Friday, April 30, 2010

யானைகளுடன் 1 நாள்-கூர்க் அனுபவம்

கூர்க்கில் ஹில்டவுன் என்ற ஹோட்டலில் ரூம் புக் பண்ணியிருந்தேன். ஹோட்டல் சென்று ரூமை பார்த்து நொந்து போனோம். அழுக்கு ரூம். சோபா பார்பதற்கு கொடுமையாய் இருந்தது. அதில் போட்டிருந்த துணி என்று துவைத்தது என தெரியலை. வேறு ரூம் மாற்றி கொடுங்கள் என்றதும் சில நூறு ரூபாய் அதிகம் என சொல்லி ஒரு டீசன்ட் ரூம் தந்தனர். இது நிச்சயம் நன்றாய் இருந்தது!!


மாற்றி குடுத்த ரூம்                                                   ஹோட்டல் வெளியே


கூர்க் என்ற சின்ன ஊரில் இவர்கள் வாங்கும் ரூம் வாடகையே அதிகம். இதில் செக் அவுட் 12 மணிக்கு; அதுக்கு மேல் கொஞ்சம் லேட் என்றாலும் முழு நாள் வாடகை தரனும் என்ற ரீதியில் பேசினார்கள். சாப்பாடும் சரியில்லை. மறு நாள் வேறு ரூம் மாத்திட வேண்டியது தான் என முடிவு செய்தேன்.


கூர்கில் இந்த ஏப்ரல், மே மாதங்கள் - காலை மற்றும் மாலை செம கூலாக உள்ளது. பகலில் வெயில் சற்று சுள்ளுன்னு தான் அடிக்கிறது. மைசூர் மற்றும் கூர்க் செல்ல செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் தான் சிறந்தவையாம்.

மறு நாள் காலை ராஜாஸ் சீட் என்ற பார்க் சென்றோம். அந்த காலத்தில் ராஜா இங்கிருந்து அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்ப்பாராம். இப்போதும் மாலை வேளை தான் சூரிய அஸ்தமனம் பார்க்க பலர் இங்கு வருகின்றனர். ஆனால் நாங்கள் சென்ற போது, பனி (Mist) மாலையில் இருப்பதால் sunset பார்க்க முடியாது என்றனர். எனவே நாங்கள் பகலில் சென்றோம். 

ராஜாஸ் சீட் .. வியு ..

நிறைய மலர்கள்; நல்ல வியு பாயிண்ட்.. மேலும் ஒரு Toy train-ம் உள்ளது. கூர்கில் நிச்சயம் (மாலை நேரத்தில்) செல்ல வேண்டிய இடம் இது.


மதியம் அபே நீர் வீழ்ச்சி சென்றோம். கோடை என்பதால் தண்ணீர் அதிகம் கொட்டலை. அபே falls-ல் எப்போதுமே யாரையும் குளிக்க அனுமதிப்பதில்லை. தூரத்திலிருந்து அதன் அழகை மட்டும் பார்க்கலாம். அவ்ளோ தான்.அங்குள்ள தொங்கு பாலத்தில் நடப்பது ஒரு ஜாலியான அனுபவமாக உள்ளது. அபே falls செல்ல முக்கிய காரணம் வழியில் நிறைய காபி தோட்டங்கள் இருக்கும் என்றனர். மூனார் சென்ற போது பார்த்த தேயிலை தோட்டம் போல் அழகாய் இருக்கும் என ஆசையாய் இருந்தேன். ஆனால் காபி இலைகள் சிறிய அளவில் உள்ளன. தேயிலை தோட்டங்கள் போல் பார்க்க பச்சை பசேலென இல்லை. இது ஏமாற்றமே.

கூர்கில் ஸ்பெஷல் அங்கு கிடைக்கும் தேன் மற்றும் காப்பி பௌடர். இவை வாங்கினோம். தேன் விற்க அரசு நடத்தும் சொசைட்டி உள்ளது, இங்கு வாங்குவது நல்லது. கணேஷ் காப்பி என்ற இடத்தில் காப்பி நன்கு உள்ளது, கண் முன் அரைத்து தருகின்றனர்.

கூர்க் அருகில் பார்க்க வேண்டிய முக்கிய இடம் : தலை காவிரி.இங்கிருந்து தான் காவிரி உருவாவதால் புனித இடம் என பலர் தேடி போய் வழிபட்டு வருகின்றனர். நமக்கு அப்படி சென்டிமன்ட் இல்லை. எனவே போகலை.


கூர்கிளிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குஷால் நகரில் தான் பார்க்க மூன்று இடங்கள் உள்ளதால் மறு நாள் ரூம் காலி செய்து விட்டு குஷால் நகர் பயணமானோம். அங்கு கன்னிகா International என்ற ஹோட்டல் நன்றாயிருக்கும் என்றனர். உண்மை தான் 800 ருபாய் வாடகையில் டபிள் பெட் ரூம் நன்றாக உள்ளது, பேருந்து நிலையத்திலிருந்து ஒரு நிமிடம் நடந்தால் போதும். இங்கு ஒரே பிரச்சனை Restaurant -உடன் பாரும் சேர்ந்து உள்ளது. எனவே குடும்பத்துடன் Restaurant சென்று சாப்பிட முடியாது. ஒன்று ரூமுக்கு ஆர்டர் செய்து சாப்பிடனும். அல்லது வெளியே போய் சாப்பிடனும்.


அன்று இரவே குஷால் நகரில் உள்ள திபத் கோல்டன் டெம்பில் சென்று பார்த்தோம். ஆட்டோவிலேயே சென்று வரும் தூரம் தான். கோயில் ரொம்ப அழகாக உள்ளது. இங்கு சென்று வந்தது ஒரு நல்ல அனுபவம்.


நூற்றுக்கணக்கான திபத்தியர்கள் இங்கு தங்கி புத்தம் பயில்கின்றனர். இவர்கள் யாரும் திருமணம் செய்வதில்லையாம்!! புத்தர் சிலை அருகே இரு புறமும் புத்தருக்கு பின் புத்த மதத்தை பரப்பிய இருவர் சிலைகள்..மறு நாள் காலை துபாரே பாரஸ்ட் சென்றோம். இங்கு காட்டில் உள்ள யானைகள் தினம், காலை ஆற்றுக்கு அருகே கூட்டி வர படுகின்றன.
அங்கு அவை குளிப்பாட்டபட்டு, சாப்பாடும் தருகிறார்கள். நாமும் கூட அவற்றை குளிப்பாட்டலாம். காலை 9 முதல் 10 .30 வரை தினமும் இது நடப்பதால் இந்த நேரத்தில் சென்றால் தான் இந்த இடம் பார்க்கணும். இல்லையேல் waste.

 குளிபாட்டுகிறார்கள்                             சாப்பாட்டுக்கு காத்திருக்கு...


துபாரே பாரஸ்ட்டில் யானைகளை குளிப்பாட்டி, அவை சாப்பிடுவது பார்த்து ரொம்ப என்ஜாய் செய்தோம். மைசூர் மற்றும் கூர்க் பெண்கள் பொதுவாகவே ரொம்ப அழகு!!


பின் அருகிலுள்ள நிசர்கதாமா என்ற இடம் சென்றோம். இதுவும் ஒரு காடு போன்ற இடம் தான். மூங்கில் காடுகள், நடுவே ஒரு ஆறு, ஆற்றில் தற்போது குறைவாக தண்ணீர் ஓடுகிறது. இருந்தும் நான் குளித்தேன்.இவர் குளிக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாரே குளிச்சிக்கிடே இருப்பாரே

குஷால் நகர், கூர்கிற்கும் மைசூருக்கும் இடையே உள்ளது. மைசூர் டு கூர்க் நிறைய பேருந்துகள் உள்ளன. மைசூர் முதல் குஷால் நகர் வரை ரோடு அருமை. ஆனால் அதன் பின் கூர்க் செல்லும் ரோடு கொடுமை. ஏறும் போதும் இறங்கும் போதும் நாங்கள் வாமிட் செய்து விட்டோம். இது தான் ஒரே குறை.

அன்று இரவு மைசூர் வந்து ரயில் ஏறினோம். திரும்பும் போது III AC என்பதால் இந்த முறை எந்த பிரச்னையும் இல்லை. IPL பைனல் நடக்கும் போது டிரைனில் இருந்தோம். சென்னை வந்து இறங்கியதும் கண்ணில் பட்டது " சென்னை சூப்பர் கிங்க்ஸ் பைனல் வென்றது" ..ஊர் திரும்பிய வருத்தத்தை இந்த செய்தி மறக்கடித்து. மீண்டும் இயந்திரமாக தயாரானோம்.

