Thursday, May 31, 2012

ஹோட்டல் அறிமுகம்: தஞ்சை சாந்தி பரோட்டா கடை

திவர்கள் கேபிள் சங்கர் மற்றும் Scribbling வித்யா வழியில் அவ்வப்போது ஹோட்டல்கள் குறித்து எழுத, நெடு நாளாக நினைத்திருந்தேன். பிற பதிவுகள் எழுதினாலும் ஹோட்டல்கள் குறித்த பதிவு எழுதுவதை மனம் தள்ளி போட்டே வந்தது. எழுத ஆரம்பித்து விட்டால், அவ்வப்போதாவது ஹோட்டல்களை அறிமுக படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் நான்கைந்து ஹோட்டல்கள் பற்றி எழுதி முடித்து, அவை தயாரான பிறகே முதல் பதிவை வெளியிட எண்ணினேன். இப்போ ஆட்டத்துக்கு தயார்.

இந்த பகுதிக்கு " ஹோட்டல் அறிமுகம்" என்று பெயர் வைத்துள்ளேன். வேறு நல்ல பெயர் தோன்றினால் பரிந்துரையுங்கள் நண்பர்களே !

முதல் பதிவாக, நமது ஆல் டைம் பேவரைட் ஹோட்டல்களில் ஒன்றான தஞ்சை சாந்தி பரோட்டாவில் துவங்குவோம்

**********

சாந்தி பரோட்டா !!

சிறுவயது முதல் 25 வருடங்களாக இங்கு பரோட்டா சாப்பிட்டு வருகிறேன்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ளது இந்த சிறிய கடை.  முன் பக்கம் மட்டுமே ரொம்ப வருஷங்கள் கடை இருந்தது. இப்போது அதன் பின் புறமும் ஒரு இடம் பிடித்து அங்கும் இதே கடை எக்ஸ்டன்ஷன் வைத்துள்ளனர்.

காலை கடை இருக்காது. பகல் பதினோரு மணிக்கு மேல் திறப்பார்கள். இரவு 11,12 வரை கடை இருக்கும். எனக்கு தெரிந்து இங்கு தயார் செய்பவை இரண்டே வகை உணவுகள் மட்டும் தான்.

ஒன்று பரோட்டா, மற்றது குஸ்கா.

முழுக்க முழுக்க சைவ ஹோட்டல் இது. குஸ்காவும் சரி,பரோட்டவுக்கான குருமாவும் சரி சைவம் தான் !

80 முதல் 90 சதவீதம் வரை பரோட்டா வியாபாரம் தான். குஸ்கா மீதம் 10 அல்லது 20 % வியாபாரம் இருக்கும்.

பரோட்டா என்பதை விட டால்டா பரோட்டா என்பது தான் சரியாக இருக்கும். பரோட்டாவில் டால்டா மணம் தூக்கும். கொழுப்பு தான் ! வெயிட் போடும் தான் ! ஆனா அந்த டேஸ்ட் இருக்கே .. சான்சே இல்லை.

மூணு அல்லது நாலு பரோட்டா வாங்கி சிறுக சிறுக பிச்சி போட்டுடணும். அது மேலே சூடான குருமாவை ஊற்ற சொல்லணும். பின் சிறிது சிறிதாக மிக மெதுவாய் ருசித்து சாப்பிடணும். நடு நடுவில் மீண்டும் மீண்டும் குருமா கேட்டு வாங்கி சாப்பிட வெட்கமே பட கூடாது.

பரோட்டா இங்கு செம பாஸ்ட் மூவிங் என்பதால் எப்பவும் சூடாக இருக்கும். மேலும் குருமாவும் சூடு என்பதால் சாப்பிடும் போதே வியர்த்து கொட்டும். அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதலில் பரோட்டா !

பிற ஊர்கள் மாதிரி குருமாவை பெரிய வாளியில் வைத்து கொண்டு, ஊற்ற மாட்டார்கள். எப்போதும் குருமா அடுப்பில் கொதித்து கொண்டே இருக்கும். கொதிக்கும் அடுப்பில் டம்ளர் மூலம் எடுத்து தான் அனைவருக்கும் குருமா ஊற்றுவார்கள். இது இந்த கடையின் ஸ்டாண்டர்ட் !

குஸ்காவும் இங்கு நன்கு இருக்கும் தான். ஆனால் சந்தானம் அருகில் நடிக்கும் புது ஹீரோ மாதிரி பரோட்டா முன்பு குஸ்கா தோற்று விடும். மதிய நேரத்தில் வெறும் பரோட்டா சாப்பிட்டால், முழு சாப்பாடு சாப்பிட்ட உணர்வு இருக்காது என்பதால் சாதம் டைப் உணவான குஸ்காவை நாடலாம். அதை தவிர மற்ற நேரங்களில் பரோட்டா தான்...பரோட்டா தான் ...பரோட்டா தான் ஐயா !

தஞ்சையில் அண்ணன் வீட்டுக்கு போய் சரியாக சாப்பிட வில்லையெனில் அண்ணன் சொல்லுவார்: " சாந்தி பரோட்டாவுக்கு நைசா போயிட்டு வந்திருப்பான்னு நினைக்கிறேன் " (பாம்பின் கால் பாம்பறியும் ! எங்க பரம்பரையே பரோட்டா பிரியர்கள் தான். புது தலைமுறையும் அப்படி தான் இருக்கு )

வாங்க சாந்தி பரோட்டாவின் குறுகலான கடையின் உள்ளே இந்த வீடியோ மூலம் போய் பார்க்கலாம்:



****
வீடியோவின் கடைசி பகுதியில் பேருந்து நிலையமும், அன்பு பால் கடையும் தெரியும் !
****
இப்போதெல்லாம் சாப்பிடும் முன்னே எத்தனை பரோட்டா வேண்டுமென டோக்கன் வாங்க சொல்கிறார்கள் அது தான் உறுத்துது. எத்தனை பரோட்டா வேண்டுமென எப்படி முன்பே முடிவெடுப்பது? நான்கு என வாங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்த பின் மீண்டும் ஒன்று வேண்டுமெனில் கியூவுக்கு போய் வாங்க முடியுமா? (இது போன்ற நேரங்களில் மட்டும் கடை சிப்பந்திகள் டோக்கன் வாங்கு தந்து உதவுவாவர்கள் என நினைக்கிறேன் )

தஞ்சை பற்றி எழுதிய போன பதிவில், நண்பர்/ பதிவர் மணிஜி மலரும் நினைவுகளை இப்படி எழுதியிருந்தார்: " அப்பாவின் பையில் இருந்து காசு காண வில்லையென்றால் அது சாந்தி பரோட்டாவாகியிருக்கும்" !

இது தஞ்சை சிறுவர்கள் பலருக்கும் பொருந்தும்.

தஞ்சை பக்கம் போனால் அவசியம் விசிட் அடியுங்கள் சாந்தி பரோட்டா கடைக்கு !            

பரிந்துரை: மிஸ் பண்ண கூடாத ஹோட்டல் இது ! Value for Money !!      

சமீபத்திய பதிவுகள்:




(ஹோட்டல் அறிமுகம் தொடரும் )

Wednesday, May 30, 2012

வானவில் 90: அனுஷ்கா- கன்னட நடிகை தன்யா

ஆறாம் அறிவை இழந்த தன்யா

ஏழாம் அறிவு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினின் அல்லக்கையாக நடித்த பெங்களூரை சேர்ந்த தன்யா என்கிற நடிகை இப்படி ஒரு Facebook மெசேஜ் விட்டிருக்கிறார் :

dear chennai, you beg for water, we give! you beg for electricity, we give! ur people come n occupy our beautiful city and kocha paduthify it , we allow and nw u were at our mercy to go to playoffs, n we let be!! like this u begging – we givin! dai ungalukku vekkame illaiya da??

தன்யாவுக்கு சில கேள்விகள்:

சென்னை இரண்டு முறை கோப்பை வென்ற அணி. இன்னும் இரு முறை பைனல் சென்று இறுதி நிமிடம் வரை போராடி தோற்ற அணி. உங்கள் அணி எப்போதாவது கோப்பையை வென்றுள்ளதா? கெயில் மற்றும் டீ வில்லியர்ஸ் என்கிற இரு வெளிநாட்டு வீரர்கள் புண்ணியத்தில் ஆட்டமாய் ஆடி வந்த நீங்கள் இப்போது அடங்கி போய் உள்ளீர்கள். சொல்லி கொள்ளும்படி பெங்களூரு வீரர்கள் யாராவது உண்டா உங்களிடம்? அனைத்து எடிஷன்களிலும் most consistent அணி என்றால் அது சென்னை தான் என்பதை கிரிக்கெட் தெரிந்த யாராலும் மறுக்க முடியாது.

கிரிக்கெட்டை விட முக்கிய விஷயத்துக்கு வருவோம். தமிழகத்துக்கு தண்ணீர் பிச்சை போடுவதாக சொல்கிறீர்கள். காவிரி உங்கள் ஊரில் பிறப்பதால் தண்ணீர் முழுதும் உங்களுக்கு சொந்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே அது தான் பிரச்சனை.

நீங்கள் நன்கு படித்த ஒரு பெண் (என வைத்து கொள்வோம்). நீங்கள் பிறந்து வளர்ந்தது ஒரு இடத்தில். அங்கு தான் பிறந்தீர்கள் என்பதால் வாழ்க்கை முழுதும் சம்பாதிப்பதை உங்கள் பெற்றோருக்கே கொடுப்பீர்களா? அப்படி தான் இருக்கு தண்ணீர் விஷயமும்.

