Sunday, September 30, 2012

Who moved my cheese - சுய முன்னேற்ற புத்தக விமர்சனம்

Who moved my Cheese- மிக சிறிய ஆனால் செறிவான புத்தகம்.

கதை வடிவில் சுய முன்னேற்ற கருத்துகள்  சொல்லும் இந்நூலை  எழுதியவர் ஸ்பென்சர் ஜான்சன்.

கல்லூரி படிப்பை முடித்து சில வருடங்கள் கழித்து சில நண்பர்கள் சந்திக்கிறார்கள். யார் யார் எந்த நிலையில் உள்ளனர் என்று பேசி கொள்கின்றனர். இதை சொல்லி விட்டு நேரே ஒரு கதைக்குள் நுழைகிறார் ஆசிரியர்.

நான்கு குட்டி எலிகள் ஒரு இடத்தில் உள்ள Cheese-ஐ மகிழ்வுடன் உண்டு வருகின்றன. இவை நான்கின் குணாதிசயமும் விரிவாய் சொல்லப்படுகிறது. எலிகளுக்கு என்று வெவ்வேறு பெயர்கள் சொல்கிறார்கள். இந்த பெயர்கள் அந்நியமாய் இருப்பதால் நாம்  A, B, C & D என்று எடுத்து கொள்வோம். இதில் A மற்றும் B சற்று புத்திசாலி மற்றும் சுறுப்பான எலிகள். C மற்றும் D சற்று சோம்பேறி எலிகள்.

C மற்றும் D எப்போதும் சீஸ் கிடைக்கும் என உறுதியாய் நம்புகின்றன. ஆனால் A -யும் B-யும் சீஸ் ஸ்டேஷனில் என்ன நடக்கிறது என உற்று கவனிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் சீஸ் ஸ்டேஷனில், சீஸ் கிடைப்பது குறைகிறது. இதனால் A , B அந்த சீஸ் ஸ்டேஷனை விட்டு வேறு சீஸ் ஸ்டேஷன் தேடி அலைந்து, சற்று சிரமத்துக்கு பின் ஒரு நல்ல சீஸ் ஸ்டேஷன் சென்று சேர்ந்து விடுகின்றன.

C -யும் D -யும் எந்த கவலையும் இன்றி இருக்கும் சீஸ் சாப்பிட்டு வருகின்றன. அங்கு சீஸ் கொஞ்சம் கொஞ்சமாய் காலி ஆனது பற்றி கூட அவர்களுக்கு மிக தாமதமாய் தான் தெரிகிறது. ஒரு நேரத்தில் சுத்தமாய் சீஸ் தீர்ந்து விடுகிறது. அதன் பின்னும் C & D அந்த இடத்துக்கு தினம் வந்து பார்த்து செல்கின்றன.

ஒரு நிலையில் இங்கு சீஸ் கிடைக்காது என D இங்கிருந்து வேறு இடம் தேடி போகலாம் என்கிறது. ஆனால் C " நமக்கு வயதாகி விட்டது. இனி வேறு இடம் தேடி போக முடியாது. நாம் என்ன தப்பு செய்தோம்? நமக்கு கொஞ்ச நாளில் இங்கேயே சீஸ் கிடைக்கும்" என்கிறது.

வேறு வழியின்றி C ஐ விட்டு விட்டு D அங்கிருந்து வேறு இடம் தேடி செல்கிறது. மிக சிரமத்க்கு பின் நல்ல சீஸ் ஸ்டேஷன் ஒன்றை பார்க்கிறது. அங்கு தான் அதன் பழைய நண்பர்கள் A மற்றும் B உள்ளனர். கொஞ்ச நாளில் C யும் கூட இந்த சீஸ் ஸ்டேஷனை தேடி வர கூடும் என்று D நினைப்பதுடன் குட்டி கதை முடிகிறது.

பின் நண்பர்கள் இந்த கதை குறித்து பேசி கொள்கிறார்கள். இந்த கதையில்,  தான் எந்த பாத்திரத்தை ஒத்து போகிறேன்; கதையில் சொன்னது போன்ற சம்பவம் தனக்கு என்ன நடந்தது, தான் அப்போது எப்படி நடந்து கொண்டேன் என பேசுகிறார்கள். மிக சுவாரஸ்யமான இந்த உரையாடலுடன் கதை நிறைவடைகிறது

கதை சொல்கிற முக்கிய விஷயம் : உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கூர்ந்து கவனியுங்கள் ! மாறுதலுக்கு தயாராகுங்கள் .. என்பதே.

கதையை படிக்கும் அவரவருக்கும் அவரவர் அப்போது சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு எதோ ஒரு இடத்தில் கிட்ட வாய்ப்புகள் அதிகம்.

நான் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அப்போதைய பிரச்னையை மனதின் பின்புலத்தில் வைத்து கொண்டு படிப்பேன். நிறைய புது விஷயமும் தீர்வும் கிடைக்கும்.

**********
புத்தகத்தில் சொல்லப்பட்ட சில அழகிய வரிகள் இதோ உங்கள் பார்வைக்கு (ஆங்கிலத்தில் படித்த நூலின் தமிழாக்கம் தருகிறேன். அது சரியாக இருக்குமோ இல்லையோ என்கிற எண்ணத்தில் அதன் ஆங்கில மூலமும் சேர்த்து தருகிறேன். பொறுத்தருள்க !):

##  நீங்கள் மாறா விடில், அழிந்து தான் போவீர்கள் (If you do not change, you can become extinct).

*** சில நேரம் வாழ்க்கையில் சில விஷயங்கள் மாறி விடும். பின் அவை முன்பு போல் இருக்கவே இருக்காது. வாழ்க்கை இப்படி தான் இருக்கும் ! நகர்ந்து சென்று கொண்டே இருக்கும் வாழ்க்கை ! அதனுடன் சேர்ந்து நாமும் நகரத்தான் வேண்டும் ! (Sometimes things change and they are never the same again. That's life ! Life moves on ! And so should we !)

## உங்கள் சுற்றி நடப்பதை எப்போதும் கவனித்தபடியே இருங்கள். அப்போது தான் பிரச்னை ஆரம்பிக்கும் போதே நீங்கள் சீக்கிரம் உணர முடியும்

*** சிறு மாறுதல்களை சீக்கிரம் உணர்வது பெரிய மாற்றங்களுக்கு உங்களை தயார் படுத்தி விடும் ( Noticing small changes early helps you adapt to the Bigger changes that are to come)

## மாறுதல்களை சந்தோஷமாக அனுபவியுங்கள். புது அனுபவம் மற்றும் சவால்களுக்கு தயங்காதீர்கள் ( Enjoy the change ! Savor the Adventure and Enjoy the taste of New cheese!)

*****
நான் இதுவரை படித்தவற்றில் ஒரு மிக சிறந்த புத்தகம் என்றும், ஒவ்வொரு மனிதரும் தவற விடாமல் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் நிச்சயம் பரிந்துரைப்பேன் !

புத்தகம் இணையத்திலேயே PDF மற்றும் PPT வடிவில் இலவசமாக கிடைக்கிறது.தேடிப் பார்த்து அவசியம் வாசியுங்கள் இந்த அரிய புத்தகத்தை !
*****
திண்ணை ஆகஸ்ட் 13, 2012  இதழில் வெளியானது 

Saturday, September 29, 2012

சாட்டை -அரிதாய் ஓர் நல்ல படம் -விமர்சனம்

ரசு பள்ளிக்கு புதுசாய் வரும் ஒரு ஆசிரியர் அங்குள்ள மாணவர்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தையும், ஆசிரியர்களுக்கு மாணவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதையும் கற்று தந்து விட்டு ஒரே ஆண்டில் விடை பெறுவது தான் சாட்டை (கதை உங்களுக்கு தெரியும் என்றாலும் ஒரு வரியிலாவது சொல்லணும் இல்லை?)

பழிவாங்கும் படலம், காதல் கதை, தாதாயிச ஹீரோ போன்ற வழக்கமான விஷயங்களில் இருந்து ஒரு மாறுதலாக இப்படம் அமைந்ததே முதல் ஆறுதல். இத்தகைய விஷயத்தை தன் முதல் படத்தில் கருவாய் எடுத்தமைக்கு இயக்குனர் அன்பழகனுக்கு பாராட்டு !

அரசு பள்ளிகளுடன் சில விஷயங்களில் இணைந்து செயல்படுபவன் என்ற முறையிலும், நிறைய அரசு பள்ளி ஆசிரியர்களுடன் ரெகுலராக தொடர்பில் உள்ளவன் என்ற முறையிலும் படம் நிச்சயம் என்னை ஈர்த்தது

படத்தில் டைட்டில் போடும்போது வருகிற விஷயங்கள் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு வர வைக்கிறது. பின்னணியில் ஒலிக்கும் குரல் இன்றைய அரசு பள்ளிகள் பற்றி பல சரியான விஷயங்களை சொல்லி செல்கிறது.

சில சின்ன சின்ன விஷயங்கள் பள்ளி அல்லது கல்லூரியில் நடப்பதை அப்படியே காட்டியுள்ளனர். " வழுக்க போகுது" என்று ஆசிரியரை கிண்டல் செய்வது பல இடத்திலும் நடக்கும்.

போலவே ஒவ்வொரு எழுத்து முன்பும் "க" போட்டு பேசுவது நாங்கள் சின்ன வயதில் செய்தது.. இப்போது யாரும் செய்கிறார்களா தெரிய வில்லை (சாவி என்று சொல்லணும் என்றால் கசா கவி என்று சொல்வது)



"ஒரு ஆசிரியரை பிடித்தால் அவர் நடத்தும் பாடமும் பிடித்து போகும்" என்பார்கள். ஆசிரியர் மீது நல்ல எண்ணமும், அவர் நன்கு நடத்தினால் அந்த பாடம் மீது ஈர்ப்பு வருவது வரை சரி. ஆனால் அவர் நடத்தாத மற்ற பாடங்களிலும் அவரால் எப்படி ஈடுபாடு வர வைக்க முடிகிறது என்ற கேள்வியும் எழவே செய்கிறது.

இறுதியில் ஒரே வருடத்தில் பள்ளியும் ஆசிரியர்களும் முழுவதும் மாறி விட்டதாகவும், இனி நான் மாற்ற வேண்டியது அடுத்த பள்ளியை என்பதும் செம ரீல். ஒரு வருடத்தில் ஒரு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அனைவரையும் மாற்றி விட முடியாது. மேலும் ஹீரோவுக்கு ஒவ்வொரு பள்ளியாய் தலை கீழாய் மாற்றுவதே வேலை என்பதெல்லாம் சினிமாவில் தான் சாத்தியம். இத்தகைய பள்ளிகளில் ஒரு சின்ன நல்ல மாற்றம் கொண்டு வந்தால் அதுவே பெரிய விஷயம். அதை தொடரவே போராடவும், நிறைய மேற்பார்வையும் தேவைப்படும் !