Thursday, April 29, 2010

மைசூர் கூர்க் பயண கட்டுரை படங்களுடன்

ஏப்ரல் இறுதி வாரத்தில் குடுமபத்துடன் மைசூர் மற்றும் கூர்க் சென்று வந்தோம். மே மாதம் இறுதி வாரம் செல்வது தான் முதல் பிளான். ஆனால் எங்கள் கம்பெனி போர்ட் மீட்டிங் மே இறுதியில் என திடீர் முடிவானதால், மே மாதத்தில் லீவ் எடுப்பது சிரமம் என ஏப்ரலில் சென்றோம். இரு வாரங்களுக்கு முன் புக் செய்ததால் டிக்கட் RAC-ல் இருந்தது. RAC தானே நிச்சயம் confirm ஆகிடும் என இருந்தவனுக்கு ரயில் நிலையம் சென்ற போது முதல் அதிர்ச்சி.

டிக்கட் confirm ஆனதை முன்பே நெட்டில் பார்த்திருந்தேன். சார்ட்டில் கோச் நம்பர் பார்த்தால், ES 1 என இருந்தது. மைசூர் எக்ஸ்பிரஸ் மிக பெரிய ட்ரைன். அதில் பின்னாலிருந்து முன்னால் வரை இரு முறை, luggage உடன் நடந்தும் ES 1 என்ற கோச் எண் இல்லை. பின் எங்களை போலவே பலரும் அதே கோச் தேடி அலைவது தெரிந்தது. எந்த டிக்கட் செக்கரும் சரியான பதில் சொல்லலை. பின் பயணிகள் சிலர் இஞ்சினில் ஏறி தகராறு செய்யவும், அந்த எக்ஸ்ட்ரா கோச் சேர்க்க மறந்து விட்டோம் என ஒப்பு கொண்டனர். இன்னும் பத்து நிமிடமே பாக்கி இருக்க, செம டென்ஷன். அந்த கோச் கோர்க்காமல் வண்டி எடுக்க விட மாட்டோம் என பயணிகள் தகராறு செய்ததும் வேறு வழி இன்றி " கோச் கோர்த்ததும் வண்டி கிளம்பும்" என்றனர். கேரஜிளிருந்து ஒரு சுமாரான கோச் வந்து சேர்ந்து, வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

இதனை நான் இங்கு எழுத காரணம், இந்த எக்ஸ்ட்ரா கோச் என்றாலே அவ்வபோது பிரச்சனை வருகிறதாம். அதற்கு டாப் ஆபிசர் ஒப்புதல் வாங்க வேண்டுமாம். இப்படி வாங்காத போது கோச் மாட்டாமல் சில நேரம் "வேறு ஏதாவது கோச்சில் ஏறி அட்ஜஸ்ட் பண்ணி படுத்துக்குங்க " என்று சொல்லி விடுகிறார்களாம். வேறு சிலர் தங்கள் அனுபவமாக இதனை கூறினர்.

வயதானவர்கள், கை குழந்தை வைத்தவர்கள் என பலரும் முன்னும் பின்னுமாய் பல முறை லக்கேஜ் உடன் அலைந்து அலைந்து அன்று நொந்து போயினர். ரயில்வேயின் அலட்சியம், சரியான பதில் கூறாமை, "கோச் முன்னால் மாட்டுவோம், பின்னால் மாட்டுவோம்" என ஆளுக்கு ஒன்றாய் சொல்லி அலைகழித்தது, எந்த announcement-ம் செய்யாதது.. இவை ரொம்பவும் உறுத்தியது.

ஒரு வழியாய் இந்த டிராமாவுடன் எங்கள் பயணம் துவங்கியது.
****
மைசூரில் நாங்கள் சித்தார்த்தா என்ற ஹோட்டலில் தங்கினோம், ரொம்ப reasonable & decent ஆன ஹோட்டல் அது. அறை வாடகை 800 முதல் 1500 வரை உள்ளது. ஹோட்டல் நன்கு maintain செய்கின்றனர். மைசூர் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடையில் செல்லலாம். ஆட்டோ எனில் 15 ரூபாய். Mysore palace, Art gallery, Chamundi Hills என பல இடங்களுக்கு அருகில் உள்ளது.


 எல்லாவற்றையும் விட சாப்பாடு ரொம்ப அருமை. வேறு ஹோட்டலில் தங்குவோர் கூட இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர். சாப்பாடு விலையும் very reasonable. எங்கள் அலுவலத்திலிருந்து இது வரை பலர் இங்கு சென்று தங்கி நல்ல ஒபினியன் தந்துள்ளனர்.நிச்சயமாக நம்பி recommend செய்ய கூடிய ஹோட்டல் இது. Worth the money we pay for room & food.


****

முதல் நாள் காலை நாங்கள் மைசூர் பேலஸ் பார்த்தோம். நாங்கள் தங்கிய ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரம். ஆட்டோவில் சென்று திரும்பினோம்.

 

Mysore palace is fantastic!! முதலில் இங்கு வேறு பேலஸ் இருந்துள்ளது. அதன் ஒரு பகுதி தீ விபத்தில் டேமாஜ் ஆனதால் கிருஷ்ண ராஜ உடையார் என்ற ராஜா இந்த பேலஸ் கட்டியுள்ளார். இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த போது கட்டப்பட்ட பேலஸ் இது. இதற்கான பொருள்கள் எல்லாம் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து "The Best" ஆக பார்த்து கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணமாக கண்ணாடி எனில் உலக புகழ் பெற்ற பெல்ஜியம் கண்ணாடி (இன்னும் ரசம் போகாமல் அழாகாய் உள்ளது), மார்பிள்கள் வேறு ஒரு நாடு.. இப்படி.. பேலசின் பல இடங்கள் நம் விழிகளை ஆச்சரியத்தில் விரிய வைக்கிறது. மிக குறிப்பாய் தர்பார் நடக்கும் இடம் மற்றும் கல்யாணம் நடக்கும் இடம் (இங்கு தலைக்கு மேல் artwork வேலைபாடுகள் அற்புதம்!!) ..இவை ரொம்ப அழகு!!


பேலஸ் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. இதன் அருகிலேயே பழைய பேலசும் உள்ளது. நாங்கள் முதல் பேலஸ் சுற்றி, முழுக்க சோர்வானதால் அது பார்க்கலை.

****
மதியம் தூங்கி விட்டு மாலை பிருந்தாவன் கார்டன் சென்றோம். அருகில் பஸ் ஸ்டாண்டிலிருந்து நல்ல பஸ்கள் உள்ளன. நாங்கள் தூங்கி எழ நேரம் ஆனதால் காரில் சென்றோம். சென்று வர 400 ரூபாய்.

பிருந்தாவன் கார்டன் மாலை 5.30 மணிக்கு மேல் தான் பார்க்கிறார்கள். பூக்கள் வெயில் காலம் என்பதால் ஓரளவு தான் உள்ளது.

பிருந்தாவன் கார்டன் Aquariumல் உள்ள இந்த மீன் 40000 ரூபாயாம்

 இரவு ஆறரை முதல் Fountain-ல் Musical show உள்ளது. பார்க்க நன்றாக இருந்தது.
மைசூரில் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. பிருந்தாவன் கார்டன் பார்க்கா விட்டால் கூட பெரிய இழப்பில்லை என்று சொல்லலாம். ஆனால் மிக புகழ் பெற்ற இடம் என்பதால் மக்கள் தவறாமல் போகிறார்கள்.

