வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையத்திற்கு சற்று தள்ளி உள்ளது மெக் டொனால்ட்ஸ். எங்கள் பெண் ரொம்ப நாளாக போகணும் என சொல்லி வந்தாள். இப்போது தான் போக முடிந்தது. மெல்லிய சவுண்ட் சிஸ்டத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஒலிக்க, வித்யாசமான வடிவில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடுவது இனிமையான அனுபவமாக இருந்தது. வெறும் பன், பிஸ்சா போன்ற சமாச்சாரங்கள் எப்படி வயிற்றை நிரப்பும் என தயக்கம் இருந்ததால் தான் இது வரை போகாமல் இருந்தேன். ஆனால் வயிறு நன்கு நிரம்பவே செய்தது. விலை சற்றே கூடுதல் தான் !! ஆனாலும் நாக்கு (இனிய உணவு), காது (ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள்), உடல் (சில்லென ஏசி) அப்புறம் கண் (எப்புடின்னு கேட்காதீங்க; ஹவுஸ் பாஸ் ப்ளாக் படிக்குறாங்க) என எல்லா அவயங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மெக் டொனால்ட்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. இனி அவ்வப்போது போவோம் என நினைக்கிறேன் !
அசீம் பிரேம்ஜி துவங்கும் பள்ளிகள்
விப்ரோ சேர்மன் அசீம் பிரேம்ஜி ஏற்கனவே நிறைய நல்ல விஷயங்களில் ஈடுபட்டுள்ளார். இப்போது இந்தியா முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு இலவச பள்ளிகள் துவக்க உள்ளார். மொத்தம் 1300 பள்ளிகள் !! முழுக்க முழுக்க அவரது சொந்த பணத்தில் துவங்க உள்ள பள்ளிகள் இவை ! அரசு பள்ளிகளுக்கு இவை நல்ல மாற்றாக இருக்கும் என கருதுகிறார்கள். மேலும் இந்த யோசனை வெற்றிகரமாக செயல் பட்டால் இன்னும் பல கார்பரேட் முதலாளிகளும் இவ்வழியை பின் தொடர்வார்கள் என்றும் நம்பலாம். இந்த நல்ல செயலுக்காக அசீம் பிரேம்ஜி அவர்களை மனதார வாழ்த்துவோம் !!
இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டூர்
இந்தியா இங்கிலாந்தில் செம உதை வாங்கினாலும், இங்கு வந்த அவர்களை வறுத்து எடுத்து விட்டனர். 5 - ௦ 0 என்பது செம ரிசல்ட் இல்ல? ஒரே 20-20 -ல் தோற்றால் கூட, அது பெரிய விஷயம் இல்லை விடுங்க !! அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சீரிசுக்கு நிறைய இளைஞர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஓட்டை டீம் தான். எனவே சீரிஸ் அதிக சுவாரஸ்யமாக இல்லாமல் போகலாம். ஒரே எதிர்பார்ப்பு சச்சினின் நூறாவது செஞ்சுரி! தீபாவளிக்கு வாங்கிய சரங்களில் இன்னும் சில மிச்சமிருக்கு சச்சின் உங்களுக்காக !!
ரசித்த கவிதை
பொம்மைகள் குவித்திருக்கும் அறை
பொம்மைகள் குவித்திருக்கும்
அறைக்குள் அனுமதியின்றி நுழைகிறது
மெளனம்.
ஒவ்வொரு பொம்மையிடமும் ஏதோவொன்றை
தேடுகிறது.
அறையின் மூலையில் அமர்ந்து
சிறிதுநேரம் விசும்புகிறது.
பின்,
பெண்ணாகி வெளியேறுகிறது.
மரித்த குழந்தையின் பொம்மைகளை
வேறெப்படி அணுகுவாள் அவள்? - நிலா ரசிகன்
நாட்டி கார்னர்
நாட்டியின் பல்வேறு செல்ல பெயர்களில் ஒன்று "பச்சை". நாட்டி வெளியே கரும் பச்சையாக இருக்கும். சிறகுகளுக்கு உள்புறம் வெளிர் பச்சை நிறமாக இருக்கும். இந்த வெளிர் பச்சை நிறம் தான் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். தன் சிறகுகளை அது நீவி விட்டு கொள்ளும் போது இந்த பச்சை நிறம் நன்றாக தெரியும் !
பார்த்த படம்: வெப்பம்
முடியலை. வலிக்குது. வேணாம். அழுதுடுவேன்
தப்பாய் SMS அனுப்பிய அய்யாசாமி
அய்யாசாமி தினம் மாலை தன் அலுவலகத்தில் ஜிம்முக்கு போவார். (க்கும்) எப்போதாவது போக முடியா விட்டால் ஜிம் மாஸ்டருக்கு "இன்று வரலை.." என மெசேஜ் அனுப்புவார். அப்படி ஒரு முறை மெசேஜ் அனுப்பும் போது ஜிம் மாஸ்டருக்கு அனுப்பாமல் பழக்க தோஷத்தில் தன் ஹவுஸ் பாசுக்கு அனுப்பிட்டார் !
"I am not coming today " என்று மாலை நேரத்தில் Mrs. அய்யா சாமி மெசேஜ் பார்த்ததும், "வழக்கம் போல தானே இன்னிக்கும் காலையில திட்டினோம்; கொஞ்சம் அதிகம் திட்டிடோமோ ? மனுஷன் அப்செட் ஆகிட்டார் போலருக்கே" என அய்யாசாமிக்கு போன் செய்து "ஏங்க கோபமா? வீட்டுக்கு வந்துடுங்க" என சொல்ல, அய்யாசாமி இது தான் சாக்குன்னு "போ... நீ ரொம்ப திட்டிட்டே" என செம பிகு பண்ணிக்கிட்டார். அப்புறம்? அப்புறமென்ன அப்புறம் ? கழுதை கெட்டால் குட்டி சுவரு. அய்யாசாமிக்கு ஆபிஸ் விட்டா வீடு!