சில ஜோக்ஸ் ரொம்ப பழசு. உதாரணமாய் சாக்ஸ் நாறுது என்று சந்தேகம் வர, " இது பாரு புது சாக்ஸ் போட்டிருக்கேன்" என சொல்லிவிட்டு "நீ நம்ப மாட்டேன்னு பழிய சாக்ஸை பாக்கெட்டில் வச்சிருக்கேன்" என எடுத்து காட்டுவது.

திக்குவாய் பெண்ணுக்கு பயிற்சி தந்து பேச வைப்பது, தோப்புகரணத்தை வெளிநாட்டினரே செய்கிறார்கள் என்று செய்ய சொல்வது என சின்ன சின்ன ரசிக்கும் விஷயங்கள் ஏராளம்.

ஒரு காட்சியில் ஆசிரியர் மகன் வேறு பள்ளியில் படிப்பதாக காட்டுவார்கள். அதுவும் அவன் " அப்பா உனக்கு மட்டும் கவர்ன்மென்ட் ஸ்கூல். நீ ஜாலியா இருக்கலாம். நான் பிரைவேட் ஸ்கூல் போய் கஷ்டப்படணுமா?" என்று எழுப்பும் கேள்வி காமெடிக்காக இருந்தாலும் நடக்கிற ஒரு விஷயத்தை தான் இப்படி ஒரே ஷாட்டில் சொல்லி சென்றுள்ளனர்

ஆசிரியர்களிடையே நடக்கும் மீட்டிங்கில் சமுத்திரகனி, அவர் ஏன் சில விஷயங்களை செய்கிறார் என்றும் , தான் வைத்த "புகார் பெட்டி" யில் மாணவர்கள் என்னென்ன எழுதினர் என்றும் பேசுகிறார். மிக நல்ல யோசிக்க வைக்கும் வசனங்கள் உள்ள ஒரு காட்சி இது. ஆனால் மிக கோபமாக, வேகமாக அவர் பேசுவதால் அந்த வசனம் தேவையான இம்பாக்ட் தராமல் கடந்து போகிறது.

AHM ஆக வரும் தம்பி ராமையா பாத்திரம் சுவாரஸ்யமாய் வர வேண்டியது அவரது ஓவர் ஆக்டிங் மற்றும் அலம்பலால் நாசமாகிறது. அந்த பாத்திரத்தில் இருக்கும் பல குணங்கள் நிச்சயம் பல அரசு பள்ளி ஆசிரியர்களிடம் இருக்கும் தான். அதை சரியே காட்டாமல் சினிமாவுக்கென்று நிறைய எக்ஸ்ட்ரா சேர்த்து சற்று கெடுத்து விட்டனர். அதிலும் இறுதி காட்சியில் கத்தியுடன் கலக்டர் மீட்டிங் செல்வதெல்லாம் த்ரீ மச்.

கடைசியில் ஹீரோ எதற்கு தம்பி ராமையா தான் அடுத்த தலைமை ஆசிரியர் ஆகணும் என்று சொல்கிறார் என்றே புரிய வில்லை ! சிறு துளி நல்ல குணம் கூட இருக்கிற ஆளாக தம்பி ராமையா காட்டப்பட வில்லை. அவரிடம் தலைமை பொறுப்பை தந்தால் மறுபடி பள்ளி குட்டி சுவர் ஆகிடாதா?

ஹீரோ பாத்திரம் "அநியாய நல்லவர்" என்பதால் காட்சிக்கு காட்சி அவரை காட்டியிருந்தால் போர் அடித்திருக்கும். புத்திசாலித்தனமாக, ஒரு பக்கம் மாணவர்கள் வியூ பாயின்ட், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள், இன்னொரு பக்கம் HM , AHM ஆகியோரின் பகுதி என கலந்து செல்வது படத்தை பார்க்க வைக்கிறது.

அதிகம் பாராட்டு சேர வேண்டியது இயக்குனருக்கு. சிறு சிறு குறைகள் இருந்தாலும் நிச்சயம் ஒரு டீசன்ட் படம் தந்தமைக்கு. குறிப்பாக 90% அந்த பள்ளியிலேயே படம் எடுத்தது பாராட்டுக்குரியது. அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மோசம் என்ற விதத்தில் காண்பித்திருக்க வேண்டாம். பாதி ஆசிரியர்கள் நன்கு நடத்தவும், அன்பாய் பழகவும் செய்பவர்கள் தான்.

அடுத்த பாராட்டு சமுத்ரகனிக்கு. அதிகம் பிரபலமாகாத முகம் என்பதால் ஒரு ஆசிரியராக, அந்த பாத்திரமாக எளிதில் நம் மனதில் எஸ்டாப்ளிஷ் ஆகிறார். சினிமாவில் காட்டப்படும் ஹீரோ என்பதால் பாத்திரத்தில் சற்று அதிகப்படி மிகைப்படுத்தல் இருந்தாலும் கூட சமுத்ரகனி பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறார். அவர் உருவத்துக்கு நிச்சயம் சில சண்டைகள் இருக்கும் என நினைத்தால் அப்படி எதுவும் இல்லாதது ஆறுதல்

பள்ளி மாணவனாக வரும் செகன்ட் ஹீரோ சுமார். பள்ளி மாணவி ஹீரோயின் ஓரளவு அழகாக உள்ளதுடன் நடிக்கவும் செய்கிறார்.

ஜூனியர் பாலையா மிக அருமையாய் தலைமை ஆசிரியர் பாத்திரத்தை செய்துள்ளார். சின்ன சின்ன பாத்திரங்களில் பலரும் நிறைவாக நடித்துள்ளனர்

நிறைவாக :

சிற்சில குறைகளை தவிர்த்து விட்டு, இந்த சாட்டையை ஒரு முறை பார்க்கலாம் !

Friday, September 28, 2012

உணவகம் அறிமுகம் : மடிப்பாக்கம் துர்கா பவன்

"எந்தெந்த இடத்தையோ, ஹோட்டலையோ அறிமுகம் செய்கிறோம்; நம் வீட்டுக்கருகே இருக்கும் , நாம் அடிக்கடி உணவு வாங்கும் இடத்தை அறிமுகம் செய்யா விட்டால் எப்படி?"என நட்ட நடு ராத்திரி மனசாட்சி கேள்வி கேட்டதால் இதோ இந்த பதிவு ! (பய புள்ளை ஒரு பதிவு தேத்திட்டு பேச்சை பாரு !)

துர்கா பவன் ! சுத்த சைவ உணவகம் . மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் அருகில் உள்ளது. கீழ்கட்டளை மெயின் ரோடிலிருந்து வேளச்சேரிக்கு செல்லும் பேருந்துகள் மடிப்பாக்கம் உள்ளே புகுந்து செல்லும். அப்போது பொன்னியம்மன் கோவில் என்கிற நிறுத்தத்துக்கு அருகில் தான் உள்ளது இந்த ஹோட்டல். பிரபல பதிவர் யுவகிருஷ்ணா வீடு இங்கிருந்து கூப்பிடும் தூரம் தான் !


இந்த இடத்தில் எப்போதுமே ஒரு ஹோட்டல் இருந்து வருவதை கடந்த பத்து வருடமாக கவனித்து வருகிறேன். ஆனால் இந்த ஹோட்டல் வந்து ஐந்து அல்லது ஆறு வருடம் இருக்கலாம்

பெயருக்கேற்ற படி இது சுத்த சைவ ஹோட்டல். இங்கு நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டது ஓரிரு முறை தான் இருக்கும். ஆனால் இங்கு பார்சல் வாங்கி சாப்பிட்டது குறைந்தது ஐம்பது முறைக்கு மேல் இருக்கும் !

பிரைட் ரைஸ், பரோட்டா மற்றும் இடியாப்பம் இங்கு நன்றாக இருக்கும்

***
நாங்கள் பெரிதும் விரும்புவதும், அடிக்கடி வாங்குவதும் இட்லி தான் !

சூடாய் இருக்கும் எதுவும் நம்பி சாப்பிடலாம் என்பது வீட்டம்மா அடிக்கடி சொல்வது. இட்லிக்கு தொட்டு கொள்ள சாம்பார் சூப்பர். (கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி, மறு நாள் காலை டிபனுக்கு வீட்டில் சட்னிக்கு பதில் இந்த சாம்பார் சுடவைத்து தொட்டு கொள்வது தொழில் ரகசியம் !) புதினா சட்னி ஒன்று எப்போதும் தருவார்கள் அதுவும் நன்றாய் இருக்கும்.

தேங்காய் சட்னி மட்டும் பார்சல் வாங்கி வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் தேறவே தேறாது. அதுக்குள் புளிப்பு சுவை வந்துடும்.

இடியாப்பம் வீட்டில் செய்து சாப்பிடுவது கடினம் என நினைப்போர் அதனை prefer செய்வார்கள். இடியாப்பத்துக்கு தேங்காய் பால் தருவதில்லை. குருமா மட்டும் தான் !

போண்டா உள்ளிட்டவை மாலையில் சுட சுட போடுவார்கள் ! செமையாக இருக்கும் ! மாலை நேர வடை மற்றும் போண்டா மிஸ் பண்ணாமல் சாப்பிட வேண்டிய ஐட்டங்கள் !

பொங்கல் நெய் நிறைய ஊற்றி சூப்பராய் இருக்கும்.

உணவுகள் குறைந்த விலையுள்ள இந்த ஹோட்டல் மடிப்பாக்கம் காரர்கள் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும் ஒன்றாய் உள்ளது.

மடிப்பாக்கம் பக்கம் வரும்போது இங்கே ஒரு முறை சாப்பிட்டு பாருங்க ! Cheap and Good !
****
டிஸ்கி : சென்னையில் நாளை மாலை ஐந்து மணிக்கு மெரீனா பீச் காந்தி சிலை அருகில் பதிவர் சந்திப்பொன்று நடக்க உள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். மேலதிக தகவலுக்கு இங்கே பார்க்கவும் !


