Tuesday, November 29, 2011

வானவில் :யுவராஜ் சிங் : தம்பி வெட்டோத்தி சுந்தரம்

யுவராஜ் சிங்

நடந்து முடிந்த கிரிக்கெட் உலக கோப்பையில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கிய யுவராஜ் சிங் அதன் பின் அனுபவித்த உடல் மற்றும் மன கஷ்டம் வாசிக்க மிக கஷ்டமாய் உள்ளது ! உலக கோப்பையின் போதே தொடர் இருமல் இருந்திருக்கிறது. பின் டெஸ்ட் செய்து பார்க்க லங்க்சில் பெரிய கட்டி இருப்பது தெரிந்து கேன்சர் ஆக இருக்கும் என சந்தேகித்துள்ளனர். மூன்று மாதத்துக்கும் மேல் கேன்சர் தான் என்கிற மன வேதனை உடன் இருந்துள்ளார். பல சோதனைகளுக்கு பிறகு இப்போது தான் அது கேன்சர் அல்ல, கட்டி தான், அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆஸ்திரேலியா போகாததற்கு இந்த ட்ரீட்மேன்ட்டும் காரணமாம் ! விளையாட்டு இருக்கட்டும்.. வாழ்க்கை அதை விட பெரியது !யுவராஜ் நல்ல உடல் நலத்துடன் இருந்தால் சரி.. அவர்கள் பெற்றோருக்கு ஒரே மகன் என நினைக்கிறேன். Get well soon Yuvaraj Singh !

பார்த்த படம்: தம்பி வெட்டோத்தி சுந்தரம்

கொஞ்ச நாள் முன்பே பார்த்து விட்டாலும் இப்போது தான் பகிர்கிறேன். ஆரம்பத்தில் படம் சற்று வித்யாசமாக இருப்பது போல் தெரிந்தது. ஆனால் கடைசி அரை மணி நேரம் அவர்கள் பிழிந்த சோகம் மனதை நோக அடித்து விட்டது ! பழைய காலத்து பீம்சிங் படங்கள் தோற்றது போங்கள் ! படத்தில் ரசித்த இரு விஷயம் கரனின் நடிப்பும், அஞ்சலியின் அழகும். கரன் அந்த கேரக்டரை மிகை இன்றி செய்துள்ளார்.அஞ்சலி.. !!! அனுஷ்கா பெரிய தலைவி என்றால் அஞ்சலி சின்ன தலைவி ஆகி விட்டார். கற்றது தமிழ் முதல் ரசித்து வந்தாலும் கூட, அவருக்கு சின்ன தலைவி என்கிற பதவி உயர்வு எங்கேயும் எப்போதும் முதல் தான் கிடைத்துள்ளது.

மற்றபடி படம் பார்ப்பதானால், அழுவதற்கு நான்கைந்து கை குட்டை உடன் செல்லுங்கள். அல்லது கடைசி அரை மணிக்கு முன் வெளியே வந்து விடுங்கள்!

பூனை குட்டியும் குழந்தைகளும்

சமீபத்தில் நண்பனின் குழந்தை பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்றிருந்தேன். மழை என்பதால் வீட்டில் யாரையும் கூட்டி போகலை. கல்லூரி கால நண்பர்கள் மனம் விட்டு சிரித்து பேசி கொண்டிருந்தது செம நிறைவாக இருந்தது. நாங்கள் கல்லூரியில் சந்தித்து நண்பர்களாகி 23 வருடங்கள் ஆகின்றன. 25 வது வருடத்தில் நிச்சயம் நினைவில் இருக்கிற மாதிரி ஏதேனும் செய்வோம் என நினைக்கிறேன்.

கிளம்பும் போது குழந்தைகள் செடி அருகே நின்று கொண்டு எதையோ பார்த்து கொண்டிருந்தன. என்ன என்று எட்டி பார்த்தால் பூனை குட்டி ஒன்று இருந்தது. "தூக்கலாமா?' என நான் கேட்க, குழந்தைகள் முகத்தில் செம குஷி ! மெதுவாக பூனை குட்டியை தூக்கியதும் கிட்ட தட்ட பத்து குழந்தைகளும் சூழ்ந்து கொண்டன. "அங்கிள். என் கையில் குடுங்க. நான் தொட்டு பாக்கணும் " என்றன. ஒவ்வொரு குழந்தையும் தொட்டதால் நெளிந்தது பூனை குட்டி. அப்போது ஒரு குட்டி பாப்பா வைத்திருந்த ஐஸ் கிரீம் கீழே கொட்ட, பூனை குட்டியை மெதுவாக இறக்கி விட்டேன். அது ஜம்மென்று ஐஸ் கிரீம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. குழந்தைகள் மகிழ்ச்சியோடு அதை வேடிக்கை பார்க்க, பெரிய கூட்டம் சுற்றி இருந்தும் ஐஸ் கிரீம் சாப்பிடும் குஷியில் பூனை குட்டி நகர வில்லை. மழை வலுக்கும் முன் குழந்தைகளை விட்டு பிரிய மனமின்றி நான் கிளம்பினேன்...

இனி தினம் தினம் பதிவு இல்லை.. ஏன்?

கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து நம் ப்ளாகில் பதிவுகள் வருவதை பார்த்திருப்பீர்கள். யுடான்ஸ் வாய்ப்பில் தினம் பதிவு எழுத துவங்கியது. பின் அடுத்த இரு வாரங்கள் தொடர்ந்தது. நம்மாலும் தினம் பதிவு எழுத முடியும் என்பதும், அப்படி எழுதினால், வாசிக்கவும், ஹிட்ஸ், பின்னூட்டம் நிறைய கிடைப்பதும் புரிந்தது. முன்பெல்லாம் வாரம் ரெண்டு பதிவு தான் என strict-ஆக இருப்பேன். இந்த மூன்று வாரங்களில் அநேகமாய் தினம் ஒரு பதிவு போட்டுள்ளேன். ஆனால் இனி இதனை தொடர போவதில்லை.

எழுத விஷயங்கள் இல்லாமல் இல்லை. இந்தியா போன்ற நாட்டில் விஷயங்களுக்கா பஞ்சம்? நேரமும் பெரிய பிரச்சனை இல்லை. அநேகமாக நான் எழுதிய பதிவுகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் எழுத பட்டவையே. தினம் எழுதுவதை நிறுத்துவதன் காரணம் வேறு.

பதிவு எழுதி முடித்த பின் அடுத்த பல மணிநேரத்துக்கு, அவ்வப்போதாவது என்ன response-வந்தது என்பதை பார்ப்பதில் செலவிடுகிறோம். சும்மா சும்மா இணையம் பக்கம் வருகிறோம். இது சுத்தமாக பிடிக்க வில்லை. ஆனால் முழுதும் avoid செய்ய முடியலை. இது வேலைக்கும் குடும்பத்துக்கும் இடைஞ்சல் ஆக உள்ளது. எனவே தான் தினம் பதிவு எழுத போவதில்லை.

முன்பு போல் வாரம் இரண்டுடன் என்று நிறுத்தி கொள்ள போவதுமில்லை. தினமும் எழுத போவதுமில்லை. இயலும் போது எழுதுவேன்... வழக்கம் போல் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் !

விகடன் "வலை பாயுதே"வில் ரசித்த ட்விட்டர்

பெண்களுக்கு நல்ல புருஷன் கூட கிடைச்சுடுவான்; ஆனா நல்ல டெய்லர் ?? ம்ஹும் # எல்லா டெய்லரையும் திட்டுறாங்கப்பா !!

நாட்டி கார்னர்

நாட்டியின் படம் அல்லது வீடியோ பகிர சொல்லி சில நண்பர்கள் அவ்வப்போது கேட்டதால் சில வீடியோக்கள் எடுத்துள்ளோம்.
இந்த இரண்டரை நிமிட வீடியோ முழுக்க பார்க்கா விட்டாலும் முதல் ஒன்னரை நிமிடங்கள் மட்டும் பார்க்கலாம் !
   


அய்யாசாமி

Mrs. அய்யாசாமி இப்போது அலுவலகத்தில் லெண்டிங் லைப்ரரியில் சேர்ந்திருக்கார். இதனால் விகடன், குமுதம், கல்கி, ஜூவி என புத்தகங்கள் நிறைய வீட்டுக்கு வர ஆரம்பிச்சிடுச்சு. முன்னெல்லாம் அய்யாசாமி புத்தகம் படிச்சா ஹவுஸ் பாஸ் " என்ன இது எப்ப பார்த்தாலும் புக்கை எடுத்து வச்சிக்கிட்டு உட்கார்றது !" என்பார். இப்போது சற்று மாற்றம் ! மேடம் கொண்டு வந்த புக்குகளை படிப்பதால், மறு நாள் அலுவலகத்தில் திரும்ப தரணுமே என Mrs . அய்யாசாமி ஒன்றும் சொல்வதில்லை. இதனால் அய்யாசாமி செம குஷியா தினம் கதை புக் படிக்கிறார். இன்னும் எவ்ளோ நாளைக்கோ.. பாவம் என்ஜாய் பண்ணிக்கட்டும். ஒரு வேளை Mrs . அய்யாசாமி இதை படிச்சிட்டு கூட " மாறுதல்" வரலாம் !! (இது தான் சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிறதா?)

Sunday, November 27, 2011

வீடு கட்ட கடன்: கவனத்தில் கொள்ளவேண்டியவை

வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலைகள் பெருகிய பின் இளம் வயதினர் பலரும் வீடு வாங்குகின்றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings ) அவர்களை இவ்வாறு வீடு வாங்க வைக்கிறது. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங்குவோர் வெகு சிலரே. பெரும்பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் கவனத்துக்கு :

பொதுவாக அடுக்கு மாடி வீடு (Flat ) அல்லது தனி வீடு எனில் வங்கிகள் 80 அல்லது 85% கடன் தரும். மீதம் பணம் நாம் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். மொத்த வீட்டு விலையில் உங்கள் கையிலிருந்து போட வேண்டிய பணம் எப்படி ஏற்பாடு செய்ய போகிறீர்கள் என பார்த்து கொள்ளுங்கள். சில் வங்கிகள் முதலில் உங்கள் ஷேர் முழுக்க போடுங்கள். அப்புறம் நாங்கள் எங்கள் பங்கை போடுவோம் என்பார்கள். சிலர் நீங்கள் துவக்க அட்வான்ஸ் கொடுத்து விட்டால், ஒவ்வொரு நிலையிலும் உங்கள் ஷேர் தந்த பின், தங்கள் ஷேர் தருவார்கள். இதில் நீங்கள் தேர்ந்தெடுத்த வங்கி எந்த முறை கடை பிடிக்கிறது என தெரிந்து கொள்வது உங்கள் பணத்தை எப்படி, எப்போது நீங்கள் திரட்ட வேண்டும் என அறிய உதவும்.

ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வட்டி விகிதம் என சொல்லும். உதாரணமாய் இந்தியன் வங்கி 13% வட்டி என்று சொல்லும். ஐ. சி.ஐ. சி.ஐ.(ICICI) வங்கி 12 % வட்டி என்று சொல்லும். ஆனால் ஐ. சி.ஐ. சி.ஐ.(ICICI) வங்கி தரும் 12 % வட்டியை விட இந்தியன் வங்கியின் 13 % வட்டி சிறந்ததாக இருக்கும் ! இது எப்படி என்கிறீர்களா? ஐ. சி.ஐ. சி.ஐ.வங்கி தனது வட்டி விகிதத்தை ஆண்டு கணக்கில் (Yearly reducing balance ) கணக்கிடும் . இந்தியன் வங்கியோ தின கணக்கில் (Daily reducing balance ) கணக்கிடும் . இது சாதாரண ஆட்களுக்கு சற்று குழப்பமாக இருக்குமென்றால், எளிய வழி ஒன்று சொல்கிறேன். மேலே சொன்ன இரண்டு வங்கிகளிலும் ஒரு லட்சத்துக்கு இருபது வருடத்துக்கு, ஒவ்வொரு மாதமும் நீங்கள்  செலுத்தும் தொகை (மாதாந்திர EMI) எவ்வளவு என்று கேளுங்கள். அநேகமாய் குறைந்த வட்டி என்று சொல்லும் ஐ. சி.ஐ. சி.ஐ.-ன் மாதாந்திர EMI அதிகமாக இருப்பதை காணலாம் ! மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். குறிப்பிட்ட சில வங்கிகளில் ஒரு லட்சத்துக்கு இருபது வருடத்துக்கு எவ்வளவு EMI என்று கேளுங்கள். அதில் எது குறைவு என்று பாருங்கள். நீங்கள் வங்கியை தேர்ந்தெடுக்க இது ஒரு முக்கிய காரணமாய் இருக்க வேண்டும்.

கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது என்றால் சந்தேகமே இன்றி அரசு துறை சார்ந்த வங்கிகள் தான் ! உதாரணமாய் ஸ்டேட் பாங்க் , இந்தியன் பாங்க், சிண்டிகேட் பாங்க் போன்றவை. ஐ. சி.ஐ. சி.ஐ, சிட்டிபேன்க் போன்ற தனியார் வங்கிகளை தவிர்ப்பது மிக நல்லது. தனியார் வங்கிகளில் பலர் கடன் வாங்க ஒரே காரணம் அவர்கள் லோன் ப்ராசசிங் மிக வேகமாய் இருக்கும். விரைவில் கடன் தந்து விடுவார்கள். நீங்கள் அதிகம் அலைய வேண்டாம் டை கட்டிய ஒரு நபர் உங்கள் அலுவலகம் தேடி வந்து உங்களிடம் அனைத்து கையெழுத்தும் பெற்று விடுவார். அரசு துறை வங்கிகள் உங்களை பல முறை அலைய விடுவார்கள். ஆனாலும் கீழ் காணும் காரங்களுக்காக அரசு துறை நிறுவனங்களே சிறந்தவை:

1. நிஜ வட்டி விகிதமும், நீங்கள் திரும்ப செலுத்தும் பணமும் அரசு துறை வங்கிகளில் தான் குறைவாய் இருக்கும். வேறு விதமாய் சொல்ல வேண்டுமெனில் நீங்கள் வாங்கும் கடனுக்கு தனியார் வங்கி என்றால் உங்கள் கண்ணுக்கு தெரியாமலே நிச்சயம் அதிக அளவு வட்டி கட்டுவீர்கள்

2. நீங்கள் உங்கள் கடனை சீக்கிரம் திரும்ப செலுத்த நினைத்தால் (Pre closure ) தனியார் வங்கிகள் உங்களிடம் அதற்கென தனியாக அபராதம் (penalty) வசூலிக்கும் ! இதனால் தனியார் வங்கிகளில் பலரும் கடனை முன்னரே (pre closure ) அடைக்க மாட்டார்கள். இன்றைய நிலையில் பலரும் இரண்டு வீடு வாங்குவது சாதாரணமாக நடக்கிறது. அப்படி இரண்டாவது வீடு வாங்கும் போதோ, வாங்கிய பின்னோ, ஒரு கடன் மட்டும் இருந்தால் என்று நினைப்பார்கள். அப்போது வங்கியை அணுகும் போது தனியார் வங்கி என்றால் மேற்கண்ட பிரச்சனை இருக்கும் ! இது பெரிய விஷயமா என்றால் நிச்சயம் பெரிய விஷயம் தான்.

3. வட்டி சதவீதம் உயரும் போது உடனே அதை உயர்த்தும் தனியார் வங்கிகள் அவை குறையும் போது அதே போல் உடனே குறைப்பது இல்லை. இந்த விஷயத்திலும் அரசு வங்கிகள் நிச்சயம் வட்டி குறைப்பு செய்து விடுகின்றன.

4. தனியார் வங்கிகள் சில நேரங்களில் உங்கள் சொத்தில் உள்ள வில்லங்கத்தை (title documents ) சரி வர பார்க்காமலே உங்களுக்கு வீட்டு கடன் கொடுத்து விடுகின்றன. அதே நேரம் அரசு வங்கிகள் சொத்து உரிமை (Title ) தெளிவாக இருந்தால் மட்டுமே கடன் வழங்கும். இதனால் அரசு வங்கியில் நீங்கள் வாங்கும் வீட்டுக்கு கடன் கிடைக்கிறது என்பதே, அந்த வீட்டின் சொத்து உரிமை (Title ) நன்றாக உள்ளது என்று அர்த்தம்.

தனியார் வங்கிகள் விரைவாக பணத்தை உங்களுக்கு வழங்குகிறார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக பில்டர்கள் அவர்களை தான் பரிந்துரைப்பார்கள். ஆனால் நாம் தான் அரசு வங்கி என்று தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும். லோன் கையில் கிடைக்கும் வரை சற்று அலைந்தால் கூட, திரும்ப செலுத்தும் வருடங்களில் அரசு வங்கி என்றால் கவலை இன்றி இருக்கலாம் !

அடுத்த கேள்வி நிரந்தர வட்டி முறையா ( Fixed rate of interest ) மாறும் வட்டி முறையா ( Flexible rate of interest ) எதை தேர்ந்தெடுப்பது என்பது.

இன்றைக்கு வட்டி சதவீதம் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நிரந்தர வட்டி முறை தேர்ந்தெடுப்பது புத்திசாலி தனம் அல்ல. மேலும் நிரந்தர வட்டி என எப்போது அவர்கள் சொன்னாலும், வட்டி சதவீதம் ஒரு வேளை உயர்ந்து கொண்டே போனால், ஒவ்வொரு மூன்று ஆண்டுகள் கழித்து அவர்கள் அதனை அப்போது என்ன வட்டி விகிதம் உள்ளதோ அதற்கு இணையாக மாற்றி விடுவார்கள். எனவே மாறும் வட்டி முறை (Flexible interest rate) எடுப்பது தான் நல்லது. ஒரு சில நேரங்களில் சில வங்கிகள் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்துடன் உள்ள உறவின் காரணமாக உங்கள் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் மிக குறைந்த வட்டி சதவீதம் நிரந்தர வட்டி முறையில் தந்தால் அப்போது வேண்டுமானால் நீங்கள் நிரந்தர வட்டி முறை பற்றி யோசிக்கலாம்.

எந்த வங்கியில் கடன் வாங்கினாலும் ப்ராசசிங் சார்ஜ் (மொத்த கடன் தொகையில் கிட்ட தட்ட 1 % ) இருக்கும். இதனை குறைக்க சொல்லி கேட்டு பார்க்கலாம். சில நேரங்களில் நாம் கேட்டால் குறைக்க வாய்ப்பு உண்டு. குறைக்கிறார்களோ இல்லையோ கேட்டு பார்த்து விடுவது நல்லது.

உங்கள் புது வீட்டின் கிரைய பத்திரம் (Sale deed) எந்த வங்கியில் கடன் வாங்குகிறீர்களோ அவர்கள் வசம் சென்று விடும். எனவே அதை நகல் ( Xerox ) எடுத்து கொள்வது அவசியம். அடுத்த இருபது வருடத்தில் தண்ணீர் கனக்ஷன் உள்ளிட்ட பல நேரங்களில் அது உங்களுக்கு தேவைப்படும்.

இறுதியாக புது வீடு மூலம் உங்களுக்கு கிடைக்கும் வரி சலுகை பற்றி சில வரிகள்.

நீங்கள் புதிதாக வாங்கிய வீட்டில் நீங்கள் குடியிருந்தால் நீங்கள் செலுத்தும் வட்டியில் ரூபாய் 1 ,50 ,000 வரை உங்கள் வருமானத்தில் கழித்து கொள்வார்கள். அதாவது அந்த 1 ,50 ,000 க்கு வரி கிடையாது.

புதிய வீட்டில் நீங்கள் குடியிருக்காமல் வாடகைக்கு விட்டால் நீங்கள் கட்டும் வரி முழுதுக்கும் வரி சலுகை கிடைக்கும். ஆனால் அந்த வீட்டிலிருந்து வரும் வாடகையை கழித்து கொண்டு மீதம் உள்ள பணத்துக்கு வரி விலக்கு கிடைக்கும்.

உதாரணமாய் நீங்கள் வட்டி ( Interest ) மட்டும் வருடம் ரூபாய் 2 ,50௦,000௦௦௦ செலுத்துகிறீர்கள் என்று கொள்வோம். உங்களுக்கு வரும் வாடகை மாதம் ஐந்தாயிரம் என்றால் வருடத்துக்கு அறுபதாயிரம் அல்லவா?

அறுபதாயிரம் வாடகையில் இருந்து 30% கழிக்க வேண்டும். மிச்சம் 42000. நீங்கள் செலுத்தும் வட்டி 2,50,000யில் இருந்து 42000ரூபாயைக் கழிக்க வேண்டும். ஆக வரிச்சலுகை உங்களுக்கு 2,08,000 ரூபாய் வரை கிடைக்கும்.

( சொந்த வீடு எனில் வரி சலுகை வரை 1,50௦,000௦௦௦ மட்டுமே என வாசித்தது நினைவில் உள்ளது தானே?)

இதை தவிர நீங்கள் செலுத்தும் பிரின்சிபல் தொகைக்கும் Sec. 80 C-ன் கீழ் வரி விலக்கு உண்டு !

இறுதியாய் சில வரிகள்:

வரி விலக்குக்காக (Tax benefit ) மட்டும் வீடு வாங்காதீர்கள். வீடு வாங்குவது பெரிதில்லை. அதை பராமரிப்பது செம கடினம். உங்களுக்கென்று ஒரு வீடு இருக்கும் பட்சத்தில் அடுத்து வாங்க நினைத்தால், அதை இன்னொரு வீடாக இல்லாமல் நிலமாக (அதற்கு வரி விலக்கு இல்லா விட்டாலும்) வாங்கி விடுவது பல விதங்களில் நல்லது !

Saturday, November 26, 2011

அஷ்வின்: வில்லன் ஆன ஹீரோ

அஷ்வின் முதல் டெஸ்ட் சீரிஸில் இரண்டு மேன் ஆப் தி மேட்ச் மற்றும் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கும் அளவு அசத்துவார் என நினைக்கவே இல்லை. ஆனாலும், ஆனாலும்.. அந்த ஒரு ரன்னை எடுக்க தவறினாரே !


இப்படி கடைசி பந்துகளில் வெற்றியை தவற விடுவது அவருக்கு முதல் முறை அல்ல ! இதே போல 2010-ஆம் ஆண்டு IPL -ல் சென்னை Vs பஞ்சாப் ஆட்டத்தில் சென்னை கடைசி ரெண்டு பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி. அஷ்வின் தான் பேட்டிங். ஐந்தாம் பந்து கட்டை போட்டார். கடைசி பந்தில் அவுட். இரண்டு பந்தில் ஒரு ரன் எடுக்காமல், மேட்ச் சூப்பர் ஓவர் சென்றது. அதில் பஞ்சாப் சென்னையை நைய புடைத்து வென்றது. இதனை நேரில் பார்த்து மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன். அது பற்றி இந்த பதிவில் எழுதி இருக்கிறேன் !

Dramatic Draw ஆன மும்பை டெஸ்ட் பற்றி சில துளிகள்:
முதல் இரு நாட்களும் மேற்கு இந்திய தீவுகள் பேட்டிங் செய்தது.. பிரேவோ பாட்டிங் பார்க்க லாரா போலவே உள்ளது. இவர் லாராவின் ஒன்று விட்ட தம்பி (Cousin பிரதர்) என்கிறார்கள். இடது கை ஆட்டக்காரர் என்பதோடு, உயரம், நடை, ஷாட்கள் இப்படி பல ஒற்றுமைகள். லாராவுடன் இவ்வளவு சீக்கிரம் ஒப்பிடுவது தவறு என்றாலும் லாரா என்கிற stylish batsman-ஐ நாம் மிஸ் செய்கிறோம் அல்லவா? அவர் நினைவுகளை இவர் மீண்டும் வர வைக்கிறார் !

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் துவங்கிய பின் சச்சின் செஞ்சுரி பற்றி மட்டுமே எதிர் பார்ப்பு இருந்தது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் சச்சின் 67 நாட் அவுட் என்றதும் இரவோடு இரவாக மறு நாள் அவர் நூறாவது செஞ்சுரி அடித்த உடன் வெளியிட பதிவு தயார் செய்தேன். நான்காம் நாள் காலை அவர் மிக வேகமாக ஆட, பதிவிற்கு கடைசி கட்ட எடிட் செய்து வெளியிட தயாராகும் போது, 94-ல் அவுட் ! எனக்கு செம மூட் அவுட் ! பதிவை வெளியிடாதது பிரச்சனை இல்லை. அவர் என்னிக்கு நூறாவது செஞ்சுரி அடிச்சாலும் நான் வெளியிடத்தான் போறேன் ! (யாருப்பா அது ஐயையோன்னு கத்துனது?) சச்சின் மும்பையில் நூறாவது செஞ்சுரி அடிக்காதது தான் ஏமாற்றம் !அடுத்து வரும் ஒரு நாள் போட்டிகளும் விளையாடாத போது இன்னும் எவ்வளவு நாள் நூறாவது செஞ்சுரிக்கு காத்திருக்கணுமோ ?

