Tuesday, July 29, 2014

வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

ன்றாக நினைவிருக்கிறது. முதன் முதலில் தனுஷின் நடிப்பில் ஆச்சரியப்பட்டு போனது " காதல் கொண்டேனில்" தான்... படம் பார்த்து விட்டு " இது மாதிரி ஒரு படமோ, நடிப்போ தனுஷுக்கு இன்னொரு முறை கிடைக்கவே கிடைக்காது " என சொல்லிக்கொண்டிருந்தேன்... பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன - என எனது அந்த எண்ணத்தை அவ்வப்போது பொய்யாக்கி கொண்டிருந்தார் தனுஷ்.



இதுவரை வெளிவந்த எல்லா தனுஷ் படங்களை விட வேலை இல்லா பட்டதாரி  மிக வேறுபட்டது. காரணம் இத்தகைய மாஸ் படம் தனுஷ் இதுவரை செய்ய வில்லை. அட்டகாசம் !

கதை 

சிவில் இஞ்சினியரிங் முடித்து விட்டு,  கட்டிட  துறைக்கு மட்டுமே வேலைக்கு செல்வேன் என இருக்கிறார் தனுஷ். அம்மாவின் புண்ணியத்தில் ஒரு வேலை கிடைக்க, அதில் வரும் சோதனைகளை எப்படி சமாளித்தார் என்பதை வெண் திரையில் காண்க !

ஹீரோ 

இப்படத்திற்கு ஒரு ஹீரோ அல்ல .. 3 ஹீரோ !

முதல் ஹீரோ.....கதை எழுதி இயக்கிய வேல்ராஜ்... படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் இவரது கதை மற்றும் திரைக்கதை தான்... இயக்குனராக முதல் படம் என்பதால்  ஜெயிக்கிற வெறியுடன் உழைத்திருப்பது தெரிகிறது. இவரின் சுவாரஸ்ய Plot இல்லா விடில் படம் வென்றிருக்க வாய்ப்பில்லை ! வெல் டன்  வேல் ராஜ் !

அடுத்து .. தனுஷ்.. ! ரஜினியின் ஸ்டைல் மற்றும் தாக்கம் ஆங்காங்கு தெரிகிறது. மனுஷன் அசத்தி இருக்கிறார் அசத்தி ! படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் அநேகமாய் இவர் இருந்தாலும் - சற்றும் அலுக்காதது இவரது பெர்பார்மன்ஸ் கெத்தாக இருப்பதால் தான். பாட்டு, பைட்டு, எமோஷனல் சீன் , காமெடி என எல்லா காட்சிகளும் பெர்பெக்ட் கலவையில் அமைய - தனுஷின் நடிப்பு ஜொலிக்கிறது !



இறுதியாய்...  மூன்றாவது ஹீரோ  அனிருத் ! ஒரு படத்தில் அத்தனை பாட்டுகளும் ரசிக்கும்படி அமைவது எத்தனை முறை சாத்தியமாகிறது ! படத்துடன் சேர்த்து தான் பாடல்களை முதலில் முழுவதுமாய் கேட்டேன்.  ... மிக மிக ரசிக்கும் படி இருந்தது. கதையுடன் ஒன்றி வரும் பாடல்களும் அதை எடுத்த விதமும் கூட ஒரு காரணம்.

காமெடி - ஹீரோயின் இன்ன பிற 

ரொம்ப நாள் கழித்து காமெடி ரோலில்.. விவேக் ... தனது வழக்கமான மொக்கை இன்றி ஓரளவு கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

அமலா பால் ... அழகு... ! வழக்கமான தமிழ் ஹீரோயின் தான்,  ஸ்கோப்.. குறைவாய் இருந்தாலும் நிறைவு...