Thursday, September 27, 2012

சிம்லா டு குளுமணாலி -மறக்க முடியாத பேருந்து பயணம்

ணாலி செல்ல  சிம்லாவிலிருந்து காலை எட்டரை அளவில் ஹிமாச்சல் டூரிசத்தின் பஸ் கிளம்புகிறது. மாலை ஐந்து வரை பயணம் தொடர்கிறது. இதில் பெரும்பகுதி மலை பாதை என்பதால் மிக கவலையுடன் இருந்தோம். வாந்தி எடுக்குமோ என. முதல் நாள் சிம்லாவில் பயணிக்கும் போதே நாங்கள் மூவரும் சற்று கஷ்டப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக மாத்திரை சாப்பிட்டு விட்டே வண்டி ஏறினோம்.

முதல் இரண்டு மணி நேரம் மலை பாதையில் செல்வதால் பின்னி எடுத்துடுது. இந்த நேரத்தை தாண்டி விட்டால் அப்புறம் பயணம் சுகமே. அதன் பின் அநேகமாய் சமவெளியில் செல்வது மாதிரி தான் உள்ளது. ஆங்காங்கு நிறைய ஊர்கள் வருகின்றன. அவற்றை பார்த்து ரசிப்பதில் பொழுது கழிகிறது

வழியில் உள்ள ஒற்றை வீடு 

குளு-வை அடையும் முன்பே பயணம் மிக இனிதாக மாறி விடுகிறது. சுற்றிலும் மலைகள்... தூரத்தில் தெரியும் மலையில் பனி படர்ந்துள்ளது. ஒரு புறம் ஆறு மிக அழகாக ஓடுகிறது. இவற்றை பார்த்தவாறு பயணம் மிக இனிமையாக, மகிழ்ச்சியாக தொடர்கிறது






குளு என்பது தனி ஊர். மணாலி தனி ஊர். நானும் கூட செல்லும் வரை குளுமணாலி என்று ஒரே ஊர் பெயர் போல சொல்லி வந்தேன். தஞ்சை திருச்சி என்பது எப்படி தப்போ அதே போல் தப்பு இது. முதலில் குளு வந்து விடுகிறது. நீங்கள் விமானத்தில் சென்றால் இங்கு தான் இறங்கனும். அடுத்து மணாலி செல்ல ஒரு மணி நேரம் போல் ஆகும். இந்த ஒரு மணி நேரம் மிக மிக அற்புதமாய் இருக்கும் பயணம். இரு புறமும் வேடிக்கை பார்த்தவாறு செல்கிறது இந்த தூரம் !

படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர் 


ஹவுஸ் பாஸ்/ பூக்கள் கார்னர்

ஹவுஸ் பாஸ் எடுத்த பூ (இது மாதிரி எக்கச்சக்கம் எடுத்து வச்சிருக்காங்க; அவை இனி ஒவ்வொரு மணாலி பதிவிலும் வரும் !) 

பஸ்ஸில் தூங்கும்போது ஹவுஸ் பாஸ் நமக்கு தெரியாமல் எடுத்தது 

ஆங்காங்கு வழியில்  சற்று  டிராபிக் ஜாம் ஆகிறது 

குளு அருகே உள்ள ஆறு, அதை சுற்றி உள்ள அழகை இந்த வீடியோவில் பார்க்கலாம்




எட்டு மணி நேர பயணம் என்பதால் படம் பிடிப்பது, பாட்டு கேட்பது இவற்றோடு அருகில் இருப்போரோடு பேசுவதும் மிக அவசியமாகி விடுகிறது. அப்படி பழக்கமானவர் தான் இந்த படத்தில் இருக்கும் ஜோஷி என்பவர். புனேயில் இருக்கும் இவர் தன் மனைவி, மகள் மற்றும் எட்டு மாத மகனுடன் வந்திருந்தார். இவருக்கு பயணங்களில் மிக ஈடுபாடு. ஒவ்வொரு வருடமும் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றி விடுகிறார். ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை எடுத்து கொண்டு தான் சுற்றுகிறார். இவர் குழந்தை எங்களுடன் செமையாய் ஒட்டி கொண்டான் !



ஹிமாச்சல் டூரிசத்தின் லோகல் டூருக்கு தான் நான் முன்பே புக் செய்திருந்தேன். ஆனால் அதை விட நண்பர்கள் சேர்ந்து கார் எடுத்து கொண்டு செல்வது நல்லது என ஜோஷியும் பஸ்ஸில் வந்த இன்னும் சிலரும் சொல்ல, நாங்கள் மூன்று குடும்பங்கள் கார் எடுத்து கொண்டு மணாலியில் சுற்றி பார்க்கலாம் என முடிவானது. மூவர் தங்கியதும் வெவ்வேறு ஹோட்டல்கள். இரண்டு கார் பிடித்து கொண்டு எல்லா இடமும் சுற்றி பார்த்தோம் !
ஆற்றில் ஜாலியாய் குளிக்கும் மக்கள் 



ஆற்றின் ஓரம் வளைந்து போகும் சாலைகள் 
 



மலை மேலே இருக்கும் ஒற்றை வீடு 



குளு அருகே உள்ள ஊரில் கோவில் ஒன்று 


ஏராளமாய் இப்படி ஆறுகள் பார்க்கலாம். செம வியூ 
 குளு உள்ளே நுழையும் முன் எடுத்த வீடியோ இது :




ஆங்காங்கு இருக்கும் காற்றாலை மின் உற்பத்தி 
குளுவிற்கு முன் ஒரு பெரிய டன்னல் வருகிறது. இதை பேருந்து கடக்க ஐந்து நிமிடம் போல் ஆகிறது. டன்னலில் ரயிலில் செல்வது ஒரு அனுபவம் எனில் பஸ்ஸில் செல்வது வேறு வித அனுபவம். இந்த வீடியோவில் பஸ் டனலுக்குள் புகுந்து வருவதை காணலாம்

என்ன ஒன்று முழு இருட்டு என்பதால், வெளிச்சமே இல்லை. எதிரில் வரும் வாகன வெளிச்சத்தில் எடுக்கும் புகைப்படங்கள் சரியே வருவதில்லை.






Tunnel-ஐ விட்டு வெளியே வரும்போது எடுத்த படம் 

ரோஜா படத்தில் வருகிற பாலம் 
குளு தாண்டியதும் மலைகளில் உள்ள பனி நன்கு தெரிய ஆரம்பிக்கிறது. அதை பார்த்ததும் அனைவருக்கும் செம கொண்டாட்டம். சின்னதாய் பனி தெரிவதற்கே அனைவரும் குஷி ஆகி தத்தம் காமிராவில் படம் எடுக்கிறார்கள்.. மணாலி சென்றதும் அடுத்த சில நாளுக்கு பனியை தினம் தினம் பார்க்க போகிறோம் என தெரியாமல் !

பனி தெரிய ஆரம்பிக்கிறது 

ஆங்காங்கு இருக்கும் டென்ட்கள்    எதற்கு என தெரியலை 

குளு அருகே எடுத்த வீடியோ இது. வீடுகள் பல பாதி கட்டி முடித்த நிலையில், அப்படியே குடி இருப்பதை காணலாம்




மொத்தத்தில்: எந்த அளவு பயந்து கொண்டு ஏறினோமோ, அதற்கு எந்த அவசியமும் இன்றி மிக ஜாலி ஆக,  என்ஜாய் செய்யும் வண்ணம் இருந்தது இந்த பயணம். குறிப்பாய் குளு நெருங்கியதும் வரும் அந்த குகை  ( Tunnel  ) தொடங்கி அதன் பின் இயற்கை எழில் நம்மை "ஆஆ" வென்று வியக்க வைத்து விடுகிறது. 

அடுத்த பதிவில் :

பனி மலையில் விளையாட்டு - ஹை பாயின்ட்  ஆப் மணாலி ட்ரிப் 

Wednesday, September 26, 2012

வானவில் : De வில்லியர்ஸ்சும், T .ராஜேந்தரும்

பார்த்த படம்: முக மூடி

இயக்குனர் மிஷ்கின் படங்களில் ஆகசிறந்த கொடுமை ! சூப்பர் மேன் டைப் கதை என்கிற அருமையான தளத்தை வைத்து கொண்டு எவ்வளவு சுவாரஸ்யமான படம் செய்திருக்கலாம் ! குழந்தைகள் தொடங்கி அனைவரையும் கவர்ந்திருக்கலாம். மிக ஏமாற்றம். முகமூடியின் கதை என்பதால் இரவிலேயே எடுத்துள்ளனர். எத்தனை பேர் தூக்கம் இன்றி பல மாதம் உழைத்துள்ளனர் . ஹும் :((



இசை அமைப்பாளர்கள் பொதுவாய் மற்றவர்கள் பேசாத போது தான் ரீ ரிகார்டிங் செய்வர். இந்த படத்தில் பேசுகிற இடத்தில கூட மியூசிக்கை விட்டு வைக்கலை. மிஸ்கினின் லோ ஆங்கில ஷாட்கள் வர வர வெறுப்பேற்றுகிறது.

மிஷ்கின் என்ற திறமை வாய்ந்த படைப்பாளியிடம் நிச்சயம் நல்ல விஷயங்களை இனி வரும் படங்களில் எதிர் பார்க்கிறோம் !


கிரிக்கெட் : கிரிஸ் கெயில் Vs டி வில்லியர்ஸ்

T20-ல் இரண்டு இணையற்ற பேட்ஸ்மேன் என்றால் அது கிரிஸ் கெயில் மற்றும் டி வில்லியர்ஸ் !.

கெயில் T20-ஐயே ஒன் டே மேட்ச் போல ஆடுகிறார். மிக அழகாய் நேரம் எடுத்து கொண்டு, லூஸ் பால்களை வெளுப்பது, பின் சுமாரான பவுலரை நாசம் செய்வது என மிக நிதானமாய் பிளான் செய்து ஆடுகிறார்

ஆனால் டி வில்லியர்ஸ் ஆட்டம் தான் நிஜ சரவடி. செகண்ட் டவுன் அல்லது தேர்ட் டவுன் இறங்கும் இவருக்கு எப்பவும் இருப்பது மிக குறைந்த பந்துகளே. அதில் இவர் ஆடும் ஆட்டம் சான்சே இல்லை ! வேக பந்து வீச்சாளரை ரிவர்ஸ் ஸ்வீப் செய்வதில் இருந்து, பல பீல்டர்கள் பவுண்டரி அருகே இருக்கும் போது கவலைப்படாமல் அடிக்கும் சிக்சர் வரை .. எனது பாவரைட் பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் தான் !

T- 20. சூப்பர் 8 அப்டேட்

சூப்பர் 8 -ல் இந்தியா இருக்கும் க்ரூப் செம கஷ்டமான அணிகள் ! மறு க்ரூப் ஓரளவு ஈசியான அணிகள் !