காவிரி என்கிற சொத்துக்கு தமிழகம் கர்நாடகம் இரண்டுக்கும் உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டே பலமுறை சொன்ன பின்னும் எங்களுக்கு உரிமையான தண்ணீரை கன்னடியர்களே வைத்து கொள்கிறீர்களே? எங்களுக்கு சொந்தமான ஒன்றை தராமல் வைத்து கொள்ளும் நீங்கள் திருடர்கள் தானே? உண்மையில் எங்களுக்கு முழு உரிமை உள்ள தண்ணீரை எங்கள் அரசியல் வாதிகளின் ஒற்றுமையின்மையால் முழுதும் பயன் படுத்த முடியாமல் இருக்கிறோம். உங்கள் தேவை பூர்த்தியான பின் நீங்கள் தரும் உபரி தண்ணீரை எந்த எதிர்ப்பும் இன்றி பெற்று கொண்டு அமைதியாய் இருக்கிறோம்.

பெண்களுக்கு மட்டுமல்ல; எந்த மனிதனுக்கும் அகம்பாவம் கூடாது. தண்ணி அடித்து விட்டு டுவீட் செய்து, இப்போது "தமிழ் நாடு பக்கம் வர மாட்டேன்; தமிழில் நடிக்க மாட்டேன்" என்று அழுது புலம்புகிறீர்கள். அடுத்த வருட கிங் பிஷர் காலண்டரில் இடம் பிடிக்க நீங்கள் போட்ட நாடகம் இனிதே முடிந்தது. இனியாவது நாவை அடக்கி பேச கற்று கொள்ளுங்கள் !

ஆனந்த் கார்னர்


Everyday may not be good, but there is something good in every day.

ரசித்த கவிதை


எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை.
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை

நாயைக் கண்டதும் பயப்படுகிறேன்.
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது.

நான் அறையில் உறங்குகிறேன்.
நாய் தரையில் உறங்குகிறது.
நாய் தேர்தலில் நிற்பதில்லை.
நானும் தேர்தலில் நிற்பதில்லை.

நாய் இப்போதும் நாயாக இருக்கிறது.
மனிதன் நான் எல்லாவற்றுக்கும்
நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன். -கோசின்ரா

ஐ.பி.எல் இறுதி போட்டி


ஐ.பி.எல் லை இந்தியன் பிரீமியர் லீக் என்பதை விட இந்தியன் பெட்டி லீக் என்பதே சரியாக இருக்கும். முதலில் பண பெட்டி வைத்து தங்கள் அணிக்கான வீரர்களை வாங்குகிறார்கள். பின் ஆட்டம் துவங்கியதும் அதே பெட்டி மூலம் அடுத்த அணி வீரர்களை தங்கள் வெற்றிக்காக வாங்குகிறார்கள். அருமையாக பந்து வீசும் ஹிலன்பாகஸ் என்கிற சென்னை வீரர் ஒவ்வொரு முக்கிய போட்டியிலும் தன் கடைசி ஓவரில் பல புல்டாஸ்கள் போட்டதை பார்த்தால் மேட்ச் பிக்சிங் உண்டு என்பது நிச்சயம் தெரிந்தது.

சென்னை தோற்றதை விட வருத்தம் மேட்சை நேரில் பார்த்து கண்ணீர்  விட்டு அழுத 35000 சென்னை மக்களை நினைத்து தான் ! நொந்து போன இவர்கள் மூட் சரியாக சில நாள் ஆகியிருக்கும் !

பொதுவாக கோப்பைகள் ரோலிங் முறையில் இருக்கும். அதாவது ஒரு முறை வென்ற அணி அந்த கோப்பையை ஒரு வருடம் வைத்திருக்கும், அடுத்த வருடம் வேறு அணி வென்றால் அதே கோப்பை அவர்களிடம் செல்லும். ஆனால் மூன்று முறை தொடர்ந்து ஒரு அணி கோப்பை வென்றால் அந்த குறிப்பிட்ட கோப்பை அவர்களிடமே தங்கி விடும். அடுத்த முறை புது கோப்பை தான் செய்வார்கள். சென்னை கோப்பையை தன்னிடமே தக்க வைப்பதை நூலிழையில் தவற விட்டது. :((

நாட்டி அஜூ கார்னர்


நாட்டி - அஜூ இருக்கும் இடத்தை வீட்டு வாசலுக்கு நேரே மாற்றி விட்டோம். இங்கும் ஸ்க்ரீன் கம்பி மீது தான் இருப்பார்கள். தேவையான போது கூண்டின் மேல் இருக்கும் சாப்பாட்டை போய் சாப்பிட்டு கொள்வார்கள்.

கூண்டின் மேல் இருவரும் இருக்கும் போது நாட்டியை எங்கள் பெண் எடுத்து கொஞ்ச, அஜூ பயத்தில் கீழே இறங்கி, தத்தி தத்தி நடந்து வீட்டு வாசலுக்கு வந்து விட்டான். வீட்டின் உள்ளே இருந்து அதனை பார்த்த எனக்கு அதிர்ச்சி ! அவரசமாய் ஓடினால் என்னிடமிருந்து தப்புவதாக நினைத்து வெளியே பறந்து விட வாய்ப்புண்டு. மிக மெதுவாய் போய் உள்ளே விரட்ட, நல்ல வேளையாக உள்ளே வந்து விட்டான். ஒரு நொடி கவனிக்காமல் இருந்தால் வீட்டை விட்டு வெளியே போயிருப்பான். எப்போதும் கதவு திறந்து இருக்கும் அதற்கு நேரே தான் இருவரும் இருப்பார்கள். ஆனால் பறக்க பார்த்ததில்லை.

வெளியே போவதில் பிரச்சனை பக்கத்து வீட்டிலியே நான்கு நாய்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கவ்வினாலும் உடனடி மரணம் தான் ! நல்ல வேளை அன்று அஜூ தப்பி விட்டான் என பெருமூச்சு விட்டோம்

ஷ்......அனுஷ்கா !


‘‘இந்த அனுஷ்காவிடம் என்ன இருக்கிறது என்று கோடிகளில் கொட்டிக் கொடுத்து அப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்?’’

‘‘அனுஷ்காவின் இதழ், இடை போன்ற கவர்ச்சிப் பிரதேசங்கள் எதுவுமே ‘என்னைப் பார்... என் அழகைப் பார்’ என்று துருத்தா தவை... உறுத்தாதவை. அதேசமயம், மழையில் நனைந்து, பிகினியில் உருண்டு புரளும் கவர்ச்சித் தருணங்களில்... அனுஷ்காவின் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அத்தனை சாந்தமாக அழகின் எந்தத் திமிரும் தொனிக்காத ஒரு வசீகரப் புன்னகையை அது சூடி இருக்கும். ‘கவர்ச்சிப் பிரதேசங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை உண்டாக்கும் சேதங்களுக்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பாகாது!’ என்பதுபோல ஒரு குழந்தைத்தன எக்ஸ்பிரஷனைச் சுமந்து இருக்கும் அனுஷ்கா முகம். அது மிக அரிதான அழகு. அதனால்தான் ‘கோடி லேடி’யாக வலம்வருகிறார் அனுஷ்!’’

நன்றி: நானே கேள்வி - நானே பதில் @விகடன்.

கல்யாண சமையல் சாதம்


சமீபத்தில் சாப்பிட்ட கல்யாண சாப்பாட்டின் (காலை டிபன்) மெனு:

இட்லி / மசால் தோசை/ தேங்காய் சட்னி/ தக்காளி சட்னி/ பொதினா சட்னி/ சாம்பார்/

பூரி/ குருமா/

பொங்கல்/

குழாய் புட்டு/ கொண்டை கடலை/

அசோகா அல்வா/

திவ்யமான காபி

இதுக்கு மேல் டிபன் ஐட்டம் ஏதாவது மிச்சம் இருக்கா? சமீபத்தில் மணாலி போய் ரொட்டியாக சாப்பிட்டு வந்தவன், இங்கு இந்த உணவுகளை பார்த்ததும் பாய்ந்து விட்டேன். அனைத்திலும் ஒன்று சாப்பிடவே கஷ்டமாய் இருந்தது. பக்கத்தில் ஒருத்தர் எக்ஸ்ட்ரா பூரி எல்லாம் வாங்கி சாப்பிட்டார். நம்மை விட அதிக தூரம் டூர் போயிருப்பார் போல :)

சமீபத்திய பதிவுகள்:


ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்

குளு-மணாலி பயணம் -படங்கள் டிரைலர்

சென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்

Tuesday, May 29, 2012

சென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்

ஒவ்வொரு முறை பொது தேர்தலில் தோற்கும் போதும் கலைஞர் " சூடு, சொரணையற்ற தமிழர்கள்" என அறிக்கை விடுவார். அறுபது ஆண்டுகளுக்கு மேலாய் தமிழர்களை உன்னிப்பாய் கவனித்து அவர்களின் இந்த குணத்தை exploit செய்பவர் சொன்னால் தவறாகவா இருக்கும்? அப்படி திட்டப்பட்டதை மறந்து அடுத்த ஐந்து ஆண்டில் மீண்டும் தி.மு.க வுக்கே வாக்களித்து, கலைஞர் சொன்னது மெய் என்று நிரூபிக்கும் தமிழர் கூட்டம் ! அப்படி மீண்டும் ஒரு முறை நிரூபிக்கும் சம்பவம் சென்னையில் நடந்தேறி வருகிறது. பெட்ரோல் தட்டுப்பாடு !

**
ஞாயிறு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. சென்று திரும்பும் போது அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பெட்ரோல் இல்லை. ஒரு டிராபிக் போலீசிடம் விசாரித்தால், " அப்படியா சார்? எங்கேயும் பெட்ரோல் இல்லையா? எல்லாத்துக்கும் சென்ட்ரல் கவர்மெண்டு தான் சார் காரணம்" என்றார் மம்மியை கண்டு பம்மும் மந்திரி போல ! அருகிலுள்ள மற்றொரு போலிஸ் காரர் " ஆமாப்பா .. எங்கேயும் பெட்ரோல் இல்லை" என்றார். சரி இது தற்காலிகமானது மறு நாள் கிடைக்கும் என வீடு வந்து சேர்ந்தேன்.