      
வில்லன்.அப்புறம் ஹீரோ..Next சி.எம் :))     அவ்ளோ தாகமா என்ன? :))

***
காரில் திரும்பும் போது தேவராஜ் அர்ஸ் ரோடு, சாயாஜி ராவ் ரோடு ஆகியவை வந்து சற்று ஷாபிங் செய்தோம், இந்த இரு தெருக்கள் தான் மைசூரில் ஷாபிங் செய்ய சிறந்த இடங்கள் என்கிறார்கள். காவேரி ஆர்ட் எம்போரியம் ரொம்ப புகழ் பெற்றதாம். நல்ல வேளை நாங்கள் தாமதமாய் வந்ததால் மூடிட்டாங்க (வாழ்க!! இல்லாட்டி பர்ஸ் பழுத்திருக்கும்!!). கொஞ்சம் துணி மணிகள் வாங்கினாங்க. (நமக்கு தீபாவளிக்கு மட்டும் தான் வாங்கி தருவாங்க!!) தேவராஜ் அர்ஸ் ரோட்டில் உள்ள புவனேஸ்வரி சுவீட் ஸ்டால் மைசூரில் புகழ் பெற்ற கடை; இங்கு மைசூர் ஸ்பெஷல் சுவீட்டுகள் வாங்கினோம்.
******
அடுத்த நாள் மதியம் மேல் கூர்க் கிளம்பும் ஐடியா. எனவே ஒரு அரை நாள் பேகேஜ் டூரில் சில இடங்கள் பார்கக முடிவு செய்தோம். முழு நாள் டூர் எனில் ஒரு நபருக்கு ரூபாய் 150-ம் , அரை நாள் எனில் 80-ம் வாங்குகின்றனர்.

முதலில் Art gallery பார்த்தோம். " ஒரு மணி நேரத்துக்குள் பார்த்து விட்டு திரும்பனும்" என்றனர். நமக்கு கலை அறிவு கம்மி தான். அதற்கும் சேர்த்து ஹவுஸ் பாசுக்கு உண்டு. இந்த ஒரு மணி நேரம் அற்புத படங்களை பார்கக பத்தலை என்றார்கள். ஓவியர் ரவி வர்மா வரைந்த பல படங்கள் இங்கு உள்ளது.

அடுத்து சாமுண்டி ஹில்ஸ் சென்றோம். ஓர் சின்ன மலை மேல் இந்த கோயில் உள்ளது. இங்கிருந்து மைசூர் வியு பார்கக அழகு!! இங்கு மாலை நேரத்தில் வருவதே சிறப்பாம். விளக்குகளுடன் பார்கக அருமையாய் இருக்குமாம்.

 


மகிசாசுரா என்ற அரக்கனை சாமுண்டி வதம் செய்தாராம். இந்த மகிசாசுரா அரக்கன் பெயர் தான் மருவி மைசூர் ஆனதாம்.

பேக்கஜ் டூர்களில் போகும் போது கூட்டம் அதிகம் இல்லா விட்டால் தான் நீங்கள் இங்கு சாமி பார்கக முடியும், இல்லையேல் வெளியிலிருந்து கும்பிட்டு வர சொல்லிடுவாங்க.

பின் அருகிலேயே உள்ள நந்தி கோயில் சென்றோம். இந்தியாவில் நான்காவது பெரிய நந்தி என்கிறார்கள்.

அடுத்து மைசூர் Zoo சென்றோம்.நுழைந்தவுடன் முதலில் கண்ணில் படுவது ஜிராபி. அவ்வளவு பெரிய மிருகம் முதல் முறையாய் பார்க்க அனைவரும் ஆச்சரியத்தில் மகிழ்ச்சியடைகிறார்கள்.


சுதந்திரமாக சுத்தும் புலிகளை ஓரளவு அருகிலேயே பார்க்க முடிகிறது. வெள்ளை மயில், வித்யாசமான நிறத்தில் கிளி என குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. எங்களால் அதிகம் நடக்க முடியாமல் பாதி தூரத்தில் திரும்பி விட்டோம்.

கொட்டாவி விடும் சிம்பன்சி

அன்று மதியம் மைசூர் ரூம் காலி செய்து விட்டு கூர்க் பயணமானோம். மைசூர் பஸ் நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் Volvo AC பஸ் உள்ளது. மூன்று மணி நேரத்தில் கூர்க் அடைகிறது. மைசூர் டு கூர்க் முன் பதிவு செய்ய முடிய வில்லை. குறைந்தது 220 கிலோ மீட்டர் இருந்தால் தான் முன் பதிவு செய்ய முடியுமாம். அதற்கு குறைவெனில் இடம் இருந்தால் ஏறி கொள்ளலாம். டிக்கட் விலை அதிகம் என ரொம்ப கூட்டமில்லை. மிக வசதியாய் Volvo AC பஸ்ஸில் கூர்க் சென்றடைந்தோம்...கூர்கில் எங்களுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி பற்றி அறியாமல்.....


                                                              ................(அடுத்த பதிவில் முடியும் )

Wednesday, April 28, 2010

முன்னேறி பார்க்கலாம் -பகுதி 2 - தயக்கம் எனும் நோய்:

முதல் பகுதி இங்கே

முன்னேற்றத்துக்கு தேவையான பாசிடிவ் குணங்கள், தேவையற்ற நெகடிவ் குணங்கள் இரண்டும் மாறி, மாறி பார்க்க உள்ளோம்.

முதல் தேவையான "இலக்கு" சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஒரு நெகடிவ் குணம்..!!

நம்மை கீழே இழுக்கும் குணங்களுள் முக்கியமான ஒன்று: தயக்கம்!! ஒவ்வொருவரும் ஏதேனும் ஒன்றை சாதிக்க நினைக்கிறோம் ஆனால் அப்படி சாதிக்க நினைக்கும் விஷயத்திற்காக என்ன முயற்சி எடுக்கிறோம்? " எழுத்தாளராக வேண்டும்" "MBA படிக்க வேண்டும் " இப்படி ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ ஆசைகள்.. ஆனால் அவை எல்லாம் ஆசை என்ற அளவிலேயே உள்ளதே அன்றி அடுத்த நிலை போவதில்லை. காரணம் நமக்குள் உள்ள தயக்கம் தான்.

எனது அனுபவங்கள் சில பகிர்ந்து கொள்கிறேன். இவை சுய விளம்பரதிற்க்காக அல்ல ; பிறர் வாழ்வில் நடந்ததை சொல்வதை விட, எனது வாழ்வில் எனும் போது நம்பக தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் தான்.

*********
நான் BL and ACS முடித்து விட்டு Company Secretary ஆக வேலை பார்த்து வந்தேன். Finance சம்பந்தமான படிப்பு முடித்தால்தான் carreer-ல் வளர்ச்சி நன்றாக இருக்கும் என சில ஆண்டுகளில் புரிந்தது.ICWA படிக்கலாம் என prospectus வாங்கி விட்டேன். பாடங்கள் பார்க்கும் போது Maths & Statistics இருப்பது தெரிந்து, அவற்றை நிச்சயம் பாஸ் செய்ய முடியாது என மேலே தொடராமல் விட்டு விட்டேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏதாவது படிக்கலாம் என M.Phil சேர்ந்தேன் ( IT Jobs & industry கீழே போய், அனைவருக்கும் வேலை கிடைப்பது சிரமம் ஆனால் கூட ஏதாவது கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்து தப்பிச்சுக்கலாம் என்பது ஐடியா.. ம்ம்ம் ).

பணம் எல்லாம் கட்டி M.Phil சேர்ந்த பின் தான் Maths & Statistics இருப்பது தெரிந்தது. சரி இதில் அவை அந்த அளவு கடினமாய் இருக்காது என முடிவு செய்து தொடர்ந்தேன். தேர்வு எழுதி முடிக்கும் போது எனக்கே Maths & Stat-ல் ஒரு ஆர்வம் வந்திருந்தது. இதற்காகவா பயந்து ICWA எடுக்காமல் போனோம்; மறுபடி படிக்கலாம் போல் தோன்றியது. M. Phil தேர்வு முடிவு வந்த அன்று, யுனிவர்சிட்டி சென்று மார்க் ஷீட் வாங்கியவன், வண்டியை அப்படியே திருப்பி ICWA Institute சென்று மீண்டும் ICWA ரிஜிஸ்தர் செய்து விட்டு தான் அலுவலகம் வந்தேன். அடுத்த இரு வருடங்கள் மிகுந்த கடின உழைப்பிலும், என் குடும்பத்தாரின் சப்போர்டாலும் ICWA முடித்தேன். (நான் ICWA சேர்ந்த போது என் பெண் LKG படித்து கொண்டிருந்தாள்!! மனைவியும் வேலைக்கு செல்பவர்; உதவிக்கு வேறு யாரும் கிடையாது; அந்த இரு வருடங்கள் எங்கள் வாழ்வில் மிக கடினமானவை)

இந்த சம்பவத்தில் முதலில் நான் ICWA படிக்க தயங்கியது என் முன்னேற்றத்துக்கு பெரிய தடையாய் இருந்ததை கவனித்திருக்கலாம். பல நேரங்களில் தடைகள், எல்லைகள் இவை நாமாக மனதிற்குள் ஏற்படுத்தி கொள்பவையே. உண்மையில் மனிதன் " என்னால் இது முடியும்; முடியாது" என் தானாக தனக்கு எல்லைகள் ஏற்படுத்தி கொள்கிறான். மனிதனின் திறமைக்கும் சாதிப்பதற்கும் எல்லைகளே இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்க பட்டுள்ளது.

