Monday, August 13, 2012

கிட்னி பழுதான பெண்ணை, பிழைக்கவைத்த தந்தை - பேட்டி

ந்த பெரியவர் எங்கள் வீட்டுக்கு பிளம்பிங் வேலைகள் ஏதாவது செய்பவர். அடிக்கடி வந்து " வேலை ஏதாவது இருக்கா சார்?" என கேட்டுவிட்டு, இருந்தால் செய்து விட்டு போவார். பாதி நேரம் மட்டுமே வேலை இருக்கும். எதுவும் இல்லா விடினும் சுற்றி பார்த்து விட்டு ஏதேனும் சின்ன சின்ன யோசனைகள் சொல்லி விட்டு போவார்.

பிளம்பிங் வேலை மட்டுமல்லாது மாடி டேன்க் சுத்தம் செய்வது உட்பட எந்த வேலையையும் இவர் மாட்டேன் என சொல்லாமல் செய்வார். இந்த வயதில் Sump-ல் இறங்கி அதனை சுத்தம் செய்கிறாரே என ஆச்சரியமாய் இருக்கும் !

முத்து என்கிற அந்த பெரியவருடன் ஒரு முறை நிதானமாய்  பேசும் சந்தர்ப்பம் அமைந்தது. அவர் பேசிய விஷயம் மனதை நெகிழ்த்தியது. அவரது வார்த்தைகளில் தொடருவோம்


"எனக்கு மூணு பசங்க. ஒரு பொண்ணு. பேரு லட்சுமி. இருபது வயசாகும் போது பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். நாலு மாசம் கழிச்சு கர்ப்பம் ஆச்சு. அப்புறம் ரொம்ப உடம்பு முடியாம போச்சு. டெஸ்ட் பண்ணி பார்த்ததில் பொண்ணுக்கு ரெண்டு கிட்னியும் வேலை செய்யலை என தெரிஞ்சுது. இந்த நிலைமையில் அது வயித்தில் குழந்தை இருந்தா ரெண்டு உயிருக்கும் ஆபத்துன்னு அபார்ஷன் பண்ண சொல்லிட்டாங்க. வேற வழி இல்லை. பண்ணிட்டோம்.

மாப்பிள்ளை " நான் அந்த அளவு சம்பாதிக்கலை. இவளுக்கு என்னால

வைத்திய செலவு பண்ண முடியாது"ன்னு எங்க வீட்டுக்கு அனுப்பிட்டார். அப்புறம் அவரு வேற கல்யாணம் பண்ணிகிட்டார்.

ஒரு நேரத்தில் லட்சுமிக்கு மன நிலை பாதிச்சுடுச்சு; என்னை மாமா அப்படிம்பா. அம்மாவை அத்தைம்பா.

ஒரு நாள் நடு ராத்திரி லட்சுமிக்கு ரொம்ப உடம்பு முடியாம போச்சு. நங்கநல்லூர் ஹரிஹரன் டாக்டர் கிட்டே தூக்கிட்டு ஓடினேன். அவர் பார்த்துட்டு காளியப்பா ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போ. அங்கே தான் இதுக்கு பார்க்க முடியும் அப்படின்னார். லட்சுமி ரொம்ப முடியாம கஷ்டப்பட்டா. மயிலாப்பூர் காளியப்பா ஆஸ்பிட்டல் எடுத்துட்டு ஓடினோம். லட்சுமியை பார்த்துட்டு உடனே டயாலிசிஸ் பண்ணனும்; ஐயாயிரம் ஆகும்னார் டாக்டர். கையில அவ்ளோ பணம் இல்லை.
"நாளைக்கு காலையில் பணம் தர்றேன். இன்னிக்கு என்ன செய்யணுமோ செஞ்சிடுங்கன்னேன். பரவால்லைன்னு டயாலிசஸ் செஞ்சார். அன்னிக்கு நான் சொன்னதை நம்பி அவர் செய்யலைன்னா, அன்னிக்கே ஏதாவது ஆகியிருக்கும். அவர் செஞ்சதை இன்னிக்கும் மறக்க மாட்டேன்.