திங்கள் கிழமை நிலைமை மோசமானது. அன்று ஒரு கல்யாணத்துக்கு பாடி வரை செல்ல வேண்டி இருந்தது. வீட்டிலிருந்து முப்பது கிலோ மீட்டர். பல பங்குகளில் பெட்ரோல் இல்லை. எங்கு கிடைக்கும் என தேடி, கியூவில் நின்று பெட்ரோல் போடுவதற்குள் நொந்து நூடுல்ஸ் ஆகி விட்டேன்.

பாடி செல்லும் வரை ரோடில் கண்ட காட்சிகள் பரிதாபம் ! பத்துக்கு ஒன்பது பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்தன. இருக்கும் ஒரு பங்கில் கூட்டம் சொல்லி மாளாது. அந்த இடத்தில ரோடை கிராஸ் செய்யவே முடியாத சூழல். ஒரு பக்கம் பாதி வழியில் வண்டி நின்று போனதால் காலி பாட்டிலுடன் பலர் பெட்ரோல் கேட்டு கியூவில் நிற்கிறார்கள். அதற்கு தனி கியூ.

சில இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்றுள்ளனர்.

மக்கள் என்ன சொல்கிறார்கள்?

"பெட்ரோல் விலை பத்து பெர்சன்ட் ஏறிடுச்சுல்ல.. அதான் எப்படியோ பெட்ரோல் கிடைச்சா போதும்; விலை எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு நாம நினைக்கணும்னு இப்படி பண்றாங்க" இது ஒரு சாரார் கருத்து.

இன்னொரு குருப்: " பெட்ரோல் விலை மறுபடி குறைய போகுது. அதான் பெட்ரோல் பங்குகள் வாங்கி ஸ்டாக் வச்சிக்க மாட்டேங்குது. அதிக விலைக்கு வாங்கிட்டு அப்புறம் கம்மி விலைக்கு அதை நஷ்டத்தில் விக்கனும்னு பாக்குறாங்க"

ஆனால் ஆயில் கம்பனிகள் டிவி மற்றும் பேப்பர் மூலம் சொல்வது வேறாய் உள்ளது. அவர்கள் சொல்வதாவது:

சென்னையில் பெட்ரோல் டிமாண்ட் அதிகம் ஆகிடுச்சு ( அதெப்படி நீங்க விலை ஏத்துன மறுநாளில் இருந்து திடீர்னு டிமாண்ட் அதிகம் ஆகும்?) வர வேண்டிய டாங்குகள் வரலை. அதான் இப்படி ! நாளை டீசல் டாங்கு வந்துடும் மறுநாள் எல்லாருக்கும் டீசல் கிடைக்கும் (அப்போ பெட்ரோல் டாங்கு எப்ப வரும்?)

இவ்வளவு நடந்தும் கூட மத்திய அரசு விலை ஏற்றுவது மட்டும் தான் என் வேலை; மற்றபடி பெட்ரோல் கிடைக்காமல் அல்லாடினால் எனக்கென்ன என்று ஜம்மென்று உட்கார்ந்துள்ளனர்.

அருகில் இருந்து வேடிக்கை பார்க்கும் மாநில அரசும் மக்கள் கஷ்டத்தை மத்திய அரசிடம் எடுத்து சொன்ன மாதிரி தெரிய வில்லை.

அரசியல் வாதிகள் என்பவர்கள் மக்களை சுரண்ட, கொள்ளை அடிக்க மட்டும் தான்; மக்கள் கஷ்டப்பட்டால் அதை நீக்க துளி நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்கிற என் எண்ணம் மீண்டும் ஒரு முறை உறுதி படுகிறது.

இதில் அரசியல் வாதிகள் செய்ய என்ன இருக்கு என கேட்கலாம்:

மக்களின் கஷ்டம் எதுவாயினும் அதனை தீர்க்க வேண்டிய பொறுப்பு Elected representatives-க்கு தான் உண்டு. ஆனால் இவ்விஷயத்தில் மட்டுமல்ல எவ்விஷயத்தில் இறங்கினாலும், தனக்கு எவ்வளவு கமிஷன் வரும் என்று மட்டும் தான் பார்ப்பார்கள் இந்த அரசியல் வியாதிகள் !

மூன்றாம் நாளாக இன்று ஆங்காங்கு சில பெட்ரோல் பங்குகள் மட்டும் திறந்துள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல், ஆனால் அமைதியாக கியூவில் இருக்கிறது.

ரோடில் வண்டிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாய் உள்ளது. அலுவலகத்தில் பார்க்கிங் ஏரியா பாதி காலியாய் உள்ளது !

இத்தகைய நிலை வரும்படி ஏன் விடவேண்டும்? மற்ற மாநிலத்தில் இப்படி இல்லாத போது சென்னை மீது மட்டும் ஏன் இந்த அலட்சியம்?

இனி ஒரு சில நாட்களில் பெட்ரோல் கிடைத்தால் கூட மக்கள் பயத்தில் தங்கள் டேன்க்குகளை முழுதாய் நிரப்பி வைத்து கொள்வார்கள்.

சென்னை மக்கள் சரியான விஷயத்துக்கு சரியான அளவில் கோபப்பட தெரியாதவர்கள். இந்நேரம் இன்னொரு ஊரில் இது நடந்தால் பெட்ரோல் பேங்க் மீது கல்லெறி சம்பவம் உள்ளிட்ட பல கொதிப்பான விஷயம் நடந்திருக்கும். ஆனால் இங்கோ மக்கள் அமைதியாக கியூவில் நிற்கிறார்கள். ஆனால் இந்த சம்பவங்களின் எதிரொலி நிச்சயம் தேர்தலில் தெரியும் !

உபயோகமான தகவல்: அனைத்து ஷெல் (Shell) பங்குகளில் பெட்ரோல் தொடர்ந்து கிடைக்கிறது. மற்ற கடைகளை விட லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகம் என்றாலும், தரம் மற்றும் அளவு சரியாய் இருக்கும். விலை அதிகம் என்பதால் ஷெல் பக்கம் போகாத நான் இப்போது ஷெல்லை தான் நாடி வருகிறேன் !

*******
சமீபத்திய பதிவுகள்:


ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்

குளு-மணாலி பயணம் -படங்கள் டிரைலர்

Monday, May 28, 2012

தில்லி, சிம்லா, குளு-மணாலி பயணம்-அசத்தல் படங்கள்- டிரைலர்

தில்லி, சிம்லா, குளு, மணாலி பயண கட்டுரை விரைவில் துவங்குகிறது. மினி டிரைலர் இதோ.

சென்று வந்த ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு போட்டோ வீதம் மட்டுமே பகிர்கிறேன். 10 நாளில் ஆயிரத்துக்கும் மேல் புகைப்படங்கள் எடுத்தோம். பாதி குடும்ப உறுப்பினர் படங்கள் என்பதால் பொது வெளியில் பகிர மாட்டேன். அவை தவிர்த்து இங்கு பகிர தயாராக உள்ள படங்கள் மற்றும் தகவல்கள் ஏராளம்.

பெரும்பாலும் பயண கட்டுரையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டு அல்லது மூன்று இடங்கள் பற்றி சொல்வேன். ஆனால் இம்முறை பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளதால் பொறுமையாக , ஒரு அத்தியாயத்துக்கு ஒவ்வொன்றாக தான் சொல்ல போகிறேன். ஒரே பகுதியில் நிறைய தகவல் இருந்தாலும் படிக்க சுவாரஸ்யம் இல்லாமல் போகலாம் அல்லவா?

இப்போதைக்கு சில படங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு :


இம்புட்டு பேர் எங்கிட்டு போறாங்க?

பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டையில்

மகாத்மாவின் இறுதி நிமிஷங்கள் :பல நெகிழ்வான தகவல்கள்



 இது தாஜ்மஹாலா? ஆனா வெள்ளை கலரில் இல்லையே?
இந்த தொங்கு பாலத்தை தெரியுதா? பல படத்தில் பார்த்திருக்கோம்

குட்டி சர்தார்ஜியிடம் அய்யாசாமி என்ன சொன்னார்?  பையன் செமையா முழிக்கிறான் !
மறக்க முடியாத  Rafting பயணம் -வீடியோவுடன்
  
பூ மிதிக்க ரெடி
       
உங்களுக்காக (குறிப்பெழுதி) உழைக்கும் அய்யாசாமி  

நூற்றுகணக்கான கார் குளிரில் நடுங்கிய படி ஏன் காத்திருக்கு? நேரடி அனுபவம்
தலை நகரின் புகழ் பெற்ற இந்த இடத்தில்  மனிதர்கள்,   குறிப்பிட்ட  இடத்துக்கு மேல் அனுமதி இல்லை. ஆனால் உள்ளே ஹாயாக தூங்கும் நாய்கள் 
With Rushi S/ o Mr. Vikash Joshi, my friend

High Point of the whole trip: பனியில் ஆடிய விளையாட்டுகள் (உடன் இருப்பது பம்பாய் குடும்பங்கள்)
பனியிலும் அய்யாசாமி  மட்டும் ஏன் கிளவ்ஸ் போடலை?
இரவு ஒளி வெள்ளத்தில் குதுப்மினாரில் இனிய அனுபவம்
முன்னாள் பிரதமர் சுடப்பட்ட இடம்; நெகிழ்வான தகவல்கள் 
 
108 அடி உயர கடவுள்: காலை பார்த்து யார் என  ஊகிக்க   முடிகிறதா?


கோட்டையை பிடிப்பது எப்படி? நண்பர் தேவா என்ன சொல்கிறார்? 

பியானோ வாசிப்பாராம்...நல்லா குடுக்குறாரையா போசு !
அதிர்ச்சி தந்த Paragliding அனுபவங்கள் ! With வீடியோ....

