Tuesday, January 15, 2019

பேட்ட சினிமா விமர்சனம்

 ங்கரின் சிவாஜிக்கு பிறகு பக்கா ரஜினி ஸ்டைலில் ஒரு படம்.

பழி வாங்கும்  கதை தான். ஆனால் சொன்ன விதம் வித்யாசம்.

வாவ்.. என்ன ஒரு துவக்கம் !

முதல் பாதி அட்டகாச விருந்து.  அனிருத் பாடல்கள் படத்தோடு சேர்ந்து பார்க்கும்போது ரசிக்கவைத்தது



டார்ஜிலிங்கில் எடுக்கப்பட்ட முதல் பாதி கண்ணுக்கு குளிர்ச்சி. மெயின் பிளாட்டிற்கு வராவிட்டாலும் கூட முதல் பாதி மிக மிக ரசிக்க வைக்கிறது.

 சிம்ரன் வீட்டில் கலக்கும் ரஜினி -  பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை அடித்து நொறுக்கி விட்டு - அவர் வீட்டிற்கு நேரே சென்று பேசிவிட்டு - வெளியே வந்து அடிவாங்கியோரை நலம் விசாரிக்கும் பாங்கு.. என முதல் பாதியில் ரசித்து சிரிக்க பல காட்சிகள்.. ரஜினி படத்தை ரசிக்க கதையே தேவையில்லை - நல்ல காட்சிகள் போதும் என சொல்கிறது முதல் பாதி

ஆவரேஜ் செகண்ட் ஹாப் 

இரண்டாம் பாதியை- மட்டுமே முழு படமாய் எடுக்கலாம். அவ்வளவு விஷயம் இரண்டாம் பாதியில் வைத்ததால் நீண்ட படமாக தோன்றுகிறது.

முதல் பாதி மிகுந்த நேரமெடுத்து ஷாட் பை ஷாட்டாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் குறித்து அவ்விதம் சொல்ல முடியாது.

மேலும் பிளாஷ் பேக் முடிந்தவுடன் கிளைமாக்ஸ் மூட் வந்துவிடுகிறது. பின் படம் நீள்வது சற்றே அலுப்பு தட்டுகிறது

கிளைமேக்சில் வைத்த டுவிஸ்ட் இல்லாவிடில் இது கார்த்திக் சுப்புராஜ் படம் என்பதே மறந்திருக்கும். இயக்குனர் - எழுத்தாளர் சுஜாதா ரசிகர் போலும். முடிவை நம் ஊகத்திற்கு விடுகிறார். அடுத்த பார்ட் கூட எடுக்க வசதியாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் படத்தை முடிக்கிறார்.


பிற பாத்திரங்கள் 

சிம்ரன் கொஞ்சமே வந்தாலும் கவர்ந்து விடுகிறார்.

த்ரிஷா தான் மிக பாவம்.. ரஜினியுடன் நடித்தார் என்பதை தவிர மற்ற படி சொல்லி கொள்ள ஒன்றுமே இல்லாத ஒரு பாத்திரம். சசிகுமாரும் - சோ - சோ தான்.

வில்லனை இன்னும் கெத்தாய் காட்டியிருக்கலாம். ரஜினி கூட அவரை சுள்ளான் என்று தான் பல முறை அழைக்கிறார். தனுஷ் போன்ற உடல்வாகு கொண்ட நவாஸுதீன்.. நரித்தனத்தில் மட்டுமே வெல்கிறார்.

விஜய் சேதுபதி பாத்திரத்தை பரிதாபப்படும் படி செய்து விட்டனர்.

உண்மையில் ரஜினியை ப்ரமாண்டப்படுத்த மட்டுமே பிற பாத்திரங்கள்.. மற்றபடி அவர்களுக்கு பெரிதாக individuality ஏதும் இல்லை !



அவ்வப்போது பழைய பாடலை பாடும் ரஜினியின் ரேடியோவே ஒரு பாத்திரம் போல தான் வருகிறது. இந்த ரேடியோ அளவு கூட மற்ற எந்த பாத்திரமும் ரசிக்க வைக்கவில்லை என்பதே உண்மை !