குருப் 1: இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கு இந்திய தீவுகள்

குருப் 2: இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான்
ஒரு அணி தன் க்ரூப்பிலிருக்கும் மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை ஆடவேண்டும். ஒவ்வொரு க்ரூப்பிலும் இரு அணிகள் செமி பைனல் செல்லும்.

செமி பைனல் செல்ல இந்தியா தனது மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும். அல்லது கடந்த இரு முறை போல சூப்பர் 8-உடன் திரும்ப வேண்டியிருக்கும் !

துளசி -கோபால் மணிவிழா

சென்னையில் மிக சிறப்பாக நடந்தது இவ்விழா. மாலை வரவேற்புக்கு பதிவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பல பதிவர் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்வோடு பேசிக்கொள்ள வாய்ப்பளித்த துளசி மேடமுக்கு நன்றி.


விழாவில் சென்னையில் ஏழை குழந்தைகளுக்கு ஒரு பள்ளி வைத்து நடத்தும் டாக்டர் அசோக் தம்பதியையும், மற்றும் எய்ட்சால் உயிரிழந்தவர்கள் உடலை அவர்கள் உறவினரே வாங்கி கொள்ளாத போது, தான் எடுத்து சென்று அடக்கம் செய்யும் நண்பரையும் துளசி மேடம் மேடையில் அறிமுகம் செய்தார்கள். மேலே உள்ள படத்தில் இருப்பது இவர்களே !  சேவை புரியும் இவர்களுக்கு எமது வணக்கமும் வாழ்த்துகளும் !

போஸ்டர் கார்னர்  

வழக்கமாய் கிண்டலான போஸ்டர் தான் போடுவோம். முதல் முறை ஒரு உருப்படியான போஸ்டர் பகிர்கிறேன். இத்தகவலில் சிலவாவது நமக்கு தெரியாமல் இருக்கலாம் !




T. ராஜேந்தரின் வடகறி பாடல்

இந்த வீடியோவை பார்த்ததும் முதலில் தோன்றிய எண்ணம்: மேடையில் இருப்பவர்கள் சிலரால் எப்படி சிரிக்காமல் இருக்க முடிந்தது என்று தான்.

" இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி...."... என்னா தத்துவம் !




பதிவர் பக்கம்  

ஜெய தேவ் தாஸ் என்கிற பெயர் ப்ளாக் உலகில் ஏற்கனவே பிரபலம் ! சமுத்ரா, வீடுதிரும்பல் போன்ற தளங்களில் முன்பு மிக விரிவாய் கமன்ட் போடுவார். பெங்களூரில் வசிக்கும் தாஸ் சில மாதங்களாக தனக்கான புதிய தளம் துவக்கியுள்ளார். எழுதிய நான்கைந்து பதிவுகளிலேயே பரவலாய் பலரின் பார்வையும் இவர் மேல் பட்டுள்ளது. பிரபல பதிவரை கலாய்க்க ஊட்டி போனேன் என்கிற இவர் பதிவு பயண கட்டுரைக்கு முதல் முயற்சி. குறிப்பாக ATM பின் குறித்த இவரின் பதிவை அவசியம் வாசியுங்கள் ! வாழ்த்துகள் தாஸ் !

Tuesday, September 25, 2012

தாண்டவம் பாடல்கள் எப்படி? ஒரு அலசல்

விக்ரம், அனுஷ்கா, சந்தானம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளிவருகிறது தாண்டவம். இதில் அனுஷ்கா & சந்தானம் எனக்கு மட்டுமல்ல,தமிழர்கள் பலரின் favourite ! படம் இந்த வாரம் வெள்ளியன்று ரிலீஸ் !

தாண்டவம் இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு 25 வயதில் 25 ஆவது படமாம். முன்பெல்லாம் நூறாவது இருநூறாவது படத்தை வைத்து தான் ஹைப் கிரியேட் செய்வார்கள். இப்போது பத்தாவது படம், 25 ஆவது படம் என்றெல்லாம் ஹைப் ஏற்றுகிறார்கள் போல !

ஜீ. வி. பிரகாஷ் பொறுத்த வரை நிச்சயம் ஒரு அட்டகாசமான இசை அமைப்பாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செல்வராகவனுடன் இணைந்து இயங்கிய இரு படங்களிலும் (ஆயிரத்தில் ஒருவன் & மயக்கம் என்ன) ரொம்ப அருமையான இசை தந்திருந்தார். இயக்குனர் விஜய்யின் முந்தைய படங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு சில பாடல்கள் அருமையாய் செய்திருந்தார் ஜீ. வி. பிரகாஷ்.

தாண்டவம் பாடல்கள் எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம் !

அனிச்சம் பூவழகி


பாடியவர்கள்: சின்ன பொண்ணு, வேல் முருகன்  , GV  பிரகாஷ் 



ஏற்கனவே டிரைலரில் இந்த பாட்டின் க்ளிப்பிங்க்ஸ் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். தானை தலைவி அனுஷ்காவை " அனிச்சம் பூவழகி" என்று வர்ணித்து பாடும் பாட்டு என்பதால், டிரைலர் பார்த்து பாட்டை கேட்க ரொம்ப ஆர்வமாய் இருந்தேன்.

பாட்டு ஆரம்பிக்கும் போதே பாட்டிகள் பாடுவது அப்படியே " ருக்குமணி ருக்குமணி என்ன சத்தம்" மூடை கொண்டு வருகிறது.

நடு நடுவில் " வாராண்டி .. வாராண்டி " என பாட்டிகள் பாடி கொண்டே இருக்கிறார்கள்.

நடுவில் சரணம் ஒன்று பாடுவதும் பாட்டி குரல் தான். பாட்டு ஆஹோ ஓஹோ எல்லாம் இல்லை. பம்பாய், ராவணன் உள்ளிட்ட படங்களில் உள்ள அதே சூழலில் உள்ள இன்னொரு பாட்டு. ஜஸ்ட் ஓகே !

அதிகாலை பூக்கள்

பாடியவர்: GV  பிரகாஷ் 

ஒரே பல்லவி கொண்ட சின்ன பாட்டு. விஜய் டிவி யில் வந்தபோது விக்ரம் " ஏன் முழு பாட்டா போடலை? " என்று இசை அமைப்பாளரிடம் செல்லமாய் கோபித்து கொண்டார். உண்மை தான் ! முழு பாட்டாய் வந்திருந்தால் இன்னும் அதிக இம்பாக்ட் தந்திருக்க கூடும் !

நல்ல வரிகள். அருமையான மெலடி. ஆனால் சில வரிகளில் - ஒரே நிமிடத்துக்குள் முடிந்து விடுகிறது பாட்டு !

சிவ தாண்டவம்

பாடியவர்: எஸ். பி பாலசுப்ரமணியம் 

உடுக்கை எல்லாம் அடித்து செம ஸ்பீடா போகுது பாட்டு. ஆனா ஒப்புவிக்கிற மாதிரி இருக்கே ஒழிய எந்த விதத்திலும் ஈர்க்க வில்லை. அந்த பாட்டை பற்றி எழுதும் போது சில முறையாவது கேட்கணும் என்கிற ஒரே காரணத்துக்காக மட்டும் கஷ்டப்பட்டு கேட்டேன். படத்தில் ஒரு வேளை முக்கிய கட்டத்தில் மாண்டேஜ் பாட்டாக வர கூடும். ஆனால் தனியாய் ஒரு முறை கூட கேட்க முடியலை. வெரி சாரி !

உயிரின் உயிரே

பாடியவர்: சைந்தவி , சத்ய பிரகாஷ் 

கஜலுடன் துவங்குகிறது பாட்டு. சைந்தவி குரல் உருகி உருகி குழைகிறது. எடுத்தவுடன் அதிகம் கவராத இந்த பாட்டு, 3, 4 முறை கேட்க கேட்க ரொம்ப பிடித்து விட்டது. அருமையான மெலடி. படத்திலும் இந்த பாட்டுக்கு தலைவியே நடித்துள்ளார் !  !

யாரடி நீ மோகினி போலவே

பாடியவர்கள்: ராகுல் நம்பியார், மேகா

மேற்கத்திய பாணியில் (Western) ஒரு ஸ்பீடான பாட்டு. பாடல் வரிகள் ஓரளவு ஈர்க்கிறது. எமி ஜாக்சனை வைத்து எடுக்கப்பட்ட இந்த பாடல் அவ்வப்போது டிவியில் காண்பிக்கிறார்கள். அதில் பார்த்த பின் தான் பாட்டு ஓரளவு பிடித்தது. தனியாய் கேட்க ஜஸ்ட் ஆவேரேஜ் சாங்.

ஒரு பாதி கதவு நீயடி

பாடியவர்கள்: ஹரிசரண், வந்தனா

மிக தாமதமாக தான் (நண்பர்கள் சுட்டி காட்டிய பிறகு) இந்த பாட்டு கேட்டேன். முதல் முறை கேட்கும் போதே கவர கூடிய அருமையான மெலடி. ஹரிசரண் இப்போது கலக்கி கொண்டிருக்கிறார். கும்கியிலும் ஒரு அட்டகாசமான பாட்டு பாடியிருக்கிறார்.

தாண்டவத்தின் ஹிட் பாடல்களில் "ஒரு பாதி கதவு நீயடி" யும் ஒன்று

**************
5 பாட்டும் ஒரு குட்டி பாட்டும் மட்டுமே இருக்கிறது. படம் ஒரு ஆக்ஷன் படம் என்று நினைக்கிறேன். அந்த விதத்தில் நிறைய பாடல்கள் படத்துக்கு ஒரு முட்டு கட்டையாய் இருக்கலாம் என்பதால் இந்த ஏற்பாடு போலும் !

பைனல் ரிசல்ட்: உயிரின் உயிரே  & ஒரு பாதி கதவு நீயடி
: வெரிகுட். யாரடி நீ மோகினி போலவே & அதிகாலை பூக்கள்: கேட்க கேட்க -ஓகே !

Monday, September 24, 2012

தொல்லை காட்சி பெட்டி - 2

நல்ல நிகழ்ச்சி : ஜெயா டிவியில் கபடி கபடி



பெண்கள் ஆடும் கபடி போட்டி ஐ. பி. எல் போல கே.பி. எல் என ஜெயா டிவி நடத்துகிறது. இது ரொம்ப நல்ல விஷயம். கபடி விளையாட்டுக்கு நல்ல ஊக்கமாய் இருக்கும். சென்னை அணி மிக நன்கு ஆடி வருகிறது. பெரும்பாலும் மிக சுமாரான அல்லது ஏழை குடும்பத்தில் உள்ள பெண்களே இதில் விளையாடுவது தெரிகிறது. ஒரு பெண்ணின் வீட்டுக்கே போய் பேட்டி எடுத்து அவர் அப்பா மீண்டும் மீண்டும் அழுகிற விஜய் டிவி ஸ்பெஷல் டைப் காட்சிகளும் உண்டு. இந்த விஷயமெல்லாம் தவிர்த்து நிஜமாய் கபடி மேட்ச் பார்க்க செமையாக உள்ளது. ஞாயிறு மதியம் ஒன்று முதல் இரண்டு வரை பார்க்க முயலுங்கள் !