இந்த படத்துக்கு சிறந்த காமன்டுகள் வரவேற்கபடுகின்றன  :))
சாகசத்துக்கு தயாராகிறார் அய்யாசாமி ! விரிவான படங்கள் மற்றும் வீடியோ ..



இந்த பெண்கள் என்ன தைக்கிறார்கள் என தெரிகிறதா?
 
கையில் ஏறி விளையாடும் அணில் ...ஒரு அனுபவம்

இப்படி கம்பி எண்ணும்படி என்ன தப்பு பண்ணார் ?

இந்த புகைப்படம் எடுத்த வி.வி.ஐ.பி யார்? மறக்க முடியாத வரலாற்று புகைபடங்கள் பல..Wait and Watch !

மணாலியில் தங்கிய ஹோட்டலின் மிக மிக அற்புத கார்டன் ஒரு பகுதி (மற்றவை பின்பு)

விமான ஜன்னலில் இருந்து மாலை வானம் (விமான பயணம், படங்கள் மற்றும் வீடியோ மட்டும் தனி பதிவாக) 
தில்லியில்  ஷாப்பிங் செய்ய வேண்டியது இந்த தெருவில் தான் !
விபரங்களுக்கு காத்திருங்கள் !
அய்யாசாமி பின்னாலிருக்கும் குரங்கு அவர் மேல் பாய்ந்ததா இல்லையா? ஊமை விழிகள் டைப் பாட்டியிடம் என்ன ரகசியம்? 

                    என்ன நடக்குது இங்கே? ஆச்சரியம் + நெகிழ வைத்த இடம் !
**********
ஆனந்த விகடனில் வெளியான சமீபத்திய பதிவு வாசிக்க இங்கே க்ளிக்  செய்யவும்  : ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்

Saturday, May 26, 2012

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சில அனுபவங்கள்

ஐ.பி. எல் பைனல் நடக்கும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான் பார்த்த சில மேட்ச்கள் குறித்த அனுபவத்தை பகிர்கிறேன்:


இந்தியா நியூசிலாந்து டெஸ்ட் மேட்ச் வருடம் : 1995

திருச்சியில் என் நண்பன், அங்கு நடக்கும் டிஸ்டிரிக்ட் மேட்ச்களுக்கு அம்பயர் ஆக இருப்பார். இத்தகைய அம்பயர்களுக்கு சென்னையில் நடக்கும் மேட்ச்க்கு ஒரு டிக்கெட் இலவசமாக கிடைக்கும். அவர் போக முடியாத போது அந்த மேட்ச் டிக்கெட்டை நமக்கு தந்து விடுவார். இப்படி தான் துவக்கத்தில் நிறைய மேட்ச்கள் இலவசமாக பார்த்தேன்.

இந்த டெஸ்ட் மேட்சில் பெரிய காமெடி மேட்ச் ஆரம்பிக்க சில நாள் முன் மழை பெய்தது. அதனால் கடைசி நாள் வரை மேட்ச் நடக்கவே இல்லை. அப்புறம் என்ன விசேஷம் என்கிறீர்களா? மேட்ச் நடக்குதோ இல்லையோ ஒவ்வொரு நாளும் காலை அங்கு ஒரு விசிட் அடிப்பேன். என்னை போல் சில நூறு ரசிகர்கள் மட்டும் கிரவுண்ட் வருவார்கள்.

அம்பயர் டிக்கெட் என்பது விளையாட்டு வீரர்கள் இருக்கும் அறைக்கு மிக அருகில் ! எனவே தினம் அனைத்து இந்திய வீரர்களையும் பார்க்கலாம். பார்ப்பது மட்டுமல்ல கூட்டம் மிக குறைவு என்பதால் அனைவரிடமும் நன்கு பேசலாம்.

அப்போது அசார் கேப்டன் ! அசார், கும்ப்ளே, ஸ்ரீநாத், வேங்கடபதி ராஜு, காம்ப்ளி என பலரிடுமும் மிக சாதாரணமாக பேசி, ஆட்டோ கிராப் வாங்கினேன். பேச முடியாத, ஆட்டோ கிராப் வாங்க முடியாத ஒரே நபர் சச்சின் தான் ! சச்சினை அருகில் பார்த்திருக்கிறேன். ஆனால் கிட்டே போய் பேச முடியாது. அப்போதே இந்தியாவில் மிக அதிக பாபுலர் ஆன வீரர் அவர் தான். கூட்டம் அவரை பார்க்க தான் மோதும். கூட்டம் பார்த்தாலே சச்சின் ஓடி விடுவார்.

எனக்கு வீரர்களை அருகில் பார்த்து பேசியதில் கிடைத்த ஆச்சரியம் : கும்பிளே மற்றும் ஸ்ரீநாத் சுத்த தமிழில் பேசியது தான். அதுவும் ஸ்ரீநாத் பேசும் தமிழ் நம் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த மாதிரி அவ்வளவு சுத்தம் !

ஐந்தாவது நாள் மதியம் மேட்ச் ஆரம்பித்தது. அரை நாள் இந்தியா பேட் செய்தது. சச்சின் ஒரு அரை சதம் அடித்தார். அந்த அரை நாள் டெஸ்டுக்கு மேன் ஆப் தி மேட்ச்-ம் அவர் தான். ஐந்து நாளும் சுத்தமாய் மழை இல்லா விட்டாலும் பிச் சரியால்லாமல் மேட்ச் இப்படி ஆனது ! ஒரு காலத்தில் சென்னை கிரவுண்டில் அவ்வளவு லட்சணமா மழை நீர் வடியும் வசதி (drainage facility) இருந்திருக்கு !

ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து உலக கோப்பை 1996

பகல் இரவாக நேரில் பார்த்த முதல் மேட்ச் இது. அடடா ! முதல் முறை அந்த சூழலை நேரில் பார்த்து அசந்து போனேன். மதிய நேரம் மேட்ச் ஆரம்பிக்கும். அப்போது சாதாரண சூரிய ஒளியில் ஆடுவார்கள். முதல் பேட்டிங் முடிய ஆறு மணி ஆகும். அப்போது ஒளி விளக்குகள் முழுதும் எரியும். ஆட்ட சுவாரஸ்யத்தில் எப்போது அந்த விளக்குகள் எரிய ஆரம்பித்தது என தெரியாமல் விழிப்போம். இதனாலேயே தான் ஐ. பி. எல் முதல் முறை பார்க்க போகும் நண்பர்கள் மாலை நான்கு மணி மேட்ச் பார்ப்பது சிறந்தது. நிஜ சூரிய ஒளியில் முதலிலும் பின் விளக்குகள் சூழ இரவிலும் பார்ப்பது அருமையான அனுபவம்.

சரி குறிப்பிட்ட மேட்சுக்கு வருவோம். உலக கோப்பை யில் கால் இறுதி ஒரு ஆட்டம் மட்டுமே சென்னையில் நடந்தது. அது ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்து மேட்ச். முதலில் ஆடிய நியூசிலாந்து 290 ரன்கள் எடுத்தது. பின் ஆடிய ஆஸ்திரேலியா அதனை அடிக்காது என்றே நினைத்தோம். ஆனால் மிக எளிதாக அதனை அடித்து ஜெயித்தது. மார்க் வா செஞ்சுரி மற்றும் மேன் ஆப் தி மேட்ச்.

இந்த மேட்சில் மறக்க முடியாத நபர் ஷேன் வார்ன். அலுவலக நண்பர்கள் சிலர் சேர்ந்து சென்றிருந்தோம். முதலில் ஆடிய நியூசிலாந்து நன்கு அடிக்கவும், பவுண்டரி லைனில் எங்கள் அருகில் பீல்டிங் செய்த ஷேன் வார்னை கூப்பிட்டு " வார்னே ஆஸ்திரேலியா " என்று கூறி விட்டு தோற்று விடும் என்பதற்கு அடையாளமாக கட்டை விரலை தரை நோக்கி கீழே காட்டினோம். ஆனால் வார்னே " நோ நோ " என கூறி தன் கட்டை விரலை மேலே காட்டினார். எங்களிடம் இப்படி சொல்லி அடுத்த ஓவர் வார்னே வீசினார். அப்போது நன்கு ஆடிய நபரை அவுட் செய்ததுடன் மெய்டன் ஓவர் போட்டு விட்டு, எங்கள் அருகில் மீண்டும் பீல்ட் செய்ய வந்தார். இப்போது நாங்கள் அவரை பாராட்டி கை தட்ட, செம குஷி ஆகி தன் தொப்பியை மடக்கி உடலை வளைத்து எங்களுக்கு நன்றி சொன்னார்

இந்தியா Vs பாகிஸ்தான் : பெப்சி இண்டிபெண்டன்ஸ் கப் - ஒரு நாள் போட்டி - 1997

இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருடங்கள் முடிந்ததை ஒட்டி நடந்த இண்டிபெண்டன்ஸ் கோப்பை இது. இந்தியா இந்த மேட்சில் தோற்றாலும் மறக்க முடியாத ஒரு மேட்ச் அதற்கு சில காரணம் இருக்கிறது.

என் மாமா ஒருவர் மூலம் வி.ஐ.பி டிக்கெட் கிடைத்தது. அது ஒரு பாக்ஸ் டிக்கெட். சினிமா தியேட்டரில் உள்ளது போல் ஒரு கண்ணாடி அறைக்குள் சில நூறு பேர் தான் இருப்பார்கள். அங்கு பெரிய டிவி திரையும் உண்டு. டிவியில் நீங்கள் பார்க்கும் மேட்ச் அதில் முழுதும் ஒளி பரப்பாகும். ஒவ்வொரு பந்தையும் நேரில் பார்ப்பதோடு, அந்த பந்து முடிந்ததும் டிவியிலும் பார்ப்பார்கள் அனைவரும் !!

