Tuesday, October 29, 2013

ஜஸ்ட் டயல் மற்றும் ஜீ எலக்ட்ரானிக்ஸ், போரூர் ,,, ஒரு அனுபவம்

ரு மாதங்களுக்கு முன் வீட்டில் LG டிவி ரிப்பேர் ஆனது. LG டிவி ஆதரைஸ்ட் செர்விஸ் டீலர் கேட்டு ஜஸ்ட் டயல்க்கு போன் செய்தோம். அவர்கள் சில எண் தந்தனர் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என்று நாம் இருக்க - நமது தேவையை வேறு ஒரு நிறுவனத்துக்கு தந்து விட்டனர் ஜஸ்ட் டயல் காரர்கள்.

பின் போரூர் ஜீ எலக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து தாங்களே  போன் செய்து " உங்க டிவி நாங்க சரி செய்து தருகிறோம் " என்று கூறினர். சரி என்றதும் அன்றே வந்து பார்த்து விட்டு "பிக்ச்சர் டியூப் மாற்ற வேண்டும்" என்று கூற ஒரு சில நாள் யோசனைக்கு பின் "சரி மாற்றிடுங்க " என்று சொன்னோம்.

ஒரு நாள்  மாலை வந்து பிக்ச்சர் டியூப் மாற்றி விட்டு சில ஆயிரம் பணம் வாங்கி கொண்டு கிளம்பினார் அந்த நிறுவனத்தை சேர்ந்த அராபத் என்கிற இளைஞர்

அடுத்த சில மாதங்களில் மீண்டும் டிவி ரிப்பேர். இப்போது அவருக்கு போன் செய்தால் " சனிக்கிழமை வருகிறோம் " என்றார். சனிக்கிழமை காலை, மதியம் மாலை என மருந்து சாப்பிடுற மாதிரி 3 வேளை போன்  செய்தால்  " அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருப்போம் " என்றார். வரவில்லை

ஞாயிறு காலை - மீண்டும் படையெடுப்பு. காலை, மதியம், மாலை " அங்கே தான் சார் வந்து கிட்டே இருக்கேன் ; பெரிய கேட் இருக்குமே அந்த வீடு தானே? நீங்க வீட்டுலே தான் இருக்கீங்க ?"

சனி, ஞாயிறு - இரண்டு நாள் எங்கும் போகாமல் காத்திருந்தால் வரவே இல்லை.

மீண்டும் திங்கள் மதியத்துக்கு மேல் போன் செய்தால் " சார் உங்களுக்கு டைம் நமக்கு செட் ஆவாது ; நீங்க வேலைக்கு போறீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க" என்றார்

"கண்டிப்பா வர்றீங்கன்னா வார நாளா இருந்தா கூட போன் செய்யுங்க; எனக்கு வீட்டுக்கும் ஆபிசுக்கும் பக்கம் தான்; நான் ஆபிசில் இருந்து கிளம்பி வந்துடுறேன் "

" இல்லீங்க; நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க "

"தம்பி நீங்க பார்த்த வேலை - இப்போ மறுபடி ரிப்பேர். " என்றால்

" டிவி சுத்தமா ஆப் ஆகுதுன்னா போர்ட் ப்ராப்ளம் சார் ;  பிக்ச்சர் டியூப் ப்ராப்ளம் இல்லை; அது என் பிரச்சனை இல்லை; என்னால வர முடியாது" என்றார்


" ஏம்பா இதை சனிக்கிழமை காலையிலே நான் முதல்லே சொல்லும்போதே சொல்ல வேண்டியது தானே ? 2 நாளு இதோ வர்றேன் ; அதோ வர்ரேன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொன்னா என்ன அர்த்தம் ? " என்றால் - படக்கென்று போனை கட் செய்தார்

கடை எண்ணை பிடித்து அவர் ஓனருக்கு போன் செய்தால் " நான் டெக்னிசியன் கிட்டே பேசிட்டு சொல்றேன் " என்றவர்

மறுநாள் போன் செய்து " சார் அது எங்க ப்ராப்ளம் இல்லை ; நாங்க வர முடியாது ; நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்குங்க " என்றார்

" சார் நீங்க பார்த்த வேலை- இன்னொரு ஆள் கிட்டே ஏன் சார் போகணும் ? " என்றால் பதிலே இல்லை.