விராட் கோலி இரண்டு இன்னிங்க்சிலும் நன்கு ஆடினார். கோலி முதல் இன்னிங்க்சில் அவுட் ஆனதும் அஷ்வின் ஆட்டம் செம சூடு பிடித்தது. எட்டாவதாக இறங்கும் இவர் செஞ்சுரி அடித்தது ஆச்சரியம் ! சச்சின் செஞ்சுரி எதிர் பார்த்த நாம் அஷ்வின் செஞ்சுரியில் மகிழ்ந்தோம் !

எப்படி இருப்பினும் அஷ்வினின் அந்த செஞ்சுரி இந்தியாவை தோல்வியிலிருந்து தவிர்த்தது என்பது உண்மை ! அவரின் இந்த ஆட்டத்தில் மகிழாதோர் ஹர்பஜன் மற்றும் அவர் நலம் விரும்பிகளாக மட்டுமே இருப்பார்கள்.

ஒன்றரை நாளுக்கு குறைவாக உள்ள நிலையில் மீதம் ஆளுக்கு ஒரு இன்னிங்க்ஸ் ஆடணும் என்றதும் மேட்ச் டிரா என நினைத்தோம். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு இந்திய தீவு 81க்கு 2 விக்கெட் இழப்பு. ஓவர் ஆள் லீட் கிட்டத்தட்ட 200 ரன்கள்.

ஐந்தாவது நாள் ஆட்டம் துவங்கி அடுத்த 42 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள எட்டு விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியாவிற்கு 243 ரன்கள் என்ற வெற்றி இலக்கு. ஓஜா மிக அருமையாக பவுலிங் போட்டு ஆறு விக்கெட் வீழ்த்தியது முக்கிய காரணம் !

கடைசி நாள் பிட்சில் 243 ரன் எடுப்பது சற்று சிரமம் தான். ஆனால் கடைசி வரை இந்த ஸ்கோரை எடுக்க போராடியதற்கு இந்திய அணியை பாராட்ட தான் வேண்டும்.

சேவாக் 60 , லக்ஸ்மன் 34 என ஆளாளுக்கு தங்கள் பங்களிப்பை தந்தாலும் இறுதி வரை முன்னணி பேட்ஸ்மன் நின்று ஆடாதது தான் இந்த ரிசல்ட்டுக்கு முக்கிய காரணம் ! சச்சின் மீண்டும் ஒரு சொதப்பல் அவுட்

கோலி மிக பொறுப்பாக ஆடினார். அவர் அவுட் தான் நிச்சயம் டர்னிங் பாயின்ட்!  பின் இஷாந்த் , அஷ்வின் ஆடிய போதும் ஜெயிக்க வாய்ப்பு பிரகாசம் என்றே தோன்றியது. பத்து ரன் எடுத்த இஷாந்த் அவுட் ஆன போது நாம் எட்டு பந்தில் 4 ரன் எடுக்க வேண்டும்.

ஒரு பந்தை கட்டை போட்ட ஆரூண் கடைசி பந்தில் ஓவர் காஜ் அடித்தார். கடைசி ஓவர். மூணு ரன் எடுத்தால் வெற்றி. மூன்று பந்துகளை வீணாக்கினார் ஆரூண். நான்காவதில் ஒரு ரன் எடுக்க, ஐந்தாவது பந்தை கட்டை போட்டார் அஷ்வின். (அதில் அவர் அவுட் ஆனால் அடுத்த பந்தில் இந்தியா ஆள் அவுட் ஆக வாய்ப்பு உண்டல்லவா?) கடைசி பந்தை பவுண்டரி அருகே அடித்தாலும் ஒரு ரன் மட்டும் ஓடி ரன் அவுட் ஆனது கொடுமை ! இந்த ரன் பற்றி அஷ்வின் தனது ட்வீட்டில் இப்படி கேட்டிருக்கிறார்:

"Can anyone tell what differently cud have been done??instead of saying cud have run the 2...moment I completed 1 the throw was over my head." - Ashwin.

ம்ம் எனது எனது வருத்தமெல்லாம் மேட்சை நேரில் பார்த்த மும்பை மக்களை நினைத்து தான். எவ்வளவு மனம் நொந்து திரும்ப போவார்கள் ! நான் மேட்ச் கடைசி அரை மணி மட்டும் தான் டிவியில் பார்த்தேன். மற்ற நேரம் கணினியில் வேலை பார்த்தவாறே Cricinfo-ல் அவ்வப்போது ஸ்கோர் கவனிப்பேன்.எனவே ரிசல்டுக்காக அதிக அப்செட் இல்லை !

இந்த மேட்ச் இந்தியா வென்றிருந்தால் நாம் சில மாதங்களில் மறந்திருப்போம். இப்படி ஒரு கொடுமையான டிரா என்பதால் பல ஆண்டுகள் கழித்தும் "அஷ்வின் ரெண்டு ரன் அடிச்சிருக்கணும்" என்று சொல்லி கொண்டிருப்போம் !

கடைசியில் என்ன நடக்கும் என்று தெரியாத, ஊகிக்க முடியாத இத்தகைய ஆண்டி கிளைமாக்ஸ் தான் கிரிக்கெட்டை தொடர்ந்து பார்க்க வைக்கிறது !

ஜென்சி என்றொரு இனிய பாடகி


வாழ்வில் ரொம்பவும் நல்ல மனிதர்கள் மிக சாதாரணமாய் மிடில் கிளாஸ் மக்களாய், பலரும் அறியாத படி, எங்கோ ஒரு மூலையில் இருப்பதை பல முறை கவனித்துள்ளேன். அதே போல் ஒரு நல்ல பாடகி நிறைய பாடல்கள் பாடா விடினும் என்றைக்கும் மனதில் நிறைகிறார். அவர் தான் ஜென்சி.

80 - களில் இளையராஜா இசையில் சில மறக்க முடியாத பாடல்களை தந்தவர் ஜென்சி.
தமிழில் முதன் முதலில் மகேந்திரனின் classic-கான " முள்ளும் மலரும்" படத்தில் "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும்" என்ற பாடலை பாடினார். இவரது எந்த பாடலை கேட்கும் போதும் மனம் பொன்னூஞ்சல் ஆடவே செய்கிறது.


பிறகு "ப்ரியா"வில் ஜேசுதாசுடன் இணைந்து " என்னுயிர் நீதானே" பாடலை பாடினார். இந்த பாடலும் ஒரு அற்புதமான பாடல்; பல்லவியில் ஜேசுதாசும், இவரும் மாறி மாறி உடனுக்குடன் பாடுகிற மாதிரி மிக அழகாக இந்த பாடலை வடிவமைத்திருப்பார் இளைய ராஜாபாரதி ராஜாவின் புதிய வார்ப்புகளில் இரண்டு பாடல்கள்..

"தம்தன தம்தன தாளம் வரும்.. " இது மிக வேகமாக செல்லும் பாடல். அனாயசமாக பாடியிருப்பார் ஜென்சி.


இன்னொரு பாடலான "இதயம் போகுதே.. எனையே பிரிந்தே" அந்த காலத்தில் காதலர்களின் தேசிய கீதமாக ரொம்ப காலம் இருந்தது!!
அடுத்து பாரதி ராஜாவின் நிறம் மாறாத பூக்களில் மீண்டும் இரு பாடல்கள்..

"ஆயிரம் மலர்களே மலருங்கள்.. " What a song!!!


"கோடையில் மழை வரும்.... வசந்த காலம் மாறலாம்;
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ?
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்...
நீ யாரோ? நான் யாரோ? யார் சேர்ப்பதோ"

என்ற வரிகளை ஜென்சி பாடுவதையும், அதன் இடையில் வரும் "ஹம்மிங்"கையும் ஒரு முறை கேட்டு பாருங்கள். அந்த பாடலும் இந்த இடமும் பிடிக்காவிடில் பணம் வாபஸ் :))

இதே படத்தில் இன்னொரு பாடலான "இரு பறவைகள். மலை முழுவதும் இங்கே அங்கே பறந்தன.." என்ற பாட்டும் அதிகம் வெளியே தெரியா விடினும் கூட ஒரு அற்புதமான மெலடி, நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று! (அலுவலகமோ, வீடோ பெரும்பாலான நேரம் பாட்டு கேட்டு கொண்டே வேலை செய்வது தான் நம்ம வழக்கம்! வீடு மற்றும் ஆபிஸ் கணினியில் ஜென்சி பாடல்களுக்கு தனி folder  உண்டு !))மெலடி மட்டுமில்லாமல்,

தோட்டம் கொண்ட ராசாவே (பகலில் ஒரு இரவு) /
ஹே மஸ்தானா ( அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

போன்ற fast beat பாடல்களும் கூட அவர் பாடியிருக்கிறார். ஆனால் அவர் இன்றும் நினைவு கொள்ள படுவது அவரது மெலடிக்காக தான்.

1978 முதல் 1982 வரை நான்கே ஆண்டுகள் தான் தமிழ் சினிமாவில் பாடியிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜென்சி பாடுவதை நிறுத்தி விட்டார் என நினைக்கிறேன். ஒரு முறை Super Singer Junior-ல் Judge ஆக வந்திருந்தார். ஒரு பாடகி போல் இல்லாமல் மிகவும் வெள்ளந்தியாய் பேசினார்! எந்த குழந்தையையும் எந்த குறையும் சொல்ல வில்லை. வெறும் பாராட்டுக்களால் அவர்களை நனைத்தார். ரொம்ப innocent-ஆன சிரிப்பு!! அவரது குழந்தை உள்ளம் பார்க்க முடிந்தது

****************

மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் (கரும்பு வில்) ;பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே (டிக் டிக் டிக் );காதல் ஓவியம் பாடும் காவியம்  (அலைகள் ஓய்வதில்லை) ;தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. (உல்லாச பறவைகள்)
போன்ற எத்தனையோ பாடல்கள் என்றும் கேட்டு ரசிக்க தக்கவை.

கடவுள் அமைத்த மேடை என்ற படத்திலிருந்து (என்னது அப்படி ஒரு படம் வந்துச்சா? நோ நோ அப்படியெல்லாம் கேக்கபடாது) " மயிலே மயிலே" என்ற ஒரு பாட்டு ஜென்சி கொஞ்சி கொஞ்சி பாடியிருப்பார். கூடவே SPB-யும். ரொம்ப அசத்தலான பாட்டு இது!!எல்லாவற்றையும் விட எனக்கு ரொம்ப பிடித்த ஜென்சி பாடலுடன் நிறைவு செய்கிறேன்

ஜானி படத்தில், " என் வானிலே ஒரே வெண்ணிலா" என்ற பாட்டு.. இதில்,

"சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே..... வார்த்தைகள் தேவையா?? "
என்று பாடி விட்டு ஒரு ஹம்மிங் செய்வார் பாருங்கள்..ஆஹா.. இதனை பாராட்ட ..வார்த்தைகள் தேவையா??

டிஸ்கி: முன்பு பாடல்களின் வீடியோ இன்றி ஓராண்டுக்கு முன் பதிந்திருந்தேன். அதனை மிக ரசித்த சக பதிவர் பால ஹனுமான் இப்பதிவை பாடல்களுடன் தனது தளத்தில் இங்கே பகிர்ந்தார். பாடல்களுடன் நீங்கள் ரசிக்க மீள் பதிவு செய்யப்படுகிறது !

Friday, November 25, 2011

அன்னதானம்: சில நேரடி அனுபவங்கள்

இந்த பதிவை எழுதுவதா வேண்டாமா என பெரிய தயக்கம் இருந்தது. ஹவுஸ் பாசுக்கு இதை வெளியில் சொல்ல கூடாது என்று எண்ணம். இருந்தும் இதை பகிர வேண்டும் என மனம் சொல்கிறது. ஹவுஸ் பாஸ் ஆர்டரை மீறும் மிக சில செயல்களில் இது ஒன்றாக இருக்கட்டும்.
புகைப்படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது

2003 -ஆம் வருடம் என நினைக்கிறேன். என் பெண் சிறியவளாக இருந்த போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. டாக்டர்கள், லேப்கள் என அலைந்து அலைந்து மனம் நொந்து போயிருந்தோம். அப்போது வீட்டுக்கருகில் எங்களுக்கு நன்கு தெரிந்த பெண்மணி ஒருவர் எங்கள் ஜாதகம் பார்த்து விட்டு சில விஷயங்கள் சொன்னார். அப்போது தந்தையான நான் வார வாரம் அன்ன தானம் தந்து வந்தால், அவள் உடல் நிலை சரியாகும் என்றார். அப்படித்தான் அன்னதானம் செய்கிற பழக்கம் எனக்கு துவங்கியது.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாரம் நான்கு பேருக்காவது அன்ன தானம் செய்து வருகிறேன். ஏழை சிறுவர்களுக்கு, அரசு பள்ளிகளுக்கு உதவுவது என சின்ன சின்ன நற் காரியங்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஈடு பட்டாலும் முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் மட்டும் செய்யும் நற் காரியம் என்கிற நிம்மதி இதில் உண்டு.