பாகிஸ்தான் முதலில் பேட் செய்து அடி அடி என அடித்தது. பேட்டிங்கில் அதுவரை கபில் அடித்த 175 தான் உலக சாதனையாக பல ஆண்டுகளுக்கு இருந்தது. அதை முறியடித்து சயீத் அன்வர் 194 ரன் இந்த மேட்சில் எடுத்தார். பாதி நேரத்துக்கும் மேல் அவருக்கு பை ரன்னர் இருந்தது குறிப்பிடத்தக்கது. முதலில் இரட்டை சதம் எடுக்கும் வீரராக அவர் ஆவோரோ என பேசி கொண்டோம். 194 ரன்னில் அவர் அவுட் ஆகி வரும் போது, மைதானத்தில் இருந்த ஒவ்வொருவரும் எழுந்து நின்று அவர் உள்ளே சென்று சேரும் வரை கை தட்டினர் ! அது தான் சென்னை மக்கள் ! சயீத் அன்வர் சொந்த ஊரில் ஆடி இந்த சாதனை செய்து விட்டு அவுட் ஆனால், எப்படி கை தட்டி ஆரவாரம் செய்வார்களோ அப்படி இருந்தது இந்த பாராட்டு !

இந்த மேட்சுக்கு காப்டன் சச்சின் ! சச்சின் காப்டன்சியை நேரில் பார்த்து வெறுத்து போனது அன்று தான் ! பவுலர் பாட்டுக்கு பவுலிங் போட இவர் பாட்டுக்கு பீல்டிங் செட் செய்கிறார். பவுலர் நடந்து வரும் போதோ, அல்லது பந்து வீச ஓட ஆரம்பித்த பிறகோ கூட, சச்சின் பீல்டருடன் பேசி கொண்டும், மாற்றி கொண்டும் இருப்பார் !

இந்தியா மிக மோசமாக இந்த மேட்சில் தோற்றது. யாரும் ஜெயிக்கும் என எதிர்பார்க்கலை. டிராவிட் அந்த மேட்சில் அதிரடியாய் ஆடி சதம் அடித்தது ஆச்சரியம்.

ஒரு உலக சாதனை நடந்த மேட்சை நேரில் பார்த்தேன் என்பதை பெருமையாக நீண்ட நாள் சொல்லும் படி இருந்தது இந்த மேட்ச் !

இந்தியா Vs பாகிஸ்தான் டெஸ்ட் மேட்ச் வருடம் : 1999

அனைவரும் அறிந்த மேட்ச். நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்தியாவுக்கு டூர் வந்திருந்தது பாகிஸ்தான். முதல் டெஸ்டே சென்னையில் தான். வாசிம் அக்ரம் மிக அருமையாக பந்து வீசிய காலம். ஷோயப் அக்தர் அந்த சீரிஸில் தான் அறிமுகம்.

சென்னை டெஸ்ட் நான் ஒரு நாள் மட்டும் தான் பார்த்தேன். அன்று சிறப்பாய் ஏதுமில்லை. அடுத்த நாள் டிக்கெட் இருந்தது. ஆனால் அந்த மேட்ச் முழுக்கவே பாகிஸ்தான் இருந்ததால் வெறுத்து போய் போகலை.

கடைசி நாள் டிராமாக்களை டிவியில் பார்த்து மனம் நொந்தேன். சச்சின் மிக அருமையாக ஆடி வெற்றி கோட்டின் அருகே கொண்டு சென்று விட்டு பேக் ஸ்பாசம் காரணமாக அவுட் ஆக, அடுத்து பத்து ரன் எடுக்க முடியாமல் நான்கு விக்கட்டை இழந்து ஒரு டெஸ்ட் தோற்றோம். டிபிகல் இந்தியன் பேட்டிங் !

இதன் பின் சில ஐ. பி. எல் மேட்ச்கள் பார்த்திருக்கிறேன். எட்டு மணி மேட்சுக்கு ஆறு மணிக்கெல்லாம் உள்ளே சென்றால் தான் நல்ல சீட் கிடைக்கும். மாலை ஆறு முதல் ஏழரை வரை சிறந்த பின்னணி பாடகர்கள் துள்ளலுடன் கூடிய பாடல்களை பாட மைதானம் களை கட்டும். மேட்ச் நடக்கும் போது எழும் சத்தம், கூட்டமாய் எழுப்பும் அலை எல்லாம் பார்ப்பது ஒரு தனி அனுபவம் !

நீங்கள் இதுவரை சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க வில்லையெனில் வாழ்க்கையில் ஒரு நல்ல அனுபவத்தை தவற விடுகிறீர்கள் என்று அர்த்தம்.

ஆனந்த விகடனும், வீடு திரும்பலும்

சுஜாதா என்கிற சொல்லுக்கு அடுத்து, விகடன் என்கிற சொல் தான் பல ஆண்டுகள் ஆகியும் வியப்பையும் மரியாதையும் தருகிறது.

ஒரு காலத்தில் விகடன் (மாணவ) நிருபர் ஆக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. நேர்முக தேர்வு வரை போய், அங்கு சொதப்பியதன் வலி இன்னும் மனதில் உண்டு.

விகடன் வலையோசை துவங்கிய கொஞ்ச நாளிலேயே தஞ்சை பகுதி நண்பர்/ நிருபர் லோகநாதன் தொடர்பு கொண்டு வலையோசையில் வீடுதிரும்பல் பற்றி எழுத விருப்பம் தெரிவித்தார். " இப்போது வசிப்பது சென்னையில். சென்னை எடிஷனில் நம் ப்ளாக் பற்றி வெளியானால் தான் நன்றாய் இருக்கும்" என்றேன். பின் அவரே சென்னை எடிஷனை கவனிக்கும் செந்தில் குமாரை அறிமுகம் செய்தார். சென்னையில் வெளியிடுவதா, தஞ்சை பதிப்பிலா என்ற குழப்பம் இருவருக்கும் இருக்க, இப்போது தஞ்சை பதிப்பில் வீடுதிரும்பல் பற்றி வெளியாகி உள்ளது.

சென்னை பதிப்பில் வந்திருந்தால், என்னை நன்கு அறிந்த சென்னையிலிருக்கும் அனைத்து நண்பர்களும் பார்த்திருப்பார்களே என்கிற வருத்தம் சிறிது உண்டு. சில விஷயங்கள் நம் கையில் இல்லை. வேறன்ன சொல்வது?

இந்த இதழ் வெளியான பின் பின்னூட்டத்திலும், போனிலும் மெயிலும் பத்துக்கும் மேற்பட்ட பதிவுலக நண்பர்கள் தொடர்பு கொண்டு இத்தகவலை கூறி விட்டனர். விகடனை எவ்வளவு பேர் நெருக்கமாய் கவனிக்கிறார்கள் பாருங்கள் ! அன்போடு தகவல் தந்த அனைத்து நண்பர்களுக்கும் ....குறிப்பாய் இந்த பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பிய செல்வராஜ் ஜெகதீசன் அவர்களுக்கும் மிக்க நன்றி !

இதோ விகடனில் வெளியான பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
 
 

Thursday, May 24, 2012

வானவில் 89: கல்வி கட்டணம்- இளையராஜா-ஐஸ்வர்யாராய்

தில்லி, சிம்லா, குலு, மணாலி பயணம் 

தில்லி, சிம்லா, குலு, மணாலி 10 நாள் பயணம் இன்றுடன் முடிந்தது. நினைத்ததை விட மிக அதிக அனுபவங்களை, நண்பர்களை, தகவல்களை மகிழ்ச்சியை கொடுத்தது இந்த பயணம். விரைவில் இதன் பயண கட்டுரை தொடங்கும் என்பது யாம் சொல்லாமலே உங்களுக்கு தெரிந்திருக்கும் !



முதல் சில நாட்கள் நான் கேட்டு கொண்டதற்கு இணங்க நண்பர் ரகு பதிவுகளை Draft-ல் இருந்து பிரசுரித்து கொண்டிருந்தார். பின் அவரிடம் இணையம் பக்கம் வருவதே சிரமம் ஆக உள்ளதால் மற்ற பதிவுகளை பிரசுரிக்க வேண்டாம் என கேட்டு கொண்டேன். இப்போது ஊருக்கு திரும்பி விட்டதால் மறுபடி ஆட்டம் நிதானமாக தொடங்கும் !

தமிழக பள்ளிகளில் கல்வி கட்டணம்

கல்வி கட்டணம் குறிப்பிட்ட அளவு தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசும், உயர்நீதி மன்றமும் உத்தரவு போட்டாலும் தமிழக பள்ளிகள் வழக்கத்தை விட அதிக பீஸ் தான் வாங்குகின்றன. எனக்கு தெரிந்த ஒரு பள்ளியில் முன்பெல்லாம் ரெசீப்ட் தருவார்கள். இப்போதோ மாதாந்திர பீசுக்கு மட்டும் பள்ளி பெயரில் ரெசீப்ட் தந்து விட்டு, பெரிய அமவுண்டுக்கு சாதாரண தாளில் எந்த விளக்கமும், பள்ளி பெயரும் இன்றி எழுதி தருகிறார்கள். பள்ளி பெயர் போட்டு தந்தால் அதிகம் வசூலிக்கிறார்கள் என தெரிந்து விடுமே !!

மாணவர்களுக்கு நேர்மையை கற்று தர வேண்டிய இடத்திலேயே நேர்மை இல்லை ! என்ன சொல்வது?

ரசித்த வரிகள்

எந்த மலரும் நாம் விரும்பியதால் மலரவில்லை.

களைகள் நாம் விரும்பாத போதும் முளைக்காமல் இருப்பதுமில்லை -டோகன் (ஜப்பான்)

நாட்டி- அஜூ கார்னர்

அஜூவிற்கு பியூட்டி பாய் என்று ஒரு பெயர் உண்டு என முன்பே கூறியிருந்தேன். அதை தவிர இன்னொரு பெயர் இப்போது வைத்திருக்கிறோம் அது " பம்மல்" .