" சார் பிசினஸ் செய்றீங்க ; ஒரு வேலையை ஒத்துகிட்டு ஏன் சார் பாதியில் மாட்டேன்னு சொல்லணும் ? நீங்க பண்ண வேலை - இப்ப ஏன் வேற ஆள் கிட்டே போகணும்? போர்ட் பிரச்சனைன்னா நான் பணம் தர்றேன்னு சொல்றேனே "

ஊஹூம் .. நோ ரெஸ்பான்ஸ்

எனது கேள்விகள் :

1. தானாகவே போன் செய்து " நாங்க செர்விஸ் செய்து தருகிறோம் " என்று வந்து விட்டு, பல ஆயிரங்கள் கறந்து எதோ ஒரு மாதிரி செட் செய்து விட்டு - பின் மறுபடி ரிப்பேர் என்றதும் " இதோ வர்றேன் - அதோ வர்றேன் " என இழுத்தடித்து பின் வரவே மாட்டேன் என்று சொல்லும் இத்தகைய மனிதர்களை (??) என்ன செய்வது ?

2. ஒரு கமிட்மென்ட் என்று சொன்னால் - அதை செய்ய முடியாதவர்கள் - குறைந்த பட்சம் " சார் இன்னிக்கு வர முடியலை - நாளை வருகிறேன் " என்று சொல்ல முடியாதவர்கள் பிசினசில் எப்படி வெற்றியடைய முடியும் ?

3. வீட்டுக்கு வராமலே - மறுபடி எங்கள் டிவியை பார்க்காமலே - உங்கள் டிவி யில் உள்ள பிரச்சனை எங்களால் வந்தது அல்ல என்று சொல்லும் வித்தை எப்படி சாத்தியமாகிறது ?

4. முதலில் பிக்சர் டியூப் பிரச்சனை என்றபோது அன்றே ஓடி வந்தவர்கள் (காசு வருதுல்லே !) - ரிப்பேர் என்றதும் இழுத்தடிக்கும் நிலையை எந்த கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து, எத்தனை நாள் கோர்ட் பின்னே அலைவது ?

கேட்டால் கிடைக்கும் குழும நபர் போல போராடி போராடி அலுத்து விட்டேன்

இனி நான் செய்ய கூடியது  -

டிவி யை லோக்கல் மெக்கானிக்  மூலம் சரி பார்க்கலாம்

ஜீ எலக்ட்ரானிக்ஸ் போரூர் - உடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களிடம் புலம்பி - உங்களையாவது இத்தகைய நிறுவனங்களுடன் எச்சரிக்கையாக இருக்க சொல்லலாம்

அவ்ளோ தான் !

வானவில் - முகநூலில் கிறுக்கியவை

முகநூலில் கிறுக்கியவை 

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. ஆனா எங்கே போனாலும்- கிளம்பும் போது கையைப் பிடிச்சு குலுக்கி " ஹாப்பி தீவாளி" அப்படின்னு சொல்றாங்க.

## சென்னை மரபு
************
Some become arrogant on achieving a small success.
Only great people can remain humble even on achieving big success.

*************
கவிதை (மாதிரி)


விதைத்தது அறுப்போம்...
அன்றே அல்ல .......
காலம் கனிந்து
*************
அய்யாசாமி கார்னர்

பீனிக்ஸ் மால் சென்று தீபாவளி ஷாப்பிங் செய்து திரும்பிய அய்யாசாமியின் புகைப்படம் இதோ....

என்னா பாட்டுடே !

இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது

***********
வெற்றிக்கோடு - வாசிப்பாளர் கடிதம் 
(வாசகர் கடிதம்னு சொல்ல மனசு வரலை பாஸ்  ..!)

Dear Sir,
I read your book Vetrikodu . Its truly a great work by you, which gives us glimpse of learning experience suitable for today's competitive world. This book will be a great reference point for every youngster who wants to taste the fruit called success and develop successful traits in life.

The contents in the book are very simple and easily understandable.

I wish , you will come out with many more books like this in future .

With regards

J Manikandan (manij14@gmail.com)

வெளம்பரம் 

அகநாழிகை பதிப்பகத்தில் விழாக்கால சிறப்பு சலுகை 25 % சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்கிறது

மோகன் குமார் எழுதிய "வெற்றிக்கோடு" - புத்தகமும் (அகவொளி பதிப்பக வெளியீடு ) - 25 % டிஸ்கவுன்ட்டில் கடையில் கிடைக்கிறது. நண்பர்கள் ஆன்லைனில் வாங்க aganazhigai@gmail.com என்ற மெயில் ஐ. டி க்கு மெயிலோ அல்லது 9994541010 என்ற எண்ணுக்கு தொலை பேசியில் அழைக்கவோ செய்யலாம்.


