Thursday, March 31, 2016

ஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்

கேரளாவில் - படகு வீட்டில் பயணிக்கணும் என்று ஒரு சில ஆண்டுகளாகவே யோசித்தும், பேசியும் வந்தோம். சென்ற வருடம் "குளு,மணாலி " தேர்வு செய்த அதே நபர் தான் - இம்முறை கேரள படகு வீட்டுக்கு தான் போகணும் என முடிவு செய்ததும் ! அது - எனது பெண் !

முதலில் சென்னையில் உள்ள கேரள டூரிசம் அலுவலகத்தில் பேசிவிட்டு ரயில் டிக்கெட் புக் செய்தேன். நண்பன் மணியிடம் சொன்னபின் " நானும் வருகிறேன் " என்றதோடு, அவரது நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து இணைந்தனர்படகு வீட்டுக்கு இப்படி நண்பர்கள் குடும்பங்களோடு சேர்ந்து செல்வது தான் - பசங்க விளையாட ஜாலி என்பதோடு - செலவாகும் பணமும் கூட அப்போது தான் கணிசமாக குறையும் !

ஆலப்புழா மற்றும் குமரக்கோம் - இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிக புகழ் பெற்றது. இரு இடங்களில் இருந்தும் இரவு நேர படகு சவாரி உண்டு எனினும்- ஆலப்புழா தான் இப்படி ஒரு முழு நாள் சவாரி செல்ல சிறந்தது -

ஆலப்புழாவில் 2000க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. இதனால் சவாரிக்கான செலவு கணிசமாக குறைவு; குமரக்கோமில் 50க்கும் குறைவான படகுகள் தான் உள்ளன. வெளிநாட்டவர் மற்றும் அதிகம் விபரம் தெரியாதோர் தான் அங்கிருந்து இரவு நேர படகு சவாரி செய்கின்றனர். மேலும் ஆலப்புழா படகு சவாரியில் நீங்கள் - நடுவில் காணும் தண்ணீரை தவிர - இரு புற கரைகளிலும் வீடுகள் மற்றும் மனிதர்களை காணலாம்; குமரக்கோமில் மிக அதிகம் நீரை மட்டுமே காண முடியும் ! கரைகளில் வீடுகள் குறைவு

சென்னையிலிருந்து தினம் இரவு 8.45 க்கு ஆலப்புழாவிற்கு நேராக ஒரு ரயில் கிளம்புகிறது. அது காலை 10.45 அளவில் சென்று சேர்கிறது. ஆழப்புழாவில் இறங்கியபோது படகு இல்ல பயணத்தை ஆர்கனைஸ் செய்த நிறுவன நபர் நம்மை ரீசிவ் செய்ய வந்திருந்தார்.

அன்றைய நாள் முழுதும் படகில் தான் இருக்க போகிறோம் - என்பதால் அன்று வேன் தேவையில்லை என சொல்லி விட்டோம் (அன்றைக்கும் வேன் தேவையெனில் 1600 ரூபாய் சொல்லியிருந்தனர் ; ரயில் நிலையத்தில் இருந்து 2 ஆட்டோக்களில் - படகு துறையை அடைந்தோம் ஒரு ஆட்டோவிற்கு - ரூ. 100 மட்டுமே ஆனது; இதனால் சேவிங்க்ஸ் 1400 ரூபாய் )

படகு துறை அடைந்ததும் நாம் வந்து விட்ட தகவல் போனில் சொல்லி விட்டால், சற்று நேரத்தில் , கரைக்கு நமது படகு வந்து சேர்கிறது. அடுத்துடுத்து படகுகள் நிற்பதால் சில நேரம் மூன்றாவது படகாக நமது படகு நிற்க - நடுவில் இருக்கும் இரண்டு படகு உள்ளே ஏறி நமது படகை அடைய வேண்டியிருக்கும்.

படகு துறையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. மேலும் படகு வீடும் சுற்றி பார்க்கலாம்


படகில் ஏறியதும் நமது செருப்ப்களை கழட்டி கையில் எடுத்து கொள்ள சொல்கிறார்கள் ! (வீட்டுக்குள் - செருப்புடன் நடக்க மாட்டோம் அல்லவா? அப்படித்தான் !மேலும் அப்போது தான் சுத்தம் செய்த படகை - அழுக்காக்க அவர்கள் மனம் ஒப்புவதில்லை ). நமது லக்கேஜ்கள் அவர்கள் சுமந்து வர நாம் செருப்பு மட்டும் எடுத்தவாறு - படகின் உள்ளே வந்து சேருவோம்

காலை உணவை ரயிலில் முடித்து விட்டு படகை அடைந்து தான் அன்றைய தினத்தின் குளியலே - உடன் மதிய சாப்பாடு .

குளியல் - சாப்பாடு எல்லாம் முடித்து மதிய நேரம் - படகு மெதுவாக பயணக்கிறது அப்போது படகை ஓட்டிய டிரைவர் பகிர்ந்த சில தகவல்கள்: (அவரிடம் இதை தவிர - தனி பேட்டி இல்லை; பயம் வேண்டாம்)

* ஒரு படுக்கை அறை துவங்கி - ஆறு படுக்கை அறை வரை பல வித படகுககள் உண்டு. உங்களுடன் பயணிக்கும் நண்பர்கள் / உறவினர்கள் பொறுத்து எத்தனை படுக்கை அறை உள்ள படகு தேவை என முடிவு செய்யலாம்

* நாங்கள் சென்ற 4 படுக்கை அறை கொண்ட படகின் விலை ஒரு கோடி ரூபாய்; இது 5 வருடத்துக்கு முந்தைய விலை என்றும், இப்போது இன்னும் கூட அதிகமாய் இருக்கலாம் என்றும் சொன்னார். படகு உள்புறம் முழுதுமே மரத்தால் இழைத்து இழைத்து கட்டியுள்ளனர்; 1800 Sq feet - முழுதும் வுட்டன் தரை தளம்; படுக்கை அறை ; ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போல ஷவர்; ஏ சி - என லக்சரியாய் இருப்பதால் இவ்வளவு காஸ்ட்லி ஆகி றது

* ஒரே படுக்கை அறை கொண்ட படகு 20 லட்சம் போலிருக்க கூடும். (2 அல்லது 3 படுக்கை அறை - வரை - படகில் ஒரு தளம் தான் இருக்கும் ; நான்குக்கு மேல் எனில் - 2 தளம்- கீழே படுக்கை அறை ; மேலே சாப்பாட்டு அறை )

* ஆலப்புழாவில் முக்கிய தொழிலே இந்த படகு - தான் ; அதற்கடுத்து கயிறு தயாரிக்கும் தொழில்.

* படகில் குறைந்தது 3 பேர் பயணிப்பார்கள். சமைக்க, படகு ஓட்ட, உங்கள் அறையில் ஏ. சி ஓடலை ; தண்ணீர் வரலை என்றால் சரி பார்க்க - என அத்தனை வேலைகளும் அனைவருக்கும் தெரியும் (முதல் நாள் முழுக்க படகு ஓட்டிய நபர் இரவு தன் வீட்டுக்கு கிளம்பி விட்டார்; மறு நாள் படகு ஓட்டியது - சமையல் வேலை செய்தவர் தான்)
**********


வேம்பு நாடு என்ற சொல்லப்படும் இந்த ஏரியின் இரு கரையிலும் - சில நிமிடங்களுக்கு ஒரு முறை - ஆங்காங்கு வீடுகள் தென்படுகின்றன. மிக அரிதாக அடுத்துடுத்து வீடுகள் உள்ளன.

பயணத்தின் ஒரு சிறு பகுதி இந்த வீடியோவில்


இந்த வீடுகளில் இருப்போருக்கென - தனியே பள்ளி- சர்ச் ஒன்று என ஒவ்வொன்றையும் ஆங்காங்கு பார்க்க வேடிக்கையாக உள்ளது (பள்ளியாகட்டும், சர்ச் ஆகட்டும் அருகில் வேறு பில்டிங் அநேகமாய் கிடையாது !)

விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவை தேடி - சிம்பு செல்வாரே - அதே ஊர் தான் இது !

மக்கள் சென்று வர ஆங்காங்கு அரசு படகுகள் இயங்குகின்றன. கண்டக்டர் போல் ஒருவர் இருந்து கொண்டு டிக்கட் தருவதை காண முடிகிறது

தவிர சில மக்கள் தங்கள் வீடுகள் வெளியே தாங்கள் சென்ற வர படகும் வைத்துள்ளனர்
***நடுவில் ஓரிரு இடத்தில் மீன் போன்றவை ஷாப்பிங் செய்ய நிறுத்துகிறார்கள். ஆறு மணியளவில் படகு நிறுத்தப்பட்டு விடுகிறது.

