Tuesday, September 18, 2012

துளசிகோபால் மணிவிழா சிறப்பு பதிவு: பதிவர் பேட்டி

துளசி கோபால் .. தமிழில் பதிவு எழுதும் எவருக்கும் அறிந்த பெயர் !  தன் கணவரின் பணி நிமித்தமாய் தற்போது இவர் வசிப்பது நியூசிலாந்தில். கோபால்- துளசி தம்பதியருக்கு செப்டம்பர் 20- மணிவிழா. இந்த விழாவுக்காக இவர்கள்  தற்சமயம்  சென்னை வந்துள்ளனர்.

துளசி மேடமுடன் நியூசிலாந்தில் இருக்கும் போது ஒரு முறையும், கடந்த இரு வாரத்தில் சென்னை வந்தபின் சில முறையும் போனில் பேசி உள்ளேன். எப்போது  பேசினாலும் அன்பைப் பொழிவார். குரலை கேட்டால் மிக இளமை .. அவர் மனம் போலவே !

சில நேரம் அவருடைய பெண் தான் பேசுகிறாரோ என்று சந்தேகம் வந்து விடும்.." நீங்க துளசி மேடம் தானே?" என மறுபடி ஊர்ஜிதம் செய்து கொள்வேன் !

அவரது "செல்ல குழந்தைகள்" புத்தகம் பற்றி மக்கள் டிவியில் பேசினேன். அந்த விமர்சனம் திண்ணையிலும், நமது ப்ளாகிலும் ( இங்கே வாசிக்கலாம்) வந்தது. மக்கள் டிவியில் அவரது செல்லங்கள் புகைப்படத்தை பார்த்து விட்டு மிக மகிழ்ந்தார்

துளசி-கோபால் அவர்களின் மணிவிழா சிறப்பு பதிவு இது. அவரை நேரில் சந்தித்து பழகிய சிலர், நேரில் சந்திக்காமலே அன்பு கொண்ட சிலர் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். உங்களது வாழ்த்துக்களை நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் !

நான் அரசியல் சார்ந்தவன்.. தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின்மேல் உள்ள எதிர் கருத்தால் என் சொந்த அம்மாவைத் தவிர வேறு எவரையும் அம்மா என்று விளிப்பதில்லை..ஒரே ஒரு விதிவிலக்கு என் "துளசி அம்மா". நான் பதிவராக வருவதற்கு முன்பே அம்மாவின் வலைப்பூவை விடாமல் படித்துக்கொண்டு இருந்தேன். இன்னும் சொல்லப்போனால் அன்றைக்கு வலைப்பூ என்பதே இருபது முப்பது பேருக்கு மேல் இருக்காது. அம்மா அவர்கள் அப்போதெல்லாம் எனக்கு எழுத்தாளர் சுஜாதா ரேஞ்சுக்கு ஸ்டார்!! பின்னர் ஒரு நல்ல நாளில் நானும் வலைப்பூ துவங்கினேன். முதல் இடுகையிலேயே அம்மாவின் பின்னூட்டம். கலைஞர் எனக்கு நேரடியாக கடிதம் எழுதியதற்கு ஒப்பான மகிழ்ச்சி அப்போது! இதைப் படிக்கும் எவருக்கும் நான் மிகைப்படுத்திக் கூறுவதாகத் தோன்றலாம். ஆனால் எப்படி அதை வார்த்தைகளில் கொண்டு வருவது என்று இன்னும் முழிக்கிறேன்!

எந்த ஒரு விசயத்திலும் தொடர்ந்து ஈடுபட சில காலங்களில் சலிப்பு தட்டிவிடும். பதிவுலகும் விதிவிலக்கல்ல.. ஓரிரு ஆண்டுகள் தொடர்ந்து எழுதும் பலரும் பின்னர் அதில் இருந்து படிப்படியாக விலகி விடுவதற்கு நானும் விதிவிலக்கல்ல.. இந்நிலையில் எழுத வந்த காலம் துவங்கி இடைவிடாது இடுகை இடுவதைத் தொடரும் அம்மாவின் ஆர்வம் இன்றைக்கும் எனக்கு பெரிய ஆச்சர்யம்!! அதேபோல பிரபலப் பதிவர் என்றாலே படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் செல்வதுதான் இலக்கணம் எனும் பதிவுலகில் இந்த நொடிவரை யார் புதிதாக பதிவெழுத வந்தாலும் அவர்களின் இடுகைக்கு சென்று அவர்களுக்கு பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் அம்மாவின் குணமும் எனக்கு ஒரு ஆச்சர்யம்!