பிறந்த நாள் கொண்டாட்டம்

எனது பெண் சிநேகாவிற்கு மட்டுமல்ல, கல்லூரி கால நண்பன் தேவாவிற்கும் அக்டோபர் 17- தான் பிறந்த நாள். (எம். ஜி ஆர் அவர்கள் அ. தி. மு. க வை துவக்கிய நாளும் இதுவே )

8 ராசியில்லாத எண் என்று சொல்வோருக்கு அக்டோபர் 17-ல் பிறந்த தேவாவை அறிமுகம் செய்து வைக்கலாம். திருச்சிக்கருகே உள்ள முருங்கப்பட்டி என்ற சிறு கிராமத்தில் பிறந்து இன்று அவன் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது

சிறு வயதில் " 8 ராசியில்லாத நம்பரா அப்பா?" என்று மகள் வினவும் போது, தேவாவின் வாழ்வை உதாரணம் காட்டுவது வழக்கம்.கூடவே இந்த குறளையும் ....

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்
வருத்தக் கூலி தரும் !

இவ்வருடம் அக்டோபர் 17 அன்று தேவா குடும்பமும் எங்கள் குடும்பமும் வேளச்சேரியிலுள்ள ஒரு ஹோட்டலில் ஒன்றாக சந்தித்தோம். ஸ்னேஹா மற்றும் தேவா இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர். 2 மணி நேரத்துக்கும் மேல் மனம் விட்டு பேசி சிரித்து கொண்டிருந்தோம். ஒரு தேர்ந்த ஆர்கெஸ்ட்ரா பிசிறின்றி இசைப்பது போல இருந்தது நாங்கள் பேசிக்கொண்டிருந்தது...

தேவாவின் மனைவி ப்ரியா - தேவா போலவே செம interesting பெர்சனாலிட்டி. ஸ்பெஷல் Children -க்கு கவுன்சலிங் மூலம் உதவும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திகொண்டுள்ளார். மதுரையிலுள்ள ஒரு பள்ளிக்கு அடிக்கடி சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி தந்து வருகிறார். ஸ்பெஷல் Children -க்கான பள்ளி ஒன்றை துவங்கவும் அவருக்கு கனவு உண்டு. நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறோம். வாழ்த்துவோம் !

Friday, October 25, 2013

கறை நல்லது...........

காலை வழக்கம் போல மூவரும் வெளியே கிளம்பும் அவசரத்தில் - சண்டை. கோபமாய் வண்டியை உதைத்து கிளம்பினேன். சற்று நேரத்தில் கோபம் தணிந்து பள்ளிக்கரணை நூறடி ரோடை அடைய - காமாட்சி மருத்துவமனை சாலையில் ஒரு விபத்து அப்போது தான் நடந்து முடிந்திருந்தது.

வலது உள்ளங்கை முழுதும் ரத்தத்துடன் - உள்ளங்கையில் தோல் கிழிந்து கையைப்  பிடித்தவாறு ஒரு இளைஞன் நிற்க இன்னொரு இளைஞன் தனது கார் பின்னே பைக் மோதிய   கோபத்தில் நின்று கொண்டிருந்தான்

அருகிலுள்ள பெட்டிக்  கடையில் ஒருவர் மினரல் வாட்டர் வாங்கி அடிபட்டவன் கையை கழுவி கொண்டிருந்தார். இன்னொருவர் பைக்கை எடுத்து ஓரமாய் விட்டார். ஒரு மனிதர் ஓடி வந்து - தனது பைக் துடைக்கும் அழுக்கு துணியை தந்து " அவரது கையில் இதை கட்டுங்க " என்றார். அருகில் நின்றிருந்த எனக்கு அந்த துணியை அடிபட்டவர் கட்டினால் இன்னும் இன்பெ க்ஷன் ஆகும் என தோன்ற, எனது வெள்ளை கர்சீப் தந்து இதில் துடையுங்கள் என்றேன்;  ஒரு மனிதர் அந்த கர்சீப் கொண்டு கர்ம சிரத்தையாக அடிபட்டவர் கையை துடைத்து விட்டார் -

அவ்விடத்தில் 4 பேர் அடிபட்டவருக்கு உதவ, 20 பேருக்கும் மேல் நின்று சும்மா வேடிக்கை பார்த்துக்  கொண்டிருந்தனர்

கார் ஓட்டி - நின்று கொண்டிருந்த தன்  வாகனம் மீது பைக் மோதிய கோபத்தில் " பாஸ் என்ன இவ்ளோ வேகத்தில் வர்றீங்க? வாங்க போலிஸ் ஸ்டேஷன் போகலாம் ; ரொம்ப டேமேஜ் ஆகிடுச்சு - நீங்க பணம் தர வேண்டியிருக்கும் " என்ற ரீதியில் பேசலானார்

அருகிலிருந்த நான் " ஏன் சார்  இன்சூரன்ஸ் தான் வருமே; அப்புறம் எதுக்கு இவர் பணம் தரனும் ?" என்று கேட்க " முழு பணம் வாராது சார் ; மீதி இவர் தான் தரனும் " என்றார்

நான் சில நொடி தயக்கத்துக்கு பின் " முதலில் எங்கே போகணும் சார் ... ஆஸ்பத்திரிக்கா ? போலிஸ் ஸ்டேஷனுக்கா ?" என்று கேட்க