சூப்பர் சிங்கர் ஜூனியர் கார்னர்

செமி பைனலை எட்டியுள்ளது சூப்பர் சிங்கர் ஜூனியர். காலிறுதியில் ஒரு பாட்டின் இடையே சில வரிகளை மறந்த முற்றிலும் தவறாய் பாடிய கெளதம் அடுத்த சுற்று போய் விட்டார். அனு அவுட் ஆகி வெளியேறினார் ! நிகழ்ச்சி பார்த்த யாருமே அவுட் ஆக வேண்டியது கெளதம் தான் என்று அறிவார்கள். ஆனால் அவரை அவுட் ஆக்கினால் மற்ற நால்வருமே பெண்கள் மட்டுமே என்று இருக்கும் என்பதால் இப்படி செய்தது அப்பட்டமாய் தெரிகிறது. வாழ்க நடுநிலைமை !

செமி பைனலுக்கு அவர்கள் போடும் கிளிப்பிங்களில் சுகன்யா முதல் நபராய் பைனல் செல்வதும், கெளதம் நன்கு பாடுவதும் தெரிகிறது. இந்த வாரம் செமி பைனல் ரவுண்ட் !

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்

தாண்டவம் படம் பற்றி விக்ரமிடம் பேசினார் கோபிநாத். ஒரே நேரத்தில் இந்த படத்திலும் ஷங்கரின் ஐ படத்திலும் நடிப்பதாகவும் கண் தெரியாத இந்த பாத்திரத்துக்கு மிக மெனக்கெட்டதாகவும் சொன்னார் விக்ரம். கோட் போடாமல் முழுக்கை சட்டை அணிந்த கோபியை பார்க்க வேடிக்கையாய் இருந்தது. அடிக்கடி நெற்றியில் கை வைத்து வியர்வையை துடைத்து கொண்டே இருந்தார் கோபி. கேட்டபோது அதிகம் கவராத தாண்டவம் பாடல்கள் திரையில் பார்க்கும் போது ஓகே என்று என தோன்றியது.

விஜய்யில் போட்ட வழக்கு எண் 18/9 மற்றும் சன்னில் மாலை போட்ட 3 ஆகியவை மட்டுமே புது படங்கள். இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் வழக்கு எண் 18/9 படத்தை நான்கு மணி நேரம் காட்டி விஜய் டிவி விளம்பரங்களால் கொன்று கொண்டிருந்தது. மாலை மறுபடி விஜய் டிவியில் ஒரு விளம்பரம் " இன்று இரவு 9.30 மணிக்கு ஒரே முறை மட்டும் விளம்பர இடைவெளியுடன் மீண்டும் வழக்கு எண் 18/9 படம் ஒளிபரப்பாகும் என ! இப்படியெல்லாம் செய்வதால் தான் பலருக்கும் டிவியே வெறுத்து விடுகிறது !

மனதோடு மனோ

ஜெயா டிவி யில் மனதோடு மனோ நிகழ்ச்சியில் MSV-யுடன் மனோ பேசினார். பல சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்தார் MSV . " யார் அந்த நிலவு? ஏன் இந்த கனவு? ? என்ற பாடல் சிவாஜிக்காக இசை அமைத்துள்ளனர். ஆனால் பாடல் படமாக்கும் போது சிவாஜி இரண்டு நாள் ஏதேதோ காரணம் சொல்லி படபிடிப்புக்கு வர வில்லையாம். "பாட்டு பிடிக்கலையோ மாத்திடலாமா? " என கேட்க, TMS ரொம்ப நல்லா பாடிருக்கார் ; MSV ரொம்ப நல்லா மியூசிக் போட்டிருக்கார். நான் அவங்களை விட பெட்டரா பண்ணனும் அதுக்கு தான் ஐடியா பண்றேன் " என சொல்லி விட்டு ஸ்டைலாக சிகெரெட் பிடிப்பது போல் பிளான் செய்து, பயிற்சி செய்து வந்து இரண்டு நாள் கழித்து நடித்தாராம் சிவாஜி !


நீயா நானா - இந்த வாரம்

நசிந்து வரும் தொழில்கள் மற்றும் புதிய தொழில்கள் பற்றிய விவாதம் நன்றாகவே இருந்தது.

நிகழ்ச்சியில் நாம் சென்னையில் வித்தியாச டி. ஷர்ட் கடை பற்றி எழுதினோமே .. அந்த கடை ஓனர் வந்திருந்தார். நாம் சாதாரண மனிதர்களில் எழுதிய சில தொழில்களை சேர்ந்தவர்கள் ( அயர்ன் செய்பவர், மாவு மில் காரர்) வந்திருந்தனர்.

மனித கழிவை அகற்றும் பெண்கள் தங்கள் வருத்தத்தை சொல்லும் போது கோபிநாத்திடம் " நீங்களும் தள்ளி தான் நிக்குறீங்க" என சொல்ல, ஓடி வந்த கோபி " நீங்க எனக்கு அக்கா மாதிரி" என்று சொல்லி கட்டி கொண்டார்.
நசிந்த தொழில்களை மதிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்பது வார்த்தைக்கு வேண்டுமானால் நன்றாயிருக்கும். ஆனால் நிஜத்தில் நாம் எந்த அளவு செய்கிறோம் என்பது கேள்விக்குறியே !

கிரிக்கெட்

இந்தியா இங்கிலாந்தை எளிதாக வென்றது  ! 

T 20-ல் ஏழு பாட்ஸ்மேன்   என்பது luxury. ஒரு பாட்ஸ் மேனை தியாகம் செய்து விட்டு ஹர்பஜன் ஆடலாம். அஷ்வின் மற்றும் பதான் இருவரும் ஓரளவு பாட்டிங் செய்ய கூடியவர்களே. தோனி இவ்விஷயத்தில் என்ன செய்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம் !

Sunday, September 23, 2012

என் விகடனில் எங்க ஊர் நீடாமங்கலம் !

ன் விகடனில் எங்கள் ஊர் பற்றி வந்திருப்பதாக நண்பன் தேவா லிங்க் அனுப்பியதும் சென்று பார்த்து மிக, மிக மகிழ்ந்தேன். ஒளிப்பதிவாளர் கோபிநாத் பற்றி ஏற்கனவே இங்கு ஒரு பதிவில் சொல்லியிருக்கேன்.


பொதுவாய் எந்த பதிவும் காப்பி பேஸ்ட் செய்யாதவன் இந்த முறை விகடனுக்கு நன்றி போட்டு விட்டு அப்படியே போட காரணம், பதிவு எங்கள் ஊரை பற்றியது. நண்பர்களில் பலரும் நீடாமங்கலம் வந்து, எங்கள் வீட்டில் தங்கி, கடையில் என்னோடு அமர்ந்து அரட்டை அடித்தவர்கள். அவர்களில் நிறைய பேர் வீடுதிரும்பல் வாசிக்கிறார்கள். கீழே உள்ள படங்களில் உள்ள கமன்ட் மட்டுமே நான் போட்டது !
*********

காவிரியு்ம் அம்சவள்ளியும் என் முக்கியமான தோழிகள்!''

தமிழ்த் திரை உலகில் கமர்ஷியல் சினிமாக்களின் 'கில்லி’ ஒளிப்பதிவாளர் எஸ்.கோபிநாத், தன்னுடைய சொந்த ஊரான நீடாமங்கலம் பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.



''இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு புண்ணிய பூமி நீடாமங்கலம். ஏனெனில், வடக்கே வெண்ணாறு, தெற்கே கோரையாறு, மேற்கே பாமணியாறு என ஊரின் மூன்று பக்கமும் மூன்று அழகான ஆற்றங்கரைகள் அமைந்து இருக்கும். அந்த மூன்று ஆறுகளும் பிரியும் இடம் 'மூணார் தலைப்பு’ என வழங்கப்பட்டது. சங்க காலத்தில் இந்த ஊர் 'நீடூர்’ என்றும் 'நீராடும் மங்கலம்’ என்றும் அழைக்கப்பட்டு இருக்கிறது. 'நீராடும் மங்கலம்’ என்பதே காலப்போக்கில் மருவி 'நீடாமங்கலம்’ என நிலைத்துவிட்டது.

இது ஒரு புண்ணியஸ்தலமும்கூட. இங்கே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலும் சந்தான ராமசாமி கோயிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவை. கி.பி 18-ம் நூற்றாண்டில் தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டபோது, அரசன் சிம்கானின் மனைவி யமுனாம்பாளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவள் இங்கேவந்து சந்தான ராமசாமி கோயில் குளத்தில் குளித்துப் புண்ணியம் அடைந்து, குழந்தை வரம் பெற்றாள். அன்று முதல் சந்தான ராமசாமி கோயில் குழந்தை இல்லாதவர்களின் குறைதீர்க்கும் கோயிலாக இருந்துவருகிறது. அப்போதைய காலகட்டத்தில் நீடாமங்கலத்துக்கு 'யமுனாம்பாள்புரம்’ என்றும் ஒரு பெயர் இருந்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் கோபிநாத் வீடு. இதே தெருவில் 15 வீடு தள்ளி எங்க வீடு

நீடாமங்கலத்தில் எங்கள் குடும்பம் பாரம்பரியப் பெருமையைக்கொண்டது. பரம்பரை பரம்பரையாக நாங்கள் மளிகைக் கடை நடத்திவருபவர்கள். 'எஸ்.கே.வி.ஜி.எஸ். அண்ட் சன்ஸ் மளிகை’ என்றால் நீடாமங்கலத்துக்காரர்கள் எல்லோருக்கும் தெரியும். இப்போதும் அந்த மளிகைக் கடையை என் தம்பி நடத்திவருகிறார். அது மட்டும் இல்லாமல், பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்த்து நெல் சாகுபடிச் செய்த குடும்பம் எங்களுடையது.