சமுத்திரக்கனி - ஒரு பக்கம் ஹீரோ மாதிரி ரோல் செய்பவரை எப்படி அப்பாவாக்கினர் என தெரிய வில்லை. எப்போதும் இப்படி திட்டும் அப்பாக்கள் இருப்பார்களா ? (எனது அப்பா அவசியம் திட்ட வேண்டிய நேரத்தில் கூட திட்டியதேயில்லை.. மகன் வருந்துவானே என்று !)

இடைவேளைக்கு பின் தனுஷ் வேலைக்கு போய் விடுகிறாரே.. அப்புறம் ஏன்  வேலை இல்லா பட்டதாரி (வி. ஐ. பி) என பெயர் வைத்தார்கள் என நம்முள் ஒரு கேள்வி தோன்ற - அத்தகைய வி. ஐ. பி களே பிற்பகுதியில்  தனுஷுக்கு  உதவுவதாக காட்டி - அத்தகைய வி. ஐ. பி களின் ஓட்டுக்களை மொத்தமாக அள்ளுகிறார்கள் ( இருந்தாலும் தனுஷின் யூ டியூப் பேச்சை கேட்டு வேன் ,பஸ்ஸில் எல்லாம் ஆட்கள் வந்து இறங்குவது த்ரீ மச் -ங்க !)

தனுஷ் மற்றும் அவரது தம்பிக்கிடையேயான உறவு செம சுவாரஸ்யமாய் வடிவமைத்துள்ளனர்... அண்ணன் - தம்பி ஒப்பீடு - தம்பியை விரட்டி கொண்டே இருக்கும் அண்ணன் என புன்னகையுடன் ரசிக்க வைக்கும் பகுதி அது

போலவே அந்த லூனா ஒரு பாத்திரமாகவே ரசிக்க வைக்கிறது.



புது முக வில்லனை பற்றி நாம் கமண்ட் அடிக்கும் முன்பே - தனுஷை விட்டு அமுல் பேபி என்றும் " ஒண்ணை எல்லாம் வில்லனாவே ஏத்துக்க முடியலை " என்றும் கிண்டலடித்து விடுகிறார்கள்..

குறைகள் 

படத்தின் ஒரே குறை ஆங்காங்கு தெரியும் லாஜிக் மீறல்கள் !

இஞ்சினியரிங் முடித்து ஒரு வருடமே ஆன அமலா பால் மாதம் 2 லட்சம் சம்பாதிக்கிறாராம் ! இப்படி மாசம் 2 லட்சம் சம்பாதிப்பவர் - வேலை இல்லாத தனுஷை காதலிக்கிறாராம் !

இன்னொரு காட்சியில் கால் சென்டரில் மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் தனுஷ் வேலைக்கு போவதாக சொல்கிறார்கள். எந்த கால் சென்டரில் துவக்க சம்பளம் 50 ஆயிரம் தருகிறார்கள் ?

எவ்வளவோ வில்லத்தனம் செய்யும் வில்லனை தனுஷ் தொடர்ந்து பொறுப்பதும், அவரை மன்னிப்பு மட்டும் கேட்க சொல்வதும் - ஏனோ இடறுகிறது

இப்படி சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும்

சுவாரஸ்யமாக கதை சொன்ன விதத்திலும், தனுஷின் அட்டகாசமான நடிப்பிலும் இந்த பட்டதாரி முதல் வகுப்பில் பாஸ் ஆகிறார் !

வேலை இல்லா பட்டதாரி... இவ்வருடம் வெளி வந்தவற்றில் பெஸ்ட் கமர்ஷியல் என்டர்டெயினர்  ... டோன்ட் மிஸ் இட் !

Wednesday, July 16, 2014

BPO ஓர் அறிமுகம் - புத்தக விமர்சனம்

BPO ஓர் அறிமுகம் என்கிற தலைப்பில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சிறு நூலை சமீபத்தில் வாசித்தேன். எழுதியவர் - SLV மூர்த்தி. இவர் IIM அஹமதாபத்த்தில் எம். பி. ஏ பட்டம் பெற்றவர்.