இன்னோரு ஆச்சர்யமான விசயம் சொல்லட்டா!? எனக்கு மற்ற வலையுலக நண்பர்களிடம் இருப்பதுபோல எப்போதும் அம்மாவும்,நானும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வதோ, சாட்டில் உரையாடுவதோ அல்லது பின்னூட்டங்களில் அடிக்கடி கருத்துகளைப் பறிமாறிக்கொள்வதோ இல்லவே இல்லை. இது எதுவுமின்றி எது எங்களைப் பினைக்கின்றது எனப் புரியவில்லை!!

அவர் அம்மா. நான் மகன். இந்த வரையறை மட்டும் போதும் !

பதிவர் வல்லிசிம்ஹன் 

துளசியைப் பற்றி நான்கு வரிகளிலும் சொல்லலாம்.நானூறு வார்த்தைகளிலும் சொல்லலாம். உத்தமமான மனுஷி.

பிறருக்கு உதவி செய்து இணையத்தில் இயங்க வழி சொல்வதில் திறமைசாலி/

தவறாமல் பின்னூட்டம் இட்டு அவர்களை ஊக்குவிப்பதில் ஜாம்பவான்.

தீவிர ஆன்மீக வழியில் நடக்கும் பக்தை.. ஒரு கோவில் விடமாட்டார். வாய்த்த மனைநலம்...அவரது துணைவரும் அப்படியே !

அனைவரிடமும் இருக்கும் நல்ல குணநலன்களை மட்டுமே பேசுவார்.

இயலாதவர்களுக்கும்,ஆதரவற்றவர் இல்லங்களுக்கும் உதவுவதில் முதலில் நிற்பார்.

என் பதிவு வாழ்க்கையில் முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் உயர்ந்த தோழி.

ஒருமுறை அவர் சென்னையில் இருக்கும் போது என்பதிவுகள் காணாமல் போய்விட்டதாக அவருக்குத் தொலைபேசியில் அழைத்து அழுது கலங்கியபோது,படிப்படியாக எல்லாபதிவுகளின் எண்ணிக்கையும் சரியாக இருப்பதை விளக்கினார். ஒரு பெரிய கலக்கத்திலிருந்த என்னை மீட்ட அருமைத் தங்கச்சி:)

அவரது கணவர் அவருக்கேற்ற அருமையான நண்பர்.

இந்த மாதம் மூன்றாம் இருபதைத் தொடும் திரு கோபால் அவர்களுக்கும் திருமதி துளசி கோபால் அவர்களுக்கும் எனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்.

இந்த மணிவிழாத் தம்பதிகள் எந்நாளும் அன்பு ,இன்பம் குறையா வாழ்வு வாழ அவர் வணங்கும் அந்த வெங்கடாசலபதியே துணை புரியணும்.

பதிவர்  வெங்கட்  நாகராஜ்

பதிவுலகில் துளசி டீச்சர் என்று அழைக்கப்படும் துளசி கோபால் எளிமையான, இனிமையான, நகைச்சுவை உணர்வு கொண்ட நபர். பூனை என்றால் உயிர் இவருக்கு! வளர்த்த பூனைகள், மற்றவை பற்றிச் சொல்லும் அவரது செல்லச் செல்வங்கள் படித்துப் பாருங்கள். மிருகங்களை இப்படியும் நேசிப்பவர் இருக்கிறார் என்பது புரியும் ! அவரது பயணக் கட்டுரைகளையும் மற்ற பகிர்வுகளையும் படித்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும். இது வரை மூன்று புத்தகங்களை வெளியிட்டு இருக்கும் இவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.
நம்புங்க இது டீச்சரும் கோபால் சாரும் தான் !

சண்டிகர் மாநிலத்தில் சில வருடங்கள் இருந்தபின் தங்களது இரண்டாம் தாய் வீடான நியூசி திரும்பு முன், அவரும் திரு கோபால் அவர்களும் தில்லி வருவதாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பவே, நானும், சக தில்லி பதிவர் முத்துலெட்சுமி குடும்பத்தினரும், துளசி டீச்சர் தங்கியிருந்த Radisson Hotel சென்றோம். ஹோட்டல் லாபியில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாது நாங்கள் வந்தது தெரிந்தவுடன் கீழே வந்துவிட்டனர். சந்திப்பின் போது பதிவுலகம் பற்றியும் பொதுவான விஷயங்கள் பற்றியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பேசிக்கொண்டிருந்தோம். நேரம் போவதே தெரியவில்லை. திரு கோபால் அவர்களும் நல்ல மனிதர். Made for Each Other couple!

