Friday, December 29, 2017

வேலைக்காரன் - சினிமா விமர்சனம்

நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் அருவி.

மகள் தேர்வு முடிந்த அன்றே சென்ற படம் வேலைக்காரன்


"உலகத்தின் மிக சிறந்த சொல் செயல்" - இந்த ஒரு வரி போதும் - படத்தின் நோக்கத்தை பற்றி சொல்ல.

கதை 

கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரம் மற்றும் தங்கள் மார்க்கெட்டிங் உத்திகளால் மக்களை சுரண்டுகிறார்கள் என உணரும் நாயகன் - அதனை எதிர்த்து வித்தியாச முறையில் நடத்தும் போராட்டமே வேலைக்காரன்

பிளஸ் 

வித்தியாச கதைக்களன்- மற்றும் எடுத்து கொண்ட விஷயத்தை விட்டு விலகாமல் செல்லும் திரைக்கதை

சிவா - சேரி பையன் - ஆபிஸ் ஊழியர் போன்ற இரு முகங்களும் apt ! வழக்கமாய் காமெடியிலேயே படத்தை ஓட வைத்து விடும் சிவா முதன்முறை சீரியஸ் பாத்திரம் எடுத்து அதற்கு தன்னால் முடிந்த நியாயமும் செய்துள்ளார்

கலை இயக்கம் - அட்டகாசம். அந்த சேரி முழுவதுமே செட்டிங் தான் .. கூவம் ஓடும் அந்த ஏரியாவை அமர்க்களமாக காட்டியுள்ளனர்.

படத்தில் சின்ன சின்ன திருப்பங்கள்,  சிறு சஸ்பென்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அவை தெரியாமல் பார்த்தால் மட்டுமே  படத்தை ஓரளவு ரசிக்க முடியும் !

ஓரிரு பாடல்கள் (மட்டும்) நன்று. போலவே ஒரு டூயட் (அனாவசியம் !) தவிர பாடல்கள் மிக குறைவே. பின்னணி இசை பல இடங்களில் அசத்தல். எல்லா இடத்திலும் இசையை தட்டணும் என்றில்லாமல் சில இடங்களை சைலன்ட் ஆக விட்டிருக்கலாம். சிவா- நயன்தாரா பேசும்போது கூட பின்னால் எதோ ஒரு டமுக்கு டப்பா இசை ஓடுகிறது !

படத்தில் சண்டைகள் வைக்க எத்தனையோ காரணிகள் இருந்தாலும் - ஒரு மிக சின்ன சண்டை (நிஜமாகவே அவசியமானது) தவிர படத்தில் சண்டைகளே  இல்லை !  சண்டைகள் இல்லாத ஆக்சன் படம் என்பதே ஆச்சரியமாக தான் உள்ளது

பகத் பாசில் நிறைவான நடிப்பு. சூப்பர் மார்க்கெட்டில் - சிவாவிடம் பகத் பாசில் பேசும் காட்சி அட்டகாசம் ! ஏனோ அவர் பாத்திரம் பார்க்கும் போது தனி ஒருவன் அரவிந்த் சுவாமி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.  ஆனால் அரவிந்த் சுவாமி ஏற்படுத்திய தாக்கம் இப்பாத்திரம்  ஏற்படுத்த வில்லை.

சீரியஸ் படத்தின் இடையே ரோபோ ஷங்கர் காமெடி அவ்வப்போது ரிலாக்ஸ் ஆக்குகிறது

தனி ஒருவன் ராஜாவின் அடுத்த படைப்பு இது. நல்ல விஷயம் சொல்ல நினைத்ததற்கு ஷொட்டு. ஒரு சில காட்சிகள் வெயிட்டாக வைத்திருக்கிறார். கிளைமாக்சில் பாடல் வைத்து படத்தை முடித்திருப்பது வித்யாசம் + நைஸ்.

படம் முடியும் போது " எங்களின் இந்த படம் கூட ஒரு மார்க்கெட்டிங் தான்..நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் செய்யும் மார்க்கெட்டிங்" என முடிப்பது புன்னகையை வரவைக்கிறது

மைனஸ் 

கார்ப்பரேட் கம்பெனிகள் அனைவருமே திருடர்கள் - அனைவரும் அதிக கெமிக்கல் கலந்து மக்கள் உடலை நாசம்  செய்கிறார்கள் என பொதுமை படுத்திய அடிப்படை விஷயம் பெரும் தவறு. ஓரிரு நிறுவனங்கள் அப்படி இருக்கலாம். அனைவரும் அல்ல

லாஜிக் மீறல்கள் 2 காட்சிக்கு ஒரு முறை கிண்டலடித்து சிரிக்க வைக்கின்றன. ஒரு சின்ன மிரட்டலுக்கு பயந்து இந்தியாவின் 5 பெரிய கம்பெனி ஓனரும் ஒட்டு மொத்தமாய் கம்பெனியை விற்க ஒத்து கொள்வது ; போர்ட் ஆப் டைரக்டர்ஸ் கோட் சூட்டுடன் கூட்டமாய் கம்பெனி வாசலில் நின்று பகத்திடம் " நீங்கள் தான் அடுத்த CEO" என சொல்வது  இப்படி பல காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன .. லாஜிக் ஓட்டையால் !

நயன் - அந்த மெச்சூர்ட் பாத்திரத்துக்கு தனியே பொருந்தினாலும் சிவாவுடன் சேர்த்து பார்த்தால் அக்கா மாதிரி உள்ளார். பரோட்டாவிற்கு தக்காளி சட்னி காம்பினேஷன் மாதிரி ரொம்ப சுமாராக உள்ளது இவர்கள் கெமிஸ்ட்ரி

 இவர்களில் யார் பரோட்டா ? யார் தக்காளி சட்னி ?

வசனம் ! இந்த படத்திற்கு வசனம் எழுதிய பேப்பரை விற்றால் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுத்து விடலாம். நம் காது வலிக்கும் வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சினிமா ஒரு விசுவல் மீடியம் - இவ்வளவு வசனம் தேவையா ? இடைவேளைக்கு முன் சிவா 20 நிமிடம் வீர பாண்டிய கட்டபொம்மன் போல் பேசுகிறார். வசனத்தாலேயே படம் பார்க்கும் பலர் தலை வலிக்குது - கொஞ்சமா பேசுங்கடா என்று கத்துகிறார்கள். தனி ஒருவன் போல் புத்திசாலித்தனமான காட்சிகளால் - சில விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் கடந்து போயிருக்கலாம். ஆனால் இங்கு கடைக்கோடி ரசிகனுக்கு தெளிவாக புரிய வேண்டுமென விம் வைத்து விளக்குகிறார்கள்

படம் பார்க்கும் போது ரசித்து பார்த்தாலும் பின்னர் யோசித்தால் இன்னும் பல லாஜிக் ஓட்டைகள் நினைவிற்கு வந்த வண்ணமே உள்ளது

பைனல் அனாலிசிஸ் 

படம் நிச்சயம் வெற்றி தான். போட்ட காசை எடுத்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது .. ஒரு வாரம் ஆனபின்னும் வியாழன் இரவு PVR -ல் 2 தியேட்டரும் ஹவுஸ் புல் !

குறைகள் சில இருந்தாலும் .. நிச்சயம் இது ஒரு காண வேண்டிய படைப்பு தான். தேவையில்லாத பொருட்களை வாங்கும் முன் சற்று யோசிக்க வைக்கும் பணியை இப்படம் ஓரளவேனும் செய்யும் என்றே நம்புகிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...