அடிபட்டவரின் கையை பார்த்தவாறே " ஆஸ்பத்திரிக்கு" என்றார் கார் ஓட்டி

"நீங்களே அவரை ஆஸ்பத்திரி கூட்டி போங்க; அவரால் இப்ப பைக் ஓட்ட முடியாது; அப்புறம் போலிஸ் ஸ்டேஷன் கூட்டி போங்க " என்றேன்

" காரை இங்கிருந்து எடுக்க கூடாதுங்க; Valuer  வந்து பார்க்கும் வரை இங்கு தான் இருக்கணும் " என்றார் கார் ஓட்டி .

இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நான் கிளம்ப எத்தனிக்க - அடிபட்டவர் உரிமையாய் வந்து எனது வண்டி பின்னே அமர்ந்து " சார் காமாட்சி ஆஸ்பத்திரி வாசலில் என்னை இறக்கி விட்டுடுங்க " என்றார்

ஒரு வண்டியில் நானும், அடிபட்டவரும் - இன்னொரு பைக்கில் கார் ஓட்டியும்       பயணமானோம்.

அடிபட்டவரிடம் " என்ன சார் உங்க மேலே தான் தப்பு போல" என கேட்க

" சார் ஒரு Estilo கார் திடீர்னு ப்ரேக் அடிச்சான். அதான் நான் வண்டியை ரைட் லே திருப்புனேன். அவர் கார் மேலே மோதிடுச்சு. ப்ச் நேரமே சரியில்லை சார் " என்றார்

அவரை ஆஸ்பத்திரி வாசலில் இறக்கி விட்டேன். கார் ஓட்டி - பைக் ஓட்டுனருக்கு First aid  தர     உள்ளே கூட்டிச் செல்ல, நான் ஆபிஸ் கிளம்பினேன்

எனது புத்தம் புது பிங்க் சட்டை - வலது பக்க பின் புறத்தில் ஆங்காங்கு ரத்தக்கறை ஒட்டியிருந்தது.

வீட்டுக்கு போனதும் மனைவி மற்றும் மகள் சட்டை பார்த்து நிச்சயம் திட்டுவார்கள் என்று நினைத்தேன்.  வந்தவுடன் கவனித்து கேட்கவே செய்தார்கள். மேற்சொன்ன நிகழ்வை கேட்டதும் - வேறு எதுவும் சொல்ல வில்லை..

சட்டையை இப்போது பார்க்கும் போது தோன்றுகிறது .. "கறை படுறதால, நல்ல விஷயம் நடந்தா - கறை  நல்லது " :)

Wednesday, October 23, 2013

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவுவார்களா ?

நான் வாழ்வில் கொஞ்சமேனும் வளர்ந்திருந்தால் அதற்கு முக்கிய காரணம் - இதோ இப்படத்திலிருப்போர் தான்.அதிகம் படிக்காத அம்மா - அப்பா செல்லம் மட்டுமே கொடுத்து வளர்த்தனர். பெற்றோர் படிக்க சொன்னதும் இல்லை; அடித்ததும் திட்டியதும் இல்லை.

ஆனால் அவர்கள் பங்கையும் சேர்த்து - சிறு வயதில் என்னை ரவுண்டு கட்டி அடித்தவர்கள் இவர்கள் தான்.

சின்ன அண்ணன் (புகைப்படத்தில் எனக்கு இடப்புறம் அமர்ந்திருப்பவர்) அதிகம் அடிக்க மாட்டார். மொத்தம் 2 முறை தான் அடித்துள்ளார். அந்த இரு முறையும் தவறு என் மீது தான் என்று அவர் அடித்த பின் உணர்ந்திருக்கிறேன். அதனால் அவர் அடித்தால் - எனக்கு கோபம் வராது - நம் மேல் தான் தப்பு - அதான் அடிக்கிறார் என்று அந்த சின்ன வயதில் நினைப்பேன் (சின்ன அண்ணன் - தற்போது பெங்களூரில் ஒரு மருந்து கம்பனியில் ஜெனரல் மேனேஜர் ஆக உள்ளார் ); என்னை சட்டம் படிக்க சொன்னதும், பின் ACS படிக்க சொல்லி பணம் கட்டி சேர்த்து விட்டதும் இவரே. பொறுமையின் சிகரம். ஏ..........ராள   நண்பர்கள் இவருக்கு.