எனது அண்ணன்கள், அக்கா, ஒளிப்பதிவாளர் கோபிநாத் படித்த LVS பள்ளி

நீடாமங்கலம் எல்.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில்தான் நான் என்னுடைய ஆரம்பக் கல்வியைக் கற்றேன். அப்போது நான் மிகவும் சேட்டைக்காரனாக இருப்பேன். ஆசிரியர்களிடம் அடிவாங்காத நாளே இல்லை. நானே குச்சி ஒடித்துக் கொண்டுவந்து கொடுத்து அடி வாங்குவேன். அந்தப் பள்ளியில் அடிபட்டுக் கற்றுக்கொண்ட நேரந்தவறாமை, சுய ஒழுக்கம் போன்ற பல நல்ல பழக்கங்களை இன்றும் என் வாழ்வில் கடைப்பிடித்துவருகிறேன். என் பள்ளியையும் ஆசிரியர்கள் ராஜகோபால், பழனிவேல் போன்றவர்களையும் என்னால் என்றுமே மறக்கமுடியாது.

பெரியார் சிலையும் எங்க மண்ணின் மக்களும்

ஆறாவது படிக்கும்போது அடிக்கடி தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். அப்பாவுக்குத் தெரியாமல்தான் செல்வேன். ஆனால், 'நடுத்தம்பி படம் பார்க்க வந்திருக்கு’ என அப்பாவிடம் யாராவது தகவல் சொல்லிவிடுவார்கள். படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே வீட்டில் இருந்து ஆட்கள் வந்து என்னைக் கூட்டிப்போய்விடுவார்கள். போனதும் பெல்டாலேயே பின்னி எடுப்பார் என் அப்பா. ஆனாலும் மறுநாள் எப்படியாவது அந்தப் படத்தை பார்த்துவிடுவேன். அந்தவகையில் நான் படம் பார்த்த எங்கள் ஊர் தியேட்டர்களான காவிரியும் அம்சவள்ளியும் எனக்கு முக்கியமான தோழிகள். நான் ஒளிப்பதிவு செய்த முதல் படமான 'தில்’ ஒரு மாதம் காவிரி திரையரங்கில் ஓடியது. நாம் படம் பார்த்து வளர்ந்த திரையரங்கில் நாம் எடுத்தத் திரைப்படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என நினைத்தேன். ஆனால், அது முடியாமலே போய்விட்டது. நாளடைவில் அந்தத் திரையரங்கு மூடப்பட்டுவிட்டதில் எனக்கு நிறையவே வருத்தம் உண்டு.  

பத்தாவது படிக்கும்போதே என் வாழ்க்கை சினிமாதான், அதிலும் குறிப்பாக ஒளிப்பதிவுத் துறைதான் என்பதை முடிவு செய்துவிட்டதால் அதன்பிறகு நான் சரியாகப் படிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் பார்டரில் பாஸ் செய்துவிட்டு தரமணி ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேரத் தயாரானேன். ஆனால், என்னை வலுக்கட்டாயமாக திருச்சி ஜோசப் கல்லூரியில் சேர்த்தனர். அதன்பிறகு மீண்டும் இன்ஸ்டிட்யூட்டில் சேர, ஆரம்பக்கட்டத் தேர்வுகள் முடித்து மறுநாள் சேர்க்கைக்காகத் தயாரான நிலையில் அம்மாவிடம் இருந்து போன் வந்தது, அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லை என. உடனே ஊருக்குக் கிளம்பி வந்தவன்தான்... ஐந்து ஆண்டுகள் தீவிரமாக விவசாயம் பார்த்துக்கொண்டே அப்பாவையும் கவனித்துக்கொண்டேன். அதன்பிறகு நேரடியாகவே சினிமாவில் நுழைந்தேன்
எங்க ஊரில் டிராபிக் ஜாம் ! ஆட்டோ எல்லாம் எங்க ஊரில் ஓடுது பாருங்க  !

என் பால்ய கால நண்பர்களில் குமரன், மோகன், நடராஜா, சிவநேசன், குபேந்திரன் இவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள். அதேபோல், கவிஞர் ரவிசுப்ரமணியத்தை அடிக்கடி கும்பகோணத்துக்குச் சென்று சந்தித்து இலக்கியம் பற்றி பேசிவருவேன். என் இலக்கிய ஆர்வத்தைச் செம்மைப்படுத்தியவர் அவர். அவரோடு சேர்ந்து இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வேன். பொதுவாகவே, மிகவும் கண்டிப்பான என் அப்பா இது போன்ற விஷயங்களுக்கு எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார்.

இந்த ரயில்வே ஸ்டேஷனில் எங்கள் நண்பர் குழு செய்த வாலுத்தனங்கள் கொஞ்ச நஞ்சமா? 

நீடாமங்கலத்தில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் ரயில்வே ஸ்டேஷன். சுற்றி இருக்கும் தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம் போன்ற முக்கிய ஊர்களுக்கு இதுதான் மையப் புள்ளி. இங்கு இருந்து அந்த ஊர்களுக்கு எளிதாக ரயிலிலோ, பேருந்திலோ சென்றுவிடலாம்.

என்னைப் பொறுத்தவரை நீடாமங்கலம் ஒரு ராசியான ஊர். இங்கு இருந்து புறப்பட்டவர்கள் யாருமே சோடை போனது இல்லை. இசைக் கலைஞர்கள் 'தவில்’ மீனாட்சி சுந்தரம், நீலகண்ட சாஸ்திரிகள், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி இப்படி எல்லோருமே நீடாமங்கலம் தந்த பரிசுகள். அந்த வகையில் எனக்கும் நீடாமங்கலத்துக்கும் உறவு இருக்கிறது என்பதில் எனக்கு மிகவும் பெருமைதான்!''

- உ.அருண்குமார்

படங்கள்: கே.குணசீலன்
***********
நன்றி : என் விகடன் -திருச்சி பதிப்பு
************
தொடர்புடைய பதிவு :


சொர்க்கமே என்றாலும் நம்மூரை போல வருமா?

Saturday, September 22, 2012

மாவு மில்காரர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்

மாவு மில் என்றதும் முதலில் எங்கள் ஊரான நீடாமங்கலம் நினைவுக்கு வரும். நீடாமங்கலத்தில் எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ளது பெரியார் மாவு மில். அதனை நடத்தியது ஒரு திராவிடர் கழக பிரமுகர். அந்த மாவு மில், எங்கள் ஊர் கடைத்தெருவின் முக்கிய இடத்தில் இருக்கும். கடையின் வெளியே சுவரில் " கடவுள் இல்லை இல்லவே இல்லை" உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். கடவுள் இல்லை என்பதோடு கடவுளை திட்டியும் அங்கு எழுதப்பட்டிருக்கிறதை எண்ணி சிறு வயதில் ரொம்ப வருஷம் மனதுக்குள் வியந்ததுண்டு.

மாவு மில் ஓனர் எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவருடனும் நன்கு பழுகுபவராக இருந்தார். கடவுளை வணங்காதோர் மகிழ்ச்சியுடன் இருக்க முடியுமா என்று ஆச்சரியம் + கேள்விகளும் கூட அந்த இளமை காலத்தில் !

இவரை சிறு வயதில் பார்த்து பார்த்து மனதில் பதிந்ததாலோ என்னவோ மாவு மில் காரர்கள் நமக்கு இயல்பாகவே நெருக்கமாகி விடுகிறார்கள்.

மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு மாவு மில்காரருக்கு காலில் விபத்தாகி காலுக்குள் பிளேட் வைத்தனர். அது சரியாக வைக்காமல் மிக பெரும் பிரச்சனை ஆகி மீண்டும் ஆப்பரேஷன் செய்ய வேண்டிய சூழல். எங்கள் பழைய அலுவலக நண்பர்கள் மூலம் ஆப்பரேஷனுக்கு பணம் பெற்று தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். அவரும் பையனின் விடுமுறையில் தான் ஆப்பரேஷன் செய்ய வேண்டும்; அப்போது உங்களை தொடர்பு கொள்கிறேன் என்று கூறியிருந்தார். சமீபத்தில் பார்த்தபோது அவருக்கு ஆப்பரேஷன் ஆகி விட்டிருந்தது. " உங்களை எதுக்கு தொந்தரவு பண்றது என கேட்கலை சார்" என்றார் தயக்கத்தோடு !

இந்த பேட்டி எடுத்தது அவரிடம் அல்ல. (அவரிடம் பேசினால் தவறாய் செய்த ஆப்பரேஷன் பற்றி நிறையவே நாங்கள் பேசுவது போகும் என்பதால்) இந்த பேட்டி இன்னொரு மாவு மில் காரரிடம் !
**********
உங்கள் பேர், ஊர் பற்றி சொல்ல முடியுமா? எத்தனை வருஷமா இந்த தொழில் செய்றீங்க?

என் பேர் ஜெயராமன். சொந்த ஊரு மதுரை பக்கம். நான் ஒரு விவசாயி தான். இப்போல்லாம் விவசாயம் லாபமா செய்ய முடியாது. கைக்காசு தான் வீணாகும்.

ஆறு வருஷமா இந்த மில் வேலையில் இருக்கேன். நாலு வருஷம் ஒரு மில்லில் வேலை பார்த்தேன். அப்புறம் இந்த மில் நடத்திய ஒருத்தர் முடியாம விட்டுட்டு கிளம்பினார். அவரிடம் இருந்து நான் வாங்கி இப்போ ரெண்டு வருஷமா வச்சிருக்கேன்.


இதுக்கு முன்னாடி விவசாயின்னு சொல்றீங்க. இந்த தொழிலுக்கு முன் அனுபவம் வேண்டாமா?

இது ரொம்ப எளிமையான வேலை தான். பெருசா முன் அனுபவம் தேவை இல்லை. நான் நாலு வருஷம் ஒரு இடத்தில வேலை பார்த்தேன் இல்லையா? அங்கே எல்லா விஷயமும் கத்து கிட்டேன்

உங்க குடும்பத்தை பத்தி ....

எங்க அப்பா ஒரு விவசாயி. எங்க பரம்பரையில் இப்படி வந்தது நான் தான் முதல் ஆள். எனக்கு ஒரே பையன். ஒன்பதாவது வரை தான் படிச்சான். இப்போ அவனையும் இதே மில் வேலைக்கு பழக்கிக்கிட்டு இருக்கேன். ஊரில் தான் இருந்தான். இப்போ தான் இங்கே வர வச்சிருக்கேன். மில்லில் இருந்து ரெண்டு தெரு தள்ளி தான் நம்ம வீடு.

கடை எப்ப திறந்து எப்ப மூடுவீங்க? என்னிக்கு லீவு?