இந்த வித்தியாச அனுபவத்திலிருந்து சில துளிகள்:

அன்ன தானம் தர ஆரம்பத்தில் கையில் சாப்பாட்டு பையுடன் ஆட்களை தேடி அலைந்திருக்கிறேன். பின் ரயில்வே நிலையம் ஒட்டி நிறைய ஏழைகள் தங்கி இருப்பது தெரிந்து மவுன்ட் ஸ்டேஷன் அருகே சென்று வாரா வாரம் சாப்பாடு தர ஆரம்பித்தேன்.

முதலில் வெவ்வேறு வித உணவுகள் குடுத்து வந்தவன் இப்போது பெரும்பாலும் "நான்கு இட்லிகள் அடங்கிய உணவு பொட்டலமே " தருகிறேன். சாப்பிடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்பதால் நன்கு செரிக்க உதவும் என்பதால் !

ஆரம்பத்தில் இட்லி நான்கு பேருக்கு வாங்கி தந்த போது ஆளுக்கு பத்து ரூபாய் என நாற்பது ரூபாய் செலவாகும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் விலை ஏறி நான்கு இட்லி இருபது ருபாய் என வாரம் என்பது ரூபாய் ஆகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏறியதால் பெரிதாக தெரிய வில்லை.

வழக்கமாய் வாங்கும் கடையில் இன்று அன்ன தானம் செய்கிறேன் என்றால் 15 நிமிடம் முன்பே போன் செய்து பார்சல் கட்ட சொல்லிடுவேன். போகும் போது ரெடி ஆக வைத்திருப்பார்கள்.

ஹவுஸ் பாஸ் உடன் வேலை பார்ப்போரில் சிலர் தங்கள் திருமண நாள் அல்லது குழந்தைகள் பிறந்த நாள் போது மட்டும் " பத்து பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்" என எங்கள் மூலம் செய்ய சொல்வார்கள். இப்படி சற்று அதிகமான நபர்களுக்கு தர வேண்டுமெனில் ரயில்வே ஸ்டேஷன் அருகே தான் தந்தாக வேண்டும் ! அங்கு தான் ஒரே நேரத்தில் இத்தனை பேரை பார்க்க முடியும். அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். எல்லோரும் " எனக்கு சாப்பாடு; எனக்கு சாப்பாடு" என்று கேட்பார்கள். எல்லோருக்கும் தர முடிய வில்லையே என்று சற்று வருத்தமாக இருக்கும் !

சமீபமாக மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பாட்டிகள் மற்றும் தாத்தாவிற்கு உணவு தந்து வருகிறேன். இதில் ஒரு பாட்டி பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இந்த பாட்டி எப்போதும் தனக்கு சாப்பாடு மற்றும் சாம்பார் தனியாக கவரில் போட்டு தான் தர வேண்டும் என்று சொல்லும் ! சில நேரம் கடையில் சாப்பாடு கட்டுபவர் அனைத்தையும் ஒரே கவரில் போடுவார். அப்போது எல்லோருக்கும் தனி தனியே எடுத்து தர வேண்டி இருக்கும். ஆனால் நம்ம பாட்டியோ கவர் இன்றி வாங்க மாட்டேன் என உறுதியாய் இருக்கும். இதனால் மற்றவர்களுக்கு கவர் இன்றி தந்து விட்டு, கடைசியாக கவர் உடன் இந்த பாட்டிக்கு தருவேன். அப்போதெல்லாம் " இந்த நிலையிலும் இந்த பாட்டி தான் நினைத்ததில் விடாபிடியாய் இருந்து சாதிக்கிறதே !" என்று மனதுக்குள் சிரித்து கொள்வேன் ! ஒன்றை பாருங்கள் ! உங்களுக்கு எது தேவை என்பதில் நீங்கள் தெளிவாக, உறுதியாக இருந்தால் அது உங்களுக்கு கிடைக்கிறது !

பொன்னியம்மன் கோயிலில் வாரா வாரம் கோயிலுக்கு உள்ளேயே செல்லாமல், வெளியில் நின்று உணவு மட்டும் தந்து விட்டு சென்று விடுவது எனக்கே சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனாலும் காலை நேரம், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் உள்ளே செல்ல நேரம் இருக்காது.

வாரா வாரம் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரம் என வைத்து கொள்வதில்லை. அப்படி செய்தால் அவர்களுக்கும் ஒரு எதிர் பார்ப்பு வந்து விடும். சில காரணங்களால் நம்மால் அன்று தரா விடில் நமக்கும் மன கஷ்டம். அவர்களுக்கும் ஏமாற்றம். எப்படியும் வாரம் ஒரு முறை நான்கு பேருக்கு என்பது மட்டும் தான் ரூல். இதிலும் கூட சில வாரங்கள் தர விடுபட்டு விடும். அப்போது அடுத்த வாரம் நான்கு பேருக்கு பதில், எட்டு பேருக்கு தந்து கணக்கை சரி செய்வேன்.

பார்த்த சாரதி கோயில், வேளாங்கண்ணி என கோயில்கள் செல்லும் போதெல்லாம் வெளியில் வயதானவர்கள் அமர்ந்திருப்பது பார்த்தால், அந்த வார அன்னதானத்தை அங்கு முடித்து விடுவது வழக்கம்.

சில நேரம் ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் வசிக்கும் ஏழைகள், அவர்கள் குழந்தைகளுக்கு தரும் போது, அந்த குழந்தைகள் பையை பெற்று கொண்டு மகிழ்ச்சியாக சிரிக்கும். அந்த நேரம் நமக்கும் மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த அன்ன தானத்தால் எனக்கு ஏதும் நல்லது நடந்ததா?

முன்பே சொன்ன மாதிரி எங்கள் பெண் உடல் நலனுக்காக துவங்கியது இது. அதன் பின் அவள் பெரியவள் ஆக ஆக சின்ன வயதில் இருந்த உடல் தொந்தரவுகள் முழுதும் மறைந்து விட்டன. அதற்கு இதுவும் ஒரு காரணம் என ஹவுஸ் பாஸ் உறுதியாக நம்புகிறார். ஏதாவது பிரச்சனை வந்தால், "இந்த வாரம் சாப்பாடு குடுத்தீங்களா? " என கேட்பார். நான் "குடுத்துட்டேன்" என்றால் ஓகே. இல்லா விடில் " இந்த வாரம் குடுக்காததால் தான் இப்படி" என்பார்.

எப்போதும் ஏதோ யோசனையுடனே வண்டி ஓட்டும் என் டூ வீலரை எத்தனையோ முறை லாரி அல்லது பஸ் முத்தமிடுவது போல் ஒட்டி சென்றுள்ளன. அப்படி தப்பும் போதெல்லாம். " தர்மம் தான் தலை காக்கிறது " என நினைத்து கொள்வேன்.

நிஜமான நன்மை என்றால் நம் மனதில் தோன்றும் திருப்தி. அது தான் இதை தொடர்ந்து செய்ய வைக்கிறது. நான் ஒன்றும் அநியாயத்துக்கு நல்லவன் கிடையாது. எல்லோரையும் போல கடவுள் பாதி மிருகம் பாதி தான் ! ஆனால் நம்மை நாமே மதிக்க, இது போன்ற செயல்கள் தான் உதவுகின்றன.

மேலும் நிஜமாக வேலை பார்க்க முடியாமல், பிள்ளைகளாலும் கை விடப்பட்ட இத்தகைய வயதானோருக்கு, பிற ஏழைகளுக்கு உதவுவது ஒரு சின்ன சமூக கடமை என்று தான் நினைக்கிறேன். சில பேராவது இப்படி ஈடு பட்டால், பட்டினியை ஓரளவு ஒழிக்கலாம் !

இதை வாசிக்கும் யாரோ ஒருவர் அடுத்த முறை கோயிலுக்கு போகும் போது வெளியில் இருக்கும் இருக்கும் வயதானவருக்கு சாப்பாடு வாங்கி தந்தால், நான் இந்த பதிவு எழுதியதற்கான ஒரு அர்த்தம் கிடைக்கும் !! குழந்தைகள் பிறந்த நாள் போன்ற நேரத்திலாவது செய்து பாருங்கள் ! உங்களை நீங்களே இன்னும் அதிகமாக மதிக்க துவங்குவீர்கள் !

Thursday, November 24, 2011

தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ் : ஓர் ஒப்பீடு

தமிழில் தமிழ் மணம், இன்ட்லி, யுடான்ஸ், தமிழ் 10, திரட்டி, உளவு என ஏறக்குறைய பத்து திரட்டிகள் இருக்கும் என நினைக்கிறேன். இதில் முன்னணியில் இருப்பவை தமிழ் மணம் மற்றும் இன்ட்லி ! யுடான்ஸ் சமீபத்தில் துவக்கப்பட்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த மூன்று திரட்டிகள் குறித்த ப்ளஸ்/ மைனஸ் அலசல் இதோ: 

தமிழ் மணம்


எனக்கு தெரிந்த வரை பல விஷயங்களில் மிக User friendly திரட்டி என்றால் அது தமிழ் மணம் தான். "தமிழின் நம்பர் 1 திரட்டி" என்று அவர்கள் சொல்கிறார்கள். இனி தமிழ் மணத்தின் ப்ளஸ் மைனஸ் பார்க்கலாம்

ப்ளஸ்:

முகப்பு பக்கம் அசத்தல். அநேகமாய் அங்கேயே உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் ! எடுத்தவுடன் தமிழ் மணம் ஸ்டார். அவரின் பதிவுகள்... ப்ளாக் எழுதும் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரு முறை ஸ்டார் ஆக மாட்டோமோ என்ற ஆசை வரும் அளவுக்கு இந்த தமிழ் மண ஸ்டார் ரொம்பவே பிரபலம். ஆயினும் அதனை குறிப்பிட்ட நபர் எப்படி உபயோகிக்கிறார் என்பதை பொறுத்தே அவரது ரீச் அமையும்

முகப்பு பக்கத்தில் உள்ள இந்த வார மற்றும் இன்றைய சூடான இடுகைகள் இன்னொரு நல்ல அங்கீகாரம் ! நமது பதிவு எப்போதாவது அங்கு வருகிறதா என பார்ப்பது வழக்கம். (சமீப காலமாக இந்த சூடான இடுகையில் நம் பதிவுகள் அடிக்கடி எட்டி பார்க்கிறது சிறு மகிழ்ச்சி)

வலப்புறம் ஒன்று முதல் நாற்பது வரை பின்னூட்டம் பெற்ற பதிவுகள் அணிவகுக்கும். இந்த வரிசையும் மாறி கொண்டே இருக்க, வாசிப்பவர்களுக்கு நல்ல வெரைட்டி கிடைக்கிறது

பின் பதிவுகளை பகுதி வாரியாக அரசியல், நகைச்சுவை, சமையல் என பிரித்திருப்பதும் நமக்கு பிடித்த பகுதிக்கு சென்று பதிவுகள் வாசிக்க பெரும் வசதியாக உள்ளது (ஆனால் இங்கு சில நேரம் தவறாக லிஸ்ட் ஆவதும் நடக்கிறது. உதாரணமாக சினிமா சம்பந்தமான பதிவு சமையல் என்பதன் கீழே தொகுக்கப்பட்டிருக்கும். கவனித்து சரி செய்தால் நலம்)

வாரா வாரம் அந்த வார முதல் 20- ப்ளாகர்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறது. இது குறித்து பலருக்கும் மாற்று கருத்து உள்ளது. இருப்பினும் இது ஒரு மாரத்தான் வேலை. விருப்பு வெறுப்பின்றி இது நடந்தால் உண்மையில் மகிழ்ச்சியே.

வருட இறுதியில் தமிழ் மணம் நடத்தும் போட்டிகளில் பதிவர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர் !! இதில் வெல்வோருக்கு நல்ல புத்தகங்களை பரிசளித்து வாசிக்கும் பழக்கத்தை மேலும் ஊக்குவிக்கிறார்கள்.

