தமிழ் செய்தி தாள்களில் தினம் தென்படும் விஷயம் தற்கொலை செய்திகள். எதற்கு இதனை அவசியம் வெளியிடுகிறார்கள் என புரியவில்லை. எங்கோ சென்று தற்கொலை செய்து கொண்ட யாரென்றே தெரியாத ஒரு நபர் பற்றி, அவர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி வெளியிடுகிறார்கள் என்றாலாவது அதில் அர்த்தம் உள்ளது. ஊரில் நடக்கும் தற்கொலைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது சில தவறான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கும்.. சற்று வீக்கான மன நிலையில் உள்ளோருக்கு இத்தகைய செய்திகள் மனதின் ஓரத்தில் போய் பதிந்து தொந்தரவு தரும் என்பதோடு, சில நேரம் அவர்களையும் அத்தகைய தவறான முடிவுக்கு யோசிக்க வைக்கும். கொலை போன்ற செய்திகளாவது அவற்றை பார்த்து நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும் என்ற விதத்தில் ஓகே. ஆனால் இத்தகைய தற்கொலை செய்திகளை பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். (நாம் செய்வதை செய்து விடுவோம். அப்புறம் அவர்கள் இஷ்டம்)
மலேசியா வாசுதேவன் மறக்க முடியாத பாடல்கள்
சமீபத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன் பல அற்புத பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியவற்றில் எனக்கு மிக பிடித்த மூன்று பாடல்கள்:
கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)
அள்ளித்தந்த பூமி (நண்டு)
வா வா வசந்தமே (புது கவிதை)
இதில் "அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா?" பாடல் ரொம்பவே ஸ்பெஷல்.
சரணத்தில்,
சேவை செய்த காற்றே பேசாயோ? ஷேமங்கள் லாபங்கள் யாதோ?
பள்ளி சென்ற கால பாதைகளே.. பாலங்கள் மாடங்கள் ..ஆஹா.
புரண்டு ஓடும் நதி மகள்.... இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்
இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும்.
எஸ்.பி. பி & ஜேசுதாஸ் கோலோச்சிய காலத்தில் மலேஷியா வாசுதேவன் நிறைய சாதித்தது பெரிய விஷயம் தான். நடிகராகவும் பல படங்களில் கலக்கியிருப்பார். We will miss you Malaysia Sir !
அய்யாசாமி
ஒரு முறை அய்யாசாமி மனைவி சமையல் முழுக்க முடிச்சிட்டு " தோசை மட்டும் எல்லாருக்கும் ஊற்றி, பேக் பண்ணிடுங்க"ன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. மனைவி, குழந்தை, தனக்கு என எல்லாருக்கும் நல்லா தோசை ஊத்தி முடிச்சிட்டுதான் அய்யாசாமி கிளம்பினார். சாயங்காலம் வந்து பார்த்தா, அடுப்பு "சிம்மில்" ஆப் செய்யாமலே இருக்கு. நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ஹவுஸ் பாஸ் செம ரெய்டு விட்ட பிறகு "கல் மேலே இருந்ததால், அடுப்பு ஆப் செய்யாதது தெரியலே" என பம்மினார். இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.
கவனித்த விஷயம்
எங்கள் வீட்டுக்கருகே உள்ள ஒரு ஹோட்டலில் குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு கருவிகள் வெளியில் வைத்துள்ளனர். மேலும் அபூர்வ சகோதரர்கள் கமல் போல உயரம் குறைந்த ஒரு மனிதர் எப்போதும் ஒரு பபூன் உடை அணிந்து நின்று கொண்டு குழந்தைகளை பார்த்து சிரிக்கிறார். அடிக்கடி இங்கு செல்லும் போது நான் கவனித்தது குழந்தைகள் இல்லா விடில், இவர் பெண்களை மட்டும் தான் பார்த்து சிரிக்கிறார். ஆண்களை அதிகம் கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறை இவரை பார்த்து நான் சிரித்தும், பேச முயன்றும் முடியாமல் போக சற்று கஷ்டமாய் இருந்தது. அப்புறம் தான் நினைத்து கொண்டேன்: இவரும் ஒரு ஆண் தானே,. இங்கு தான் பெண்களை பார்க்கவும் சிரிக்கவும் அவருக்கு முடிகிறது!! சில உணர்வுகள் அனைவருக்கும் பொது!
சட்ட சொல் : ப்ரோபேட் (Probate)
ஒருவர் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். அந்த உயில் படி அவரது சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் "ப்ரோபேட்" எனப்படும். அப்படியானால் உயில் மட்டும் எழுதினால் போதாதா என்றால் போதாது. அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷயங்களை திருப்தி படுத்திகொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும்.
ரசிக்கும் விஷயம் நீர் வீழ்ச்சி
நீர் வீழ்ச்சியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதில் குளிப்பது அதை விட பெரிய மகிழ்ச்சி. நண்பர்கள் , குடும்பம் என யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும். நீர் வீழ்ச்சியில் பல வேறு ஸ்டைல்களில் குளிக்கலாம். உட்கார்ந்து, படுத்து, உள்ளே போய் கல்லில் சாய்ந்தவாறு (கிட்ட தட்ட தூங்குவது மாதிரி) என பல விதமாய் குளித்து, உடன் வந்தவர்கள் நான் எங்கே என தேடி பிடித்து இழுத்து போகும் வரை வெளியே வர மாட்டேன். சிவப்பான கண்களுடன் குளித்து முடித்து வந்ததும் நல்லா பசிக்கும் பாருங்க.புல் கட்டு கட்டலாம். சாப்பிட்டு முடித்ததும் " அடுத்து எப்ப குளிக்க போகலாம்" என்று ஆரம்பித்து விடுவேன்.. ம்ம் இதை எழுதும் போதே மறுபடி குற்றாலம் போகணும் போல இருக்கு..