சுற்றிலும் வயல்வெளி இருக்க அங்கு பயன்படுத்தும் ஈ.பி கனக்ஷனில் இருந்து நமது படகுகளுக்கு - மின்சார இணைப்பு தருகிறார்கள். கூடவே கேபிள் கனக்ஷனும் ! (அதுவரை படகில் இருக்கும் ஜெனரேட்டரில் நமக்கு மின்சாரம் தரப்படும் )


மாலை நேரம் கிராமத்தில் இறங்கி சற்று சுற்றி வந்தோம். இரவு மிக அருமையான, மறக்க முடியாத சாப்பாடு ... அது பற்றியும், ஆலப்புழா செல்ல எப்படி புக் செய்வது, எவ்வளவு செலவாகும் நம்பிக்கைக்குரிய படகு ஹவுஸ் விபரங்கள் போன்றவை அடுத்த பகுதியில் வெளியாகும் !

Tuesday, March 29, 2016

கோலி Vs சச்சின்

கோலி VS  சச்சின் பற்றி பேசுவதற்கு முன் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த (விர்ச்சுவல்) குவார்ட்டர் பைனல் பற்றி பார்த்து விடுவோம்...

placeholder

அதிரடியாய் துவங்கினர் ஆஸ்திரேலிய ஓப்பனர்கள்..  எப்போதும் சிறப்பாக பந்து வீசி வந்த பும்ரா மற்றும் அஷ்வினை துவைத்து எடுத்தனர்..

இறுதி ஓவர்களில் அட்டகாச யார்க்கர்கள் போடும் பும்ரா ஏன் துவக்க ஓவர்களில் அதற்கு முயற்சிப்பதே இல்லை என புரிய வில்லை ! லென்க்த்தில் விழும் பந்துகளை அடுத்தடுத்து நான்கிற்கு விரட்டினர்.

அஷ்வின் பவுலிங் அன்று கொடுமை !! பல பந்துகள் லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசினார்; ஏகப்பட்ட ஓய்டுகள்... அந்த லைனே விக்கெட் எடுக்க வாய்ப்பில்லாத நெகடிவ் லைன்; இந்தியாவின் மிக பெரும் ஸ்ட்ரைக் பவுலர் - தொடர்ந்து இப்படி லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசுவது என்ன விதமான strategy யோ ? நல்ல வேளை அன்று 2 ஓவர்களுடன் அவர் கதையை தோனி முடித்து கொண்டார்..

துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசியது நெக்ரா தான்.. அதிலும் ஆப் ஸ்டம்பில் விழுந்து வெளியே செல்லும் பந்துகளை பேட்ஸ் மேன் அடிப்பது மிக சிரமம். அடித்தால் கேட்ச் ஆகும் வாய்ப்புகள் அதிகம். நன்கு விளையாடி கொண்டிருந்த க்வாஜா - இப்படி ஒரு பந்தில் தான் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மிடில் ஓவர்களில் - யுவராஜ், பாண்டியா போன்றோர் நன்கு வீசி - ரன் ரேட் உயராமல் பார்த்து கொண்டனர். 160 என்பது பெரிய ஸ்கோர் அல்ல.. கோலி தவிர சுத்தமாய் பார்மில் இல்லாத இந்திய பேட்டிங்கை நினைத்தால் தான் வயிற்றை கலக்கியது

துவக்க ஆட்டக்காரர்கள் இருக்கும் பார்முக்கு 23 ரன்கள் வரை சேர்ந்து ஆடியதே பெருசு.. அப்புறம்  தவான், ரோஹித் இருவரும் நடையை கட்ட, சிறிது நேரத்தில் ரைனாவும் கிளம்பி விட்டார்.

40 ரன்னுக்கு மூணு விக்கெட்; யுவராஜ் மற்றும் கோலி ஓரளவு நிதானித்தாலும், யுவராஜிற்கு காலில் அடிபட்டு சரியாய் ஓடமுடியவில்லை; கோலியோ - 2 ரன் ஓட - யுவராஜ் வேண்டாம் எனும்போது கடுப்பாகி கொண்டிருந்தார்

நல்லவேளையாக யுவராஜ் அவுட் ஆகி தோனி உள்ளே வர, 2 ரன்கள் அடுத்தடுத்து ஓட ஆரம்பித்தனர். தோனி வரும்போதே ஓவருக்கு 12 ரன் எடுக்க வேண்டும் என்ற கடுமையான நிலை..

கடைசி 3 ஓவர்கள் - தேவை 39 ரன்கள்; இங்கிருந்து தான் கோலியின்   விஸ்வரூபம் துவங்கியது. பால்க்னர் போட்ட இந்த ஓவரின் முதல் 2 பந்துகள் பவுண்டரி; மூன்றாவது சிக்சர் .. இந்நிலையில் இந்தியா நிச்சயம் ஜெயிக்கும் என தோன்ற ஆரம்பித்து விட்டது. 18 பந்துகளில் 39 ரன் என்ற நிலை மாறி, 15 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலை; நிச்சயம் ஒவ்வொரு பந்திலும் ஒரு ரன் எடுப்பர்; ஒரு நான்கு மற்றும் ஒரு ஆறு அடித்தாலே போதும் ஜெயித்து விடலாம்...

அடுத்த ஓவரில் கோலி 4 பவுண்டரிகள்.. அற்புதமான ரிஸ்க் ப்ரீ ஆட்டம்... அது தான் மிக முக்கியமாய் கவனிக்க வேண்டியது !

placeholder

கோலி ஆடியதில் சற்றே ரிஸ்க்கி ஷாட் என்றால் அவர் அடித்த 2 ஆறுகள் மட்டும் தான். அவை தவிர மற்ற அனைத்துமே - கேப்பில் செல்லுமாறு பார்த்து பார்த்து அடித்த பவுண்டரிகள்.. தனது விக்கெட் எவ்வளவு முக்கியம் என்பதை கோலி மிக நன்றாக அறிந்திருந்தார்.. 20 ரன் இருக்கும் போது கோலி அவுட் ஆனாலும் மேட்ச் எப்படி வேண்டுமானாலும் மாறிப்போகும் என்பது உணர்ந்து - ஷாட்டுகள் அனைத்தும் தரையோடு -கேப்பில் மட்டுமே ஆடினார்..

அணியின் மொத்த ஸ்கோரில் பாதிக்கு மேல் அடித்தது - கோலி ; 82 ரன்னுக்கு பிறகு அடுத்த பெரிய ஸ்கோர் யுவராஜ் அடித்த 21 தான் !

placeholder

தவான், ரோஹித், ரைனா, யுவராஜ் என எல்லாருமே சரியான பார்மில் இல்லை; ஏன் இவர்களை மாற்றாமல் வாய்ப்பு தருகிறார்கள் என ஸ்குவாடை எடுத்து பார்த்தால் - மீதம் உள்ள 4 பேரில் - ரஹானே மட்டுமே பேட்ஸ் மேன் ! ஹர்பஜன், ஷமி,  பவன் நேகி மூவருமே பந்து வீச்சாளர்கள்.. எப்படி இம்மாதிரி ஒரு ஸ்குவாட் எடுத்தார்கள் என இப்போது யோசிக்க வேண்டியிருக்கிறது.

நமது பேட்ஸ் மேன்கள் மீது அதிக நம்பிக்கை; பவுலர்கள் மீது நம்பிக்கை குறைவு; ஆனால் இம்முறை நடந்தது தலை கீழ்.. பவுலர்கள் மற்றும் கோலி புண்ணியத்தில் தான் இவ்வளவு தூரம் வந்துள்ளோம்

யுவராஜ் காயம் என்பதால் தற்போது மனிஷ் பாண்டே அணிக்கு வந்துள்ளார். அடுத்த மேட்ச் -யுவராஜுக்கு பதில் ரஹானே ஆட வாய்ப்புள்ளது ; ஆனால் பார்மில் இல்லாத தவான், ரோஹித், ரைனா இவர்களை என்ன செய்வது???

கோலி Vs சச்சின்க்கு வருவோம்..

கோலியின் இந்த ஆட்டம் 2 நாள் ஆகியும் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது; இந்த ஆட்டத்தை சச்சின் 18 வருடங்களுக்கு முன்  ஷார்ஜாவில் ஆடிய ஆட்டத்துடன் தான் ஒப்பிட வேண்டும்..

அந்த காலத்தில் இந்திய அணியின் பேட்டிங் முழுக்க முழுக்க சச்சினை நம்பியே இருந்தது; சச்சின் அடித்தால் இந்தியா ஜெயிக்கும்; அவர் அடிக்கா விட்டால் தோற்கும்; அவ்வளவு தான்.  நண்பர்கள் பலருக்கு சச்சின் இறுதி காலத்தில் அவர் செஞ்சுரி அடித்த நேரம் எல்லாம் இந்தியா தோற்றது நினைவிற்கு வரலாம்; அது வேறு காலம் :)

நான் சச்சினின் விசிறி தான்; கோலியை ரசித்தாலும் விசிறி என்ற அளவில் எண்ணியதில்லை; ஆனால் இந்த ஒரு மேட்ச் என்னையும்  கோலியின் ரசிகன் ஆக்கி விட்டது; இது போல லட்சக்கணக்கான புது இந்திய ரசிகர்கள் கோலிக்கு இந்த ஒரே ஒரு மேட்சின் மூலம் கிடைத்திருப்பர். 

