Tuesday, November 27, 2012

முடி திருத்துவோர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்

ழக்கமாய் முடி வெட்டுபவரிடம் எப்போதுமே பல விஷயங்கள் பேசுவேன். நம்ம ஊரில் என்ன நடக்கிறது என பல தகவல்கள் அவர்கள் மூலம் தெரிய வரும். இந்த முறை முடி வெட்டியபோது இப்பேட்டிக்காக அவர் தொழில் பற்றியே பேசினேன். அவரும் தன் நிறைய விஷயம் பகிர்ந்தார். நாங்கள் பேசியதில் இருந்து :
****
இந்த வரிசை பேட்டிகள் அதீதம் இணைய இதழில் தொடர்ந்து வெளியாகிறது
******
இந்த கடை வாடகை கடையா? 

ஆமாம். வாடகை கடை தான். மாச வாடகை 2, 200. சில இடங்களில் இப்போ அட்வான்ஸ் மட்டுமே ஒரு லட்சம் கேட்கிறார்கள். இந்த கடை வைக்க அட்வான்ஸ், கார்பெண்டரி, சேர் எல்லாம் சேர்த்து 1 லட்சம் செலவாச்சு. மனைவி நகைகளை அடகு வைத்து தான் பணம் சேர்த்து கடை வைத்தேன். ரெண்டு வருஷத்தில் அந்த நகை எல்லாம் மீட்டுட்டேன் .

உங்க குடும்பத்தில் எத்தனை பேரு?

மூணு அக்கா. ஒரு அண்ணன். அண்ணன் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். மூணு அக்காவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க மூணு பேர் புருஷனும் எங்க தொழில் தான் பண்றாங்க.

அக்கா மூணு பேருக்கும் கல்யாணம் பண்ண நிறைய கடன் வாங்கினேன் அதெல்லாம் அடைச்சிட்டு நான் கல்யாணம் பண்ணிக்க 29 வயசாகிடுச்சு. எனக்கு இப்போ கல்யாணம் ஆகி ரெண்டு பொண்ணுங்க இருக்கு . கிங்க்ஸ் மெட்ரிகுலேஷனில் படிக்கிறாங்க. நாம தான் படிக்காமல் போயிட்டோம் அதுங்களாவது நல்லா படிக்கட்டும்.

நல்லா படிச்சு நல்லா வேலைக்கு போனா அதுக்கு தகுந்த மாப்பிள்ளை பாக்கலாம். இல்லாட்டி நம்ம வசதிக்கு ஏற்ப சின்ன அளவில் மாப்பிள்ளை பார்க்க வேண்டியது தான்.



கடையில் நீங்க ஒரே ஆளா? துணைக்கு ஆள் வச்சிக்கலையா?

ஆள் வச்சிக்கலை. ஆள் வச்சா தினம் 350 ரூபா சம்பளம் கொடுக்கணும் . வேலை இருந்தாலும் இல்லாட்டியும் அந்த பணம் கொடுத்தாகணும். ஆள் இல்லாததால் தான் என்னால கடன் சீக்கிரம் அடைக்க முடிந்தது.

சனி ஞாயிறு கூட்டம் அதிகம் இருக்கும் போது சிரமமா இருக்கும். கை விரல் எல்லாம் வலி பின்னி எடுக்கும். இன்னொரு பக்கம் ஆள் வேறு காத்திருப்பாங்க. அன்னிக்கு மட்டும் ரொம்ப சீக்கிரமா முடி வெட்டுவோம். வலியை பார்க்காம வெட்டினா அன்னிக்கு நல்லா பணம் கிடைக்கும்.

முடி வெட்ட கத்து தர கோர்ஸ் ஏதும் இருக்கா?

ஆமா. நாலு அஞ்சு மாச டிரைனிங் கோர்ஸ் இருக்கு. பியூட்டி பார்லர் வைப்போர் எல்லாம் அப்படி தான் டிரைனிங் எடுத்துட்டு வைக்கிறாங்க. ஆனா கடையில் வேலை பார்த்து கத்துக்குறது இன்னொரு விதமான டிரைனிங் . நான் எல்லாம் அப்படி தான் கத்து கிட்டேன். வெறுமென அஞ்சு மாச கோர்ஸ் படிச்சிட்டு பியூட்டி பார்லர் வைப்பவர்களால் எங்களை மாதிரி முடி வெட்ட முடியாது .

கடையிலே வேலை பார்த்தா ஆறு மாசத்துக்கு தரையை கூட்டுறது, சிகரெட், டீ வாங்கி தர்றது மாதிரி வேலை தான் செய்ய சொல்வாங்க. நானெல்லாம் முதலாளி வீட்டில் பாத்திரம் தேய்ச்சு துணி எல்லாம் தோச்சு போட்டிருக்கேன். (ரெண்டு முறை இதை சொன்னார். மனதில் ரொம்ப வலி போலிருக்கு) சாமானியத்தில் தொழில் கத்து தர மாட்டாங்க.