இந்த ஆதர்ச தம்பதிகளைச் சந்தித்ததில் எனக்கு ரொம்பவே  மகிழ்ச்சி. ஹோட்டலில் இருந்து வீடு திரும்பிய பிறகும் அவர்களும் அவர்களுடன் பேசிய விஷயங்களும் நெஞ்சில் தென்றலாய் தவழ்ந்து கொண்டிருந்தது !

பதிவர்  ஷைலஜா

இலை ஒன்று பூவாகுமா அது
இறைவன் தோள் சேருமா?

என்று கேட்டால் அதற்குவிடை துளசி என்பதுபோல நமது அன்பிற்குரிய பிரபல பதிவர் துளசி , திருமாலின் பெயர்கொண்ட கோபால் அவர்களுடன் திருமண வாழ்வில் இணைந்திருப்பவர்.

துளசியின் மணம் மரத்தடி டாட் காம் நாட்களில் மெல்ல வீசத்தொடங்கியது. தயங்கிதயங்கித்தான் மடலாடற்குழுவில் நுழைந்தார் துளசி. மொட்டு மலராக பல நாட்கள் ஆகுமா என்ன?! பூ ஒன்று தான் மலர்வதைத்தான் ஓசைப்படுத்தித் தெரிவிக்குமா? துளசியும் அப்படித்தான்.. அவருடைய பணிவும் தன்னடக்கமும் பலரைக்கவர்ந்துபோனது.

மரத்தடிப்பறவைகளான நாங்கள் குழுமம் நின்றுபோனதில் பிரிந்தாலும் வலைவானம் மறுபடி எங்களை இணைத்தது. வலைப்பூவினை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் இணைய அரசி எங்கள் ஈடில்லா நட்பிற்குரிய திருமதி துளசி!

சிலர் அன்பைக்காட்டுவார்கள், துளசியோ அன்பைக்கொட்டுவார். இரண்டுவருஷம் முன்பு என நினைக்கிறேன் திரிசக்தி பதிப்பகம் நடத்திய நூல்கள் வெளியீட்டுவிழாவில் எனது சிறுகதைத்தொகுப்பும் வெளியானது இதை ஒரு அறிவிப்பாகவும் இயன்றவர்கள் வரலாமென்றும் நான் தெரிவித்திருந்தேன்.. வெளிநாட்டுவாசியான துளசி அந்த நேரம் சென்னைக்கு வந்தவர் கணவருடன் விழாவிற்கு வந்துவிட்டார்! புன்னகைதவழ அந்த தம்பதிகள் என் முன் வந்து நின்று வாழ்த்தியபோது திகைப்பும் மகிழ்ச்சியும் என்னைத்திக்குமுக்காடவைத்தன.

வாழ்க்கை சுவாரஸ்யமாக செல்வதற்கு வழித்துணை நட்பு தான்!

மழைக்குமட்டுமே விரியும்
குடையல்ல நட்பு,
அழைக்கும்போதெல்லாம்
அன்பைத்தயங்காமல் தரும்
இன்னொரு தாய்மை

என்று முன்னர் ஒரு கவிதை எழுதினேன்.

துளசிகோபால் அவர்களிடம் நான் காண்பது நட்புகலந்த தாய்மையைத்தான் !
மணிவிழாகாணப்போகும் தன் நாயகருடன் துளசி எந்நாளும் இதேபோல மணம் குணம் மனமகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்வோம்..!
****
பின்குறிப்பு: அலோ ! மணிவிழா நாயகரை விட்டு விட்டு துளசி மேடமை பற்றியே எல்லாரும் பேசினால் எப்படி? ஆகவே.......

தன் கணவர் கோபால் பற்றி துளசி மேடம் சென்னை வந்த பின் எழுதி தந்த பிரத்யேக கட்டுரை ஸ்பெஷல் பிளாஷ்பாக் படங்களுடன் மணி விழா நாளான நாளை மறுநாள் சுடச்சுட வீடுதிரும்பலில் வெளியாகும் !

36 comments:

  1. மணி விழா சமயத்தில் இப்படி ஒரு சிறப்பான பகிர்வு மோகன்....

    என்னையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி....

    நாளை மறு நாள் சென்னையில் சந்திப்போம்.....