இனி தமிழ் மணத்தில் எனக்கு பிடிக்காத ஒரு சில விஷயங்கள் :

தமிழ் மண முன்னணி (வாக்குகள்) பட்டியலில் இருப்பவை அனைத்தும் சிறந்த பதிவுகளா? உண்மையில் மிக நல்ல பதிவுகள் நிறைய வாக்குகள் பெறுவது இல்லை. உதாரணமாய் சமுத்ரா என்கிற பதிவர் மிக அருமையாக எழுதுகிறார். புத்தகங்களில் வரும் அளவு அவர் எழுத்து உள்ளது. அவருக்கு எத்தனை பேர் வாக்களிக்கின்றனர்? எத்தனை முறை அவருடைய இடுகை சூடான இடுகை லிஸ்டிலாவது வருகிறது என்றால், அநேகமாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டி உள்ளது. வாக்கு என்பது முழுக்க முழுக்க " மொய்க்கு பதில் மொய்" என்கிற அளவில் தான் நடக்கிறது என்கிற போது அதற்கு அதிக முக்கியத்துவம் தேவையா?
தமிழ் மண நிர்வாகிகள் அவ்வப்போதாவது மிக அதிக வாக்குகள் வாங்கி முன்னணியில் இருக்கும் இடுகைகளை வாசித்து பார்க்கட்டும். இந்த அரசியல் தமிழ் மணத்தின் quality-ஐயும் குறைக்கிறது என்பதை தமிழ் மண நிர்வாகிகள் உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த மைனஸ்: ஓட்டு போடுவதற்கு ஒவ்வொரு முறையும் முழு ஈ மெயில் ஐ.டி மற்றும் பாஸ்வோர்ட் கேட்பது. இதனால் நிறைய பேர் ஓட்டு போடாமல் போய் விடுகிறார்கள்.

சமீபத்தில் நிகழ்ந்த பிரச்சனை தமிழ் மணத்திற்கு சிறு கரும் புள்ளி தான். அதிலிருந்து விரைவில் மீண்டு அனைவரையும் மீண்டும் அரவணைத்தது நல்ல விஷயம் !

இன்ட்லி

ஒன்றை முதலிலேயே சொல்லி விடுகிறேன். நம் சைட்டுக்கு எங்கிருந்து அதிக visitors வருகிறார்கள் என பார்க்கும் வசதி கூகிளில் உள்ளதல்லவா? அதை வைத்து பார்க்கும் போது எப்போதும் இன்ட்லி மூலம் தான் அதிக visitors நம் ப்ளாகுக்கு வருகிறார்கள் ! ஒவ்வொரு ப்ளாகரும் விரும்புவது நம் எழுத்தை நிறைய பேர் வாசிக்க வேண்டும் என்பது தானே ! இதனை நிறைவேற்ற பெரிதும் உதவுகிறது இன்ட்லி.

இன்ட்லியில் ஓட்டு போடுவது மிக எளிது. இதனால் முன்பெல்லாம் ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய ஓட்டு விழும். மேலும் குறிப்பிட்ட ஓட்டுகள் தாண்டினால் நமக்கு "உங்கள் இடுகை பிரபலமாக்கப்பட்டது " என மெயில் வரும். இது நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது இந்த முறை இல்லை.

இன்ட்லியில் தற்போதைய மாற்றங்கள் சற்று குழப்பமாக அமைந்து விட்டன.

கிட்டத்தட்ட நூறு பதிவர்களை மட்டும் "இன்ட்லி பரிந்துரை " பதிவர்களாக காட்டுகிறார்கள். இதில் ரெகுலராக எழுதும் பலரும் வந்தாலும் கூட, இதில் வராத பிற பதிவர்கள் மனம் வருந்தவும் வாய்ப்புண்டு.

நாம் இன்ட்லியில் நுழைந்தால்,முதலில் நாம் எந்தெந்த பதிவர்களை தொடர்கிறோமோ அவர்களின் படைப்புகள் மட்டுமே தெரிகிறது. மற்ற பதிவுகளை வாசிக்க எங்கே போவது என புது ஆட்களுக்கு நிச்சயம் குழப்பமாக இருக்கும்.

வாசிக்க, ஓட்டளிக்க என பல விதத்திலும் எளிமையாக இருந்த இன்ட்லி தற்சமயம் சற்று Complicate ஆகி விட்டது. பழைய விஷயங்களில் சிலவற்றை மீண்டும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பது வாசகர்களின் எதிர்பார்ப்பு .

யுடான்ஸ் 
தமிழ் மணம், இன்ட்லி என்கிற வரிசையில் யுடான்ஸ் பேரும் இவ்வளவு குறுகிய காலத்தில் வந்ததே பெரிய விஷயம் அல்லவா? பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் திரட்டி என்கிற இவர்கள் tagline- சுவாரஸ்யமாகவும் அனைவரையும் கவரும் விதத்திலும் உள்ளது. தமிழ் மணம் மற்றும் இன்ட்லியில் உள்ள நல்ல விஷயங்களை தங்களுக்கே உரித்தான முறையில் இங்கு உபயோகித்துள்ளனர்.

ஓட்டு போடுவது மிக எளிதாக உள்ளது. பதிவுகள் வாசிப்பதும் தான். இந்த வார ஸ்டார் இன்னும் ஒரு சுவாரஸ்யம். இப்போதைக்கு அமைப்பளர்களுக்கு தெரிந்த நண்பர்கள் தான் அதிகம் நட்சத்திரங்களாக இடம் பெறுகிறார்கள் ! இன்னும் புது புது ப்ளாகர்களை ஸ்டார் ஆக்கி எழுத வைக்க வேண்டும். மேலும் இதற்கு முன் ஸ்டாராக இருந்தவர்கள், அந்த வாரத்தில் என்ன எழுதினார்கள் என்பது குறித்த தகவல் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லணும்னா, யார் யார் ஸ்டார் ஆக இருந்தார்கள் என்ற தகவலே பார்க்க முடியலை. இதை பார்க்கிற மாதிரி அவர்கள் செய்ய வேண்டும்.

யுடான்ஸ் டிவி என்பது மிக நல்ல கான்செப்ட். இந்த விஷயத்தில் தமிழ் திரட்டிகளில் இவர்கள் ஒரு முன்னோடியாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

மேலும் பிரிவுகள் படி பதிவுகளை (நகைச்சுவை, சினிமா) வாசிக்கும் வசதியும் கொண்டு வந்தால் நல்லது.

***
இறுதியாக ..

எழுதும் எந்த பதிவருக்கும் இந்த திரட்டிகள் தான் மிக பெரிய உந்துதல் ..Recognition எல்லாமே தருகின்றன ! லாப நோக்கின்றி சாதாரண மனிதர்களால் நடத்தப்படும் இவர்கள் சேவை போற்ற தக்கது. இன்னும் தங்கள் திரட்டியை எப்படி முன்னேற்றலாம் என்று எண்ணத்துடன் இவர்கள் செயல் பட்டால் பதிவர்களாகிய நமக்கு கொண்டாட்டம் தான் !

Wednesday, November 23, 2011

தென்னக ரயில்வேயின் ஸ்மார்ட் கார்ட் : சில அனுபவங்கள்

சென்னை ரயிலில் தினம் செல்வோர் "மாதாந்திர பாஸ்" வாங்கிவிடுவர். எப்போதோ ஒரு முறை செல்பவர்கள் பாடு தான் சற்று திண்டாட்டம். டிக்கட் வாங்க வால் போல் நீளும் கூட்டத்தில் நின்று டிக்கெட் வாங்குவதற்குள் ஒரு சில ரயில் சென்று விடும். நாம் டிக்கெட் வாங்கிய பிறகு சோதனையாக நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருப்போம். இத்தகைய மனிதர்களின் கஷ்டம் தீர்க்க வந்தது தான் தென்னக ரயில்வேயின் ஸ்மார்ட் கார்ட்.

நான் ரயிலில் மாதம் ரெண்டு, மூன்று முறை செல்பவன். சென்னையில் ரொம்ப தூர பயணம் எனில் ரயிலை விட விரைவாக வேறு எந்த விதத்திலும் செல்ல முடியாது என்பதாலும், இந்த பயணம் தரும் இனிய அனுபவங்களுக்காகவும் செல்வேன். அப்போதெல்லாம் அடிக்கடி கியூவில் நின்ற அனுபவம் தான் ஸ்மார்ட் கார்ட் வாங்க யோசிக்க வைத்தது. ரொம்ப நாள் யோசனைக்கு பின் தான் "சரி முயற்சித்து தான் பார்ப்போமே" என்று வாங்கினேன்.

இந்த இடத்திலேயே ஒரு விஷயத்தை விளக்கி விடுவது உசிதம். ஸ்மார்ட் கார்ட் சில முறை எனது BP எகிற வைத்தது உண்மை தான். அது பற்றி இக்கட்டுரையில் நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன் .........
*******
பார்ப்பதற்கு நமது ATM கார்ட் போல இருக்கும் இந்த ஸ்மார்ட் கார்ட் பற்றிய சில தகவல்கள் இதோ:

முதல் முறை நூறு ரூபாய் தந்து ஸ்மார்ட்கார்ட் வாங்கினால், எழுபது ரூபாய்க்கு டிக்கெட் ரீ-சார்ஜ் செய்து தருகிறார்கள். மீதம் முப்பது? ப்ராசசிங் சார்ஜ்! பயப்படாதீர்கள் ! இது முதல் முறை மட்டும் தான். அடுத்த முறையிலிருந்து நாம் தரும் பணத்துக்கு மேல் 5% ரீ-சார்ஜ் செய்கிறார்கள். (நூறு ரூபாய் தந்தால் -105-க்கு ரீ-சார்ஜ் !)

Smart card உபயோகிக்கும் முறை கிட்டத்தட்ட நாம் ஏ. டி.எம் கார்ட் உபயோகிப்பது போல் தான். இந்த மெஷினில் குறிப்பிட்ட இடத்தில் கார்டை வைக்க வேண்டும். பின் கம்பியூட்டர் ஸ்க்ரீனில் நாம் செல்ல வேண்டிய ரூட்டின் மேல் விரல் வைத்தால் அந்த ரூட்டில் உள்ள அனைத்து ஸ்டேஷன் பெயர்களும் தெரியும். நாம் செல்ல வேண்டிய இடம் தேர்ந்தெடுத்து விட்டு எத்தனை டிக்கட், ரிட்டர்ன் டிக்கட் வேண்டுமா என அழுத்தி விட்டு "பிரிண்ட்" அழுத்தினால் டிக்கட் வந்து விழுந்து விடும். கியூவில் நிற்காமல் உடனடியாக சில நொடிகளில் டிக்கட் கிடைத்து விடும்.

கேட்க நல்லா தான் இருக்கு. நிஜத்தில் உள்ள பிரச்சனைகள்??

சில இடங்களில் இந்த மெஷின் வேலை செய்வதில்லை. குறிப்பாக செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் உள்ள மெஷின் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. இது பற்றி அங்கு டூட்டியில் இருப்போரிடமும், ஸ்டேஷன் மாஸ்டரிடமும் கம்ப்லெயின்ட் செய்து செய்து வெறுத்து போச்சு. எப்ப கேட்டாலும் "கொஞ்ச நேரம் முன்னாடி கூட வேலை செஞ்சுதே?" என்பார்கள். பின் வந்து பார்த்துட்டு, "ஆமாம் இப்ப வேலை செய்யலை" என ஊர்ஜிதம் செய்வார்கள். ஒரு முறை " Complaint Register" -ல் எழுதணும் என்றதும் அதை தவிர்க்க எவ்வளவோ போராடினார்கள். நான் விடாப்பிடியாக நின்று எழுதி விட்டு வந்தேன். அதன் பின் சில முறை வேலை செய்தது. நான் கூட " சரி தான். நம்ம Complaint -கொஞ்சம் வேலை செய்யுது போல" என நினைத்தேன். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி மெஷின் வேலை செய்வதில்லை.

இது போன்ற நேரங்களில் நமக்கு வரும் எரிச்சல் சொல்லி மாளாது. இந்த  கார்ட் வாங்குவதே கியூவில் நிற்காமல் வேகமாய் டிக்கட் வாங்கத்தான். ஆனால் மெஷினில் ஐந்து நிமிடம் செலவழித்து அதன் பின் ரெகுலர் கியூவில் நிற்கிற கொடுமை இருக்கே ! வெறுத்து போகும் !!

இதற்கு மேலும் ஒரு பிரச்சனை ரொம்ப அரிதாக நடக்கிறது. மெஷின் சரியாக வேலை பார்க்காத சில நேரம், நீங்கள் எடுக்க முயற்சிக்கும் போது . உங்கள் கார்டில் பணம் குறைந்து விடும். ஆனால் டிக்கெட் வராது ! ஒரு முறை இப்படி நடந்து டிக்கட் கவுண்டரில் சென்று கேட்ட போது அங்கிருந்த மேதை " மெஷின் வேலை செய்யாதப்போ நீங்க ஏன் கார்ட் போட்டீங்க" என நம்மை கடித்தார். " மெஷின் வேலை செய்யலைன்னு எப்படிங்க தெரியும்? நீங்க மெஷின் வேலை செய்யாதுன்னு போர்டா போட்டிருக்கீங்க? எப்பவும் போல தான் யூஸ் செய்தேன்" என்றால், " எனக்கு தெரியாதுங்க. அதுக்கு வேற ஆள் வரணும்" என்று எஸ்கேப் ஆனார் அவர்.