அதே சம்பவத்தில் M.Phil ரிசல்ட் வந்த அன்றே ICWA ரிஜிஸ்தர் செய்த உதாரணம் பாருங்கள். அது தான் தயக்கம் இன்றி செயல் படுவது. அப்படி தயக்கம் இன்றி தைரியமாக செல்லும் போது பெரும்பாலும் வெற்றியை நாம் சந்தித்தே தீருவோம்.

மேலே சொன்ன சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்னும் கூட சொல்ல ஒன்று உள்ளது. ICWA கடைசி குரூப் படிக்கும் போது Cost Audit என்று ஒரு பேப்பர். இதில் Objective டைப் கேள்விகள் மட்டும் 40 மார்க்குக்கு வரும். புத்தகத்தின் எந்த இடத்திலிருந்தும் வரலாம். நான் இதற்கு அட்டை டு அட்டை Objective type முழுவதுமாக ஒரு நோட்டில் தயார் செய்திருந்தேன். பலரும் இந்த பாடத்தில் கேள்வி, பதில், கணக்குகள் இவற்றில் தான் அதிக கவனம் செலுத்துவர். ஆனால் நான் நாற்பது மார்க்கும் எடுக்க பிளான் செய்து இப்படி தயார் செய்தேன். தேர்வு முடியும் போதே இதனை ஒரு One Word டைப் புத்தகமாக போட்டால் நன்றாக விற்பனை ஆகும் என்று தோன்றியது. நண்பர்களிடம் சொன்ன போது அவசியம் செய்ய சொன்னார்கள். அந்த தேர்வு முடிவு வந்து கோர்ஸும் முடித்து விட்டேன். ஆனால் அந்த புத்தகம்??? வெளியிட படவே இல்லை!! இத்தனைக்கும் மெட்டீரியல் முழுக்க தயார்!!ஒரு பப்ளிஷரை பார்த்து பேசியிருக்க வேண்டும். செய்ய வில்லை. தயக்கம்!! அப்புறம் பார்த்துக்கலாம் என தாமதபடுத்தி விட்டேன்.

ஒரு நல்ல ஐடியா கிடைப்பதே கஷ்டம். அதனை கடைசி வரை (Till a logic conclusion/ closure) கொண்டு செல்ல வேண்டியது அந்த ஐடியா ஓனர் பொறுப்பு. அப்போது தான் அதன் முழு பலனையும் அடைய முடியும்.

இத்தகைய நேரத்தில்/ விஷயத்தில் இன்னொரு பிரச்சனை. இப்படி தாமதம் செய்யும் போது நாம் செய்யணும், செய்யணும் என நினைத்த விஷயத்தை இன்னொருவர் செய்து முடித்து விடும் ஆபத்தும் உள்ளது.

பெரியவர்கள் " நல்ல விஷயத்தை தள்ளி போடாதே; கெட்டது செய்யணுமா அதனை தள்ளி போடு " என்பார்கள். ஒருவருக்கு தானம் செய்ய நினைக்கிறோம்; அதனை விரைவில் செய்வதே நல்லது; இல்லா விட்டால் "வேறு யாராவது செய்யட்டும்; நாம் ஏன் செய்யணும்?" என மனசு நினைக்க ஆரம்பித்து விடும்.

அதே நேரம் ஒருத்தருக்கு கெட்டது செய்யணும் என தோன்றுகிறது: அவர் உங்களுக்கு செய்த தீங்கிற்கு உடனே திரும்ப குடுக்க தோன்றுகிறது. இதனை உடனே செய்ய வேண்டாம். முதலில் தள்ளி போட வேண்டும். சில மாதங்களில் அந்த எண்ணம் வலுவிழந்து விடும். சட்டத்தில் கூட நீண்ட நாள் பகையால் கொலை செய்தவரை நீதி மன்றம் கடுமையாய் பார்க்கிறது; " He was able to sustain such negative emotion for a long period of time" என!

நான் கவனித்த வரை MD மற்றும் CEO-க்கள் அநேகமாய் எதையும் தயக்கம் இன்றி செய்பவர்களாக, பேசுபவர்களாக உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல மிகுந்த தன்னம்பிக்கை உள்ளவர்கள் புதியவர்களிடம் கூட தயக்கம் இன்றி பழகுவதை, கேள்வி கேட்பதை, உதவிகள் வேண்டுவதை பார்த்துள்ளேன். இவர்கள் தான் பெரும்பாலும் வெற்றியாளர்களாக உள்ளனர்.

இன்டர்வியுக்களிலும், குறிப்பாக குருப் டிஸ்கஷன்களிலும் நாம் தயக்கம் இன்றி பேசுகிறோமா என்பது தான் முக்கியமாக கவனிக்கிறார்கள். நாம் சொல்லும் கருத்தை விட சொல்லும் விதம் (Confidence உடன் தயக்கம் இன்றி பேசுதல்) தான் அவற்றில் முக்கிய விஷயமாக கொள்ளபடுகிறது.

ஒரு எழுத்தாளரையோ, பதிவரையோ எடுத்து கொள்ளுங்கள். அவருக்கு இன்ன தான் எழுத வேண்டும் என யாராவது சொல்கிறார்களா என்ன? என்ன தலைப்பு என்பது முதல், என்ன எழுதுவது என்பது வரை தானே யோசித்து தயக்கம் உதறி மேலே செல்கிறார்கள்.

எந்த field-லுமே "Early bird has an advantage" என்பார்கள். தயக்கம் இன்றி, ஒரு முயற்சியை பிறர் துவங்கும் முன், துவக்கத்திலேயே ஆரம்பித்தவர்கள் ஓட்டத்தில் முன்னணியில் இருப்பார்கள்.

"நூறு மைல் பயணம் நீங்கள் முதல் எடுத்து வைக்கும் முதல் அடியில் தொடங்குகிறது" என்று ஒரு பழமொழி உண்டு. எத்தனை அர்த்தமுள்ள பழமொழி!!

சில வேலைகளை துவங்கும் போது அதனை முழுமையாய் எப்படி செய்து முடிப்பது என்பது குறித்த ஒரு தெளிவான ஐடியா இல்லாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து போக போக அதனை எப்படி முடிப்பது என்ற தெளிவு வந்து விடும். மேலும் இது சம்பந்தமான மனிதர்களை நீங்கள் சந்திப்பது இயல்பாய் நடக்கும். அவர்கள் அதனை எப்படி முடிப்பது என்ற யோசனையும், உதவியும் செய்வார்கள். எல்லா வேலைகளும் (குறிப்பாய் இது வரை ஈடுபடாத புது வேலைகள்) இப்படி தான் முடிகிறது.

நீங்கள் இது வரை போகாத ஒரு இடத்திற்கு புதிதாய் செல்கிறீர்கள்; அப்போது ஆரம்பம் முதல் கடைசி வரை எந்த வழியாக போவது என முழுதும் தெரிந்தால் தான் போவேன் என்றால் அது நடக்கிற காரியமா என்ன? பயணத்தை துவங்கி விட்டால், போக போக யாரிடமாவது வழி கேட்டு, கேட்டு சென்று விடுகிறோம் தானே? வாழ்க்கையில் நாம் செய்யும் பல புது விஷயங்களும் இதே போல் தான்!!

நான் ஒரு ப்ளாக் துவங்கவே ஓரிரு வருடம் யோசித்து, தொடர்ந்து எழுத என்ன இருக்கு என்று தான் தயங்கினேன், ஆனால் எழுத துவங்கிய பின் அனைத்தும் இயல்பாய் நடக்கிறது. எழுத துவங்கிய பின் தான் தமிழ் மணம், தமிழிஷ் போன்ற திரட்டிகள், Followers gadget போன்றவை இது வரை சந்திக்காத புது நண்பர்கள் அறிமுகம் செய்தனர்.