அக்கா தற்போது திருச்சியில் அரசு துறையில் மருத்துவராக உள்ளார். எனக்கு முன்னர் அக்கா பிறந்ததால் - முதல் இருவர் (அண்ணன்கள்) மிக நெருக்கமாகவும், நானும் அக்காவும் ரொம்ப தோஸ்த் ஆகவும் இருப்போம். ஆயினும் அக்கா - மாலை நேரம் நான் விளையாட போய் விட்டு ஆறு மணிக்கு மேல் தாமதமாய் வந்தால் - ஒரு நிமிடத்துக்கு ஒரு அடி என ஸ்கேலால் கையில் அடிக்கும் ! மருந்து கடை வைத்திருந்த அப்பா -அண்ணன்கள் இருவரையும் மருத்துவர் ஆக்க ஆசைப்பட்டார். ஆனால் மருத்துவம் படித்தது அக்கா மட்டும் தான்.

வலது ஓரம் அமர்ந்திருக்கும் பெரிய அண்ணன் தான் எங்கள் மொத்த குடும்பத்தின் தலைவர். முன் ஏர் போகிற வழியே பின் ஏர் போகும் என்கிற மாதிரி குடும்பத்தில் இவர் முதலில் படித்ததால் தான்  அதன் பின் உள்ள அனைவரும் படித்தோம். சின்ன வயதில் எங்களுக்கு இவரை கண்டால் டெர்ரர் ஆக இருக்கும். இவரிடம் நான் வாங்கிய அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல - விதம் விதமாய்  அடி வாங்கியிருக்கிறேன். பள்ளி காலத்தில் இவரை மிக அதிகம் வெறுத்திருக்கிறேன்.

எங்கள் குடும்பத்தில் ஒரு பழக்கம் உண்டு. பள்ளி இறுதி ஆண்டு முடிக்கிற வரை தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஆக இருப்பார்கள். கல்லூரி சேர்ந்ததுமே " தோளுக்கு மிஞ்சினால் தோழன் " என்ற பழமொழியை உதிர்த்து விட்டு - ரொம்ப ப்ரீ ஆக விட்டு விடுவார்கள். அதன் பின்  அண்ணன்களும் கூட சிறந்த நண்பர்கள் ஆகி போனார்கள்

சிறு வயதில் இவர்கள் என்னை அடித்தது கொஞ்சம் கூட சரியல்ல - இதனை வளர்ந்த பின்- அண்ணன்களுக்கு சொல்லி புரிய வைத்தேன். அவர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்காமல் தான் வளர்த்து வருகிறார்கள் :)

இன்று உடன் பிறந்தோர் அனை வரும் திருமணம் ஆகி ஒவ்வொரு பக்கம் இருக்கிறோம். எங்கள் பெற்றோர் பெரிய அண்ணன் குடும்பத்துடன் தஞ்சையில் இருக்கிறார்கள்

ஒரு காலத்தில் ஒவ்வொரு வருட தீபாவளி, பொங்கல், தமிழ் வருட பிறப்பு மூன்று பண்டிகைக்கும்  எங்கள் குடும்பங்கள் அனைத்தும் ஒன்று கூடுவோம். எங்களுக்குள் பல கேம்ஸ் ஷோக்கள் நாங்களே நடத்துவோம்

காலப்போக்கில் பண்டிகைகள் அவரவர் இல்லத்தில் கொண்டாட துவங்கி விட்டோம்

பல ஆண்டுகள் கழித்து இந்த தீபாவளிக்கு மீண்டும் எல்லா குடும்பங்களும் ஒன்று கூடுகிறோம்.. நினைத்தாலே மகிழ்ச்சியாய் இருக்கிறது !

கடவுள் எப்போதும் எனது தகுதிக்கு மீறிய மகிழ்ச்சியையும், நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களையும் உடன் இருக்கும் படி பார்த்து கொள்கிறார் !

Tuesday, October 22, 2013

ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார் !


நல்ல மனம் வாழ்க !

இது போன்ற மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்யுது !

***************
டெனால்டு ராபர்ட் originally shared:

ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்"

படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”


அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள்.

விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது”


*******
நன்றி: கூகிள் பிளஸ்சில் இச்செய்தியைப் பகிர்ந்த டெனால்டு ராபர்ட் &  ஜோதிஜி

Friday, October 18, 2013

யுவக்ரிஷ்ணா - அதிஷா

மோகன்குமாரின் டயரி குறிப்பு 

இன்று வாழ்வில் ஒரு மறக்க முடியாத நாள்.

புழுதிவாக்கம் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் TN  முரளி தரன் - லட்சுமணன் பற்றி பேசிய போது மேடையில் அமர்ந்த படியே கண் கலங்கி விட்டேன். பல மாணவர்களும் அழுகிற என்னையே பார்ப்பதால் கூச்சத்தில் நெளிய, ஆசிரியர் ரவி  குடிதண்ணீர் தந்து அனுப்பி என்னை ஆசுவாசப்படுத்தினார் .