இயக்கம் 

ரஜினியை மட்டுமே மையப்படுத்தினாலும் இது ஒரு டைரக்டர் படம் தான் !

எங்கெங்கு கைதட்டல் கிடைக்கும் ..எதனை மக்கள் ரசிப்பார்கள் என யோசித்து செய்த விதத்தில் வெல்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

முதல் பாதி முழுதும் லேசான சிகப்பு டோன்  ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு - லொகேஷன் அனைத்தும் அசத்துகிறது முதல் பகுதியில் !

சரியான பன்ச் டயலாக் அனைத்தும் டிரைலரில் வைத்து விட்டார். அந்த டயலாக் ஏற்கனவே பரிச்சயம் ஆனதால் அவை வரும்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்பரிக்கின்றனர். இவ்விதத்தில் காலா போல ஏமாற்றவில்லை. பன்ச் எல்லாம் சரியான காட்சியில் தான் வைத்துள்ளார்

பேட்ட @ திண்டுக்கல் உமா தியேட்டர்

முதல் பாதி மாஸ் ....இரண்டாம் பாதி மரணம் என முகநூலில் எழுதினார் நண்பர் ஒருவர். இதில் கொஞ்சம் உண்மை உண்டு. 

இருப்பினும் பேட்ட - சினிமா ரசிகர்களுக்கு வேட்ட  தான் !

*****

அண்மை பதிவுகள்

2018 - சிறந்த 10 தமிழ் படங்கள்

கனா சினிமா விமர்சனம் 

Wednesday, January 9, 2019

தமிழ் சினிமா 2018- சிறந்த 10 படங்கள்

2018ல் பதிவுகள் எழுதுவது குறைந்ததே ஒழிய - படம் பார்ப்பது குறைய வில்லை.


10. செக்க சிவந்த வானம்

மணிரத்னத்துக்கு சின்ன பிரேக்கிற்கு பிறகு ஒரு ஹிட் படம். மிக பெரிய ஸ்டார் காஸ்ட் - அயல் மொழியில் இருந்து உருவப்பட்ட ஒரு கதை - விஜய் சேதுபதி - சிம்பு - அருண் விஜய் அனைவரும் தமது ஸ்டைலில் பிரகாசித்ததால் படம் வெற்றியை ஈட்டியது.

9. வட சென்னை

வெற்றி மாறன் படம் என்பதாலேயே அதிக எதிர்பார்ப்பு இப்படத்திற்கு. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் முழுமையும் பூர்த்தி ஆகவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.

ஏராளமான விஷயங்களை சொல்ல ஆசைப்பட்டு - சாதாரண பார்வையாளனுக்கு சற்று  தெளிவில்லாத  விதத்தில் படம் அமைந்து விட்டது.

கேங்ஸ்டர் படத்துக்கு தேவையான சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் நிச்சயம் மிஸ்ஸிங். சாவகாசமாக செல்லும் திரைக்கதை -வன்மத்துடன் அலையும் பாத்திரங்கள் - இவை படத்துடன் நம்மை ஒன்ற விடாமல் செய்துவிடுகிறது .

பாதி கதை தான் - வடசென்னையில் சொல்லப்பட்டது. ஆனால் படத்தின் தோல்வி காரணமாக அடுத்த பாகம் வருவது சந்தேகமே

இருப்பினும் வெற்றி மாறனின் கதை சொல்லும் திறன் - நாம் எதிர்பார்க்க முடியாத சில சஸ்பென்ஸ்கள் இவையே படத்தை இறுதி வரை பார்க்க வைத்தன. படம் இவ்வருட டாப் 10 ல் வர காரணமும் இவையே !

8. பரியேறும் பெருமாள்

மிக அதிக பாராட்டை பெற்ற பரியேறும் பெருமாள் உண்மையில் என்னை ஓரளவு தான் கவர்ந்தது.

முதலில் நல்ல விஷயங்கள்..