ஆறு மாசம் கழிச்சு ஷேவிங் பண்ண விடுவாங்க. அப்புறம் சின்ன பசங்க கட்டிங்க்  பண்ண சொல்லி பார்ப்பாங்க. அது நல்லா செஞ்சா பெரிய ஆளுங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மாறி தொழில் நல்லா கத்துக்க நீங்க ஒரு கடையில் மூணு வருஷமாவது இருந்தாகணும் 

நான் வேலை பார்த்தது அண்ணா நகரில் உள்ள ஒரு மார்வாடி சலூனில் தான். அவரு காசு வாங்குற வேலை மட்டும் தான் செய்வார். முடி வெட்டுற வேலை செய்றது எல்லாம் எங்களை மாதிரி ஆளுங்க

முன்னே இந்து நாவிதர் தான் இந்த தொழில் அதிகம் செஞ்சாங்க. இப்போ ஐயர், மார்வாடி எல்லாம் இந்த தொழில் ( பியூட்டி பார்லர் ) பண்றாங்க. இதுலே நிறைய காசு வருதுன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு அதான்.

உங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்குள்ள? அதுக்கு நீங்க பணம் ஏதும் கட்டணுமா?

சங்கத்துக்கு  வருடம்  250 ரூபா கட்டணும். வருஷா வருஷம் ஒரு விழா வைப்பாங்க. அதுக்கான செலவு இந்த பணத்தில் செய்வாங்க. ஒரு கிப்ட் தருவாங்க; அப்புறம் வருஷம் ஒரு தடவை டூர் கூட்டி போய் வருவாங்க. 

தலைவர், செயலாளர் எல்லாம் குறிப்பிட்ட ஆளுங்களே தான்  இருப்பாங்க. யாராவது நடவடிக்கை சரியில்லாட்டி அந்த வருஷ மீட்டிங்கில் அவரை நீக்கிட்டு வேறு ஆளை நியமிப்போம். நாங்க எல்லாம் ஓட்டு போட்டு தான் ஆள் தேர்ந்தெடுக்கணும் 

வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா  கடை மூடணுமா என்ன? 

சென்னை முழுசுக்குமே செவ்வாய் கிழமை லீவு. அந்தந்த ஏரியா சங்கத்தில் கொஞ்சம் ரூல்ஸ் மாத்திப்பாங்க. மடிப்பாக்கத்தில் செவ்வாய் கிழமை அரை நாள் திறக்கலாம்னு சொல்லிருக்காங்க. கோவிலம்பாக்கத்தில்  செவ்வாய் கிழமை முழுக்க கட்டாயம் மூடணும்னு  ரூல்ஸ் இருக்கு 

எவ்ளோ நாளைக்கு ஒரு தடவை முடி வெட்டிகிட்டா சரியா இருக்கும்?

ஒரு மாசத்துக்கு ஒரு முறை முடி  வெட்டிகிட்டா எப்பவும் ஒரே அளவு முடி இருக்குற மாதிரி, ஒரே ஹேர் ஸ்டைலில்   இருப்பது போல் பாத்துக்கலாம். 

ஷேவிங் தாங்களே பண்ணிக்கலாம்னா கூட சில பேர் எப்பவுமே கடைக்கு வந்து தான் ஷேவிங் பண்ணிக்குவாங்க. நீங்க பண்ணிகிட்டா எதிர் திசையில் தான் ஷேவ் பண்ணிக்க முடியும். நாங்க எப்பவும்  நீங்க பண்றதுக்கு ஆப்போசிட்டா பண்ணுவோம். அது தான் சரியான மெத்தட். தோல் ஹார்ட் ஆகாம சாப்ட் ஆக இருக்கும்

எத்தனை வயசு வரை இந்த தொழில் செய்ய முடியும்? 

 50 வயசுக்கு மேலே இந்த தொழில் செய்ய முடியாது. நின்னு கிட்டே முடி வெட்டுவதால் உடம்பில் உள்ள நீர் எல்லாம் காலில் போய் சேர்ந்திடுது. காலில் சின்னதா அடி பட்டாலே செமையா வீங்கிக்கும். காலையில் எழும் போதே சில நாள் காலை நகர்த்த முடியாது. நரம்பு சம்பந்தமான வியாதி எல்லாம் வர நிறைய வாய்ப்பு இருக்கு

அதோட சின்ன பசங்க " அவரு வயசானவரு- இப்போ உள்ள ஸ்டைல் அவருக்கு தெரியாது" என நினைப்பாங்க. அதனால் கூட்டம் வராது. 