போலவே நான் பேசும்போது லட்சுமணன் பற்றி கொஞ்சம் பேசதுவங்கியதுமே - பேச முடியாமல் தொண்டை கமறி நின்று விட்டேன். பின் எப்படியோ பேசி சமாளித்தேன்.

விழாவில் பேசிய யுவகிருஷ்ணா (எமோஷனல் மற்றும் உண்மையான பேச்சு- அற்புதம்!) , முத்து குமாரசாமி (சிறிய சிறப்பான பேச்சு) , TN முரளி தரன் (சார்.. நீங்க இவ்ளோ நல்லா பேசுவீங்களா ?) பேசிய ஒவ்வொரு வரியையும் வீடியோ எடுத்து பகிர்ந்திருந்தால் பார்க்கும் பலரும் நெகிழ்ந்திருப்பர்.

எப்போதும் பப்ளிசிட்டிக்கு அலைகிறான் என்று சொல்லும் நல்லவர்களுக்கு பயந்தே இன்று காமிரா எடுத்து செல்ல வில்லை.. யுவகிருஷ்ணா மன்னிக்க !

இந்தியா என்றால் லஞ்சம், ஊழல் - அடுத்தவனுடன் ஓடி போன பொண்டாட்டி போன்ற நெகடிவ் செய்திகளை தவிர்த்து - நம் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களையும் எழுத வேண்டும்; படிப்போருக்கு ஏழைகள் சில பேருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே வீடுதிரும்பலில் எங்கள் நண்பர்கள் செய்யும் உதவிகள் பற்றி அவ்வப்போது எழுதுகிறோம்.. இங்கு எழுதுவதை தவிர்த்தும்  பல நல்ல விஷயங்களை - உங்களுக்கு பரிச்சயமான சில நண்பர்கள் குழுக்களுடன் இணைந்து செய்து வருகிறோம்.... காலப்போக்கில் அவையும் தெரிய வரும்போது உங்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன !

தூற்றுவோர் தூற்றினாலும், போற்றுவோர் போற்றா விட்டாலும் - வருடா வருடம் புழுதிவாக்கம் பள்ளியில் 10th, 11th, 12th - முதல் மூன்று மதிப்பெண் பெறுவோருக்கு இணைந்து பரிசுகள் வழங்க - திரு. முத்துக் குமாரசாமியும் நானும் முடிவு செய்துள்ளோம்...

மனமிருந்தால், நண்பர்கள் சேர்ந்து முயன்றால் -  நம்மால் சமூகத்தில் ஒரு சிறு நல்ல மாறுதலை விளைவிக்க முடியும்......

நாம் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒரே இடம் - ஏழை மாணவர்கள் கல்விக்காக மட்டுமே !

எப்போதெல்லாம் - தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவி வேண்டுமோ அப்போதெல்லாம் இனி வீடுதிரும்பலில் எழுதுவேன். விருப்பமும், மனமும் இருப்போர்   நேரடியாக அவர்களுக்கு உதவலாம்.
******************
இனி இன்றைய விழா பற்றி யுவக்ரிஷ்ணா மற்றும் மோகன் குமார் முகநூலில் எழுதியதன் சுருக்கம் இதோ

யுவகிருஷ்ணா எழுதியது : இன்று ஒரு நெகிழ்ச்சியான நாள்.

நான் படித்த பள்ளியில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டேன். பள்ளிக்காலத்தில் எனக்கு யூனிஃபார்ம் உடையாக இருந்த வெள்ளைச்சட்டை, காக்கி பேண்ட் அணிந்துச் சென்றேன்.

“இவரை மாதிரி நீங்களும் வரணும்” என்று தலைமையாசிரியர் சொல்லும்போது கூச்சத்தில் நெளிந்தேன்.

தொழிலதிபர் முத்துக்குமாரசாமி மற்றும் தோழர் வழக்கறிஞர் Mohan Kumar ஏற்பாட்டில் நடந்த விழா இது.

எங்கள் பகுதியில் எங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வளர்ந்து இன்று கல்வித்துறையில் உயரதிகாரியாய் பணியாற்றும் அண்ணன் டி.என்.முரளிதரன் அவர்களோடு மேடையில் அமர்ந்திருந்தேன்.

இருபது ஆண்டு காலத்தில் என்னுடைய பள்ளி பெற்றிருக்கும் சிறப்புகளை காணும்போது கிடைத்த உணர்வுகள் கலவையானது. நாங்கள் வைத்த மரங்கள் இன்று பெரிதாய் வளர்ந்து பள்ளி வளாகம் முழுமைக்கும் நிழல் தருகிறது. பள்ளியை ஒட்டி அச்சுறுத்திக்கொண்டிருந்த மரணக்குட்டை இப்போதில்லை. நானெல்லாம் எட்டாவது வரைக்கும் டவுசர்தான். இப்போது ஆறாம் வகுப்பு மாணவனே டீசண்டாக பேண்ட் போட்டு, டக் இன் செய்து ஐடி கார்ட் மாட்டி பளிச்சென்று இருக்கிறான். எல்லாருக்கும் பெஞ்ச், டேபிள் வசதி இருக்கிறது. நாங்களெல்லாம் தரையில் உட்கார்ந்து படித்தோம்.