மறுநாளே இருவர் ரிக்கார்டுகளையும் எடுத்து பார்க்க வைத்து விட்டது கோலி ஆடிய ஆட்டம்.

கோலி டெஸ்ட்டில் இதுவரை 11 செஞ்சுரி தான் அடித்துள்ளார்; சச்சினின் 51 செஞ்சுரிகளுடன் ஒப்பிடும் போது இது மிக குறைவு; சச்சினின் இந்த சாதனையை அவர் நெருங்குவது கடினம்..

கோலியின் சிறப்பு ஒரு நாள் மற்றும் 20-20 போட்டிகளில் தான் அதிகம் ஜொலிக்கும்; குறிப்பாக சேசிங்கில் இதுவரை உலகின் நம்பர் ஒன் என கருதப்பட்ட மைக்கல் பேவனை தாண்டி செல்லும் அளவு கோலி சிறப்பாக கருதப்படுவார்; சச்சினின்  CV - இந்த சேசிங் விஷயத்தில் படு வீக்; அவர் முதல் ஆட்டக்காரராக  ஆடினார்; அவரால் கடைசி வரை இருக்க முடியாது என தீவிர ரசிகர்கள் காரணம் கூறலாம்; கோலி கூட தான் ஒன் டவுனில் இறங்குகிறார்; அதிலும் பல நேரம் மிக சீக்கிரமாக முதல் 4-5 ஓவரிலேயே.. !! 20-20 ஆட்டம் மற்றும் சேசிங் - இவற்றில் கோலி நிச்சயம் சச்சினை பீட் செய்து விடுவார்..

ஒரு நாள் போட்டிகளில் சச்சினின் சாதனை மிக பெரிது; 49 செஞ்சுரி மற்றும் 18000 ரன்கள்.. நிச்சயம் ஒரு நாள் போட்டியில் கோலி சச்சினுக்கு இணையான ஒரு பேட்ஸ் மேன் தான்.. ஆனால் அவர் இந்த ரிக்கார்டை பீட் செய்வது இன்னும் 10-12 ஆண்டுகள் ஆடினால் தான் சாத்தியம்;  ரிக்கார்டுகளை விடுத்து பார்க்கும் போது ஒரு நாள் போட்டிகளில் சச்சின் மற்றும் கோலி இருவரும் இணையான அளவு திறமை கொண்ட வீரர்கள் என சொல்லலாம்..

இறுதியாக கிரிக்கெட் தவிர மற்ற விஷயங்கள்..  Humbleness பொது வெளியில் எப்படி  நடந்து கொள்கிறார் என்பன !  இங்கு தான் சச்சின் - மிக அதிகம் விரும்ப பட காரணம். இந்த விஷயத்தில் கோலி சச்சினை நெருங்கவே முடியாது; நெருங்க தேவையும் இல்லை; கோலி எப்போதும் ஒரு aggressive காரக்டர். தோனி அண்மையில் சொன்னது போல் அவர் அப்படி   aggressive ஆக இருப்பதே சிறப்பு.

சச்சினுடன் ஒப்பிடும் அளவில் நமக்கு ஒரு வீரர் கிடைத்துள்ளார்.. கோலி .. The Master Chaser ! Let us celebrate this moment !!

Saturday, March 26, 2016

அம்மா இல்லாத உலகம் ....

ம்மா எதிர்பார்த்த ஒன்று கிடைத்து விட்டது.. மிக அதிக காத்திருப்பு, வலி, வேதனைக்கு பிறகு.. அம்மா எதிர்பார்த்த மரணம் கிடைத்தே விட்டது..

கணவர்- பெரிய மகன் மற்றும் ஒரே மகள் - அம்மாவின் அருகிலிருக்க - மார்ச் 18 - எங்களை விட்டு பிரிந்தார்.

கடைசி பிள்ளையான நான்- அம்மாவின் 40 வயதில் பிறந்தேன். அதன் பின்னரே அம்மாவின் உடல்நிலை சின்ன சின்னதாய் பாதிக்கப்பட்டது.. எனது கல்லூரி காலத்தில் அம்மாவிற்கு முதன் முறையாய் ஹார்ட் பெயிலியர்.. அம்மா நம்மை விட்டு எப்போது வேண்டுமானாலும்   பிரிவார் என்ற பயம் வந்து விட்டது.. அம்மா மீதிருந்த பிரியத்தின் பெரும்பகுதி அக்கா மீது செலுத்த ஆரம்பித்தது இந்த பயத்தினால் தான்..கடந்த 10 வருடங்களில் அம்மாவிற்கு எத்தனையோ வித நோய்கள்.. உடல் நிலை காரணமாக கடைசி சில வருடங்கள் அம்மாவின் வாழ்க்கையில்  மிக வலி மிகுந்தது. .

75 வயது வரை  அனைத்து வீட்டு வேலையும் செய்து வந்தவர், பின் எந்த வேலையும் செய்ய முடியாத படி ஆனதே அவர் மனதை புண் படுத்தியிருக்க வேண்டும்.

கடந்த 5 வருடங்களில் நிலைமை பெரிதும் மோசமானது. இரு முறை டாக்டர்கள் "பிழைக்க  மாட்டார்;உறவினர்களுக்கு சொல்லி அனுப்புங்கள்" என கூறி, அதன் பின் இரு முறையும் உயிர் பிழைத்தார். மகன்கள்- மகள் மட்டுமல்ல, சம்பந்திகள் வரை வந்து காத்திருந்து - விழித்தெழுந்த அம்மாவிடம்  பேசிவிட்டு கிளம்பினர்..

2011-ல் அம்மா பற்றி எழுதிய கட்டுரை... இங்கே...

அம்மா மை டார்லிங்

கடந்த சில மாதங்களாய் மீண்டும் உடல்நிலை  மோசம் ....

ஒரே நல்ல விஷயம்.. இறுதி காலத்தில் ( கடைசி ஏழெட்டு வருடங்கள்) முழுக்க முழுக்க - மகனுடன் அவர் இருந்தது தான்.. பெரிய அண்ணன் மற்றும் அண்ணி அவர்களின் கடைசி காலத்தில் பார்த்து கொண்டு - பெரும் புண்ணியம் தேடி கொண்டனர் ..  

மேலும் அப்பா - ஒரு நர்ஸ் செய்யும் சேவையை விட அற்புதமாய் அம்மாவிற்கான அனைத்து பணிகளையும்  சிறிதும் முகம் சுழிக்காமல், சோர்வடையாமல் இரவு பகலாய் - பல வருடங்கள் செய்தார்.

எனது மகள்  + 2 தேர்வு நடக்கும்போதே அம்மா தவறினார்.. ஆனால் மிக சரியாக - அடுத்தடுத்த  தேர்வுகள் இடையே 10 நாள் இடைவெளி இருக்கும்போதே - அவர் மரணம் நிகழ்ந்தது.. ஆபிசுக்கு கூட விடுப்பு எடுக்க தேவையின்றி - ஒரு சனி, ஞாயிறில் அனைத்து கடமைகளும்- அனைவருக்கும் முடிந்தது..

16 ஆம் நாள் காரியமும் கூட ஒரு ஞாயிறில் தான் வருகிறது.. இது தான் அம்மா !! யாருக்கும் தன்னால் கெடுதல் வரக்கூடாது என்று நினைத்த அம்மாவின் எண்ணப்படி தான் அவர் மரணத்திற்கு பிறகான காரியங்களும் நடக்கின்றன..

அம்மா இறந்த அன்று.. திருநெல்வேலியில் ACS இன்ஸ்டிடியூட் விழா ஒன்றில் பேசிக் கொண்டிருந்தேன்.. விழா முடிந்து அறைக்கு வந்து கொண்டிருக்கும்போது அண்ணனின் அழைப்பு..

" நீ கிளம்பி வா"
" ஏன் .. அம்மாவுக்கு உடம்பு முடியலையா ?"
" அம்மா இஸ் நோ மோர்"

அடுத்த அரை மணி நேரம் என்ன செய்தேன் என்பது சற்று குழப்பமாய் தான் இருக்கிறது..

நல்லவேளையாக திருநெல்வேலியில் பள்ளிக்கால நண்பன் வேங்கடப்பன் - அடுத்த கொஞ்ச நேரத்தில் என்னை காண அறைக்கு வந்தான்..  கூடவே இருந்து வற்புறுத்தி சற்று சாப்பிட சொல்லி, ரயிலுக்கு கூட்டி சென்று ஏற்றி விட்டான்..

இரவு சுத்தமாய் உறங்க பிடிக்க வில்லை.. டிக்கெட் செக்கரிடம் கூறிவிட்டு பெர்த்தை விடுத்து,  அமர்கிற படி இடம் தேடி சென்றேன்.. எத்தனையோ நினைவுகள்......