வித்யாசமான கதை. காதலை அடிப்படையாய் கொள்ளாமல் சமூக பிரச்சனை ஒன்றை கையாண்ட விதம், கதிர் மற்றும் துணை பாத்திரங்களின் நேர்த்தியான நடிப்பு, சோகமாய் முடிக்காமல் படத்தை நம்பிக்கையுடன் முடித்த விதம்..

இனி படம் ஏன் என்னை அதிகம் கவரவில்லை என்கிற விஷயத்திற்கு வருகிறேன் 

நானும் சட்ட கல்லூரியில் ஐந்தாண்டு படித்தவன் தான். இப்படம் மிக அதிகமாக கல்லூரியில் நாயகன் எதிர்கொள்ளும் சாதீய அடக்குமுறை பற்றி பேசுகிறது. குறிப்பாக நாயகன் மற்றும் அவன் தந்தையை கல்லூரி மாணவர்கள் அவனமானப்படுத்துவது ..

சட்ட கல்லூரியில் அட்மிஷன் சாதீய அடிப்படையில் நிகழ்வதால் உள்ளே வந்ததும் சாதீய அடிப்படையில் சில குழுக்கள் உருவாகி விடும். அனைத்து மாணவர்களும்  இந்த சாதீய குழுவில் சேர்வார்கள் என சொல்ல முடியாது 

ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த நபரை அதுவும் சாதி அடிப்படையில் அடித்தால் - அவர் சாதியை சேர்ந்த மற்ற மாணவர்கள் கண்டும் காணாமல் இருக்கவே மாட்டார்கள். அது மிக பெரும் பிரச்சனையாக வெடிக்கும். கல்லூரி ஸ்ட்ரைக் உள்ளிட்டவை அவசியம் இதனால் நடக்கும் 

இங்கு நாயகன் - அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் போது அவனுக்கு ஆதரவாக யாருமே வராதது நடைமுறையில் நடக்கவே நடக்காது. 

இந்த அடிப்படை பிரச்சனை தான் படத்துடன் என்னை ஒன்றை விடாமல் செய்தது. 

7. அடங்க மறு 

வருட  இறுதியில் வந்த இன்னொரு சுவாரஸ்யமான திரைப்படம். பழிவாங்கும் கதையை மிகுந்த வித்யாசமாக எடுத்திருந்தனர். குறிப்பாக வில்லன்கள் ஒவ்வொருவரும் அவரவர் தந்தை கையால் கொல்லப்படுவர் என சொல்லி - அப்படியே கொல்வது அட்டகாசம். த்ரில்லர் விரும்பிகள் தவற விடக்கூடாது படம் அடங்க மறு

6. சர்கார்

படம் வெளியாகும் முன்னும், அதன் பின்னும் பல சர்ச்சைகளை சந்த்தித்த சர்க்கார் - நிச்சயம் நான் ரசித்த படங்களில் ஒன்று. வித்யாசமான கதை- சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் விறுவிறுவென்று செல்லும் திரைக்கதை - ரஹ்மானின் இசை- விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் இவற்றால் இவ்வருடம் மிக அதிக வசூல் செய்த படங்களுள் ஒன்றாக நின்றது சர்க்கார்

5. நடிகையர் திலகம்

தெலுகு டப்பிங் என்றாலும் மனதை தொட்ட ஒரு  படம். நாம் ரசித்த சாவித்ரி என்கிற நடிகை பற்றிய கதை- பிரபலமானவர்கள் என்றாலே ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்ற எண்ணத்திற்கு மாற்றாக சாவித்ரி பட்ட துயரங்கள் கண்ணீரை வரவழைக்கும். கீர்த்தி சுரேஷ் சாவித்ரி பாத்திரத்தில் நம்மை வியக்க வைத்தார். இந்த ஜெனெரேஷன் சேர்ந்தோரும் கூட ரசிக்கும் படி எடுத்திருந்தனர் படக்குழுவினர் !

4. கடைக்குட்டி சிங்கம்

வசூல் சிங்கம் இப்படம் !

பீம்சிங் என்ற பழைய இயக்குனர் "பா" வரிசை படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்தார் (பாலும் பழமும், பாவ மன்னிப்பு, etc ). பீம்சிங் டைப்பிலான குடும்ப கதை இக் கடைக்குட்டி சிங்கம்.