பண உதவி கேட்டால் தான் மனிதர்கள் பலர் செய்ய தயங்குவர். பணம் தவிர மற்ற உதவிகள், குறிப்பாய் அவர்களுக்கு தெரிந்த ஒன்றை எப்படி செய்வது என நீங்கள் கேட்டால், சொல்லி தர பலரும் தயங்குவது இல்லை. அப்படி சொல்லி தருவதில் கிடைக்கும் திருப்திக்காக பலரும் அந்த உதவிகள் செய்யவே செய்கின்றனர்.

**அன்பு காட்ட தயங்காதீர்கள். ஒவ்வொரு இதயமும் அன்பிற்காக ஏங்குகிறது.

** நன்றி சொல்ல தயங்காதீர்கள். உதவி செய்தவருக்கு நீங்கள் செய்யும் மிக குறைந்த மரியாதை அது.

** பாராட்ட தயங்காதீர்கள். மனிதர்களுக்குள் இருக்கும் குழந்தை பாராட்டுக்காக ஏங்குகிறது.


மேலும் முன்னேறுவோம் ..

Monday, April 26, 2010

வானவில் -சுறா விஜய்- ஐயாசாமியின் சவால்

ஒரு சம்பவம்

வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைக்கு காய்கறி, மளிகை பொருள் வாங்க போயிருந்தேன். அந்த கடை ஒரு கணவன், மனைவி இருவர் மட்டும் manage செய்வார்கள். அன்று அந்த பெண்மணி மட்டும் இருந்தார். பொருட்கள் விலை எழுதி மிக வேகமாக, ஆனால் சரியாக கூட்டி விட்டார். எனக்கு சற்று ஆச்சரியம். " எப்படிங்க செம speed-ஆ கூட்டுறீங்க? " என்றேன். " சார் டென்த்தில் நான் நூத்துக்கு நூறு மார்க் சார். அப்புறம் மேல படிக்க வைக்கல" .. இதில் முதல் வரி சொல்லும் போது வெட்கமும் அடுத்த வரி சொல்லும் போது வருத்தமும் தெரிந்தது. " ஏன் மேல படிக்கலை" என நான் கேட்டு அவரை embarass செய்ய விரும்ப வில்லை.

எனது டென்த் மார்க் நினைவு வந்து இம்சை செய்தது. 59 மார்க் வாங்கிய நான் எந்த நிலையில் உள்ளேன்? கிராமத்தில் படித்து,நூறு மார்க் வாங்கிய பெண் ஒரு சாதாரண ஆளை திருமணம் முடித்து, மொட்டை அடித்து கொண்டு கடையில் மளிகை பொருள் மடிக்கிறார். பெற்றோர், குடும்ப சூழல் இவை ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவு நிர்ணயம் செய்கிறது... எண்ணியவாரே நடந்தேன். பையை விட மனம் கனத்தது.

ஐ. பி. எல் கார்னர்

ஐ. பி. எல்லில் சென்னை வென்றது இன்று காலை பேப்பர் பார்த்து தான் தெரிந்தது!! பஞ்சாபிடம் சென்னை தோற்ற மேட்ச் பார்த்தவர்கள் சென்னை பைனல் வரும், ஜெயிக்குமென நினைத்திருக்க மாட்டார்கள். (நானும் தான்)..கடைசில் தர்ம சாலா மேட்ச் துவங்கி அனைத்தும் இக்கட்டான மேட்ச்கள். இவை ஜெயித்து ஜெயித்து சென்னைக்கு நெருக்கடி handle செய்வது பழகி போய் விட்டது.. மும்பையோ பெரும்பாலும் cakewalk போன்ற வெற்றிகளே பெற்று வந்தது. சென்னை semi finals கூட வராது என்று எழுதியது நான்தான். எனது ஊகம் பலிக்கா விட்டாலும் சென்னை வென்றது மிக மிக மிக மகிழ்ச்சியே!!

சுறா படம் பற்றி அலுவலகத்தில் லஞ்ச் ரூம் டிஸ்கஷன்


" சுறா பாட்டெல்லாம் போடுறாங்களே.. பாத்தீங்களா?"

" வடிவேலை தவிர்த்து மத்தது அப்படியே வேட்டைக்காரன் டிரைலர் மாதிரி தான் இருக்கு"

" வழக்கம் போல் விஜய் அதே கெட் அப்; வெறும் விஜய் ஸ்டில் மட்டும் வச்சு அது எந்த படம்னு சொல்லவே முடியாது"

" எப்பவுமே விஜய் கூட நடிக்கிற ஹீரோயின் வச்சி தான் அது எந்த படம்னு கண்டு பிடிக்கணும்; வேற வழி இல்லை"

" ஓ அதுக்கு தான் வேற வேற ஹீரோயின் கூட நடிக்கிறாரா?"

" எப்படியோ விஜய்க்கு பாட்டெல்லாம் ஹிட் ஆகிடுதுப்பா; படம் எப்ப பாக்க போறே? "

" ம்ம் வழக்கம் போல ஒரு மாசம் கழிச்சு சீடியில்தான் "

ஒரு சந்தேகம்

உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாசம் கோயம்பதூரில் மூணு நாள் நடக்க போகுது; இதனால் தமிழுக்கு என்ன நன்மை? யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. அப்படியே தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பலன்? இது தெரிஞ்சாலும் சொல்லுங்க. நமக்கு தெரியலை. நாலட்ஜ் இம்ப்ருவ் பண்ணிக்குறேன் (அட.. தமிழ் பத்தி சொல்லிட்டு ஒரே ஆங்கில வார்த்தையா...)

அய்யாசாமியின் சவால்

" ஆபிசில் கெட்-டுகதர் வச்சா ஏதேதோ போட்டி வைக்கிறாங்க. வாயில் ஸ்பூன் & லெமன் வச்சிட்டு ஓடறது, கையாள தண்ணி எடுத்து பாட்டிலில் ஊத்தறது.. அது இதுன்னு. நம்மால ஒன்னும் ஜெயிக்க முடியலை . ரெண்டு நிமிஷத்தில் எத்தனை புடவை சரியா மடிக்கிரதுன்னு ஒரு போட்டி வைக்க சொல்லுங்க; ஜென்ட்ஸ் மட்டுமில்ல, லேடிசையே நான் ஜெயிச்சுடுவேன்"

விரைவில் ஒரு குட்டி பயண கட்டுரை

மைசூர் -கூர்க் நான்கு நாள் சென்று வந்தோம்; எனவே பதிவுலகம் பக்கம் நாலு நாளாய் எட்டி பார்க்கலை. விரைவில் எதிர் பாருங்கள்.. மைசூர் -கூர்க் பயண கட்டுரை..(ஐயோ பாவம் நீங்கள் )

வாங்க முன்னேறி பாக்கலாம் தொடருக்கான ஆதரவு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அமைதி அப்பா வாரத்தின் குறிப்பிட்ட ஒரு கிழமையில் வெளியிட சொல்லியுள்ளார். புதன் அன்று வெளியிட முயல்கிறேன். வீடு மற்றும் அலுவலக வேலை பளுவால் சில நேரம் முடியாமல் போகலாம். அத்தகைய நேரம் பொருத்தருள்க !!

Wednesday, April 21, 2010

வாங்க.. முன்னேறி பாக்கலாம்.. பகுதி - 1

இப்பதிவு யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில் இடம் பெற்றது!
*******************************************
முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உள்ளது. தற்போதுள்ள நிலையில் இருந்து இன்னும் மேலே செல்ல ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். தன் முன்னேற்றம் குறித்தான சிந்தனைகள் சிறு பொறியாக தன் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ கிடைத்தால் எடுத்து கொள்ள பலரும் தயாராக உள்ளனர்.

இந்த தொடரை வாசித்து பாருங்கள். நீங்கள் சுய முன்னேற்ற நூலே வாசிக்க பிடிக்காதவர் எனினும், இதில் உள்ள அடிப்படை உண்மை உங்களைக் கவரக்கூடும்.

முதலில் சில disclaimers சொல்லி விடுகிறேன்:

நான் வாசித்த பிற புத்தகங்களில் இருந்து சில எண்ணங்கள் எதிரொலிக்கலாம். ஆனால் எந்த புத்தகத்தையும் பக்கத்தில் வைத்துக் கொண்டோ, முதல் நாள் வாசித்து விட்டோ எழுத போவதில்லை. எப்போதோ படித்து, யார் சொன்னது என்று கூட மறந்து போய் சொன்ன கருத்து மட்டும் உள்ளே தங்கி, பின் அது என் அனுபவமாக, கருத்தாக வெளி வரலாம்.