அதிகாலை 3 மணி அளவில் அம்மாவை சென்று பார்த்தது முதல், உடலை  எடுக்கும் நேரம் வரை அழவே இல்லை; அக்காவும், மனைவியும் ஏன் அழாமல் இருக்கிறேன் என பல முறை கேட்டு விட்டனர்..

பல வருடங்களாக இப்படித்தான் இருக்கிறேன்.. மரணம் அநேகமாய் என்னை அழவைப்பதில்லை..

உண்மையில் மரணம் - இறக்கிற மனிதனுக்கு மிக பெரும் விடுதலை. ஒவ்வொரு மனிதனும் எத்தனையோ அவமானங்களையும், வலியையும், வேதனையையும் சகித்து கொண்டு தான் வாழ்கிறான்.. எனவே மரணம் - இறந்த நபரை பொறுத்த வரை எந்த பிரச்னையும் இல்லை; இறந்தவர் குறித்து நாம் வருந்த ஏதும் இல்லை.

இறந்தவரின் மறைவு - அவரை சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கு மிகப்பெரும் வலி.. இழப்பு. அதை அவர்கள் எப்படி தாங்குகிறார்கள்; எப்படி மீள்கிறார்கள் என்பது தான் முக்கிய விஷயம்..

ஜெயந்தனின் கவிதை வரி ஒன்று இப்படி துவங்கும் " எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" .. வாழ்க்கையின் நிலையாமை சொல்லும் இந்த வரி உள்ளுக்குள் ஆழமாக பதிந்து போனது..

" கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு; நடந்ததை மாற்ற அவராலும் முடியாது.. " இதுவும் கூட எங்கோ எப்போதோ கேட்ட, அதன் அர்த்தம் முழுமையாய் உள் வாங்கிய விஷயம்..

நெருங்கிய நண்பர்கள் சிலரை மரணத்திற்கு கொடுத்த போது கூட அழாமல் இருந்தததற்கு மனதில் ஊறிப்போன மேற்சொன்ன எண்ணங்களே காரணம்...

ம்மாவை கடந்த 10- 15 வருடங்களில் எப்போது பார்த்தாலும்   கட்டி பிடித்து முத்தம் தருவது என்னுடைய வழக்கம். இறந்த அம்மாவிற்கு அப்படி முத்தம் தரலாமா என்ற எண்ணம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கண்ணாடி பேழைக்குள் அம்மா இருந்தார். கடைசியில் வெளியே எடுக்கும் போது பெரும் கூட்டம்; அத்தனை பேர் முன் அம்மா கன்னத்தில் முத்தம் தர ஏனோ ஒரு கூச்சம்.. அம்மாவின் கை மற்றும் கன்னத்தை கொஞ்ச நேரம்தடவியபடி நின்றிருந்தேன்.. அம்மாவின் அதே மென்மை .. மனதை என்னவோ செய்தது..
எனது 44 வருட வாழ்வில் - எனது குடும்பத்தில் நான் கண்ட முதல் மரணம்.. (எனக்கு முன் 2 குழந்தைகள் பிறந்து இறந்துள்ளனர்.. அதனால் - அண்ணன்கள்- அக்காவிற்கு இந்த வலி ஓரளவேனும்  தெரிந்திருக்கலாம்) எனக்கு இந்த வலி புதிது.. 

நண்பர்கள் மரணம் வேறு.. ஆனால் குடும்பத்தினர் இறப்பு தரும் வலி அதை விட பல மடங்கு அதிகமாய் உள்ளது. 

அம்மாவை அடக்கம் செய்ய,  உடலை எடுத்து செல்லும் முன் லேசாக அழுகை எட்டி பார்த்தது; முழுமையாய் அழவில்லை.. 

இந்த ஒரு வாரத்தில் - மனதில் பாரம் அப்படியே இருக்கிறது.. 

வர வைத்து கொண்டாவது ஒரு பாட்டம் அழுதிருக்கலாம் என்று இப்போது  தோன்றுகிறது.. 

50 வயதை தாண்டிய எந்த பெண்ணை கண்டாலும் - அம்மாவின் நினைவை அவர் கிளறி போகிறார்.. வாகனம் ஓட்டும் போது சில நேரம் மனம் அம்மாவின் நினைவில் அழுகிறது..  

எங்கோ, எப்போதோ - எந்த மேடையிலோ அல்லது யார் முன்னோ - அம்மாவிற்காக அழுது தீர்க்க போகிறேன் என அடிக்கடி தோன்றுகிறது ...

உலகில் நாம் எத்தனையோ பேரை நேசிக்கலாம்; ஆனால் நம் மீது மிக, மிக அதிக அன்பு காட்டுவது அம்மா தான். குழந்தையில் துவங்கி நம் திருமணத்துக்கு பின்னும் நீடிக்கும் அம்மாவின் இந்த அன்பு......... நம்மை மிக அதிகம் நேசித்த அம்மாவின் பிரிவு.. உள்ளுக்குள் ஒரு வெறுமையை கொண்டு வருகிறது.. 

84 வயது வரை வாழ்ந்து விட்டு மறைந்திருக்கிறார்.. எல்லா கடமையும் முடித்து விட்டார். மிக அதிக உடல் உபாதைகள் பட்டு விட்டார்.. இருந்தும் மனம் அவரது இழப்பை ஏற்று கொள்ள மறுக்கிறது 

இன்னும் எவ்வளவு நாள் ஆகும் இந்த வலி சரியாக ? தெரிய வில்லை.. 

அம்மா பிறந்த நாள் எங்கள் யாருக்கும் தெரியாது; அம்மா- அப்பா திருமண நாள் கூடத்தான்..! அம்மாவை பொறுத்தவரை அவர்  காலமான  மார்ச் 18 மட்டுமே எங்களுக்கு - ஒரே முக்கிய நாளாகி போனது !

இறந்த ஆத்மா - 13 நாள் உலகில் சுற்றி விட்டு - பின் சொர்க்கம் அல்லது நரகம் செல்லும் என்கிறார்கள்.. அம்மா எதோ ஒரு விதத்தில் இந்த கட்டுரையையும் வாசிக்கலாம் என்பதால் அந்த 13 நாளுக்குள் இதை எழுதுகிறேன்..

"தன் மகன்  மனம் சோர்ந்திருப்பது அம்மாவிற்கு சிறிதும் பிடிக்காது; நான் மகிழ்ச்சியோடு இருப்பது தான் அம்மா வேண்டுவது " என அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன்..

சென்று வா அம்மா..

எங்கள் நினைவுகளில் தினமும் நீ வாழ்ந்திருப்பாய் !

Thursday, March 24, 2016

மூணு பந்து; 2 ரன்; 1 ரன்னில் வெற்றி.. இந்தியா வெற்றிக்கதை

ந்தியா Vs பங்களா தேஷ் மேட்ச் இவ்வளவு க்ளோஸ் ஆக இருக்கும் என யாரும் நினைக்க வில்லை.

அண்மையில் நடந்த ஆசிய கோப்பையில் 2 முறை பங்களா தேஷை நையப் புடைத்தோம். அதன்பின் 2 முக்கிய வீரர்கள் தடை  செய்யப்பட அவர்கள் அணி இன்னும் பலவீனமானது..

இந்நிலையில் இந்தியாவிற்கு ஜெயிக்க வேண்டிய இந்த லீக் மேட்ச்.

இந்தியா - இந்த மேட்சை ரன் ரேட் அதிக படுத்திக்கொள்ள பயன்படுத்தும் என்பதே பலர் எதிர்பார்ப்பாய் இருந்தது. கடைசியில் ஜெயித்ததே நம்ப முடியாத miracle  ஆனது !

இந்தியா பேட்டிங்

ஷீக்கர் தவான் மிகப் பெரும் influence உள்ள ஆளா? ஒன் டே, டெஸ்ட் மேட்ச், 20-20 எதுவாயினும்  5 - 6 மேட்சிற்கு ஒரு முறை 50 அடிப்பார். அதுவும் சர்வ நிச்சயமாய் இதற்கு மேல் தாங்காது; நிச்சயம் டிராப் தான் எனும் நிலையில் மட்டுமே அது நடக்கும். இவருக்கு கிடைக்கும் அளவு வாய்ப்புகள் கிடைத்தால் - நானே இந்திய அணியில் ஆடி விடலாம் :) 6 மேட்சிற்கு ஒரு முறை கொஞ்சம் ஸ்கோர் அடிப்பது பெரிய விஷயமா என்ன?

ரோஹித் முன்னே செல்ல, ஹட்ச் டாக் விளம்பரம் போல தவான் அவர் பின்னே நடையை கட்ட (நன்றி மீம்ஸ் கிரியேட்டர்கள் ) - 2 விக்கட் அவுட்.

ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கோலி மற்றும் அவுட் ஆப் பார்ம் ரைனா - நன்கு ஆடி சரிவிலிருந்து மீட்டனர். பின் இருவருமே அனாவசியமாய் அவுட் ஆக, யுவராஜும் திக்கி திணறி அவுட்

பாண்டியா - வந்த மாத்திரத்தில் சிக்ஸ் ஒன்றும் நான்கு ஒன்றும் அடிக்க, "தம்பி .. கொஞ்சம் நின்னு ஆடுப்பா " என்று சொல்வதற்குள் அட்டகாச கேட்ச் ஒன்றில் அவரும் வெளியேற....

தோனி - 20 ஓவர் ஆடினா போதும் என நிதனாமாய் ஸ்கோரை 146 ரன்னிற்கு கொண்டு வந்தார்...

இந்தியா ஜெயிக்க இந்த ஸ்கோர்  போதுமா என்பது நிச்சயம் சந்தேகம் !!!

பங்களாதேஷ் இன்னிங்க்ஸ் 

நெக்ரா, பும்ரா - 2 பவுலருமே - மிக மோசமான பீல்டர்களாய் இருக்கும் கொடுமையை என்ன சொல்வது !! பும்ரா ஒரு ரன் போக வேண்டிய பந்தை நான்கிற்கு வழிய விட்டதோடு, முக்கிய ஆட்ட காரருக்கு அல்வா கேட்ச் ஒன்றை நழுவ விட்டார்.

அஷ்வின் தன் பங்கிற்கு ஒரு கேட்ச் விட, பாண்டியா நான் மட்டும் சளைத்தவனா என தேவையின்றி - ஓவர் த்ரோ செய்து - எக்ஸ்ட்ரா - 2 ரன் தந்தார்.

இவ்வளவு குறைந்த ஸ்கோர் ஜெயிக்க ஒரே வழி - உயிரை கொடுத்து பீல்டிங் செய்வது தான். இங்கோ நிலைமை - கொடுமை... !!

துவக்கத்தில் அட்டகாசமாய் பந்து வீசியது அஷ்வின் தான். அதிலும் இடது கை மட்டையாளர்களுக்கு - அவர் போட்ட பந்துகள் - பாம்பு போல் வளைந்து சென்றன.

ஜடேஜா பந்தை கூட அவர்களால் அதிகம் அடிக்க முடியவில்லை. தோனி - ரைனா மற்றும் யுவராஜிற்கு கொஞ்சம் ஓவர்கள் கொடுத்து பார்த்திருக்கலாம்.. (ரைனா ஒரு ஓவர் போட்டார்) ; பிட்ச் நிச்சயம் ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாய் இருந்தது.

10 ஓவரில் - 3 விக்கெட் மட்டும் இழந்து வலுவான நிலையில் இருந்தது பங்களா தேஷ்.. விக்கெட் ஒரு பக்கம் விழுந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ரன் ரேட் அதிகம் ஏறாமல் - நன்கு ஆடினார்கள்.

கடைசி 4 ஓவர்கள் .. சௌமிய சர்க்கார் மற்றும் மகமதுல்லா என்ற 2 நல்ல பேட்ஸ்மேன்கள் ஆட .. 17வது ஓவர் பும்ரா பந்து வீசுகிறார்.. ஆறு பந்தும் மிக சரியான யார்க்கர்கள் !! எந்த இந்திய பவுலரும் இப்படி 6 சரியான யார்க்கர்கள் போட்டு பார்த்ததே இல்லை. மலிங்கா தவிர வேறு எந்த பவுலரும் 6 யார்க்கர் போட்ட நினைவில்லை. மிக அட்டகாசமான ஓவர் இது !

18 (நெக்ரா ), 19 வது (பும்ரா ) ஓவர்களும் ஓரளவு ஓகே. கடைசி ஓவரில் 11 ரன்னிருக்க - பாண்டியா கைவசம் பந்து வந்தது. 2வது மற்றும் 3 வந்து பந்தில் பவுண்டரி.. கடைசி 3 பந்தில் 2 ரன் - 2 செட் பேட்ஸ் மேன்கள் ஆடுகிறார்கள்.. இந்தியா ஜெயிக்கும் என இந்நிலையில் யாரும் பந்தயம் கட்டினால் - அவர் மிக பெரிய தைரியசாலி !!(இப்போது நினைத்து பார்க்கும் போது அந்த கடைசி ஓவரில் Gambling - பல கோடிக்கு நடந்திருக்கும் ! வீரர்கள் இன்வால்வ்  ஆகியிருப்பார்கள் என சொல்ல வில்லை;  வெளி உலக Gambling - பற்றி சொல்கிறேன்; வீரர்கள் பங்கு பின்னாளில் தெரிய வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை  )

கடைசி ஓவர் - 4 மற்றும் 5 வது பந்தில் 2 வான வேடிக்கை; 2 பேர் அவுட். பவுலர் ஒருவர் இப்போது பந்தை எதிர்கொள்ள, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர்; 2 என்றால் வெற்றி என்ற நிலையில் பாண்டியா பந்தை தொட முடியாமல் - தோணி ஓடி ரன் அவுட் செய்ய, இந்தியா கொண்டாடியது.....!!!!***********
வெற்றிக்கு காரணம் ஒருவர் என இல்லாமல் - இது ஒரு டீம் effort தான். 30 ரன் அடித்த ரைனா, அட்டகாசமாய் பந்து வீசிய அஷ்வின் மற்றும் பூம்ரா, கடைசி பந்தை அருமையாக வீசிய பாண்டியா - தோனியின் கூல் கேப்டன்சி.. இப்படி எத்தனையோ காரணங்கள்..

உண்மையில் இந்த மேட்ச் நன்கு ஆடியது பங்களா தேஷ் தான்.. கடைசி 3 பந்து தவிர மற்ற அனைத்து நேரமும் அவர்கள் ஆதிக்கம் தான்.

இந்தியா Vs ஆஸ்திரேலியா மேட்ச் - ஒரு குவார்டர் பைனல் ஆகி விட்டது.. இரு அணிக்கும் சம வாய்ப்பு உள்ளது என்றே நினைக்கிறேன்..

அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 3 - 20-20யிலும்   நாம் வென்றோம்; ஆனால் அப்போது அவர்களது நல்ல பிளேயர்கள் பலர் சவுத் ஆப்ரிக்கா (அடுத்த சீரிஸ்) சென்று விட்டனர். வார்னர், ஸ்மித், மேக்ஸ் வெல்- இந்த மூவரை எப்படி அவுட் ஆக்குகிறோம் என்பதில் இருக்கிறது நமது வெற்றியின் சூட்சுமம்..

இந்தியா பேட்டிங் மற்றும் பீல்டிங் -இரண்டிலும் முன்னேற்றம் காண்பது மிக அவசியம்.. பாண்டியாவிற்கு பதில் ஹர்பஜனை இறக்கினால் தவறில்லை; ஹர்பஜன் பந்திற்கு எப்போதும் ஆஸ்திரேலியர்கள் திணறுவர்; மேலும் பாண்டியா அடிக்கும் 15-20 ரன் - ஹர்பஜனும் 4 சுற்று சுற்றி எடுக்க கூடியவர்.. ஆனால் தோனி டீமை மாற்றுவது சந்தேகமே..
************
ஒரு ரன்னில் இந்தியா ஜெயித்த இந்த பங்களா தேஷ் மேட்ச் என்றேன்றும்   இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் ஒன்று.. !

Tuesday, March 8, 2016

மகளிர் தினம்: ஆனந்தவிகடனில் வெளியான என் கட்டுரை

விகடனில் 2012-ல் வெளியான கட்டுரை இது.

அண்மையில் (மார்ச் 5, 2016) சென்னை கம்பனி செகரட்டரி நிறுவன பெண்கள் தின கொண்டாட்டத்தில் பேசியது அநேகமாய் இக்கட்டுரையில் சொன்ன கருத்துக்கள் தான்.  3 வருடம் ஆகியும் பெண்கள் பற்றிய கருத்து அப்படியே நீடிக்கிறது. மனதில் உள்ளதே இக்கட்டுரையிலும் - 3 வருடம் கழித்து பேச்சிலும் வெளிப்பட்டுள்ளது !
**************
பெண்மை போற்றுவோம் !

அம்மா, அக்கா, அண்ணிகளால் வளர்க்கப்பட்டவன் நான். அலுவலகத்தில் பெண் பாஸ்களுடன் பணிபுரிந்தது பல்வேறு வித்தியாச அனுபவங்களைக் கற்றுத்தந்தது.

இன்றையப் பெண்களின் உழைப்பு, பிரமிக்கவைக்கிறது. அலுவலக வேலையுடன், வீட்டில் சமையல், குழந்தைகளுக்குப் பாடம், வயதானவர்களுக்கான கவனிப்பு என, ஒருநாளில் பல வடிவம் எடுக்கிறார்கள். அதீதப் பணிச் சுமை குறித்து எந்தக் குறையும் இன்றி, மகிழ்வுடன் இந்தப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்கள், ஒவ்வொருவரும் போற்றப்பட வேண்டியவர்களே.