மிக சிறிய நூல். 78 பக்கங்கள் ; ஆனால் ஏக் தம்மில் படித்து முடிக்க முடியலை ! 11 அத்தியாயம் ; ஒவ்வொன்றும் ஆறேழு பக்கங்கள் . அவ்வளவு தான் !

BPO துறை வரலாற்றை அமெரிக்காவில் இருந்து துவங்கி எப்படி பிற இடங்களுக்கு விரிவானது; அதன் அவசியம் என்ன, எந்த நாடுகள் இதில் சிறந்து விளங்குது; இந்த துறையில் பணியாளர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகள் என்று சொல்லி போகிறார்

புத்தகத்திலிருந்து BPO துறை பற்றிய சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு :



*****************
வேலை பங்கீடு ( Division of Labour) பற்றி ஆடம் ஸ்மித் ........

Division of Labour பற்றி விளக்க ஆடம் ஸ்மித் குண்டூசி தயாரிக்கும் உதாரணத்தை எடுத்து கொள்கிறார். வெறும் குண்டூசி தானே என்று நினைக்காதீர்கள்.

முதலில் - இரும்பு துண்டிலிருந்து கம்பிகள் செய்ய வேண்டும். கம்பியை கோணல் இல்லாமல் நேரக்க வேண்டும். தலைப்பாகத்தை உருண்டை வடிவமாக்க வேண்டும். மறுமுனையை கூராக்க வேண்டும். துரு நீக்கி பாலிஷ் போடவேண்டும். இது போன்ற 18 பணிகளை முடித்தால் குண்டூசி தயாராகும் !!

இந்த 18 கட்ட வேலைகளையும் ஒரு மனிதனே செய்தால், அவனால் ஒரு நாளில் 20 குண்டூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும். 10 பேர் ஒரு குழுவாக இணைந்து 19 வேலைகளையும் பங்கிட்டு செய்தால் எவ்வளவு தயாரிக்கிறார்கள் தெரியுமா?

ஆடம் ஸ்மித் கணக்குப்படி 48,000 குண்டூசிகள் தயாரிக்கிறார்கள் ! அதாவது உற்பத்தி திறன் 240 மடங்கு அதிகரிக்கிறது !

வியாபார போட்டியில் தங்கள் பொருட்களின் விலையை குறைக்க ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வேலைகளில் முக்கியமானவற்றை ( Core Competency ) மட்டுமே தாங்கள் செய்து கொண்டு இதர வேலைகளை மற்ற நிறுவனங்களிடம் தரும் வழக்கம் ஏற்கனவே இருந்தாலும் கூட 1990 க்கு பின் இன்னும் அதிகமாகிறது 2000 -ல் Y 2 K பிரச்சனைக்கு பின் - இந்தியன் சாப்ட்வேர் துறை வேகம் பிடித்தது

கால் சென்டர்கள் என்று எடுத்து கொண்டால் அவை 1960 முதலே உலகில் வலம் வர துவங்கி விட்டதாம் !

இந்தியாவிற்கு முதலில் BPO வரத்துவங்கியது 1994-ல் .. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி தான் முதலில் இந்தியாவிற்கு அவுட் சோர்சிங் வேலைகள் வர காரணமாக இருந்துள்ளது.

சீரான வளர்ச்சிக்கு பின் 1999 முதல் அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவில் BPO துறை மிக அபாரமாக வளர்ந்தேறியுள்ளது

கால் செண்டர் அல்லது இதர BPO நிறுவனங்கள் அமெரிக்காவை விட இந்தியா அல்லது பிலிப்பைன்சில் நடத்த காரணம் இங்கு நடத்த செலவு குறைவு என்பது தான். அமெரிக்காவில் 100 ரூபாய் செலவானால் இங்கு, 20 ரூபாய் தான் ஆகும் .