மறுநாள் நான் முன்னாடி வேலை பார்த்த முதலாளி கிட்டே போய் சொன்னேன். அவரு மார்வாடி. பெரிய மனசு பண்ணி ஆஸ்பத்திரி செலவுக்கு தொகை குடுத்து ஹெல்ப் பண்ணார். நேரா செக் (Cheque) ஆஸ்பத்திரி பேருக்கு எழுதி குடுத்துட்டார்.

டாக்டர் தொடர்ந்து பாத்து டயாலிசிஸ் குடுத்து கிரீயேட்டின் அளவை குறைச்சுட்டார். யாராவது கிட்னி குடுத்தா நல்லாருக்கும்னு பாத்தோம். லட்சுமி அம்மாவும் லட்சுமியும் வேற வேற ரத்த குருப். ஆனாலும் லட்சுமிக்கு அவங்க அம்மா கிட்னி தரலாம்; ஒத்துக்கும்னார் டாக்டர்.

சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுன்னார். நான் எங்கே போவேன். ஏற்கனவே இருந்த ஒரு நிலத்தை வித்து தான் ரொம்ப நாள் டிரீட்மென்ட் குடுத்தேன். இனிமே எங்கே போறது. ஆனாலும் மனசு விடலை; எம்பொண்ணை எப்படியும் காப்பாத்தனும்னு மனசு சொல்லுச்சு எல்லாரும் "ஏண்டா இந்த பொண்ணுக்கு போய் செலவு பண்றே"ன்னு திட்டினாங்க

காளியப்பா ஆஸ்பத்திரி வெளியில் ஒரு நாள் டீ குடிக்கும் போது ஒருத்தர் என்னை பத்தி விசாரிச்சார். " பணம் இல்லாம ஆபரேஷன் பண்ண முடியாம இருக்கேன்" னு சொன்னேன். அவர் ஒரு அம்மா பத்தி சொல்லி அவங்க கிட்டே போய் கேளு; உதவி பண்ணுவாங்கன்னு அவங்க அட்ரஸ் குடுத்தார் 

அந்தம்மா பேரு மாலதி வெங்கடேசன். திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகே வீடு இருந்தது ; நன்மங்கலத்தில் எங்க வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பி திருவான்மியூர்க்கு காலை ஆறு மணிக்கு போயிட்டேன். மாலதியம்மா வீட்டுக்கு போய் விஷயம் சொன்னேன்.

எல்லாம் கேட்டுட்டு காப்பி குடி முதல்லேன்னு காப்பி குடுத்தாங்க. அப்புறம் " கொஞ்ச நேரம் பேசிட்டுருந்தோம் . "சரி கிளம்பு" ன்னதும் நான் அவங்க காலில் விழுந்து "அம்மா எம்பொண்ணை காப்பாத்துங்க ன்னு கதறி அழுதுட்டேன்.

சரி சரி நீ போ. நான் வர்றேன்; பாத்துக்குறேன்னாங்க; சரின்னு வந்துட்டேன். ரெண்டு மாசம் போச்சு. அவங்க வரவே இல்லை. ஒரு நாள் போர்டில் வர்ற புதன் கிழமை லட்சுமிக்கு ஆப்பரேஷன்னு எழுதி போட்டுருக்கு. எந்த லட்சுமின்னா உன் மகள் தான்னாங்க. மாலதின்னு ஒரு அம்மா பணம் கட்டிருக்காங்கன்னாங்க

மாலதி அம்மாவுக்கு போன் செய்தால் "உங்க பொண்ணை வந்து பார்த்தேன். பணம் கட்டிட்டேன். ஆபரேஷன், டாக்டர் Fees என்னுது அதன் பின் நீதான் பாத்துக்கணும். ஆபரேஷன் அன்னிக்கு இருக்க மாட்டேன். நான் வெளிநாடு போறேன்னாங்க. ஆனா, அந்த பயணத்தை கேன்சல் பண்ணிட்டு அன்னிக்கு ஆஸ்பத்திரி வந்து ஆபரேஷன் அப்போ கூட இருந்தாங்க