வயசாகறதுக்குள் உட்கார்ந்து சாப்பிடுற அளவு பணம் சம்பாதிச்சுடனும் இல்லாட்டி நாம கடை வச்சிக்கிட்டு வேற ஆள் வச்சு வேலை வாங்கணும். "
***
நான் வந்த வேலை முடிந்து, எனக்கு போர்த்திய துண்டை உதறினார். முடி வெட்டும்போதே ஒரு பேட்டியும் கிடைத்த எண்ணத்தோடு விடைபெற்றேன்.
***
தொடர்புடைய பதிவுகள்: 
சலவை தொழிலாளி வாழ்க்கை: அறியாத தகவல்கள்
கூர்க்கா வாழ்க்கை அறியாத தகவல்கள்
பெங்களூர் ஆட்டோ காரர் பேட்டி 
மெக்கானிக் வாழ்க்கை : அறியாத தகவல்கள்
செருப்பு தைப்பவர் வாழ்க்கை-  பேட்டி

27 comments:

  1. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பேட்டி மோகன். சிறப்பான பகிர்வுக்கு நன்றி. நெய்வேலியில் காந்தி என்று ஒருவர் தான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு முடி வெட்டியவர்.... தில்லி செல்லும் வரை! அவரை நினைவூட்டியது உங்கள் பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்

      Delete
  2. சிரத்தையாக அவர்கள் முடி வெட்டும் போது, "பரவாயில்லை, இருக்கட்டும்" என்றால் கூட செய்யும் தொழிலை பணத்திற்காக மட்டுமல்லாமல், சிறப்பாக / திருப்தியாக (மற்றவர்களின் திருப்திக்காகவும்) செய்பவர்கள்...

    நல்லதொரு பேட்டிக்கு நன்றி...

    ReplyDelete
    Replies

    1. நன்றி தனபாலன்

      Delete
  3. முடி வேட்டுபவரிடம் பேசும்போது எனக்கும் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வரும். என்ன.....அவர் விஜய் ரசிகர். ஓடாத படத்தை கூட ஓஹோ என பேசுவார். நாம் திருப்பி ஏதாவது கலாய்த்தால், ஷேவ் பண்ணும்போது கழுத்தில் கத்தியை வைத்து, "அப்போ என்னமோ சொன்னீங்களே" என்பார் :))

    ReplyDelete
    Replies

    1. ரகு: உங்க சலூன் காரர் செம ஜாலியான பேர்வழி போல :)

      Delete
  4. சிறப்பான பேட்டி. அறியாத தகவல்கள், தொழில்சிரமங்கள் என பலவும் தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  5. சிறப்பான பேட்டி..

    ReplyDelete
  6. நல்ல பதிவு . முடி திருத்துபவரின் வாழ்கையை அருகில் பார்க்க முடிகிறது .

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய் பெரியசாமி

      Delete
  7. சலூன் கடைக்காரர் வாழ்வில் இவ்வளவு சுவாரஸ்ய விஷயங்களா?நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி சமுத்ரா நன்றி

      Delete
  8. Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  9. முடி திருத்துபவரின் வாழ்கை பதிவு சிறப்பான பகிர்வு நன்றி மோகன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரவணன் நன்றி

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நல்ல பேட்டி.

    கிராமங்களில் ஒரு சில நாவிதர் ஒருவர் சொல்லும் செய்தியை மற்றவரிடம் சொல்லி வம்பு உண்டு செய்துவிடுவார்கள்.

    அவர்களிடம் நானும் இப்படி அவர்களின் தொழில் மற்றும் சமூகத்தில் அவர்களின் தொழில் மீது மாறியுள்ள பார்வைப் பற்றியெல்லாம் விவாதிப்பேன்.

    இது போன்ற சாமான்ய மக்களிடம், டாஸ்மாக் பழக்கமுண்டா? பணத்தை எப்படி சேமிக்கிறீர்கள்? போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.

    பல்வேறு காரணங்களால், நீண்ட நாட்களாக பிளாக் பக்கம் வரமுடியவில்லை. பிளாக்கில் கருத்துச் சொல்லவும் ஒருவித பயம் வந்துவிட்டது.

    இன்று மும்பை அரசு பேஸ் புக் கைது விவகாரத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்த செய்தி கொஞ்சம் ஆறுதல் தருகிறது.

    ReplyDelete
    Replies
    1. போலீசாரை கைது அல்ல போலீசாரை சஸ்பென்ட் என்று திருத்தி வாசிக்கவும்.

      Delete
    2. அமைதி அப்பா: உங்கள் பின்னூட்டம் சில விஷயங்களை உணரவைத்தது. பின்னர் போனில் இதுபற்றி பேசுவோம் நன்றி

      Delete
  12. உழைக்கும் கைகளுடன் ஒரு நல்ல பேட்டி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் இளங்கோ

      Delete
  13. நல்லதொரு பேட்டி! எங்கள் பக்கத்தில் முடிவெட்டுபவர்கள் நாதஸ்வர கச்சேரியும் செய்வார்கள்! இவர் அந்த மாதிரி ஏதாவது செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்! பேட்டியில் அதை கேட்கவில்லையே?

    ReplyDelete
  14. இவ்ளோ விஷயம் இருக்கா? எல்லா தொழிலிலுமே கஷ்டம் இருக்கு!!
    சலவை செய்றவங்களுக்கு கை நரம்பு எலும்பு வலி, இவங்களுக்கு கால்வலி.. வழியில்லாம எந்த வேலையும் செய்ய முடியாது.. அதிலும் கூலி தொழிலில்!!!

    நன்றி சார் !!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...