கடை காலை ஏழு மணிக்கு திறப்பேன். மாலை ஏழு வரைக்கும் திறந்திருப்பேன். ஆறு மணிக்கு மேலே கூட்டம் கம்மியா தான் இருக்கும். ஆறரை வரை ஆள் இல்லைன்னா பூட்டிட்டு கிளம்பிடுவேன்

ஏழு நாளும் கடை இருக்கும். சொந்த தொழிலில் எப்படி லீவு போட முடியும்? உடம்பு முடியலைன்னு திறக்காம இருந்தா உண்டு. பண்டிகை நாள்னா மக்கள் வர மாட்டாங்கன்னு திறக்க மாட்டேன்.

மாவு அறைக்கும் போது எழும் நெடி நிறைய பேருக்கு ஒத்துக்காது இல்லை?

ஆமா. நீங்க கூட எப்பவும் மாவு அறைக்க வரும்போது பாத்திரத்தை கொடுத்துட்டு எதிர் கடையில் போய் நின்னுக்குவீங்க. அறைச்சு முடிச்சு சைகையில் கூப்பிட்டா தான் வருவீங்க. அது மாதிரி சில பேருக்கு இந்த நெடி ஒத்துக்காது.

ஆனா சில பேருக்கு இந்த நெடி ஒண்ணும் செய்யாது நானெல்லாம் பல வருஷமா இருக்கேனே ! என்னை எதுவும் செய்வதில்லை

இப்படி ஒரு நெடியில் தொடர்ந்து நிற்பது எதுவும் கெடுதல் பண்ணுமா?ஆஸ்துமா மாதிரி வியாதி எதுவும் வருமா?

என்ன இப்புடி கேக்குறீங்க ! ஒவ்வொருத்தர் எவ்வளவு நல்லதெல்லாம் அரைக்குறாங்க ! மிளகாய், மஞ்சள் , நல்ல வேர் மாதிரி பலதும் அரைக்கிறாங்க. அது எல்லாமே சுவாசிக்கிறது ரொம்ப நல்லது. இது ஒத்துகிச்சுன்னா எந்த கெடுதலும் அப்புறம் பண்ணாது. சொல்ல போனா எங்களுக்கு எந்த வியாதியும் சாமானியத்தில் வராது !

என்னென்ன மிஷின் இருக்கு? அரைப்பதில் என்ன முக்கிய விஷயம் இருக்கு?

நம்ம கிட்டே மூணு மிஷின் இருக்கு. ஒன்று மிளகாய், சீயக்காய் மாதிரி விஷயங்கள் அரைப்பது; இன்னொன்னு அரிசி அரைப்பது. மூணாவது கோதுமை அரைப்பது.

எத்தனை முறை அரைக்கிறது என்பது நாம வச்சிருக்க மெஷினையும், அதன் பேசையும் (Base ) பொறுத்தது. உதாரணமா கோதுமை போடுறீங்கன்னா என்னோட மெஷின் எல்லாம் மூணு தடவை அரைச்சா போதும். நைசா மைதா மாவு மாதிரி வந்துடும்.

மெஷின் ரிப்பேர் ஆகுமா? எப்படி மெயிண்டயின் பண்ணனும்?

மெஷினுக்கு தினம் ஆயில் போடணும். அங்கே பாருங்க ஆயில் போட்டுருக்கேன் !

அதுக்கு மீறி அப்பப்போ ரிப்பேர் ஆகும். அதை ரிப்பேர் செய்ய ஆளுங்க இருக்காங்க. போன் செஞ்சா எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ வந்துடுவாங்க. வியாபாரம் பாதிக்க கூடாது இல்லை? ஒரு தடவை ரிப்பேர் ஆனா குறைஞ்சது முந்நூறு ரூபா செலவு வைக்கும்

கரண்ட் பில் எல்லாம் எப்புடி ஆகுது?

அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? முன்னாடி மூவாயிரம் பில் ஆச்சு. இப்போ ஐயாயிரம் பில் ஆகுது. ரொம்ப ஏத்திட்டாங்க.

நடுவிலே கரண்ட் பிரச்சனை இருக்கும் போது ஈ.பி காரங்க ரொம்ப கெடுபிடி பண்ணாங்க. செவ்வாய் கிழமை கண்டிப்பா மெஷின் ஓட்ட கூடாது. சாயந்தரம் ஆறு மணிக்கு மேலே மெஷின் ஓட கூடாது அப்படி எல்லாம் கெடுபிடி இருந்தது. இப்போ அதெல்லாம் இல்லை. செவ்வாய் கிழமையும் கடை திறக்கிறோம்

கரண்ட் பில் ஏறிடுச்சே. அப்போ நீங்களே அரைக்குற கூலி ஏத்திடுவீங்களா?

இல்லை. கூலி நாங்களா ஏத்த முடியாது. எங்களுக்குன்னு ஒரு சங்கம் இருக்கு. அது சொல்ற கூலி தான் நாங்க வாங்கணும். அதுக்கு கூடவோ குறையவோ எந்த கடையிலும் வாங்க மாட்டாங்க. சங்கம் வருஷத்துக்கு ஒரு முறை தான் கூலி ஏத்துனா ஏத்தும். எல்லா வருஷமும் ஏத்தும்னும் சொல்ல முடியாது. இப்போ கோதுமை ஒரு கிலோ அஞ்சு ரூபான்னா, அதை ஆறு ரூபான்னு ஆக்கும். அவங்க சொன்னா தான் நாங்க ஏத்த முடியும்

இப்போல்லாம் பில்சுபுரி அது இதுன்னு ரெடி மேட் மாவு வந்துடுதே. இன்னமும் மக்கள் மாவு மில்லில் அதிகம் அரைக்குறாங்களா?

நீங்களே ரெண்டு வருஷமா நம்ம கடைக்கு வர்றீங்க இல்ல ? ஏன் வர்றீங்க? கடையில விக்குற கோதுமை மாவுல்லாம் கலப்படம் சார். நீங்களே வாங்கி அரைச்சுக்குற மாதிரி வராது. அப்புறம் ஏழைங்க ரேஷன் கடையில் கோதுமை வாங்குது. அதுங்களும் அரைச்சு தானே சாப்பிடணும்?

இப்படி ஒரு மாவு மிஷின் வைக்க எவ்ளோ முதலீடு தேவைப்படும்?

மெஷின் வாங்க, கடையை மாத்தி விட எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு லட்சத்துக்கு மேலே முதல் போட்டேன். இப்போ வட்டி கட்டவே முழி பிதுங்குது. ஏன்டா இந்த தொழிலுக்கு வந்தோம்னு இருக்கு. வட்டி கட்டி, வீட்டு செலவும் பாத்தா கையில் ஒண்ணும் மிஞ்சலை

**
சிறிது நேரம் எங்களுக்குள் அமைதி. உங்களை ஒரு படம் எடுத்துக்கலாமா என கேட்டு விட்டு படம் எடுக்க, " எதுக்கு எடுக்குறீங்க? 'என கேட்டு தெரிந்து கொண்டார். " எதோ பேங்குக்கு சொல்லி லோன் குடுக்க சொன்னாலும் நல்லாருக்கும். நீங்க இதை எழுதுறதில் எனக்கு என்ன பிரயோஜனம் ?" என்று அவர் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்ட வரிகள் இதை எழுதும் போதும் மனதை அறுக்கிறது !

*****
அதீதம் செப்டம்பர் 14, 2012 இதழில் வெளியான கட்டுரை

Friday, September 21, 2012

சிம்லா பயணம்: 2 கோவில்கள் -சிம்லா புகைப்படங்கள்


 108 அடி ஆஞ்சநேயர் சிலையை கொண்ட ஜாக்கு கோவில் சிம்லாவின் சமீபத்திய வரவு. ஊரிலிருந்து சற்று தள்ளி உள்ளது இக்கோவில். சிறு மலை மேல் ஏறுவது போல் இருக்கு பயணம். சிம்லாவிலிருந்து 7 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடைகிறோம். இந்த கோவில் சென்று திரும்ப மட்டும் ஐநூறு ரூபாய் அனைத்து டாக்சி ஓட்டுனரும் கேட்கிறார்கள் !

மற்ற மாநில கார்கள் கோவிலுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே நிறுத்தப்பட்டு விடுகிறது. ஹிமாச்சல் சேர்ந்த கார் என்றால் மட்டுமே கோவில் அருகே வரை செல்ல முடியும். மலை என்பதால் முதல் கியரிலேயே வண்டி ஓட்ட வேண்டியிருக்கும்  என்றார் டிரைவர். 

கோவில் மிக உயரத்தில் இருப்பதால் நூற்றுகணக்கில் குரங்குகள் உள்ளன. இதற்காக கோவிலுக்கு வெளியே கம்பு (குச்சி) கள் விற்கிறார்கள். இது வாக்கிங் ஸ்டிக் போல் உள்ளது. இந்த குச்சியுடன் சென்றால் குரங்குகள் பயந்து கொண்டு நம்மிடம் வராது என்று எண்ணம். நாங்கள் சென்ற இடம் முழுக்க குரங்குகள் இருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொண்டோ விளையாடி கொண்டோ இருந்தன. நம்மிடம் அதிகம் வம்பு செய்யலை. கண்ணாடி அணிந்து சென்றால் மட்டும் அதை பிடுங்கி எடுத்து போயிடுமாம் குரங்குகள். மற்ற இடங்களில் நிறைய வெளியூர் ஆட்கள் தான் இருப்பார்கள். இங்கோ உள்ளூர் வாசிகள் நிறைய வருகின்றனர். யாரும் கண்ணாடி அணிந்து வருவதில்லை !


உள்ளே நுழைந்ததும் முதலில் நாம் பார்ப்பது ஆஞ்சநேயரின் 108 அடி சிலையை தான். (பதிவில் முதலில் உள்ள படம்)

இங்கு ஏதும் அர்ச்சனையோ, இதன் அருகில் மக்கள் வேண்டுவதோ கிடையாது. இது ஒரு டூரிஸ்ட் அட்ராக்ஷன் ஆக மட்டுமே உள்ளது. இதன் அருகில் பலர் படம் எடுக்க தவறுவது இல்லை. ஆஞ்சநேயர் சிலை மேலே ஏறி குரங்குகள் விளையாடிய படி உள்ளன.


இதற்கு சற்று அருகே குழந்தைகள் விளையாட சறுக்கல்கள் போன்றவை உள்ளன. இங்கும் குரங்குகளே விளையாடி மகிழ்கின்றன. பார்க்க செம காமெடியாக உள்ளது.



எல்லா குரங்ககளும் ஒரு நிமிடம் கூட சும்மா இல்லாமல் ஓடி கொண்டிருக்க, ஒரே ஒரு வயதான குரங்கு மட்டும் நகர முடியாமல் முனகி கொண்டிருந்தது. பார்க்க பாவமாய் இருந்தது.

