Tuesday, July 16, 2013

சென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி

சென்னையில் இருப்போரும் சரி புதிதாக வருவோரும் சரி வெறுக்கிற ஒரு விஷயம் ஆட்டோக்கள் அடிக்கும் பகல் கொள்ளை ! மீட்டர் போட்டு ஓட்டுகிற பழக்கமே கிடையாது ! மாறி மாறி அரசாங்கம் வந்தாலும் மீட்டர் விஷயத்தில் எந்த மாறுதலும் வராததற்கு காரணம் - ஏராள ஆட்டோக்கள் போலிஸ் அதிகாரிகளுடையது என்பது பொதுவாக நம்பப்படுகிற ஒரு விஷயம் !

இந்நிலையில் சென்னையில் அறிமுகமாகி உள்ளது நம்ம ஆட்டோ ! சரியான முறையில் இயங்கும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டு - மிக சரியான அளவு பணம் மட்டும் வாங்குகிறார்கள். ஒரு இடத்துக்கு செல்ல சென்னை ஆட்டோகாரர்கள் 100 ரூபாய் கேட்டால் - நம்ம ஆட்டோவில் 50 அல்லது அதிகபட்சம் 60 ரூபாய் தான் வரும் !

இந்த நம்ம ஆட்டோ பார்ப்பதற்கு வழக்கமான மஞ்சள் நிற ஆட்டோ போல தான் இருக்கும் ! ஆனால் ஆட்டோவின் மேற்புறம் "நம்ம ஆட்டோ" என எழுதப்பட்டிருக்கும்



அப்துல்லா மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இந்த சேவையை துவக்கி உள்ளனர் தற்சமயம் 60 ஆட்டோக்கள் ராமாபுரம், போரூர் போன்ற இடங்களில் இயங்கி வருகின்றன. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நல்ல மாத சம்பளம் தந்து - 3 வருடத்துக்கு பின் அந்த ஆட்டோ உங்களுக்கு தான் என்று இதனை நடத்தி வருகின்றனர்



இந்த சேவை பற்றி நம்ம ஜாக்கி சேகர் தளம் துவங்கி விகடன், தினகரன் என பல பத்திரிக்கைகளில் வெளி வந்திருந்தாலும், அவசியம் இது பற்றி இன்னும் பலருக்கு சென்று சேரவேண்டும் என்பதால் இந்த பதிவு

நம்ம ஆட்டோ நிறுவனர் திரு அப்துல்லா நமக்காக அளித்த பிரத்யேக பேட்டி இது :

நம்ம ஆட்டோ என்கிற இந்த ஐடியா தோன்ற என்ன காரணம் ?

சென்னையில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க கூடிய ஆதங்கம் சரியான மீட்டர் உடன் கூடிய ஆட்டோ இல்லையே என்பது. அப்படி பட்ட ஆட்டோ வேண்டும் என ஒவ்வொரு சென்னை வாசியும் ஏதோ ஒரு தருணத்தில் நினைத்திருப்பாங்க. நாங்க அதுக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளோம் அவ்வளவு தான்

நம்ம ஆட்டோ - வியாபார மாடல் பற்றி சொல்லுங்களேன்

பயணம் செய்ய ஆட்டோ நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; இதை தவிர ஆட்டோ ஓட்டுனருக்கு மாத சம்பளம் மற்றும் கமிஷன் தரப்படுகிறது. இப்போதைக்கு 66 ஆட்டோக்கள் - நம்ம ஆட்டோ திட்டத்தில் இயங்குகிறது.

66 ஆட்டோக்கள் நீங்களே முதலீடு செய்வதேன்றால் பெரிய விஷயமாச்சே ! நிறைய செலவு இல்லையா? 

கால் டாக்சி போல ஆட்டோ விலை மிக அதிகமில்லையே ! 2 லட்சக்கும் குறைவாய் தான் ஆட்டோ விலை வருது. 50 ஆட்டோ - ஒரு கோடி என்றால் அதை நான்கு நண்பர்கள் ஷேர் செய்து இன்வெஸ்ட் செய்துள்ளோம். அதனால் இது சாத்தியமாகிறது

பணமும் முதலீடு செய்து - சம்பளமும் தருகிறீர்கள். மீட்டரும் மிக சரியான அளவு உள்ளது; உங்களுக்கு எப்படி லாபம் வரும்?