நிச்சயம் என் மனதில், அனுபவத்தில் உணர்ந்தவை தான் எழுத போகிறேன். நான் ஒன்றும் மிக உயர்ந்த நிலையை எட்டி விட வில்லை. ஆனால் ஒரு காலத்தில் எந்த பக்கம் செல்வது என்று குழம்பி, வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்வது என்று புரியாமல், பல்வேறு மன குழப்பங்களுக்கு ஆட்பட்டு வெளி வந்திருக்கிறேன். நான் அன்று இருந்த நிலையிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தால், மிக அதிக குழப்பங்கள் இடையே ஒரு சுத்த useless person-ஆக இருந்தவன், இன்று நான்கு பேர் மதிக்கும் அளவு வந்துள்ளது புரிகிறது. எவ்வளவு தவறுகள், முட்டாள் தனங்கள் செய்துள்ளேன். இவ்வளவும் செய்து விட்டு இன்று மீண்டு வர என்னால் முடியும் போது, அது எல்லாருக்கும் முடியும் என்பதால் தான் இந்த தொடர் எழுத எண்ணுகிறேன். இது எனது சுய சரிதையாகவோ, சுய தம்பட்டம் பேசும் தொடராக இல்லாதிருக்க முடிந்த வரை முயல்கிறேன்.

"வாங்க.. முன்னேறி பாக்கலாம்" என்ற தலைப்பு, " வாங்க.. பழகி பாக்கலாம்" ரீதியில் வைத்துள்ளேன். தலைப்பு மாறினாலும் மாறலாம் :))

ஆங்கிலத்தில் "Small matter matters much " என்பார்கள். அது போல நான் பேச போவது பல சின்ன சின்ன விஷயங்களே. அவற்றில் சில உங்களுக்கு உதவலாம்.

முன்னேற்றம் என்கிற போது பல ஏற்ற இறக்கங்கள் (ups and downs) இருக்கவே செய்யும். சில குணங்கள் நம்மை மேலே கொண்டு செல்லும். சில நம்மை பரம பதம் போல் கீழிறக்கும். இப்படி ரெண்டு விதமான குணங்களையும் இந்த தொடரில் மாறி மாறி பார்க்க உள்ளோம்.

*******

ரு வீடு கட்டுவது முதலில் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? பில்டர் முடிவு செய்வதிலா, கல் சிமென்ட் வாங்குவதிலா, CMDA போன்ற நிறுவனத்திடம் வரைபட அனுமதி (Plan approval) வாங்கும் போதா? இவை எதுவும் இல்லை ! ஒரு வீடு முதலில் அந்த குடும்பத்தலைவன் அல்லது தலைவி மனதில் கட்டப்படுகிறது. முதலில் நமக்கென வீடு வேண்டும் என்ற எண்ணம். அது தான் விதை. முதலில் ஆசையாக இருந்து பின் இலக்காக மாறுகிறது. ஒரு காலிமனை அல்லது ப்ளாட் (flat) பார்க்க ஆரம்பிக்கின்றனர், அது முடிவாகிறது; அப்புறம் பேங்க் லோனில் ஆரம்பித்து க்ரஹபிரவேசம் வரை தொடர் ஓட்டம். கடைசியில் தனக்கென வீடு என்ற கனவு நனவாகிறது.

இது வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, நீங்கள் அடைய விரும்பும் எந்த விஷயத்துக்கும் பொருந்தும்.

எதற்குமே துவக்கம் அதனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான். எந்த செயலும் இரு முறை செய்யபடுகிறது; முதலில் மனதில், பின்பு தான் அதே செயல் நிஜமாய் நடக்கிறது. (Everything is created twice; first in the minds of individual and then it actually happens).

தனக்கு என்ன தேவை என்பதை தன்னை தவிர யாரால் சொல்ல முடியும்? துரதிஷ்ட வசமாக நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதே தெரிய வில்லை. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று தீவிரமாக யோசிப்பதும், அது குறித்து தெளிவான, தீர்க்கமான முடிவெடுப்பதும் இல்லை.

நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால் 9 out of 10 times அதனை அடையலாம். அதனை அடையும் வழியில் எத்தனையோ பிரச்சனைகள், தடைகள் வரலாம். ஆனால் நாம் உறுதியாய், பொறுமையாய் இருந்தால் நமக்கு தேவையானதை அடைய முடியும்.

வீடு கட்டும் உதாரணத்தையே எடுத்து பாருங்கள். கட்டி முடிப்பதற்குள் எத்தனை தடை வந்திருக்கும்? தேவையான நேரத்தில் பணம் கிடைக்காது; பிளான் மாறும் குழப்பங்கள்; கட்டும் போது அடுத்து பில்டிங் காரர் ஏதாவது தகராறு செய்வார்.. இப்படி எத்தனையோ.. அனைத்தையும் தாண்டி அந்த வீடு கட்டி முடிக்கபடுகிறது.

அதே போல் தான் ஒரு தேர்வாகட்டும்; நீங்கள் அடைய எண்ணும் எந்த விஷயமாகட்டும் எத்தனையோ தடை வந்தாலும் நீங்கள் உறுதியாய் இருந்தால் அந்த இலக்கை அடையலாம்.

“9 out of 10 times அடையலாம்” என்று ஏன் சொன்னேன் தெரியுமா? நமது எல்லா விருப்பங்களும் நியாயமாக இருக்கும் என சொல்ல முடியாது; பருவ வயதில் ஒருவன் ஒரு பெண்ணின் அன்பை, காதலைப் பெறுவதே தன் லட்சியம் என நினைக்கிறான்; அந்த பெண்ணுக்கு பல காரணங்களால் இவனை பிடிக்காமல் போகலாம். அவள் வேறு யாரையும் நேசிக்கலாம். அப்படியும் அவளை அடைவதே என் லட்சியம் என சொன்னால், அது நிச்சயம் நடக்கும் என எப்படி சொல்ல முடியும்? இலக்கு நியாயமானது எனில் அது நடக்கும். நாம் பேசுவது: ஒருவரை கொல்வது, குறுகிய நாளில் பணக்காரன் ஆவது போன்றவை பற்றி அல்ல.

*********

ங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து விட்டால், அது நீங்கள் சென்று சேர வேண்டிய இடம்  (destination) போல fix ஆகி விடுகிறது. அடுத்து அதனை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள். சேர வேண்டிய இடத்துக்கு எப்படியும் போகலாம்.. பேருந்தில், ரயிலில், ஆட்டோவில், அல்லது இவை அனைத்தையும் உபயோகித்து போகலாம். வழியில் சில நேரம் வண்டி பிரேக் டவுன் ஆகும்; தாமதமாகும், ஆனாலும் நீங்கள் அந்த இடத்தை சென்று அடைவீர்கள்! அதே போல் உங்கள் இலக்கு முடிவான பின், சில போராட்டங்கள் இருந்தாலும் நீங்கள் அதனை அடைவதும் நிச்சயமாகிறது.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது எங்கே போகிறோம் என்பது தெரியும் தானே. அதே போல் தான் வாழ்க்கையில் நீங்கள் எங்கு சென்று அடைய வேண்டும் என்பதும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவு படித்த அரை மணியிலோ, அடுத்த நாளோ நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதில்லை. இத்தகைய பெரிய முடிவுகள் உங்கள் உள்ளே ரொம்ப நாளாக இருக்க கூடியவை. உள்ளுக்குள் பெரும் அலசல், கேள்விகளுக்கு பிறகே, உங்கள் "ஆசை", உங்கள் " இலக்கு " ஆக மாறும்.

ஏற்கனவே உங்கள் இலக்கை நிர்ணயம் செய்து விட்டாலோ, விரைவில் முடிவு செய்தாலோ நீங்கள் முன்னேற்ற படியில் முதல் சில அடிகள் ஏற ஆரம்பித்து விட்டீர்கள் என்றே அர்த்தம். வாழ்த்துக்கள்

                                                                                         ... (முன்னேறுவோம் )

Monday, April 19, 2010

100-வது பதிவு: குடும்பம் Vs வேலை Vs பதிவுலகம்

இப்பதிவு யூத் விகடனின் குட் ப்லாக்ஸ் பகுதியில் இடம் பெற்றது!