விவசாயம் பற்றி பேசிய இன்னொரு வெற்றிப்  படம் இது. செண்டிமெண்ட்- காமெடி- அழகிய ஹீரோயின்கள் - போர் அடிக்காமல் பார்க்க வைக்கும் திரைக்கதை இவற்றால் சொல்லி அடித்த கில்லி மாதிரி வெற்றியை எட்டினர்.

**********

கடைசி ஏழு படங்களை வரிசைப்படி பார்த்தாகி விட்டது. முதல் மூன்று இடங்களுக்கு ரேங்க் தர விருப்பமில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்ப இது மாறலாம். சென்ற வருடத்தின் சிறந்த 3 படங்கள் என இவற்றை சொல்லலாம் :

கனா

வழக்கமான ஸ்போர்ட்ஸ் படம் தான் - ஆனால் அதில் விவசாயத்தை சேர்த்து parallel ஆக சொன்ன விதத்தில் தனித்து தெரிந்தது கனா. உண்மையில் பார்த்தால் அவர்கள் அழுத்தம் திருத்தமாய் சொல்ல  நினைத்தது விவசாயம் குறித்து தான். அதனை தனியே சொன்னால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் கிரிக்கெட் என்ற இனிப்பு மறந்து கலந்து கூறினர்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு - காமெடி- இனிய பாடல்கள்- தைரியமான தெளிவான இயக்கம் இவற்றால் கனா - கவர்ந்தது

ராட்சசன்

இவ்வருடம் பார்த்து பிரமித்து போன படங்களில் ஒன்று ராட்சசன். முண்டாசு பட்டி என்கிற கிராமிய படம் எடுத்த இயக்குனரின் அடுத்த படம் ... என்ன ஒரு Changeover !

கதை, திரைக்கதை, சஸ்பென்ஸ் அனைத்துமே அட்டகாசம். கன்டண்ட்டின்  அடிப்படையில் இருக்கும் வயலன்ஸ் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் வன்முறையை தேவையான அளவு மட்டுமே காண்பித்திருந்தார் இயக்குனர். மிக ஆச்சரியப்படவும், ரசிக்கவும் வைத்த படம் ராட்சசன்.


96

சென்ற வருடம் மிக அதிகம் பேசப்பட்ட, பலரையும் தம் இளமை காலத்திற்கு எடுத்து சென்ற படம். பள்ளி/ கல்லூரி  கால காதலை நினைத்து பார்க்க வைக்கும் இத்தகைய படங்கள் அவ்வப்போது வந்து வெற்றிக்கொடி நாட்டுவது வழக்கமே.

ஒரே நாளில் நடக்கும் கதை- திருமணமான காதலியை நினைத்து 20 வருடம் கடந்தும் மணமுடிக்காமல் இருக்கும் நாயகன் பாத்திரம் தான் படத்தின் மையப்புள்ளி.

விஜய் சேதுபதி- த்ரிஷா நடிப்பு, இளையராஜா பாடல்களை பயன்படுத்திய விதம்- கவித்துவமான முடிவு.. இவை இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் 96 ஐ நினைவு கூற வைக்கும்.

************

இமைக்காத நொடிகள் நன்றாக இருந்ததாக பலர் கூறினர் ; பார்க்க வில்லை

2.0 தியேட்டரில் கண்டு வெறுத்தேன். எனக்கு மிக பிடித்தமான இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், காலி பெருங்காய டப்பா ஆகி வருவது பெரும் வருத்தம் !
************

மற்றபடி இவ்வருடமும் வெளியான படங்களில் 10 சதவீதம் மட்டுமே போட்ட பணத்தையே எடுக்க முடிந்தது. 2019 பேட்ட மற்றும் விஸ்வாசம் என்ற   இருபெரும் ரிலீஸ்களுடன் துவங்குகிறது. பார்க்கலாம் !

Thursday, January 3, 2019

கனா சினிமா விமர்சனம்


சென்ற வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்று வருட இறுதியில் வந்துள்ளது - கனா !