    த.ம. 2

    ReplyDelete
  2. என் சார்பா வாழ்த்துக்களை சொல்லிட்டு, என் சார்பா கிஃப்ட் உங்க செலவுல குடுத்துட்டு, விருந்துல பரிமாறப்படும் ஐயிட்டங்களை எனக்கு அனுப்பி வைங்க சகோ

    ReplyDelete
  3. இந்த மாதம் மூன்றாம் இருபதைத் தொடும் திரு கோபால் அவர்களுக்கும் திருமதி துளசி கோபால் அவர்களுக்கும் எனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்.
    >>
    திரு.கோபால் ஐயா நம்மளைவிட சின்னவர் போல. நான் ரெண்டாவது முப்பதை ஆரம்பிச்சுட்டேன். அவர், இன்னும் இருபதுலயே இருக்கார். அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. எனக்குதான் அம்மாவை சந்திச்சு ஆசி வாங்கும் பாக்கியம் இல்லாமற் போய்டுச்சு.என் வணக்கத்தை அம்மாக்கிட்ட சேர்ப்பிச்சுடுங்க சகோ

    ReplyDelete
  5. தம்பதிகள் பல்லாண்டு பல்லாண்டு
    நிறைவான மனத்தோடும் உடல் நலத்தோடும்
    செல்வச் செழிப்போடும் சிறப்புற்று வாழ
    எல்லாம வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்
    அருமையான சிறப்புப் பதிவைக் கொடுத்த தங்களுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. நம்புங்க இது டீச்சரும் கோபால் சாரும் தான் !

    நல்ல படம்; கோபால் ஒரு ஆனழகன்; உங்களைப் பற்றி கருத்து சொல்வது சரி இல்லை!

    ஆனால், நீங்க இருவரும் Made for each other!

    Long live YOUNG COUPLE!

    ReplyDelete
  7. பல வருடங்கள் ஒதே ஒற்றுமையுடனும் பாசத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  8. துளசி டீச்சரின் மணிவிழாவிற்கு எனது வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. உங்கள் பகிர்வுக்கு நன்றி...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  10. என் அன்பான வாழ்த்துகளும்!

    தொடர்ந்து எழுத வேண்டுமென்கிற உத்வேகத்தைப் பலருக்கும் தந்து நல்ல வழிகாட்டியாக இருக்கும் துளசிகோபால் அவர்கள் எழுத வந்த கதையும், நம் அனைவர் சார்பிலுமாகப் பதிந்த வாழ்த்துகளும் இங்கே , 17 Sep அதீதம் இதழின் வலையோசையில்.

    சிறப்பாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் மோகன் குமார். மணிவிழா பதிவுக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  11. துளசி டீச்சர் என்னைப் போல் பலருக்கு எழுதுவதற்கு உந்துசக்தி. பேரன்பு மனுஷி. சமீபத்தில் சந்தித்து உரையாடியதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. ஷைலஜாக்காவும் வல்லிம்மாவும் மத்தவங்களும சொல்லியிருக்கறதைப் படிக்கறப்பவே சந்தோஷமா இருக்கு. அருமையான பகிர்வுககு நன்றி மோகன்.

    ReplyDelete
  12. மணிவிழா காணும் துளசி டீச்சர், கோபால் சாருக்கு வாழ்த்துகள்...
    துளசி டீச்சரிடம் ஒரு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.அன்பாக பேசினார். தில்லி வந்திருந்தும் என்னால் சென்று அவர்களை பார்க்க முடியவில்லை.
    அவரது ஃபிஜித்தீவும், செல்லச் செல்வங்களும் படித்து பிரமித்திருக்கிறேன். செல்லச் செல்வங்கள் படித்து விட்டு தனியாக மடல் அனுப்பினேன். அதற்கு உடனே பதிலும் அனுப்பினார்.

    ReplyDelete
  13. என் மகளின் பெயரை வைத்து ரோஷ்ணி அம்மா என்று இதுவரை யாரும் அழைத்ததில்லை என்று எழுதிய உடனேயே என்னை ரோஷ்ணிம்மா என்று அழைக்க ஆரம்பித்த முதல் நபர். டீச்சர்.

    ReplyDelete
  14. மிக அருமையான தொகுப்பு. துளசி மேடத்தையும் அவரின் கணவரையும் வணங்குகிறேன். ஆசிர்வாதத்தினை வாங்கி வாருங்கள் மோகன் சார்.

    ReplyDelete
  15. மிக தெளிவாக அறிந்து கொண்டேன் அண்ணே ..
    பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி

    ReplyDelete
  16. ம்ணிவிழா காணும் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  17. மணிவிழாவில் கலந்துக்கிடணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனா மகளின் பரிட்சை குறுக்கே வந்துவிட்டது. துளசி டீச்சரை ஹைதையில் சந்தித்த அனுபவம் இன்னமும் பசுமையாக இருக்கிறது. அவரின் அன்பில் ஒரு கதகதைப்பை உணர்ந்திருக்கிறேன்.