இந்திய மக்கள் தொகையில் 20 முதல் 30 லட்சம் மக்கள் தான் ஐ. டி துறையில் பணியாற்றுகிறார்கள் என்று ஓரிடத்தில் தெரிய வருகிறது. BPO துறையில் 10 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள்... யோசிக்கையில் மொத்த மக்கள் தொகையில் சின்ன நம்பர் என ஆச்சரியமாக இருக்கிறது

என்னென்ன விதமான BPO க்கள் உள்ளன - காப்டிவ் BPO என்றால் என்ன, BPO துறையில் என்னென்ன வேலைகள் நடக்கிறது போன்ற தகவல்கள் நிச்சயம் பயனுள்ளவை

இந்தியாவின் முதல் 10 BPO நிறுவனங்கள் என இப்புத்தகம் சொல்பவை

1. ஜென்பாக்ட்
2. ட்ரான்ஸ் வொர்க்ஸ்
3. ஐ. பி. எம்
4. TCS BPO
5. கேம்பிரிட்ஜ்
6. குளோபல் சொல்யூஷன்ஸ்
7. விப்ரோ BPO
8. கண்வேர்ஜிஸ் இந்தியா
9. பர்ஸ்ட் சொல்யூஷன்ஸ்
10 HCL BPO

(எப்படி இன்போசிஸ் மிஸ் ஆகிறது என புரிய வில்லை !)

கால் சென்டர்களில் அட்ரிஷன் எனும் வேலையை விட்டு போகும் சதவீதம் 45 % இருப்பதாக பகிர்கிறது புத்தகம். அதாவது ஒரு வருடத்தில் நூறு பேர் வேலைக்கு சேர்கிறார்கள் என்றால் , 45 சதவீதம் பேர் அவ்வருடம் வேலையை விட்டு செல்கிறார்கள். மிக அதிக அட்ரிஷன் உள்ள துறை B PO துறை தான்.

இதற்கான காரணங்கள் - இத்துறையில் பணியாற்றுவதால் வரும் உடல் மற்றும் மன தொந்தரவுகள்.

B PO துறையில் பணியாற்றும் மக்களிடையே எடுத்த ஒரு ஆய்வு என பகிரும் தகவல் திக்கென்று இருக்கிறது. இத்துறையில் இருப்போரில் 20 % மக்களுக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என்றும், அதே அளவு மக்களுக்கு மிக அதிக மன அழுத்தம் உண்டு என்றும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு. மேலும் மூன்றில் ஒருவருக்கு உடல் உறவு பிரச்னையும் உண்டு என குண்டை தூக்கி போடுகிறார்கள்.

கடைசி அத்தியாயத்தில் BPO துறை பற்றிய நல்லது மற்றும் கெட்டதை ஒரு கோர்ட் சீன் போல பேசி இத்துறை நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என முடிக்கிறார்

மொத்தத்தில்..

BPO குறித்து அறிய விரும்பும் யாருக்கும் அத்துறை குறித்த நல்லதொரு அறிமுகம் இப்புத்தகம் தரும்
***************
BPO ஓர் அறிமுகம்
ஆசிரியர் : SLV மூர்த்தி.
பக்கங்கள்: 78
விலை : ரூ. 25

Sunday, July 13, 2014

அரிமா நம்பி & Aashiqui -2 ஒரு பார்வை

அரிமா நம்பி 

சற்று சுவாரஸ்யமானதொரு த்ரில்லர் படம். ஆக்ஷன் கதைகள் சரியான முறையில் தரப்பட்டால் - அது தான் நிறைய மக்களை சென்றடைய சிறந்த வழி என உணர்ந்து தனது முதல் கதையை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்

கதை 

ஹீரோ விக்ரம் பிரபு ஒரு Pub -ல் ஹீரோயின் ப்ரியா ஆனந்தை சந்திக்கிறார். மறு நாளே இருவரும் டேட்டிங் செல்ல - அப்போது ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். அவரை விடுவிக்க ஹீரோ முயல - கடத்தலின் பின் இருக்கும் பெரிய மனிதர் அதனை முறியடிக்க நினைக்க - இறுதியில் யார் வெல்வார் என சொல்லணுமா என்ன ?