இப்போதைக்கு நாங்கள் லாபம் பார்க்க முடியாது தான். 300 ஆட்டோக்களை தொட்டால் தான் எங்களுக்கு பிரேக் ஈவன் ஆகும். அதன் பின் தான் லாபம் வர துவங்கும். அது வரை நாங்கள் சற்று தியாகம் செய்து தான் ஆகணும்.

300 ஆட்டோக்கள் என்கிற அளவை கூடிய விரைவிலேயே எட்டுவோம் என நினைக்கிறேன்.

வால்யூம் வைத்து லாபம் பார்க்க கூடிய தொழில் இது. ஒரு ஆட்டோவில் கிடைக்கும் லாபம் மிக சிறிய அளவில் தான் இருக்கும் அதனை மொத்த ஆட்டோக்களோடு பெருக்கினால் அது கணிசமாக இருக்கும்.




நீங்கள் வேறு தொழில் ஏதும் செய்கிறீர்களா ? இது மட்டும் தானா ?

வேறு சில தொழில்களும் எனக்கு இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு முழு கவனமும் நம்ம ஆட்டோவில் தான் உள்ளது.

நம்ம ஆட்டோவிற்கு வரவேற்பு எப்படி உள்ளது? 

நாங்க எதிர்பார்த்ததை விட மிக மிக அதிக வரவேற்பு உள்ளது. உண்மையில் நம்ம ஆட்டோவிடம் சென்னை மக்களின் டிமாண்ட் மிக அதிகமாக உள்ளது; அதை பூர்த்தி செய்ய என்னென்ன செய்வது என்பதில் மட்டும் தான் இப்போதைக்கு எங்கள் சிந்தனை உள்ளது.

பத்திரிக்கைகள், மீடியாக்கள் என அனைவரும் எங்களை பற்றி எழுதுகிறார்கள். இதனால் நம்ம ஆட்டோ எல்லோருக்கும் மிக எளிதில் சென்று சேர்ந்து விட்டது.

முக நூலில் நம்ம ஆட்டோ வலை பக்கத்தில் " முதல் கம்பிலேயின்ட் " என்று ஒருவர் எழுதியிருந்தார் : எங்கள் ஏரியாவிற்கு நம்ம ஆட்டோ வேண்டும்; இதனை முதல் கம்பிலேயின்ட் ஆக எடுத்து கொள்ளுங்கள் என்று.

எங்கள் தொலை பேசி எண்ணையும் நீங்கள் செல்லும் "நம்ம ஆட்டோ" பற்றிய குறைகள் இருந்தால் தெரிவியுங்கள் என பகிர்ந்துள்ளோம். தினம் அதில் வரும் ஒரே கம்பிலேயின்ட் எங்கள் ஏரியாவிற்கு இன்னும் நம்ம ஆட்டோ வரவில்லை என்பது தான்.

ரீச் மிக அதிகமானதால் டிமாண்ட்டும் அதிகமாக உள்ளது; அதற்கு ஏற்ப சப்ளை செய்வது தான் இனி எங்கள் வேலை

சாலையில் நம்ம ஆட்டோவை பார்ப்பதே அரிது ; அதிலும் காலியாக பார்ப்பது இன்னும் அரிது. நீங்கள் ஏன் தொலை பேசியில் புக் செய்யும் வசதி கொண்டு வரவில்லை?

சென்னை என்பது மிக பெரிய ஏரியா. 3000 ஆட்டோக்கள் இருந்தால் தான் தொலைபேசியில் புக் செய்யும் வசதி கொண்டு வர முடியும். அப்படி இல்லாத போது - திருவான்மியூரில் இருந்து ஒருவரும் திருவொற்றியூரில் இருந்து ஒருவரும் ஆட்டோ கேட்டு போன் செய்தால் நாங்கள் எப்படி அனுப்ப முடியும்? உண்மையில் அப்போது தான் எங்கள் பேர் - ரிப்பேர் ஆகி விடும். எங்கிருந்து போன் வந்தாலும் ஏற்க கூடிய அளவில் ஆட்டோ எண்ணிக்கை ஒரு நாள் அதிகமாகும் அப்போது நிச்சயம் தொலை பேசி எண்ணில் அழைத்து புக் செய்யும் வசதி கொண்டு வருவோம்; அப்போது உங்களை போலவே எங்களுக்கும் சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் இருக்கும். இன்ஷா அல்லா