இந்தியில் வெளியான சக் தே இந்தியா பாணி கதை தான்... ஒன்றுமில்லாத ஒரு டீமை ஒரு கோச் (அங்கு ஷாருக்- இங்கு சிவகார்த்திகேயன்) ஜெயிக்க வைக்கிறார்.

ஆனால் ஒற்றுமை அத்துடன் நின்று விடுகிறது. அக்மார்க் தமிழ் விஷயங்களோடு காமெடி- செண்டிமெண்ட் - சரியான காஸ்டிங் - இனிய பாடல்கள் என மிக ரசிக்கும் படி ஒரு படம் தந்துள்ளது கனா டீம்



கதை 

விவசாயி முருகேசன் (சத்யராஜ்) மகள் கௌசல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்)..  அப்பாவின் கிரிக்கெட் ஆசையை நிறைவேற்ற தானும் ஒரு கிரிக்கெட் வீரர் ஆக எண்ணுகிறார். ஒரு பெண் கூட கிரிக்கெட் ஆடாத கிராமத்தில் ஆண்களுடன் ஆடி - பல்வேறு பாலிடிக்ஸ் கடந்து இந்திய அணி வரை நுழைவதும்  உலக கோப்பை விளையாடுவதும் ஒரு பகுதி கதை.

மற்றொரு புறம் விவசாயி முருகேசன் - விவசாயத்தில் படும் கஷ்டத்தை - தனது நிலத்தை / வீட்டை தக்க வைத்து கொள்ள போராடும் போராட்டத்தை மிக அருமையாக கொண்டு செல்கிறார் இயக்குனர்

திரைக்கதை மற்றும் இயக்கம் 

இப்படம் நம் மனதில் பதிய, ரசிக்க மிக முக்கிய காரணம் கிரிக்கெட் உடன் விவசாயத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்த புத்தி சாலித்தனம் தான்.

கிரிக்கெட் - விவசாயம் இரண்டையும் தொடர்ந்து மாற்றி மாற்றி காட்சி படுத்துவது அழகாகவும் அலுக்காமலும்  படத்தை கொண்டுசெல்கிறது.

ரத்தம், சதை, நரம்பு இவை அனைத்திலும் கிரிக்கெட் வெறி ஊறிய ஒரு கிரிக்கெட் வெறியானாக இருந்தால்  மட்டும் தான் இப்படத்தின் சில காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்க முடியும்.

பிளாஷ்பேக்கில் நகர்கிறது கதை. கௌசல்யா லோக்கலில் பங்கு பெறும்  முதல் மேட்ச்  - அதில் ஒரு முக்கியமான கட்டத்தில் மேட்சை நிறுத்திவிட்டு நிகழ் காலத்திற்கு வருகிறார் பாருங்கள். அப்போது போலீஸ் ராமதாஸ் பேசும் வசனத்திற்கு தியேட்டர் குலுங்குகிறது. டிவியில் கிரிக்கெட் பார்க்கும்போது  மிக சுவாரஸ்ய கட்டத்தில் கரண்ட் போனால் எப்படி இருக்கும் - அதே மனநிலை தியேட்டரில் அப்போது....அந்த காட்சியெல்லாம் சொல்லி அடித்த சிக்ஸர் இயக்குனர்க்கு !

உலக கோப்பை போட்டியில் மேட்ச் டை ஆகி மீண்டும் - ஒரு சூப்பர் ஓவர் ஆடுவது போல் வைத்ததெல்லாம். - செம தைரியம்... எத்தனை மக்களுக்கு சூப்பர் ஓவர் கான்செப்ட் புரியும் என நினைக்காமல் - தில்லாக வைத்துள்ளார்.

கௌசல்யா உலக கோப்பை போட்டிக்கு தேர்வானாலும் - அணிக்குள் வராமலே இருக்க, செமி பைனலில்  அவளை ஆட வைக்கும்போது சிவா சொல்கிறார்.. அவளை இவ்வளவு நாள் ஒதுக்கி வைக்கலை..ஒளிச்சு வச்சிருந்தேன் ! அட்டகாசம் ..Goosebump moments !