ஸ்க்ரீன் மேலே தான் நாட்டி அஜூ இருவரும் எப்போதும் இருப்பர். அந்த ஸ்க்ரீன் பக்கம் நாம் போனாலே அஜூ சற்று பயந்து அங்கும் இங்கும் நகர்வான். பின் பக்கமாக அவன் நகர்ந்து போவது செம காமெடியாக இருக்கும். இப்படி நம்மை பார்த்தாலே அங்கும் இங்கும் நடந்து பம்முவதால் தான் அவருக்கு பம்மல் என பெயர் வைத்தோம். பம்மல் என்றாலோ அஜூ என்றாலோ அவனை தான் கூப்பிடுகிறோம் என தெரியும் ! நாம் அவனை கூப்பிட்டால், தன் அழகான  பெரிய கண்களால் நம்மை பார்ப்பான் இந்த பட்டு பையன் !

பத்து நாள் கழித்து இன்று ஊருக்கு வந்ததும் முதலில் எங்கள் வீட்டுக்கு போகாமல், நாங்கள் இல்லாத போது நாட்டி அஜூ இருந்த மாமனார் இல்லம் தான் முதலில் சென்றோம். தினமும் போன் செய்து விசாரிக்கவும் தவற வில்லை.  We missed them so much !!

என்னா பாட்டுடா இது !

சமீபத்தில் விஜய் டிவியில் இறந்த சில பின்னணி பாடகர்கள் பாடிய பாடலை நினைவு கூறும் விதமாய் சிறுவர் சிறுமிகள் பாடினார்கள். அப்போது ஸ்வர்ணலதாவின் "குயில் பாட்டு. வந்ததென்ன இளமானே " பாடலை ஒரு சிறுமி மிக சுமாராய் பாடினாள். அதை கேட்கும் போது அப்பாட்டை ஸ்வர்ணலதா குரலில் கேட்க தோன்றி இணையத்தை நாடினேன். அடடா ! என்னா அருமையான பாட்டு இது !



இளையராஜா இசை ராஜாங்கம் நடத்திய கால கட்டத்தில் வந்த பாட்டு. ராஜா பாடல்களில் எப்போதும் பிளூட் மற்றும் வயலின் இரண்டையும் மிக அற்புதமாய் பயன் படுத்துவார். இப்பாட்டிலும் அவை என்னமாய் பயன் படுத்தியுள்ளார் ...பாருங்கள் ! Class ! முதலில் பிளூட் ஒலிக்கும். அது முடிகிற இடத்தில வயலின் துவங்கும். இவை இரண்டும் மாறி மாறி பயணிக்கும். இப்படி பிளூட் மற்றும் வயலின் மாறி மாறி அசத்திய எத்தனையோ ராஜா பாட்டுகளை காட்ட முடியும்.

வீடியோவில் பார்க்கும் போது சினிமாவே ஆனாலும் இந்த பாட்டின் இறுதி பகுதியை காண மனம் வராது. நிறுத்தி விடுவேன் :((

போஸ்டர் கார்னர் 

வழுக்கையான அரவிந்த் சாமி ! குண்டான ஐஸ்வர்யா ராய் !



அய்யாசாமியின் புது போன்

அய்யாசாமி கடந்த 6 வருடங்களாக ஒரே மொபைல் போன் தான் வைத்திருந்தார். எத்தனை முறை ரிப்பேர் ஆனாலும், எவ்வளவு செலவு செய்தும் அதை சரி செய்வாரே ஒழிய மாற்றவே மாட்டார். " என் இன்னொரு விரல் மாதிரி எளிதா யூஸ் பண்ணுவேன். இதை மாற்ற மனசே இல்லை" என்பார். ஒரு முறை மிக சிக் ஆகி யாரும் ரிப்பேர் செய்ய முடியாது என்றபோது தனக்கு நன்கு தெரிந்த ஒரு மெக்கானிக்கிடம் போய் அழுது புலம்பி, இவர் இம்சை தாங்காமல் எங்கோ ஸ்பேர் பார்ட் வாங்கி அவர் அதை சரி செய்து தந்தார்.

அதன் வெளி பாகமெல்லாம் உடைந்து பார்க்கவே கோரமாக இருக்கும்.


அவர் மகளும், மனைவியும் " இந்த போன் தேவையா? மாத்துங்க" என்றாலும் காதிலேயே வாங்கி கொள்ள மாட்டார்.

திடீரென அவர் அண்ணன் மகன் புதிதாய் வேலைக்கு போனதால் இவருக்கு ஒரு சாம்சங் டச் போன் வாங்கி தந்து விட்டான். இவர் சொல்ல சொல்ல கேட்காமல் பழைய போனை உருவி போட்டு விட்டு புதுசை ஆக்டிவேட் செய்து விட்டான். மனுஷன் டச் போனை வைத்து கொண்டு அல்லாடுகிறார் !

பழசும் புதுசும்
Contacts-ல் யாரையாவது தேட முயல அது பாட்டுக்கு எங்கெங்கோ ஓடுது. மெசேஜ் டைப் செய்வதற்குள் இவருக்கு தாவு தீருது ! பார்க்கும் நபரிடமெல்லாம் " இந்த போனை எப்படி யூஸ் பண்றது?" என கேட்டு கேட்டு கற்று வருகிறார். கூடிய சீக்கிரம் கற்று தேற கூடும் !

சென்னை ஸ்பெஷல் : எக்ஸ்பிரஸ் அவின்யூவில் வியாழன் என்ன ஸ்பெஷல் ?

எக்ஸ்பிரஸ் அவின்யூவில் Hunger Games படம் பார்க்கும் போது தான் இந்த தகவல் தெரிந்தது. ஒவ்வொரு வியாழனும் எக்ஸ்பிரஸ் அவின்யூவில் எந்தெந்த ஹிந்தி படம் நடக்கிறதோ அவை அனைத்துக்கும் வியாழன் அனைத்து காட்சிகளிலும் ஆங்கில சப் டைட்டில் போடுவார்களாம் !

ஹிந்தி தெரியாது என்பதால் தான் நல்ல ஹிந்தி படங்களை சப் டைட்டில்களுடன் DVD- யில் பார்ப்பது வழக்கம். இப்படி சப் டைட்டிலுடன் காட்டினால் தியேட்டரிலேயே பார்க்கலாமே? வியாழன் பொதுவாய் அதிக கூட்டம் இராது போலும்; எனவே மக்களை தியேட்டருக்கு ஈர்க்க இந்த யோசனை செய்திருக்கலாம் !

எப்படியோ... யாம் பெரும் இன்பம் பெருக இவ்வையகம் என இத்தகவலை உங்களுக்கு பகிர்கிறேன் !

Thursday, May 17, 2012

சொத்தின் மீது வழக்கு: வில்லங்க சான்றிதழில் தெரியுமா? சட்ட கேள்வி பதில்

கேள்வி: கோபி ராமமூர்த்தி, பெங்களூர்

ஒரு சொத்து வாங்கும் போது அது சம்பந்தமாக வழக்குகள ஏதேனும் நிலுவையில் உள்ளனவா என்று தெரிந்து கொள்ள முடியுமா?

பதில் : 

நல்ல கேள்வி. Encumbrance Certificate மூலம் சொத்து மீது ஏதும் கடன் உள்ளதா என அறிய முடியுமே ஒழிய, அந்த சொத்து சம்பந்தமாய் வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை அது காட்டாது.

சொத்தை விற்கும் யாரும், அதன் மீது வழக்கு நிலுவையில் இருந்தால் அதைப் பற்றி மூச்சு விட மாட்டார்கள்…. அது தெரிந்தால் யாரும் சொத்தை வாங்க முன் வர மாட்டார்கள் என்பதால்!

இந்நிலையில் சொத்து மீது வழக்கு ஏதும் உண்டா என்பதை அறிய ஒரே வழி ரகசியமாக (Discreet) அக்கம் பக்கம் விசாரித்து பார்ப்பது தான்! அநேகமாய் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சொத்து மீது வழக்கு இருந்தால் தெரிய வாய்ப்புண்டு. அவர் மூலம் இதை தெரிந்து கொண்டு, பின் சொன்னவர் பெயரை சொல்லாமல் சொத்து உரிமையாளரிடம் ” இப்படி ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாமே?” என கேட்காலாம். விஷயம் உங்களுக்கு தெரிந்து விட்டது என்ற பின், அவர் முழு விஷயமும் பகிர வாய்ப்புண்டு!

உண்மையில் கடன்கள் எப்படி Encumbrance Certificate-ல் தெரிகிறதோ, அதே போல் வழக்குகளும் தெரிந்தால் நன்றாயிருக்கும் தான்! அரசு ஏதேனும் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால் நன்றாயிருக்கும் !

ஆங்கிலத்தில் ” Caveat Emptor ” என்பார்கள். இதற்கு அர்த்தம் “Let the buyer be aware ” – எந்த பொருளையும் வாங்குபவர் தான் ஜாக்கிரதை உணர்வோடு இருக்க வேண்டும். விற்பவர் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவற்றை மறைத்து விற்கக் கூடும்தான் ! நாம் தான் தீர விசாரித்து அறிய வேண்டும் !
*******************
கேள்வி : இளங்கோவன்

சொத்தின் மீது உரிமை கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றம், தற்போதைய உரிமையாளர் அந்த சொத்தை விற்பதற்கு, இடைக்காலத்தடை விதித்தால், அது வில்லங்க சான்றிதழில் வர வாய்ப்பு உள்ளதா? அதையும் மீறி, அந்த சொத்து விற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா?


பதில் :  

இல்லை திரு. இளங்கோவன். வில்லங்க சான்றிதழில் கடன் விபரங்கள் மட்டும் தான் வரும். வழக்கு விபரங்கள் வராது.