இப்படி பணம் டெபிட் ஆகி டிக்கட் வராத சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது என நெட்டில் வாசித்தால் தெரிகிறது.

இவ்வளவு நடந்தும் இன்னும் ஸ்மார்ட் கார்ட் வைத்திருக்கிறேன் தான்.

மும்பை போன்ற இடங்களில் Smart Card முறை மிக பெரிய வெற்றி. சென்னையிலோ மாபெரும் தோல்வி. மும்பையில் மொத்த பயணிகளில் 18 % இந்த முறையை பயன் படுத்துகின்றனர். சென்னையில் 1 % கூட இல்லை.

சரியான முறையில் பராமரித்தால் இந்த ஸ்மார்ட் கார்ட் மெஷின்கள் நிச்சயம் டிக்கெட் எடுக்க நிற்கும் கூட்டத்தை குறைக்க உதவும். ஏ. டி. எம் மெஷின்கள் பிரபலமானது போல் இவையும் பிரபலமாகும் நாள் வரும். அதற்கு தென்னக ரயில்வே ஒழுங்காக இயங்கும் மெஷின்களை அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும்.

அது முடியா விட்டால், இயங்காமல் இருக்கும் மெஷின்களை வைப்பதற்கு பதில், இந்த முறையையே பேசாமல் எடுத்து விடலாம்.

மக்களுக்கு பணமும் நேரமும் மிச்சம் செய்ய வந்த இந்த Smart Card தேவையற்ற மன சங்கடங்களை தந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை !

Tuesday, November 22, 2011

நகரம் - சென்னை வாழ்க்கை குறித்த கவிதைபுகைவண்டியின்
ஏகமான கூட்டத்தில்
மூச்சு திணறி 
மூர்ச்சையானது 
என் கவிதை 

பேருந்து நடத்துனரின் 
"முன்னே போய்யா சோமாறி "க்கு 
பழகி பழகி 
காணாமல் போயிற்று 
சுய கெளரவம் 

எதிர்பார்ப்போடே 
அருகில் வரும் 
மனித உறவுகளைப் 
பார்த்து பார்த்து 
மரித்து போனது 
மனித நேயம் 

மிக பெரும் மந்தையில் 
என் முகம் எனக்கே மறக்க 
சிறுக சிறுக 
நானும் மாறி 
இயந்திரமானேன்.

டிஸ்கி: 1) கவிதையோ இல்லையோ சென்னை வந்த சில மாதங்களில் எனக்கு வந்த உணர்வுகளின் தொகுப்பு. .

2) இதை எழுதி/ சென்னை வந்து 15 வருஷம் ஆச்சு. இப்ப யாரும் சென்னையை குறை சொன்னா கோபம் வருது. :)))

Monday, November 21, 2011

வாசனை நினைவுகள் :உயிரோசையில் வெளியானது

நீங்கள் ஒரு வாசனை பிரியரா ? நான் அப்படி தான் ! வாசனை என்பது ஒரு தனி ரசனை. இது வரை அந்த ரசனை இல்லா விடில் இனியும் கூட ஏற்படுத்தி கொள்ளலாம். தப்பில்லை ! இந்த ரசனை, வாழ்க்கையை இனிமையாக்கும் ! வாழ்க்கையில் ரசிக்க, என்ஜாய் செய்ய எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என நமக்கு காட்டும் ! எல்லோருக்கும் பிடித்த வாசனைகள் சில பார்ப்போமா?

 ** சின்ன வயதில் டீச்சர்கள் வாசனையை ரசிக்காமல் யாராவது இருந்திருக்க முடியுமா? அவர்கள் போடும் சோப்பு, பவுடர், தலையில் உள்ள பூ, புடவை வாசனை என அனைத்தும் கலந்து அவர்களுக்கென்று ஒரு பிரத்யேக வாசனை இருக்கும். ஒரு பக்கம் பாடம் மனதுக்குள் போனாலும், இன்னொரு பக்க மனது இந்த வாசனையை ரசித்து கொண்டு தான் இருக்கும்.

**கோயில்களுக்கென்று பிரத்யேக மணம் இருக்கிறது. விபூதி, குங்குமம், அங்கு உள்ள மரங்கள், பூக்கள் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு கலவையான மணத்தை தரும். நிறைய கூட்டம் இல்லாத கோயில்களில் தான் இதை முழுவதுமாக ரசிக்க முடியும் !


**சின்ன குழந்தைகளை தூக்கும் போது அப்போது தான் பாட்டிலில் பால் குடித்து விட்டு அதில் பாதியை தங்கள் மீது ஊற்றி கொண்டு பால் வாசனையுடன் இருப்பார்கள். அந்த வாசனையே இன்னும் கொஞ்சம் அவர்களை கொஞ்ச வைக்கும்.

**அதே குட்டி குழந்தைகள் குளித்து விட்டு வந்தவுடன் வரும் மணம் ... சூப்பர் !! பூ மாதிரி சாப்ட்டா அவர்களுக்கே உரித்தான சோப் போட்டு குளித்து விட்டு வாசனையுடன் சிரிப்பார்கள். பவுடர் போடுவதற்குள் அவர்களை முத்தம் குடுத்து எச்சில் பண்ணிட வேண்டியது தான் !

**பள்ளியில் படிக்கும் போது புது புத்தக வாசனை இருக்கே! புத்தகத்தை மெதுவாக பிரித்து அதன் அற்புத வாசனையை நுகர்ந்தால் அது தரும் உணர்வுகள் க்ளாஸ் ! இப்போதும் கூட என்னோட பெண்ணின் புது புத்தகம் அல்லது நோட்டு எடுத்து வாசனை பார்ப்பது தொடரவே செய்கிறது.

**மழை பெய்ய ஆரம்பிக்கும் முன் அல்லது மழை பெய்ய ஆரம்பித்ததும், வரும் மண் வாசனை தனி சுகம் ! அதிலும் செம்மண் சாலையா இருந்தா மண் வாசனை இன்னும் மயக்கும்.

**பெர்பியூம்கள் (Perfume)  தரும் வாசனை நிச்சயம் அசத்தல் தான் ! எனக்கு தெரிந்து இந்திய பெர்பியூம்களை விட வெளி நாட்டு பெர்பியூம்கள் தான் நல்லா இருக்கு. நாம அடிச்சிக்கிற பெர்பியூம் மணம் நமக்கு நல்லா தெரியாது. மத்தவங்களுக்கு தான் தெரியும். போலவே மத்தவங்க அடித்த பெர்பியூம் தான் நாம ரசிக்க முடியும். என்னை பொறுத்தவரை எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட பெர்பியூம் இருப்பதால் (பெரும்பாலும் வெளிநாட்டு நண்பர்கள் தந்தவை  ! ) ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று அடிப்பேன். "இவன் வந்தாலே இந்த வாசனை தான் வரும்" னு யாரும் நினைக்க கூடாது பாருங்க .. அதுக்கு தான் !

**அலுவலகத்தில் சின்ன கான்பரன்ஸ் ரூமில் ஏழெட்டு பேர் உட்கார்ந்து மீட்டிங் நடக்கும் போது, ஒன்று அல்லது ரெண்டு பெண்கள் தலையில் வைத்திருக்கும் மல்லிகை பூ மணம் தூக்கலா, செம வித்தியாசமா நம்மை என்னமோ பண்ணும். ரொம்ப கஷ்டப்பட்டு தான் மீட்டிங்கை கவனிக்கணும். என்னா diversion-டா இது !!


**நித்ய மல்லிகை பூவுக்குன்னு ஒரு மணம் இருக்கு பாருங்க. ச்சே ! சான்சே இல்லை !! எங்க மாமனார் வீட்டில் இந்த பூ இருக்கு ! நித்ய மல்லிகைக்கும் சிறப்பு + ஸ்பெஷம் மணம் பெண்கள் தலையில் இருக்கும் போது தான் !

**பிரியாணி நிறைய பேருக்கு பிடிக்கும். இதற்கு அது தரும் வாசனையும் ஒரு காரணம் ! சமையல் நடக்கும் போதே வரும் வாசனை "எப்படா குக்கரை திறப்பாங்க" என ஏங்க வச்சிடும். ஏலக்காய், கிராம்பு, பட்டை மாதிரி நிறைய வாசனை சமாச்சாரங்கள் போட்டு இப்படி நம்மை பிரியாணி பைத்தியம் ஆகிடுறாங்க மை லார்ட் !


**பைக்கில் அவசரமா போய்கிட்டு இருப்போம். அப்போ ரோட் சைட் கடையில் சுட சுட மெது வடை போடுவாங்க. எவ்ளவோ அவசர வேலையா போனாலும் வண்டியை ஓரம் கட்டிட்டு வடை சாப்பிட செய்வது அது கிளப்பும் வாசனை தான். வடை கைக்கு வந்தோன வாசனை மறந்துடும். ஆனா அந்த கடைக்கு நம்மை இழுத்து வருவது வடையின் வாசனை தான் !

**தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையிலும் வாசனை எண்ணெய் வந்து விட்டது. சும்மா சொல்ல கூடாது ! சாதா எண்ணெய் தடவுவதை விட இது நல்ல உணர்வை  தரவே செய்கிறது !
**சோப்புகள் தரும் வாசனை தனி ரகம். வித்தியாச அனுபவம் + வாசனைக்காக சோப்பை அடிக்கடி வேறு பிராண்டுக்கு மாற்ற வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஹவுஸ் பாஸ் சும்மா சும்மா பிராண்ட் மாற்ற கூடாது; ஸ்கின்னுக்கு நல்லது இல்லை என்று சொல்லி விடுவார் :((

**ஷாம்ப்பூக்கள் தரும் வாசனை யாருக்கும் பிடிக்கவே செய்யும். குளிக்கும் போது நாமே ரசிப்போம். குளித்து முடித்து விட்டு வந்தால் மற்றவர்கள் ரசிப்பார்கள். செம !!

** அலுலகத்தில் பெரிய ஆட்களுக்கு கேபின் இருக்குள்ள ! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரூம் ஸ்ப்ரே தந்திருப்பாங்க ! சில பேர் ரூமுக்குள் போகும் போது ரூம் ஸ்ப்ரே மணம் அருமையா இருக்கும். இதில் என்னா காமேடின்னா நான் பார்த்த வரை, யாரும் தங்கள் ரூம் ஸ்ப்ரேயை ரசிப்பதில்லை. மற்றவர்கள் ரூமுக்கு உபயோகிக்கும் ரூம் ஸ்ப்ரே தான் நன்றாக இருப்பதாக நினைக்கிறார்கள் !!
 

**பழங்களுக்கென்று தனி வாசனை உண்டு. பிரெஷ் ஆக உள்ள போது அவற்றின் வாசனை அசத்தும். குறிப்பாக கொய்யா பழ வாசனை பிடிக்காதவர் இருக்க முடியுமா? மாங்காய் வாசனை பெண்களுக்கு மசக்கை காலத்தில் மட்டுமன்றி  மற்ற நேரத்திலும் பிடிக்கிறது !!

**நமக்கு பிடித்த மனிதர்களிடமிருந்து வரும் வாசனை நமக்கு எப்போதும் பிடிக்கிறது. உதாரணமாக பெண் குழந்தைகள் தங்கள் அப்பாவின் வாசனையை மிக விரும்புவதும், பசங்க அம்மா அம்மா என அம்மா வாசனைக்கு அலைவதும் Idibus Complex என்றாலும், இயல்பு தான் !

**முதலில் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்ததும் புது நூறு அல்லது ஐநூறு ரூபாய் நோட்டுகள் கையில் வரும். அப்போது அதனை நுகர்ந்து பார்த்து விட்டு, செலவு செய்ய மனமின்றி பீரோவில் வைத்து விடுவோம் !  

**எங்க அலுவலகத்தில் டாய்லட்டில் கிளீன் செய்யும் நபர் ஒருவர் இருந்து, எப்போதும் கிளீன் செய்து ஏதோ லிகுவிட் போட்டு வாசனையாக வைத்திருப்பார். அட ! இந்த இடத்தை கூட இவ்வளவு சுத்தமா வாசனையா வச்சிக்க முடியுமா என ஆச்சரியமாய் இருக்கும் !

**சில வீடுகளில் அருமையான தோட்டம் வைத்திருப்பார்கள். அங்கு போனாலே அனைத்து செடிகளும் பூக்களும் சேர்ந்து ஒரு மயக்கும் வாசனை நமக்கு தரும். செடிகளை, பூக்களை பார்த்து ரசிப்பது மட்டுமன்றி இந்த வாசனையும் நம்மை அங்கு நெடு நேரம் இருக்க வைக்கும் !
 