ஆங்காங்கு வசனங்களும் தெறிக்க விடுகின்றன. "ஆசைப்பட்டா மட்டும் பத்தாது.. அடம் பிடிக்க தெரியணும்.." இது வசனம் மட்டுமல்ல.....படம் முழுதும் அடிப்படையாய் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் ஒரு முக்கிய செய்தி.

ஸ்போர்ட்ஸ் படத்திற்கான template அப்படியே இருப்பதால், சக் தே இந்தியா, டங்கல் போன்ற படம் பார்த்த மக்களுக்கு திரைக்கதையின் பல இடங்களை ஊகித்து விட முடியும்.. இது ஒன்று தான் படத்தின் மைனஸ்

நடிப்பு

படத்தின் வரவேற்புக்கு முக்கிய காரணம் சரியான காஸ்டிங்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - மிக சரியான தேர்வு; அவர் கௌசல்யாவாகவே தான் தெரிகிறார். அனைத்து உணர்ச்சிகளும் காட்டும் இவரது முகம் - இறுதி மேட்சில் மட்டும் இறுகி போகிறது (Focus !) கிளைமாக்சில் இவர் பேசும் வசனம் - மிக முக்கிய மெசேஜ் ! மக்கள் சரியாக உள் வாங்குகிறார்கள்...இப்படம் அவருக்கு ஒரு கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி.. சரியாக பயன்படுத்தியுள்ளார் !

சத்யராஜ் - மிக நிறைவான நடிப்பு. போலவே அவரது மனைவி ரமா - அவருக்கு ஸ்கொப் சற்று குறைவு எனினும் தனது பங்கை மிக சரியாக செய்துள்ளார்

சிவா - முதன் முறை சீரியஸான பாத்திரம்..படத்தின் வியாபாரத்திற்கு இவர் முகம் நிச்சயம் உதவி விடுகிறது. இவர் சொல்லும் டெக்கினிக்குகள் குறைவுதான் எனினும் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம் !

படத்தின் இன்னொரு ஆச்சரியம் - மற்ற பாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிற மாதிரி அமைத்த இயக்குனர்க்கு ஸ்பெஷல் ஷொட்டு.

ஐஸ்வர்யாவை ஒரு தலையாய் காதலிக்கும் பையனை ஒரு கட்டத்தில் அண்ணா என்று ஐஸ்வர்யா அழைப்பது, இறுதி மேட்சில்  பார்வையாளராக உட்கார்ந்து கொண்டு " கௌஷி வில் யூ மேரி மீ" (கோலி வில் யூ  மேரி மீ" - என பெண்கள் காட்டும் பேனர் போல) காட்டுவது என காமெடி பண்ணுகிறார். இவருடன் சச்சின் மற்றும் டெண்டுல்கர் என இருவர் கிச்சு கிச்சு மூட்டியபடி இருக்கிறார்கள் 

கிரிக்கெட் அணியில் கூட சில பெண்களை தனித்து தெரிய வைத்துள்ளார் இயக்குனர் ...

Image result for kanaa cricket scenes

கௌஷி உடன் கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள் பாத்திரமும் மிக மிக அழகு !

இசை இன்ன பிற 

பாடல்கள் - படத்தோடு சேர்த்து ரசிக்கும் படி உள்ளது. குறிப்பாக வாயாடி பெத்த புள்ள;

ஒரு தலையாய் காதலித்து ஆடும் பாட்டை மட்டும்  கத்திரி போட்டிருக்கலாம் (நீளம் கருதி)

இறுதி மேட்ச்கள் - கிராண்டாக எடுத்துள்ளது அட்டகாசம்

பாடகர் - பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில்அறிமுகமான இப்பட இயக்குனருக்கு முதன் முறை படமியக்கும் வாய்ப்பு வந்துள்ளார் அவரது கல்லூரி நண்பரான சிவா..படம் முடிந்து இறுதி டைட்டில் கார்ட் ஓடும்போது மக்களிடம் எழும் தன்னிச்சையான கை தட்டல் ஒலி இருவரின் வெற்றியை காட்டுகிறது !

கனா -அவசியம் காணுங்கள் !
Related Posts Plugin for WordPress, Blogger...