ஆப்பரேஷன் நல்ல படியா முடிஞ்சுது. வீட்டுக்கு கூட்டி வந்தோம். பதினோரு வருஷம் ஆச்சு. இன்னி வரைக்கும் நல்லா இருக்கா. தொடர்ந்து மாத்திரை வாங்கி தரணும். டாக்டருங்க சொன்ன படி நடந்துக்கணும். மாத்திரை மட்டும் மாசம் ஆறாயிரம் ஆகும். முன்னாடி அதை விட அதிகம் செலவாச்சு. இப்போ பாதியா குறைஞ்சிருக்கு.

நடுவில் இடைமறித்து " மாலதி மேடமை பாப்பீங்களா? இப்போ எப்படி இருக்காங்க? " என கேட்கிறேன்.

" நல்லா இருக்காங்க சார். நாலு பேருக்கு உதவி பண்றவங்க நல்லா இல்லாம எப்படி போவாங்க? " என கோபமாய் கேட்டு விட்டு தன் கதையை தொடர்கிறார்:

"மூணு ஆம்பளை பசங்க இருந்தும் ஒரு பயலும் அவளுக்கு ஒரு ரூபா கூட செலவு பண்ண மாட்டான். நான் தான் செலவு பண்ணனும். எனக்கு வயசு எழுபது ஆச்சு. இன்னமும் அவளுக்காக தான் உழைக்கிறேன்.

கிட்னி மாற்று ஆபரேஷன் பண்ணா எத்தனை வருஷம் அதிக பட்சம் இருப்பாங்க அப்படின்னு கேள்வி எல்லாருக்கும் இருக்கு. அமிஞ்சிகரையில் ஒரு வயசானவர் ஆப்பரேஷன் பண்ணி பன்னிரண்டு வருசத்துக்கு மேலே ஆச்சு நல்லா இருக்கார். இதோ என் பொண்ணும் அதே மாதிரி தான்.

எல்லாருக்கும் ஆபரேஷன் சக்சஸ் ஆவறதில்லை. பத்துக்கு ரெண்டு பேருக்கு தான் சக்சஸ் ஆகுதுன்னு நினைக்கிறேன்.

கடவுள் துணை இருக்கு. மாலதி மேடம் மாதிரி நல்ல மனுஷங்க இருக்காங்க. பொண்ணை காப்பாத்திட்டேன். மாத்திரைக்காக தொடர்ந்து நான் செலவு பண்றது பாத்து எம் பொண்ணு லட்சுமிக்கு கஷ்டமா இருக்கு. மாலதி மேடம் ஒரு ஹோம் வச்சி நடத்துறாங்க. அதில் போயி ஆயா மாதிரி வேலை பாத்துக்கிட்டு அவங்க கூடவே இருந்தணும்னு லட்சுமி நினைக்குது. அவங்க கிட்டே பேசி பாக்கணும்" தொடர்ந்து பேசி முடித்தார்.

உண்மையில் அவருடன் பேசும் வரை கிட்னி மாற்று ஆபரேஷன் ஆனவர்கள் நான்கைந்து வருடம் இருந்தால் பெரிது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் பத்து வருடத்துக்கு மேலும் நன்றாக வாழ்பவர்கள் உள்ளனர் என்கிற தகவல் நிறைய பேருக்கு தெரியாமலே உள்ளது !

பணம் இல்லா விடினும், விடா மனதுடன் தன் பெண்ணை சாவிடிமிருந்து மீட்டெடுத்த அவர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர் !

எழுபது வயதிலும் தன் பெண்ணுக்காக உழைக்கும் இவர் போல எத்தனையெத்தனை முத்துக்கள் நம்மிடையே இருக்கிறார்களோ !