நாய்கள் சிலவும் அங்கு உள்ளது, நாயும் குரங்கும் அருகருகே இருப்பதை பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. நாய் தான் குரங்கை பார்த்து பயப்படுகிறது !

நாயும் குரங்கும் அருகருகே


கோவிலுக்குள் அழகான பூக்கள் மற்றும் புல்வெளி


படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்







காளி கோவில்

மால் ரோடுக்கு ஒரு முறை கீழே இருந்து தனியே நடந்தே செல்லும் போது வழியில் இந்த காளி கோவிலை கண்டேன்.



நிறைய உள்ளூர் வாசிகள் தான் வருகிறார்கள். வயதான ஆண் - பெண் இருபாலாரும் மிக பயபக்தியுடன் வணங்குகின்றனர்.



காளி சிறிய உருவில் உள்ளது. கழுத்தில் நிறைய மணிகள் அணிந்து காட்சி தருகிறது. பம்பை போன்ற வாத்தியங்கள் அங்கு இருக்கிறது. அதனை அடிப்பதற்கு ஆட்கள் தயாராய் உள்ளனர் (எப்போது அடிப்பர் என தெரியலை)

உள்ளே நுழையவோ, செருப்பு பாதுகாக்கவோ எந்த பணமும் வசூலிக்க வில்லை.

அருகில் மிலிடரி வீரர்கள் இருக்கிறார்கள். அந்த பக்கம் மட்டும் படம் எடுக்காதீர்கள் என்கிறார்கள் அங்கிருக்கும் போலீசார் !


****
சிம்லாவில் மீதம் உள்ள சில படங்களை பகிர்ந்து விட்டு அடுத்த பகுதியில் குளு மணாலி பயணமாவோம் :

சிம்லாவில் இயற்கை காட்சி



இது போன்று தான் இருக்கும் பாதைகள்..செங்குத்தாய் நடக்க சற்று சிரமமே

சிம்லா லோக்கல் பஸ் ஸ்டாண்ட்
சிம்லாவில் உயரமான இடத்தில் ஓர் இரவில்  

தேங்காயை எப்படி வெட்டி விற்கிறார்கள் பாருங்கள் !


*************
அடுத்த பகுதியில்:

சிம்லா டு குளு மணாலி மறக்க முடியாத அற்புத பஸ் பயணம்

Thursday, September 20, 2012

கோபால் நீங்க நல்லவரா,கெட்டவரா?மணிவிழா ஸ்பெஷல் படங்களுடன்

ன்று மணிவிழா காணும் கோபால்- துளசி கோபால் இருவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம் !


துளசி டீச்சரிடம் கோபால் சார் பற்றி எழுதி தர சொல்லி கேட்டபோது அவர் விழாவுக்காக சென்னை வந்திருந்தார். " நேரம் இருக்குமான்னு தெரியலையே மோகன். முயற்சி பண்றேன். இல்லாட்டி தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாலும் அடுத்த இரு நாளில் அனுப்பி விட்டார் !

மணிவிழா நாளான இன்று இதை வெளியிடுவது பொருத்தம் என்பதாலும், இன்று மாலை விழாவிற்கான ஒரு நினைவூட்டலாகவும் இப்பதிவு வெளியாகிறது. மாலை சென்னையில் ஒரு மினி பதிவர் சந்த்ப்பே நடக்க உள்ளது. சந்திப்போம் நண்பர்களே !

ஓவர் டு துளசி டீச்சர் !
*******
கோபால் நீங்க நல்லவரா, கெட்டவரா? By:  துளசி கோபால்  

முப்பத்தியெட்டு வருசத்துக்குப்பிறகு(ம்) இப்படி ஒரு கேள்வி வருது பாருங்க:-))

          
வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் கஷ்டத்திலும் வாழ்க்கை ஏற்றத்திலும் இறக்கத்திலும் இப்படி எல்லா சமயங்களிலும் இணைபிரியாது நாடுகள் தோறும் அடுப்புகள் வேறு என்று கூடவே பயணப்பட்டு வந்துருக்கறவரைப் பற்றி என்னன்னு எழுதறது?

நல்லவரென்ற வகையில் பார்த்தால் அன்பானவர். நாம் வாழும் கம்யூனிட்டிக்கு நம்மாலான உதவிகளையும் சேவைகளையும் செய்யணும் என்பதில் உறுதியா இருப்பவர். நாய் பூனைகளை அண்டவிடக்கூடாதுன்னு என்னிடம் ஒருபக்கம் சொல்லிக்கிட்டே பூனை இல்லாத வீட்டுக்குப் பூனை சாப்பாடு வாங்கித் தருபவர். ( அட.... எனக்கில்லைங்க. நம்ம வீடுதேடி வரும் அதிதிகளான ரஜ்ஜூ, மூணு வாரமா நெருங்கிவரத் தொடங்கி இருக்கும் கப்பு 2 என்பவர்களுக்காக)

சென்னை விஜயகாந்த் உடன் க்ரைஸ்ட்சர்ச் விஜயகாந்த் 
                      
என் நண்பர்களையெல்லாம் தன் நண்பர்களைப்போலவே பாவிக்கும் நல்ல குணம். ("தனியா எனக்குன்னு யாரும் நண்பர்கள் இல்லைம்மா. உங்க ஆளுங்கெல்லாம் நம்மாளுங்க")

துளசிதளத்தின் புரவலர். பின்னூட்டப்ரேமி. இடுகையைப்பற்றிக் கவலைப்படமாட்டார். பின்னூட்டம் வரலைன்னா நடுங்கிப் போயிருவார்:-)))

பசும்பால் என்ற பெயருக்கு ஏத்தமாதிரி கறந்தபாலின் தன்மை. கொஞ்சம் வெகுளி. நம்பிருவார். அதுவும் நான் சொல்ற எல்லாத்தையுமே!!!



அதேபோல் இந்தியாவைப் பற்றிய அதீத நம்பிக்கை. எத்தனை மோசடிகளைப்பற்றி தினசரிகளிலும் ஊடங்களிலும் வந்தாலும் அதையும் மீறி எல்லாத்திலும் நம்பிக்கையோடு பேசுவார். டிவிக்காரன் சொல்லிட்டா வேதம்! சுருக்கத்தில் சொன்னால்.... எவ்ளோ அடிச்சாலும் தாங்கிக்குவார் நம்ம வடிவேலுவைப்போல்:-))))

எப்பவுமே நல்லவராவே இருப்பாரா? இருக்கத்தான் முடியுமா? கெட்டவைகள் என்னன்னு பார்த்தால்......

                          
எப்பப்பார்த்தாலும் சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லிச்சொல்லியே என்னை குண்டடிக்க வச்சுட்டார்:-)

ரெஸ்ட் எடுத்துக்கோ ரெஸ்ட் எடுத்துக்கோன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே (பதிவுக்கு மேட்டர் தேத்த) ஊர் சுத்தக் கூட்டிக்கிட்டுப் போயிருவார்.

நான் எங்கே கவலைப்படப் போறேனோன்னு அவர் கவலைப்பட்டு என்னைக் கவலைப்படாதேன்னு சொல்லித் தேற்றிக்கிட்டே(??) இருப்பார்.

பிடிவாதக்காரர். கண்டிப்பா வாழ்க்கையில் முன்னேறணுமுன்னு அயராமல் மேல்படிப்பு, செய்யும் வேலையில் ஆர்வம், முழுமனசுடன் அதில் ஈடுபாடு . இதற்கு நடுவில் காதல் மனைவியை நல்லபடியா வச்சுக் காப்பாத்தணும் என்ற கவனம். ரெண்டு சைடும் க்ளாஷ் ஆகாமல் பேலன்ஸ் பண்ணும் சாமர்த்தியம்.

மகளுக்கும் , எனக்கும், நம்ம கப்பு கோகின்னு எல்லோருக்கும் ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கறவர்.

                      
வெட்டிக்கிட்டு வான்னால் கட்டிக்கிட்டு வர்ற குணம். நான் பார்த்து வச்சுருக்கும் பொருளை அவர் வாங்கப்போனால் அதைவிட (நல்லா இருக்கும்) வேறொன்னை வாங்கி வந்துருவார்.

நான் எதாவது பொருளை வாங்கிட்டு இவர் கோச்சுக்கப்போறார். அதை சமாளிக்கச் சண்டை போடலாமுன்னு நாக்கைத் தீட்டிக்கிட்டு இருந்தாலும் ஒன்னுமே சொல்லாம நீ இஷ்டப்பட்டு வாங்கினால் அது நல்லா இருக்குமுன்னு சொல்வாரா, எனக்குக் பொசுக்ன்னு போயிரும்! கத்திச்சண்டை போட என்னை விடுவதே இல்லைன்னா பாருங்க.

                           

முந்தாநாள் பாருங்க.... விழாவுக்கான ஹாலை ஒரு பார்வை பார்க்கலாமுன்னு போய் அங்கே கால் தடுக்கிக் கீழே விழுந்துட்டேன். ஒருவேளை கால் உடைஞ்சு போயிருந்தால்.....? என்னைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டீங்கதானேன்னு கேட்டதுக்குத் தூக்கிட்டுப்போய் மணையிலே வச்சுத் தாலி கட்டிருவேன்னு சொன்ன நெஞ்சுரம்...........அப்பப்பா..... யானையைத் தூக்கணுமுன்னா சும்மாவா?


என்னடா.... கெட்டதைச் சொல்றேன்னு இப்படியெல்லாமான்னா.... என்ன செய்வது? ரொம்பக் கெட்டதா வேறொன்னும் ச்சட்ன்னு நினைவுக்கு வரலையே!

ஆங்......... ஒன்னு இருக்கு. ஒன்னு இருக்கு . டிவி ரிமோட்டை என்கிட்டே தரவே மாட்டார். அதுக்காக நான் அழமாட்டேன். நான்தான் டிவி பார்க்கிறதில்லையே!


கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் அன்று ஒரு காலத்தில் காண்பித்த அன்பு இன்னும் குறையாமல் இருக்கும் என் காதல் கணவன் கோபாலை நல்லவரா கெட்டவரான்னு என்னால் தீர்மானிக்கவே முடியலை.

இன்றைய தினம் தன் அறுபதாம் பிறந்த நாளைக் கொண்டாடும் கோபாலுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

                      

நட்புக்கு மரியாதைன்னு நம்ம மோகன்குமாரின் சிறப்பு இடுகைக்கும் பின்னூட்டம் இடப்போகும் அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.
Related Posts Plugin for WordPress, Blogger...