பாசிட்டிவ் 

முதல் ஷாட்டிலேயே கதையை துவங்கும் விதம், பெரும்பாலும் விறுவிறுப்புடன் எடுத்து செல்லும் திரைக்கதை  இரண்டாலும் கவர்கிறார் புது இயக்குனர்

விக்ரம் பிரபுவிற்கு  சென்ற படமான இவன் வேற மாதிரியிலும் கூட இதே வித பாத்திரம் தான். ஆனால் அதை விட நிச்சயம் இப்படம் பெட்டர்

செஸ் ஆட்டம் போல ஹீரோவின் நடவடிக்கையை வில்லன் கணிக்க, அதற்கு தக்க - அவரை குழப்ப ஹீரோ செய்யும் செயல்கள் சுவாரஸ்யம்.

வில்லன் சக்கரவர்த்தி அந்த [பாத்திரத்துக்கு கச்சிதம்

ட்ரம்ஸ் சிவமணி - பின்னணி இசையில் மட்டும் கவர்கிறார்.

நெகடிவ் 

முதல் 15 நிமிடத்திற்கு பின் ஒரு பரபரப்பு வந்து விட, இறுதி வரை அதை மெயிண்டயின் செய்ய நிறைய மெனக்கெட்டுள்ளனர். இருப்பினும் ஒரே நாளில் நடக்கும் கதை - ஒரு மாதம் நடப்பது போல எங்கோ ஒரு அயர்ச்சி நம்முள் எட்டி பார்க்கிறது

நிறைய லாஜிக் மீறல்கள் உண்டு எனினும் - இரண்டு மட்டும் எனக்கு ரொம்ப உறுத்தியது. ஒரே நாள் மட்டுமே அறிமுகமான பெண்ணுக்காக (ஆழமான  காதலும் இல்லை !) தன் உயிரையும் வாழ்க்கையையும் ஹீரோ பணயம் வைப்பது நம்புகிற மாதிரி இல்லை.

ஒரு வங்கியை சுற்றி போலிஸ் இருக்க, அரை நிமிடத்தில் திடீரென யோசித்து அந்த வங்கியை கொள்ளை அடிக்கிறார் ஹீரோ.. ஹூம்...

இடைவேளைக்கு பின் பாடல்களை குறைத்தது பெரிய ரிலீப். ஆயினும் இன்னும் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி காலத்து கவர்ச்சி டான்ஸ் ஆடும் க்ளப் பாடல்கள்  தேவை தானா ?

மொத்தத்தில்

நிச்சயம் ஒரு வித்தியாச முயற்சி. ஒரு முறை பார்க்கலாம்

*****************

Aashiqui -2 ஹிந்தி ஒரு பார்வை 

2013-ல் வெளியான இப்படம் இப்போது தான் காண சந்தர்ப்பம் வாய்த்தது. அதென்ன  Aashiqui -2 ? Aashiqui  என்ற பெயரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு படம் வந்து செம ஹிட் ஆகியுள்ளது. அதன் சீக்வல் தான் இப்படம்.

வாழ்வே மாயம், பயணங்கள் முடிவதில்லை பாணியில் காதலையும் சோகத்தையும் பிழிய பிழிய சொல்லும் படம் இது. ஆயினும் நன்றாகத் தான் உள்ளது



கதை 

பிரபல பாடகரான ராகுல் ஜெயகர் - குடியினால்  சரிவை சந்தித்து கொண்டிருக்கும் நேரம் - ஒரு பாரில் பாட்டு பாடும் ஆரோஹியை சந்திக்கிறான். அவளிடம் திறமை ஏராளமாய் உண்டு; நிச்சயம் சாதிப்பாள் என மும்பை அழைத்து வந்து - பயிற்சி தந்து வாய்ப்புகளும் பெற்றுத்தர - ஆரோஹி மிக பெரும் பாடகி ஆகிறாள்.