(" சரித்திரத்தில் ஒரு சிற்றிடம்" என்ற வார்த்தையை கேட்டதும் ஆச்சரியமாகி விட்டது. அப்துல்லா அவர்களுடன் முதன் முறை போனில் பேசுகிறேன். துவக்கத்தில் வீடுதிரும்பல் ப்ளாகில் பேட்டி என்றபோது கூட அவர் ஒன்றும் காட்டி கொள்ள வில்லை; "சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் என ஏன் சொன்னீர்கள்?" என கேட்டதும் நிதானமாக - "நானும் வீடுதிரும்பல் வாசித்துள்ளேன்" என்றார் )

Dinakaran news paper - 07-07-2013


துவக்கத்தில் உள்ள ரிஸ்க்கை நாங்கள் தான் ஏற்று கொள்ள வேண்டும்; இந்த கான்செப்ட் நன்றாக ரீச் ஆனால் பின்னர் மற்றவர்களும் எங்களுடன் கை கோர்க்கலாம் என நினைத்தோம். இப்போது நம்ம ஆட்டோ - மிக நன்றாக எல்லோர் மனதிலும் பதிய துவங்கியதால் இனி ஒத்த சிந்தனையுள்ள தனி நபர்களும் இதில் இணையலாம்

நம்ம ஆட்டோவிற்கு மற்ற ஆட்டோ காரர்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பு வருவதாக வாசித்தோமே?

நம்ம ஆட்டோ ஓட்டுவது யார் சார் ? சென்னையில் இதுவரை ஆட்டோ ஓட்டிய மனிதர்கள் தானே ? அவர்களின் சக தோழர்கள் தானே? அதனை அவர்கள் புரிந்து கொள்வார்கள் அந்த அளவு ஆட்டோ காரர்களிடம் எதிர்ப்பு இருக்கிறதோ அதே அளவு ஆதரவும் அவர்களிடமிருந்து இருக்கு.

எங்களை பொறுத்தவரை, அவர்களுடன் ஒத்திசைவு அணுகு முறையை தான் பின்பற்றுவோம் முரண்பாட்டு அணுகுமுறையை அல்ல



ஆட்டோக்கள் எண்ணிக்கையை அதிகபடுத்த வேறு என்ன திட்டம் வச்சிருக்கீங்க ?

இப்போதைய முக்கிய தேவை ஆட்டோக்கள் எண்ணிக்கையை அதிகபடுத்துவது தான். முன்பே சொன்ன மாதிரி டிமாண்ட் மிக அதிகமாக இருக்கு

ஒரு புது ஆட்டோவின் விலை 1,90,000. இந்த 1,90,000 முதலீடு செய்ய தயாராய் உள்ளவர்கள் - தங்கள் பெயரில் ஆட்டோ எடுத்து - அதனை நம்ம ஆட்டோவிற்கு வாடகைக்கு விடலாம். நம்ம ஆட்டோ இதற்கான வாடகையாக தினம் ரூ. 180 ரூபாய் அவர்கள் வங்கி கணக்கில் போட்டு விடுவோம் மாதம் ரூ. 5, 400 வருமானம் அவர்களுக்கு நிச்சயமாக வரும். அதுவும் தினம் 180 ரூபாய் அவர்களுக்கு டிரான்ஸ்பர் ஆகிடும்.

ஏற்கனவே ஆட்டோ வைத்திருப்போரை - நம்ம ஆட்டோ திட்டத்தின் கீழ் கொண்டு வர சில முயற்சிகள் செய்து வருகிறோம்

இதுவரை ஆட்டோ மீட்டரை ஒரு காட்சி பொருள் மாதிரி பார்த்து வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்; சென்னை மக்கள் இதை முழு மனதோடு வரவேற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

சிலர் சேவையையே தொழிலாய் செய்வார்கள். நாங்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலை ஒரு சேவை போல் செய்து வருகிறோம்.