பெண்களின் ஒவ்வொரு கடமைகளிலும் சமூகம் அவர்களிடம் மிகச் சிறந்த பங்களிப்பையே எதிர்பார்க்கிறது. வேலைக்குச் சென்றால் பெண் என்பதால் சலுகைகள் எதிர்பார்க்க கூடாது, மாலை நேரமானாலும், இருந்து வேலை முடித்து விட்டு தான் செல்ல வேண்டும் போன்றவற்றை இன்டர்வியூவிற்கு வரும்போதே பெண்களிடம் சொல்லி விடுகிறார்கள்.

சமையல் வேலையில் சில ஆண்கள் உதவினாலும், பெரும்பாலான ஆண்கள் அதில் மட்டுமல்லாது, பிள்ளைகள் படிப்பிலும் உதவுவதில்லை என்பதே நிதர்சன உண்மை.

'செய்வன திருந்தச் செய்வது’ பெண்களுக்கு இயல்பான ஒன்றாக இருக்கிறது. பெண்கள் ஈடுபடும் அனைத்து வேலைகளிலும் ஓர் ஒழுங்கும் முழுமையும், அழகுணர்ச்சியும் மிளிர்வதைக் காண முடியும். பிரச்னைகளை அணுகுவதிலும் அவர்களுடைய தைரியமும் தெளிவும் ஆண்களுக்குப் பெரும் பலமாக உள்ளது. நான் சந்தித்த சில வித்தியாசமான பெண்களும் அவர்களிடம் நான் கற்றதும் பெற்றதும் இதோ...


வழக்கறிஞர் அருள்மொழி

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக, பேச்சாளராக அனைவராலும் அறியப்பட்டவர். இவரிடம் ஜூனியர் வழக்கறிஞராக நான் இருந்தேன். பொதுவாக தொடக்கக் காலத்தில் ஜூனியர்களை 'வழக்கைத் தள்ளிப்போட’ (அட்ஜார்ன்மென்ட்) மட்டுமே சீனியர்கள் அனுப்புவார்கள். ஆனால் இவரோ, தான் வர முடியாத சமயங்களில் மிகக் குறுகிய அனுபவம் இருந்தபோதும், என்னை வாதிட அனுமதித்தார். அந்த வழக்கு குறித்து தெளிவாக எடுத்துச்சொல்லி, என்னென்ன பாயின்ட்கள் பேச வேண்டும் என்று பயிற்சி தந்து அனுப்புவார். இது என்னுள் நிறைய தன்னம்பிக்கையைத் தந்தது.

லட்சுமி மேனன்

இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களில் மிகச் சிறந்த நிர்வாக இயக்குநருக்கான விருது பெற்ற லட்சுமி மேனனிடம் வேலைசெய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நஷ்டத்தில் உள்ள நிறுவனத்தை லாபத்துக்குக் கொண்டுசெல்லும் திறமை பெற்றவர். எப்போதும் புது ஆர்டர்கள் வாங்குவது, அதைத் திறம்படச் செய்வது குறித்தே யோசிப்பார்; பேசுவார். நிமிடத்தில் கோபம் வந்து, சட்டென்று அதை மறந்து, அன்பைப் பொழிவார். அனைவரும் ஓர் அம்மாவைப் போலத்தான் இவரைப் பார்ப்பார்கள். ஒருமுறை எனக்கு வேறு நல்ல வேலை கிடைத்தது. 'இவங்களை விட்டுட்டுப் போகப் போறியா?’ என, மனம் கேள்வி எழுப்பியது. தயங்கியபடியே அவரிடம் சொன்னேன். 'புதிய வேலை இன்னும் பல வாய்ப்புகளைத் தரும்’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

சாரா ஆரோக்கியசாமி

சென்னை மண்டல கம்பெனி செகரட்டரி இன்ஸ்டிடியூட்டின் இணை இயக்குநர் பொறுப்பில் இருப்பவர். படிப்பிலும் தொழிலிலும் எனக்கு மட்டுமல்லாது, என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு வழிகாட்டியாக இருப்பவர். எளிமைதான் இவருடைய சிறப்பு.

சென்னையின் அனைத்து கம்பெனி செகரட்டரிகள், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்த பல்வேறு தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். தினமும் உடற்பயிற்சி, டயட் உணவு என்று 15 வருடத்துக்கு முன்பு பார்த்தது போலவே இப்போதும் இளமையாக இருக்கிறார்.

                                                                          


 வேலை நிமித்தம் இத்தகையப் பெண்களிடம் பழகியதில், அத்தனை பேரிடமும் ஓர் ஒற்றுமை. அவர்கள் சென்சிடிவ் ஆனவர்கள். தங்கள் வேலையை இன்னொருவர் குறை சொல்கிற மாதிரி சந்தர்ப்பமே வராத அளவுக்குப் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவும் சரி, அவர்கள் செய்யும் பரிந்துரைகளும் சரி அத்தனை துல்லியமாக இருக்கும். யாரேனும் கேள்வி கேட்டால், அதற்கு மிகத் தெளிவான விளக்கமான பதில் கிடைக்கும்.

பெண்களிடம் வீட்டில் மட்டுமல்ல... அலுவலகத்திலும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!

Sunday, March 6, 2016

கெளதம் மேனனின் ஹீரோயின்கள் ..

மிழ்த் திரை உலகம் கதா நாயகிகளை எப்படி பிரதி பலிக்கிறது?

ஹீரோவின் வீரத்தை வியந்து அவரைக் காதலிக்கிறவர். பல நேரங்களில் விஷயம் புரியாமல் உளறி கொட்டும் லைட்டான லூசு பாத்திரம்..பாடல் காட்சிகளுக்கும், அதற்கான லீட் சீன்களிலும் அவசியம் இருப்பவர்..

இது தான் வழக்கமான விஜய் - அஜீத் போன்ற மாஸ் ஹீரோ பட ஹீரோயின்களுக்கான இலக்கணம்.

ஆனால் இதை விடுத்து - கெளதம் மேனன் தனது பல படங்களிலும் ஹீரோயின்களுக்கு அற்புதமான பாத்திரங்களை தந்திருப்பார்.. அவற்றில் சில மட்டும் இங்கு..

ஜெஸ்சி (விண்ணை தாண்டி வருவாயா )

ஜெஸ்சி என்ற பெயரை எங்கே, எப்போது யார் சொன்னாலும், விண்ணை தாண்டி வருவாயா படத்து த்ரிஷா நினைவுக்கு வருவது ஒன்றே போதும் - இந்த பாத்திரம் பல வருடமாய் நம் மனதில் நிறைந்து போனதை உணர்த்த !

தன்னை விட வயது மூத்த ஜெஸ்சியை  சிம்பு காதலிக்கிறார்.. முதலில் அவரை ஒதுக்கி தள்ளும் (அல்லது அப்படி நடிக்கும்) ஜெஸ்சிக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது.. சர்ச்சில் பல பேர் முன்னிலையில் இத்திருமணத்தில் விருப்பம் உண்டா என்ற கேள்விக்கு " விருப்பம் இல்லை" என சொல்லி திருமணத்தை நிறுத்துகிறார்..இதன் பின் தான் சிம்புவிடம் " ஆமாம் .. எனக்கு உன்னை பிடிச்சிருந்தது; ஆனால் இது நடக்குமான்னு பயம்; அதான் உன்னை விட்டு தள்ளியே நின்றேன்" என தன்னை வெளிபடுத்துகிறார்..

படத்தின் முடிவில் - ஜெஸ்சி வேறு யாரையோ மணக்க - சிம்புவும் ஜெஸ்ஸியும்  - சிம்பு இயக்கிய திரைப்படத்தின் ப்ரிவியூவில் சந்தித்து பேசுவதுடன் படம் நிறைகிறது..

தமிழ் சினிமாவில் ஹீரோ - ஹீரோயின் என்றாலே எல்லா விதத்திலும் சிறந்தவர் என காட்ட நிரம்ப போராடுகையில் - ஜெஸ்சி - சாதாரண பெண்ணிற்கு இருக்கும் தயக்கம்- குழப்பம் போன்ற நெகடிவ் உணர்வுகளை அட்டகாசமாக பதிவு செய்கிறார்..

இப்படி அழகு + குழப்பம் இரண்டும் கலந்த கலவையாய் இருந்ததால் தான் ஜெஸ்சி நமது மனதுக்கு நெருக்கமான ஒரு நிஜ பெண்ணாய் ஆகி போனார் !குறிப்பிட பட வேண்டிய மற்றொரு விஷயம்: கெளதம் மேனனின் ரசனை: அவரது ஹீரோயின்களின் உடை மற்றும் ஹேர் ஸ்டைல் இரண்டுமே - அவ்வளவு இயல்பாகவும் ரசிக்கும் படியும் இருக்கும்; இப்படத்தில் த்ரிஷா உடை - இன்னும் மறக்க முடியாது.. காட்டன் புடவை, முக்கால் கை சுடிதார் இரண்டிலுமே மிக கண்ணியமாக தோன்றுவார் த்ரிஷா.