ஆறாங்கிளாஸ் படிக்கும்போது என்னுடைய வகுப்பில் 106 பேர் இருந்தார்கள். இப்போது பள்ளியின் ஒட்டுமொத்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கையே 800க்குள்தான். அப்போதெல்லாம் இறுதித்தேர்வில் 300 தாண்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். இப்போது அசால்டாக 400 தாண்டுகிறார்கள். போன ஆண்டு முதல் மதிப்பெண் 490ஆம்.

நம்மை நமக்கு அடுத்தத்தடுத்த தலைமுறை தாண்டி புலிப்பாய்ச்சலாக ஓடிக்கொண்டிருப்பதை காண்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது. மீண்டும் இன்று என்னை தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப்பள்ளியின் (இப்போது மேனிலை) வாண்டுப்பையனாக உணரச்செய்த தோழர் மோகன்குமாருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
*********
மோகன் குமார் எழுதியது 

முகம் பார்க்காமலே - சண்டை போட்டு விட்டு, நேரில் சந்தித்த பின் நட்பாவது இணையத்தில் மட்டும் தான் சாத்தியம் என நினைக்கிறேன்.

யுவகிருஷ்ணாவுடனான பழக்கம் முதலில் எனக்கு சண்டையில் தான் துவங்கியது - பின் சில காலம் கழித்து கேபிள் சங்கர் இல்ல விழா ஒன்றில் எனதருகருகில் அமர்ந்து பேசியவாறே யுவகிருஷ்ணா சாப்பிடும் போது அவரது பேச்சில் அவர் மனதை ஓரளவு புரிந்து கொள்ளமுடிந்தது. அதன் பின் துளசி மேடம் இல்ல திருமண விழா அல்லது வேறு எங்கு சந்தித்தாலும் ப்ளாகில் சீனியர் என்ற முறையில் நிறைய அறிவுரை சொல்வார்...

வழக்கறிஞர் நண்பன் லட்சுமணன் நினைவாக நடந்த இந்த விழாவிற்கு அதிஷாவையும் வரவைக்க முயன்றேன். காலை நேரம் என்பதால் - அவரால் வரமுடியவில்லை என்று நினைக்கிறேன்.

நட்பின் பெருமை சொன்ன இன்றைய விழாவிற்கு அதிஷா வந்திருந்தால் விழா முடிந்ததும் - நிச்சயம் லக்கியை கட்டியணைத்திருப்பார்.

இப்படிக்கு

லக்கி- அதிஷாவை மறுபடிவிழாக்களில் ஒன்றாக பார்க்க விரும்பும் ஒருவன். .....

Thursday, October 17, 2013

இலட்சுமணன் நினைவு பரிசளிப்பு விழா - சிறப்பு அழைப்பாளர் யுவகிருஷ்ணா

ண்பன் இலட்சுமணன் ... எங்களுடன் சட்டக்கல்லூரியில் படித்த நண்பன். அரிதான, அற்புதமான மனிதனான எங்கள் இலட்சுமணன் ஹீமோபீலியா நோயால் 25 வயதில் மரணமடைந்தான்.

1996-ல் இலட்சுமணன் மறைவுக்குப் பிறகு, ஓராண்டு இடைவெளியில் (1997) அவன் கவிதைகளைத் தொகுத்து சட்டக்கல்லூரி நண்பர்கள் - புத்தகமாக வெளியிட்டோம்.  அந்தக் கவிதை தொகுப்பின் பெயர் வீடுதிரும்பல் ! (அதன் நினைவாகவே நமது ப்ளாகிற்கும் அப்பெயர் வைக்கப்பட்டது )

1997- ல் இலட்சுமணன் கவிதைத் தொகுப்பு வெளியான பின் - கடந்த 16 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் அவன் நினைவாக ஏதேனுமோர் நற்காரியம்  நண்பர்கள் செய்து வருகிறோம்

பல வருடங்கள் அடையார் செயின்ட் லூயிஸ் விழியிழந்தோர் பள்ளியில் பேச்சு போட்டி மற்றும் போட்டி நடக்கும் (இலட்சுமணன் ஒரு மிகச் சிறந்த பேச்சாளர்; விகடனில் மாணவ நிருபர்; கவிஞர் என பன்முக தன்மை கொண்டவன்- விழி இழந்த சிறுவர்கள் என்பதால் - பேச்சு மற்றும் பாட்டு போட்டிகள் மட்டுமே அவர்களுக்கு நடத்த இயலும் )

