மோகன் நீங்கள்தானா மோகன்?

  ReplyDelete
 13. நாய்க்கடி நீடாமங்கலம்!
  எவ்வளவு பேர் இந்த "நாய்க்கடி நீடாமங்கலம் வைத்தியத்தை" நம்பி உயிர் இழந்திருக்கிரர்கள்! ஹ்ம்...

  ReplyDelete
 14. மோகன் சார் நம் ஊரை பற்றி அதுவும் விகடனில் என்றதும் மிகுந்த சந்தோசமாக உள்ளது கோபிநாத் ஊர் நீடாமங்கலம் என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 15. அப்படியா RVS? நன்றி

  ReplyDelete
 16. மகிழ்ச்சி ஸாதிகா

  ReplyDelete
 17. ஆமினா: ஆம். நம் ஊர் பற்றி படிக்க ரொம்ப மகிழ்ச்சி தான்

  ReplyDelete
 18. நன்றி ரத்னவேல் ஐயா

  ReplyDelete
 19. சொல்லுங்க அப்பாதுரை போயிட்டு வந்துடலாம்

  ReplyDelete

 20. நன்றி ராமலட்சுமி

  ReplyDelete

 21. அசீம் பாஷா: நன்றிங்க

  ReplyDelete

 22. ஸ்ரீராம்: இல்லை. அந்த மோகன் நான் இல்லை

  ReplyDelete

 23. நம்பள்கி: உங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 24. This comment has been removed by the author.

  ReplyDelete
 25. சரவணன்: நன்றி நண்பா

  ReplyDelete
 26. நீடாமங்கலம் உங்களூரா மோகன். பாட்டு ரத்ததில் ஊறியிருக்கும் என்பார்களே.
  படிக்க மிகவும் பெருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 27. படித்தது தான் என்றாலும், பலர் அறிய பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...