**ஊர் பக்கத்தில் கடைகளுக்கு முஸ்லீம் பாய் சாம்பிராணி எடுத்து வந்து போடுவார். என்னமா இருக்கும் தெரியுமா? என்ன தான் நம்ம வீடுகளில் சாம்பிராணி போட்டாலும் முஸ்லீம் பாய் சாம்பிராணி போல் வராது ! கடை முழுதும் சுற்றி எல்லா இடங்களுக்கும் போடுவார். கிளம்பும் முன் அப்பா தன் முகத்தை குனிந்து காட்டுவார். பாய் அவருக்கு தனியாக சாம்பிராணி போடுவார். அடுத்து நான் !! அப்பா தரும் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு அடுத்த கடை போவார் பாய் !

**
வாசனை என்பது ஒரு தனி ரசனை. என்ன.. உங்களுக்கு பிடித்த வாசனைகள் சில நினைவுக்கு வருகிறதா? வாழ்க்கையை அனுபவிங்க சார் !

21-11-2011 தேதியிட்ட உயிரோசையில் வெளியானது  

Sunday, November 20, 2011

வானவில் -ஜாக்பாட் சிம்ரன்: Why this கொலை வெறி Di?


டிவி கார்னர்
ஜாக்பாட் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட சிம்ரனை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சில வருடங்களில் இப்படியா மாறுவார்? தமிழை கடித்து துப்புகிறார் என்பதை கூட பொறுத்து கொள்ளலாம். கடைசி ரவுண்டில் குறிப்பிட்ட ஒரு நிமிடத்துக்குள் 5 கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி ஆகணும். இதற்கு சிம்ரன் எழுத்து கூட்டி, எழுத்து கூட்டி கேள்வி கேட்பதற்குள் பதில் செல்வோர் நேரமாகிறதே என டென்ஷன் ஆகி விடுகிறார்கள். மேலும் அவர் தமிழில் கேட்கும் கேள்வியும் தெளிவாக புரிவதில்லை. உண்மையில் இறுதி கட்டம் வருவோர் ஜாக்பாட் வெல்லாமல் போவதற்கு சிம்ரனும் நிச்சயம் ஒரு காரணமாக இருக்கிறார். (வேண்டுமானால் இன்றைய  நிகழ்ச்சியில் கேட்டு பாருங்கள் !)  பல வாரங்களாக இது தொடர்கிறது. சேனல் இதை உணர்ந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தால் தேவலை ! அட்லீஸ்ட் சிம்ரன் தமிழை மனதில் கொண்டு பதில் சொல்வதற்கான நேரத்தை அதிகமாக்கலாம் !


Why this கொலை வெறி?

சமீபத்தில் வெளி வந்த "3 " பட பாடலான "Why this கொலை வெறி di " செமையா இருக்கு ! முதல் முறை கேட்கும் போதே ஒரு பாட்டு பிடிப்பது ரொம்ப அரிதாக தான் நடக்கும். இது அப்படி ஒரு பாட்டு !!  கேட்கும் போது சிரிப்பு பீறிடுவதை தடுக்க முடியாது. போலவே ரெண்டாவது முறை கேட்கும் போது அருமையான பீட்டுக்கு, அமர்ந்திருந்தால் கூட கால்கள் ஆட ஆரம்பித்து விடுகின்றன.

வீடியோவில் பார்க்க 

ஆடியோ மட்டும் கேட்க 


Why This Kolaveri Di - Dhanush

Powered by mp3skull.comநாட்டி கார்னர் 

முன்பு நாட்டி பற்றி ஒரு தனி பதிவு எழுதினேன் அல்லவா? அப்போது எடுத்த வீடியோவில் நாட்டியின் குரல் பதிவாகி இருக்கும். அந்த பதிவையோ, அல்லது கம்பியூட்டரில் அந்த வீடியோவையோ நாங்கள் பார்க்கும் போது நாட்டி கத்துகிற குரல் கேட்டு, அது ரொம்ப excite ஆகி விடும். வேறு ஏதோ கிளி வந்து விட்டது என தானும் "கீ. கீ" என கத்தும் ! வேக வேகமாக நடக்கும் ! கம்பியூட்டரில் இந்த ஒலி மிக மெல்லிதாக கேட்டாலும் நாட்டி உடனே கத்த ஆரம்பித்து விடும். நாம் பேசுவதற்கெல்லாம் ரெஸ்பான்ஸ் அதிகம் இல்லாததால் "நாட்டிக்கு காது கேட்குதா இல்லையா?" என அவ்வபோது யாராவது முன்பு கமன்ட் அடிப்பதுண்டு. இந்த சம்பவத்திற்கு பின் காது கேட்கிறதா என்ற சந்தேகம் வருவதே இல்லை !

விலை வாசி ஏற்றமும் சாதாரண மனிதர்களும்

எங்கள் ஆபிசில் ஏராளமான அட்டென்டர்கள் மற்றும் டிரைவர்கள் உள்ளனர். அவர்கள் கடந்த சில நாட்களாக எப்போதும் பஸ் விலை உயர்வை குறித்தே பேசுகிறார்கள். வருவதற்கு இருபது ரூபாய், செல்ல இருபது ரூபாய் என ஒரு நாளைக்கு நாற்பது ருபாய் செலவானா, மாசம் ஆயிரம் ரூபாய் இதுக்கே போயிடுது. நாலாயிரம்/ ஐந்தாயிரம் சம்பளத்தில் எப்படி குடும்பம் நடத்துவது என்பது அவர்கள் கவலை.

பஸ் கட்டண விலை ஏறிய முதல் நாளே போதுமான பணம் இல்லை என, பாதி வழியில் இறக்கி விடப்பட்டவர்கள் ஏராளம் பேர் ! எங்கள் அலுவலகத்திலேயே குறைந்தது நான்கைந்து பேருக்கு இது நடந்துள்ளது ! ம்ம் ஒண்ணும் சொல்றதுக்கில்லை !

ஆனந்த் எஸ்.எம்.எஸ் கார்னர்
If a cat crosses you when you are going somewhere it means ...........................................

the cat is going somewhere. Think positive.

விகடன் "வலை பாயுதே"வில் ரசித்த ட்விட்டர்

நேத்து கேட்ட பாட்டு இன்னிக்கு முழுக்க மண்டைக்குள் ஓடுறது ஒரு பிரச்சனைன்னா, அதோட ரெண்டாவது வரி எப்பவும் தெரிய மாட்டேங்குதுங்கறது அடுத்த பிரச்சனை !!

(இது எனக்கும் உண்டு. என்ன ஒண்ணு. எனக்கு எப்பவும் பாதி பாட்டு வரை மண்டைக்குள் ஓடும் !)

தமிழ் மணத்தில் மீண்டும்.. 

புகழையும் வெற்றியையும் போல மோசமான போதை வேறு ஏதும் இல்லை. ஒரு முறை அதை சுவைக்க துவங்கினால், மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். இப்போ இது எதுக்கு என்கிறீர்களா?

சென்ற வாரம் யுடான்ஸ் ஸ்டார் என்பதால் ஒரு வாரம் முழுக்க பதிவுகள் போட்டேன். அதில் சில பதிவுகள் வெளியாகாமல் இருக்க, அவற்றை இந்த வாரம் வெளியிட்டேன். கூடவே ஒரு சில புது பதிவுகளும் !! இவ்வார தமிழ் மண டாப் 20-லும் இரண்டாவது வாரமாக வீடுதிரும்பல் வந்துள்ளது. ம்ம் இது எவ்ளோ தூரம் போகுதுன்னு பார்ப்போம் !

தமிழின் முன்னணி வலைப்பதிவுகள்
RSS feed -

      புதுப்பிக்கப்பட்ட நாள் : 2011-11-20      
வலைப்பதிவுகளின் முன்னணி பட்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வெளியிடப்படும். கடந்த ஏழு நாட்களில் வலைப்பதிவுகள் வாசகர்களிடம் பெற்ற பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாக கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. மறுமொழிகள், வாசகர் பரிந்துரை வாக்குகள் போன்றவையும் ஒரு காரணியாக இருக்கும்Saturday, November 19, 2011

வேளச்சேரி : Week end : ஹோட்டல்கள் ஸ்பெஷல்

கடந்த பத்தாண்டுகளில் வேளச்சேரியின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. இந்த வளர்ச்சி பற்றி அறிய ஒரு சின்ன வழி இங்கு முளைத்துள்ள ஓட்டல்கள் !! எனக்கு தெரிந்து பெரிய ஓட்டல்கள் அனைத்தும் இரண்டு கிலோ மீட்டர் ரேடியசில் அருகருகில் சென்னையில் வேறு எங்காவது இருக்குமா என தெரிய வில்லை. வேளச்சேரியின் ஓட்டல்கள் சிலவற்றை பற்றி இதோ உங்களுக்காக

நளாஸ் ஆப்ப கடை


எங்கே: வேளச்சேரி விஜய நகர் பஸ் டெர்மினஸ்சில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது.

ஸ்பெஷல் உணவு : வேறென்ன? ஆப்பம் தான் ! அதிலும் பூ வடிவ ஆப்பம் மற்றும் டூட்டி பிரூட்டி ஆப்பம் குழந்தைகள் மிக ரசித்து சாப்பிடுவார்கள்.

விலை: Reasonable

எதற்காக போகணும்? ஆப்ப கடை என்கிற வித்தியாச concept-ற்காக அவசியம் போகலாம். குறிப்பாக வீட்டில் Guest வந்தால், அதில் குட்டி பசங்க இருந்தால், அவசியம் ஓர் முறை கூட்டி போங்க.

மைனஸ்: மிக குறுகிய இடம். சாதாரண நாட்களிலேயே மாலை நேரத்தில் காத்திருந்து தான் சாப்பிடனும். வார இறுதி என்றால் Waiting time இன்னும் அதிகம் !  மேலும் பார்கிங் இங்கு ஒரு பிரச்சனை தான்.

அடையார் ஆனந்த பவன்:

எங்கே: வேளச்சேரி விஜய நகர் பஸ் டெர்மினஸ்சில் இருந்து இரு நிமிட நடை. வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து வந்தாலும் சில நிமிடங்களில் அடையலாம்.

ஸ்பெஷல் உணவு : கோதுமை பரோட்டா !! ஆம் பரோட்டா பலரும் தவிர்க்க காரணம் மைதா மாவு மற்றும் நிறைய எண்ணெய் என்பதாக இருக்கும் அல்லவா? இவை இரண்டையும் தவிர்த்து கோதுமையில் செய்த பரோட்டா அட்டகாசம்! மிஸ் பண்ணிடாதீங்க !!

விலை: அடையார் ஆனந்த பவன், எப்போதும் சரவணபவனை விட சற்று விலை குறைவாய் இருக்கும் (அதுவே அதிகம் தான் அப்படிங்கறீங்களா?)

மைனஸ்: இங்கு வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்கள். எனவே நீங்கள் ஒன்று ஆர்டர் செய்ய, அவர்கள் வேறு ஒன்றை புரிந்து கொண்டு, எடுத்து வருவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. நிர்வாகம் இது பற்றி கண்டு கொள்கிற மாதிரியே தெரியலை.

எதற்காக போகணும்? மிக மிக பெரிய அளவு இடம். வீக் எண்ட் கூட வெயிட் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடலாம். கார் மற்றும் டூ வீலர் பார்க்கிங்கும் நிறையவே உள்ளது.

அஞ்சப்பர் ஹோட்டல்

எங்கே: வேளச்சேரி விஜய நகர் பஸ் டெர்மினஸ்சிற்கு மிக அருகில். நளாஸ் ஆப்ப கடை மாடியில்.

ஸ்பெஷல் உணவு : பிரியாணி.

விலை: வழக்கமான அஞ்சப்பர் ஹோட்டல் விலை தான். நான் வெஜுக்கு இந்த விலை வொர்த் தான்.

மைனஸ்: பார்க்கிங்

ரத்னா கபே

எங்கே: வேளச்சேரி நூறடி ரோடில் உள்ளது

ஸ்பெஷல் உணவு : இட்லி சாம்பார். ஓட்டல்களில் நாம் வழக்கமாய் இட்லிக்கு வித வித சட்னிகள் மற்றும் சாம்பாருடன் சாப்பிடுவோம். ரத்னா கபே பொறுத்தவரை இரண்டு இட்லிகளை சுட சுட சாம்பாரில் ஊற வைத்து தருவார்கள். ஸ்பூன் வைத்து இட்லிகளை சின்ன சின்ன துண்டாக்கி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் வேறெதுவும் சாப்பிடவே வேண்டாம் ! வயிறு நிரம்பி விடும்!!

ப்லேமிங்கோ ரெஸ்டாரன்ட்


இந்த ஹோட்டலும் வேளச்சேரி நூறடி ரோடில் தான் உள்ளது. நான் இது வரை சென்றதில்லை. நண்பர்கள் சிலர் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். அடுத்து நான் போக எண்ணி இருக்கும் ஓட்டல் !