புகைப்படத்தில் - வழக்கறிஞர் ரவி, வழக்கறிஞர் அமிழ்து மற்றும் வழக்கறிஞர் டெய்சியின் தாயார் - அடையார் விழி இழந்தோர் பள்ளியில் நடந்த விழா ஒன்றில் நடுவர்களாக ....
சிற்சில காரணங்களால் அடையார் செயின்ட் லூயிஸ் பள்ளியில் விழா நடத்த இரண்டு வருடங்களாக அனுமதி கிடைக்க வில்லை. ஆகவே புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்  பள்ளியில் - 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளில் - முதல் மூன்று இடம் பிடித்த   மாணவ மாணவிகளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக பரிசுகள் வழங்குகிறோம்.

இவ்வருடம் மாணவர்களுக்கு பரிசுகள் தந்து பேச இருப்போர் இருவர்

முதலாமவர் நண்பர் ஜாக்கி சேகர் மூலம் அறிமுகமான இளம் தொழிலதிபர் -திரு. முத்துக்  குமாரசாமி. இந்த விழாவிற்கான பரிசுகள் இவர் தான் வழங்குகிறார்.

இரண்டாமவர் உங்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நண்பர் - யுவகிருஷ்ணா !

இதே பள்ளியில் படித்து  - இன்று ஒரு நிருபராக - சைபர் கிரைம் மற்றும் விஜயகாந்த் குறித்து இரு புத்தகங்கள் எழுதிய - எழுத்தாளராக வளர்ந்து நிற்பவர்.

மிக ஏழ்மை நிலையில் இருந்தும் உயர முடியும் என்பதற்கும் - படிப்பை மட்டுமே சார்ந்ததல்ல ஒருவனின் வளர்ச்சி என்பதற்கும் யுவகிருஷ்ணா மற்றும் முத்துக்  குமாரசாமி ஆகியோர் எடுத்து காட்டு.

வாய்ப்பு இருப்பின் நாளை காலை நடக்க இருக்கும் இந்த எளிய விழாவில் நீங்களும் பார்வையாளராக கலந்து கொள்ளலாம்.

விழா விபரங்கள் :

நாள் - 18 அக்டோபர் 2013

நேரம் - காலை மிகச் சரியாக 9.10 மணிக்கு

முகவரி -

அரசு மேல்நிலைப்பள்ளி
(மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் மற்றும் மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளி அருகில் )
புழுதிவாக்கம்.

**********
தொடர்புடைய பதிவு :

இலட்சுமணன் என்கிற மனிதன் 

Sunday, October 6, 2013

ராஜா ராணி- ஷார்ட் ரிவியூ

நேற்று ராஜா ராணி ( மௌன ராகம் பார்ட் டூ) பார்த்தோம். சுருக்கமான ஒரு ரீவியூ :

ஜெய் - நயன்தாரா போர்ஷன் செம சுவாரஸ்யமா இருந்துச்சு

சந்தானம் குறைவாய் வந்தாலும் சிரிக்க முடிகிறதுசில்லுன்னு ஒரு மழைத்துளி பாட்டு அட்டகாச மெலடி ; படமாக்கம் கூட அழகு . ( எல்லா பாட்டுமே சூப்பர் என சொல்லி கொண்டிருக்கிறாள் மகள்)ரீ ரிக்கார்டிங் - ஜீவி பிரகாஷ் குமார் சில இடங்கள் அசத்தினால், சில இடம் சுத்தமாய் பொருந்தலை

ஆர்யா - வுக்கு சும்மா வந்துட்டு போவது தான் அண்டர் பிளே என யாரோ சொல்லி கொடுத்திருக்காங்க ; முடியலை !


இவ்ளோ குட்டி விமர்சனத்துக்கு 2 போட்டோவா ??
நஸ்ரியா போர்ஷன் மனதில் பதியவே இல்லை. போலவே பிளாஷ் பேக் காதல்கள் இரண்டிலுமே எந்த அழுத்தமும் இல்லை; அதனால் காதல் தோல்வி(கள் ) பார்வையாளர் மனதில் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தாமல் போகிறது

நயன் பொதுவாய் எனக்கு அதிகம் பிடிக்காது. அதிசயமாய் இப்படத்தில் அவர் நடிப்பு (மட்டும் ) பிடித்திருந்தது

சத்யராஜ் - நயன் (அப்பா- மகள்) உறவு - சினிமாவில் தான் பார்க்க முடியும் (சத்யராஜ் நடிப்பு குட் )

இளம் இயக்குனர் அட்லி படத்தை மிக ரசித்து , ஜாலியாக எடுத்திருக்கார்

நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் ! 
Related Posts Plugin for WordPress, Blogger...