*******************************************

பதிவுலகில் எழுதும், வாசிக்கும் ஒவ்வொருவரும், குடும்பம், வேலை, பதிவு - மூன்றுக்கும் நேரம் ஒதுக்குவர். நான் இவற்றுக்கு எப்படி ஒதுக்குகிறேன் என்பது குறித்தே இப்பதிவு.

வேலை

ஒவ்வொரு மனிதரும் மிக அதிக நேரம் செலவழிப்பது அலுவலகத்தில்/ வேலையில் தான். நமது முக்கிய பொழுதுகள் அலுவலகத்தில் தான் கழிகிறது. நம்மில் எத்தனை பேர் அவரவருக்கு பிடித்த வேலை பார்க்கிறோம்? எனினும் சம்பளம் பெறும் போது அதற்கான உழைப்பை அவசியம் கொடுக்க தான் வேண்டும். நமது lifestyle, வளர்ச்சி, நமது குடும்பத்தினருக்கு நாம் செய்து தரும் வசதிகள்…. எல்லாம் தருவது நாம் பார்க்கும் வேலை; இதற்கான நியாயம் அவசியம் செய்ய வேண்டும்.

எனக்கு தெரிந்து வீட்டிலிருந்து ப்ளாக் வாசிப்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து வாசிப்போர் தான் அதிகம். பலருக்கும் முழு நேரம் (எட்டு அல்லது ஒன்பது மணி நேரமும்) வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே ஓய்வு நேரத்தில் ப்ளாக் வாசிக்கின்றனர். புதிதாக பதிவு - அலுவலகத்தில் இருந்து எழுதுவது கடினம்; வீட்டில் இருந்து தான் எழுதுகின்றனர். பிற ப்ளாக் வாசிப்பதும் பின்னூட்டம் போடுவதும் மட்டும் அலுவலகத்தில் இருந்து என எண்ணுகிறேன்.. நானும் இந்த கேஸ் தான்.

எனது வேலை சற்று சென்சிடிவ் ஆனது. Contract-கள், கடிதங்கள், Minutes , Notice என drafting -ல் தான் பெரும்பாலும் கழிக்க வேண்டும். சாதாரண நாட்களில் நான்கிலிருந்து ஆறு மணி நேரம் வேலை இருக்கலாம். Board Meeting/ Annual General Meeting நேரங்களில் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் அலுவல் வேலையில் பிஸி ஆகிடுவேன்.

வேலையில் என்னுடைய approach ரொம்ப சிம்பிள். பொதுவாக எதையும் pending வைக்க மாட்டேன், மிக மிக விரைவாய் clear செய்து விடுவேன். நான் ஒரு support function என்பதால் மற்ற department -க்கு இது உதவியாய் இருக்கும். அடுத்தது எந்த முடிவும் குறிப்பிட்ட department-இடமும், பாஸ் இடமும் பேசி விட்டு தான் collective-ஆக எடுப்பேன். இதில் பலரது Point of view-ம் சேர்ந்து நல்ல முடிவாக எடுக்க முடிகிறது

முன்பே சொன்னதை போல் வேலை என்பது நமது “அன்ன தாதா”; அதற்கான மரியாதை தனி; அது என்றும் உண்டு.

குடும்பம்

குடும்பம் Vs வேலை Vs பதிவுலகம்; இதில் ஒன்று மட்டும் தேர்வு செய்ய வேண்டும் எனில் பலரும் வேலையை சொல்ல கூடும் . என்னை கேட்டால் நான் முதலில் குடும்பத்தை தான் சொல்வேன்.

ஓர் முறை அலுவலகமா வீடா என ஒரு குழப்பம் வந்த போது ஒரே நாளில் முடிவெடுத்து வேலையை ரிசைன் செய்ததும் எனக்கு நடந்தது. (பின் அவ்வாறு ஒரே நாளில் அவசரமாய் ரிசைன் செய்தது தவறு என வருந்தியது தனி கதை)

நம்ம ஹவுஸ் பாசும் வேலைக்கு போவதால், அலுவலகத்தை விடவும் எனக்கு வீட்டில் வேலை அதிகம்; ஆனாலும் கூட மனைவிக்கு சமையலில் உதவுவதிலும், குழந்தைக்கு பாடம் சொல்லி தருவதிலும் கிடைக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் ரொம்ப நிறைவாக உள்ளது.

பதிவுலகம் வந்த புதிதில் வீட்டில் இரவு, அதி காலை, விடுமுறை நாட்கள் என ப்ளாகே கதி என கிடந்ததும் உண்டு. இப்போது சற்று 'தெளிந்து' விட்டேன்.

ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலை மாறுவோம் ; எழுத்து என்பது பொழுது போக்கு; ஆனால் குடும்பம் மட்டும் என்றும் நம்மோடு உடன் வரும்; செலவிடும் நேரம், முக்கியத்துவம் எல்லாவற்றிலும் முதலிடம் சந்தேகமே இல்லாமல் குடும்பத்திற்கு தான்.

பதிவுலகம்

சுகாசினி ஜெயா டிவியில் சினிமா விமர்சனம் செய்வது போல, ஒரு பிளஸ் ஒரு மைனஸ் என ப்ளாக் பத்தி சொல்ல முயற்சி பண்றேன்….

பிளஸ்: எழுதி முடித்தவுடன் சுட சுட feedback கிடைப்பது

மைனஸ்: இதே பிளஸ், ஆரம்ப கட்டத்தில் எழுதுபவர்களை கொஞ்சம் addict ஆகிடுது; ப்ளாகே கதியா கிடப்பது பலருக்கும் ஆரம்பத்தில் நிகழ்கிறது ; இதில் இருந்து வெளியே வந்து இது ஒரு ஹாபி தான்; முழு நேர வேலை இல்லை என புரிய நேரம் ஆகிடுது.

பிளஸ்: இந்த ப்ளாக் உலகம் அறிமுகபடுத்தும் பன்முகமான (Varied people) நட்பு; அதில் பெரும்பாலானோர் நல்லவர்களாக உள்ளனர்.

மைனஸ்: எப்பவும் மனசு " போதுமான அளவு பின்னூட்டம் வரலை; Followers கொஞ்சமா இருக்காங்க" என நினைக்கிறது; ஒரு saying சொல்வது போல் " பணமும் புகழும் எவ்வளவு கிடைத்தாலும், மனிதன் இரண்டும் போதும் என திருப்தி அடைவதில்லை"

பிளஸ் & மைனஸ்: “ எதுக்கு எழுதணும்; தொடர்ந்து எழுதணுமா? எழுதி என்ன பண்ண போறோம்? இது time waste செய்ற வேலையா?” போன்ற கேள்விகள் அவ்வபோது வரும். என்னை பொறுத்த வரை வேண்டிய போது எழுதலாம்; இல்லாவிடில் சும்மா இருக்கலாம்; முழுக்க ப்ளாகே வேண்டாம் என வெளியே போக வேண்டாம் என நினைக்கிறேன்; காரணம்: இது ஒரு நல்ல outlet ; மேலும் நமது வாழ்க்கை &; சிந்தனை மாறி கொண்டே இருக்கும்; நமது சிந்தனை முன்பு எப்படி இருந்தது என நாமே பின்னர் வாசித்து பார்க்க இது உதவும்; ஒரு டைரி போல... ஒவ்வொரு ப்ளாகரின் ஒவ்வொரு பதிவும், நம்மை சுற்றியள்ள இன்றைய வாழ்க்கை முறையை அவரது பார்வையில் இருந்து பதிவு செய்கிறது..

எனக்கு எழுத இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. எனது Draft folder-ல் பல ஐடியாக்கள் உள்ளன. மிக முனைப்போடு எழுதுவதில்லை; வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று என்ற ரீதியில் எழுதுகிறேன்; சனி, ஞாயிறு எழுதினால் கூட, பெரும்பாலும் பல காரணங்களுக்காக சனி, ஞாயிறு publish செய்வதில்லை. மேலும் ஒரு பதிவிற்கும் அடுத்த பதிவிற்கும் இடையே குறைந்தது 48 மணி நேர இடைவெளியாவது இருக்கும் படி பார்த்து கொள்கிறேன் :))

சுய முன்னேற்றம், புத்தகங்கள், கிரிகெட், ரொம்ப கொஞ்சமாய் சினிமா, டிவி, இவை பற்றிய என் எண்ணங்கள் தொடர்ந்து எழுதுவேன். குறிப்பாய் வாழ்க்கையில் முன்னேற தேவையான குணங்கள் எவை, விலக்க வேண்டிய குணங்கள் எவை என அனுபவத்திலிருந்து ஒரு தொடர் போல் எழுதலாமா என ஓர் யோசனை உள்ளது; (அந்த அளவு சாதிக்கலை என்பது வேறு விஷயம்; சுய முன்னேற்ற நூல் எழுதியவர்கள் எல்லோரும் சாதிதவர்களா என்ன?) இது எழுதலாமா அல்லது அட்வைஸ் போல் இருக்கும், பலர் ரசிக்க மாட்டார்களா என தெரியலை. உங்கள் கருத்துக்களை இது பற்றி(யும்) சொல்லுங்கள்..