ராகுல்- ஆரோஹி இருவரும் திருமணம் செய்யாமலே கணவன் - மனைவியாய் வாழ, மனைவியின் வளர்ச்சி ஒரு அளவிற்கு மேல் ராகுலை   உறுத்த ஆரம்பிக்கிறது... ராகுலின் குடிப் பழக்கம் அவரை எங்கு கொண்டு செல்கிறது என்பதை படத்தின் இறுதிப்பகுதி சொல்கிறது

ஆதித்ய ராய் கபூர் & ஷ்ரதா கபூர் ஹீரோ மற்றும் ஹீரோயின் - படத்தை ரசிக்க இந்த இருவரும் மிகப்பெரும் காரணம்.  ஷ்ரதா கபூர் அழகு, நடிப்பு, முகபாவம், கிளாமர் என எல்லா பக்கமும் சிக்சர் அடிக்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு இன்னொரு அற்புத பெர்பார்மன்ஸ் ஆதித்யாவுடையது.

படத்தின் முதல் காட்சியை பார்க்கும் போதே நிச்சயம் இது வித்தியாச படம் என்ற எண்ணமும் இயக்குனரின் ஆளுமையும் எளிதில் புரிந்து விடுகிறது

ஹீரோயின் பெரிய ஆளாக வரவேண்டும் என்று மட்டுமே ஆசைப்படும் ஹீரோ. ... ஹீரோ எவ்வளவு தவறு செய்தாலும் மன்னித்து - அவனை சரி செய்ய எந்த எல்லைக்கும் செல்லும் ஹீரோயின்  -என  இருவருமே மிக மிக நல்லவர்களாய் காட்டியிருப்பது அழகு . ஹீரோவின் குடிப்பழக்கம் ஒன்று தான் படத்தின் பெரும் வில்லன்.



இத்தகைய மியூசிக்கல் சப்ஜெக்ட்டிற்கு பாடல்கள் தான் அடி நாதம். அட்டகாசமான பாடல்கள் .. படம் பார்த்து முடிந்ததும் தேடி தேடி பாடல்களை தரவிறக்கம் செய்தேன். படத்துடன் பார்க்கையில் எல்லா பாடல்களும்  பிடித்தாலும் தனியே கேட்க "தும் ஹி ஹோ " மட்டுமே ஈர்க்கிறது



படத்தை நிச்சயம் பாசிடிவ் ஆக முடித்திருக்கலாம். குடிப்பழக்கத்திலிருந்து மனிதர்களால் விடுபட முடியும் என்ற நம்பிக்கை தரும் விதத்தில் முடிக்க திரைக்கதையில் அத்தனை வாய்ப்பிருந்தும்  சோகமாக முடிக்கிறார்கள். இத்தகைய கதைக்கு இப்படி முடித்தால் மட்டுமே "காவிய அந்தஸ்த்தும்" நம் மனதில் படம் என்றும் தங்கும் என்பதும் திரைக் குழுவின் எண்ணமாய் இருந்திருக்கலாம். அது ஓரளவு உண்மையும் கூட..

படம் 2013 மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆகி - மீடியாக்கள் எதிர்மறையாய் அதிகம் விமர்சனம் செய்தாலும் தனது பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக பணம் ஈட்டியதாக விக்கி பீடியா சொல்கிறது 

அழுகாச்சி படம் என ஒதுக்காமல் காதல் தோல்விக்கும் - ஒரு சுகமிருக்கு என நம்புவோர் நிச்சயம் பார்க்கலாம் !

Related Posts Plugin for WordPress, Blogger...