எங்களின் பேச்சு முடியும் முன் அவரிடம் சொன்னேன் : " இந்த பேட்டி , அது ப்ளாகில் வருவது எல்லாம் பெரிய விஷயமில்லை; ஒரு சென்னை வாசியாக எனது விருப்பமெல்லாம் - இந்த நல்ல திட்டம் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படாமல் தொடர வேண்டும் என்பது தான். நிச்சயம் இந்த திட்டம் இன்னும் விரிவாகி நிறைய பேரை சென்றடையணும் " என்று சொல்ல

" இதை விட நாங்க என்ன சார் சம்பாதிக்கணும்? உங்களை மாதிரி சகோதரர்கள் பலரின் எண்ணம், சப்போர்ட் நிச்சயம் இந்த திட்டத்தை எங்களை தொடர்ந்து நடத்த வைக்கும் " என்று முடித்தார்

"அதீத ஆட்டோ கட்டணம்" என்கிற சமூக சீர்கேட்டினை களைய - முதல் சில அடிகள் எடுத்து வைத்துள்ளனர் இந்த குழுவினர்.

நம்ம ஆட்டோவை பற்றிய தகவலை பலருக்கும் சேர்ப்பதும், இத்திட்டத்தை ஆதரிப்பதும் சென்னை வாசிகளான நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சமூக கடமை என்றே தோன்றுகிறது !
*****
நம்ம ஆட்டோ வெப் சைட் : http://nammaauto.com/new/
மெயில் ஐ டி - contact@nammaauto.com
தொடர்பு எண் - 044 65554040

28 comments:

  1. நல்ல பேட்டி மோகன். பொதுவாகவே சென்னையில் ஆட்டோ என்றாலே ஒரு வித கலக்கம் தான். அதீத கட்டணம், அவர்கள் பேச்சில் இருக்கும் அடாவடி என மொத்தமாய் பிடிப்பதில்லை......

    தில்லியுடன் தொடர்பு படுத்தும்போது சென்னையில் பல மடங்கு கட்டணம்... மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எனது அலுவலகத்திற்கு இப்பவும் 25 ரூபாயில் ஆட்டோவில் செல்ல முடிகிறது. சென்னையில் நிச்சயம் முடியாது! சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செண்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் செல்ல கூசாமல் 100 ரூபாய் கேட்கும் ஆட்டோ ஓட்டுனர்களைப் பார்த்திருக்கிறேன்.....

    நம்ம ஆட்டோ - வெற்றிகரமாக இயங்க எனது வாழ்த்துகளும்.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. அப்படியே இவுங்க பாண்டிச்சேரிக்கு எப்ப வருவாங்கன்னு கேட்டுருக்கலாமே சார்?

    ReplyDelete
  3. Good move. Hope they grow well by god's grace.

    ReplyDelete
  4. நல்லதொரு விசயம் பகிர்ந்துக்கிட்டீங்க. ஏற்கனவே படிச்சிட்டேன். நம்ம ஆட்டோ மேன்மேலும்ம் வளர வாழ்த்துகள். சென்னை வாசிகள் இந்த விசயத்துக்கு ஆதரவை தந்து அவங்களை ஊக்குவிக்கனும். நான் சென்னை வரும்போது வாய்ப்பு கிடைப்பின் பயன்படுத்திக்கிறேன்.

    ReplyDelete
  5. நம்ம ஆட்டோ தொடர்பு எண் என்ன?

    ReplyDelete
    Replies
    1. தொடர்பு எண் - 044 65554040

      பதிவிலும் இப்போது வெப் சைட் முகவரி மற்றும் தொட்ர்பு கொள்ள வேண்டிய மெயில் மற்றும் தொலை பேசி எண் சேர்த்துவிட்டேன்

      Delete
  6. சென்னையில் அவசரத் தேவைக்கு, ஏழை எளிய மக்கள் பயன்படுத்துவது 'ஆட்டோ' மட்டுமே. ஆனால், நடுத்தர மக்கள் பயன்படுத்தும் 'கால் டாக்சி' யை விட, ஆட்டோ கட்டணம் அதிகமாக இருப்பதுதான் வேதனையாக உள்ளது. உதாரணத்திற்கு, ஆறு கிலோ மீட்டர் பயணம் செய்ய கால் டாக்சிக்கு 120 ரூபாயும், ஆட்டோவிற்கு 150 ரூபாயும் செலவாகிறது. முதலீடு, எரிபொருள், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் பராமரிப்பு என்று எந்த வகையில் பார்த்தாலும், கால் டாக்சிக்கு செய்யும் செலவில் ஆட்டோவிற்கு பாதி கூட வராது. ஆனால், ஆட்டோ ஓட்டுனர்கள் அடாவடியாக கால் டாக்சியைவிட அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள்.