நீதி மன்றத்தின் இடைக் காலதடையையும் மீறி விற்க முயலுவார்களா எனில்.. நீதி மன்றத்தை மதிப்பவர்கள் அப்படி விற்க மாட்டார்கள். எதற்கும் துணிந்தோர் இடை கால தடை இருந்தும் கூட விற்க முயல கூடும். இது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டே எந்த ஒரு கிரைய பத்திரமும் (Sale deed) எழுதும் போது, அந்த சொத்தில் எந்த வழக்கும் (Dispute ) இல்லை என்றும், அந்த சொத்தை விற்க அவருக்கு எல்லா உரிமையும் உண்டு என்றும் ஒரு வேளை சொத்தில் வழக்கோ வில்லங்கமோ இருந்தால் அவற்றுக்கு விற்பவர் பொறுப்பு எடுத்து சரி செய்து தருவார் என்றும் ஷரத்துகள் போடுவது அவசியமாகிறது. 

சொத்து வாங்கும் முன் :

1) வில்லங்கம் ஏதும் இல்லையென வில்லங்க பத்திரம் பார்ப்பதும்,

2) வழக்கு இல்லை என்பதற்கு அருகில் உள்ளோரிடம் விசாரிப்பதும்,

3) சரியான முறையில் கிரைய பத்திரம் எழுதுவதும்
மிக மிக அவசியம் !

***********
வல்லமை மே 11 இதழில் வெளியானது 
********
நண்பர்களே சட்டம் குறித்த உங்கள் கேள்விகளை பின்னூட்டத்திலோ, snehamohankumar@yahoo.co.in  என்கிற மெயிலுக்கோ எழுதுங்கள்.

Wednesday, May 16, 2012

வானவில் 88: விஜய் டிவி- ரஹீலா- வழக்கு எண் 18/9-சச்சின்

பேஸ்புக் கிறுக்கல்கள்

24 மணி நேரமும் டிவியில் பார்க்க வெவ்வேறு சேனல்கள். கணினியில் விளையாட்டுகள் மற்றும் இன்டர்நெட். வாசிக்க எத்தனையோ புத்தகங்கள்.. இருந்தும் இந்த கால பிள்ளைகள் சொல்கின்றன " லீவுல போர் அடிக்குது".

நாம் பள்ளியில் படித்த போது மேலே சொன்ன எதுவுமே இல்லை. ஆனால் நாம் போர் அடிப்பதாக நினைத்ததோ, சொன்னதோ இல்லையே ? ஏன்?
##########
இன்று அட்சய திரியை மற்றும் சச்சின் பிறந்த நாள். அட்சய திரியை அன்று பெண்கள் தங்கம் வாங்குவர். சச்சின் அம்மாவுக்கோ தங்கமே மகனாய் அட்சய திரியை அன்று பிறந்துள்ளது !

இன்று பிறந்த நாள் காணும் சொக்க தங்கமே, எங்கள் சிங்கமே...நீவிர் வாழ்க ! உம்ம ஆட்டம் பார்த்து நாங்கள் மகிழ்க !

சச்சின் தீவிர ரசிகர் படை, சென்னை கிளை (எங்களுக்கு எல்லா ஊரிலும் கிளைகள் உண்டு)
##########
விகடனில் வழக்கு எண் படத்துக்கு 55 மார்க் ! 45 மார்க்குக்கு மேல் விகடன் தந்தாலே படம் மிக அருமை என அர்த்தம் ! கடந்த சில வருடங்களில் எந்த படமும் இவ்வளவு மதிப்பெண் வாங்கிய நினைவில்லை.

படம் அருமை தான் எனினும் கடந்த சில ஆண்டுகளில் வந்த அனைத்து படங்களையும் விட சிறந்தது என சொல்ல முடியலை. விகடன் மார்க்கை சில நேரம் புரிஞ்சுக்க முடியலை.
******************
ஒரு கோடி நிகழ்ச்சியில் கலக்கிய பெண் 

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் ரஹீலா என்கிற பெண் செம காமெடியாக பேசினார். என்ன ஒன்று.. அவை பெரும்பாலும் வடிவேலு பேசும் காமெடி பன்ச் டயலாக் என்பது சற்று உறுத்தியது (மனுஷங்களை சினிமா எம்புட்டு பாதிக்குது!) பெண்கள் சுய எள்ளலுடன் பேசுவது மிக அரிதே ! (நமக்கு தெரிஞ்ச பொண்ணுங்க எல்லாரும் செம சென்சிடிவ்!!) இவர் காமெடியை மிக ரசித்து சிரித்தோம் ...நீங்களும் இந்த வீடியோ பார்த்து ரசியுங்கள்.





அய்யாசாமியின் வாட்டர் ஹீட்டர் அனுபவம்

அய்யாசாமி முன்பு பார்ட் டைம் ஆக, காலை ஆறு மணிக்கு வகுப்புகள் எடுத்து வந்தார். அப்போது அவர் வீட்டில் கெய்சர் இல்லை. நீண்ட எலக்ட்ரிக் குச்சி போல இருக்கும். ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அந்த குச்சியை வாளிக்குள் அமிழ்த்தி விட்டு சுவிட்சை ஆன் செய்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் சூடாகிடும். 

அய்யாசாமி இரவே வாளியில் தண்ணீர் பிடித்து ரூமில் கொண்டு வந்து வைத்து விடுவார். அந்த எலக்ட்ரிக் மெஷினும் சொருகி வைத்து விடுவார். காலை அந்த குச்சியை உள்ளே வைத்து விட்டு சுவிச் மட்டும் ஆன் செய்வார். 

குறிப்பிட்ட நாள் இதே போல செய்துவிட்டு அய்யாசாமி மற்ற வேலை பார்க்க ஏதோ பொசுங்கும் வாசனை. என்னவென்று பார்த்தால் அய்யாசாமி தூக்க கலக்கத்தில்,  எலக்ட்ரிக் மெஷினை தண்ணீர் உள்ளே வைக்காமல் டேபிள் மேலேயே வைத்து விட்டு சுவிட்ச் ஆன் செய்து விட்டு போய் விட்டார். இதனால் அருகில் இருந்த லேண்ட் லைன் போன் ஹீட்டில் உருகி, எரிய ஆரம்பித்திருந்தது. தண்ணீர் ஊற்றலாமா என தெரியலை. பெரிய துணியை போட்டு நெருப்பை அணைத்து சுவிட்ச் ஆப் செய்தார். வீட்டம்மா எழுந்தும் செம டோஸ் ! 

அவ்வளவு களேபரத்திலும் அய்யாசாமி கடமை வீரராக அன்றும் போய் வகுப்பு எடுத்தார் என்பது குறிப்பிட தக்கது !

ரசித்த கவிதை/ பதிவர் பக்கம்

கொஞ்சம் கண்ணீர் சில கவிதைகள்

உங்களை பிடிக்குமென்றான்
எனக்கும் என்றாள்
பார்க்க வேண்டுமென்றான்
பார்க்கலாம் என்றாள்

பருக வேண்டுமென்றான்
சற்றே தயங்கி சரியென்றாள்

விட்டு விலகினான்
பட்டு வதங்கினாள்

கொஞ்சம் கண்ணீர்
சில கவிதைகள்
மனம் தேற்றி கொண்டிருந்தவளிடம்
மற்றுமொருவன்
உங்களை மிகவும்
பிடிக்குமென்றான் - லாவண்யா சுந்தர்ராஜன்

நம் பதிவில் தயாரிப்பாளர் லிங்குசாமி போட்ட கமன்ட் + திண்ணை கமண்டுகள்
நாம் எழுதும் சில கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் திண்ணை, உயிரோசை, அதீதம், வல்லமை உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியாவது உங்களுக்கு தெரிந்திருக்கும். நமது கட்டுரை வெளியானதை பார்த்ததும், அதன் லிங்கை குறித்து கொள்வதுடன் பல நேரங்களில் அங்கு வெளியானதை மறந்து விடுவேன். அத்தகைய இணைய இதழ்களில் கமன்ட் வருவது மிக குறைவு என்று தான் நினைத்திருந்தேன். எதேச்சையாக கண்ணதாசன் எழுதிய வனவாசம் குறித்து வெளியான கட்டுரையை திண்ணையில் பார்க்க, கமன்டுகள் என்பதை பார்த்து அசந்து போய் விட்டேன். அவ்ளோ காமன்டுகள் நம்ம பதிவுகள் எதற்கும் ப்ளாகில் கூட வந்ததில்லையே ! உள்ளே எட்டி பார்த்தால் குறிப்பிட்ட சிலர் கலைஞர் பற்றியும் கண்ணதாசன் பற்றியும் செமையா சண்டை போட்டிருக்கிறார்கள் (நல்ல வேளை ! நம்மை யாரும் திட்டலை !) நாம பாட்டுக்கு ஓரமா எதோ எழுதிட்டு போயிடுறோம் ! ஆனால் எழுதுவது என்னென்ன விளைவுகளை உண்டாக்குது என்பது சில நேரம் ஆச்சரியம் தருது !

இந்த லிங்கில் நீங்கள் அந்த பதிவுக்கு வந்த ஏராளமான கமண்டுகளை "பார்க்கலாம்" ; ஆம் பார்க்க தான் முடியும்; படிக்க அல்ல ! என்னால் கூட முழுதும் படிக்க முடியலை. அவ்ளோ இருக்கு !

நிற்க. வழக்கு எண் படம் குறித்தான நம் விமர்சனத்துக்கு தயாரிப்பாளர்/ இயக்குனர் லிங்கு சாமி பின்னூட்டத்தில் வந்து நன்றி கூறி இருக்கிறார் ! சற்று பின்னூட்டம் ஆக இருக்கிறதே பலருக்கும் சென்று இதே போட்டுள்ளாரா என பார்த்தால் அய்யனார் விஸ்வநாத், வீடுதிரும்பல் போன்ற ஒரு சில பதிவுகளில் மட்டுமே இப்படி பின்னூட்டம் இட்டிருப்பது தெரிந்தது. நமது பதிவு இந்த அளவு ரீச் இருப்பது ஆச்சரியமாய் உள்ளது !