***********

நூறு பதிவுகளுக்கு காரணமாய் இருக்கும் "தொடர்பவர்களுக்கும்" (Followers), பின்னூட்ட ஊக்கம் தரும் அன்பு நண்பர்களுக்கும் மிக்க மிக்க மிக்க நன்றி....

Friday, April 16, 2010

வானவில்- இரு தார மணம் - யுவன் ஷங்கர் & ஹேடன்


சென்னை ஸ்பெஷல்சங்கர நேத்ராலயா 

சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லஇந்தியா முழுதும் தெரிந்த ஒரு நல்ல நிறுவனம் - சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனைகண் தொந்தரவுகளுக்கும்ரெகுலர்   Check up-களுக்கும் ஒரு நம்பிக்கையான  மருத்துவ மனை இதுஇவர்கள் முக்கிய அலுவலகம் நுங்கம்பாக்கதிலும், கிளை ஆலந்தூர் -கத்திபாரா பாலத்திலிருந்து சற்று தொலைவில் உள்ளது. வெளி மாநிலங்களில் உள்ள பலர் ஆபரேஷன் எனும் போது   சங்கர நேத்ராலயா வந்து விடுகிறார்கள் நீங்கள் செல்லும் போது பார்த்தால்நோயாளிகளில் பலர் வெளி மாநில மக்கள் என்பதை உணரலாம்.
எனது குடும்ப   நண்பர் மனைவிக்கு ஒரு முக்கிய கண் ஆபரேஷன்  வேறு ஒரு மருத்துவ மனையில் தவறாக செய்து ரொம்ப complication ஆகி விட்டதுபின் சங்கர நேத்ராலயா வந்து மறுபடி ஆபரேஷன் செய்து கண் பார்வை மீண்டதுஇந்த அனுபவத்துக்கு பின் குடும்பத்தினர் யாருக்கும்  கண் check up எனில் சங்கர நேத்ராலயா செல்வது வழக்கமாகி விட்டது.

டிவி பக்கம் யுவனின் இசை நிகழ்ச்சி 

 கலைஞர் டிவியில் சித்திரை முதல் நாள் (!!)  சிறப்பு நிகழ்ச்சியாக வந்த  யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி (பார்த்த வரை) நன்றாக இருந்தது. 

முழுதும் பார்க்க முடியாமல் அலுவலகம் செல்ல கிளம்ப வேண்டியதாகி விட்டது! யுவன் நிறைய நல்ல பாடல்கள் தந்துள்ளார் என்பதை உணர முடிந்தது. அடிக்கடி விளம்பரம் போட்டு வெருப்பெற்றாமல் தொடர்ந்து பாட்டு போட்டதும் நிகழ்ச்சி ரசிக்க ஒரு காரணம்
.வாரம் ஒரு சட்ட சொல் - பிகமி (Bigamy)

முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது  மறு மணம் செய்வது   பிகமி எனப்படும்.  கோர்ட் மூலம் டைவர்ஸ் ஆகாமல், பிரிந்து இருக்கும் நிலையில் மணம் செய்தாலும் பிகமி தான். குறிப்பிட்ட கணவன் அல்லது மனைவி எங்கு உள்ளார் என்பது ஏழு வருடங்கள் தெரியாத பட்சத்தில் மட்டும் டைவர்ஸ் ஆகாமல் வேறு ஒருவரை மணக்கலாம்இது Bigamy-க்கு ஒரு   exception. 

 பிகமிக்கு  "ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனை" என சட்டம் சொல்கிறது !! நிஜத்தில் பெண்கள் பலரும் கணவர்களுக்கு இத்தகைய தண்டனை வாங்கி தருவதில்லை !!

இந்தியாவில் திருமண சட்டங்கள் இந்துமுஸ்லீம்கிறித்துவர் ஆகியோருக்கு வெவ்வேறு என்பதறிக. முஸ்லீம் ஆண் நான்கு பெண்களை மணக்க சட்டம் அனுமதிக்கிறது!

அய்யாசாமி அப்டேட் 


அய்யாசாமி உப்புமா செய்ய கத்து கிட்டார்!! (கத்துக்கும் போது எத்தனை முறை திட்டு வாங்கினாருன்னு கேட்க கூடாது) ஒரு முறை வீட்டம்மா மேற்பார்வையிலும் மறுமுறை தனியாகவும் கடந்த பத்து நாளில்  2 முறை உப்புமா செஞ்சிட்டார்.. இது பத்தி ஐயா சாமிக்கு ரொம்ப பெருமை.. “எப்பவும் என்னை பத்தி பாவமாவே எழுதுரீயே இதை எழுது என்றார் பெருமை பொங்க.. எழுதிட்டேன் 

ஐ. பி.யல் கார்னர்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் நேற்று மோசமாக தோற்றனர். இன்னும் இருபது, முப்பது ரன் இருந்தால் ஜெயித்திருக்கலாம். HAYDEN-க்கு என்ன ஆச்சு? சுத்தமா     Out of form. (டில்லி உடன் ஒரு மேட்ச் மட்டுமே அடித்த நினைவு) 


பஞ்சாப் உடன் easy ஆக ஜெயிக்க வேண்டிய மேட்ச் தோற்றது still haunting Chennai. மீண்டும் அதே பஞ்சாபை நன்கு தோற்கடித்தால் மட்டுமே  Semi finals -ல் நுழைய முடியும்

கிட்டத்தட்ட கடைசி வாரம் வந்தும் இன்னும் செமி பைனல்ஸ் செல்லும் அணிகள் உறுதியாய் தெரியலை!! கடைசி வரை சுவாரஸ்யம்  & viewershipவேண்டும் என்பதால் மேட்ச் fixing இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது!!

 ஐ!! டியா  !!

ஒவ்வொருவரும் எத்தனை  Password-களுடன்  வாழ்கையை
 வாழ வேண்டியுள்ளது!! மெயில்களுக்கு னிவங்கி கணக்கிற்கு தனிஅலுவலகத்தில் வேறுஇதனை  தவிர OrkutFacebook , அடிக்கடி  செல்லும் இணைய தளங்கள் (உதாரணமா தமிழ் மணம்தமிழிஷ்).. இப்படி பல "Username" களும், "Password" களும்  வாரத்தில் சில முறையாவது  நினைவில் வைக்க வேண்டி உள்ளது. எப்படி தான இத்தனை விஷயங்க ளை  நினைவில் கொள்வதுமுழுக்க முழுக்க நமது ஞாபக சக்தி மட்டும் நம்பினால் கதைக்கு ஆகாது!! 

ஒரு  சின்ன ஐடியா: நீங்கள் உபயோகிக்கும் இந்த Username/ password   எல்லாம் ஒரு  எக்சல் (Excel) அல்லது வார்டு (Word ) பைலில் போட்டு வைத்து விடுங்கள்இந்த பைலுக்கு ரு பாஸ் வோர்டு வைத்து விடுங்கள். Password சந்தேகம் வரும் போது இதனை எடுத்து பார்க்கலாம். மற்றொரு  குட்டி  யோசனைஇந்த பைலில் கூட   எல்ல Password/ Username    அப்படியே போடணும் என இல்லை. சில நேரம் சில பாஸ்வோர்ட்களுக்கு, உங்களுக்கு மட்டும் புரிகிற மாதிரி  நிக் நேம் போல வைத்து கொண்டால் அதனை மட்டும் பைலில் போட்டு கொள்ளலாம்.  இப்படி செய்வதால் வெளி ஆட்கள் பார்க்க நேர்ந்தாலும் புரியாது.

வேறு யோசனை இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்களேன்!!  

Related Posts Plugin for WordPress, Blogger...