    மற்ற ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களது ஆட்டோக்களை மீட்டர் போட்டு ஒட்டினால், ஆட்டோக்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அதனால், அந்தத் தொழில் வளரவே செய்யும். இந்த அடிப்படையைப் புரிந்துக் கொண்டு ஆட்டோ ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் நவீன எலெக்ட்ரானிக் மீட்டர் பொறுத்த முன் வரவேண்டும். அரசும், இதனைக் கட்டாயப்படுத்துவதோடு, எரிபொருள் மற்றும் விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப சீரனான இடைவெளியில் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

    மேலும், ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் 'அம்மா உணவகம்' மற்றும்,'பண்ணை பசுமை காய்கறி கடை' திறந்து தீர்வு கண்டது போல் 'அம்மா ஆட்டோ' வையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தி, இப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

    ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் ஜி.பி.எஸ். போன்ற நவீன தொழில் நுட்பத்துடன், நியாயமணா கட்டணம் வசூலிக்கும் 'நம்ம ஆட்டோ' திட்டம் நிச்சயம் சென்னையின் கெளரவம் தான். அதனை வரவேற்று, ஆதரவு அளிக்க வேண்டியது நமது சமூக கடமையாகும்.

    நல்ல முயற்சியை மேற்கொண்ட திரு திரு அப்துல்லா மற்றும் அவரது நண்பர்களோடு நாமும் இணைந்து சென்னைக்கு கௌரவம் சேர்ப்போம். பிரத்தியோக பேட்டியை வெளியிட்டமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  7. Good interview.

    நேற்று என்னிடம் ஒரு ஆட்டோகாரர் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் செல்ல 50 ரூபாய் கேட்டார்(MEPZ அருகே). வீட்டம்மாவுக்கு வந்ததே கோபம்!!!

    அப்புறம் என்ன, நடராஜா சர்வீஸ்தான்.

    ReplyDelete
  8. ம்ம்.. அரசாங்க செய்ய வேண்டிய வேலையை - மீட்டர்படி ஓட்ட வைப்பதை - தனிமனிதர்(கள்) செய்ய வேண்டிருக்கு. எத்தனையோ அப்படித்தானே, அதோடு இதுவும் ஒண்ணு.

    ReplyDelete
  9. நண்பர் அப்துல்லாவிடம் தோன்றிய ஓர் புதிய சிந்தனை இன்று சென்னை ஆட்டோ டிரைவர்களைக் கலக்கிக் கொண்டிருக்கின்றது. ஷேர் ஆட்டோக்கள் ஒருபுறம் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறன. எல்லோ ஆட்டோ டிரைவர்களும் ஏதோ ஓர் தொழிற் சங்கத்தில் உறுப்பினராகவே உள்ளனர். ஆனால்அத்தனை தொழிற்சங்கங்கங்களும் அவ்வப்போது தாங்கள் இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்களே தவிர பிரச்சினையை முழுமையாகத் தீர்த்து வைத்துவிடவில்லை. கடன் கொடுக்க வங்கிகள் இருக்கின்றன. ஆங்காங்கே தொழிற்சங்கங்கள் அமைப்பதை விட கூட்டுறவு சங்கங்களை அமைத்துக் கொள்ளலாம். அப்துல்லா போன்றோர் வழிகாட்டலாம். தலைமை ஏற்கலாம். வாங்கும் கடனை வங்கிக்கு ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்தால் சில ஆண்டுகளில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கே உரிமையாகிவிடும். ஆட்டோ ஓட்டுநர்களுக்குத் தங்கள் உழைப்பின் அருமை தெரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இன்று ஷேர் ஆட்டோவில் செல்லும் பொழுதுதான் நம்ம ஆட்டோ பற்றித் தெரிய வந்தது. வீட்டிற்கு வந்து கணினியில் தேடிய போது தங்கள் வலைப்பூ கிடைத்தது. மேலும் பலருக்குச் சென்று சேரட்டும் என்று அப்படியே மீள் பதிவு செய்துவிட்டேன், தங்கள் வலைப்பூ முகவரியுடன், நன்றி.