பச்சைக்கிளி முத்துச்சரம்

இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். சரத் மனைவியாக ஆண்ட்ரியா (அவருக்கு இது அறிமுக படம்) - சரத் காதலியாக ஜோதிகா

ஆண்ட்ரியா பாத்திரத்தில் - depth & detailing அதிகம் இருக்காது. சாதாரண ஹவுஸ் வைப்; .

ஜோதிகா பாத்திரம் தான் ரியல் சர்ப்ரைஸ்... வாழ்க்கையில் நிரம்ப கஷ்டபடுபவராக; கணவரால் துன்பப் படுவதாக, உதவ செல்லும் சரத்தை மெல்லிதாய் காதலிப்பவராக காட்டி செல்வார்கள். ஆண்களுக்கு வழக்கமாய் இருக்கும் சபலத்துடன் சரத் அவரை அணுகுவார்..

ஆனால் படத்தின் இறுதியில் தான் ஜோதிகா ஒரு பணம் பறிக்கும் கும்பல் என்பதும், கணவர் அவரை கஷ்டபடுத்தியதாக காட்டியதும் பொய்; உண்மையில் அந்த இருவரும் தான் கூட்டு களவாணி என்பதும் தெரிய வரும்..

இது தெரிய வரும் காட்சியே அட்டகாசமாய் இருக்கும். இதன் பின் காட்டப்படும் ஜோதிகா பாத்திரம் - 10 நிமிடமே ஆயினும் அசத்தலாய் இருக்கும்.படம் - வேறொரு ஆங்கில படத்தின் தழுவல் என கேள்வி..

இன்றும் ஜோதிகா பாத்திரத்தின் ஷாக் + சர்ப்ரைஸ் தான் இப்படத்தின் ஹைலைட் ஆக நினைக்கிறேன்.

நீதானே என் பொன் வசந்தம் 

ஜெஸ்ஸிக்கு இணையான அற்புத பாத்திரம் - இப்படத்தில் வரும் நித்யா .

பள்ளிப்பருவம் தொடங்கி அடுத்த 10 வருடத்தை காட்டும் கதை.. பணக்கார பெண் நித்யா - மிடில் கிளாஸ் வருணை (ஜீவா)  காதலிக்கிறார்.. கல்லூரி முடியும் தருணம் இருவருக்கும் பெரும் சண்டை ......,அப்போது பிரிந்து இறுதியில் எப்படி இணைந்தனர் என்று செல்லும் கதை..மிகுந்த ஈகோ நிரம்பிய பாத்திரம் சமந்தாவிற்கு. வெளி மாநிலம் சென்று MBA படிக்கிறேன் எனும் ஜீவாவிடம் நானும் அங்கு வந்து படிக்கிறேன்- எனக்கு போர் அடிக்குமே என்கிறார்..

ஜீவா " என் குடும்ப நிலைமைக்கு நான் செட்டில் ஆகணும்; டைவர்ஷன் வேண்டாம் " என்பார்.. இந்த காட்சியை மொட்டை மாடியில் அட்டகாசமாக படமாக்கியிருப்பார் இயக்குனர். பக்கத்துக்கு மாடியிலிருந்து பார்க்கும் விதமாக காமிரா அலை பாயும்..ஜீவா - படித்து முடித்து விட்டு வந்து சமந்தாவிடம் கெஞ்சும் போது கண்டு கொள்ளாத தெனாவெட்டு.. பின் ஜீவாவுக்கு கல்யாணம் என தெரிந்ததும்  - பதறுவது.. அவரிடம் சென்று பேசுவது என பெண்ணின் உணர்வுகளை இயற்கையாக தந்த விதத்தில் - இன்னொரு ஜீவனுள்ள பெண் பாத்திரம்.. கெளதம் மேனனிடமிருந்து..

சமந்தாவின் காரியரில் நிச்சயம் ஒரு மறக்க முடியாத பாத்திரம் மற்றும் நடிப்பு !

காக்க காக்க - மாயா 

ரொம்ப சின்ன பாத்திரம் தான் ஜோதிகாவிற்கு. ஆனால் இன்றைக்கும் காக்க காக்க என்ற ஆக்ஷன் படம் பற்றி நினைக்கும் போது மாயா- அன்பு செல்வன் (சூர்யா - ஜோதிகா) ரொமான்சும் நினைவிற்கு நிச்சயம் வருகிறது..படத்தின் சில டயலாக்குகள்.....இவையே சொல்லிவிடும் அந்த பெண் பாத்திரத்தை.. ஒரு பெண்ணை சித்தரிப்பதில் கெளதம் மேனன் எப்படி என்பதை..

மாயா: உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்.. இப்போ மாதிரியே எப்பவும் உங்க மேல பைத்தியமா இருக்கணும்.. இந்தக் கண்கள் என்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும்.. மூணு குழந்தைகள் பெத்துக்கணும்.. ஒவ்வொருத்தரும் உங்களை மாதிரியே..

அன்பு செல்வன்: ஏன்? Why me??

மாயா: It's a girl thing..!! சொன்னா உங்களுக்குப் புரியாது..
**********
மாயா: எனக்கு என்ன வயசு தெரியுமா??

அன்பு செல்வன்: 24

மாயா: ஏன் கேட்டேன்-னு கேட்க மாட்டீங்களா??

அன்பு செல்வன்: ஏன் கேட்டே??

மாயா: 24 வருஷமா இந்த முத்தத்துக்காகக் காத்திருந்தேன்.. இனிமே ஒரு second கூடக் காத்திருக்க முடியாது..!!

- இந்த இரண்டாவது டயலாக்கில் மாயா - தன் வயதை 24 என்று சொல்வதே கூட ஆச்சரியம் தான் ! ஹீரோயின்கள் பல நேரம் ரொம்ப சின்ன வயது என்பது தான் வழக்கம். 24 வயது என மெச்சூர்ட் ஹீரோயின் + அவர் காதலை காட்டுவது கெளதம் மேனன் இன்னும் பல படங்களில் செய்வார். சொல்ல போனால் இத்தகைய மெச்சூர்ட் காதலை காட்டுவது தான் அவருக்கு பிடிக்குமோ எனும் அளவுக்கு பல படங்களிலும் இருக்கும்...

காக்க காக்க படத்தில் ஜோதிகா வருவது மொத்தம் 20 நிமிடம் கூட இருக்காது. ஆனாலும் மனதில் நிற்கும் பாத்திர படைப்பு..

************
எல்லா படங்களிலும் ஹீரோயின் பாத்திரத்துக்கு கெளதம் மேனன் இவ்வளவு மெனக்கேடுவதில்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும். மின்னலே ஹீரோயின் - வழக்கமான சினிமா காதலி;

வாரணம் ஆயிரம் படம் முழுக்க முழுக்க தந்தை பாத்திரத்துக்காக எழுதப்பட்ட ஒரு கதை ; இக்கதை தனது தந்தை இறந்த பின் கெளதம் எழுதினார் என்பதோடு " இதன் 70 % - எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்" என்றார்... இப்படத்தில் சமீரா ரெட்டி - வழக்கமான சினிமா காதலி; சிம்ரன் அம்மாவாக - கொஞ்சம் வித்யாசம் காட்டினாலும், திவ்யா பாத்திரம் - தான் வழக்கமான கெளதம் மேனன் டச் - சற்றேனும் கொண்டிருந்தது. காதலில் தோற்று, போதைக்கு அடிமையாகி மீளும் சூரியாவை காதலிக்கும் பெண்ணாக நடித்திருந்தார் திவ்யா..

என்னை அறிந்தால் - த்ரிஷா பாத்திரம் சற்றே நன்று என்றால், அனுஷ்கா பாத்திரம் துளி கூட மனதில் நிற்காத ஒன்று.

************
இறுதியாக:

இதுவரை அவரது பெண் பாத்திரங்களில் ஜெஸ்சி மற்றும் நித்யா (நீதானே என் பொன்வசந்தம்) அருமை என்றாலும், ஒரே பாத்திரம் சொல்ல வேண்டுமெனில் - அது நித்யா தான். பாத்திரத்தில் இருந்த தெளிவு, அதை மிக அட்டகாசமாக உள்வாங்கி வெளிப்படுத்திய சமந்தா இவையே காரணம்...

ஒருவேளை கெளதம் மேனன் இந்த கட்டுரையை வாசிக்க நேர்ந்தால் ஒரு வேண்டுகோள்.. எல்லா படங்களிலும் நல்ல பெண் பாத்திரங்களை படையுங்கள்.. பெண்களை இப்படி நிறை, குறை இரண்டும் கலந்த கலவையாய், இயல்பாய் - திரையில் படைக்கும் படைப்பாளிகள் அருகி வருகிறார்கள் !!