போஸ்டர் கார்னர் 

சினிமா பாடல் புதிர்

வழக்கு எண் படத்தில் "ஒரு குரல் கேட்குது பெண்ணே" பாடல் இசையின்றி இருப்பதை வித்யாசமான முயற்சி என்று கூறுகின்றனர். இதற்கு முன்பும் தமிழ் படங்களில் இசையின்றி பாடல்கள் வந்துள்ளனர். உங்களுக்கு ஏதேனும் பாடல் நினைவுக்கு வருகிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

Tuesday, May 15, 2012

சிரிப்பு டாக்டர்- என்.எஸ்.கேயின் காமெடி அனுபவங்கள்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "கலைவாணர் என் எஸ்.கே "சிரிப்பு டாக்டர்" என்கிற புத்தகம் சமீபத்தில் வாசித்தேன்.


புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலேயே என். எஸ். கே யின் பல வித்தியாச குணங்களை சொல்லி புத்தகம் முழுதும் வாசிக்கும் ஆவலை தூண்டி விடுகிறார் நூலாசிரியர்  

என். எஸ். கே ஒரு நாள் இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கிறார். அப்போது ஒரு திருடன் வந்து மொட்டை மாடியில் குதிக்கிறான். அவனை பார்த்து விட்டு மனைவி மதுரம் " யாரோ திருட்டு பய" என்கிறார். என். எஸ். கே எழுந்து பார்க்கிறார். அவன் திருடன் தான். ஆனால் என். எஸ். கே தன் மனைவியிடம் இப்படி சொல்கிறார்: " என்னுடன் நாடத்தில் நடித்தவன்; வாச கதவு தாழ் போட்டதால் இப்படி வந்துருக்கான் " என சொல்லி விட்டு அவனுக்கு சாப்பாடு போட்டு பணம் தந்து அனுப்புகிறார். இது தான்   என். எஸ். கே !

இன்னொரு சம்பவம். இவர் நிறுவனத்தின் கணக்கு வழக்கு பார்த்து விட்டு வருமான வருவாய் அதிகாரி ஹனுமந்த ராவ் கணக்குகளை கொண்டு வந்தவரிடம் " என்னயா நிறைய தர்மம், தர்மம் -னு கணக்கு எழுதிருக்கு. எப்படி நம்புறது?" என்று கேட்க, என்னெனவோ சொல்லியும் அவர் நம்பாததால், இப்படி சொல்லியுள்ளார். " சார் நீங்க வேணா இப்ப நேரா போய் என். எஸ். கே யை பாருங்க. உங்களை யாருன்னு சொல்லிக்காம, உங்க மகள் கல்யாணத்துக்கு வேணும்னு பணம் கேளுங்க. தர்றாரா இல்லையா பாருங்க " என சொல்ல, அதிகாரி ஹனுமந்த ராவ் அதே போல் போய் ஆயிரம் ரூபாய் பெண் கல்யாணத்துக்கு வேண்டும் என கேட்டுள்ளார். பணம் தர என். எஸ். கே ஏற்பாடு செய்யா, அதை பார்த்து விட்டு ஆச்சரியமான ஹனுமந்த ராவ் இப்படி சொல்லி விட்டு கிளம்புகிறார்: " ஐயா கிருஷ்ணா, உனக்கு உங்க அப்பா தப்பான பேர் வச்சிட்டார். உனக்கு கர்ணன்னு தான் பேர் வச்சிருக்கணும். பணம் தர்மம் தருவேதேல்லாம் சரி. இனியாவது அதுக்கு ஒரு வவுச்சர் வாங்கிக்குங்க" 

கலைவாணர் தன் இறுதி காலத்தில் பண வசதி இன்றி மருத்துவ மனையில் இருந்த போது எம். ஜி ஆர் அவரை பார்க்க வரும் போதெல்லாம் பண கட்டை அவர் படுக்கைக்கு கீழ் வைக்க, " ராமச்சந்திரா. பணமா தராம காசா மாத்தி கொடு இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் தர முடியும் " என்றாராம். தன்னை பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்கு கொடுத்து விடுவாராம் என். எஸ். கே.

மேற்சொன்ன சம்பவங்கள் அனைத்தும் முதல் அத்தியாயத்திலேயே உள்ளது ! இப்படி படு சுவாரஸ்ய அறிமுகத்துடன் துவங்குகிறது புத்தகம்.

மளிகை கடை வேலை, டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கி போடும் போடும் சிறுவன் வேலை என பார்த்து வந்தார் என். எஸ். கே. மாலை நேரத்தில் நாடக கொட்டகையில் முறுக்கு விற்க போகும் போது நாடகம் முழுதும் பார்த்து அதில் வரும் பாடல்களை எப்போதும் பாடுவாராம்.  இதை பார்த்து விட்டு அவர் தந்தை அவரை ஒரு நாடக குழுவில் சேர்த்து விட, சிறு சிறு பாத்திரங்களில் நடித்து பின் முக்கிய சிரிப்பு நடிகர் ஆனார் என். எஸ். கே. அதன் பின் திரைப்படத்தில் நுழைந்து கலக்கியவருக்கு  வந்த பெரும் சோதனை லட்சுமி காந்தன் கொலை வழக்கு.

அப்போது பிரபலமாக இருந்த பாகவதர் மற்றும் என். எஸ். கே இருவரும் அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள். லட்சுமி காந்தன் நடிகர்களை பற்றி எழுதும் மஞ்சள் பத்திரிக்கை நடத்தி வந்துள்ளார். அதில் பாகவதர் மற்றும் என். எஸ். கே பற்றி தவறாக எழுதியாதால், அவர்கள் ஆள் வைத்து லட்சுமி காந்தனை  கொன்றனர் என்பது வழக்கு. இது பல வருடங்கள் நடந்து அதுவரை இருவரும் ஜெயிலில் இருக்க நேரிட்டது. பின் திறமை வாய்ந்த ஒரு வக்கீலின் வாதத்தால் மேல் முறையீட்டில் இருவரும் விடுதலை ஆகினர். 

விடுதலைக்கு பின் பாகவதர் பெரிதாய் சோபிக்காமல் போனார். ஆனால் அதன் பின் தான் என். எஸ். கே-க்கு கலை வாணர் என்கிற பட்டம் கிடைத்தது. தன் திரை வாழ்வின் பல வெற்றி படங்களை தந்ததும் "நல்ல தம்பி" உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியதும் அதன் பின் தான்.

அந்த காலம் பற்றி சில வித்யாசமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. நாடக குழுக்களில் நடிப்போர் சண்டை போட்டு கொண்டு ஊருக்கு ஓடி விடுவார்களாம்; பின் திரும்ப வந்து அதே குழுவில் சேர்ந்து கொள்வார்களாம். அனைத்து குழுவிலும் இது நடக்குமாம்.

இழந்த காதல் என்கிற நாடகம் அனைவருக்கும் பொதுவான ஒன்றாம். ஏதாவது ஒரு நாடக குழு கஷ்டத்திலோ அல்லது நஷ்டத்திலோ இருந்தால் இழந்த காதல் நாடகம் கொஞ்ச நாட்கள் போட்டால், நஷ்டத்திலிருந்து மீண்டு விடுவார்களாம் ! 

எம்.ஜி. ஆர் அறிமுகமான அதே சதி லீலாவதி படத்தில் தான் என். எஸ். கே யும் அறிமுகமானார் என்பது ஆச்சரியமாய் உள்ளது. 

என். எஸ். கே ஏற்கனவே திருமணம் ஆனவர். அதை மறைத்து மதுரத்தை மணந்துள்ளார். இறுதி வரை அவருடன் தான் வாழ்ந்துள்ளார். முதல் அமநிவி என்ன ஆனார் என்கிற தகவல் புத்தகத்தில் இல்லை. 

அந்த காலத்திலேயே பல பன்ச் டயலாக்குகள் இவர் பிரபலம் ஆக்கியுள்ளார். அதில் முக்கியமான பன்ச் இது : " இவரு சொன்ன சொன்னது தான். எவரு? இவரு !" இதனை ஒரு காலத்தில் அனைவரும் சொல்லி திரிவார்களாம் !

ஐம்பது வயதுக்கு மேல் மனிதன் வாழ கூடாது; நான் அதற்குள் இறந்து விடுவே என மதுரத்திடம் சொல்லி கொண்டே இருப்பாராம். அதன் படி ஐம்பது வயதுக்குள் இறந்து விட்டார்.  

அவர் இறப்பிற்கு பின்னும் புத்தகம் வேறு ஏதேதோ சம்பவங்கள் சொல்கிறது. பின் திடீரென ஒரு பாராவில் கலைவாணர் அரங்கம் திறக்க பட்டதை சில வரிகளில் சொல்லி முடிகிறது.  

முதல் அத்தியாயத்துக்கு எடுத்து கொண்ட சிரத்தையை கடைசி அத்தியாயங்களில் காட்ட வில்லை. 

என். எஸ். கே நடித்த 102 படங்களின் பட்டியலும் இறுதியில் தரப்பட்டுள்ளது 

கலைவாணர் என்ற மாமனிதரின் வாழ்க்கையையும், கூடவே அந்த கால நாடக உலகம் மற்றும் தமிழ் சினிமாவையும் நிச்சயம் அறிய முடிகிறது இந்த புத்தகத்தில் !

நூல்: சிரிப்பு டாக்டர் 
ஆசிரியர்: முத்து ராமன் 
பக்கம்: 164
விலை: 70
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் 
புத்தகம் வாசிக்க தந்தமைக்கு நன்றி : பதிவர் ரகு


கீற்று ஏப்ரல் 29 இதழில் வெளியான கட்டுரை . 

Related Posts Plugin for WordPress, Blogger...