தலப்பாகட்டி

எங்கே: வேளச்சேரி நூறடி ரோடில் உள்ளது.

ஸ்பெஷல்: சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி. சென்னையில் சிறந்த பிரியாணி கிடைக்கும் இடங்களுள் இதுவும் ஒன்று. வார இறுதி நாட்களில் மதியம் & இரவு காத்திருந்து தான் சாப்பிடணும் !பிரியாணி பிரியர்கள் தவற விட கூடாத இடம் !


ராக் ரெஸ்டாரன்ட்

எங்கே: அடையார் ஆனந்த பவன் ஓட்டலுக்கு நேர் எதிரில் உள்ளது.

எதற்காக போகணும்? அங்கு உள்ள ambience பார்க்க தான் அவசியம் ஒரு முறை போகணும். பாறையிலேயே  செய்த இன்டீரியர், வண்ண மீன் தொட்டிகள், பாலம், சின்ன நீர் வீழ்ச்சி போன்ற செட் அப் இவை குழந்தைகளை ரொம்ப குஷிபடுத்தும். உணவு ஓகே ரகம். விலை சற்று கூடுதல் தான். எனினும் ஒரு வித்தியாச அனுபவத்திற்காக ஒரு முறை செல்லலாம்.

****
இவை தவிர சங்கீதா (ஓகே ரகம்), ஹாட் சிப்ஸ் (ரொம்ப சுமார்), KFC சிக்கன், மேக் டனால்ட்ஸ் என இன்னும் நிறைய ஹோட்டல்கள் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகிலேயே உள்ளன. விலை வாசி என்ன தான் அதிகமானாலும், வீக் எண்டில் அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது !! மக்கள் வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள் !

Friday, November 18, 2011

விலைவாசி உயர்வு: அன்பில்லாத அம்மா

நண்பர் சந்தான ராமன் இந்த பதிவை நமக்கனுப்பி பிரசுரிக்க முடியுமா என்று கேட்டுள்ளார். வீடு திரும்பலில் தேவா,  சந்தான ராமன் வரிசையில் இன்னும் சில நண்பர்கள் எழுத உள்ளனர். ஆட்டோ அனுப்புவதானால் நண்பர் சந்தான ராமனுக்கு அனுப்பலாம். மீ தி பாவம் ! 

விலைவாசி உயர்வு: அன்பில்லாத அம்மா

தி.மு. க அரசு செயல்படாத அரசு என சட்டமன்ற தேர்தலில் அம்மாவுக்கு ஓட்டு போட்டோம். பின் பஞ்சாயத்து தேர்தலிலும் அம்மா கட்சிக்கு ஓட்டு போட்டு அந்த மை கையிலிருந்து அழிவதற்குள் விலை வாசி உயர்வு என இப்படி ஒரு அதிர்ச்சி !

அம்மாவின் ஆட்சியை சற்று அலசுவோம்.

வந்த புதிதில் நிறைய இலவசம் அறிவித்தார்கள். நில அபகரிப்பு என நிறைய பெருந்தலைகள் அரஸ்ட் ஆகின. சரி அரசாங்கம் சுறுசுறுப்பாக நடக்கிறது என மகிழ்ந்தோம், அப்புறம் தான் சொதப்பல்கள் துவங்கின !

சமச்சீர் கல்வி

இது முதல் கோணல். தி.மு.க அரசு செய்தது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வியை மாற்ற எண்ணியது அரசு !கருணாநிதி, கனிமொழி உள்ளிட்டோரின் "அரிய பாடங்கள்" இருந்தது தவறு தான். அவற்றை மட்டும் நீக்கி விட்டு மற்றவை அப்படியே தொடர செய்திருக்கலாம். முதலில் ஹை கோர்ட்டிலும், பின் சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசு திட்டு வாங்கிய பின் தான் வேறு வழியின்றி சமச்சீர் கல்விக்கு ஒத்து கொண்டது. இதற்குள் கிட்டத்தட்ட ரெண்டு மாதங்கள் முடிந்து விட்டன. இதன் பலனை இந்த வருடம் முழுதும் மாணவர்கள் அனுபவிக்கிறார்கள். தொடர்ந்து மிக வேகமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. சனி. ஞாயிறு பள்ளிகள் வைக்கபடுகிறது. புது activity-கள் எதுவும் பள்ளிகளில் இல்லை. பாடம் முடித்தாக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோள். இன்னும் சில பள்ளிகள் சமச்சீர் பாடம் நடத்தாமல் மெட்ரிகுலஷன் பாடம் நடத்துகிறது .. இதை அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.

அண்ணா நூலக இட மாற்றம்

தமிழக அரசின் மிக பெரிய முட்டாள் தனம் எது என போட்டி வைத்தால் இது முதலிடம் கூட வரலாம்! கருணாநிதி அரசு கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்துக்காக நூலகம் ஆஸ்பத்திரி ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஹை கோர்ட் தடை தந்துள்ள பின்னும் இன்னும் தன் நிலையை மாற்றி கொள்ள வில்லை. நூலகத்துக்காக வடிவமைக்கப்பட்ட கட்டிடம் எப்படி மருத்துவ மனைக்கு ஒத்து வரும்? ஒரு நூலகம் மூடப்படும் போது ஒரு சிறை சாலை திறக்கபடுகிறது என்பார்கள். சாதாரண மனிதர்கள் தங்கள் புத்தகங்களை எடுத்து சென்று கூட ஏ. சி யில் அமர்ந்து வாசிக்கலாம். லட்சக்கணக்கான புத்தகங்கள்.. அனைத்தும் வீணாகும் நிலை. இதற்கு எழுத்தாளர் சமூகம் முழுதும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

சென்ற முறை ஆட்சியில் இருந்த போது அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களை பகைத்து கொண்டார் அம்மா. அவர் ஆட்சியை இழக்க அவர்களும் முக்கிய காரணமாய் இருந்தனர்.

நூலக இட மாற்றத்தில் அவர் உறுதியாய் இருந்தால் எழுத்தாளர்கள் அனைவரையும் பகைத்து கொள்கிறார் என்பதை அவர் உணர வேண்டும். மீதமுள்ள காலத்தில் அவர்கள் இந்த அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பார்கள்.  "அனைவரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நூலக இட மாற்றம் ரத்து" என அவர் அறிவித்தால் அனைவரின் நன்மதிப்பை மீண்டும் பெற வாய்ப்பு உள்ளது

நிற்க. இந்த இட மாற்றம் முழுக்கவே அம்மா மீது நடக்கும் வழக்கு பற்றி யாரும் யோசிக்காமல், மற்றும் பேசாமல் வேறு விஷயம் பற்றி பேச வைக்க தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது !

மோசமான சாலைகள்

மழையில் சென்னை பாதிக்கபடுவது வருடா வருடம் நடப்பது தான். ஒரு மழையில் சென்னை நாசமான பின் அடுத்த பல வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க படவில்லை. அரசு இயந்திரம் சுத்தமாக இயங்க வில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தினம் வீடு தேடி ஓட்டு கேட்க வந்த ஆட்களை தெருவிலேயே காணும் !

அமைச்சர்கள் மாற்றம்

இது அம்மா ஆட்சியில் வழக்கமான ஒன்று தான் என்றாலும், சில கேள்விகள் மிஞ்சுகிறது:

1. எப்படி ஓரிரு மாதங்களிலேயே அவர்கள் திறமை அற்றவர்கள் என தெரிந்தது?

2. ஒரு துறையில் இருந்து அதில் சரியில்லை என இன்னொரு துறைக்கு மாற்றுகிறீர்களே.. இங்கு சரியே செயல்படாதவர் அங்கு நன்கு செயல்படுவார் என என்ன நிச்சயம்? "திறமை அறியும் சோதனை " நடத்தப்பட்டா துறை மாற்றம் நடக்கிறது?

3 .எதனால் அமைச்சர்கள் மாற்றபடுகிறார்கள் என்ற காரணம் எப்போதும் மக்களுக்கு சொல்லாதது ஏன்?

4.ஏன் உங்கள் ஆட்சியில் மட்டும் எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பது மக்கள் யாருக்கும் தெரிவதில்லை?

5. பதவி நீக்கம் செய்யப்பட அமைச்சர் மீண்டும் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து அமைச்சர் ஆகிறாரே. அப்போது அமைச்சர் பதவிக்கான அனைத்தும் அவர் கற்று தேர்ந்து விடுகிறாரா?

விலை வாசி உயர்வு

மேலே சொன்ன அனைத்திற்கும் சிகரம் வைத்த மாதிரி இப்போது விலை வாசி உயர்வு நிகழ்ந்துள்ளது.

ஏழைகளை .. கொஞ்சம் கொஞ்சமா ஏன் சாகிறீர்கள் ! மொத்தமாக ஒன்றாக சாகுங்கள் என பால், மின்சாரம், பேருந்து கட்டணம் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் செல்லும் பேருந்து கட்டணம் கிட்டத்தட்ட 90 % வரை உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்கிறது என்றாலும் இந்த அளவு ஒரே நேரத்தில் உயர்த்துவது எப்படி சரியாக இருக்கும்? இனி ஆம்னி உரிமையாளர்களும் கட்டணம் உயர்த்துவார்கள். மிக கடுமையான விலை ஏற்றம் இது ! ஏழை மற்றும் லோயர் மிடில் கிளாஸ் மக்கள் தான் மிக அதிகமாய் பேருந்தை உபயோகம் செய்கிறார்கள். அவர்கள் மோசமாக பாதிக்க படுவார்கள்.

மின் கட்டணம் சென்ற ஆட்சியிலும் பல முறை ஏற்ற பட்டது தான். மறுபடி 40% வரை ஏன் கட்டணம் உயர்த்த வேண்டும்? சிறு கம்பனி நடத்துவோரை இது மிக பாதிக்கும். இதனை எப்படி அவர்கள் accomodate செய்வார்கள் என்பது நிச்சயம் தெரிய வில்லை. நிறைய சிறு கம்பனிகள் மூடும் நிலையும் வந்தால் ஆச்சரியபடுவதற்கில்லை.

பால் விலை ஒரு லிட்டருக்கு குறைந்தது ஆறு ரூபாய் முதல் ஒன்பது ருபாய் வரை உயர்ந்துள்ளது. பணக்காரர்களுக்கு இது பெரிய பாதிப்பாக இல்லாது இருக்கலாம். பணக்காரர்கள் தவிர பிறருக்கு இது மிக பாதிக்கும் ஒன்று தான்.

இப்படி முக்கிய பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் விலை உயர்ந்தால், மற்றவையும் விலை உயரவே செய்யும் ! வேறு வழி இல்லை.

அம்மா ஆட்சியை பல முறை பார்த்தவன் என்ற முறையில் அடுத்து என்ன செய்வார் என நிச்சயம் தெரியும். ஏற்றிய அனைத்திலும் மிக கொஞ்சமாக விலை குறைப்பார். உதாரணமாய் ஒன்பது ரூபாய் ஏற்றிய பாலை ஒரு ரூபாய் குறைத்து எட்டு ரூபாய் ஏற்றம் என ஆக்குவார். கையிலிருந்து எவ்வளவு பணம் வெளியேறுகிறது என்று அனைவருக்கும் தெரியாதா என்ன? ஒரு ரூபாய் குறைந்தால் உடனே சரி விலை வாசி குறைந்து விட்டது என திருப்தி அடைய மக்கள் என்ன இளிச்சவாயர்களா?

இவ்வளவு குறைகள் இருந்தாலும் ஒன்றை சொல்லி தான் ஆக வேண்டும். 87 வயது முதியவர் தானும் செயல்படாமல், தன்னை போலவே அரசும் செயல்படாமல் பல ஆண்டுகள் வைத்திருந்தார். அதற்கு இந்த ஆட்சி பரவாயில்லை என்று தான் ஆட்சி மாற்றம் செய்தோம். செயல் படாத
அரசே பரவாயில்லை என்று எங்களை எண்ண வைத்து விடாதீர்கள்.

உங்கள் தவறுகளை விரைவாக புரிந்து கொண்டு, ஏற்று கொண்டு, உடனே மாற்றி கொள்ளுங்கள். இத்தனை பேர் தவறு என்றுசொன்னாலும் தன் பிடிவாதத்திலேயே நிற்காதீர்கள் ! இந்த ஒரு விஷயம் மட்டும் நீங்கள் சரி செய்தால் அடுத்த தேர்தலிலும் நீங்கள் வெல்லலாம். இல்லையேல் மக்களின் சாபம், கோபம் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தெரிய வரும் !
Related Posts Plugin for WordPress, Blogger...