    ReplyDelete
  10. நல்ல பேட்டி. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  11. மிகவும் சந்தோஷமான செய்தி இது, மோகன்.

    எங்களைப் போன்றவர்கள் இரண்டு நாட்களில் சென்னை போய்விட்டு வரும்போது நேரம் மிகவும் முக்கியமாகிறது. அதற்கும் எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று ஆட்டோ கூப்பிட்டால், அவர்கள் வாடகையாக ஆட்டோவின் விலையைக் கேட்கிறார்கள்!
    பெங்களூரிலிருந்து சென்னைக்கு நாங்கள் இருவரும் முன்னூறு ரூபாயில் வந்துவிடுவோம். சோளிங்கநல்லூருக்கு ஆட்டோவில் போக 800 ரூபாய் கேட்கிறார்கள்.

    ஆனால் சென்னையில் என்ன ஒரு வசதி என்றால் பேருந்துகள் மிகவும் மலிவு. போன தடவை சாதாரண பேருந்தில் 14 ரூபாயில் (ஒருவருக்கு) சோளிங்கநல்லூர் போய்சேர்ந்து விட்டோம். அதனால் ஆட்டோவை எதிர்பார்ப்பது இல்லை.

    நம்ம ஆட்டோ வந்ததால் சென்னை ஆட்டோகாரர்களின் இமேஜ் மாறும் என்று நம்புகிறேன். நம்ம ஆட்டோவின் இணைய தளம், தொலைபேசி எண் கொடுத்திருப்பது ரொம்பவும் பயன்படும்.

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  12. ஆடோ காரர்கள் அடாவடி செய்கிரார்கள் எனபதில் எந்த வித கருத்து மாறுபாடும் இருக்க வாய்ப்பில்லை.

    நடுத்தர மக்கள் அதிலும் வயதானவர்கள் கையில் இரண்டு பைகள் வைத்திருந்தாலே அவர்கள் கொடுமைப் படுத்தபடுகிரார்கள் .

    ஒவ்வொரு நூறு அடிக்கும் ஆடோ ஸ்டாண்ட் என்று வைத்துகொண்டு, வேறு எந்த ஆட்டோவிலும் ஏற முடியாது , பக்கத்தில் வரும் ஸ்டாண்டில் இல்லாத ஆட்டோ காரர்களை தள்ளி விடுவதும் பழக்கமாகிவிட்டது.

    வளசரவாக்கம் லாமேக் பள்ளியில் இருந்து விருகம்பாக்கம் வெம்புலி அம்மன் கோவில் அரை கி.மிக்கும் குறைவு. ரூபாய் 40 முதல் 50 வரை குறைந்த பட்சம் கேட்கிறார்கள்.

    நம்ம ஆடோ போன்ற அமைப்புகள் வந்தால் தான் என்னை மாதிரி இருக்கும் கிழம் கட்டைகள்விலை வாசி ஏற்றத்தின் நடுவிலே பென்சனுக்குள் வாழ்க்கையை நடத்த சிரமப்படும் நபர்கள் இவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  13. i am posting this in my face book...!!!

    ReplyDelete
  14. நல்ல முன்னுதாரணம். வளர்க அவர்கள் பணி.

    ReplyDelete
  15. உண்மையான சேவை. வாழ்க , வளர்க.

    ReplyDelete
  16. சலாம் மோகன்குமார் அண்ணன்,

    ஆச்சர்யமா இருக்கு..ஹுசைனம்மா கூறியது போன்று அரசாங்கம் செய்ய வேண்டிய சேவையை தனி நபர்கள் செய்யும்போது அதனை ஆச்சர்யமாக பார்க்கும் நிலைக்கு தான் நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். அப்துல்லா குழுவினரின் மகத்தான சேவைக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்..