*****
அதீதம் ஆகஸ்ட் 1 , 2012  இதழில் வெளியானது

38 comments:

  1. காலை வணக்கம்..
    நல்ல விஷயம் பகிர்ந்து கொண்டு இருக்கறீர்..வாழ்த்துகள்./

    ReplyDelete
  2. அப்புறம் நேத்து பிறந்த நாள் கொண்டாடி இருக்கீங்க..நமக்கு கேக் வரல .எப்படியாவது பார்சல் பண்ணிடுங்க..இல்ல பத்திரமா பிரிஜ்ல எடுத்து வைங்க..அடுத்த வாரம் வரைக்கும் தாங்கும் தானே...வந்து உங்க தோட்டத்திலே உட்கார்ந்து சாப்பிடறேன்..

    ReplyDelete
  3. அதிக துயரத்தில் சோர்ந்து போகாது
    தொடர் முயற்சியில் வென்று சாதிக்கிற
    இது போன்ற மனிதர்களைப் பற்றி அறிந்து கொள்ளுகையில்
    நமக்குள்ளும் நம்பிக்கை ஊற்றெடுக்கிறது
    அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கண்ணீர் வரவழைக்கும் பதிவு. வறுமையிலும் தன்னம்பிக்கை குறையாமல் தன் கடமையை செய்துள்ளார். அதுபோல, அவருக்கு உதவி செய்த மாலதி அம்மையாருக்கும் ஒரு நன்றி. இத்தகவர்கள் இருப்பதினால்தான் நம் நாட்டில் இன்னும் ஆங்காங்கே மழைபெய்கிறது.

    ReplyDelete
  5. மாலதி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    விடாமுயற்சி செஞ்ச பெரியவரை பாராட்டணும்.

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  6. மாலதி வெங்கடேசன், மார்வாடி முதலாளி போன்றவர்களைப் பற்றி அறிந்து நெகிழ்ச்சியடைந்தேன்.

    மாலதி வெங்கடேசன் அவர்களை சந்தித்து பேட்டி எடுத்து வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன். அவர்களைப் பற்றி அறிந்துக் கொள்ளும் ஆவலை இந்தப் பதிவு ஏற்படுத்திவிட்டது.

    லெட்சுமி தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  7. இன்று மக்கள் டிவி பார்த்தேன். அவசியம் படிக்க வேண்டிய புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  9. http://tankerfoundation.org/our-team.html

    Mrs, Malathi Venkatesan Who is a trustee for the above foundation.
    Hats off to you madam...

    ReplyDelete
  10. http://tankerfoundation.org/our-team.html

    Mrs, Malathi Venkatesan Who is a trustee for the above foundation.
    Hats off to you madam...

    ReplyDelete
  11. நல்லதொரு செய்தியை பகிர்ந்து கொண்டீர்கள்..

    ReplyDelete
  12. Anonymous11:33:00 AM

    மாலதி வெங்கடேசன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. பெரியவரின் விடா முயற்சியும் குறிப்பிடத்தக்க ஒன்று. நல்ல பகிர்வு...

    ReplyDelete
  13. நெகிழவைத்த அப்பா

    ReplyDelete
  14. மார்வாடி முதலாளி, மாலதி வெங்கடேசன் அவர்கள் மனிதம் செத்து விடவில்லை என்பதை நிரூபிக்கிற மனிதர்கள். இன்றைய செய்தித் தாளில் நான் படித்த ஒரு செய்தி, பெரம்பூர் செம்பியத்தில் நேற்று ஸ்ரீ ஜெயின் மருத்துவ நிவாரண சங்கம் நிறுவியுள்ள டயாலிசிஸ் சென்டரில் குறைந்த செலவில் - முன்னூறு ரூபாயில் - டயாலிசிஸ் செய்வதாகப் படித்தேன்.

    ReplyDelete
  15. பணம் பலபேரிடம் இருக்கலாம், ஆனால் உதவும் மனம் சில பேரிடமே இருக்கும் அதற்கு உதாரணம் மாலதி மேடம்!! நெகிழ்வாக இருந்தது படிக்கும் போது!! பெண்களின் வருமானம் போகுமேஎன்று திருமணம் செய்துவைக்காமல் இருக்கும் பெற்றோர்களும் உள்ளனர்.. பெற்ற பெண்ணிற்காக கடைசிவரை உழைக்கும் இவர் போல முத்துக்களும் உள்ளனர்...
    நீங்கள் கண்டு எடுத்த முத்தை எங்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete


  16. முதற்கண் தங்களுக்குப் பிறந்த நாள்
    வாழ்த்துக்கள்!
    தங்கள் பதிவுவைப் படித்தேன் இப்படியும் இன்னும் சில்ர் இருப்பதால்தான் மனிதநேயம், பாசம், பற்று எல்லாம் கொஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது!
    சா இராமாநுசம்

    ReplyDelete
  17. நல்ல பதிவு
    கிட்னி ஆப்ரேஷன் செய்தான் 10 வருடத்துக்கு மேல் இருக்கலாம் என்று தெரியபடுத்தியது இந்த பிராப்ளதால் மனம் உடைந்தவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்
    பெரியவர் இந்த வயதில் அலைந்து பெண்ணை காப்பற்றியது மிக ஆச்சரியம்

    ReplyDelete
  18. நல்ல பதிவு...

    பெரியவருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பகிர்வுக்கு நன்றி… (TM 11)

    ReplyDelete
  19. //பணம் இல்லா விடினும், விடா மனதுடன் தன் பெண்ணை சாவிடிமிருந்து மீட்டெடுத்த அவர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர் // தான் .

    ReplyDelete
  20. தன்னம்பிக்கை மனிதர்! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?

    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html

    ReplyDelete
  21. கோவை நேரம்: வாங்க. வாங்க இந்த தடவையாவது நேரில் சந்திப்போம்

    ReplyDelete
  22. ரமணி சார்: நன்றி

    ReplyDelete
  23. விருச்சிகன் : மிக மகிழ்ச்சி சார் நன்றி

    ReplyDelete
  24. நன்றி துளசி மேடம்

    ReplyDelete
  25. அமைதி அப்பா: சரியாக சொன்னீர்கள் நன்றி. மக்கள் டிவி நிகழ்ச்சி பார்த்தமைக்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  26. காஞ்சனா மேடம்: நன்றி

    ReplyDelete
  27. ஹேமந்த்: உங்கள் கமன்ட் மிக மிக சந்தோசம் தந்தது. டேங்கர் பவுண்டேஷன் பற்றி இவருக்கு சொல்ல தெரியலை. நீங்கள் சொல்லி தான் நானும் அந்த சுட்டி பார்த்தேன் மிக நன்றி

    ReplyDelete
  28. நன்றி மதுமதி தோழர்

    ReplyDelete
  29. நன்றி பாலஹனுமான்

    ReplyDelete
  30. சீனு: ஆம் என்னையும் அவர் நெகிழ வைத்தார்

    ReplyDelete
  31. சமீரா //
    பெண்களின் வருமானம் போகுமேஎன்று திருமணம் செய்துவைக்காமல் இருக்கும் பெற்றோர்களும் உள்ளனர்.. பெற்ற பெண்ணிற்காக கடைசிவரை உழைக்கும் இவர் போல முத்துக்களும் உள்ளனர்...//

    மிக சரியாக சொன்னீர்கள் நன்றி

    ReplyDelete
  32. ஸ்ரீராம்: இன்று பேப்பரில் படித்ததாக நீங்கள் சொன்னது பயனுள்ள செய்தி

    ReplyDelete
  33. ராமானுசம் ஐயா: தங்கள் வாழ்த்துக்கு மிக மகிழ்ச்சி

    ReplyDelete

  34. ஜலீலா கமில்: ஆம் கிட்னி மாற்று செய்தவர்கள் பல ஆண்டு வாழ்கிறார்கள் என்ற தகவல் பலருக்கும் சேர வேண்டும்

    ReplyDelete
  35. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  36. எத்தனையோ பேரை பார்த்தாலும் அவர்களைப் பற்றி சிந்திப்பதற்கு நேரம் செலுத்துவதில்லை. நீங்கள் எளிய மனிதர்லின் உணர்வுகளை அறிந்து அவற்றை பகிர்வது சிறப்பு.

    ReplyDelete
  37. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு .. நீடூழி வாழ்க நல்ல உள்ளங்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...