Saturday, March 5, 2016

கோவா..- ஜாலி பயணம்

முழு ஆண்டு தேர்வு முடிந்த பின் எங்கு செல்லலாம் என பல இடங்கள் யோசித்து கடைசியில் கோவா - என முடிவு செய்தோம்... (மைசூர், கூர்க், குளு , மனாலி இப்படி ஒவ்வொரு வருட முழு ஆண்டு விடுமுறைக்கும் வெளி மாநிலமே கூட்டி சென்று விட்டதால் - தமிழ் நாட்டின் இடங்கள் மகளை அதிகம் ஈர்க்க வில்லை; தமிழ் நாட்டிலேயே பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அவை அநேகமாய் காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் தான் யோசிக்கணும் போலும் )

விமானத்தில்  செல்ல தொடர்ந்து பல சலுகைகள் வந்த வண்ணம் இருந்தன. சில முறை தவற விட்டு, பின் மார்ச் மாதம் தான் முடிவெடுத்து ஏப்ரல் 11-ல் செல்ல டிக்கெட் எடுத்தோம். ஒருவருக்கு 2000 ரூபாய் என விமான டிக்கெட் விலை குறைவாக கிடைத்தது. (வழக்கமாய் இதை விட 2 மடங்கு ஆகும் என நினைக்கிறேன்; பயணத்துக்கு ஓரிரு நாள் முன்பு புக் செய்தால் இன்னும் அதிகம் )

ஹோட்டல் அதிபர் சித்தேஷ் மற்றும் பணியாளர் ஒருவருடன் 

அடுத்தது தங்கும் இடம் ; இணையத்தில் தேடி நல்ல ரிவியூ உள்ள 3-4 ஹோட்டல்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அதில் ஹவுஸ் பாசும், மகளும் பார்த்து முடிவெடுத்தது நாங்கள் தங்கிய ஹோட்டல். அன்னப்பூர்ணா விஷாராம் தாம். (Phone : 099 23 325279)

மிக நிறைவான ஒரு ஹோட்டல். ஏ சியுடன் கூடிய அறைக்கு ஒரு நாள் வாடகை - ரூ 1,800. சாப்பாடு நல்ல சுவையாகவே இருந்தது. ஒரே பிரச்சனை காலை சாப்பாடு... அநேகமாய் இங்கு மட்டுமல்ல - எங்கு போனாலும் பிரட் தான் கிடைக்கிறது. அல்லது Naan போன்ற உணவுகள்.

முதல் நாள்.. அதனால் முகம் சுழிக்காமல் சாப்பிடுறேன் 

இட்லி தோசை என்ற பேச்சே எடுக்க கூடாது. ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் கிரைண்டர் என்ற வஸ்துவே இருக்காது போலும். சப்பாத்தி கூட காலை வேளையில் கிடைப்பதில்லை. 2-3 நாள் கழித்து நாங்கள் தங்கிய ஹோட்டலில் பூரி கிடைப்பதை அறிந்து கடைசி 2 நாள் பூரி சாப்பிட்டோம்.  அப்புறம் தான் காலை சாப்பாட்டு பிரச்சனை சரியானது.

ஹோட்டலில் அற்புதமான நீச்சல் குளம் உள்ளது. தினமும் தண்ணீர் மாற்றி சுத்தம் செய்த இந்த நீச்சல் குளத்தில் தினம் 2 வேளை ஆனந்தமாய் குளித்தேன்.

ட்ரைலரில் பார்த்த சுனாமிக்கு காரண கர்த்தா ...
இந்த ஹோட்டல் புக் செய்ய மிக முக்கிய காரணம் இங்கு நிறைய செடி, கொடிகள் இருப்பது தான். (ஹவுஸ் பாசுக்கு அதை பார்த்த படியே பொழுது கழிந்து விடும் ); இப்படி இயற்கை விரும்பிகள் நாடக்கூடிய ஒரு ஹோட்டல் இது .

மொத்தம் 10 அறைகள் தான். ஹோட்டல் ஓனர் மற்றும் அவரது மகன்கள் அடுத்த பில்டிங்கில் குடியிருக்கின்றனர். நல்ல சர்வீஸ்..

அறை சுத்தம், சாப்பாடு, சுற்றுப்புறம், சர்வீஸ், ரேட் என எல்லா விதத்திலும் திருப்தி கரமாய் இருந்தது.காலை உணவை தவிர இன்னொரு பிரச்சனை.. ஹோட்டல் அருகே இருக்கும் பீச் 3 கிலோ மீட்டர் தள்ளி உள்ளது. இங்கெல்லாம் பஸ் வசதி அந்த அளவு கிடையாது. ஆட்டோக்களும் சற்று குறைவே...

இந்த வீடியோவில் ஹோட்டலை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் வாங்க...எல்லா இடத்திலும் பைக் வாடகைக்கு கிடைக்கிறது. ஒரு நாளைக்கு 300 ரூபாய் வாடகை ( பெட்ரோல் நம் செலவு) அரை நாள் எனில் ரூ. 200 (மிக சிலரே அறை நாளுக்கு தருவர். பலரும் தர மாட்டார்கள்) ; இப்படி பைக் எடுத்து கொண்டு செல்வது நிச்சயம் பல இடங்களை பார்க்கவும் - குறைவான செலவில் பயணிக்கவும் உதவும்.

கார் என்றால் 9 மணி நேரத்துக்கு 1500 ரூபாய் (80 கிலோ மீட்டர் தூரம் வரை) வாங்குகிறார்கள்.

அன்னப்பூர்ணாவில் தங்குவது எனில் பைக் எடுத்து கொண்டு சுற்ற அல்லது மேற்சொன்ன கார் செலவுக்கு தயாராக இருக்க வேண்டும். ஹோட்டலிலேயே பைக் மற்றும் கார் வாடகைக்கு கிடைக்கிறது

இல்லையேல் பாகா அல்லது கலங்கட் பீச் அருகே - நடந்து செல்ல கூடிய தூரத்தில் இருக்கும் ஹோட்டலை தேர்வு செய்வது நலம்.

******
நாங்கள் தங்கிய ஹோட்டல் அருகே இருந்த பீச் ஆன - அஞ்சுனா பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்..

அஞ்சுனா கடற்கரை.. வடக்கு கோவாவில் இருக்கிறது. பெரும்பாலும் வெளி நாட்டவர்கள் நாடி வரும் இடம் இது.

கோவாவில் அந்த ஊரின்/ இடத்தின் பெயர் எதுவோ, அது தான் பீச்சின் பெயராகவும் இருக்கும்.

நாங்கள் இருந்த ஹோட்டல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி அஞ்சுனா என்று அழைக்கப்பட்டது. பீச்சின் பெயரும் அதுவே.

பல பீச்களில் கரைக்கு சற்று தள்ளி ஹோட்டல்கள் இருக்கும். பீச்சுக்கு வருவோர் சாப்பிட - அங்கு அமர்ந்தவாறே பீர் அடிக்க, சாப்பிட - இப்படி பல பீச்களில் வசதி இருக்கும்..

அஞ்சுநாவில் பீச் மிக அருகே ஹோட்டல்கள் உள்ளது. அதாவது நீங்கள் பீச்சில் கால் நனைத்தவாறே  சாப்பிடலாம்.. எப்படி கரைக்கு இவ்வளவு அருகில் ஹோட்டல் இருக்கிறதோ தெரியவில்லை.

கோவாவில் நான் குளித்த ஒரே பீச் இது தான். ஆனால் செமையாக தண்ணீர் உள்ளே இழுத்தது.  மட்டுமல்ல அலைகள் மிக வேகமாக இருந்ததால் நம்மை தூக்கி வந்து கரையில் அடித்தது. எனக்கு கை, கால் எல்லாம் செம சிராய்ப்பு ..

என்னுடன் ஜெர்மனியை சேர்ந்த ஒரு வெளிநாட்டவர் குளித்தார். அவர்க்கு கடலில் குளித்து பழக்கம் உண்டு போலும். அட்டகாசமாக நீச்சல் அடித்தார்.

சற்று நேரத்தில் கோஸ்ட் கார்ட் வந்து என்னை மேலே வர சொல்லி அழைத்து விட்டார். " அவர் மட்டும் குளிக்கிறாரே?" என நான் கேட்க, " அவருக்கு கடலில் நல்லா நீந்த தெரியும்; இங்கு வெளிநாட்டவரை மட்டும் தான் குளிக்க விடுவோம்; அவர்களுக்கு நீச்சல் தெரியும் என்பதால்" என்றார்.

அதற்குள் அரை மணி நேரம் நன்கு கொட்டம் அடித்ததால்  மேலறி விட்டேன். ...
************
அடுத்த பகுதியில்..

கலங்கட் மற்றும் பாகா பீச்.... 
Related Posts Plugin for WordPress, Blogger...