    கோபால் சாருக்கும், துளசி டீச்சருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. துளசி டீச்சரின் பழைய காலத்துப் படம்தான் பதிவின் ஹைலைட்.

    மணிவிழா குறித்த உங்களின் பதிவினையும் எதிர்பார்த்திருக்கிறேன்.

    டீச்சரின் இனிய இல்வாழ்வு இனியும் இதுபோல பல்லாண்டு தொடர என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  19. அன்புக்குறிய துளசிம்மாவுக்கு இனிய வாழ்த்துக்கள்.இன்னும் பல்லாண்டு பல்லாண்டு இதே சிறப்புடன் மகிழ்வாய் வாழ பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  20. மணிவிழா காணும் தம்பதிகளுக்கு என் நமஸ்காரமும், எங்கள் வாழ்த்துகளும். சக பதிவர்கள் சொல்லியிருப்பது படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  21. திரு + திருமதி துளசிகோபால் தம்பதியினருக்கு அன்பான வாழ்த்துகள்.

    பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்க.

    ReplyDelete
  22. இந்த மாதம் மூன்றாம் இருபதைத் தொடும் திரு கோபால் அவர்களுக்கும் திருமதி துளசி கோபால் அவர்களுக்கும் எனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... வளமுடன் வாழ்க...

    தங்களின் கவிதை : சூப்பர்...

    ReplyDelete
  24. பதிவு ,பின்னூட்டங்கள் ஊடாக மட்டுமே துளசிஅம்மா அவர்களுடன் பழக்கம் .அவங்க பதிவு படிக்கும்போது அப்படியே எங்கம்மா பேசுவதுபோல இருக்கும் ..
    துளசி அக்கா அன்ட் கோபால் அண்ணா இருவருக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்களை கூறிவிடுங்கள் மோகன்

    ReplyDelete
  25. இதையும் கூறிவிடுகிறேன் அவங்க செல்லத்துடன் இருக்கும் படம் சூப்பரோ சூப்பர் !!

    ReplyDelete
  26. நிறைய அன்பையும் நட்பையும் சம்பாதித்து வைத்திருக்கும் தம்பதியினருக்கு மணிவிழா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. அடடா.....எங்க வீட்டுக்கும் வந்திருக்கங்களே என்னையும் ஆட்டத்துலே சேர்த்திருக்கலாமே!!!....பூங்கொத்துடன் வாழ்த்துக்கள் அவங்களுக்கு!

    ReplyDelete
  28. துளசி டீச்சருக்கு இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

    ReplyDelete
  29. Vanakkangalum vaazhthukkalum!

    ReplyDelete
  30. துளசி அக்கா குடும்பத்தினருக்கு இனிய மணிவிழா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. நான் பதிவராக வருவதற்கு முன்பே அம்மாவின் வலைப்பூவை விடாமல் படித்துக்கொண்டு இருந்தேன்.



    தம்பதியினருக்கு மணிவிழா வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  32. அன்புடன் வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைத்துக்கும் பதிவு எழுதி பெருமைப்படுத்திய உங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.

    இதயம் நிறைந்தது, கண்கள் பனித்தன.

    ReplyDelete
  33. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. டீச்சரே வந்து நன்றி சொல்லிட்டாங்க. நாளை காலை துளசி டீச்சர் / கோபால் சார் பற்றி இன்னொரு சிறப்பு பதிவு இருக்கு. வந்து படித்து ஆவண செய்யுமாறு வேண்டுகிறேன் :))

    ReplyDelete
  34. துள்சிக்காவின் வலைப்பூதான் முதன்முதலில் நான் வாசிக்க ஆரம்பிச்சது. அங்கே ஆரம்பிச்சதுதான் இப்ப நானும் ஒரு வலைப்பதிவி என்ற அளவில் வந்து நிக்குது :-))

    ReplyDelete
  35. //நான் அரசியல் சார்ந்தவன்.. தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின்மேல் உள்ள எதிர் கருத்தால் என் சொந்த அம்மாவைத் தவிர வேறு எவரையும் அம்மா என்று விளிப்பதில்லை//

    நான் உங்களை நடுநிலைமையோடு எழுதுபவர்னு நினைச்சிருந்தேனே! நம்ம யுவகிருஷ்ணா உம்ம பிளாக்ல கமெண்ட் போடும்போதே நான் யோசிச்சிருக்கனும்! நான் ஜெயா ஆதரவு என்பதை விட கருணாநிதி எதிர்ப்பு எண்ணமுடையவன்! உங்கள் பதிவை நான் படிக்காத நாளில்லை! இனி உங்க பதிவு படிக்காம இருக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்! ஆனாலும் சரியாயிடும்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...