    நல்லதொரு பேட்டி மற்றும் பதிவை தந்ததற்கு உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  17. அன்பின் மோகன் குமார் - நல்லதொரு பேட்டி - நல்லதொரு செயலைப் பற்றிய பல தகவல்கள் - சென்னை வாழ் ஆட்டோ வாசிகளூக்கு ஒரு வரப் பிரசாதம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி !

    ReplyDelete
  19. சென்னை வாசிகளுக்கு பயன்படக்கூடிய உபயோகமான பதிவு . நன்றி

    ReplyDelete
  20. நல்ல சேவை.



    ReplyDelete
  21. மிகவும் மகிழ்ச்சிக்குரிய பதிவு சகோ.

    நல்லது செய்தாலும் அதிலும் மிகவும் அதிகமாக செய்கிறார்களோ என்று தோன்றுகிறது...ஏன் என்றால் மாத சம்பளம் 18000 ரூபாயும் கொடுத்து கமிசனும் கொடுக்கும் போது ஏன் மூன்று வருடம் கழித்து ஓட்டுநருக்கே சொந்தமாக்க வேண்டும்..இப்போதைக்கு இதில் லாபமும் இல்லை... 66 ஆட்டோ ஓடுகிறது..300 ஆட்டோ ஓடினால்தான் லாபம் எடுக்க முடியும் ..லாபம் எடுத்தால்தான் இதை இன்னும் சிறப்பாக எடுத்து செய்ய இயலும்..மூன்று வருடம் கழித்து ஆட்டோ அடுத்தவருக்கு சொந்தமாகிவிட்டால் இவர்களின் கட்டுபாட்டில் இருக்க முடியுமா..? ஆட்டோ எண்ணிக்கை குறைந்து விடாதா ? பின் எப்படி இவர்களால் இன்னும் சிறப்பாக செய்ய இயலும்..? மூன்று வருடம் கழித்து ஒரு நல்ல ஆட்டோ ஓட்டுனரை உருவாக்குகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...ஆனால் தலைமையின் பலம் ? இந்த ஒன்றுதான் எந்த மாதிரியான மேனஜ்மென்ட் உத்தி என்பது விளங்க வில்லை..!

    சரி ... இப்போதைக்கு சென்னையில் எந்த எந்த இடங்களில் எல்லாம் இந்த ஆட்டோ ஓடுகிறது...? நாமும் ஒரு ஆட்டோ வாங்கி கொடுக்கலாம் என்று நினைக்க வைத்து விட்டார்கள் .....!! வெற்றியும் அடைத்து விட்டார்கள் ...வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  22. அருமையான தகவல்.
    நல்ல சேவை.

    ReplyDelete
  23. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்... நல்ல மக்கள்... ரிஸ்க் எடுத்து ரோட்டில் பாய்ந்து லைட் எரிகிறது, ஆப் செய்யுங்கள் என்று வழிய வந்து உதவ கூடியவர்கள்.. இப்படிப்பட்ட தமிழர்களுக்கு ஆட்டோ காரர்களின் அடாவடியால் சின்ன அவப்பெயர்.. இடெகு காரணம் என்னவென்றால் ஆட்டோ காரர் சம்பரிததை வீடிற்கு எடுத்துச் செல்ல முன்.... வட்டி கடை; போலீஸ் மாமுல், தொழில் சங்கம் என்று தேவை இல்லாமல் அநியாயமாக பலருக்கு கப்பம் கட்ட வேண்டி உள்ளது.. ஆயினும் பல நேர்மையான ஆட்டோ டிரைவர்கள்யும் பார்க்க முடிகிறது.

    ReplyDelete
  24. வழமையாக திரு மோகன் குமாரின் அருமையான, பயனுள்ள பதிவு.
    "நம்ம ஆட்டோ" பற்றியது. எல்லா ஊருக்கும் இதே மாதிரி அமைப்பு வரவேண்டும். நிறைய உபயோகம் கூடும்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார்.

    ReplyDelete
  25. .
    மக்களுக்குப் பயன்தரும் நல்ல திட்டம்...

    வெற்றியடைய வாழ்த்துவோம்...!

    .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...